Thursday, 5 August 2021

சில வழிமுறைகளும் தீர்வுகளும்!!

 வயதானால் வலிகளுக்குப் பஞ்சமில்லை.

எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, குதிகால் வல், இடுப்பு வலி என்று தொடர்ந்து வருவதும் சர்க்கரை ஏறுவதும் இரத்த அழுத்தம் உயர்வதும் முதியவர்களை அதிகமாகவே ஆட்டிப்படைக்கின்றன. நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பதும் அதிக வலிகள் இல்லாமல் உடலை பராமரிப்பதும் சவால்களாகவே இன்றைக்கு இருந்து வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, பல வித மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க நேருகின்றது. அதையும் தாண்டி சின்னச் சின்ன வைத்திய முறைகள் நமது நோய்களின் கடுமையைக் குறைக்க வழி செய்கின்றன. அந்த மாதிரி சில வைத்திய முறைகள், நான் என் ஃபைலில் சேகரித்து வைத்திருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். யாருக்கேனும் இவை பலன் கொடுத்து நோயின் கடுமையைக்குறைத்தால் அதுவே இந்தப்பதிவிற்கான பரிசாய் மாறும்.  

சர்க்கரை நோய் குறைய:

1. எருக்கம் இலைகள் இரண்டை எடுத்து கால்களை நன்கு கழுவிக்கொண்டு காலின் அடிபாகத்தில் இலைகளின் அடிபாகத்தை வைத்து சாக்ஸ் போட்டு பொருத்திக்கொள்ள வேண்டும். இரவில் இதை உபயோகிக்கக்கூடாது. 


பகலில் தினமும் 6 மணி நேரம் உபயோகிக்க வேண்டும். இதைப்போல ஏழு நாட்கள் செய்யும்போது எட்டாம் நாள் உங்களுக்கு 50 முதல் 60 வரை சர்க்கரை குறைந்திருக்கும்.

2. 300 கிராம் செலரி தண்டுகளை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு 6 எலுமிச்சம்பழங்களின் சாறை அதன் மீது பிழிந்து ஒரு சிறு தட்டால் மூடி, ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி, இந்த சிறிய பாத்திரத்தை அதனுள் வைத்து அந்த தண்ணீரை கொதிக்க விடவும்.


 கொதி வந்ததும் தீயைக் குறைத்து கொதி நிலையில் 2 மணி நேரம் வைத்திருக்கவும். பின் அடுப்பை அணைத்து, சூடு நன்றாக குறைந்ததும் சிறு பாத்திரத்தில் வைத்த செலரிக்கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி குடித்து வரவும். விரைவில் சர்க்கரை நார்மலுக்கு வரும்.

சைனஸ் பிரச்சினைக்கான தீர்வு இது:

சாறு நீக்கிய எலுமிச்சம்பழத்தோல்களைப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். எந்த மூக்கு துவாரத்தில் நீர் வடிகிறதோ அந்த மூக்கு துவாரத்தால் இழுத்து அடுத்த துவாரத்தால் காற்றை வெளி விட வேண்டும். பிறகு அதே துவாரத்தால் உள்ளே இழுத்து நீர் வடியும் துவாரத்தால் வெளி விட வேண்டும். 

மூட்டு வலி‍ யூரிக் அமிலம் அதிகரித்தால்:பப்பாளிக்காய் ஒன்றை எடுத்து சிறு துண்டுகளாக்கியது 1 கப் வேண்டும். இதை 2 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். 5 சின்ன வெங்காயம் அரிந்து போட்டு தீயைக் குறைகக்வும். இடித்த பூண்டுப்பற்கள் 4, சீரகம் அரை ஸ்பூன், ஒன்று பாதியாய் இடித்த மிளகுத்தூள் 1 ஸ்பூன், 2 சிட்டிகை உப்பு போட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதித்ததும் இறக்கி சூப் போல சாப்பிடவும். 7 நாட்களுக்கு காலை 11 மணி போல சாப்பிடவும். அதிகப்படியாக தேங்கி நிற்கும் யூரிக் அமிலம் நீங்கும். வலி குறையும். அதன் பின் வாரம் இரு முறையாவது இதை செய்து குடிக்கவும். யூரிக் அமிலத்தின் அளவு சீராகி விடும்.

பித்தப்பை கற்களுக்கு:


ஒரு வெள்ளை கத்தரிக்காயும் தோலுடன் ஒரு எலுமிச்சம்பழமும் நன்கு அரைத்து சிறிது நீர் கலந்து வடிகட்டி ஏழு நாட்களுக்கு குடித்து வரவும். எட்டாவது நாள் கற்கள் நீங்கி விடும்.

களைப்பிற்கு:

முருங்கைக்காய் விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கி உடைத்துப்பார்த்தால் உள்ளே கருப்பு விதை இருக்கும். இது விட்டமின் பி அதிகம் உள்ளது. தினமும் ஒரு விதை சாப்பிட்டு வரவும். 

குதிகால் வலிக்கு:


கொள்ளு மாவு 2 ஸ்பூன், நல்லேண்ணெய் 1 ஸ்பூன், வினீகர் 1 ஸ்பூன், கல்லுப்பு 1 ஸ்பூன் இவற்றை ஒரு கப் தயிரில் நன்கு கலந்து குழைக்கவும். இந்த பேஸ்டை குதிகாலில் பாதி கால் வரை தடவி துணி வைத்து கட்டி இரவு தூங்க வேண்டும்.. கால் வலி காலையில் சரியாகி விடும்.


Sunday, 25 July 2021

காற்றுக்குமிழ்கள்!!!

 


இது ஒரு மீள் பதிவு.

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே இது புதிய பதிவு தான். இதை எழுதும்போது மனதில் இருந்த ரணம் பத்து வருடங்களுக்குப்பிறகாவது குறைந்துள்ளதா என்று நினைத்துப்பார்த்தால் இன்னும் உள்ளே அந்த ரணம் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. பதிவைப்படித்த பிறகு உங்களுக்கும் அது புரியும்.

25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது. 

நானும் என் சினேகிதியும் ஊட்டி வரை சென்று விட்டு தஞ்சைக்குத்திரும்பிய தினம் அது. என் சகோதரி வீட்டில் தான் என் அம்மாவும் இருந்தார்கள். அதனால் அங்கு வந்து தான் இறங்கினோம். அன்றிரவு என் அம்மாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.

சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.[ மொபைல் இல்லாத காலம்] என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.

அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.

திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.

பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.

அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.

ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.


Friday, 9 July 2021

முத்துக்குவியல்-62!!!

 உயர்ந்த முத்து:

இந்தியாவில் அதிக அளவில் இரத்த தானம் செய்தவர்களில் முதன்மையாக விளங்குபவர் ஷபீர்கான். 58  வயதான இவர் காஷ்மீரைச் சேர்ந்த ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். 41 ஆண்டுகளாய் இரத்த தானம் செய்து வரும் இவர் இது வரை 82 லிட்டர் ரத்தத்தை தானமாக வழங்கியிருக்கிறார். இவரின் தொன்டினால் ' காஷ்மீரின் ரத்த மனிதர்' என்று உயர்வாக அழைக்கப்படுகிறார். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறைகள் ரத்த தானம் செய்கிறார். காஷ்மீர் மட்டுமின்றி ஒடிசா, தமிழ்நாடு, புது டெல்லி, ஆந்திரா உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ரத்த தானம் செய்திருக்கிறார். 


2004ல் சுனாமி பாதித்த இடங்களுக்குஇரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்பில் இருந்து ரத்த தான இயக்கங்களை வழி நடத்தியிருக்கிறார். இவர் இந்திய செஞ்சிலுவை இயக்கத்தின் வாழ்நாள் உறுப்பினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 2300 உறுப்பினர்களைக்கொண்ட தன்னார்வ இரத்த தான இயக்கக்குழுவினருக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்தக்குழு மூலம் ரத்த தானம் செய்வதற்கு பொதுமக்களை ஊக்கப்படுத்துவதுடன் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

நெகிழ வைத்த‌ முத்து:

இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்து ஒன்பது மாதங்கள் கடந்து போய் விட்டன. என்னை மிகவும் பாதித்த மரணம் அவருடையது. 6 மாத‌ங்கள் வரை அவருடைய பாடல் நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமலேயே இருந்தேன். நேற்று விஜய் டிவியில் முன்பு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எதேச்சையாக அதில் பரிசு பெற்ற சிறுவன் ஹ்ரித்திக் பாடியதைக் கேட்டேன். பாடகி கல்பனாவும் ஹிரித்திக்கும் ' ரோஜாவைத்தாலாட்டும்' பாடலை அசத்தலாக, அருமையாக பாடினார்கள். பாடல் முடிவில் கண்ணீர் விட்டு எஸ்.பி.பி அழுதார். உணர்ச்சி வயப்பட்ட குரலில் பேச ஆரம்பித்தார்.


 " நான் சில விஷயங்களை மனம் விட்டு சொல்லப்போகிறேன் இங்கு. மனமார ஒரு நல்ல பாட்டை பாராட்டாதவன் ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியாது. கல்பனா அப்படிப்பட்ட சிறந்த பாடகி. நல்ல் மனசு இருக்கும் ஒரு மிஷின். எத்தனை முறை அவளை பாராட்டுவது? எதுக்கு சார் கண்ணுல கண்ணீர் வரணும் ஒரு அழகான பாட்டைக் கேட்கும்போது? ஒரு சின்ன பையன் அழகாகப் பாடும்போது எதுக்காக கண்ணீர் வரணும்? யாரவது இதற்கு பதில் சொல்ல முடியுமா? யாராலுமே சொல்ல முடியாத ஒரு அழகான எக்ஸ்பிரஷன் இது. மற்ற உணர்வுகளை வாயால் சொல்ல முடியும். இப்படிப்பட்ட விஷயங்களை மட்டும் சொல்வதற்குத்தான் கடவுள் கண்ணில் நீரைக் கொடுத்திருக்கார். இந்த மாதிரி ஒரு அருமையான கம்போஷிஷனைக் கேட்கும்போது, இந்த மாதிரி ஒரு சுண்டைக்காய் பையன் அனாயசமாகப் பாடும்போது, அது அப்படியே இதயத்திற்குள் போய் ஆத்மாவிலும் கலந்து கண்ணீராக வெளிப்படுகிறது. நானும் ஜானகியம்மாவும் எத்தனை நுணுக்கமான சங்கதிகளுடன் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாட்டை பாடியிருக்கிறோம்! எத்தனை பரிசுகள், அவார்டுகள் வாங்கியிருக்கிறோம்! அபப்டிப்பட்ட பாடலை இந்த தம்மாத்துண்டு பையன் அருமையாக பாடியிருக்கிறான்! கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதை விட சாட்சி வேறென்ன வேண்டும்? " என்று முடித்தார்.

இதைக்கேட்ட என் கண்களிலும் கண்ணீர் வழிந்தது! ஒரு வளரும் பாடகனுக்கு இதை விட ஒரு சிறந்த பாராட்டுப்பத்திரம் வேறு யாராலும் கொடுக்க முடியாது. எப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதரை, இசைக்கலைஞரை நாம் இழந்து விட்டோம்!

சாதனை முத்து:

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸிகா காக்ஸ். பிறந்த போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால் இந்த பெரிய குறைபாட்டை மனதில் ஏற்றி துவண்டு போகாமல் பல சிறந்த சாதனைகள் செய்து வாழ்க்கையில் ஜெயித்தவர்.


சிறு வயதில் விமானப்பயணத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தபோது விமானம் மீதும் விமானியாக ஆவதற்கும் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரிப்படிப்பை முடித்ததும் கடும் பயிற்சியை மேற்கொண்டு கடந்த 2008ம் ஆண்டு லைட் ஏர்ட் விமானத்தை இயக்கும் லைசென்ஸ் கிடைக்கப்பெற்றார்


இதனால் கைக‌ள் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்மணி என்னும் உலக சாதனை புரிந்தார். விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல் கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் செய்தல் என்று அனைத்து துறைகளிலும் வலம் வருகிறார். உலகம் முழுவதும் தன்னம்பிக்கை பேச்சாளராக இன்றும் வலம் வருகிறார்.

ரசித்த முத்து:

கொரோனாவால் ஏற்பட்ட விபரீதங்கள், மரணங்கள், பிரச்சினைகள் இவற்றுக்கப்பால் கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு பள்ளிச் சிறுவனின் மனதில் எழ்ந்த கற்பனை இது! 


வாட்ஸ் அப்பில் வந்தது! படித்து முடித்ததும் நம்மையுமறியாமல் ஒரு சின்னப்புன்னகை எழுகிறது!!  

இசை முத்து:

இந்தப்பாடல் 1955ல் வெளி வந்த ' நல்ல தங்காள்' என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இனிய பாடல்! 70 வருடங்களுக்கு முன் வந்த பாடல் என்பதால் எப்படியிருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றும். பாடலைக் கேட்டுப்பாருங்கள். டி.எம்.செளந்திரராஜன் அந்த அளவு இனிமையாக‌ப் பாடியிருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கு 'பாச மலர்' திரைப்படம் தான் எப்போதும் உதாரணம் காண்பிக்கப்படும். இந்தப்பாடல் அதற்கு முன் வெளி வந்த, ஒரு அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடும் பாடல்.


Saturday, 3 July 2021

தக்காளி தொக்கு!!!

 முன்பெல்லாம் புதுமையான குறிப்புகள் பார்த்துப் பார்த்து செய்து உடனேயே என் சமையல் தளத்திலேயோ அல்லது இங்கேயோ பதிவும் போடுவேன். கொரோனா காலம் வந்த பின் நிறைய ஆர்வங்கள் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. சமீபத்தில் நான் வழக்கம்போல் செய்த‌ தக்காளித்தொக்கு என்னை பதிவேற்றத்தூண்டியது.

எத்தனையோ வருடங்களாக நான் அடிக்கடி செய்யும் தக்காளி தொக்கு இது. தோசைக்கு மிகவும் பொருத்தமானது என்பதால் செய்த உடனேயே எப்போதும் பாதி தீர்ந்து விடும். தக்காளி மட்டும் சதைப்பற்று உள்ளதாக, சிவந்த‌ நிறத்தில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் இப்படிப்பட்ட தக்காளி கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. தயிர் சாதம், பொங்கல் எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமான பக்கத்துணை. இப்போது செய்முறைக்குப்போகலாம்!


தேவையான பொருள்கள்:

தக்காளி பெரியதாக -4

பூண்டு [சிறியது]‍- 10 இத்ழ்கள்

புளி- நெல்லிக்காய் அளவு

வற்றல் மிளகாய்- 6

தேவையான உப்பு, நல்லெண்ணெய்‍

வெந்தயம்- 1 ஸ்பூன்

காயம் -ஒரு சிறு துன்டு

மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்

கடுகு -1 ஸ்பூன்

கறிவேப்பிலை -1 ஆர்க்

செய்முறை:

பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்.

வெந்தயத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

இவை ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.

புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.

பின் ஊறிய புளியுடன் மிளகாய், தக்காளி சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

அதில் அரைத்த விழுதைக்கொட்டி வேக வைக்கவும்.

மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக்கொடுக்கவும்.

தண்ணீரெல்லாம் சுண்டி கெட்டியாகும்போது தீயைக்குறைத்து உப்பு சேர்த்துக்கிளறவும்.

வேறு ஒரு சிறு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலையை தாளிக்கவும்.

தீயை வெகுவாக குறைத்து பொடியாக நறுக்கிய பூண்டிதழ்களைப்போட்டு வதக்கவும்.

பூண்டு சிவக்காமல் வதக்கி தக்காளி தொக்கில் கொட்டி குறைந்த தீயில் சமைக்கவும்.

மேலும் நல்லெண்ணெய் அவ்வப்போது சேர்க்கவும்.

தொக்கின் நிறம் நன்கு சிவந்த கலரில் வரும்போது, மேலே எண்ணெய் மிதக்கும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான தக்காளி தொக்கு தயார்!!


Monday, 28 June 2021

ஒரு மரத்தின் கதை!!!!

நெகிழ வைத்த முதல் முத்து: 

இது ஒரு சிறு கதை! ஒரு மாத மலரில் படித்தேன். தினமும் நாம் பார்க்கிற கதை தான்! ஆனால் சொல்லப்பட்டிருக்கும் கோணம் புதியது! படித்த பின் மனம் கனமாகியது. நீங்களும் படியுங்கள்.

இது மரத்தின் கதையல்ல!

அந்த மரத்தடியில் ஒரு சிறுவன் வந்து தினமும் ஆடிப்பாடி, விளாயாடி விட்டு செல்வான். அவனைப்பார்க்கும்போதெல்லாம் அந்த மரத்துக்கு மனம் ஆனந்தத்தால் பொங்கும். சில நாட்களாக அந்த சிறுவன் வரவில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. வெகு நாட்கள் கழித்து அவன் வந்தான். மரம் அவன் வராததைப்பற்றி விசாரித்து, அவனுடைய பிரச்சினையைக் கேட்டது. அவனுடைய நண்பர்கள் எல்லோரும் பொம்மைகள் வைத்து விளையாடுவதாகவும் அவனிடம் மட்டும் ஒரு பொம்மை கூட இல்லை என்றும் அவன் சொன்னான். உடனேயே மரம் ' கவலைப்படாதே. இந்த மரத்திலுள்ள‌ பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக் கொள். என்னைப்  பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு' என்று சொன்னது. அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்துச் சென்றான்.


நாட்கள் சென்றன. அவன் மட்டும் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. சில வருடங்கள் கழித்து அவன் திரும்ப வந்தான். அவன் இப்போது வளர்ந்திருந்தான். முகத்தில் மட்டும் கவலை தெரிந்தது. மரத்திற்கு அவன் வருகையில் ஏக சந்தோஷம். " வா, வந்து விளையாடு. என் கிளைகளில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு" என்றது. அவனோ " இல்லை. எனக்கு திருமணம் ஆகி விட்டது. எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென்று வீடு மட்டும் கட்ட முடியவில்லை. வீடு கட்டுவதற்கு பணமில்லை' என்றான். மரம் உடனேயே' உனக்கு கொடுக்க என்னிடம் கிளைகள் இருக்கின்றன. அவற்றை வெட்டி எடுத்துச் சென்று வீடு கட்டிக்கொள்' என்றது. அவன் கிளைகளை வெட்டத்தொடங்கும்போது, " இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே. வருடம் ஒரு முறையாவது வந்து செல்" என்றது. 

அவன் சில வருடங்களாக வரவேயில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் தினம் காத்திருந்தது. பல நாட்களுக்குப்பின்னர் அவன் மீண்டும் வந்தான். மரம் ஆனந்தக் கூத்தாடியது. அவன் எப்போதும்போல சோகமாக இருந்தான். மரம் ஏனென்று விசாரித்ததற்கு, " என் மீன்பிடி படகு உளுத்து விட்டது. அதனால் மீன் பிடிக்க முடியாததால் எனக்கு வருமானமில்லாமல் போய் விட்டது. நாங்கள் மிகவும் கஷ்டபப்டுகிறோம்" என்றான். மரம் துடித்துப்போனது. " நான் இருக்கிறேன். என் அடிமரத்தை எடுத்துக்கொள். அதைக்கொண்டு படகு கட்டிக்கொள்" என்றது. அவன் அடிமரத்தை வெட்டும்போது " இப்படி வருடங்களுக்கு ஒரு முறை என்றில்லாமல் என்னை அடிக்கடி பார்க்க வந்து கொண்டிரு" என்று சொன்னது.

அதற்குப்பிறகும் அவன் பல வருடங்கள் வரவேயில்லை. மரத்திற்கு மெல்ல மெல்ல நம்பிக்கை குறைந்து போனது.

அப்போது தான் அவன் வந்தான். தலை நரைத்து, கூன் விழுந்து, தளர்வடைந்திருந்தான்.

மரத்திற்கு அழுகை வந்தது. " இப்போது உன்னிடம் கொடுக்க என்னிடம் பழங்களோ, கிளைகளோ, அடி மரமோ இல்லையே! " என்று சொல்லி வருந்தியது. 

அவன் சொன்னான். " இப்போது பழங்களை கடித்து சாப்பிட என்னிடம் பற்கள் இல்லை. கிளைகளையும் அடிமரத்தையும் வெட்டுவதற்கு என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டும்தான் தேவைப்படுகிறது" என்றான்.

" அப்ப‌டியா? இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள்" என்று சொன்னது மரம். அவன் உடனேயே அந்த மரத்தின் வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குத்தான் அந்த மரம் பல வருடங்களாகத் தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியதில் மரம் ஆனந்தக் கண்ணீரை உகுத்தது.

ஆசிரியரின் குறிப்பு:

இது மரத்தின் கதையல்ல. நிஜ வாழ்க்கையில் நம் பெற்றோர்களின் கதை. இந்த சிறுவனைப்போல் நாமும் சிறு வயதில் பெற்றோருடன் ஆனந்தமாக விளையாடுகிறோம். பெரியவனானதும், நமக்கென குடும்பம், குழந்தை வந்ததும் ஒதுங்கி விடுகிறோம். அதன் பின் ஏதாவது தேவைகள் அல்லது பிரச்சினைகள் என்று வந்தால்தான் அவர்களைத் தேடிச் செல்கிறோம். 

நம்மிடம் இருப்பவை எல்லாம் நம் பெற்றோர் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய அன்பு, பாசம், நேரம் தவிர‌.  அவர்கள் விரும்புவதும் அதை மட்டும்தான்!!

 


Friday, 11 June 2021

அந்த நாள் ஞாபகம்...!!!

 சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது.

அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு நகரத்தில் ஒரு பைப் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்த நேரம். முதன் முதலாக மொழி தெரியாத, புரியாத இடத்தில் நுழைந்த போது ஏகப்பட்ட பிரமிப்பு, தயக்கம் எல்லாம் இருந்தது. தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழியறியாத நிலை. அருகே கேரளத்தினர், எதிரே மராத்தியர், சற்று தள்ளி பீஹாரி குடும்பம், பின்னால் உத்திரப்பிரதேச தம்பதியினர் என்று இந்தியாவின் அனைத்து மாநிலத்தவர்களும் சங்கமித்திருந்த இடம் அது. பல வித கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், சமையல் முறைகள் எல்லாம் பழகிப்போக, ஹிந்தியும் உருதுவும் சரளமாக பேச முடிந்த‌து.மராத்தியும் சிறிது சிறிதாகப்பேச முடிந்தது. பீஹாரி பேசினால் புரிந்தது. 

ஹிந்தியில் அத்தனைப்பாடல்களும் ரசிக்க முடிந்தது. நிறைய மனம் கவர்ந்த பாடல்கள் அப்போதைய கேசட் வடிவில் பதியப்பெற்றன. சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, ஷர்மிளா டாகூர் படங்களை விழுந்து விழுந்து ரசித்த நாட்கள் எத்தனை எத்தனையோ! அந்த ஊரில் தான் மிகவும் புகழ் பெற்ற ' ஷோலே' படம் எடுத்தார்கள். 

அந்த நாட்களில் நான் மிகவும் அனுபவித்து ரசித்த சில பாடல்கள் இங்கே!


Wednesday, 26 May 2021

ருசி!!!!

 இதை எழுத ஆரம்பிக்கும்போது ' கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்' பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் எந்த கல்யாண வீட்டில் சாப்பாடு நன்றாக இருக்கிறது?

சுவை என்பது நாவின் ருசி நரம்புகளுக்குப் புரிவது. அதுவே, அந்த சுவையில் உணவை அளிப்பவர் மனதின் அன்பும் அக்கறையும் தெரிகிறபோது அந்த சுவை பன்மடங்காகத்தெரியும். அதனால் தான் தன் அம்மாவின் கைப்பக்குவத்தை எந்த மகனும் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை 

சமைப்பவன்  கலைஞன் என்றால் அதை ருசித்து சாப்பிடுபவன் மகா கலைஞன் என்று ஒரு இதழில் படித்தேன். ர்சித்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சமைத்தவர்களை மனந்திறந்து பாராட்டும் மனம் எத்தனை பேருக்கு  இருக்கிறது?அதில் மனம் சுருங்கிப்போகும் பெண்களில் ஏராளமானோர் ஏதோ சமைத்தோம் ஏதோ பரிமாறினோம் என்பதைத்தான் தன் வாழ்க்கையில் செய்கிறார்கள்.


மறக்கமுடியாத சுவை கொண்ட உணவுகளை நம் வாழ்நாளில் சில சமயங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொருத்தருக்கும் அது சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மாறுபடுகிறது. பல வருடங்களுக்கு முன்நான் தாய்மையுற்றிருந்த சமயம் எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, நகரின் மையப்பகுதியில் என் அம்மா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். எட்டாம் மாதம் நடந்து கொண்டிருந்த போது, 1977ம் வருடம் அது, தஞ்சைப்பகுதியில் பலத்த புயல் அடிக்க ஆரம்பித்திருந்தது. மின்சாரமில்லை. ஊரெங்கும் வெள்ளக்காடாக இருந்தது. அந்த வீட்டுக்காரம்மா, என் அம்மா சமையல் செய்யும் வரை காத்திராமல் என்னை அழைத்துச் சென்று அமர வைத்து நிறைய தயிர் ஊற்றி பிசைந்த சாதமும் புளியும் வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்து செய்திருந்த நார்த்தங்காய் ஊறுகாயும் தருவார்கள். அன்போடு அளித்த அந்த தயிர் சாதத்தின் சுவையை என்னால் எப்போதுமே மறக்க முடிந்ததில்லை.

என் புகுந்த வீடான கிராமத்தில் என் மாமியார் பொங்கல் அன்று சர்க்கரை பொங்கலும் வெண் பொங்கலும் காய்கறி குழம்பும் தன் பிள்ளைகளுடன் பெரிய பானைகளில் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரிசியும் பசும்பாலும் தேங்காய்த்துருவலும் சிறிது உப்பும் சேர்த்து செய்வார்கள். இரவு அந்த வெண் பொங்கலில் நீர் ஊற்றி வைத்து விடுவார்கள். கிராமம் என்பதால் கட்டித்தயிருக்கு பஞ்சமில்லை. காலையில் அந்த சாதத்தில் பசும்பாலில் உறைய வைக்கப்பட்ட தயிர் கலந்து மீதமிருக்கும் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி சுகம். 

தஞ்சாவூரில் எங்களுக்கு ஒரு பழைய வீடு இருந்தது. பின்னால் கிணறும் பக்கவாட்டில் முருங்கை, கொய்யா, தென்னை, நெல்லி மரங்களுடன் கீரைப்பாத்திகளுமிருக்கும். கீழ் வீட்டில் வாடகைக்கு விட்டு விட்டு, மேல் வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். ஒரு சமயம் வெளியே போய் விட்டு திரும்பும்போது அவர்களை அழைக்க யாரையும் காணவில்லை. கிணற்றுப்பக்கம் பேச்சுக்குரல் கேட்டதூ. அங்கே சென்று பார்த்தால் கீழே குடியிருந்தவரின் அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது, இருவரும் இலை வடாம் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பெரியவருக்கு 85 வயதிற்கு மேலாம். அவரின் மனைவிக்கு 80 வயதிருக்கும். கணவர் இலை வடாம் மாவை சிறு சிறு தட்டுகளில் வட்டமாக எழுத, அவரின் மனைவி சுறுசுறுப்பாக அவற்றை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து தாம்பாளத்தில் பரப்புகிறார். [ பிறகு அவற்றை வெய்யிலில் காய வைக்க வேண்டும்.] என்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நாற்காலி போட்டு அமர வைத்து பேசியவாறே தங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் மீது மற்றவர் காட்டிய அக்கறையும் பகிர்ந்து கொண்ட புன்னகைகளும் அவர்களின் சுறுசுறுப்பும் இருவருக்குள்ளும் இருந்த புரிதலும் என்னை கட்டிப்போட்டன. இலை வடாமை அவர்கள் தயாரிப்பதைப்பார்ப்பதை விட அவர்களையே நான் ரசித்துக்கொண்டிருந்தேன். சில நாட்களில் பொரித்த இலை வடாம்கள் எனக்கு கொண்டு வந்து த‌ந்தார்கள். அவை அத்தனை ருசி! 

என் சினேகிதி ஒருவர் மணத்தக்காளிக்கீரையும் சின்ன வெங்காயமும் நிறைய போட்டு நல்லெண்ணையில் அருமையாக ஒரு புளிக்குழம்பு செய்வார். சுடு சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். பொதுவாய் மணத்தக்காளி கீரையில் என் மாமியார் சாறு செய்வார்கள். ரசம் மாதிரி இருக்கும் அது ரொம்பவும் ருசியாக இருக்கும். அதைத்தவிர கூட்டு செய்வேன். ஆனால் புளிக்குழம்பு இந்த மாதிரி செய்ததில்லை. என் சினேகிதியிடம் கற்ற பிறகு அடிக்கடி செய்ததில் அது மிகவும் புகழடைந்து விட்டது. 

என் பாட்டி நாக்கடுகு துவையல் செய்வார்கள். பிரமாதமாக இருக்கும். இப்போது நாக்கடுகு கிடைக்குமா என்பது தெரியவில்லை. 

இப்படியெல்லாம் நம் வாழ்க்கை முழுக்க பல விதமான ருசிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. சில ருசிகளைத்தந்தவர்கள் காற்றோடு கலந்து விட்டாலும் ருசிகள் மனதில் அப்படியே தேங்கி நின்று விட்டன!


Wednesday, 5 May 2021

முத்துக்குவியல்-61!!!

 வணங்க வைக்கும் முத்து:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்குட்டி அம்மா என்ற 74 வயதான காணி என்னும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் பார்க்கும் மூதாட்டியை வன முத்தச்சி என்று அப்பகுதியினர் செல்லமாக அழைக்கின்றனர். கல்வி கற்பதற்காக 1950களிலேயே மலையை விட்டு இறங்கி வந்திருக்கிறார் இவர். அந்தக் காலத்தில் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க அந்தப்பள்ளியில் வசதியில்லாத காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டாலும் தன்னைப்படிக்க வைத்த பெற்றோரை இந்த 75 வயதிலும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறார். இயற்கையை நன்றியுடன் நினைத்துப்பார்க்க வலியுறுத்தும் இவர், தினமும் அதிகலையில் எழுந்து தானே தன் குடிசைக்கெதிரே கட்டமைத்திருக்கும்  கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு அதிகாலையில் மூலிகைகள் பறித்து வர காட்டினுள் செல்லும் இவர் மூலிகைகளை வணங்கி அதன் பின்னரே பறித்தெடுத்து வருகிறார். " ஒவ்வொரு மூலிகையின் இளந்தண்டுகளின் நரம்புகள் மனிதனின் இரத்த நாளங்களுக்கு இணையானவை. அவைகளிலிருந்து வெளிப்படும் ஆற்றல் தான் நம் உடலுக்குள் பாய்ந்து குணப்படுத்துகிறது. என்னைப்பொறுத்தவரை, ஒவ்வொரு இலையும் மந்திரம். இந்த மூலிகை சிகிச்சை ஒரு தெய்வ வழிபாடு" என்று சொல்லும் இவர் ஒரு இலையைக்கூட அதிகமாகப்பறித்து வீணாக்காமல் தேவைக்கு வேண்டியதை மட்டும் பறிப்பதை ஒரு விரதமாகவே வைத்திருக்கிறார். 


தன் தாயிடம் கற்ற இந்த சிகிச்சை முறைகளை, சின்ன வயதில் பத்து கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்ற போது கூடவே துணையாக வந்து பதினாறு வயதில் விரும்பி திருமணம் செய்து கொண்ட தன் கணவர் தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார் என்று அன்புடன் நினைவு கூர்கிறார். மூன்று ஆண் குழந்தைகள், குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருந்த போது, இளைய மகன் எதிர்பாராத விதமாக பாம்பு தீண்டி இறந்த போது தான் இனி இந்த துன்பம் இன்னொருவருக்கு நிகழக்கூடாது என்று தான் கற்றிருந்த மூலிகை சிகிச்சையை கையில் எடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை கடந்த 50 வருடங்களாக நானூறு பேர்களை பாம்புக்கடியால் இறக்கும் தருவாயில் இருந்தவர்களை உயிர் பிழைக்க வைத்திருக்கிறார். இன்னொரு மகன் யானை மிதித்து மரணமடைந்தார்.  தற்போது ரயில்வேயில் வேலை செய்து கொண்டிருக்கும் மூத்த மகன் தன்னுடன் வந்து இருக்குமாறு வற்புறுத்தியபோதும் ‘ இந்தக்காட்டில் தான் என் வாழ்வும் பாரம்பரியமும் இருக்கிறது’ என்று சொல்லி அவருடன் செல்ல மறுத்து விட்டார்.

தொடந்து தளராமல் சேவை செய்து வருகிறார். கடந்த 1995ல் லட்சுமி பாட்டியை கேரள அரசு ‘நாட்டு வைத்திய ரத்னம்’ என்ற விருதை அளித்து கவுரவித்தது.  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் இவர் கல்லார் பகுதியிலுள்ள நாட்டுப்புற கலை பண்பாட்டு மையத்திற்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுப்பது உண்டு. மேலும் திருவனந்தபுரம் நெடுமங்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு சென்று உரையாற்றுவதும் இந்த லட்சுமி பாட்டியின் வழக்கம். இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது! இவரது கைவசம் 500க்கும் மேற்பட்ட நாட்டு சிகிச்சை முறைகள் உள்ளன. 

இந்த லட்சுமி பாட்டியிடம் அப்படி என்ன விஷயம் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், அவரிடமிருந்து வைத்திய முறைகளை அறிந்து கொள்வதற்காகவும் மாணவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். அனைவரிடமும் தனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை இவர். திருவனந்தபுரம் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பொன்முடி செல்லும் வழியில் கல்லார் என்ற இடத்தில் நடுக்காட்டில் தான் இந்த பாட்டியின் குடில். சரியான சாலையே இல்லாத காட்டுக்குள் இருக்கும் தன் குடிசைக்கு வைத்தியத்திற்காக வருபவர்களுக்கு துளசி நீரும் வேக வைத்த காட்டுக்கிழங்குகளும் உணவாகத் தருவது இவர் வழக்கம். தனது மருத்துவத்தை தற்சமயம் முறைப்படுத்தி, ஆவணப்படுத்தும் முயற்சியில் அமிர்த பலா, காட்டு முல்லை என்ற பெயர்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார். தொடர் விருதுகளுக்குப்பின் இவரைத்தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தாலும் இன்னும் தளராமல் இவர் உழைத்து வருகிறார்.இந்த அருமையான பெண்மணியை வணங்கி வாழ்த்துவோம்!  

உயர்ந்த முத்து:

இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் டி.நடராஜன். தமிழகத்தின் சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்தவர். ஏழ்மை நிலையில் வளர்ந்தவர். 


தந்தை நெசவு வேலையில் தினக்கூலி. தாயார் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வந்தார். ஐந்து குழந்தைகளில் மூத்தவரான நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்க ளை வீழ்த்தி புகழ் பெற்றார். யார்க்கர் பந்துவீச்சில் அசத்தி வரும் நடராஜன், டி20 போட்டிகளில் இறுதிகட்ட ஓவர்களில் அசத்தலாக பந்து வீசி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார். அதன்படி எல்லோருக்கும் கார் பரிசாக சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.

இத்தனை ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வந்து, புகழ் பெற்றாலும் உடனே வானத்துக்குப் பறக்காமல் தன் மனதில் நன்றியுணர்ச்சியை செயலில் காட்டியிருக்கிறார் நடராஜன்.  தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயப்பிரகாஷுக்கு பரிசளித்து,  நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் நடராஜன்.

இசை முத்து:

இந்தப்பாடல் கவிஞர் வாலியால் எழுதப்பட்டு இசை ஞானி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், திருமதி.கே.எஸ்.சித்ரா இருவராலும் பாடப்பட்டது.. இருவருமே இந்தப்பாடலை போட்டி போட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள். பாடலின் முதல் பகுதி கர்நாடக தேவகாந்தாரி ராகத்தில் தொடங்கி நடுவில் பாகேஸ்ரீ ராகத்தில் தவழ்ந்து கடைசி பகுதி சுமனேஸரஞ்சனி ராகத்தில் மிதந்து முடியும். கேட்டு ரசியுங்கள். இதில் சுபஸ்ரீ தணிகாசலாம் இந்தப்பாடலின் இனிமையில் மயங்கிப்போய் சொல்கிற மாதிரி, நாமும் "கேட்கலாம், கிறங்கலாம் "! ' 

Sunday, 25 April 2021

கொரோனா நிகழ்வுகள்!!!

கடந்த சில நாட்களாகவே, நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பவர்களை தயங்க வைக்கிறது. ஏகப்பட்ட குழப்பங்கள். இதைப்பற்றி நிறையவே யூ டியூபில் விவாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் இந்த நிகழ்வுகளினால் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் போக்க பல மருத்துவர்கள் தாமாகவே முன் வந்து விளக்கங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒரு மருத்துவர் மிக‌ நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள். பலருக்கும் இது பலன் தரக்கூடியதாக இருக்கும்.

 

நானும் இங்கு [ துபாய் ] என் குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றேன். அன்று காலையிலிருந்து எனக்கு வயிற்றுப்போகு இருந்தது. மருத்துவ மனை சென்ற சமயம் தான் அது நின்றிருந்தது. அதையும் சொன்னதும் எனக்கு மட்டும் அப்போது தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லி மே முதல் வாரம் தேதி கொடுத்திருக்கிறார்கள்.

பதினைந்து நாட்களுக்கு முன் என் அக்காவிற்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடந்தது. அக்கா மகன் தான் அருகிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அக்கா மருமகள் வீட்டைப் பார்த்துக்கொண்டார். பிரபல மருத்துவமனை அது. மருத்துவமனையில் ஏகப்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்ததால் மற்ற நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்திருந்தது.  

அக்காவை டிஸ்சார்ஜ் செய்த மறுநாள் அக்கா மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. மருமகளுக்கு இருமல். அவர்களை கவனித்த மருத்துவர் இது கொரோனாவாக இருக்காது என்று மருந்துகள் கொடுத்திருக்கிறார். சரியாகாமல் காய்ச்சலும் இருமலும் அதிகமாகவே, இருவரும் தஞ்சையிலுள்ள மெடிகல் கல்லூரியில் டெஸ்ட் செய்ததில் இருவருக்குமே கொரோனா பாஸிடிவ் என்று ரிசல்ட் வந்து விட்டது. இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்குள் அக்கா மகனுக்கு மூச்சுத்திணறல் ஆரம்பித்து விட்டது. அவரை வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் வைத்திருக்கிறார்கள். இரத்த அழுத்தமும் பிராணவாயுவும் கீழே இறங்க ஆரம்பித்து தீவிர சிகிச்சையால் தற்போது சீரான நிலைமையில் இருக்கிறது. இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட ஊசி போட்டால் அவருக்கு விரைவாக குணமாகும் என்று மருத்துவர் சொன்னதன் பேரில் அந்த ஊசிக்காக எல்லா இடங்களிலும் அதை வாங்க தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வரையில் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இங்கே அந்த ஊசி உள்ளது. மருத்துவரின் கடிதத்துடன் தான் அதை வாங்க வேண்டும். விலை நம் பணத்துக்கு 1 1/4 லட்சம். ஊரில் 35000 விலையுள்ள இந்த ஊசி தற்போதுள்ள நெருக்கடியால் 1 1/2 லட்சமாக உயர்ந்திருக்கிறதாம். நாளை தான் நாங்கள் வாங்கி அனுப்ப வேண்டுமா என்பது தெரியும். முதலில் அந்த மருந்தை வாங்க வேண்டும். அதை எடுத்து செல்பவருக்கு பி.சி.ஆர் டெஸ்ட் பண்ணி நெகடிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். டிக்கட் உடனேயே கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுள்ள டெம்பரேச்சர் உள்ள குளிர்ந்த பையில் தான் அதை பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். 

இந்த நிகழ்வுகளால் கடந்த 15 நாட்களாய் எல்லோருக்குமே மன உளைச்சல் வீட்டில். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை மட்டும் தான் மிச்சமிருக்கிறது.  

Thursday, 8 April 2021

மனிதம்!!!

கருணையும் இரக்கமும் மனிதநேயமும் கிலோ என்ன விலை என்றாகி விட்ட இன்றைய உலகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் புனிதமான மழைத்துளியைப்போல உண்மையான மனித நேயத்தையும் கருணையையும் தரிசிக்க நேரும்போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன!! நெஞ்சம் நெகிழுகிறது!! 

அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் இது!

மனித நேயம்-1

சிறுவாணி தண்ணீரில், மிருதுவான இட்லியை தயாரித்து, அடுப்பு தீயின் நடுவே ஆவி பறக்க, பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பவர் கமலாத்தாள் பாட்டி. பல இடங்களில் இட்லியின் விலை 6 முதல் 10 ரூபாய் வரை இருக்க, பாட்டியோ யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத் தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார். கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் 


ஊரடங்கால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்றுவந்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்து இப்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ரூ.150-க்கு விற்கப்பட்ட மிளகாய் இப்போது ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்குதான் இட்லியை விற்று வருகிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.

சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க மிக்சி கிடையாது, எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வந்தார். இவரது இந்த கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள். வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் எனத் தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் கமலாத்தாள்.

ஊரடங்கு உத்தரவால் கமலாத்தாள் பாட்டியும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கமலாத்தாள் பாட்டியின் இந்த சேவையை அறிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார். அப்போது தான் எல்லோருக்கும் கமலத்தாள் பாட்டி அறிமுகமானார். இந்நிலையில், கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.


"நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி, கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என் உடலில் தெம்பு இருக்கிறது." என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும் ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.

மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர் ராமசாமி கூறுகையில், "இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல, நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில் 500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை. ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார். சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்" என்கிறார்.

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. 


மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக மனிதர்களுக்கு இந்த ஏழமை நிலையிலும் மிகக்குறைந்த விலையில் பசியாற்றும் இந்த உயர்ந்த பெண்மணியின் மனித நேயம் மிக உயர்ந்தது என்றால் அவருக்கு உதவ முன்வந்துள்ள கருணை உள்ளங்களின் மனித நேயத்திற்கு ஈடு இணை ஏது?

Friday, 26 March 2021

காய்கறி வைத்தியம்- தொடர்ச்சி!!!

மருத்துவர் அருண் பிரகாஷ் காய்கறிகளை வேக வைக்காமல் பச்சையாகவே உண்ணும்போதுதான் அதன் முழுமையான சக்தி நமக்கு கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். எப்படியெல்லாம் சுவையாக காய்கறிகளை, முக்கியமாக அவர் குறிப்பிடும் இந்த பன்னிரெண்டு நாட்டு காய்கறிகளை சத்துள்ள உணவாக, சமைக்காமல் சாப்பிட முடியும் என்று சில செய்முறைகளை சொல்லியுள்ளார். அனைவருக்கும் பயன்படும் என்று கருதி இங்கே அவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 

நல்ல கெட்டியான தேங்காய்ப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அப்படியே மூடி வைத்தால் சில மணி நேரங்களில் அது தயிராக மாறும். அது சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்றும் மிகவும் ஆரோக்கியமானது என்றும் கூறுகிறார் மருத்துவர். 

வாழைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடலாம்?வாழைக்காயை தோல் சீவி மிகவும் பொடிப்பொடியாக நறுக்கி அதே மடங்கு வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நாட்டு சர்க்கரை கலந்து உண்ணலாம். ஒரு மணி நேரம் ஊற வைத்து சாப்பிடும்போது இது மிகவும் சுவையாக இருக்கும்..

அதன் தோலை பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு உண்ணலாம்.

வெண் பூசணியை பச்சையாக எப்படி சாப்பிடலாம்? பூசணிக்காயை அதன் சதைப்பகுதியையும் அதன் தோலையும் பொடியாக நறுக்கவும். அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சித்துருவல் சேர்த்து உப்பு, வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி  சேர்த்துக் கலந்து ஊற வைக்கவும். பின் தேங்காய்ப்பாலில் செய்த மோரில் போட்டு சாப்பிடவும்.

கொத்தவரங்காயை எப்படி சாப்பிடுவது?


10 கொத்தவரங்காயை மிகவும் பொடியாக அரியவும். அதில் வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி, உப்பு கலந்து பின் கொத்தவரங்காயில் கால் பகுதி இஞ்சி துருவலும் கலந்து வைக்கவும். இவற்றை வைப்பரில் தனியாக ஒரு நிமிடம் அடிக்கவும். பின் தனியாக அரிந்த கொத்தமல்லி இலையை      [ கொத்தவரங்காயின் அளவு] வைப்பரில் போட்டெடுத்து கொத்தவரங்காயுடன் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சம அளவு தேங்காய்த்துருவல் கலந்து கொள்ளவும்.  இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது ஏதேனும் சுண்டல் வேக வைத்து அதில் கலந்தும் சாப்பிடலாம்.

புடலங்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?மேற்கண்ட முறையில் புடலங்காயையும் செய்யலாம். கொத்தமல்லிக்கு பதிலாக புதினா சேர்க்கவும்.

பீர்க்கங்காயை எப்படி உபயோகிப்பது?
இதே போல பீர்க்கங்கங்காயின் தோலிலும் செய்யலாம். அதில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பீர்க்கங்காயை சும்மாவே சாப்பிடலாம்.

பரங்கிக்காயை எப்படி சாப்பிடுவது?இதேபோல பரங்கிக்காயை பொடியாக நறுக்கி அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சி துருவல் சேர்த்து வைப்பரில் அடிக்கவும். பரங்கி அளவு பேரீச்சை நறுக்கி நட்டு சர்க்கரை  சிறிது சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமை மாவு 4 ஸ்பூன், நாட்டு சர்க்கரை 8 ஸ்பூன் சேர்த்து கரைத்து அது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து ஊற வைத்திருப்பவற்றை போட்டு கலக்கவும். இது பாயசம். கோதுமை கொதிக்கும்போது தேங்காயையும் சேர்க்கலாம்.

கோவைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?


கோவைக்காயையும் வெள்ளரியையும் பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுப்பொடி, மாங்காய்ப்பொடி போட்டு ஊறவைக்கவும் [ 1 மணி நேரம்] 3 நாட்டுத்தக்காளி 3ஐ வெந்நீரில் போட்டு பிறகு தோலெடுத்து அரைத்துக்கொள்ளவும்.. அதை கொதிக்க விட்டு அது ஒரு ரசப்பதத்தில் இருக்கும் போது இறக்கி ஊறியவற்றை அதில் போட்டு குடிக்கவும். இரவு நேரத்தில் குடிப்பது நல்லது..

தேங்காய்த்துருவலை எப்படி உபயோகிப்பது?  தேங்காய்த்துருவல் ஒரு பங்கு என்றால் அதில் அரைப்பங்கு கோதுமை மாவு. ஒரு பங்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கைகளால் பிசைந்தால் எல்லம் சேர்ந்து ஒரு இனிப்பு வரும். அது உடம்புக்கு நல்லது.

எலுமிச்சையை எப்படி ஆரோக்கியமாக சாப்பிடலாம்?

 

2 தக்காளி+ ஒரு எலுமிச்சை தோலுடன் அரைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம்.

வெண்டைக்காயை எப்படி உபயோகிக்கலாம்?வெண்டைக்காய் 10 எடுத்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து காயை தனியாக எடுத்து விட்டு  தண்ணீருடன் நட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். வறுத்த தனியா தூள் 2 ஸ்பூன், வறுத்த எள் 2 ஸ்பூன், உப்பு, மாங்காய்ப்பொடி, வெண் மிளகுப்பொடி, நாட்டு சர்க்கரை , சிறிது தேங்காய் அனைத்தையும் அரைத்து வெண்டைக்காய் கலந்து சாப்பிடவும்.

கத்தரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

2 கத்தரிக்காய், 2 தக்காளி எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்திருந்தால் அவை மிருதுவாக மாறும். பின் அவற்றை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதில் உப்பு, சிறிது சாம்பார்ப்பொடி அல்லது ரசப்பொடி கலந்து குடிக்கலாம்.

 

Tuesday, 9 March 2021

இது ஒரு அதிசயம்!!!

என் சினேகிதியின் பெண் ஒரு  காணொளியை அனுப்பியிருந்தார். வெறும் காய்கறிகளால் வைத்தியம் செய்யும் முறையைப்பற்றியும் அந்த வைத்தியம் செய்யும் மருத்துவர் பற்றியுமான காணொளி அது. எனக்கு பல ஆச்சரியங்களை அந்த காணொளி கொடுத்தது. கோவையிலும் பெங்களூருவிலும் பல தீவிர நோய்களை, குணப்படுத்த முடியாமல் கைவிட்ட நோயாளிகளை தங்களுடைய காய்கறி வைத்தியத்தை செய்து காப்பாற்றி வரும்  மருத்துவர்கள் இருப்பதை அறிந்தேன். கோவையிலிருக்கும் மருத்துவரைப்பார்ப்பது எனக்கு வசதி என்பதால் அவரைப்பற்றியும் அவர் மருத்துவமனை பற்றியும் நண்பர்களிடம் விசாரித்து தகவல்கள் அனுப்பச் சொன்னேன்.

மருத்துவர் அருண் பிரகாஷ் மொத்தம் 12 நாட்டு காய்கறிகளான புடலங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், கொத்தவரை, எலுமிச்சை, கோவைக்காய், வெண் பூசணி, முருங்கைக்காய், தேங்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளைக்கொண்டு வைத்தியம் செய்கிறார்.


செரிமானத்திற்கு வெண் பூசணி, சிறுநீரக பிரச்சினைகளுக்கு கத்தரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரை, வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு பரங்கி, தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கை,  நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கை,  நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை,  எலும்பு மண்டலத்திற்கு தேங்காய்,  நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய்,  இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய் என்று நம் உடலுக்கான நல்ல பயன்பாடுகள் இந்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் என்று சொல்லுகிறார். 

வர மிளகாய், முக்கியமாக பச்சை மிளகாய் உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தான் இவரது தாரக மந்திரம். எந்த வியாதிக்கு எந்த காய்கறி என்பதை தேர்ந்தெடுத்து அவற்றுடன் வெற்றிலைகளை அரைத்து உப்பு போட்டோ அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தோ குடிக்கச் சொல்லுகிறார். உணவில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்றும் பால் சார்ந்த பொருள்கள், பருப்பு வகைகள் இவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். எந்த விதமான மருத்துவ ரிப்போர்ட்களையும் இவர் பார்க்க மறுக்கிறார். நோயாளியின் கைகளையும் பாதங்களையும் பார்த்தே தான் மருத்துவம் செய்வதாகக் கூறுகிறார். நேரில் செல்லும் நோயாளிகளுக்கு நாடி பிடித்து பார்ப்பதாக என் சினேகிதி சொன்னார். 

பல நோய்களை சரியாக்கிய காணொளிகளைப் பார்த்தேன். தொண்டையில் புற்று நோய் வந்து மரணத்தருவாயிலிருந்த ஒரு பெண்மணியை வெறும் எலுமிச்சம்பழத்தின் மூலம் உயிர் பிழைக்க வைத்த செய்தியையும் பத்தே மணி நேரத்தில் எந்த வலியுமில்லாமல் சிறுநீரக கற்கள் வெளியே வந்ததாக கூறிய நோயாளியின் கதையையும் தாங்கிய காணொளிகள் கண்டேன். டயாலிஸ் செய்யும் நிலைக்கு வந்த நோயாளிகளின் சிறு நீரகப்பிரச்சினைகளையும் அடிக்கடி சரியாக்கிக்கொண்டுள்ளார்.

 


சர்க்கரை நோய்க்காக‌வும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்காகவும் அவரது மருத்துவ மனைக்கு சில மாதங்களுக்கு முன் அழைத்தேன். வரவேற்பில் இருந்த பெண் நான் சொல்லிய விவரங்களைக் கேட்டு விட்டு மூன்று புகைப்ப‌டங்களை, 1. இரண்டு உள்ள‌ங்கைகளை, 2. பாதங்களை, 3. இடுப்பு வரையிலான நம் தோற்ற‌ம் என்று அனுப்பச் சொல்லியது. கூடவே 650 ரூபாய்க்கு டிராஃப்ட் எடுத்து அனுப்பச் சொன்னது. எல்லாம் கிடைத்ததும் உங்களுக்கு டாக்டர் உங்களிடம் பேசுவது பற்றி தகவல் தருகிறோம் என்று சொன்னது. இந்த முறை வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் உள்ள‌வர்களுக்கும் பிரயாணம் செய்து நேரில் வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. என் சினேகிதியின் பிரச்சினைக்கு நான் இவரிடம் போகச் சொன்னேன். அவர் கோவையிலுள்ளவர். அவர் 300ரூ fees தந்ததாக கூறினார். 

அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்து அனுப்பியதும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு மாலையில் அழைக்கச் சொன்னார்கள். அதன்படி மாலையில் அழைத்தேன். மருத்துவர் பொறுமையாக அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து விட்டு, உங்களுக்கு எப்படி இதற்கு உணவு எடுக்க வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் சிறிது நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் வரும் என்று சொன்னார்.

அதன்படி சில நிமிடங்களில் நான் எப்படி எப்படி என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள், என் பதிவு எண் போன்ற விபரங்கள் வந்தன. 

காலையிலும் இரவிலும்  உணவுக்கு முன் 2 கத்தரிக்காய்கள், 2 தக்காளி, 6 வெற்றிலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி நாட்டு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். காலையில் கத்தரிக்காய் சாறுடன் 100 கிராம் தேங்காய்த்துருவல்+ 3 பேரீச்சம்பழங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட பின் பசித்தால் ஏதேனும் சாப்பிட்டுக்கொள்ளலாம். 11 மணியளவில் நன்கு ஊற வைத்த கோதுமை 5 மேசைக்கரண்டி நன்கு மென்று உண்ண வேண்டும். இரவில் கூடுதலாக கத்தரிக்காய் சாறுடன் 6 வெண்டைக்காய்கள் பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும். பால் சார்ந்த பொருள்களான தயிர், வெண்ணெய், சீஸ், பால் பவுடர் மற்றும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றையும் வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், மிளகாய்த்தூள் இவற்றையும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக முழுத்துவரை, கொள்ளு, முழு பச்சைப்பயறு இவற்றை சேர்த்துக்கொள்லலாம். முன்பே சொல்லியுள்ள‌ மாதிரி எண்ணெய் வகைகளை உபயோகிக்க வேண்டும். 

அதன் படியே உண்ன ஆரம்பித்தேன். தவிர்க்க வேண்டிய பொருள்களை அகற்றி புதியதாக சில குறிப்புகள் கண்டு பிடித்து சாப்பிட முடிந்தது. இல்லையென்றாலும் அரிசியும் கொள்ளும் சேர்த்த பொங்கல், தோசை, இட்லி, சப்பாத்தி, வெங்காயம், பூண்டு இல்லாத கிரேவிகள், சாத வகைகள் என்று உண்ண ஆரம்பித்தேன். 10 நாட்களுக்குப்பிறகு என் சர்க்கரை குறைய ஆரம்பித்தது. 80க்கு கீழ் வெறும் வயிற்றில் சர்க்கரை இறங்கியதும் 2 மாத்திரைகளை நீக்கினேன். அதன் பிறகும் சர்க்கரை 74லேயே இருந்தது. வயிற்றில் பிரச்சினைகள் யாவும் குறைந்தது. வயிற்றுப்பொருமல், செரிமானக்குறைவு, வாயு பிரச்சினை, எல்லம் நீங்கியது. உள்ளங்காலில் வெடிப்புகள் மறைய ஆரம்பித்தன. சர்க்கரை நோய் ஏற்பட்ட பிறகு நெடுங்காலமாய் தொடர்ந்து இரவு நேரங்களில் கால் நரம்புகள் இழுப்பதும் நின்று போனதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. மொத்தத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாய் நெடு நாட்களுக்குப்பின் உணர முடிகிறது. 

பொங்கலுக்குப்பிறகு, கொரோனாவாலும் என் காலில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாலும் வெளியிலிருந்து உணவு பல சமயங்களில் வாங்கி உண்ண வேண்டியிருந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதன் பிறகு சர்க்கரை மட்டும் ஏறத்தொடங்கியது. இப்போது மறுபடியும் என்னால் சமைக்க முடிந்த நிலையில் மீண்டும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர 10 நாட்கள் தேவையாக இருந்தன. அதனால் இந்த உணவுக்கட்டுப்பாடுகளை அவசியம் தவறாது கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.

இந்த வைத்தியத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லையென்பதால் தான் இந்த வைத்தியத்தை தேர்ந்தெடுத்தேன். கூடவே காய்கறிகளின் சத்துக்களும் வேக வைக்காமல் நம்மிடம் முழுமையாக வந்து சேருகிறது. முக்கியமான தேவைகள் நாவிற்கான கட்டுப்பாடுகளும் மனக்கட்டுப்பாடுகளும் தான்! இவை உறுதியாக இருந்தால் நாம் நோயை வென்று விடலாம். 

மருத்துவருக்கு வலைத்தளம் உள்ளது. அதில் அவரது விலாசமும் தொலைபேசி எண்ணும் உள்ளது. கீழே அதன் இணைப்பும் சில காணொளிகளும் இணைத்திருக்கிறேன்.

ஒரு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைத்து  நாள்பட்ட நோய்கள் அளித்து வரும் துன்பங்கள் நிறைய பேருக்கு நீங்கி வாழ்க்கையில் அனைவரும் நலமுடனிருக்க வேண்டுமென்ற எண்ணமே இந்தப்பதிவிற்கு காரணம். முக்கியமாக திரு.தனபாலனுக்கு இந்தப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அனைவரும் என்றும் நலம் பெற வேண்டுகிறேன்

http://www.vegetableclinic.com/

 

 

Friday, 26 February 2021

முத்துக்குவியல்-60!!!

 

சிந்திக்க வைத்த முத்து: 

நேற்று ஒரு இயற்கை மருத்துவர், Drug free diabetic club நடத்துபவர் யு டியூபில் பேசிய விஷயம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. சர்க்கரை நோய் பற்றி அவர் நிறைய பேசினார். ' இன்றைக்கு எந்த சர்க்கரை நோய் நிபுணரிடம் சென்றாலும் நமது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரைக்கேற்ப அவர்கள் மாத்திரைகள் கொடுப்பதுடன் நாம் பின்பற்ற வேண்டிய தினசரி உணவுப்பட்டியல் ஒன்றையும் கொடுக்கிறார்கள். அதன்படி  நாம் காலையில் 3 இட்லி அல்லது 2 சப்பாத்தி, மதியம் ஒரு கப் சாதம்+நிறைய காய்கறிகள், இரவிலும் அதே 3 இட்லி அல்லது 2 சப்பாத்தி வேண்டும். . இந்த உணவுப்ப‌ட்டியலைத்தானே சர்க்கரை நோயாளிகள் தினமும் கடைபிடிக்கிறார்கள்? மாவுச்சத்தை நிறுத்தாமல் குறைக்காமல் தினமும் சாப்பிட்டால் இதில் எப்படி சர்க்கரை குறையும்? நமக்குத்தேவை தினமும் 50 கிராம் கார்போஹைட்ரேட். ஆனால் காலை, மதியம், இரவு என்று நாம் 100 கிராம் மாவுச்சத்தை சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட்டாலும் சர்க்கரை கூடத்தானே செய்யும்? சர்க்கரை நோய் மருத்துவர்கள் மாவுச்சத்தை குறைத்து புரதம், கொழுப்பு அதிகமான மெனுவைத்தானே சாப்பிட வற்புறுத்த வேண்டும்? ' என்று சொன்ன போது அதிச்சியாக இருந்தது. நானும் நாலைந்து வருடங்களுக்கு முன் இதைத்தானே கடைபிடித்தேன்? மனம் விழித்துக்கொண்ட போது மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்து பல வருடங்களாகியிருந்தன.. இந்த மெனுப்படி, தினமும் உணவு எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை கூடத்தானே செய்யும்?
அதற்கேற்றாற்போல மாத்திரைகளும் கூடத்தானே செய்யும்? அதிக மாத்திரைகளால் சிறுநீரகமும் மெல்ல மெல்ல கெடத்தானே செய்யும்? இதென்ன மருத்துவ முறை? மாவுச்சத்து மிக மிக குறைவாக உள்ள உணவுப்பட்டியலைத்தானே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்? அரிசி சாதத்தை பரிந்துரைக்கும் மருத்துவர் கூட பாலிஷ் செய்யப்படாத அரிசியை பரிந்துரைக்கவில்லையே? 

அசத்திய முத்து: 

ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலியின் முதல் பெண் கலெக்டர். பல அரசு விருதுகளுக்கு சொந்தக்காரர். தன் பெண்ணை அரசு அங்கன்வாடியில் சேர்த்து அதிரடி காட்டியவர். .கர்நாடகத்தைச்சேர்ந்த இவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்காக மத்திய அரசின் ' தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது' கிடைத்திருக்கிறது. திருநெல்வேலி முழுவதும் கட்டப்பட்டிருக்கும் சமுதாயக் கழிவறைகளை சரியாக‌ பராமரித்து முறையான பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக இந்து விருது கிடைத்துள்ளது. மீனவப்பெண்களுக்கும் கிராமப்பெண்களுக்கும் காணி பழங்குடியினருக்கும் பல விதங்களில் உதவி செய்து வருகிறார். தற்போது சென்னையில் சுகாதார குடும்ப நல திட்ட அலுவலகத்தில் இணை செயலாளராக இருக்கிறார். 

அபாய முத்து: 

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு மூலையிலுள்ள ஒரு கிராமத்தில் 80 வயது பெரியவர் ஒருவர் தன்னை சுற்றி சுற்றி வந்து ரீங்காரமிட்ட ஒற்றை ஈயை கொல்ல மின்சார ராக்கெட் ஒன்றை உபயோகித்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் இலேசாக கசிவு ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை. 
மின்சார ராக்கெட்டை உபயோகிக்கத் தொடங்கியதுமே வீட்டின் சமையலறை வெடித்து சாம்பலானது. இலேசான காயங்களுடன் அவர் தப்பி விட்டார். ஆபத்துக்கள் எந்தெந்த வடிவில் எல்லாம் வருகிறது!! மின்சார ராக்கெட்டை உபயோகத்தில் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்கவும். 

இசை முத்து: 

என்னுடைய all time favourite-என்றைக்குமே என் மனதில் முதலிடத்தில் இருக்கும் பாட்டு இது. சுத்த தன்யாசி ராகத்தில் சுசீலா தன் தேன் குரலில் மயங்க வைப்பார். அதனாலேயே ராகங்களில் எனக்கு மிகவும் பிடித்த ராகமாக ‘ சுத்த தன்யாசி ‘ ஆகி விட்டது. ஆச்சரியம் என்னவென்றால், எப்போது இந்தப்பாட்டைக் கேட்டாலும் அதன் இனிமைக்கு முன்னால் வேறு எதுவும் மனதுக்கு அந்த சில நிமிடங்களில் புலப்படுவதில்லை. அந்த மாதிரியான பாதிப்பை இன்றைக்கும்கூட இந்தப் பாட்டு உண்டாக்குகிறது!! கர்ணன் திரைப்படத்தில் வரும் ‘ கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? ‘ பாடல் தான் அது. பொதுவாக வெகு சிலரே அதே இனிமையுடன் பாடுவார்கள். எல்லோராலும் இதை அத்தனை எளிதாக பாடி விட முடியாது. அப்படி ஒரு பெண் மிக இனிமையாக இந்தப்பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டு ரசியுங்கள். இந்தப்பாடல் உருவாக தில்ரூபா, ஷெனாய், சந்தூர் போன்ற இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டதாம். பாடல் ஆரம்பிக்கும் முன் தொலைக்காட்சியில் அதிகமான இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் இந்தப்பாடல் உருவான விதம் பற்றி இன்னும் நிறைய சொல்லுகிறார்.


 


Monday, 15 February 2021

எண்ணங்கள்!!!

ஆறுதலும் தைரியமும் கொடுத்து அன்புடன் எழுதிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய நன்றி!!


 கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 25 நாட்களுக்குப்பிறகு மீண்டும் வலைத்தளம் வருகிறேன்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கே ஐக்கிய அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பத்திரிக்கைகளில் செய்தி வருகின்றன. ஆரம்பத்தில், கடந்த மார்ச்சில் இருந்த அதிக தாக்கம் இப்போது இருக்கிறது. ஆனாலும் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் திறமையாக சமாளித்து வருகிறது அரசு. மார்ச்சுக்குள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று சொல்லுகிறது அரசு. 

அனைத்து வியாபாரங்களும் படுத்து விட்டன. பெரிய பெரிய கம்பெனிகள் தங்கள் தொழிலாளர்களை வெளியே மொத்தமாக அனுப்புகின்றன. உணவகங்கள் அத்தியாவசியமான தொழிலாய் போய் விட்டதனால் ஓரளவு உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. அதனாலேயே மளிகை. காய்கறி வியாபாரம் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. எங்கள் உணவகங்களும் பல சட்ட திட்டங்களுடன் இயங்கி வருகின்றன. சென்ற வருடம் போல இந்த சமயத்திலும் மீண்டும் பாதி இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்று சுகாதார அலுவலகம் சொல்லி விட்டது. 

ஒரே ஒரு நல்ல விஷயம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வாடகையை ஓரளவிற்கு குறைத்து விட்டன. வீடுகள் நிறைய காலியாகி விட்டன. இருக்கிற கம்பெனிகளும் பாதி சம்பளம் தான் கொடுக்க முடிகிறது ஊழியர்களுக்கு. துபாயைப்பொறுத்த வரை, சுற்றுலா தான் நாட்டின் வருமானத்திற்கு பெருமளவில் ஆதாரமாக இருக்கிறது. அதில் விழுந்த அடியால் நிறைய சுற்றுலா கம்பெனிகள் பல இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. நிறைய சுற்றுலா கம்பெனிகளின் உரிமையாளர்கள் வேறு தொழில்களில் இறங்கி விட்டார்கள். என் மகனும் சுற்றுலா கம்பெனி வைத்திருப்பவர். இன்னும் சில மாதங்களுக்கு விமானங்கள் முழுமையாக இயங்க முடியாத நிலையில் எல்லா நாடுகளுமே இருப்பதால் என் மகனும் எங்கள் உணவக தொழிலில் முழுமையாக இறங்கி விட்டார். ஆச்சரியம் என்னவென்றால்  இளம் தம்பதிகள் கொரோனாவைப்பற்றி கவலைப்படாமல் துபாய்க்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். மாஸ்க் போட்டுக்கொண்டு, முதல் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து ரசிக்கிறார்கள். கொரோனோவைப்பார்த்து அலுத்துப்போய் விட்டது போலிருக்கிறது அவர்களுக்கு!

சமீபத்தில் தான் அதுவும் கொரோனா பாதித்த பிறகு தான் படித்தேன் கொரோனா பாதித்தால் நாவின் சுவை நரம்புகள் வேலை செய்யாது என்பதை. அது தான் கொரோனா பாதிப்பின் முதல் அடையாளமாம். எங்கள் அனைவருக்குமே நாக்கு மரத்துப்போய் எந்த சுவையுமே 10 நாட்களுக்கு தெரியாமல் இருந்தது. அடுத்தது முகரும் சக்தியும் போய் விடுகிறது. அப்புறம் தான் வரட்டு இருமல், காய்ச்சல், இருமல், உடம்பு வலி என்று தொடர்கிறது. மூச்சுத்திணறல் பற்றி கேட்ட போது, எங்கள் டாக்டர் " கொரோனா பாதித்ததே தெரியாமல் மிகவும் தாமதமாக கண்டு பிடித்து அதற்குள் அதன் பரவல் உடலில் அதிகமாகிப்போனால் எப்படியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும். ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் அந்த மாதிரி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. முதல் பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் வரவில்லையென்றால் அதற்கப்புறம் வராது. " என்று சொன்னார். 

வெளியே செல்ல வழியில்லாமல் தனிமைப்படுத்திக்கொண்டு விட்ட‌தால் எங்கள் உணவகங்களை மேலாளர்கள் தான் பார்த்துக்கொண்டார்கள். தொலைபேசி வழியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தோம். 

திடீரென்று ஒரு உணவக மேலாளரின் மனைவி ஊரில் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அவரை உடனேயே அனுப்பி வைத்தோம். அவர் முப்பதாம் நாள் காரியங்களை முடித்து விட்டு திரும்பி வந்தார். அவர் வந்து ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் முக்கியமான சமையல்காரருக்கு மயக்கம் ஏற்பட, பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு ஆஞ்சியோ செய்து தான் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அப்போது கூட, அவர் ஊருக்குப்போக விரும்பவில்லை. நாங்கள் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் செய்திருப்பதால் இங்கே சிகிச்சையோ அறுவை சிகிச்சையோ மேற்கொண்டால் மிகவும் குறைந்த செலவிலேயே சிகிச்சை முடிந்து விடும். அவருக்கு ஆஞ்சியோ செய்ததில் மூன்று அடைப்புகள் இருந்ததால் இன்றைக்கு அவருக்கு மூன்று ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மொத்த செலவும் நம் இந்திய ரூபாயில் பத்தாயிரம் தான்!! 

பல வருடங்களுக்கு முன்பு. என் கொழுந்தனாருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது எங்கள் உயிரே எங்களிடம் இல்லை. அந்த அளவு பதட்டமும் க‌வலையும் இருந்தன. இப்போதோ எல்லாமே சர்வ சாதாரணமாக போய் விட்டது. 


Monday, 1 February 2021

இதுவும் கடந்து போகும்!!!

 பதினைந்து நாட்களுக்கு முன், பொங்கல் முடிந்த அடுத்த சில நாட்களில் என் மருமகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டது. அடுத்த நாளிலேயே மகனுக்கும் அதே மாதிரி உடம்பு முழுவதும் வலி வந்ததும் என் மகன் காரை எடுத்துக்கொன்டு கொரோனா சென்டருக்குச் சென்று பரிசோதனை செய்து வந்தார். அடுத்த நாளிலேயே பாஸிடிவ் என்ற ரிசல்ட் வந்து விட்டது. அன்றைக்கே சற்று அதிகமாக பணம் கட்டியதும் வீட்டிற்கே வந்து அனைவருக்கும் சாம்பிள் எடுத்துச்ச் என்றார்கள். அடுத்த நாளே எங்கள் எல்லோருக்கும் பாஸிடிவ் என்ற தகவலுடன் அரசு சுகாதார அமைப்பிலிருந்து செய்தி வந்தது. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படியாக தகவல் வந்தது. உடனேயே வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். பேப்பர் பிளேட்டுகள், தம்ளர்கள், அத்தியாவசிய உணவுப்பொருள்கள் என்று வாங்கினோம். அடுத்த நாளிலிருந்து காய்ச்சல், உடல் வலி, குளிர், சளி, இருமல், ஒவ்வாமை என்று அனைவருக்கும் தீவிரமாக உடலை படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு தெரிந்த தமிழ் மருத்துவரிடம் தேவையான ஆலோசனைகள் பெற்றோம். தினமும் விட்டமின்கள் C, D, ZINC எடுப்பதுடன் காய்ச்சலுக்கும் தீவிர சளி பிடித்தலுக்கும் மருந்துகளை வாட்ஸ் அப்பிலேயே எழுதி அனுப்பினார். மிகவும் கவனமாக இருக்கும்படியும் அதிகமான ஓய்வெடுக்கும்படியும் உடலை வருத்தி வேலைகளை செய்தால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகுமென்றும் சொன்னார். வீட்டிலுள்ள இரு சிறு குழந்தைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அவர்களுக்கு ஒரு டானிக் போல தரச்சொன்னார்.


கடந்த 15 நாட்கள் வீடே ஒரு க்ளினிக் போல ஆகியது. மிகுந்த உடல் பிரச்சினைகளுக்கிடையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக நகர்ந்தது. காய்ச்சலால் உடல் தள்ளாமை. வலி மாத்திரையைப்போட்டுக்கொண்டு, வலுக்கட்டாயமாக ஏதேனும் உணவு தயாரித்தாலும் யாருக்குமே சாப்பிட முடியாமை, வெளியிலிருந்து உணவு வாங்கினாலும் அதே நிலைமைதான். வெளியே துபாய் குளிர் 15 டிகிரிகளுக்கு இரவு நேரத்தில் இறங்கியது. ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றங்களுடன் நாள் நகர்ந்து சென்றது. 11 நாட்கள் முடிவில் அரசாங்கத்தின் சுகாதார அமைப்பிலிருந்து ' நீங்கள் வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கடந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இனி நீங்கள் மகிழ்வுடன் இருங்கள்' என்று தகவல்கள் வந்தன. அப்படியும் மெதுவாக சிறு சிறு வலிகளுடன் நாட்கள் கடந்து கடந்த இரண்டு நாட்கள்தான் எல்லோரும் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். குவாரன்டைன் நாட்கள் பதினான்கையும் கடந்து வந்து விட்டோம். இப்போது தான் வீடு மெதுவாக இயங்கத்தொடங்கியிருக்கிறது. வேலைக்காரப்பெண் வேலை செய்ய வந்து விட்டது. கொஞ்சம் அப்பாடா என்றிருக்கிறது. இன்னும் சிறிது இருமல், தொண்டையில் பாதிப்பு என்று இன்னும் உள்ளே மருந்துகள் போய்க்கொண்டிருக்கின்றன. இழந்த தெம்பு திரும்பி வர இன்னும் மூன்று மாதங்களாகும் என்று மருத்துவர் சொல்லி, சத்தான உணவு வகைகள், அசைவம் என்று சாப்பிடச் சொல்லியிருக்கிறார். இன்னும் சோர்வு இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!!

Sunday, 17 January 2021

வேங்கையின் மைந்தன்!!!! பல நாட்கள் கழித்து, உண்மையில் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு முறை ‘ வேங்கையின் மைந்தன் ‘ என்னும் வரலாற்று புதினத்தைப்படித்து முடித்தேன்.  இளம் வயதில் ஆதர்ஸ எழுத்தாளர்களாக இருந்த  எழுத்தாளர்கள் கல்கி, நா.பார்த்த சாரதி, அகிலன், ஜெகச்சிற்பியன், ஜெயகாந்தன், கிருஷ்ணா முதலியோர்தான் என் தமிழார்வத்தை வளப்படுத்தினார்கள் என்று சொல்ல வேண்டும். கூடவே இவர்கள் எழுத்தாற்றலில் தொடர்ந்து வந்த நேர்மையும் உண்மையும்  சத்தியமும் கண்ணியமும் நம் மனதுக்குள்ளும் வளர பெரிய காரணிகளாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மை! கல்கிக்கு மணியம், அகிலனுக்கு வினு, நா.பார்த்தசாரதிக்கு விஜயா, வினு என்று வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அந்த வயதில் பிரமிப்பை ஏற்படுத்தி ஏகலைவனாக என்னையும் ஓவியராக்கின. பதின்மூன்று வயதிலேயே நான் வரைய ஆரம்பித்ததற்கும் இவர்கள் தான் காரணம்!


வேங்கையின் மைந்தனின் முக்கிய சிறப்புகள்:

வேங்கையின் மைந்தன்’ எழுத்தாளர்  அகிலன் எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் ஓவியர் வினு  வரைய, மூன்று பாகங்கள் கொண்ட தொடர்கதையாக வெளி வந்தது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது.  அகிலன் அவர்களது மகன் அகிலன் கண்ணன் அவர்களால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர் நாடகமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

மூன்று பாகங்கள் கொண்ட  இந்த வரலாற்றுப்புதினம் 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை பெற்றுள்ளது.  அகாதமியின் சின்னத்துடன் இந்தியப் பிரதமராக அப்போதிருந்த ஜவஹர்லால் நேருவின் கையொப்பம் பொறிக்கப்பட்டச் செப்பேட்டினை, மார்ச் மாதம் 1964 ஆம் ஆண்டு, 15 தேதியில் இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் கையால் பெற்றதைத் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக அகிலன் குறிப்பிட்டுகிறார்.

ரொம்பவும் முக்கியமான, ஆச்சரியபப்டும் விஷய்ம் இந்தக்கதையின் முடிவு! கல்கியில் வெளி வந்த போது இறுதி அத்தியாயத்தில் கதாநாயகி ரோஹிணி தான் செய்த தவறை உணர்ந்து தீயில் குதித்து உயிர் துறப்பதாகத்தான் கதையை முடித்திருந்தார் அகிலன். ஆனால் வாசகர்களின் கோபத்தையும் எதிர் விமர்சனங்களையும் தாங்க முடியாமல், இந்த நாவல் முதல்  பதிப்பாக வெளி வந்த போது, ரோகிணி பிழைத்துக்கொண்டதாக கதையை முடித்து விட்டார். இந்த மாதிரி ஒரு சம்பவம் எனக்குத்தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் நேர்ந்ததில்லை!!

இனி கதையைப்பற்றி!! 

வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது.

முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன்   இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

ஈழத்திலிருந்த பாண்டியர் முடியை, இராஜராஜ சோழன் காலத்தில் மீட்டுவர முடியவில்லை. அவர் இறக்கும் போது தனது வாழ்நாளில் தன்னால் செய்து முடிக்க முடியாத அக்காரியத்தைத நிறைவேற்ற வேண்டுமெனத் தன் மகன் இராஜேந்திர சோழனைக் கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் தனது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், தமிழர் மானம் காக்கப்படும் எனவும் உறுதியாய் இருந்த இராஜேந்திரர், தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதே குறிக்கோளுடன் செயல்பட்டார்.  முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் மீட்டெடுக்கும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன் ஐந்தாம் மகிந்தன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.


இந்தக் காலகட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானதி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

அவர் ஈழத்தின் மீது படையெடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளையும் ஈழத்துப் போரையும் அதில் அவர் அடைந்த வெற்றியையும் ஈழத்து அரசர் மகிந்தரை சோழநாட்டிற்கு சிறைபிடித்து வந்ததையும் இப்புதினத்தின் முதல் பாகமான முடிகொண்ட மாவேந்தன் சுவையுடனும் விறுவிறுப்புடனும் விவரிக்கிறது. இச்சாதனையில் கதைநாயகன் இளங்கோவின் பங்கும் வீரமும், ஈழத்து இளவரசி ரோகிணி பகைநாட்டைச் சேர்ந்தவளாய் இருந்தும் இளங்கோவிற்கு உதவியதும் அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதலும் இப்பகுதியில் அழகுறப் புனையப்பட்டுள்ளது.

ஈழத்திலிருந்து வெற்றியுடனும் பாண்டியர்களின் முடியுடனும் திரும்பிய இராஜேந்திர சோழன் ஈழப் படையெடுப்புக்கு வீரர்களைத் தந்த பழையாறை நகருக்குச் சென்று போரில் தமது உறவுகளை இழந்த மக்களிடம் தன்னையே அவர்களின் உறவாகக் கொள்ளும்படி ஆறுதல் கூறி, இனிமேல் தனது தலைநகரை தஞ்சையிலிருந்து அவர்கள் ஊருக்கே மாற்றப்போகும் ஆனந்தமான செய்தியையும் அவர்களுக்களிக்கிறார். 


சோழபுரம் என்றொரு பிரம்மாண்டமான ஊரும், அங்கு தஞ்சை பெரிய கோவிலை ஒத்த ஒரு பிரம்மாண்டமான சிவாலயமும் ஊருக்கு எல்லையில் கடலென ஓர் ஏரியும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார். பாண்டியர்களால் எழுந்த சலசலப்புகளையும் சதிகளையும் ஒடுக்கிய பின்னர் தன் இளைய மகனான சுந்தரசோழனுக்கு, சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரால் மதுரையில் முடிசூட்டி, புதியதொரு பாண்டியப் பரம்பரையை ஆரம்பித்து வைக்கிறார். மீட்கப்பட்ட வாளும் மகுடமும் நாட்டை ஆளும், அவைகளுக்கு பாதுகாவலராக சுந்தர சோழ பாண்டியனாக இருப்பார் என்று சொல்கிறார். ஈழத்தில் மீண்டும் முளைவிட்ட அமைச்சர் கீர்த்தியின் சதிகளை நாயகன் இளங்கோவை அனுப்பி முறியடிக்கிறார். இத்தொல்லைகளுக்கு முடிவு கட்டி முடிக்க, வடக்கே மேலைச் சாளுக்கியர் வாலாட்டுகின்றனர். அவர்களை முறியடிக்கப் படையெடுத்துச் செல்கிறார். தனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டு பெரியதொரு சிறப்பு விழா அமைய வேண்டும் என்ற நோக்கோடு நகர், கோவில், ஏரி இவற்றின் அமைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே படையெடுப்பைத் தொடங்குகிறார். அரசரின் வெற்றிகளில் எல்லாம் தோள்கொடுத்து நிற்கும் இளங்கோவின் வீரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்தில் இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே தோன்றிய காதல் தஞ்சையிலும் கொடும்பாளூரிலுமாக வளர்கிறது. ரோகிணி தன் பிறந்த நாட்டுப் பாசத்திற்கும் பகை நாட்டு இளவரசனிடம் மனதைப் பறிகொடுத்து விட்ட தனது காதலுக்கும் இடையிலான போராட்டத்தில் படும் அவதியும், அவளது மனப்போராட்டங்களால் அவளுக்கும் இளங்கோவிற்கும் இடையே நிகழும் கசப்பான அனுபவங்களும், இருவரது வேறுபட்ட குணாதிசியங்களால் எழும் முரண்பாடுகளையும் மீறி ஒருவரையொருவர் விட்டுவிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பும் வாசிப்போரையும் தவிப்புக்குள்ளாக்குகிறது.

சாளுக்கியரை ஒடுக்குவதற்காக படையெடுத்துச் சென்ற இராசேந்திரர் சாளுக்கியரின் கொட்டத்தை அடக்கி வென்றபின், சாளுக்கிய நாட்டோடு நில்லாது மேலும் வடதிசை நோக்கிச் சென்ற சோழ படைகள் வடதிசை மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் தலைமையில் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டுவதும், கங்கை நீரைக் குடங்களில் அடைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு சோழ நாடு திரும்பிய வெற்றி ஊர்வலமும், புதிதாக அமைக்கப்பட்ட சோழபுர நகரம் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டப் பெருவிழாவும் இம்மூன்றாம் பாகத்தின் முக்கிய நிகழ்வுகள்.

இந்நிகழ்வுகளின்போது நடைபெறும் வீரதீரச் செயல்களும், நேர்கொள்ளப்பட்ட இன்னல்களும், அவற்றைச் சமாளித்த திறமையும் கற்பனை நயம் கலந்து விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இளங்கோ ரோகிணி காதல் வளரும் விதமும் ரோகிணியின் தவிப்பான காதலும், தான் விரும்பும் நாயகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தும் அப்பெண்ணைத் தங்கையாக நினைத்து அவர்கள் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அருள்மொழி நங்கையின் தியாகமும் நாட்டுப்பற்றும் அவர்களுக்கிடையேயான உறவுக்கு பெரியோர்களால் தரப்படும் தீர்வும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது.

இராசேந்திரரின் கடாரத்தின் வெற்றியும் அதில் இளங்கோ ஆற்றலும் முடிவுரையில் தரப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் என் மனங்கவர்ந்த புதினங்களில் இதுவும் ஒன்று!


Wednesday, 13 January 2021

பொங்கலோ பொங்கல் !!!

 

துன்பங்கள் யாவும் விலகிச்சென்று, மகிழ்வும் நன்னலமும் அனைத்து வளங்களும் அனைவரது இல்லங்களிலும் பொங்கித்ததும்ப‌அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

மறுபடியும் துபாயில் பொங்கல்! தமிழ் உணவகங்கள் எல்லாம் நாளை பொங்கல் விருந்து தரும் இங்கு. ஏற்கனவே தமிழ் சந்தை, தமிழ் மார்ட் போன்ற தமிழ்க்கடைகளில் இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து, வாழையிலை, வாழைப்பழங்கள் எல்லாம் அமோக விற்பனை!!! எங்கள் உணவகங்களும் 22 உணவு வகைகளுடன் விருந்து படைக்கின்றன!!‌!! பொங்கல் கோலங்களும் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் தான் இப்போதெல்லாம் இருப்பதில்லை! வாட்ஸ் அப் வருவதற்கு முன்னால் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அமோகமாய் விற்கும் கடைகளில் நுழைந்தால் கை நிறைய வாங்கிக்கொண்டு தான் வருவோம். அதுவும் 15 நாட்களுக்கு முன் வாங்கினால் தான் ஒவ்வொரு வாழ்த்திலும் வீட்டிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு ஏர் மெயிலில் அனுப்ப வசதியாக இருக்கும். 

காலையிலேயே பொங்கல் வைத்து விடுவேன். அப்போது தான் மதியம் பொங்கல் விருந்து சாப்பிட எங்கள் உணவகங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும்! தலைவாழை இலை போட்டு பணியாளர்கள் பரிமாறும் காட்சி மிக அழகாய் இருக்கும். எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்தெல்லாம் ஃபோன் பண்ணி சொல்லி விட்டு தம்ழ் மக்கள் சாப்பிட வருவார்கள். எங்கள் உணவ விருந்து லிஸ்ட் இதோ!சென்ற பொங்கலன்று எங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரும் கூடி கிராமத்தில் பொங்கலிட்டார்கள்.  கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பிறகு! நாங்கள் மட்டும் கலந்து கொள்ள முடியவில்லை.  

அந்த புகைப்படங்களும் இங்கே இணைத்திருக்கிறேன்.

மாட்டுப்பொங்கலன்று!
கீழே துபாய்ப்பொங்கல்!!