Monday 30 November 2015

பிரமிக்க வைக்கும் கண்காட்சி!!

 
ஒவ்வொரு வ‌ருடமும் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியைப்பற்றிய தகவல்களும் புகைப்படங்களும்  நான் வெளியிடுவது வழக்கம். இந்த கண்காட்சி அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது.  உலக நாடுகள் பல த‌ங்கள் அரங்கினை மிக அழகாக உருவாக்கி அதனுள் தங்கள் கலாச்சாரத்தை ஒட்டிய பொருள்களை விற்கின்றன. கோடிக்கணக்கான சதுர அடிகளில் இந்த உலக அரங்கு நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. உலகமெங்கிலிருந்தும் மக்கள் இதனைப்பார்த்து ரசிக்க எப்போதுமே வருவார்கள். ஒவ்வொரு வருடமும் 5 கோடி மக்களுக்கு மேல் வருவதாகச் சொல்லுகிறது புள்ளி விபரம். 

ஒவ்வொரு வருடமும் இதை நான் பார்த்து ரசிக்காமல் விட்டதில்லை. இந்த முறை அதிக குளிர் வருவதற்கு முன்பேயே சென்று விட்டோம். நாங்கள் மாலை 4 மணிக்கு உள்ளே சென்று இரவு 10 மணி போலத்த்ன் வெளியே வந்தோம்.  மொத்தம் 70 நாடுகள் பங்கேற்றிருந்தாலும் நாங்கள் உள்ளே சென்று பார்த்ததென்னவோ ஐந்தாறு நாடுகளின் அரங்கங்கள் மட்டுமே!! அதற்குள்ளேயே இர‌வு 10 மணியாகி விட்டது! இதை ரசிக்க இரண்டு நாட்களாவது வேண்டும்!! இனி புகைப்படங்கள்...! நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!


தூரத்திலிருந்து முகப்பு!

முகப்புத்தோற்றம் மிக அருகில்!!!

 
நுழைவாயில்!!
உள்ளே நுழைந்ததும் பிரமிக்க வைத்தது இரு புறமும் காட்சியளித்த உலக அதிசயங்கள்!!!
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை
பாரீஸ் நகரின் 'ஈஃபில் ட்வர்'!!!

 
துருக்கி நாடு!!!
இந்தோனேஷியா அரங்கம்!!

குவைத் அரங்கம்!!!
அமெரிக்க அரங்கம்!!
பாகிஸ்தானிய அரங்கம்!!
ஐக்கிய அமீரக அரங்கம்!!
நாங்கள் இரவு 10 மணிக்கு வெளியே வந்த போது, இரவில் முகப்பழகு!!!
தொடரும்!!

Wednesday 18 November 2015

முத்துக்குவியல்-39!!!!

குறிப்பு முத்து:

கரப்பான் பூச்சிகளை விரட்ட:


1. வெள்ளரி தோல்களை ஒரு அலுமிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் கிட்டே வராது.

2. 2 மேசைக்கரண்டி பேக்கிங் சோடாவையும் 3 மேசைக்கரண்டி சீனியையும் கலந்து பூச்சிகள் நடமாடும் இடத்தில் தூவினால் சர்க்கரையுடன் பேக்கிங் சோடாவையும் செர்ந்து சாப்பிட்டு கரப்பான்கள் இறந்து விடும்.

3. பிரியாணி இலையைப்பொடி செய்து தூவினாலும் இந்த மணத்திற்கு அவை கிட்டே வராது. வந்து உண்டாலும் இறந்து விடும்.

தகவல் முத்து:

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் நோபல் முதன் முதலாக டைனமைட்டை கண்டுபிடித்தார். சிறிது நாட்களில் அவர் சகோதரர் இறந்த போது, இவர் இறந்ததாக தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பிரெஞ்சு நாளிதழ், டைனமைட் கண்டு பிடித்த இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்டிருந்தது. தன் பெயர் உலக சரித்திரத்தில் தவறாக இடம் பெறப்போகிறது என்று அஞ்சினார். தீர யோசித்தவர்தன் உயிலை எழுதினார். அதன் படி, தன் சொத்துக்களில் பெரும் பங்கை இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் என்ற ஐந்து பிரிவுகளில் உலகளாவிய பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் தன் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு இறந்து போனார். நோபல் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து 1901ஆம் ஆண்டு டிசம்பர் 10ந்தேதியிலிருந்து முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முதலாக எக்ஸ்ரேயைக் கண்டு பிடித்த ராண்ட்ஜன்  பரிசு பெற்றார்.

பக்தி முத்து:

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திலிருந்து ஈசான பாகத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஈஸ்வரவாசல். பொங்கு சனீஸ்வரன் தலம் என்று போற்றப்படும் திருக்கொள்ளிகாட்டிலிருந்து திருநள்ளாறு சென்று நள மகாராஜாவைப்பிடிக்க தன் காக வாகனத்தில் சனீஸ்வரன் புறப்பட்டுச் செல்லும்போது, இரவு நேரம் வரவே காக்கைக்கு கண் தெரியாது என்பதால் ஓரிரவு காரையூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீசங்கர நாராயணர் சிவாலயத்தில் தங்கினார். சனி பகவான் ஓர் இரவுக்காலம் இங்கே தங்கியதால் இத்தலம் சனி ஈஸ்வர வாசல் என்ற பெயர் பெற்றுவிட்டது. திருவாரூரிலிருந்து நாகூர் செல்கிற வழித்தடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

குடகுமலைப் பகுதியிலிருந்து புறப்பட்டு வருகிற காவிரி, கும்பகோணத்திற்கு வரும்போது அரசலாறு வெட்டாறாகப் பாய்ந்து பிரிகிறது. தென்புலமாகப் பிரியும் வெட்டாறு திருவாரூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கங்கனாஞ்சேரிப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக வளைந்தோடுகிறது. விருத்தம் என்ற சொல்லுக்கு வட்டம், வளைப்பது என்று பொருள். இத்தலத்தில் சூரியமைந்தனாகிய சனிபகவானது அபூர்வமான கானகப்பகுதியை வளைத்தபடி வருவதால் ‘விருத்த கங்கா’ என்று பெயர் பெறுகிறது.

ஆலயத்தின் அருகில் உள்ள விருத்த கங்காவில் காலை பூஜைகளைச் செய்வதற்கு முன்பு நீராடிவிட்டு, மும்முறை ஆசமனம் செய்து, அந்த நதிக்கு காரகத்துவ பலன் தரும் சக்தியையும் அருளினான் சனீஸ்வரன் .  இத்தலத்தில் கிழக்குமுகமாக நின்று, நதியில் நீராடி வருவோருக்கு மங்களகரமான பார்வையைத் தருகிறார் என்கிறது தலவரலாறு. மாங்கல்ய பலம் குறைவாக இருப்பவர்களுக்கு நலம் அருள்வதாக நம்பிக்கை உண்டு. 

அதிசய முத்து:

ராஜஸ்தான் மாநிலத்தில் பிபலண்டரி கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் கிராமத்தில் பெண்குழந்தை பிறந்தால் 111 பழக்கன்றுகளைத் தருகிறது. இதனை அந்தக் குடும்ப உறுப்பினர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல் நட்டு பராமரிக்க வேண்டும்.  இது தவிர கிராமத்தில் 31000 வசூலித்து, அந்தக்குடும்பத்தினருக்கு 10000 ரூபாய் கொடுத்து விட்டு, மீதமுள்ள 21000 ரூபாயை வைப்பு நிதியில் வங்கியில் போடுகிறார்கள். 111 பழ மரக்கன்றுகள் வளர்ந்து பலன் தரும்போது அந்தப்பெண் குழந்தையின் வளர்ச்சிக்கும் படிப்பிற்கும் உதவுகிறது. அந்தப்பெண்ணுக்குத் திருமண‌ம்
நிச்சயமாகும்போது மொத்த வைப்பு நிதியும் தரப்படுகிறது. இந்த கிராமத்தில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 60 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் இதுவரை நடப்பட்டுள்ளன. கிராமத்தில் மரங்கள் நடுவது பெண் குழந்தைகளுக்கு மரியாதை தருவதாகும். அதோடு ஊரும் பசுமையடைகிறது என்கிறது இந்த கிராமம்! 

Monday 9 November 2015

ஆப்பிள் பாசந்தி! !!!

அனைவருக்கும் என் மனங்கனிந்த  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!வழ்க்கமான இனிப்பு வகைகளிருந்து மாறுபட்டு, வித்தியாசமான, மிக சுவையான ஒரு இனிப்பை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

பொதுவாய் பாசந்தி சாப்பிட்டிருப்பீர்கள். முன்பெல்லாம் இது மிகவும் பிரசித்தமான ஒன்று. அதுவும் வட இந்தியாவில் இது ' ரபடி' அல்லது ரப்ரி என்ற பெயருடன் இருக்கும். மதுரா நகரில் கிடைக்கும் ரப்ரி அத்தனை சுவையானது. மதுரா கோவிலுக்கு வெளியே மண் கலயத்தில் வைத்து விற்பார்கள்.


ஒரு பெரிய இரும்பு வாணலியில் பாலை ஊற்றி மெதுவான தணலில் காய்ச்ச வேன்டும் இதற்கு. பால் மெதுவாய் சுண்டிக்கொண்டே இருக்கும்போது, சுற்றிலும் படல் படலாக படர்ந்திருக்கும் பாலை சுரன்டி சுரண்டி அந்தப்பாலில் போட்டுக்கொன்டேயிருப்பார்கள். இறுதியில் பால் நன்கு கெட்டியானதும் சீனி கலந்து கிளறி குங்குமப்பூ, மிகக் குறைந்த அளவில் ஏலம் போட்டுக்கிளறி வேலையை முடிப்பார்கள். இதுவே ரப்ரி ஆகும்.

 

நம் தமிழ்நாட்டிலும் இதே செய்முறை தான். ஆனால் பெயர் என்னவோ பாசந்தி என்று ஆகி விட்டது. அதையே ஆப்பிள்கள் வைத்து செய்வது தான் ஆப்பிள் பாசந்தி!

இப்போது ஆப்பிள் பாசந்தி செய்முறையைப் பார்க்கலாம்!

ஆப்பிள் பாசந்திதேவையானவை:

ஆப்பிள் 3
ஏலப்பொடி 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை சில‌
நெய் மூன்று மேசைக்கரண்டி
சீனி அரை கப்
தண்ணீர் சேர்க்காத பால் 8 கப்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை

செய்முறை:

ஆப்பிள்களைத்துருவவும்.
இந்தத்துருவலை சிறிது வெந்நீரில் போட்டு வைக்கவும்.
முந்திரி, பாதாம்பருப்பு, திராட்சையை நெய்யில் இளவறுவலாக வறுத்து வைக்கவும்.
பாலை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி நிதானமாகக் காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டுமளவிற்குக் காய்ச்சவும்.
பின் ஆப்பிள் துருவலைச் சேர்த்து சமைக்கவும்.
இக்கலவை சற்று கெட்டியானதும் சீனியை சேர்த்துக் கிளற‌வ்ம்.
ஏலம், பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து சிறிது நேரம் கிளறி இற‌க்கவும்.
சுவையான ஆப்பிள் பாசந்தி தயார்!!

நன்றி கூகிள்