Thursday 30 October 2014

கான்ஸருக்கு ஒரு தீர்வு!

கொடிய நோய்கள் முதல் சாதாரண உடல் நலக்குறைவுகள் வரை தீர்வுகள் கிடைத்து நலமடைந்தவர்களின் அனுபவங்களை எங்கு கேட்டாலும் அல்லது எந்த புத்தகத்தில் படித்தாலும் அவற்றினை இங்கே மருத்துவ முத்து என்ற தலைப்பில் நான் அவ்வப்போது அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதி வருகிறேன். அதன் தொடர்ச்சி தான் இந்த க்ட்டுரையும்!

ஒரு மாத இதழில் கான்ஸர் வந்து அவதிப்பட்ட தன் தாய்மாமனின் கதையை ஒரு சகோதரி எழுதியிருந்தார். முழங்கையில் கட்டிகள் வந்து, அவற்றை சாதாரண கட்டிகள் என்று நினைத்திருக்க, மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்ற போது அவை கான்ஸர் கட்டிகள் என்றும் உடலுக்குள்ளும் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகள் என்று பரவி, மூன்றாவது ஸ்டேஜிற்கு அவர் உடல் நிலை சென்று விட்டது என்று தெரிய வந்தபோது, குடும்பமே நிலை குலைந்து விட்டது. கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தாலும் அவர் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை தான் உயிருடனிருக்கமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

இந்த நிலையில் நண்பரொருவர், அவருடைய நண்பருக்கு நீண்ட நாட்கள் பக்கவாதத்தை கர்நாடகாவில் பத்ராவதியிலுள்ள ஒரு ஆசிரமத்தில் ஆயுர்வேத சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தி விட்டதாகவுச் சொல்லி இவருக்கும் அங்கு சென்று சிகிச்சை தர ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். மனமொடிந்து இருந்த நிலையில் யாருக்குமே நம்பிக்கை இல்லாது போனாலும் 'இதையும் முயன்று தான் பார்க்கலாமே' என்ற நினைப்பில் இவரின் தாய்மாமன் அங்கே அழைத்து செல்லப்பட்டார்.

கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்திலுள்ள பத்ராவதியில் 'ஸ்ரீசிவசுப்ரமண்யசாமி' என்ற பெயரில் இந்த ஆசிரமம் இயங்கி வருகிறது. பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேர பிரயாணம். நாள் பட்ட பல நோய்களுக்கு சிகிச்சை தருகிறார்கள்.

அங்குள்ல ஸ்வாமிஜி நம் விபரங்கள், மருத்துவ ரிப்போர்ட்கள், ஸ்கான்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து பார்த்து விட்டு, மருந்துகள் தருகிறாராம். சில நோய்களுக்கு அங்கேயே தங்கச் சொல்கிறார்கள். அப்படி தங்குபவர்களுக்கு மருந்துகளுடன் மருத்துவ குணமுள்ள உணவுகளும் தருகிறார்களாம். ஒரு ஊசியின் முனையால் எடுத்து சாப்பிடக்கூடிய மருந்துகளும் இருக்கின்றதாம்.

சகோதரியின் தாய்மாமன் இங்கே சேர்க்கப்பட்ட ஒரு மாதத்தில் உடலில் தெம்பு வந்ததுடன் நன்கு சாப்பிடவும் ஆரம்பித்திருக்கிறார். மேலும் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு அவரை அழைத்த ஸ்வாமிஜி' இனி உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. சந்தேகமிருந்தால் ஸ்கான் எடுத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினாராம்.. இது நடந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. இவரது தாய்மாமன் இப்போதும் பூரண நலத்துடன் இருப்பதாக அந்த சகோதரி எழுதி இந்த ஆசிரமத்து விலாசமும் கொடுத்திருக்கிறார்.
இங்கே செல்வதானால் இரு நாட்களுக்கு முன்பேயே ஃபோன் செய்து அனுமதி பெற்றுக்கொள்ள‌ வேண்டும்.

இத்தனை அருமையான ஒரு மருத்துவத் தீர்வை சொன்னதற்கு அந்த சகோதரிக்கு இங்கே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

விலாசம்:

ஸ்ரீ சிவ‌சுப்ரமண்யசாமி ஆஸ்ரமம்,
டி.கே.ரோடு, பத்ராவதி 577301,
ஷிமோகா மாவட்டம், கர்நாடகா
தொலைபேசி: 08282 267206


Monday 20 October 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளிக்கு ஒரு இனிப்பு செய்முறையை எழுதலாம் என்று நினைத்தபோது, பழம்பெரும் குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. அது தான் அவல் வெல்லப்புட்டு. பொதுவாய் சீனியை வைத்து செய்யப்படும் இனிப்புகளை விடவும் வெல்லம், பனங்கல்கண்டை சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள் நல்லது. இதில் பருப்பு, தேங்காய் போன்ற சத்துள்ள‌ பொருள்களும் அட்ங்கியிருக்கின்றன. இனி அவல் புட்டு செய்முறையைப் பார்க்கலாம்.


அவல் புட்டு

தேவையான பொருள்கள்:

அவல் ஒரு கப்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
தேங்காய்த்துருவல் அரை கப்
வெல்லம் ஒன்றரை கப்
சிட்டிகை உப்பு
ஏலப்பொடி அரை ஸ்பூன்


செய்முறை:

அவலை வெறும் வாணலியில் சிறு தீயில் வறுக்கவும்.
அவல் இலேசாகப்பொரிய ஆரம்பித்ததும் இறக்கி ஆறவைத்து பொடிக்கவும்.
பருப்பை இலை இலையாக வேக வைக்கவும்.
அவல் மாவில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
பருப்பு வெந்த வெதுவெதுப்பான நீர் விட்டு பிசிறவும்.
அவலைப்பிடித்தால் உருட்டும் வடிவம், விட்டால் உதிரும் வண்ணம் இருக்க வேன்டும்.
இது தான் சரியான பதம்.
வெல்லத்தை அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் காய்ச்சவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வடிகட்டவும்.
பாகை மறுபடியும் முதிர்ப்பாகு நிலை வரும்வரை காய்ச்சவும்.
சில சொட்டுக்கள் பாகை தண்ணீரில் ஊற்றி விரலால் எடுத்து உருட்டிப்பார்த்தால் மெழுகுப்பதம் வர வேன்டும்.
அந்த நிலையில் பாகை எடுத்து அவல் மாவில் ஊற்றி நன்கு கிள‌றவும்.
பின் தேங்காய்த்துருவ‌ல், ஏலப்பொடி, பருப்பு சேர்த்து கிள‌றவும்.
பின் அதை அப்படியே அமுக்கி வைத்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பின் எடுத்து கிளறிப் பார்த்தால் புட்டு போல உதிர் உதிராய் வ‌ரும்.
இப்போது சுவை மிகுந்த அவல் புட்டு தயார்!

இனிப்புக்களுடனும் அகம‌கிழ்வுடனும் அனைவரும் தீபாவளியைக்கொண்டாடி மகிழ‌ என் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

Friday 10 October 2014

அமுத மொழிகள்!!

சமீபத்தில் சுவாமி சிவானந்தர் சொன்ன சில அறிவுரைகளைப்படிக்க நேர்ந்தது. அவை எல்லாமே பொன்வரிகள் தான். மொத்தத்தில் எல்லா துன்பங்களுக்கும் மனம் தான் காரணம் என்கிறார். யோசனை செய்து பார்க்கையில் அது உண்மை தான் என்று நமக்கும் புரிகிறது. ஆனால் பல சமயங்களில் அறிவை பாசம், அன்பு, அக்கறை போன்ற உணர்வலைக‌ள் ஜெயித்து விடுகின்றன. அப்புறம் அல்லல்களுக்குக் கேட்பானேன்! இதோ அவர் சொன்ன சில அறிவுரைகள்! படித்து ரசியுங்கள்!

மன அமைதி பெற ஸ்ரீ சுவாமி சிவானந்தர் சொன்ன அறிவுரைகள்:

நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் செய்வது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் ஏன் அல்லலுற வேண்டும்?
 
யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்குத்தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கில்லை. உங்கள் மன அமைதியைப்பாதுகாக்க உங்கள் சொந்த வேலையில் கவ‌னம் செலுத்தினால் மட்டும் போதும்.

பயனுள்ள‌ நன்மை பயக்கும் விஷயத்தை செய்ய நாட்கணக்கில் யோசிக்காதீர்கள். அதிக யோசனை இறுதியில் நல்ல காரியங்களை செய்ய விடாமலேயே தடுத்துவிடும்.

ஆக்கப்பூர்வமான காரியங்களில் இடைவெளி ஏற்படுவது கூட, சில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களைக் கீழே தள்ளி விடும். நேரத்தைப் பொன்போல பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவழியுங்கள்.

நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்க வேன்டாம். மானசீக பிரார்த்தனைகள், நல்ல நூல்களைப்படிப்பதில் செலவழியுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடுஞ்சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன. எனவே மனதை சுத்தமாக வைத்திருங்கள். வாழ்க்கையென்னும் நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும்.
 
உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள்.

காரணத்துடன் மட்டுமே பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற‌ பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள். களங்கமற்ற‌ நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றன. 
 
உங்களிடம் கேட்கப்பட்டாலன்றி எவருக்கும் புத்திமதி சொல்லப்போகாதீர்கள்.

எப்போதும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அது எப்போதுமே உருப்படியான விளைவுகளைத்தராது. மற்ற‌வர்களைப் புண்படுத்துவதுடன் சில சமயங்களில் உறவுகளிடையே தேவையற்ற‌ விவாதம் பிரிவையே உண்டாக்கி விடுகிறது.