Monday 31 October 2022

முத்துக்குவியல்-68!!!

 சாதனை முத்து

ஷ்ரேயா சித்தனாகெளடர்

2016ல் இவர் மணிப்பாலில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போது எல்லா இளம் பெண்களைப்போல இவருக்கும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஆயிரம் இருந்தன.

ஆனால் இவர் வாழ்க்கையில் நடந்தேறிய விபரீதங்கள் இவர் கனவுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தின் மீது அவர் கொண்டிருந்த ந‌ம்பிக்கைகளையும் புரட்டிப்போட்டு தன் காலடியில் மிதித்து நசுக்கியது.

அதே 2016ம் வருடம் பூனாவிலுள்ள தன் பெற்றோரிடம் சென்று தன் விடுமுறையை சந்தோஷமாகக் கழித்து விட்டு மணிப்பாலுக்கு ஒரு பஸ்ஸில் ஏறினார் ஷ்ரேயா.


விடியற்காலையில் ஓட்டுனருடைய தவறினால் பஸ் தலை குப்புற புரண்டு விழுந்து சற்று தூரம் இழுத்துக்கொன்டே போனதால் ஷ்ரேயாவின் இடது முன்னங்கை மோசமாக நசுங்கி நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்க, வயிற்றிலும் வலது முழங்காலிலும் சதை கிழிந்து தோலுரிந்து தொங்கிகொண்டிருக்க, முகமும் தலையும் கூட காயங்களால் நிரம்பியிருந்தன. மணிப்பாலில் கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே தன் இரு முன்னங்கைகளும் வெட்டி எடுக்கப்பட்டதை இவரால் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சாப்பிட்டதை விழுங்குவதும் மூச்சு விடுவதும் நடப்பதும் தவிர கழிவறை செல்வது உள்பட மற்றெல்லா செயல்களுக்கும் அவர் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார் ஷ்ரேயா. 


' கைகள் தானே போயின, கால்கள் நன்றாக இருக்கின்றன, மன உறுதியும் இருக்கிறது ' என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னிரக்கத்திலிருந்தும் தாங்க இயலாத சோகத்திலிருந்தும் வெளியே வர ஆரம்பித்தார் ஷ்ரேயா. சில நாட்களிலேயே தன் கால் விரல்களால் தொலைபேசி, டிவி ரிமோட், லாப்டாப் முதலியவற்றை இயக்க ஆரம்பித்தார். உலோகத்திலான கைகள், மரத்திலான கைகள் உபயோகித்து பார்த்தாலும் அவற்றின் கனமும் அவற்றால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் அவரால் தாங்க முடியவில்லை. முடிவில் பெற்றோர் கொடுத்த ஊக்கத்திலும் தைரியத்திலும் கைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். சுற்றி இருந்தவர்கள், உறவினர்கள், மருத்துவர்கள், நண்பர்கள் என்று பலரும் அவரது முடிவு தவறானது என்று உறுதியாகச் சொன்னாலும் இவர் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் கடுமையான பக்க விளைவுகள் தரும் மருந்துகளை எடுக்க வேண்டுமென்பதும் புதிய கைகள் முழுவதுமாக இயங்க கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இவருக்கு தெரிந்த உண்மை! ஆனாலும் அந்த கடுமையான சோதனைகளைத்தாங்க அவர் தன் மனதை தயார்ப்படுத்திக்கொண்டு, 2017ல் கொச்சியிலுள்ள அம்மா மருத்துவ மனையில் மருத்துவர். சுப்ரமணிய ஐயரிடம் தனக்கு கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்தார். 

பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கைகளை மட்டும் தானம் செய்வதில்லை. அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று சொல்லும் இவர் பொதுவாக நிறைய சமூகப்பிரிவுகளில் கைகளை தானமாகக் கொடுப்பது மட்டும் சரியானதில்லை என்ற நம்பிக்கை உலவுவதாக குறிப்பிடுகிறார். 

கைகளுக்காக இவர் பதிவு செய்த அன்றே,  அன்றைய தினம் இறந்து போன இளைஞர் ஒருவரின் கைகள் தானமாகக்கிடைக்கவும் 2017, ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி 14 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடந்து மணிக்கட்டிலிருந்து முழங்கை வரையிலான கைகள் தானம் பெற்ற‌ ஆசியாவின் முதல் பெண்ணாகவும் ஆண்களின் கைகளை தானமாகப்பெற்ற உலகின் முதல் பெண்ணாகவும் இவர் மாறினார். தனக்கு தன் மகனின் கரங்களை தானமாகக் கொடுத்த இளைஞர் சச்சினின் பெற்றோரை இவர் அடிக்கடி சந்தித்து நன்றி கூறியிருக்கிறார். 


ஆண்களின் கரங்களைப்பெற்றிருந்தாலும் சில மாதங்களுக்குப்பிறகு  கைகள் பெண்ணின் கரம் போல மாறத்தொடங்கியது. கருமையான கரங்கள் தற்போது ஷ்ரேயாவின் கைகளுக்குத்தகுந்தாற்போல சிவப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளன. இந்த மாறுதலுக்கான காரணங்கள் புரியாமல் மருத்துவ உலகே வியக்கிறது!!

இசை முத்து:

ராகங்களில் ' மோகனம்' மனதை மயக்கும் ராகம் எனச்சொல்லப்படுகிறது. எல்லா ராகங்களும் எந்தெந்த வேளைகளில், நேரத்தில் பாடப்பட வேண்டும் என்ற நியதியும் உள்ளது. மோகனம் மட்டும் எந்த நேரத்திலும் பாடக்கூடிய புகழை பெற்றிருக்கிறது. அதனால் தானோ என்னவோ திருவாசகம் கூட ' மோகன ராகத்தில்' தான் பாடப்படுகிறது. இத்தகைய பெருமை பெற்ற மோகன ராகத்தை புகழ் பெற்ற வயலின் மேதை திரு. கார்த்திக் ஐயர் எப்படி ஆலாபனை செய்கிறார் என்பதை கேட்டு ரசியுங்கள்!

Saturday 8 October 2022

பொன்னியின் செல்வன் - ஒரு விமர்சனம்!!!

 திரைப்படம் நடிகர் கமலஹாசனின் குரலில் ஒரு முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. கமலின் குரலில் வயோதிகம் தெரிவது ஒரு ஆச்சரியம். உணர்ச்சி பாவங்களோ, விறுவிறுப்போ, கம்பீரமோ அந்தக்குரலில் இல்லை.


ஆதித்த கரிகாலனின் கட்டளையின்படி வந்தியத்தேவனின் பயணம் தஞ்சை செல்ல ஆரம்பமாவதிலிருந்து படம் தொடங்குகிறது. “ பொன்னியின் செல்வன்” புதினத்தில் வந்தியத்தேவன் தன் குதிரையின் மீது அமர்ந்தவாறே வீராணம் ஏரிக்கரையில் நின்று இயற்கை அழகில் லயித்து ரசிப்பதில் கதை தொடங்கும். மணிரத்னமோ அழகிகளின் நடனத்துடனும் அதற்கேற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசையுடனும் பாலைவனம் போன்ற மண்ணின் பின்னணியில் தொடங்குகிறார். இதிலிருந்தே கதையை நினைத்துக்கொண்டு படத்தைப் பார்க்கக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் திரைப்படம் ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்கிறது. வழி நெடுக வந்தியத்தேவனின் பயணத்தில் விளைந்த சாகசங்களும் சண்டைகளும் சந்திப்புகளும் உணர்ச்சி பிரவாகங்களும் தான் உயிர்துடிப்பாய் ‘ பொன்னியின் செல்வன்’ புதினத்தில் பரிமளித்துக்கொண்டிருக்கும். அந்த உயிர் துடிப்பு படம் முழுவதும் இருந்ததா என்று கேட்டால் நிறைய காட்சிகளில் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. 

வந்தியத்தேவன் தஞ்சை செல்லும் வழியில் கடம்பூர் சென்று பின் அங்கிருந்து குடந்தை சென்று தற்செயலாக குந்தவையை ஜோதிடர் இல்லத்தில் சந்தித்து பின் தஞ்சை செல்லும் வழியில் நந்தினியை சந்தித்து, அதன் பின் தஞ்சையில் சுந்தர சோழரை சந்திப்பது, பின் குந்தவையை தனியே சந்திப்பது, பின் சிறையில் அடைக்கப்படுவது, குந்தவையும் வந்தியத்தேவனும் மறுபடியும் சந்திப்பது,  ஈழம் சென்று தன் தம்பி அருள்மொழி வர்மனை கூடவே அழைத்து வரும்படி பணிப்பது என்று கதை தொடரும். 


திரைப்படக்கதையோ புதினத்தின் காட்சிகளை கொஞ்சம் குறைத்து, கற்பனைகளை கூட்டி நகருகிறது. ஆனாலும் சுவாரஸ்யத்திற்கு பங்கமில்லாமல் ஆரம்பித்ததிலிருந்து வேகமாக கதை நகர்ந்து மிக அருமையான காட்சியமைப்பில் அடுத்த பகுதிக்கான ஒரு ‘ தொடரும்  ‘ போட்டிருக்கிறார்கள்.

நடிப்பு என்று பார்த்தால் ஆழ்வாக்கடியானாக நடிக்கும் ஜெயராமின் நடிப்பு அட்டகாசம்! வந்தியத்தேவனாக கார்த்தி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் மிகவும் நளினமாக தன் காதாபாத்திரத்தை செய்திருக்கிறார். அவரின் அழகு அதற்கு உதவி செய்கிறது. திரிஷா அந்த அளவு என்னை கவரவில்லை. அருள்மொழித்தேவனாக ஜெயம் ரவி! அவரின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தாலும் இந்த ராஜ கதாபாத்திரத்திற்கான கம்பீரமான குரல் அவருக்கில்லை! இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் ‘ ராஜ ராஜ ராஜ கம்பீரக்குரலை’ நினைத்து ஏக்கமாக இருக்கிறது! கடைசியில் விக்ரம்! அவரின் நடிப்பு பிரமாதம்! “ இந்த கள்ளும் போரும் ரத்தமும் அவளால்தான், அவளுக்காகத்தான்! “ என்று குமுறும்போது மிக அழகாக நடிக்கிறார்! அப்படியே இளம் வயது நந்தினியையும் இளம் வயது ஆதித்த கரிகாலனையும் நினைத்துப்பார்க்கையில் அந்தக் காட்சிகளின் இளமையும் அழகும் சுகமான பின்னணி இசையும் கலந்து கொடுத்த இனிமையில் நாம் லயித்துக்கொண்டேயிருக்கும்போது நம் தலையில் அடிப்பது போல ரஹ்மானின் இசையில் பாடலும் விக்ரம் ஆடுவதும் பின்னாலேயே வந்து அந்த இனிமையையே கலைத்து விடுகிறது! 

அப்புறம் பூங்குழலி! அவரின் நடிப்பு மிக அருமை! அபாரம்!


புதினத்தில் வானதி மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். அது போல் சுந்தர சோழரின் மனைவி வானவன்மாதேவி சரித்திரத்தில் இடம் பெற்றவர். இவர்களது கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது.  

போர்க்கள காட்சிகள் ஒரு பிரமிப்போ அல்லது வியூகங்களோ இல்லாமல் மிகச் சாதாரணமான காட்சிகளாகத்தான் நகர்கின்றன!

அப்புறம் பாடல்கள்! எந்த ஒரு பாட்டிலும் இனிமையில்லை! அதுவும் கடம்பூர் மாளிகையில் நடக்கும் ‘  ' தேவராளனின் ஆட்டம் '  எடுக்கப்பட்டிருக்கும் நடன அமைப்பும் பாடலும் எனக்கு ‘ வீரபாண்டி கோட்டையிலே’ பாடல் தான் நினைவுக்கு வந்தது. கருமையும் ரத்தமுமாய் வேஷம் பூசி ஆடியவர்களும் பயமுறுத்தினார்கள், பாடலும் பயமுறுத்தியது, ஒலித்த சப்தங்களும் பயமுறுத்தின.

கர்ணனின் ‘ கண்கள் எங்கே’ பாடலும் உத்தம புத்திரனின் ‘ முல்லை மலர் மேலே’ பாடலும் அப்படியே நினைவில் எழுந்தன! ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு நம்மை மயங்க வைத்த அந்த இனிமையான பாடல்கள் போல அல்லவா ‘ பொன்னியின் செல்வன்’ படத்தில் அமைந்திருக்க வேண்டும்? நவீன இசையமைப்பு எப்படி சரித்திர படங்க்களுக்கு பொருத்தமாக இருக்கும்? 


புதினத்தில் மிகவும் புகழ் பெற்ற காட்சியே வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் காட்சிகள் தான்! அதுவும் இருவரும் தனியே முதன்முதலாக சந்திக்கும் காட்சியில் கல்கியின் வர்ணனையின் அழகை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அத்தனை அற்புதமாக இருக்கும். பிறகும் குந்தவை வந்தியத்தேவனை சிறையில் சந்திக்கும்போது ‘ என் மனச்சிறையிலிருந்து உங்களுக்கு என்றுமே விடுதலை கிடையாது’ என்று சொல்லுவாள். அந்த அழகான காட்சிகளை மணிரத்னம் நீக்கி விட்டார். இந்த சந்திப்பை பத்தோடு பதினொன்றாக்கி விட்டார். 

ஐந்து பாகங்களாக இருக்கும் ‘ பொன்னியின் செல்வனை’’ 3 மணி நேரம் பார்க்கும்படியான திரைப்படமாக உருவாக்குவதென்பது மிகவும் சிரமமான காரியம்! 

இதைத்தான் நிறைய பேர் சொல்லுகிறார்கள். ஆனாலும் எது மிகச் சிறந்த காட்சியோ, அதை தவிர்த்து விடும்போது கதையின் உயிர்த்துடிப்பும் அல்லவா குறைந்து போகிறது?

 

[ பாரதி பாஸ்கர் இந்த வீடியோவில் கல்கி எப்படியெல்லாம் பூங்குழலியைப்பற்றி விவரித்து அருமையாக எழுதியிருக்கிறார் என்பதை மிக அழகாய் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள்! ]

கடைசி காட்சி! கரிய நிறத்தில் சூழ்ந்திருக்கும் மேகங்களிடையே, கொந்தளிக்கும் நடுக்கடலில் வந்தியத்தேவனும் அருள்மொழியும் தங்கள் விரோதிகளுடன் சண்டையிடும் காட்சி அப்படியே நம்மை ஸ்தம்பிக்க வைக்கிறது. ரவிவர்மனின் ஒளியமைப்பு அட்டகாசம்! 

நான் முன்பேயே சொல்லியிருப்பது போல உண்மைக்கதையை நினைத்துக்கொண்டு சென்றால் படத்தை ரசிக்க முடியாது. நம் மனதிலும் கனவிலும் பல காலமாக உறவாடியவர்களை சந்திக்கப்போகிறோம் என்ற உணர்வுடன் மட்டும் தான் படத்தைப் பார்க்கச் செல்ல வேண்டும்!!!