Tuesday 8 May 2018

முத்துக்குவியல்-51!!!

அசத்தல் முத்து:

சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின் எதிர்ப்புறம் இருக்கும் ராகவன் தெருவில் அமைந்துள்ளது. டாக்டர் சையது சலாலுதின் பத்து ரூபாய் கட்டணத்தில் ஏழை மக்களுக்கு வைத்தியமும் இலவச மருந்துகளும் அளித்துக்கொன்டிருக்கிறார். படித்து முடித்து வந்த போது ' தினமும் மூன்று பேருக்காவது இலவச வைத்தியம் செய்ய் வேண்டும்' என்ற தந்தைக்குக் கொடுத்த உறுதி மொழியை இன்றளவும் கடைபிடித்து வருகிரார். இலவசமாக கண் அறுவை சிகிச்சையும் செய்து வருகிறார்.

அனுபவ முத்து:

சமீபத்தில் நெருங்கிய உறவினர்   இதய பைபாஸ் சர்ஜரி  செய்து கொண்டார். பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலிலிருந்து நரம்பை வெட்டி எடுத்ததால் கால் புண் ஆறுவதற்கு எப்போதுமே சில நாட்கள் பிடிக்கும். ஆனால் இவருக்கு புண் ஆறாமல் இருந்ததுடன் சீழ் வடிந்து கொண்டிருந்தது. பல நாட்கள் மருத்துவத்திலும் சரியாகவில்லை. கடைசியில் அவர் தடவிக்கொண்டிருந்த ஆயின்மெண்ட் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு அதை நிறுத்தியதும் கால் புண் ஆறி விட்டது. அதே போல என் சகோதரிக்கு சமீபத்தில் இடது கையிலிருந்து தோள் வரை மரத்துப்போவது போலும் நெஞ்சில் அதன் பாதிப்பும் இருந்ததால் இதயம், மூளைக்கான அனைத்து பரிசோதனைகளும் செய்தும் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் தூக்கத்திற்காகவும் ரிலாக்ஸ் பண்னவும் அவர் அதுவரை சாப்பிட்டுக்கொண்டிருந்த மாத்திரை தான் காரணம் என்று கண்டு பிடித்தார்கள். பொதுவாய் ஒரு பிரச்சினை என்று மருத்துவரிடம் செல்லுமுன் நாம் எடுத்துக்கொன்டிருக்கும் மருந்துகள் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பது மட்டுமல்லாது அதற்கு விளக்கமும் கேட்பது அவசியம்.


அருமையான முத்து:

ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், 19 வயதுக்குட்பட்ட தமிழக பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். ஜூனியர் அளவில் விளையாடிய இளம் வீராங்கனை என்ற சாதனையைக் கொண்டவர். தேசிய நீச்சல் வீராங்கனையாகவும் இருந்தவர் இவர்.



விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவித்த, நல்ல எதிர்காலத்தைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருந்த ப்ரீத்தியின் வாழ்வில் இடியாய் வந்தது அந்த விபத்து. 18 வயதாக இருந்த போது அவருக்கு ஏற்பட்ட விபத்தால் கை, கால் செயலிழந்து நடக்கமுடியாமல் போனார்.  1988, ஜூலை 11-ம் தேதி, கல்லூரி நண்பர்களுடன் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்று திரும்பியபோது அந்த விபத்து நடந்தது. வழியில் இருந்த ஒரு தனியார் பீச்சுக்குள் சென்று நண்பர்களுடன் கடலில் விளையாடினார் ப்ரீத்தி. நீச்சல் வீராங்கனையான போதும் வேகமாக வந்த கடல் அலையில் சிக்கிக்கொண்டு கடலுக்குள் வீசப்பட்டார். கடலில் தன்னை ஏதோ கடித்துவிட்டது என்றும் சில நாட்களில் சரியாகிவிடும் என்றே அவர் நினைத்திருந்தார். ஆனால் அவருக்கு முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட அடியின் காரணமாக அவர் கை, கால்கள் செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விளையாடித் திரிந்த கால்களை நகர்த்தக்கூட முடியாது என்ற நிலை அவரை புரட்டிப் போட்டது. ஏடாகூடமாக‌ விழுந்ததால் கழுத்து எலும்பு உடைந்து, முதுகெலும்புத் தொடர் நரம்பை கிழித்து விட்டது.
தந்தை இதயத்தாக்குதலில் இறந்து விட, தாயும் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள, 80 வயதில் பாட்டி, நோயாளியான அம்மா என்ற அந்த சூழ்நிலையில் ப்ரீத்திக்கு வாழ்க்கையைப்பற்றிய பயம் வந்தது. உறவுகள் யாருமில்லாமல் இந்தப் பிரச்சினையில் அவதியுறுபவர்கள் எப்படி வாழ்க்கையை சமாளிப்பார்கள் என்ற யோசனையில் உருவானது தான் SOULFREE என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.



இங்கே ப்ரீத்தி, தன்னைப் போல் பாதிக்கப்பட்டு தவிக்கும் உடல் ஊனமானவர்களுக்கு உதவிகள் புரிகிறார். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வு, மக்களிடையே அவர்களின் நிலை குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்குகிறார். சிலருக்கு வேலைவாய்ப்பையும் தேடி வழங்கி வருகிறார். உடல் பாதிப்புள்ள பலருக்கு பயிற்சிகள் அளித்து, ரேடியோ அறிவிப்பாளர், பேச்சு புத்தகங்கள், போன்ற பல துறைகளில் ஈடுபட முயற்சிகளும் எடுத்துள்ளார் இந்த தன்னம்பிக்கை வீராங்கனை. தனக்கு ஏற்பட்ட கோர விபத்தின் பாதிப்பிலிருந்து மீண்டதோடு மட்டுமில்லாமல், தன்னைப்போன்று, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உதவி செய்வதுடன், அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் பிரீத்தி ஸ்ரீனிவாசன். சென்ற சுதந்திர தினத்தன்று, வீரதீர செயல்களுக்காக வழங்கப்படும் ‘ கல்பனா சாவ்லா’ விருதை தமிழக அரசிடமிருந்து இவர் பெற்றார். ஒரு ராயல் சல்யூட் இவருக்கு!!

விவரங்களுக்கு:
http://soulfree.org/

ஆன்மீக முத்து:

திருச்சி சென்னை சாலையில் ‘செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ளது சிங்கப்பெருமாள் கோவில்.  நரசிம்மத்தின் முகமான சிங்கத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது இந்த ஊர்.. எஸ்.வி.கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்லவர் காலத்திய கோவில் இது. மூலவருக்கு அதிரசம், முறுக்கு, சீடை என்று படைக்கிறார்கள். முக்கியமான பிரசாதம் மிளகு தோசை. பித்தளைப்பானைகளில் இந்த தோசைகள் வைக்கப்பட்டிருக்கும்.  எண்ணெய், பொடி சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

இசை முத்து:

'மேரே டோல்னா' பாட்டைக் கேட்காதவர்கள் மிகவும் குறைவு. பின்னணிப்பாடகி ஷ்ரேயா கோஷல் பாடி அதிக புகழ் அடைந்த இந்தப்பாடல்! இசை வெள்ள‌ம் நம்மையும் அப்படியே மூழ்க‌டிக்கிறது! சமீபத்தில் மீண்டும் ரசித்த இந்த இசை நிகழ்ச்சி இதோ, உங்களுக்காக!


>