Saturday 22 April 2017

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர்!!

என் நெருங்கிய சினேகிதி திருவையாறு அருகே தில்லைஸ்தானம் என்ற ஊரில் இருக்கிறார். ரொம்ப நாளாய் திருவையாறு ஐயாரப்பர் கோவிலைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்ததால் சில நாட்களுக்கு முன்னே என் இன்னொரு சினேகிதியுடன் திருவையாறு கிளம்பினேன். கிளம்புவதற்கு முன் வழக்கம்போல ஐயாரப்பர் கோவில் பற்றிய விபரங்களை சேகரித்த போது பிரமிப்பின் உச்சநிலையை அடைந்தேன்! எத்தனை பிரம்மாண்டமான கோவில் இது! எத்தனை அரசர்களை இந்தக் கோவில் பார்த்திருக்கிறது! எத்தனை எத்தனை கல்வெட்டுக்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது! எத்தனை எத்தனை ஆச்சரியகரமான வரலாற்றுக்கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது!முதலில் இந்த கோவில் உருவான கதையைப்பார்ப்போம்.

இத்திருக்கோவில் முதன் முதலாக "பிரியவிரதன்" எனும் சூரிய வம்ச  சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு.  கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த  சோழப்பேரரசன் "கரிகாற்பெருவளத்தான்" இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில்,  ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி நகர மறுத்தது.  "இதன்  அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது" என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான்.  அடியில்  சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திரு உருவங்களும் யோகி  ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன.  மேலும் அகழ்ந்து ஆராய்ந்தபோது,  நியமேசர் எனும் சித்தரைக் கண்டு நின்றான். அவரும் கரிகாலனிடம்,  "தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இறைவனுக்கு கோவில் எடுப்பாயாக" எனக் கூறி எவராலும்  வெல்வதற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின்  குளம்படியில் கிடைக்குமென்று கூறி என அருள் புரிந்தார்.  அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில்  கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான்.  கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே  சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில்  கட்ட செய்தான். கோவிலின் உள்ளே  கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதால் பிரகாரம் சுற்றக்கூடாது என்ற ஐதீகமும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் -கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் இவற்றிற்கு சாட்சியாக உள்ளன.

``குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி-வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.``

காடவர்கோன் நாயனார் பாடிய பாடலுடன் நான் திருவையாறுக்குள் நுழைவோம்!

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப்பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், இராசராச வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் அருள் நிறைந்த தரிசனத்தால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றான். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் நாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியும் அருளினார்.

அத்துடன் நில்லாது, இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார்.

சித்திரைப்பெருந்திருவிழா:

இது சித்திரைமாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப்பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, திருக்கண்டியூரார் நகைகள் வழங்க, திருப்பழனத்தினர் பழங்கள் வழங்க, திருப்பூந்துருத்தியினர் பூக்கள் வழங்க, திருச்சோற்றுத்துறையினர் சோறு வழங்க, திருநெய்தானத்தினர் நெய் வழங்க, திருவேதிக்குடியிலிருந்து வேதியர் வர அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது சப்தஸ்தானத் திருவிழா என்பர். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.  திருமழப்பாடியில் நந்திதேவருக்கு நடைபெறும் திருமணத்தை நடத்திவைக்க ஐயாறப்பன் கிளம்பும் நந்திதேவர் திருமண விழாவும் சித்திரைத் திருவிழாவும் இவ்வூரின் பெருவிழாகள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. இது நந்தி தேவருடைய திருமண ஊர்வலமாக கருதப்படுகின்றது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன. தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழு ஊர்களையும் சுற்றிவரும் காட்சி அற்புதமானதொன்றாகும்.

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகருடன் அருணகிரி நாதர், பட்டிணத்தார், ஐயடிகள் காடவர்கோன், முத்துசாமி தீட்சிதர், வள்ளலார், தியாகராஜர் உள்ளிட்ட பலரால் பாடப்பெற்ற தலமிது.

அடுத்த வாரம் கோவிலுக்குள் செல்வோம்!

தொடரும்.....

Thursday 13 April 2017

உறவுகளை இணைக்கும் பாலங்கள்!!

பழைய ஃபைல்களை சுத்தம் செய்து கொன்டிருந்த போது முக்கியமான கடிதங்கள் அடங்கிய ஃபைல் கண்ணில் பட்டது. அதை எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடிதமாய் படிக்க ஆரம்பித்த போது மனம் பல வருடங்களுக்குப்பின் போய் விட்டது.
எத்தனை எத்தனை உணர்வுக்கலவைகள்!

அந்த நாட்களில் மன உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த கடிதங்கள் தேவைப்பட்டன‌. கடிதங்கள் தான் உறவுகளை இணைக்கும் பாலங்களாக விளங்கின.சின்ன வயதில் பொங்கல் திருநாளின் போது நானும் என் தங்கையும் பொங்கல் கரும்பு எல்லாவற்றையும் சுவைத்து விட்டு சீக்கிரமே வெளியில் வந்து விடுவோம். தபால்காரர் பொங்கல் அன்றைக்கு வர வழக்கத்தை விட தாமதம் ஆகும். இருந்தாலும் அவரது வருகைக்காக கடும் தவம் இருப்போம். அவர் அருகே வர வர ஒவ்வொரு படியாய் இறங்கி யார் முன்னால் நிற்பது என்பதில் பெரிய போட்டியே நடக்கும்.

பல வருடங்கள் அவற்றையெல்லாம் சேமித்து ஒரு பெரிய ஆல்பமே வைத்திருந்தேன் நான். வெளி நாட்டில் வாழ்ந்த போதிலும் துணைக்கு ஒரு உறவினர் பையனை அழைத்துக்கொண்டு தமிழ்க்கடைகள் அனைத்திலும் ஏறி இறங்கி பொங்கல் வாழ்த்துக்கள் வாங்குவேன். ஒரு முறை 64 பொங்கல் வாழ்த்துக்கள் வாங்கிய ஞாபகம் இருக்கிறது.

என் மாமாவிற்கு திருமண நிச்சயம் முடிந்து பல மாதங்கள் கழித்துத்தான் திருமணம். அஸ்ஸாமிலிருந்த அவர் கடிதங்கள் அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் ரோஜா இதழ்கள் கூடவே வருமாம்! அக்கா வெட்கத்துடன் சொல்லுவார்!

லண்டன் ஆங்கில மீடியத்தில் வெளிநாட்டில் படித்துக்கொன்டிருந்த என் மகனை ஈராக் போர் காரணமாக ஒரு வருடம் தஞ்சை டான் பாஸ்கோவில் சேர்க்க வேண்டியதாயிற்று. முதல் முதலாய் தமிழ் கற்று 'அம்மா, நான் மனப்பாடமாக திருக்குறளை எழுதியிருக்கிறேன் பாருங்கள்!' என்று என் மகன் சிறு வயதில் மிக சந்தோஷமாக அனுப்பிய கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது!!

முன்பெல்லாம் என் மாமியார் வெளி நாட்டில் வாழும் எங்களுக்கு அனுப்பும் கடிதங்களில் முதல் பக்கம் முழுவதும் நலம் விசாரித்தும் ஊரிலுள்ளவர்களின் நலத்தை அறிவித்தும் நிரம்பியிருக்கும்! அது மாதிரியெல்லாம் இனி யார் கடிதம் எழுதப்போகிறார்கள்?

எத்தனை கடிதங்கள் அப்போதெல்லாம் இனிப்பையும் அதிர்ச்சிகளையும் தாங்கி வந்திருக்கின்றன! அப்போதெல்லாம் காதலுக்கும் இந்தக்கடிதங்கள் தானே தூதுவர்கள்?

எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் அவரின் சித்தப்பா தொண்டையில் புற்று நோய் வந்து சாப்பிட்டதெல்லாம் ஒவ்வொரு முறையும் வெளியே வந்த நிலையில் எங்கள் நண்பர் தன் கஷ்டங்களையெல்லாம் மீறி சித்தப்பாவை காப்பாற்ற எவ்வளவோ பாடுபட்டார். கடைசியில் அவரின் சித்தப்பா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். 'என்னைக் காப்பாற்ற முயற்சித்து உன் சேமிப்பையெல்லாம் செலவழிக்காதே. இனி நான் உயிரோடு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. உன் சின்னமாவை மட்டும் காப்பாற்று' என்று எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.

இப்படி மன உணர்வுகளை வெளிப்படுத்த அன்று கடிதங்கள் தான் அனைவருக்கும் துணையாக இருந்தன. சிவாஜி கூட ஒரு படத்தில் பாடியிருப்பார் ' நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்!
அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல, எண்ணம்!' என்று!!

என் பாட்டியின் தகப்பனார் என் பாட்டிக்குத் திருமணம் செய்வித்தபோது ஒரு நான்கு பக்க கடிதம் எழுதி தன் மகளுக்குக் கொடுத்தார். அதை நான் இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். அதில் எப்படியெல்லாம் மாமியார், மாமியாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேன்டும், கணவரிடம் எப்படியெல்லாம் கடமையுணர்வுடன் நடந்து கொள்ள‌ வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எழுதி, ' இதுவரை இவர்களின் மகள் என்று சொன்ன காலம் போய் இவளின் பெற்றோரா இவர்கள் என்று அனைவரும் பெருமிதப்படும்படி நீ நடந்து கொள்வதில் தான் எனக்குப் பெருமை இருக்கிறது!' என்று முடித்திருந்தார்கள். அதில் ஒரு வாசகம் என்னை மலைக்க வைத்தது. " உனக்கு நான் போட்டிருக்கும் நகைகள் என் கெளரத்திற்காகவும் உன் மதிப்பிற்காகவும் போட்டவை. அவ்வளவு தான். ஆனால் அவை என்றும் உன் புகுந்த வீட்டிற்கு உன் கணவருக்குச் சொந்தமானவை. உன் கணவர் உன்னை ஏதாவது ஒரு நகையைக் கழற்றித்தரச்சொன்னால் சிறிது கூட மன சலனமோ அல்லது முகச்சுருக்கமோ இல்லாமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும். அது தான் ஒரு நல்ல மனைவிக்கு அழகு!" எப்படிப்பட்ட கடிதம் இது!

இப்படிப்பட்ட, அன்பையும் கடமையும் தாங்கி வந்த‌ கடிதங்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியுமா? இத்துடனிருக்கும் கடிதத்தைப்பாருங்கள்.காலஞ்சென்ற குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி எழுதியிருக்கிறார், ' ஏதேனும் ஒரு காரணத்தினால் தபால் நிலையங்களெல்லாம் இழுத்து மூடப்பட்டு விட்டால் உலகமே நிலை குத்திப்போய் விடும்' என்று! கடிதமென்பது எத்தகைய சிறப்புகளைக்கொண்டது என்று அவர் எப்படியெல்லாம் விவரித்திருக்கிறார் பாருங்கள்!!

கடிதங்கள் என்று நினைக்கும் போதே நிச்சயம் இந்த இரண்டு பாடல்களும் நினைவில் வரும் எல்லோருக்கும்!


விரிவான கடிதங்கள் போய் சுருக்கமான ஈமெயில்கள் வந்தன. அப்புறம் சின்ன சின்ன மெஸேஜ்கள்! அவைகளும் தேய்ந்து போய் மொபைல் ஃபோன் வந்தன! அப்புறம் உலகமும் உள்ளங்களும் சுருங்கியே போய் விட்டன! அப்புறம் மொபைல் ஃபோனில் பேசுவதும் இப்போதும் சுருங்கி விட்டன! சார்ஜ் தீர்ந்து போய் விட்டது, கிரெடிட் இல்லை, கனெக்க்ஷன் இல்லை என்று பல காரணங்கள்! மொத்தத்தில் உறவுகள் எல்லாமே சுருங்கிப்போய் விட்டன! இல்லை, மனங்கள் தான் மிகவும் சுருங்கிப்போய் விட்டன!