Saturday 29 August 2020

முத்துக்குவியல்-58!!

அதிசய முத்து:
   
அமெரிக்காவின் வடக்கேயுள்ள வடக்கு அலாஸ்காவில் உள்ள பரோ என்னும் நகரம்[ utqiagvik] டிசம்பரில் ஒவ்வொரு வருடமும் இருளில் மூழ்குகிறது. மார்ச் முடிய சூரியனைக்காணாமல் இருளிலேயே மூழ்கியிருக்கும் இந்த நகரம் சுமார் 4000 மக்கள் வாழும் நகரம். நார்மல் வெப்ப நிலை அந்த சமயத்தில் சைபருக்கும் கீழே செல்லுகிறது.  இந்த நகரத்தில் கிடைக்கும் எண்ணெய் வளமும் ஆய்வுகள் ஆராய்ச்சிக்கூடங்களும் மக்களை எப்போதும் வசதியாக வாழ வைக்கிறது. சுமார் 67 நாட்களுக்கு சூரியன் உதிக்காமல் இருக்கும் இந்த நகரம்.


 67 நாட்களுக்குப்பிறகு முதல் சூரிய வெளிச்சம் வரும்போது சூரியனின் ஒரு சிறு பகுதி மட்டும் தான் தெரியுமாம். அது ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த சூரிய வெளிச்சமும் வெப்பமும் 20 நிமிடங்கள் கூடுமாம். இப்படியே அதிகரித்து அடுத்த வாரம் சூரிய வெளிச்சம் 4 மணி நேரம் நீடித்திருக்குமாம். இப்படியாக கூடி, மே மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஆகஸ்ட் வரை இரவு நேரத்திலும் மறையாது சூரியன் இருப்பதால் ‘ நள்ளிரவு சூரிய நகரம்’ என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.  ஆகஸ்ட் மாத நடுவில் சிறிது சிறிதாக அஸ்தமனம் ஆரம்பிக்கிறது. முதல் சில நாட்கள் சில மணி நேரங்கள் மட்டுமே இருளில் மூழ்கும் நகரம் படிப்படியாக சூரிய வெளிச்சம் குறைந்து நவம்பர் இறுதியில் இருளில் மூழ்குகிறது.

சிரிப்பு முத்து:
டாம் என்ற பூனையும் ஜெர்ரி என்ற எலிக்குமான சண்டைகள் கார்ட்டூன்களாக எழுபதுகளில் தொலைக்காட்சிகள் அனைத்திலும் வந்து புகழ் பெற்றது. இப்போதும்கூட அதன் வீடியோக்களை மக்கள் அவ்வப்போது பார்த்து ரசிப்பதுண்டு. அந்த அளவிற்கு அவற்றின் தாக்கம் மக்களிடம் இப்போதும்கூட இருக்கிறது. இந்த வீடியோ இந்தியாவிற்கும் சைனாவுக்குமான பிரச்சினைகளை மையமாக வைத்து தயாரித்து சிரிக்க வைத்துள்ளார்கள். நான் மிகவும் ரசித்தேன். நீங்களும் ரசியுங்கள்.

கவிதை முத்து:இப்படியும் கூட கவிதை எழுதலாம். இந்த காலத்து சிறுவர்களின் கற்பனை திகைக்க வைக்கிறது!வாட்ஸ் அப்பில் வந்தது.

இசை முத்து:

சங்கர் மஹாதேவன் பாடிய ‘ உன்னைக் காணாது நான் “ பாடல் தனை எல்லோரும் கேட்டு ரசித்திருப்பீர்கள். அதில் பல குரல்கள், பல வாத்திய இசைகள் சங்கர் மகாதேவனோடு கூடவே இழைந்து நம்மை மெய்மறக்க வைக்கும். இதன் கீழே ஒருவர் ‘ என்ன அழகு என் தமிழ்! என் தமிழ் நதி போல எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்துக்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருப்பார். அது தான் உண்மை! அதோடு ஸ்வரங்களும் இணையும்போது மொழிக்கும் தேசத்துக்கும் அப்பாற்பட்ட இசை இழைந்து நம்மையும் மயக்குகிறது.Wednesday 19 August 2020

தெரியாத செய்தியும் செய்யக்கூடாதவையும்!!!

வயது ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் நாம் அறியாத,விஷயங்கள் கடலளவு இருக்கின்றன. சில ஆச்சரியமான நிகழ்வுகள் அவ்வப்போது நம்மை அசத்துகின்றன. சில சமயங்களில் அவற்றின் காரணங்களும் புரிவதில்லை. இங்கே இரண்டு செய்திகள். முதலாவது செய்தி நான் கேட்டறிந்தது. இரண்டாவது செய்தி நான் படித்தறிந்தது.

முதலாவது செய்தி:

இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.  மிக இலேசாக அறிந்திருக்கிறேன். சமீபத்தில் என் அக்கா மருமகள் சொன்ன விஷயம் இது. அவர்கள் பக்கத்து கவுன்ஸிலர் வீட்டிலிருந்து திருமணப்பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து அழைத்தார்களாம். யாருக்குத்திருமணம் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் வீட்டில் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம். ஒவ்வொரு வருடமும் இது மாதிரி பத்திரிக்கை அடித்து கொண்டாடுகிறார்களாம். இப்படி திருமணம் செய்தால் நல்ல மழை வரும் என்பது ஐதீகமாம்! அரச மரத்தை ஆணாக பாவித்து அதற்கு புது வேட்டி சுற்றி வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவை சுற்றி அந்த வீட்டில் உரிமையாளரே வேப்ப மரத்துக்கு பொட்டு வைத்து தாலி கட்டினாராம். அனைவருக்கும் சாப்பாடு செய்திருக்கிறார்கள். நம் கல்யாணங்களில் செய்வது போல எல்லோரும் பணம் வைத்துக்கொடுத்திருக்கிறார்கள். கிளம்பும்போது வளயல்களும் பூவும் வைத்துக்கொடுத்தார்களாம்.


கோடி கன்னிகாதானங்கள் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை ஒரு அரசு-வேம்பு திருமணம் செய்வதால் பெறலாம். அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். அரசமரம் சிவபெருமான். வேம்பு சக்தி எனப்படும் தேவி. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம் வேப்பமரத்தினை மட்டும்  தனக்குள்ளேயே வளர அனுமதிப்பது இந்த விஞ்ஞான உலகிலும் நாம் காணும் இயற்கை அதிசயங்களில் ஒன்று. பொதுவாக, அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன என்று கூகிள் சொல்லுகிறது.

இரண்டாவது செய்தி:

சில சமயங்களில் போகிற போக்கில் நாம் பழக்கம் காரணமாக சில காரியங்களை செய்கிறோம். ஆனால் அப்படி செய்கிற காரியங்கள், பழக்கங்கள் சரியானவை தானா என்று நமக்குத் தெரிவிதில்லை. சமீபத்தில் மாத இதழில் படித்த தகவல் ஒன்று செய்யக்கூடாத செயல்கள் என்று சிலவற்றைக் கூறுகிறது. படித்துப்பாருங்கள்.

செய்யக்கூடாதவைகள்:

1. தலைக்கு வைக்கும் தலயணை மீது அமரக்கூடாது.

2. எண்ணெயிலும் நீரிலும் நம் நிழலைப்பார்க்கக்கூடாது. கோலம் போடக்கூடாது.

3. திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வர வேண்டும். இத்தனால் புண்ணியங்கள் சேரும். வேண்டிக்கொண்ட விஷயஙள் நிறைவேறும்.

4. பூஜையறையில் வடக்குப்பார்த்து தெய்வப்படங்களை வைக்கக்கூடாது.

5. எப்போதும் கால், தொடை ஆட்டிக்கொண்டிருக்கக்கூடாது. நம் உடலிலுள்ள சக்தி வீணாகும். நம் மீதான மரியாதையும் மதிப்பும் குறையும்.

6. பாவி பாவி என்றுயாரையும் திட்டக்கூடாது. திட்டப்பட்டவன் பாவம் செய்திருந்தால் திட்டியவன் இன்னும் பாவியாகிறான். திட்டப்பட்டவன் பாவம் செய்யாதவனாக இருந்தால் இரு மடங்கு பாவம் சொன்னவனை சேரும்.

7. உணவைப்பிசைவது, உருட்டுவது, வழிப்பது, திட்டிக்கொண்டும் சிந்திக்கொண்டும் சாப்பிடுவது கூடாது. அடுத்த பிறவியில் உண்ணும் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். பிச்சை எடுத்தாலும்கூட உணவு கிடைக்காது.

8. துணியை தலையில் சுற்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது.

9. தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது.

10. காலை, மாலை சந்தியாகால வேளையில் சாப்பிடுவதும் உறங்குவதும் கூடாது.

11. பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பரிமாறி  ஓரவஞ்சனை செய்யக்கூடாது. இது பட்டினிக்கு வழி வகுக்கும்.

12. உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் வெளிச்சம் வந்ததும் தட்டில் உள்ளதை மட்டுமே சாப்பிட வேண்டும். மறுபடியும் அதில் உணவை சேர்க்கக்கூடாது.


Saturday 8 August 2020

கோவைக்காய் துவையல்!!!


கோவைக்காயில் பொரியல், கூட்டு, குழம்பு, பச்சடி என்று பல வகை சமையல் இருக்கின்றன. இப்போது வருவது கோவைக்காய் துவையல். குறிப்பை எழுதுவதற்கு முன்னால், கோவைக்காயைப்பற்றி சில வரிகள்.... இரும்புச்சத்து அதிகம் உள்ள கோவைக்காயை வாரத்தில் இருமுறை பொரியல், கூட்டு போலச் செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல்  பிரச்சனை தீரும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக  வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்ஒரே ஒரு கொவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும்   மேலும், சிறுநீரகத்தில் கல் இருந்தால்,  கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும்.  

இப்போது குறிப்புக்குப்போகலாம்:


கோவைக்காய் துவையல்.

தேவையானவை:

கோவைக்காய்-10
சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி
தக்காளி-2
வற்றல் மிளகாய்-4
புளி சிறு நெல்லியளவு
கறிவேப்பிலை இலைகள்-10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 1  மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
காயம் சிறு துண்டு
நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது 

செய்முறை:

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
மிக மெல்லியதாக அரிந்த கோவைக்காய்களை அதில் போட்டு நிதானமான தீயில் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும்.
உளுத்தம்பருப்பு, காயம் இவற்றைப்போட்டு பொன்னிறத்துக்கு வறுக்கவும்.
பின் சின்ன வெங்காயங்களைப்போட்டு மிளகாய் வற்றல்களையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளித்துண்டுகளை கறிவேப்பிலை, மல்லியுடன் சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் வெளியே எடுத்து ஆறவைத்து கோவைக்காய், உப்பு, புளியுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
மிகவும் சுவையான துவையலான இது இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

குறிப்பு: கோவைக்காய் பழமாக, சிவப்பாக இல்லாமல் அரியும்போது பச்சையாக இருப்பது அவசியம். கோவைக்காய் மிக இலேசான கசப்பு சுவையில் இருக்கும். ஆனாலும் சமைக்கும்போதோ, சமைத்த பின்னோ அந்த கசப்பு தெரியாது. ஆனால் சில கோவைக்காய்கள் அளவுக்கு மீறி கசக்கும். அதனால் கோவைக்காய்களை மிக மெல்லியதாய் அரியும்போது நாவில் போட்டு சுவைத்து பார்ப்பது நல்லது. அதிக கசப்பு எந்த விதத்திலும் உதவாது.