பணியாரங்களில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பும் காரமுமாய் நிறைய பண்ண முடியும். அரிசியில் மட்டுமல்ல, ரவா, சிறு தானிய வகைகள், சோளம், கோதுமை, ராகி என்று நிறைய பணியார வகைகள் சமையல் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதில் ரொம்ப சுலபமானது இட்லி மாவில் செய்வது தான். இந்த பாசிப்பருப்பு பணியாரமும் அந்த முறையில் தான் செய்ய வேண்டும். ரொம்பவும் வித்தியாசமான சுவையுடன் காலை நேரத்தில் களை கட்டும் டிபன் இது. இப்போது பாசிப்பருப்பு பணியாரம் செய்முறையைப் பார்க்கலாம்.
பாசிப்பருப்பு பணியாரம்:
தேவையான பொருள்கள்:
நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கடுகு- 1 ஸ்பூன்
உடைத்த உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை- 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- ஒரு கை
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2
இலை இலையாக வேக வைத்த பாசிப்பருப்பு- அரை கப்
இட்லி மாவு- 3 கப்
தேவையான உப்பு
பணியாரம் செய்யத்தேவையான எண்ணெய்
செய்முறை:
வாணலியை சூடு பண்ணி 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். அது வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காயம் போட்டு இலேசாக சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை, மல்லி போட்டு வதக்கவும். இலேசாக சிவந்ததும் வெந்த பாசிப்பருப்பை போட்டு தேவையான உப்பு போட்டுக்கலக்கவும். தீயை விட்டு இறக்கி ஆற வைக்கவும். ஆறினதும் இட்லி மாவை விட்டு நன்கு கலக்கவும். இட்லி மாவில் உப்பு இருக்குமென்பதால் மேலும் உப்பு சேர்க்கத் தேவையில்லை.
பணியாரச்சட்டியை சூடு பண்ணவும். மிதமான சூடு இருந்தால் போதும்.
ஒவ்வொரு குழியிலும் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு பணியாரங்களை சுட்டு எடுக்கவும். நன்றாக வெந்து இலேசான சிவந்த நிறம் வரும்போது பணியாரங்களை எடுத்தால் சரியாக இருக்கும்.
தொட்டுக்கொள்ள தக்காளி சட்னியும் தேங்காய் சட்னியும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.