சில நாட்களுக்கு முன் எங்கள் குடும்ப நண்பரின் பெண்ணுக்கு பிறந்திருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக இங்குள்ள மருத்துவ விடுதிக்குச் சென்றிருந்தேன். அன்று காலைதான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தது. நான் அன்று மாலை சென்றிருந்தேன்.
மயக்கம் தெளிந்த நிலையில் சோர்வாகப் பேசிக்கொண்டிருந்தது அந்தப் பெண். சில வினாடிகளில் தலைமை நர்ஸ் வந்து சற்று சாய்ந்தாற்போல அமர்ந்து குழந்தைக்குப்பால் புகட்டச் சொன்னார். அந்தப் பெண் உடனே பதறி ‘நான் எப்படி இப்போது பால் தர முடியும். இன்னும் வலி தாங்க முடியவில்லை’ என்றது. அந்த நர்ஸ் ‘உன் குழந்தைக்கு நீதான் கஷ்டப்பட்டு பால் தர வேண்டும். கையை ஊன்றி கொஞ்சம் சாய்ந்து உட்கார். நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன். நீயேதான் எழுந்து உட்கார வேண்டும்’ என்றார். உதவி செய்ய முயன்ற அந்தப் பெண்ணின் அம்மாவையும் தடுத்து விட்டார். அந்தப்பெண் சிரமப்பட்டு சாய்ந்து அமர்ந்து தன் குழந்தைக்குப் பாலூட்ட முன் வந்ததைப் பார்த்தவாறே நான் வெளியே வந்தேன்.
அந்தப் பெண் மூன்றாம் நாளே வீட்டுக்கு வந்து ஒரு வாரத்தில் நன்கு நடக்க முடிந்ததோடு மட்டுமல்லாது தன்னுடைய, தன் குழந்தையின் தேவைகளை யாருடைய உதவியுமில்லாது பார்த்துக் கொள்ள ஆரம்பித்தது.
மனசு உடனேயே நம் ஊரை நினைத்துக் கொண்டது. இதுவே நம் ஊரானால் என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்! குழந்தை பெற்ற பெண்னைத் தாங்குவதாக நினைத்து, மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுவதற்கு பதிலாக பிரசவமான பெண்ணையும் ஒரு குழந்தையாக கவனித்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்!
பொதுவாகவே நோயுற்ற ஒருவரைப் பார்க்கப் போகும் மனிதர்களில் எத்தனை பேர் அவருக்குத் தைரியம் கொடுக்கிறார்கள்? அவர் என்னவோ உயிருக்குப் போராடுவது போல ‘ உனக்கா இப்படி ஆக வேண்டும் ? என்ற அழுகையுடன் சிலர் கட்டிப் பிடிப்பார்கள். நோயாளியும் அது வரை தைரியமாயிருந்தவர் தான் வாழ்க்கையின் விளிம்புக்கே வந்து விட்டதுபோல கண் கலங்கி விடுவார். இன்னும் சிலரோ ‘ இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கு வந்தது. கடைசி வரைக்கும் அவர் பிழைக்கவேயில்லை’ என்று புலம்பும் புலம்பலில் நோயாளிக்கு அடி வயறு கலங்கும். இன்னும் சிலர் தனக்குத் தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவை அந்த இடத்தில் உபயோகிப்பார்கள். ‘ டாக்டர் இந்த மருத்தையா கொடுத்திருக்கிறார்? இது சரி கிடையாதே? அலர்ஜி அல்லவா உண்டாகும்?’ என்று அவர் பேசுவதைக்கேட்டு நோயாளிக்கு அதுவரை தனக்கு சிகிச்சை செய்து வந்த டாக்டரிடம் இருந்து வந்த நம்பிக்கை ஆடிப்போகும். இன்னும் சிலர் ஏற்கனவே கவலையுடன் இருக்கும் நோயாளியிடம் தன் குடும்பக்கவலைகளையெல்லாம் கூறிப் புலம்புவார்கள்.
நானும் பார்த்து விட்டேன், நிறைய பேர் அதுவரை காப்பியே குடிக்காதவர்போல் நோயாளியைப் பார்க்கப்போகும் இடத்தில்தான் உட்கார்ந்து காப்பி, டீ என்று வெளுத்து கட்டுவார்கள். நோயாளிக்கு உதவியாக இருக்கும் நபருக்கு பார்க்க வருபவர்களுக்கு காப்பி வாங்கி வந்து தரவே நேரம் சரியாக இருக்கும். அதே போல நோயாளியின் கட்டிலில் தானும் அமர்ந்து கொண்டு நோயாளிக்குக் கொஞ்சம்கூட அசைய இடம் கொடுக்காமல் ஆக்ரமித்து அவஸ்தைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்து எத்தனையோ தடவைகள் சலிப்படைந்திருக்கிறேன்.
இன்னும் சில இடங்களில் தனியறை வாங்கிக் கொண்டு உள்ளே பிரியாணி வாசம் வர சமைத்துக்கொடுப்பதையும் நான் பார்த்து அசந்து போயிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த ஒருத்தர் மனைவியை சரியாக கவனிக்கவில்லை என்று பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த டாக்டரிடம் சண்டை போட, கோபமடைந்த டாக்டர் உடனே வெளியேறி பிரசவம் சிக்கலில் மாட்டிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
இன்னும் சிலர் நோயாளியிடம் அவரின் நோயைப்பற்றி அலசி கேட்கும் கேள்விகள் அவரை மிகவும் சங்கடத்திற்குள்ளாகி விடும். மற்றவரின் அந்தரங்கத்தில் சம்பந்தமில்லாது தலையிடுவது எத்தனை அநாகரிகம் என்றுகூட நம் மனிதர்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நாம் பார்க்கச் செல்வதே அவருக்கு மன ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதற்குத்தான். மருத்துவ சிகிச்சை ஒரு பக்கம் அவர்களை பாதி குணப்படுத்துமென்றால் மீதிப்பாதியை அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் உற்சாகமும் தைரியமும் தான் குணபப்டுத்தும். நம் ஊரில் எப்போது இந்த நாகரிகம் எல்லோருக்கும் முழுமையாக வரும்?