Showing posts with label சிந்தனை முத்துக்கள். Show all posts
Showing posts with label சிந்தனை முத்துக்கள். Show all posts

Sunday, 1 October 2023

சமயங்களும் அன்பும் !!!- பகுதி-1

 தமிழர்கள் வாழ்வியலில் சமயத்துக்கான முக்கியத்துவம் முன்பு இருந்ததில்லை. மனிதமும் மனிதாபிமானமும் நல்லிணக்கமுமே பெரிதாய் இருந்தது. அரசியலும் புல்லுருவிகளுமே இந்த அன்பைத்தகர்த்து சமயங்களை பிரித்தன. ஆனால் இதற்கெல்லாம் இன்னும் மசியாமல் ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் இணைந்து சமயங்களும் அன்பும் ஒன்றாய் இணைந்து வாழ்வது இன்னும் நம் தமிழகத்தில் அங்கங்கே இருப்பதறிந்தபோது வியப்பாக இருக்கிறது! கீழ்க்கண்டவை அவற்றின் சாட்சியங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டணம் என்னும் ஊரில் உள்ள தர்க்கா, ராவுத்தர் அப்பா தர்க்கா என அழைக்கப்படுகிறது. அதன் அருகே முனியய்யா கோவில் உள்ளது. இந்த முனியய்யாவும் ராவுத்தர் அய்யாவும் நண்பர்கள். அதனால் இந்து இஸ்லாமிய பண்டிகைகளின் போது இந்த இரு கோவில்களுமே அலங்கரிக்கப்படுகின்றன. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் தர்க்காவிற்கு சென்று விட்டுத்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்த தர்க்காவின் கந்தூரி விழா காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல் நாள் மண்டகப்படியை அங்குள்ள பத்தர் குடும்பத்தார்தான் செய்து வருகிறார்கள். 


ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நடுவில் ஒரே வளாகத்தில் மாரியம்மன் கோவிலும் தர்க்காவும் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவிலின் குண்டம் தர்க்காவின் வாசல் பகுதியில் அமைந்துள்ளது. தர்க்காவின் வலப்பக்கம் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. ரம்ஜான் தொழுகையின் போது இந்து மக்களும் தொழுகைக்கு செல்வதும் மாரியம்மன் கோவில் விழாவில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடுவதும் இங்கு ஆண்டு தோறும் நடக்கும் அற்புதம்!!


ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிப்பாளையத்தில் உள்ள சிவசுப்ரமண்யர் கோவிலில் விழா தொடங்குமுன்பாக ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடி தேங்காய்ப்பழத்தட்டுடன் பள்ளிவாசலுக்குச் சென்று அழைப்பு விடுப்பார்கள். பங்குனி உத்தரத்தின் போது இஸ்லாமியர்கள் வெள்ளக்கொடி ஏந்தி கோவிலிலிருந்து வாத்தியங்கள் முழங்க புறப்பட்டுச் சென்று கடைகளின் வாசலில் சந்தனம் பூசி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் மாலை மரியாதை செய்து கொள்கிறார்கள்!


சிவகங்கை மாவட்டத்திலுள்ள வஞ்சினிப்பட்டியில் 10 நாள் பூக்குழி திருவிழாவாக அல்லாசாமி பூக்குழி திருவிழா கடந்த 350 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விருந்து வைத்துக்கொள்வார்கள். பூக்குழி தினத்தன்று அனைத்து மக்களும் மல்லிகைப்பூ, சர்க்கரை வைத்து அல்லாவிடம் பாந்தியா ஓதி பின் சுவாமிக்கு பூக்குழி வளர்க்கப்படுகிறது. பூக்குழிக்குப்பிறகு சாம்பலை அள்ளி இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் பூசி விடுவதும் வழக்கமாக இருக்கிறது.


ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக் கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் போது முதல் பிரசாதம் கன்னிராசபுரம் நாட்டாமைக்கே வழங்கப்பட்டது. போர் ஒன்றில் அப்துல் கனி என்ற அந்த நாட்டாண்மை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு உதவீயாக செய்த அருஞ்செயலுக்காக இந்த தனிச்சிறப்பு செய்யப்பட்டது. 

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நிறைய இந்துக்கள் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை அணிந்து கலந்து கொள்வது வழக்கம். அந்த ஆடைகளை இன்றளவும் மதுரையில் இருக்கும் புது மண்டபத்தில் பல தலைமுறைகளாக இஸ்லாமியர்கள் தான் தைத்து வருகிறார்கள். அந்தப்பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாமா, மாப்பிள்ளை என்று ஒருத்தருக்கொருத்தர் அழைத்துக்கொள்வது தான் வழக்கம்!

தொடரும்-


Saturday, 18 December 2021

அது ஒரு பொற்காலம்!

 சென்ற வாரம் நா.பார்த்தசாரதியின் ‘ மணிபல்லவம்’ புதினத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். கல்கியில் வெளி வந்த வரலாற்றுக்கதை அது! ஓவியரின் வினுவின் சித்திரங்களை ரசித்துக்கொண்டிருந்த போது, இனி இப்படிப்பட்ட ஓவியங்களையெல்லாம் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. தொடர்கதைகளைப்படிக்க வாராவாரம் ஆவலுடன் காத்திருந்த ‘ அந்த நாள் ஞாபங்கள்’ என்னைச் சூழ்ந்தன!

வாழ்க்கையில் எல்லாமே, மிக அருமையான நல்ல விஷயங்கள் கூட மிகவும் சுருங்கிப்போய் விட்டன கால ஓட்டத்தில்! இனி ஒவ்வொன்றும் மீண்டு வருமா என்பது கூட சந்தேகமே! அன்பு சுருங்கிப்போய் விட்டது. கருணை சுருங்கிப்போய் விட்டது. பேச்சு, எழுத்து, ஆரோக்கியம், பரந்து விரிந்திருந்த மனது எல்லாமே சுருங்கிப்போய் விட்டன. சொல்லப்போனால் நிறைய வீடுகளில் மாத்திரைகள் புழக்கம் தான் சுருங்கிப்போகாமல் விரிவடைந்து கொண்டே போகின்றன!


பள்ளி சென்ற காலங்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்! கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்வோம். போகும் வழியெல்லாம் வீடுகளின் வாசல்களில் சாணக்கரைசலால் மெழுகி பளிச்சென்று போட்டிருக்கும் கோலங்களை நின்று நின்று ரசித்து பார்த்துக்கொண்டே போவோம்! என் தந்தை காவல் அதிகாரியாக இருந்ததால் அடிக்கடி மாற்றல்கள் வரும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி பள்ளிகள் இருக்கும்! 


வயல்கள் நடுவே பள்ளி செல்லும் வழியில் பால் கதிர்களை சுவைத்துக்கொண்டே நடந்து சென்ற அனுபவம்கூட இருக்கிறது!

தந்தை ஒரு வழியாக ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் நிலையாக வசிக்கத்தொடங்கிய வீடு எதிரே பெரிய குளம் இருந்தது. [ மன்னார்குடி தெப்பக்குளம்] அதில் நீச்சல் அடிப்பதும் துணிகள் துவைப்பதுமாய் உடற்பயிற்சிகள் இயல்பாகவே நடந்தன! கொஞ்ச தூரத்திலிருக்கும் ஆற்று


 நீரில் விளையாடுவதற்கென்றே வீட்டில் இருக்கும் துணிகளையெல்லாம் துவைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி எடுத்துக்கொண்டு, தோழிகளுடன் ஆற்றங்கரை சென்று அமர்ந்து அரட்டையும் நீரில் விளயாடலுமாய் அந்த வயது எப்படியெல்லாம் உற்சாகத்துடனும் சிரிப்புடனும் கழிந்தது?

இப்போதிருக்கும் பிள்ளைகளுக்கு இப்படி இயற்கையோடிணைந்த வாழ்க்கை கிடைக்கிறதா? நடப்பதும் ஓடுவதும் விளையாடுவதும் எங்கே நடக்கின்றன?

என் மாமியாருக்கு 8 பிள்ளைகள். அவர் உயிருடன் இருந்த வரையில் எல்லா பிள்ளைகளுக்கும் பல பக்கங்களுக்கு கடிதங்கள் எழுதுவார். முதல் பக்கம் முழுவதும் ஒவ்வொருத்தரின் நல விசாரிப்பு. அடுத்த பக்கம் முழுவதும் அங்கிருப்பவர்களின் நலனுரைத்தல், வீட்டிலிருக்கும் மாடு, கண்ணுக்குட்டி, அண்டை அயலார் உள்பட! அப்போதெல்லாம் இப்போது போல அடிக்கடி துபாயிலிருந்து சொந்த‌ ஊருக்குப்போக முடியாது. ப‌யணச்சீட்டு விலை மிக அதிகம் என்பதுடன் அடிக்கடி இப்போதிருப்பதை போல விமான சேவை நேரடியாகவோ, அடிக்கடியோ கிடையாது! ஆனால் போகாத குறையே தெரியாதபடி அத்தனை விபரங்களும் கடிதங்களில் கொட்டிக்கிடக்கும். எங்களின் தபால் பெட்டி இருக்குமிடம் சென்று அதைத்திறந்து கடிதங்களை எடுத்துப் படிக்க அத்தனை ஆவலாக இருக்கும். சில சமயம் அவசரம் தாங்காமல் வீட்டுக்கு வருவதற்குள் காரிலேயே படிக்க ஆரம்பித்து விடுவோம்!


 ஊரிலோ, தபால்காரருக்குத்தான் எத்தனை வேலைகள் இருக்கும்! கடிதங்கள், மணியார்டர்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் அவர் இறங்கி, மணியடித்து, அவரின் சைக்கிள் சக்கரங்கள் சுற்றிக்கொண்டே இருக்கும். பொங்கல் அன்று வரும் வாழ்த்துக்களை வாங்க வாசலிலேயே தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருப்போம் நானும் என் தங்கையும்!! முன்பு ஒரு பாட்டுக்கூட இருந்தது, ' ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலமிது!' என்று. அது போலத்தான் கடிதங்கள் வாழ்க்கையை இணைத்தன!  நட்பை வளர்த்தன! காதலை ஆரம்பித்தன! பல வருடங்கள் சேர்த்து வைத்திருந்த கடிதங்களைக் காண்பித்தே அன்றைக்கு என் தந்தை ஒரு வழக்கில் ஜெயித்தார்கள்! இப்படி கடிதங்கள் ஆயிரம் கதைகளைச் சொல்லிய காலம் அது!

அந்தக் க‌டிதத்தொடர்புகள் எங்கே போயின? வாழ்த்துக்கள் விற்கும் கடைகளில் கூட இப்போதெல்லாம் வாழ்த்துக்கள் விலை போவதில்லை என்கிறார்கள்! அதன் பிறகு ஈமெயில்கள் வந்தன! வாட்ஸ் அப் வந்ததும் அதுவும் சுருங்கிப்போய் செய்திகள் சுருக்கமாக டைப் அடிக்கப்பட்டன! அதன் பிறகு அதுவும் குறைந்து இப்போதெல்லாம் மெஸேஜ் பேசி அனுப்புவதில் வந்து நிற்கிறது! ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வது கூட சுருக்கமாக நிகழ்கிறது. மனம் விட்டு சிரிப்பதும் மணிக்கணக்காய் பேசி மகிழ்வதும் இப்போதெல்லாம் மனிதர்களுக்கிடையே நிகழ்கிறதா என்று தெரியவில்லை! அவசர யுகத்தில் எல்லாமே அவசரமாக, சுருங்கி, பறந்து போகிறது!

கிராம‌ங்களில் விருந்தோம்பல் அத்தனை சிறப்பாக இருக்கும்!


 பகிர்ந்துண்ணுதல் யாரும் சொல்லி வளர்ந்ததில்லை. அது தானாகவே இயல்பாக நிகழும். கிட்டத்தட்ட சமையலே முடிந்திருக்கும். அதன் பின்பு குளத்தில் மீன் பிடித்தோம் என்று ஆட்கள் கொண்டு வ‌ந்து தருவார்கள். மறுபடியும் மீன் சமையல் நடக்கும். வீட்டுக்குத் தலைவரான என் கொழுந்தனார் வாசலில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே வாசலில் நடந்து போகும் தூரத்து உறவுகளை சாப்பிட்டுப்போகும்படி சொல்லுவார். இப்படித்தான் திடீர் விருந்தோம்பல்கள் நடக்கும். 

இப்போதெல்லாம் யாரும் யாரையும் வீட்டுக்கு உணவுண்ண அழைப்பதில்லை. இன்னும் பார்க்கப்போனால் இளைய தலைமுறைகள் தினமும் வீட்டில் சமையலே செய்வதில்லை. விதம் விதமான உணவுப்பொருள்கள் வெளியில் கிடைக்கின்றன. உணவகங்களுக்குக்கூட போவதற்கு முடியவில்லையென்றால் இருக்கவே இருக்கின்றன ஆன்லைன் உணவுகள்! 

ரசனையுடன் ருசியாக சமைத்து, பார்த்துப் பார்த்து பரிமாறி, உண்ணுபவர்களின் வயிறு நிறைந்தது கண்டு, மனம் நிறைந்து மகிழ்ந்தது ஒரு காலம்! என் மாமியார், அம்மா காலத்தில் உப்பும் சரி, புளிப்பும் சரி, உரைப்பும் சரி அத்தனைத்திட்டமாக சமைப்பார்கள். கடும் உழைப்பிற்கு அந்தக்கால பெண்மணிகள் அஞ்சியதில்லை. மாவு அரைக்கும்போது, வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளை எதிரே உட்கார வைத்து பழக்குவார்கள். சோறு வெந்து விட்டதா என்று பதம் பார்க்கச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ!

சில வருடங்களுக்கு முன் நான் சமையல் தொடரில் எழுதிக்கொண்டிருந்த போது, ஒரு பெண் ‘ மேடம், சாதம் எப்படி வடிப்பது?’ என்று கேட்டிருந்தார். இதற்கு என்ன பதில் எழுதுவதென்றே புரியவில்லை. எங்கள் உணவகத்தில் ஒரு இளம் வயது சமையல்காரர், ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்தவர் இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு பாசிப்பயறு குறிப்பு பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். அவர் புரியாத நிலையில் இருக்கவும் ‘ என்ன ஆச்சு?’ என்று கேட்டேன். ‘ மேடம், பாசிப்பருப்பு என்றால் என்ன?’ என்று கேட்டார். அப்படியே அசந்து விட்டேன். ‘ split mung dal’ என்றதும் ‘ அப்படி சொல்லுங்கள், மேடம்! நீங்கள் பாசிப்பருப்பு என்று சொன்னதும் புரியவேயில்லை’ என்றார். அவர் சுத்தமான தமிழ்நாட்டுக்காரர்!

மாற்றங்கள் வருவது தான் வாழ்க்கை! ஆனால் காலம் செல்லச் செல்ல, மாற்றங்கள் அசுர வேகத்தில் நிகழும்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல, நிறைய நல்ல விஷயங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறதா?


நிலா வெளிச்சத்தில் கதை பேசி, பாட்டுப்பாடி களித்து, அம்மா, அப்பா அன்பில் ஊறி, ஆரோக்கியமான உணவை ருசித்து, அறிவு மேம்பட ஆங்கிலமும் தமிழுமாய் படித்து, தோழியருடன் விளையாடிக் களித்த அந்தக்காலம் நிச்சயம் பொற்காலம் தான்!! 


Thursday, 8 April 2021

மனிதம்!!!

கருணையும் இரக்கமும் மனிதநேயமும் கிலோ என்ன விலை என்றாகி விட்ட இன்றைய உலகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் புனிதமான மழைத்துளியைப்போல உண்மையான மனித நேயத்தையும் கருணையையும் தரிசிக்க நேரும்போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன!! நெஞ்சம் நெகிழுகிறது!! 

அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் இது!

மனித நேயம்-1

சிறுவாணி தண்ணீரில், மிருதுவான இட்லியை தயாரித்து, அடுப்பு தீயின் நடுவே ஆவி பறக்க, பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பவர் கமலாத்தாள் பாட்டி. பல இடங்களில் இட்லியின் விலை 6 முதல் 10 ரூபாய் வரை இருக்க, பாட்டியோ யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத் தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார். கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் 


ஊரடங்கால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்றுவந்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்து இப்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ரூ.150-க்கு விற்கப்பட்ட மிளகாய் இப்போது ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்குதான் இட்லியை விற்று வருகிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.

சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க மிக்சி கிடையாது, எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வந்தார். இவரது இந்த கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள். வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் எனத் தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் கமலாத்தாள்.

ஊரடங்கு உத்தரவால் கமலாத்தாள் பாட்டியும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கமலாத்தாள் பாட்டியின் இந்த சேவையை அறிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார். அப்போது தான் எல்லோருக்கும் கமலத்தாள் பாட்டி அறிமுகமானார். இந்நிலையில், கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.


"நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி, கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என் உடலில் தெம்பு இருக்கிறது." என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும் ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.

மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர் ராமசாமி கூறுகையில், "இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல, நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில் 500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை. ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார். சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்" என்கிறார்.

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. 


மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக மனிதர்களுக்கு இந்த ஏழமை நிலையிலும் மிகக்குறைந்த விலையில் பசியாற்றும் இந்த உயர்ந்த பெண்மணியின் மனித நேயம் மிக உயர்ந்தது என்றால் அவருக்கு உதவ முன்வந்துள்ள கருணை உள்ளங்களின் மனித நேயத்திற்கு ஈடு இணை ஏது?

Wednesday, 19 August 2020

தெரியாத செய்தியும் செய்யக்கூடாதவையும்!!!

வயது ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் நாம் அறியாத,விஷயங்கள் கடலளவு இருக்கின்றன. சில ஆச்சரியமான நிகழ்வுகள் அவ்வப்போது நம்மை அசத்துகின்றன. சில சமயங்களில் அவற்றின் காரணங்களும் புரிவதில்லை. இங்கே இரண்டு செய்திகள். முதலாவது செய்தி நான் கேட்டறிந்தது. இரண்டாவது செய்தி நான் படித்தறிந்தது.

முதலாவது செய்தி:

இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.  மிக இலேசாக அறிந்திருக்கிறேன். சமீபத்தில் என் அக்கா மருமகள் சொன்ன விஷயம் இது. அவர்கள் பக்கத்து கவுன்ஸிலர் வீட்டிலிருந்து திருமணப்பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து அழைத்தார்களாம். யாருக்குத்திருமணம் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் வீட்டில் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம். ஒவ்வொரு வருடமும் இது மாதிரி பத்திரிக்கை அடித்து கொண்டாடுகிறார்களாம். இப்படி திருமணம் செய்தால் நல்ல மழை வரும் என்பது ஐதீகமாம்! அரச மரத்தை ஆணாக பாவித்து அதற்கு புது வேட்டி சுற்றி வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவை சுற்றி அந்த வீட்டில் உரிமையாளரே வேப்ப மரத்துக்கு பொட்டு வைத்து தாலி கட்டினாராம். அனைவருக்கும் சாப்பாடு செய்திருக்கிறார்கள். நம் கல்யாணங்களில் செய்வது போல எல்லோரும் பணம் வைத்துக்கொடுத்திருக்கிறார்கள். கிளம்பும்போது வளயல்களும் பூவும் வைத்துக்கொடுத்தார்களாம்.


கோடி கன்னிகாதானங்கள் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை ஒரு அரசு-வேம்பு திருமணம் செய்வதால் பெறலாம். அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். அரசமரம் சிவபெருமான். வேம்பு சக்தி எனப்படும் தேவி. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம் வேப்பமரத்தினை மட்டும்  தனக்குள்ளேயே வளர அனுமதிப்பது இந்த விஞ்ஞான உலகிலும் நாம் காணும் இயற்கை அதிசயங்களில் ஒன்று. பொதுவாக, அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன என்று கூகிள் சொல்லுகிறது.

இரண்டாவது செய்தி:

சில சமயங்களில் போகிற போக்கில் நாம் பழக்கம் காரணமாக சில காரியங்களை செய்கிறோம். ஆனால் அப்படி செய்கிற காரியங்கள், பழக்கங்கள் சரியானவை தானா என்று நமக்குத் தெரிவிதில்லை. சமீபத்தில் மாத இதழில் படித்த தகவல் ஒன்று செய்யக்கூடாத செயல்கள் என்று சிலவற்றைக் கூறுகிறது. படித்துப்பாருங்கள்.

செய்யக்கூடாதவைகள்:

1. தலைக்கு வைக்கும் தலயணை மீது அமரக்கூடாது.

2. எண்ணெயிலும் நீரிலும் நம் நிழலைப்பார்க்கக்கூடாது. கோலம் போடக்கூடாது.

3. திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வர வேண்டும். இத்தனால் புண்ணியங்கள் சேரும். வேண்டிக்கொண்ட விஷயஙள் நிறைவேறும்.

4. பூஜையறையில் வடக்குப்பார்த்து தெய்வப்படங்களை வைக்கக்கூடாது.

5. எப்போதும் கால், தொடை ஆட்டிக்கொண்டிருக்கக்கூடாது. நம் உடலிலுள்ள சக்தி வீணாகும். நம் மீதான மரியாதையும் மதிப்பும் குறையும்.

6. பாவி பாவி என்றுயாரையும் திட்டக்கூடாது. திட்டப்பட்டவன் பாவம் செய்திருந்தால் திட்டியவன் இன்னும் பாவியாகிறான். திட்டப்பட்டவன் பாவம் செய்யாதவனாக இருந்தால் இரு மடங்கு பாவம் சொன்னவனை சேரும்.

7. உணவைப்பிசைவது, உருட்டுவது, வழிப்பது, திட்டிக்கொண்டும் சிந்திக்கொண்டும் சாப்பிடுவது கூடாது. அடுத்த பிறவியில் உண்ணும் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். பிச்சை எடுத்தாலும்கூட உணவு கிடைக்காது.

8. துணியை தலையில் சுற்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது.

9. தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது.

10. காலை, மாலை சந்தியாகால வேளையில் சாப்பிடுவதும் உறங்குவதும் கூடாது.

11. பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பரிமாறி  ஓரவஞ்சனை செய்யக்கூடாது. இது பட்டினிக்கு வழி வகுக்கும்.

12. உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் வெளிச்சம் வந்ததும் தட்டில் உள்ளதை மட்டுமே சாப்பிட வேண்டும். மறுபடியும் அதில் உணவை சேர்க்கக்கூடாது.


Sunday, 26 July 2020

ஒரு கேள்வியும் ஒரு சாதனையும்!!!!

ஒரு கேள்வி!

சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா?' என்று கேட்டதும் இன்றைக்கு ஆடி அமாவாசை என்பதால் விரதமிருந்து சமைக்கணும்மா. அப்புறம் தான் சாப்பிடனும்.' என்றது. கூடவே ஆண்கள் தான் தர்ப்ப்ணம் பண்ணனும் என்கிறார்கள். பெண்கள் அதைச் செய்ய முடியாது. அதனால் விரதமாவது இருந்து சமைக்கலாம் என்று வருஷா வருஷம் இப்படித்தான் செய்கிறேன்' என்றது. அது சென்றதும் அதைக்கேட்டுக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுப்பெண்,  ' இது தப்பும்மா.கணவர் இருக்கும்போது இறந்து போன பெரியவர்களுக்காக இந்த சுமங்கலிப்பெண் விரதம் இருக்கக்கூடாது' என்று சொன்னது. ' அதற்கு காரணம் என்ன? ' என்று நான் கேட்டதும் ' எனக்கு அதற்கெல்லாம் பதில் தெரியாது' என்றது. அதன் பிறகு என் சினேகிதியை தொலைபேசியில் அழைத்துக்கேட போது அவரும் ' காரணம் தெரியாது' என்றே சொன்னார். காரணம் கீதா சாம்பசிவம் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

இளம் வயதில் என் தந்தை காவல் அதிகாரியாய் பணியாற்றிய சமயங்களில் ஆடிப்பெருக்கு, சரஸ்வதி பூஜைக்குக்கூட பத்தாடைகள் அணிந்து சாமி கும்பிடுவோம். ஆனால் பெரியாரின் அடிபணிந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டபோது பூஜை புனஸ்காரங்கள் நின்று போயின. என் மாமியார் நான் உள்பட தன் ஏழு மருமகள்களுக்கும் எந்த சீரும் கேட்கவில்லை. ஜாதகம் என்ற ஒரு விஷயமே நடந்ததில்லை. திருமணச்செலவும் மணமகன் வீட்டினர் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களை மனங்குளிர வரவேற்று உணவருந்தித்தான் செல்ல வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது போலவே எங்களையும் பழக்கி வைத்திருந்தார்கள். எங்கள் வீட்டில் சின்னக்குழந்தைகள்கூட வந்தவர்களை சாப்பிட்டுப்போகச்சொல்வார்கள். இப்படி எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்கள் இருந்த போதிலும்  மேற்சொன்ன நாளுங்கிழமையுமான பழக்க வழக்கங்கள் என் அம்மா வீட்டோடு நின்று போய் விட்டதென்றே சொல்லலாம். அம்மா வீட்டிலுமே ரொம்பவும்  முறைமைகளைப்பார்க்க மாட்டார்கள்.

சென்ற திங்கட்கிழமை தான் என் நெருங்கிய சினேகிதியும் இறந்த நாள். சென்ற வருடம் இறந்தார்கள். அவர்களின் மகன் தன் 27ம் வயதில் சாலை விபத்தில் இறந்து போனான். 2003ம் வருடம் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து அவர்களின் மலர்ந்த முகம் மறைந்து விட்டது. கணவர் நோய்வாய்ப்பட்டு 10 வருடங்கள் கழித்து இறந்து போனார். பெண் வீட்டில் தான் கடைசி வரை இருந்தார்கள். அவர்கள் கணவர் இறந்ததும் கொள்ளி வைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் சகோதரிகள் வழியில் நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொள்ளி போட உரிமையில்லையென்றும் அவர்கள் கணவர் வழி சகோதரர்கள் பிள்ளைகளில் யாராவது தான் கொள்ளி போட வேண்டுமென்று சொல்லவே, என் சினேகிதி தன் மகளையே தன் அப்பாவுக்கு கொள்ளி வைக்கச் சொல்லி விட்டார்கள். இப்போது அம்மாவும் இறந்த போது அதே பெண் தான் அவர்களுக்கும் கொள்ளி வைத்தது. சென்ற திங்கள் அன்று நான் ஒரு வருட பூர்த்தியில் திவசம் எப்படி நடந்தது என்று அந்தப்பெண்ணை விசாரிக்கையில் ‘ நான் தான் செய்தேன் அத்தை. ஐயர் வைத்து நொய்யலாற்றங்கரையில் அம்மாவுக்கு தவசம் செய்தேன்.’ என்றது. காலம் மாற மாற பழக்கங்கள் மாறுகிறதா? அப்படியென்றால் அமாவாசை அன்று அந்தப்பெண் தானே விரதமிருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்?

ஒரு சாதனை

ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையைப்படித்ததனால் வந்த தாக்கம் மிகப்பெரிது என்பதை பிரசாந்த் கேட் உணர்த்தியிருக்கிறார். அந்த செய்தி இது தான்.
ஒவ்வொரு வருஷமும் சுமார் 40000 மக்களுக்கு சாலை விபத்துக்களில் கைகள் இல்லாமல் போகின்றன. சிலர் பிறப்பிலேயே கைகள் இல்லாமல் பிறக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்ததினால் உருவானது தான் " இனாலி கைகள்"!



கைகள் இல்லாதவர்களுக்கு ரோபோட்டிக் முறையில் கைகளை இவர் எந்த செலவுமில்லாமல் தன் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
இவரது முயற்சிக்கு வித்திட்டவர் பிரான்ஸ் நாட்டு நிக்கோலச் ஹட்செட். அவர் பயோனிக் முறையில் தனக்குத்தானே கைகளை உண்டாக்கிக்கொண்டவர்.
அவரை முன்னுதாரணமாக மனதில் ஏற்றுக்கொண்டார்.  பிறவியிலேயே கைகளை இழந்த ஒரு சிறுமிக்கு கைகள் வழங்க முயற்சி செய்த போது உலக நாடுகளில் அதற்கான விலையைப்பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சாதாரண, எளிய மக்கள் எப்படி கைகளைப்பெறுவார்கள் என்ற கேள்வியும் மற்றவர்களின் கிண்டலையும் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாத மன உறுதியும் இவரது இலக்கை, ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேற வைத்தன. இடை விடாது நிதி திரட்டி ஆயிரம் கைகளை இவர் முதன் முதலாக தயாரித்தார். இதில் 700 கைகளை இலவசமாகவும் மீதமுள்ள 300 கைகளை விற்று வந்த பணத்தில் மறுபடியும் கைக‌ள் செய்து அவற்றையும் இலவசமாக கொடுத்தார்.

இலவசம் என்றால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் இப்போது ஒரு விலையும் இதற்கு மதிப்பிட்டு விற்பனை செய்கிறார்.
எப்படி மூளையின் உத்தரவிற்கு ஏற்ப கைகள் செயல்படுகின்றனவோ, அதேபோல இந்த செயற்கை கைகளும் செயல்படும். இந்த ரோபோட்டிக் கைகள் மூலம் 10 கிலோ எடை வரை தூக்க முடியும்.

தனக்கு முழுமையாக தைரியமும் ஊக்கமும் கொடுத்த தன் மனைவி பெயரான " இனாலி "யையே இந்தக்கைகளுக்கு பெயராக வைத்திருக்கிறார். மற்றவர்களின் நிதி, உதவிகளால் இவரின் இந்த இயக்கம் சிறப்பாக இயங்கி வருகிறது.

https://inalifoundation.com/

Sunday, 21 June 2020

தந்தையர் தினம்!!!

இன்று தந்தையர் தினம்!!



எப்போதோ எங்கோ படித்ததை இங்கே பதிவிட்டிருக்கிறேன். இந்த வரிகளை விட நம்மையெல்லாம் காலம் காலமாக சுமக்கும் தந்தையர்களுக்கு அருமையான சமர்ப்பணம் வேறென்ன இருக்க முடியும்?



இது அப்பாவை நேசிப்பவர்களுக்காக:

ஆணழகன் அப்பாவிற்கு அழத்தெரியாது!

குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும், பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய்த் தேய்ந்த போதும், என்னடா இது வாழ்க்கை இது என ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்.!

மனைவியை நெஞ்சில் சுமந்து, பிள்ளைகளை தோளில் சுமந்து, குடும்பப்பொறுப்புகளை தலையில் சுமந்து,
போகும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற போதும்,
தான் கலங்கி நின்றால் குடும்பம் உடைந்து விடும் என்று கல்லாய் நின்றவர்.

நாம் அவரை-கல்லென்றே நினைத்து விட்டோம் அதனால்!

அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
அப்பாவிடம் எட்டி நிற்போம்!

முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள் சொற்பம் என்போம்!
ஆனால் தோல்வியில் துவளும்போது பிடித்துக்கொள்ள அப்பாவின் கைகளைத்தான் முதலில் தேடுவோம்!

நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும் தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும் ஜீவன் அது!

நாம் தின்னும் சோறும், உடுத்தும் உடையும் படித்த படிப்பும் அப்பாவின் வேர்வையில் தான்!

நேரில் நம்மிடம் நாலு வார்த்தைகூட பேசாதவர்.
ஊர் முழுக்க நம்மைப்பற்றித்தான் பேசித்திரிவார்.

அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம் அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ?

நமக்கு மீசை முளைத்தால் அவர் குதூகலிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அவரே உயரமானதாக உணர்வார்!

வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்க விட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!

நம் வாழ்க்கையின் பின்னால்-அப்பா எப்போதுமே இருப்பார்!
அப்பாவிற்கு பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாது!
அப்பாவிற்கு கொஞ்சத்தெரியாது!
அப்பாவிற்கு போலியாக இருக்கத்தெரியாது!
அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிகாட்டத் தெரியாது!
அப்பாவிற்கு தானக்காக எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளத்தெரியாது!

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த போதும்,
ஒரு வேளை சோற்றுக்காக மருமகளிடம் வேலைக்காரனாக  மாறிப்போன போதும்,
முதியோர் இல்லத்தில் தூக்கி வீசப்பட்ட போதும்,
அவர் அழுதவரில்லை!

நம் சந்தோஷத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!

பாசமோ, மன்னிப்போ, அழுகையோ, அவரிடம் உனர்வுகளை உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!

ஒரு வேளை உங்களின் நண்பனின் அப்பா மரணமோ அல்லது உங்கள் அப்பா வயதுடைய யாரோ ஒருவரின் மரணமோ உங்களைப்புரட்டிப்போட்டு, அவரின் பாசம் புரிந்து, அப்பாவைத்தேடி ஓடி வரும்போது,
வீட்டில் அப்பா சிரித்துக்கொண்டிருக்கலாம்-புகைப்படத்தில்!
பாவம்-அவருக்குத்தான் அழத்தெரியாதே!!



**********************

இது சமீபத்தில் எனக்கு வந்த வாட்ஸ் அப் வீடியோ! சில மாத பிரிவிற்குப்பின் ஒன்று சேரும் அப்பாவும் மகளும் கண்ணீருடனும் சிரிப்புடனும் வார்த்தைகளே இல்லாத பிரியத்துடனும் அணைத்துக்கொண்டிருந்த இந்த காட்சி என் நெஞ்சைப்பிசைந்தது. நீங்களும் பாருங்கள்!

 

Saturday, 21 March 2020

கொரோனா -ஒரு பார்வை!!!

சைனாவின் ஹுபைய் மாகாணத்திலுள்ள உவான் என்னும் நகரத்து மக்களுக்கு சென்ற வருடம் டிசம்பர் மாத மத்தியில் இனம் புரியாத நுரைஇயீரல் தொற்றுக்கள் உண்டாக ஆரம்பித்தன. அவற்றில் பெரும்பாலான தொற்றுக்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிமோனியா தொற்றுக்களாக மாற ஆரம்பித்தன.



அன்றிலிருந்து இன்று வரை உலகம் முழுமையும் 2 இலட்சத்து எழுபத்தைந்து பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். 91000க்கும் மேற்பட்டோர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதில் சீனாவில் மட்டும் 81000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 3240 மரணமெய்திருக்கிறார்கள். 71000க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்திருக்கிறார்கள். சற்று தாமதமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 234 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் 23 பேர்கள் குணமடைந்திருக்க, 4 பேர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
சீனாவும் இந்த நோய் உலகம் முழுவதும் பரவாமல் தடுக்க பல முயற்சிகள் செய்து வருகிறது. அதற்கு முதல்படியாக ஊஹான் நகரையும் அதில் வாழும் ஒரு கோடி மக்களையும் தனிமைப்படுத்தியிருக்கிறது. உலகத்தில் ஒரு கொள்ளை நோய்க்காக இத்தனை பெரிய தனிமைப்படுத்துதல் நடந்ததில்லை.சீனாவும் உலகத்திடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உலகமும் சீனாவை தனிமைப்படுத்தியிருக்கிறது.

இது முதலில் NOVEL CORONA VAIRUS 2019 என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் SARS coV-2 என்று அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது?

ஆய்வுப்படி, 80 சதவிகிதம் கொரோனா தொற்று, கைகளால் வைரஸ் தொற்றுள்ள பகுதிகளைத்தொடுவதாலேயும் அந்த கிருமி பாதித்த கைகளை வாய், மூக்குபோன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதாலேயும் ஏற்படுகிறது.
20 சதவீதம் கரோனோ தொற்று நேரடியாக மற்றவர்கள்மீது தும்முவதன் மூலமாகவும் இருமுவது மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் உயிருடன் இருக்கும் காலம் 30 முதல் 40 டிகிரி வெப்ப நிலையில் கணிசமான அளவு குறைகிறது. அதனால் தான் இந்தியாவிலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் அதிகமாக பரவாமல் இருக்கிறது.
4 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் இந்த வைரஸ் 28 நாட்கள் வரையிலும் கூட வாழும் தன்மையுடனிருக்கிறது.

கொரோனா தொற்றின் அறிகுறிகள்:

அதிகமான காய்ச்சல், தொண்டை வலி, வரட்டு இருமல், மூச்சி விடுவதில் சிரமம், மூச்சுத்திணற‌ல்.
கொரோனா பரவாமல் தடுக்க:
1. கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும்.
2. மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் நம் கைகளை கண்ட இடங்களில் வைக்கக்கூடாது.
3. சளி இருமல் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.
4. முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜன சந்தடியுள்ள இடங்களில் புழங்குவதை தவிர்க்க வேண்டும்.
5. வீட்டின் கழிப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
6. வெளியில் எச்சில் துப்புதல் கூடாது.

யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்?
ஆய்வுகள் படி,9 வயது குழந்தைகள் வரை இந்த வைரஸ் ஒரு மரணம் கூட உண்டாக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். இதற்கு முன் வந்த சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் கூட குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறது. ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க, கொரோனாவின் மரணம் உண்டாக்கும் விகிதமும் அதிகரிக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மரணம் உண்டாக்கும் விகிதம் 14.8 சதவிகிதம் இருக்கிறது. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, புற்று நோய் முதலியவற்றுடன் போராடிக்கொண்டிருப்பவர்களிடம் மரண சதவிகிதம் அதிகரிக்கிறது. இதில் பெண்களை விட ஆண்கள் அதிக தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.

சில மூட நம்பிக்கைகளும் அதற்கு நேர்மாறான உண்மையும்:

1. நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டால் கொரோனா தாக்காது.

   இது தவறானது.

2. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும்       ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளலாமா?

கொரோனா வைரஸை கொல்வதற்கு வைரஸ் கொல்லி மருந்துகள் மட்டுமே பயன்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாக்களைக்கொல்பவை. எனவே அவை கொரோனாவை அழிக்காது.

3. வென்னீர் குடித்தால் வைரஸ் தாக்காது. அதில் உப்பு போட்டு வைரஸ் குடித்தால் தாக்காது. மூக்கில் சொட்டு மருந்து விட்டால் கொரோனா வைரஸ் தாக்காது. மவுத் வாஷ் உபயோகித்தால் தொற்று ஏற்படாது. பூண்டு, மஞ்சள், கீழாநெல்லி உபயோகித்தால் தொற்று ஏற்படாது.

இதெல்லாம் உண்மையில்லை.

4. குழந்தைகளுக்கு போடப்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசி கொரோனா வைரஸ் உருவாக்கும் நிமோனியாவை தடுக்குமா?

தடுக்காது. இப்போதைக்கு கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கிடையாது.

5. கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

கோழிகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள், மீன்கள் மூலம் கொரோனா பரவுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிப்பதால் அசைவம் சாப்பிடுவதில் தவறில்லை. 

தகவல்களுக்கு நன்றி: "மல்லிகை மகள்"

Monday, 6 August 2018

விமானப்பயணங்கள்!!

மதுரைத்தமிழன் ஏர் இந்தியாவைப்பற்றி எழுதியிருந்ததைப்படித்த போது, பழைய நினைவலைகள் மீண்டும் எம்பி எழுந்தன! 42 ஆண்டுகள் தொடர்ச்சியான விமானப்பயணங்கள்! எப்படி இருந்தவையெல்லாம் எப்படி மாறி விட்டன!

1976ம் வருடம் ஜூன் மாதம் எனது முதல் விமானப்பயணம்! பயம் இருந்தது. குமட்டல் ஏற்படுமோ என்ற சந்தேகம் இருந்தது. முதன் முதலாக இன்னொரு நாட்டில் தரையிறங்கிய போது பிரமிப்பு இருந்தது. அப்போதைய காலத்தில் பயணம் செய்த எங்களுக்கும் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் மக்களுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்கள்! இப்போதுள்ள தலைமுறை பஸ் பயணத்தைப்போலவே தான் விமானப்பயணத்தையும் காஷுவலாக எடுத்துக்கொள்கிறது! எந்த ஒரு பிரமிப்பும் காணோம்!

அன்றைய‌ துபாய் விமான நிலையம்!
அப்போதெல்லாம் விமானப்பயணம் என்பது காஸ்ட்லியாக இருந்தது. பயணிகளுக்கு ஏர் இந்தியா மகாராஜா வரவேற்பு தான் தரும்! அதுவும் ஏர் இந்தியாவின் சின்னமான தலை குனிந்து வணக்கம் செய்யும் மகாராஜாவைப்போலத்தான் விமானப் பணிப்பெண்களின் சேவையும் இருக்கும்.

இன்றைய துபாய் ஏர்ப்போர்ட் உள்ளே!
1976 வாக்கில் மும்பை வழியே தான் துபாய்க்கு முதன்முதலாக பயணிக்க வேண்டியிருந்தது . அப்போதெல்லாம் நேரடி விமான சேவை சென்னை துபாய்க்கு கிடையாது. மும்பை வந்தாலும் சென்னைக்கோ அல்லது துபாய்க்கோ செல்ல உடனடி விமான சேவைகள் இருக்காது. அதனால் அடுத்த நாள் செல்லும்வரை பயணிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள். அடுத்த வருடமே ஏர் இந்தியா விமானங்கள் முதன் முதலாக சென்னைக்கு நேரடி சேவையைத் துவக்கின. எங்களுக்கெல்லாம் அப்படியொரு சந்தோஷம். அதுவும் தொடர்ச்சியாகக்கிடையாது.

சென்னை வந்து அடுத்த நாள் நாங்கள் தஞ்சை செல்ல ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் தான் பயணிப்போம். ஒரு முறை சென்னை வந்து இறங்கி, மாமனார் இல்லத்திற்கு வருவதாகத் தந்தி கொடுத்து விட்டு சினேகிதி வீட்டில் தங்கி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றால் என்னைப்பார்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி! நான் கொடுத்த தந்தி போய் சேரவேயில்லை! அடுத்த நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த போது தான் அந்தத் தந்தியே வந்தது! அதை நான் தான் கையெழுத்து போட்டு வாங்கினேன்!!

பிறகு திருச்சியிலிருந்து விமான சேவை  1990 களில் தொடங்கியது.இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கியிருந்தது. [ சரியான வருடம் நினைவில் இல்லை ] ஆரம்ப நாட்களில் பயணிகளின் பெட்டிகள் காட்டுச்செடிகளின் இடையேயுள்ள கன்வேயர் பெல்ட்டில் தான் பயணித்து உள்ளே வரும். ஒரே தமாஷாக இருக்கும்! பயணிகள் உபயோகிக்க ஒரே ஒரு டாய்லட் மட்டுமே இருந்தது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது!

மெல்ல மெல்ல காட்சிகள் மாறின. இன்றைக்கு அதி நவீன வசதிகளுடன் திருச்சி விமான நிலையம் மாறியிருக்கிறது. தஞ்சை சேலம், திருச்சி மாவட்ட மக்களுக்கு இன்றைக்கு துபாயிலிருந்தும் ஷார்ஜாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்து செல்ல தினசரி விமான சேவைகள் இயங்குகின்றன.

இன்றைய திருச்சி ஏர்ப்போர்ட்!
அடுத்தாற்போல பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்து விட்டன. அதைப்பார்த்து விட்டு நடைமுறையில் இருக்கிற மிகப்பெரிய ஏர்லைன்கள் பலவும் இந்த பட்ஜெட் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்து விட்டன. இன்றைக்கு விமான பயணக்கட்டணம் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் முன்பிருந்த வசதிகளோ, மென்மையான அணுகுமுறையோ, அக்கறையோ இன்றில்லை. பெரும்பாலும் அனைத்து ஏர்லைன்களும் சாப்பாடு தருவதை நிறுத்தி விட்டன. எமிரேட்ஸ் உள்ளிட்ட மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே உணவு கொடுக்கின்றன. அவர்களது சாப்பாடும் அளவு, தரம் இரண்டையும் குறைந்து விட்டன. சில ஏர்லைன்கள் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் விமானத்திலேயே விற்பனை செய்கின்றன. அமரும் இருக்கைகள்கூட இன்று மாறி விட்டன.

இன்றைக்கு காட்சிகள் முழுமையாக மாறி விட்டன. ஒரு சாதாரண, பொருளாதாரத்தில் மிகக்கீழுள்ள ஒருவர் கூட இன்று விமானத்தில் போகுமளவு சமூக நிலை மாறி விட்டது. ஆனால் தரம், அக்கறையான அணுகுமுறை எல்லாமே மறைந்து விட்டது.

நவீனமயமாக்கலில் நல்ல விஷயங்கள் அழிந்து விடுவது இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் விஷயம் தானே?


Wednesday, 15 November 2017

வாட்ஸ் அப் எச்சரிக்கைகள்!!!!!

சமீபத்தில் டெங்கு ஜுரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தஞ்சாவூர் இருந்தது. என் தங்கை வீட்டு மாடியில் குடியிருந்த 25 வயது இளம் பெண் படிப்பில் தங்க மெடல் கல்லூரியில் வாங்கியவர், முதுகலைப்பட்டங்கள் வாங்கியவர் ஜுரம் வந்த நாலே நாளில் இறந்து போனார். என் தங்கை அதிர்ச்சியில் உறக்கத்தைத் தொலைத்தார். தஞ்சையிலிருக்கும் பிரபல மருத்துவ‌ மனையில் நோயாளிகளுக்கான படுக்கை அறைகள் நிரம்பி வழிந்த நிலையில் வரவேற்பறையில் இருந்த நாற்காலிகளை அகற்றி  அங்கே நோயாளிகளைப் படுக்க வைக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைப்பாதுகாக்க ' வாட்ஸ் அப்'பில் வந்த குறிப்புகள் இதோ!!
டாக்டர் பரூக் அப்துல்லா என்பவர் இந்த அவசியமான எச்சரிக்கைக் குறிப்புக‌ளைக் கொடுத்திருக்கிறார்.




இது தான் டெங்கி காய்ச்சலோட போக்கு 

முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும். 

அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும். 

ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 

ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க.. 

காய்ச்சலோட போக்க பாருங்க. 

முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 

ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 

முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... 

நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 

அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... 

இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . 

ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.

ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 

ரூல் நம்பர் ஒண்ணு.

டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்

ரூல் நம்பர் டூ 

நீர் சத்துதான் டெங்கிவோட டார்கெட் , அதனால் முடிஞ்ச அளவு தண்ணீர் ,  இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.  

ரூல் நம்பர் 3 

இதுதான் முக்கியமான விசயம்.

காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூணு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 

இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கி போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்.

   *******************************************************************

அடுத்த எச்சரிக்கை வரவிருக்கும் சுனாமி பற்றி! 

இதைப்பற்றி ' ஜுனியர் விகடனில்கூட' இதே விபரங்களைத்தாங்கி கட்டுரை வந்திருக்கிறது.

இப்போது ' வாட்ஸ் அப்'பில் வந்த விபரங்கள்....

கடும் எச்சரிக்கைகக்கான பதிவு இது.. 




🔴" மீண்டும் சுனாமி - 2017, டிசம்பர் 31க்குள் ". சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை... ஆனால் இந்தமுறை முன்பை விட "பலமடங்கு" அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவல் 🔴

🔴இது 11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாம், குறிப்பாக ❗தமிழ்நாடும், கேரளாவும்தான்❗ 
ஏனென்றால் இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே நம் இந்தியப்பெருங்கடலில் இருந்து தானாம்...🔴

🔴இது தொலைவில் உள்ள வடகிழக்கில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும், வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வரை இதன் வீச்சு பாதிக்கும் என்றால்... இந்தியப்பெருங்கடல் அருகிலேயே உள்ள நம் "தமிழ்நாடு"  மற்றும் கேரளாவின் நிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்...🔴

🔴இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association - Director Mr.BabuKalayil, என்பவர்... இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர்... அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை... ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது... 

இவர்தான் தற்போது "வருமுன் காப்பதே சிறந்தது" என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன், அதை  Pரிமெ Ministerக்கும், தமிழ்நாடு Cஹிஎஃப் Ministerக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்... 

இதை படிக்கும் நீங்களும் இச்செய்தியை உறுதிசெய்து கொள்ள விரும்புவோராயின், தொடர்புக்கான எண் (திரு.பாபுகளைல் - 
  +91 9400037848)... மேலும் Google-ல் Babu Kalayil என்று Search செய்தால், இதற்கான அத்தனை ஆதாரங்களையும் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்... 🔴

🔴இது எங்கோ! எப்போதோ? அல்ல... இன்னும் 1மாதத்தில் கடலோர மக்கள் மட்டுமின்றி, நாம்  அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இயற்கை பேரழிவு என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்...🔴

🔴இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது... ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்...🔴

🔴இந்த இயற்கை சீற்றம் பற்றி தெரிந்து 41 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த ஒரு மீடியாவும் அழுத்தமாக பதிவு செய்யவில்லை... ஆனால் இந்த இயற்கை சீற்றம் நடந்த பின்னர் அத்தனை மீடியாக்களும், அதன் பாதிப்புகளையும், மக்களின் கண்ணீர்களையும், TV-ல் தொடர்ந்து காட்டிப்பணம் சம்பாதித்துக் கொள்வார்கள்🔴

🔴ஆகவே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள (முடியும்)வேண்டும்...🔴

🔴இது நம்முடைய
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால்... இதை யாரும் அலட்சியமாக பொருட்படுத்தாமல், தயவுசெய்து நம் மக்களை முடிந்தவரை பாதுகாப்பதற்காகவே பகிர்வோம்...🔴

🔴நம்முடைய இந்த பகிர்வு அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் முடிக்கிவிடப்பட்டு, அத்தனை மீடியாக்களால் வற்புறுத்தி சொல்லப்பட்டு, கடைகோடி மனிதர்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது நம் கடலோர மக்களைக் காக்கவேண்டி தகுந்த முன்னேற்ப்பாடுகள் செய்யப்படுத்தப்பட வேண்டும்...🔴

🔴தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று அரசியலுக்காக பேசும் அத்தனை "வாய்களும்" இக்கணம் முதல் விழிப்புணர்வுக்காக பேசி,  விலைமதிப்பில்லாத மனித உயிர்களுக்கு தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து தர வழி வகுக்கட்டும்...🔴

🔴ஒரு ஜல்லிக்கட்டில் இணைந்த நம்முடைய What's Up பலத்தால், நாம் நம் காளை மாடுகளின் உயிர்களைக் காப்பாற்றினோம்... அதை விடத் துரிதமாய் செயல்பட்டு அத்தனை சமூக வலைதளங்களிலும் பரப்பி, நம்முடைய கடலோர மக்களின் உயிர்களையும் காப்பாற்றுவோம்...🔴

பொதுநலன் கருதும் தமிழக இளைஞர்களில் ஒருவன்... நன்றி...




Wednesday, 27 September 2017

அச்சுறுத்தும் பிளாஸ்டிக்!!

சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் உபகரணங்கள் நம் வாழ்க்கையில் எந்தெந்த விதங்களில் விளையாடுகின்றன என்பதை ஒரு புத்தகத்தில் விரிவாகப்படித்த போது மனம் அதிர்ந்து போயிற்று. ஓரளவு இந்த பிளாஸ்டிக் உபகரணங்கள் எந்த அளவு ஆபத்தை விளைவிக்கின்றன என்பது தெரியுமென்றாலும் அதை விரிவாகப்படித்தபோது அவற்றை எல்லோரும் அறிய இங்கே விரிவாகக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே இந்த பதிவு!! 

நாம் காலை எழுந்து பல் துவக்குவதிலிருந்து இரவு பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக் தான். நாம் உபயோகிக்கும் அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் மயமாகி விட்டது. நம் வாழ்க்கையில் அது நிரந்தரமாகக் கலந்து பின்னிப்பிணைந்து இருக்கும்போது அதைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தால் மட்டுமே நம் உடலிலும் வாழ்க்கையிலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள‌முடியும்!

பிளாஸ்டிக் பொருள்களில் சூடான உணவை வைக்கும்போது பிளாஸ்டிக்கில் உள்ள‌ ரசாயனம் நம் உடலில் கலந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ ரசாயனங்கள் நம் உடல் உறுப்புகளை தாக்கி பலவித நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் நம்மை ஆளாக்குகின்றன.

தாலேட்ஸ் என்னும் பொருளைப்பயன்படுத்தி பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. இது தான் பிளாஸ்டிக் பொருள்களை வளைக்கவும் மென்மையாக்கவும் செய்கிறது. இதில் ஏழு வகை தாலேட்ஸ் அபாயகரமானவை. தாலேட்ஸ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப்பயன்படுத்துவதால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வருகின்றன.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருள்களிலும் அதன் கீழ்ப்புறம் முக்கோண வடிவத்துள் ஒரு எண்ணைப்பொறித்திருப்பார்கள். அந்த எண்னை அடிப்படையாகக்கொண்டு அந்த பிளாஸ்டிக் பொருள் எந்த மூலக்கூற்றை அடிப்படையாகக் கொன்டு தயாரிக்கப்பட்டுள்ளது, அதை எத்தனை நாட்களுக்குப்பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டில் டப்பாவின் கீழ்ப்புறம் எண் 1 என்று அச்சிடப்பட்டிருந்தால் அது ' பெட்' என்று சொல்லப்படும் ' பாலிஎத்தின் டெரிபதலேட்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. பொதுவாய் தண்ணீர், ஜூஸ் போன்றவை இந்த பாட்டிலில்தான் அடைக்கப்பட்டு வருகிறது. இந்த பாட்டில்களை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். நாள்பட பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இந்த வகை பிளாஸ்டிக் தானாகவே சிதையும் தன்மை கொண்டது. அதனால் இந்த வகை பாட்டில்களில் ‘ crush the bottle after use ‘ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.



முக்கோண வடிவின் உட்புறம் 2 என்ற எண் இருந்தால் இந்த வகை பிளாஸ்டிக் ' ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை என்று அர்த்தம். ஷாம்பூ பாட்டில்கள், பெளடர் டப்பாக்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

முக்கோணத்தினுள் 3 என்ற எண் 'பாலிவினை குளோரைடால்' உருவாக்கப்பட்டவை. மேஜை விரிப்புகள், விளையாட்டுப்பொருள்கள் இதனால் உருவாக்கப்பட்டவை.

முக்கோணத்தினுள் 4 என்ற எண் இருந்தால் அவை லோ டென்சிட்டி பாலிஎத்திலீனால் உருவாக்கப்பட்டவை. இதை எப்போது வேண்டுமானாலும் அழித்து மீண்டும் உருவாக்கலாம். பிளாஸ்டிக் கப், நியூஸ் பேப்பர், கடைகளில் கொடுக்கப்படும் கவர்கள் போன்றவை இவற்றால் உருவாக்கப்பட்டவை.

எண் 5 குறிக்கப்பட்ட பொருள்கள் பாலி புரோபைலீனால் உருவாக்கப்பட்டவை. இது எல்லாவற்றையும் விட சிறந்தது. ஐஸ்க்ரீம் கப், ஸ்ட்ரா போன்ற பொருள்கள் இந்த வகை மூலக்கூறால் உருவாக்கப்பட்டவை.

எண் 6 கொண்டு குறிக்கப்பட்ட பொருள்கள் பாலிஸ்ட்ரீன் என்ற மூலக்கூறால் ஆனவை. இந்த பிளாஸ்டிக் பொருள்கள் மிகவும் ஆபத்தானவை. பிளாஸ்டிக் ஸ்பூன், கப், போர்க் முதலியவை இந்த வகையைச் சார்ந்தவை.

என் 7 குறிக்கப்பவை பாலிகார்போனைட் பைஸ்பினால் என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. இந்த பிளாஸ்டிக் பொருள்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் கான்ஸர், இதய நோய் வரலாம். இப்போது பிரபலமாக இருக்கும் டிபன் பாக்ஸ்கள் இந்த மூலக்கூறால் ஆனவையே. அதனால் அதை அடிக்கடி மாற்றுவது நல்லது.



பிளாஸ்டிக் டப்பாக்களின் அடியில் 1, 2, 5 என்று குறியீடுள்ளவை உணவுப்பொருள்கள் வைப்பதற்காக தரமாகத் தயாரிக்கப்பட்டவைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது. வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு மிகவும் ஆபத்தை உண்டாக்கும். இதில் உணவுப்பொருள்கள் வைத்தால் அவற்றில் விஷம் ஏறி ஆபத்தை விளைவிக்கும். எண் குறியீடு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களை வாங்கவே வாங்காதீர்கள்.

நல்ல பிளாஸ்டிக் என்கிற ஒன்று கிடையவே கிடையாது. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தெடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளார்கள். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என்பதை இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்தபோது, அதில் 275 வகையான ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

எந்த  பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது.  எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.


குழந்தைகளுக்கான பொருள்களை வாங்கும்போது  [BPA FREE], [ PHTHALATES FREE], [ P.V.C FREE] என்று குறிப்பிட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். அவெனில் சமைக்க எவ்வளவு  பெரிய பிராண்டாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப்பயன்படுத்தக்கூடாது. கண்ணாடி பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டிற்கு வாங்கும் தண்ணீர் பாட்டிலின்  எண் 2, 4 , 5 என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.  

Tuesday, 30 May 2017

ஆலமரம்!!!

மனிதர்கள் எல்லோரும் மகான்களாவதில்லை. உயர்ந்த சிந்தனைகளாலும் செயல்களாலும்தான் அவர்கள் மகான்களாகிறார்கள். அதற்கு எல்லையற்ற நேசமும் கருணையும் வேண்டும்.

' மனிதனாய்ப்பிறந்தால் அவன் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேன்டும் ' என்று எல்லோரும் பல தருணங்களில் நினைப்பது தான்! ஆனால் அந்த அர்த்தம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும், அன்பையும் கருணையையும் மட்டுமே அந்த உயர்ந்த வாழ்க்கைக்கு மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு அதன்படியே வாழ்ந்து கொன்டிருக்கும் ஒருவரைப்பற்றி ஒரு மாத இதழில் படிக்க நேர்ந்தது. படித்து முடித்த பிறகு அந்த பாதிப்பிலிருந்து என்னால் நெடுநேரம் விடுபட முடியவில்லை! இது ஒரு தவ வாழ்க்கையல்லவா, இப்படி யாரால் வாழ முடியும் என்று மனம் பிரமித்துப்போனது. அவரைப்பற்றி இதோ... எழுத ஆரம்பிக்கிறேன்.

நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களின் அருகில்கூட நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் புண்களில் சீழ் பிடித்து சில சமயங்களில் புழுக்களும் வைத்து, உறவினர்களால் வெளியேற்றப்பட்டு, ஆதரவின்றி தெருக்களில் அலையும் தொழுநோயாளிகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் சமூக சேவகர் மணிமாறன்.



திருவண்ணாமலை அருகேயுள்ள தலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் சிறு வயதில் படிப்பில் நாட்டமின்றி, தந்தையின் ஆதரவுடன் தன்னுடைய பதினேழு வயதில் அன்னை தெரசாவின் ஆசிரமம் தேடி பயணமானார். பணம், முகவரி அடையாளம், உடைகள் பறி போய், பிச்சையெடுக்கும் கும்பலில் சிக்கி அடிபட்டு, தமிழ் பேசிய ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் அன்னை தெரசாவின் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் இவர். பெண்கள் மட்டுமே தங்க முடியும் அங்கு என்பதால் இவரை வெளியில் தங்க வைத்து அந்த ஆசிரமத்தில் பணி செய்ய அவர்கள் அனுமதித்தனர். நான்கு மாதங்கள் தங்கி சேவை புரிந்து, சேவை பற்றி நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டு, 'பிறருக்கு உதவுவதற்காகவே இந்த உடலையும் உயிரையும் ஆண்டவன் படைத்திருக்கிறான்' என்ற உணர்வுடன் இவர் ஊருக்குத்திரும்பினார்.



திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப்பார்க்கத்தொடங்கினார் இவர். கிடைத்த 1100 சம்பளத்தில் தன் தந்தையிடம் 500 ரூபாய் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணம் முழுவதையும் சாலையோரம் வசிக்கும் எழைகளுக்கு உணவாகவே வழங்கி வந்தார். இதைப்பார்த்து விட்டு இவர் கம்பெனியின் நிறுவனர் பனியன் நிறுவனத்தில் மிஞ்சும் ஆடைகள், பிஸ்கட்டுகள் இவற்றை தானும் வழங்க, இவரின் சமூக சேவை வளரத்தொடங்கியது. வீதியில் அலையும் தொழுநோயாளிகளுக்கு எப்படி உதவலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு தமிழக தொழுநோய் பிரிவு டைரக்டராக இருந்த திரு.ராமலிங்கம் உதவி செய்தார். பல விழிப்புணர்வு முகாம்களுக்கு இவரை அனுப்பி வைத்ததுடன் தொழுநோயாளிகளின் புண்களுக்கு எப்படி மருந்தளிக்க வேண்டும், நாம் எப்படி அந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளையும் வழங்கினார். அதன் பின் மணிமாறன் தனது பைக்கில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அத்தனை மருந்துகளையும் வைத்துக்கொண்டு, எங்கு தொழுநோயாளிகள் தென்பட்டாலும் அவர்களிடம் கனிவுடன் பேசி, ஆறுதலளித்து, சிகிச்சை அளித்து மருத்துவ மனைகளிலும் சேவை நிலையங்களிலும் சேர்ந்து அதன்பிறகும் அவர்களை தொடர்ந்து கவனிக்கவும் செய்கிறார் இவர்.



2008ல் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைப்படி ' உலக மக்கள் சேவை மையம்' என்ற மையத்தைத்தொடங்கி, ' முகம் சுளிக்காது சேவை செய்யும் மனம் இருப்பவர்கள் என் மையத்திற்கு வாருங்கள் ' என்று அழைப்பு விடுத்தார். இன்றைக்கு இவரின் மைஉயத்தில் 450 உறுப்பினர்கள் சேவை புரிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமன்றி 17 மாநிலங்களிலும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதுவரை இவர் 40000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உதவிகள் செய்திருக்கிறார். இதில் பதினைந்தாயிரம் பேர் தொழுநோயாளிகள். நோயிலிருந்து விடுபட்டவர்கள் சுய தொழில் தொடங்கவும் வழி செய்துள்ளார் இவர். நோய்த்தாக்குதலினால் இறந்து போனால் அவர்களின் இறுதிக் காரியாங்களையும் இவரே செய்கிறார். ஆதரவற்றோர், தொழுநோயாளிகள் என 275 பேருக்கு இவர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.



விபத்து பற்றிய தகவல்கள் இவருக்கு வந்தால் அங்கு சென்று முதலுதவிகள் செய்து வருகிறார். தவிர்க்க முடியாமல் இறந்து போனவர்களின் குடும்பத்தினரிடம் பேசி இதுவரை 22 ஜோடிக் கண்களை தானமாகப்பெற்று வழங்கியிருக்கிறார்.

இன்னும் அசத்தலான விஷயம், நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு ஊரின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பகுதிகளை சுத்தம் செய்கிறார். இது வரைக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சுத்தம் செய்து அங்கு குப்பைத்தொட்டிகளை அமைத்திருக்கிறார். இவர் செய்வதைப்பார்த்து அங்குள்ள மருத்துவர்களும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வது தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமென்று சொல்கிறார்.

இன்றைய தேதியில் கூட்டுக்குடும்பங்களின் அழிவை நினைத்து வருத்தப்படும் இவர், அப்படி உறவே இல்லாதவர்களுக்கு தான் உறவாக இருக்க வேண்டும், அவர்களுக்காக ஒரு ஆசிரமத்தை உருவாக்க வேண்டுமென்பதே தனது அடுத்த பயணத்தின் இலக்கு என்கிறார் இவர்.

தானும் இரத்த தானம் அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் வழங்க தூண்டுகோலாகவும் இருந்து வருகிறார்.



அமெரிக்க பயாகிராஃபி இன்ஸ்ட்டியூட் தங்கப்பதக்கம், அமெரிக்க தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, மத்திய அரசின் சிறந்த சமூக சேவகர் விருது என்ற பல்வேறு விருதுகளைப்பெற்றிருக்கிறார் இவர்.

மிகச் சிறிய விதை மனதில் விழுந்ததை தன் உயர்ந்த மனதினால் பெரிய ஆலமரமாக்கியிருக்கிறார் இவர். அதுவும் எப்படிப்பட்ட ஆலமரம்! தன் விழுதுகள் அனைத்தாலும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நிழல் தருவது என்ற உயர்ந்த சிந்தனை! அவரை மனதால் வணங்குகிறேன்!!!

மேலும் இவரைப்பற்றி முழுமையாக அறிய கீழ்க்கண்ட வலைத்தளத்திற்குச் செல்லலாம்.

http://worldpeopleservicecentre.org/


Sunday, 29 January 2017

மஹாத்மாவிற்கு நினைவஞ்சலி!!

இரண்டு வருடங்களுக்கு முன் பூனா சென்ற போது நாங்கள் பார்க்க விரும்பிய இடம் மஹாத்மா காந்தியின் சமாதி. இணையத்தைப் பார்த்து, அது இருக்குமிடம் குறித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு தான் அங்கே சென்றேன். மஹாத்மாவின் சமாதி ஆகா கான் அரண்மணையுள்ளே தோட்டத்து மூலையில் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதை விசாரித்து கண்டு பிடிக்க மிகவும் சிரமப்பட்டோமென்று தான் சொல்ல வேன்டும். பூனா வாசிகளுக்கே, அருகில் கடை போட்டிருப்பவர்களுக்கே சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கும் என் கணவருக்கும் ஹிந்தி நன்றாகப் பேசத்தெரியுமென்பதால் டாக்ஸி ஓட்டுனர் ஒரு வழியாக அங்கே கொண்டு போய் விட்டார்.



ஆகா கான் அரண்மனை

ஆகா கான் அரண்மனை பூனா நகர் சாலையில் ஏர்வாடாவில் அமைந்திருக்கிறது. 1892ல் பூனாவின் சுல்தான் மூன்றாம் முகமதுஷா ஆகா கான் அவர்களால் கட்டப்பட்டது. அருகேயுள்ள மக்கள் அப்போதைய பஞ்சத்தால் கஷ்டப்பட, அவர்களுக்காக சுல்தானால் கட்டப்பட்டது இது. பின்னாளில் இந்த அரண்மனை சரித்திர முக்கியத்துவம் பெற்றது.

இவரின் கொள்ளுப்பேரனான இமாம் சுல்தான் ஷா கரிம் நான்காவது ஆகா கான் ஆக பதவியேற்ற சில வருடங்களில் இந்த அரண்மனையையும் அதைச்சுற்றியுள்ள நிலங்களையும் 1969ம் வருடம் இந்திய தேசத்திற்கே ஒரு நினைவுப்பரிசாக அளித்து விட்டார். 
இந்திய சுதந்திரப்போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், இங்கே தான் மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய், மகாதேவ் தேசாய், சரோஜினி நாயுடு முதலியோர் குவிட் இந்தியா இயக்கத்திற்குப்பின் 1942லிருந்து 1944ம் வருடம் மே மாதம் வரை சிறை வைக்கப்பட்டார்கள். அன்னை கஸ்தூரி பாயும் மகாதேவ் தேசாயும் இங்கே தான் இறந்தார்கள்.

மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய், மகாதேவ் தேசாய் சமாதிகள் அரண்மனைக்கு வெளியே தோட்டத்தின் ஒரு மூலையில் முலா நதி அருகே அமைந்துள்ளன.



மஹாதேவ் தேசாய் அவர்களின் சமாதி

கஸ்தூரிபாய் காந்தி அவர்களது சமாதி

மஹாத்மா காந்தி அவர்களின் நினைவிடம்

2003ல்  இதை ஒரு சரித்திரப்பிரசித்தி பெற்ற நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1969ம் வருடம் நான்காம் ஆகா கான் அவர்களால் காந்திக்கும் அவரின் தத்துவங்களுக்கும் தான் காட்டும் மரியாதையாக இதை இந்திய மக்களுக்காக வழங்கினார். 19 ஏக்கரில் அமைந்துள்ள‌ இந்த இடம் பசுமை நிறைந்த புல்வெளியாலும் தோட்டங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. அரண்மனை 7 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கிறது.








இந்த அரண்மனையில் தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய் இருவரது புகைப்படங்கள், ஓவியங்கள் சுதந்திரப்போராட்ட குறிப்புகள், மகாதேவ் தேசாயின் வரலாறு பற்றிய குறிப்புகள், புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

















எல்லாம் பார்த்து முடிந்து சில நிமிடங்கள் அங்கே இருந்த படியில் அமர்ந்திருந்த போது மனம் மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தேன்.

சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி சிறு வயதில் நிறைய படித்திருக்கிறோம். ஏன், அந்த வயதில் மஹாத்மா ஒரு ஹீரோவாகக்கூட பள்ளி நினைவுகளில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அந்தப் போராட்டங்களில் ஒரு பகுதியாக நடந்த நிகழ்வுகளை இந்த அரண்மணையில் புகைப்படங்களாகவும் செய்தி குறிப்புகளாகவும் அறிந்த போது மனம் பிரமித்துப்போனது! தன் இளமை, வாழ்க்கை, ஆசாபாசங்கள் அனைத்தையும் தூர எறிந்து விட்டு மக்களுக்காக, தேசத்திற்காக போராட எத்தனை மன வலிமை இருந்திருக்க வேண்டும்? அத்த‌னை போராட்டங்கள், தியாகங்கள், உழைப்பிற்கான பலன் இன்று இருக்கிறதா? சுதந்திரத்திற்காக இப்படியெல்லாம் போராடியவர்களை சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் நினைவு கூர்கிறார்களா?

மன பாரத்துடன் மஹாத்மா காந்திக்கு நினைவஞ்சலிகளை சமர்ப்பித்து வெளியே வந்த போது உலகம் வெளியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது!

Wednesday, 21 September 2016

தற்கொலை மரணங்கள்!!

சில நாட்களுக்கு முன், தொடர் நிகழ்வுகளாக தெரிந்தவர்கள் இல்லங்களில் தற்கொலை மரணங்கள். ஒன்றின் பாதிப்பிலிருந்து மீளுமுன் அடுத்த மரணம். முதலாவது மரணம் கிராமத்தில் நடந்தது. இள‌ம் வயது தம்பதி. ஒரு சின்ன குழந்தை மட்டும் இருந்தது. குடிப்பதற்கு காசு கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவனே ஆத்திரத்தில் மனைவி மீது மண்ணெண்னெய் ஊற்றி எரித்து விட்டான். என்னைக்காப்பாற்றுங்கள் என்று அலறியவாறே உடல் முழுக்க தீ பற்றி எரிய அப்பெண் தெருவில் ஓடி வந்த காட்சியை என் உறவினரால் பல நாட்களுக்கு மறக்க இயலவில்லை. வேதனை என்னவென்றால் கணவன் தன்னை கொல்லவில்லை, யதேச்சையாக நடந்தது என்று மனைவி மரண வாக்குமூலம் தந்தது தான்!



அடுத்ததும் குடியால் வந்தது தான். மனைவி குடிக்க காசு தராத கோபத்தில் 'இப்போது உன் கண்ணெதிரேயே சாகிறேன் பார்' என்று சொல்லி கணவன் விஷத்தைக் குடித்து விட்டான். அவன் நண்பர்கள் அலறிப்புடைத்துக்கொண்டு, பைக்கில் அவனை ஏற்றிக்கொண்டு தஞ்சை மருத்துமனைக்கு பறக்க, வழியில் பைக் விபத்துக்குள்ளாகி அவனது கதையும் அங்கேயே முடிந்து போனது.

அடுத்தது, இளம் கணவன் மனைவிக்குள் தகராறு. வீட்டிலிருந்து அனைவரும் பல‌ அலுவல்கள் காரணமாக வெளியே போகும் வரை காத்திருந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது.

30 வருடங்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதி தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் குழந்தைகள் பத்து வயதிலும் ஐந்து வயதிலும் ஒரு வயதிலுமாக இருந்தன. அதிலும் மூத்த பெண் கால் ஊனமான பெண் வேறு! கணவனின் அதிகமான குடிபோதை, அவர் கொடுத்த அடி, உதைகள், அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் சில தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டபோது நானே அவரைக் காப்பாற்றி இருக்கிறேன். பெண் குழந்தைகளை சுட்டிக்காண்பித்து நான் திட்டும்போதெல்லாம் அழுவார். நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர் இற‌ந்து விட்டார். தற்கொலை என்றார்கள். கணவன் தான் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார் என்றார்கள். ஆனால் மரண வாக்குமூலத்தில் அவர் தன் கணவன் தான் தன்னைக் கொளுத்தினார் என்று சொல்ல அவர் கணவர் சிறைக்குச் சென்றார். ஆனால் அவர்கள் மேல்தட்டு வர்க்கம், மிகுந்த பணக்காரர்கள் என்பதால் விரைவில் அவர் ஜாமீனில் வெளி வந்தார். உடனே குழந்தைகளை கவனிக்க‌ என்று திருமணமும் பண்ணிக்கொண்டார்!



35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நல ஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில் இருக்கிறது. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் தற்கொலைகள் நிகழ்கின்றன.

தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே யந்திரத்தனமாக, எந்தவித உன்னத குறிக்கோளுமில்லாமல் வளருகிறார்கள்.  இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது தாங்கிக்கொள்ள‌ முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பது அவர்களுக்குப்புரிவதில்லை.

முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள்,குழந்தைகளுக்கு பாசத்தையும் விட்டுக்கொடுத்தலையும் சொல்லிக்கொடுத்தல் போன்ற அணுகு முறைகளை இன்றைய பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

பள்ளிகளிலும் தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது, மாணவ சமுதாயத்திற்குப்பயன்படும் வகையில் ஆரோக்கியமான பட்டிமன்றங்களை அடிக்கடி நடத்தி அவர்களின் சிந்தனைகளை கூர்மைபப்டுத்துவது,சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இளம் தளிர்களை நல்வழிக்கு, நல்லுலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வளரும் பருவத்தினராவது இத்தகைய மன அழுத்தங்களுக்கு ஆட்படாமல் வளமாக வாழ வேன்டும்.