Saturday 31 December 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



                                                                    
                                                 வாழ்க்கையென்ற நந்தவனத்தில்
                                                 வாச மிகு மலர்கள் மலரட்டும்!




                                                  வாழ்க்கை என்ற வானவில்லின்
                                                  வண்ணங்கள் அழகாய்ப் பதியட்டும்!!




                                                   வாழ்க்கை முழுதும் அன்பும் மனிதமும்
                                                   வான்மழையாய் எங்கும் பொழியட்டும்!!




                                         அன்பான தோழமைகள் அனைவருக்கும்
                                         உளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!





Tuesday 27 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்- பகுதி-2

80 வயதைக் கடந்த பின்பும் இன்னும் தன் வீட்டிற்காகவும் தம் மக்களுக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது சிலரின் தலையெழுத்தாக மாறி விட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். தன் சொந்த மகள் இல்லத்திலேயே, மரணம் விரைவில் வராதா என்று வேண்டி காத்திருக்கும் என் சினேகிதியொருத்தரைப் பற்றி எழுதி என் மன பாரத்தை கொஞ்சம் இங்கே குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

இவர் சிறு வயதில் தந்தைக்கு மிகவும் செல்லப் பெண்ணாக வசதியாக

வளர்ந்தவர். திருமணம் என்ற ஒன்று ஆன பிறகு தான் இவரின் வாழ்க்கையே தடம் புரண்டு போனது. ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, தன் கணவரின் சந்தேகத்தீயில் அவ்வப்போது மனம் கருகிப் போனார் இவர்.

கணவருக்கு வெளி நாட்டில் நல்ல வேலையென்றாலும், தொட்டதெற்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் மனப்பான்மையால் வேலையை விட்டு விட்டு தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் தனக்குப் பிடித்த மாதிரியான தொழிலை ஆரம்பித்தார். நிர்வாகத்திறமையின்மையால் அதுவும் வீணாக அன்றைக்கு ஆரம்பித்தது தான் குடும்பத்தில் வறுமை. மகளுக்கு படிப்பில் இருந்த அளவு மகனுக்கு ஆர்வமில்லாததால் சாதாரன வேலைகளில் அவனும் கால் பதிக்க ஆரம்பித்தான். வாழ்க்கை கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்த நேரம்- 25 வயதில் அவனும் சாலை விபத்தில் அகால மரணமடைந்து போனான். மனம் சுக்கு நூறாக ஒடிந்து போக வாழ்க்கைப்பாதையில் நடக்க எந்த தெம்புமில்லாமல் கூடப்பிறந்தவர்களின் உதவியுடன் வேதனையுடன் நகர ஆரம்பித்தது வாழ்க்கை. ஒரு பக்கம் புத்திர சோகம். மறுபக்கம் வறுமையும் உடல் உபாதைகளும் பிணிகளும். கணவரும் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போக ஆரம்பித்தார். நன்றாக நடமாடிக்கொண்டிருந்த காலத்திலேயே, பக்கத்திலிருக்கும் மாத்திரைகளை அவராக எடுத்து சாப்பிட மாட்டார். மனைவி எங்கு போயிருந்தாலும் அவர் தான் வந்து மாத்திரைகளை எடுத்துத் தரவேண்டும். உடல்நிலை அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைய ஆரம்பிக்க, மனம் விரும்பாவிட்டாலும் வேறு வழியின்றி, தன் மகள் வற்புறுத்தலினால் அவரின் வீட்டிற்குச் சென்று என் சினேகிதி தங்க வேண்டியதாயிற்று. எத்தனை தான் உடல் சரியில்லாமலிருந்தாலும் மகளுக்கு பாரமில்லாத வகையில் தன் பங்கிற்கு வீட்டு வேலைகளைச் செய்வதும் உடல் நிலை சரியில்லாத கணவரை கவனித்துக்கொள்வதுமாக அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சில சமயங்களில் அலுப்பிலோ, மற்ற அழுத்தங்கள் காரணமாகவோ மகள் சுருக்கென்று ஏதாவது பேசி விடும்போது துடித்துப் போய் விடுகிறார்.




சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அவரின் கணவருக்கு நினைவு தப்பி படுத்த படுக்கையில் இருப்பது தெரிந்த போது மனசு மிகவும் வேதனைப்பட்டது. மிகத் தொலைவில் இருப்பதால் உடனே சென்று பார்க்க முடியாமல் அவரிடம் தொலைபேசியில் பேசிய போது குரல் நடுங்க அவர் சொன்ன வார்த்தைகள் – “ இனிமேல் உயிருடன் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது? சீக்கிரம் எங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இரண்டு பேருக்குமே மரணம் தான் விடுதலை”

வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறேன். ஆனால் இவருக்கு மட்டும் என்னால் என்றுமே ஆறுதல் சொல்ல முடிந்ததேயில்லை. ஒவ்வொருத்தருக்கும் எதிர்காலத்தில் எதேனுமொரு நம்பிக்கையென்ற பற்றுக்கோடு இருக்கும். வேதனைகளை மறக்க வல்ல ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பு காத்திருக்கும். அப்படி எதுவுமேயில்லாத இவரின் வாழ்க்கையில், மரணமே விடுதலையாக மானசீகமாகக் காத்திருக்கும் இவரை என்னவென்று சொல்லி ஆறுதல் படுத்துவது?

பழுத்த இலைகள் உதிர்வது என்பது காலத்தின் மாற்ற இயலாத கட்டாயம். அப்படி உதிரும் நேரத்திலாவது வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை இருக்க வேண்டும். யாரையும் சார்ந்திருக்காத வாழ்க்கை அமைய வேண்டும். பொருளாதார ரீதியில் அவர்களுக்கென ஒரு சேமிப்பு முதுமையின் தாக்கங்களுக்கு பதில் சொல்ல இருக்க வேண்டும். முக்கியமாய் தனக்கென ஒரு வீடும் வாழ்நாள் முழுவதும் யாரையும் அண்டி இருக்க வேண்டாத அளவு பொருளாதார பலமும் அமைந்து விட்டால் அதுவே முதுமையின் தள்ளாமையையும் நோய்களையும் சமாளிக்க போதுமான பலத்தைத் தந்து விடுகிறது. முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்!!!



படம் உதவி: கூகிள்



Wednesday 14 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்!!

முதியோர் நலன் பற்றி நிறைய கருத்துரைகளும் அலசல்களும் ஏற்கனவே பத்திரிகைகளிலும் வார இதழ்கள், மாத இதழ்களிலும் ஏராளமாக வந்து விட்டன. முதியோர் இல்லங்களைப்பற்றியும் பல விதக் கருத்துக்கள், சோகங்கள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து சற்று விலகி, இன்றைக்கு முதியோர்கள் தங்களின் மக்களுக்காக எந்த அளவு சுமைகளை தங்கள் தள்ளாத வயதிலும் சுமக்கிறார்கள் என்பதைப்பற்றியும் சொல்ல நிறைய இருக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வேதனைகளைப் பார்க்கையில் மனது ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. ஒரு ஆணாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, வயது முதிர முதிர, அவர்களின் உடல் தளர ஆரம்பிக்கிறது. முன்போல வேலைகள் செய்ய முடியாமல் உடலின் பல பாகங்களிலும் பல வித நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மனம் சோர்வடைய ஆரம்பிக்கிறது. சாய்ந்து கொள்ள தோள்கள் தேடி, மனம் தவிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இன்னும் அதிகமான சுமைகளும் பொறுப்புகளும் மனதையும் உடலையும் அழுத்த, தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!





சமீபத்தில் எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். 80 வயதைத் தாண்டியவர் அவர். 30 வருடங்களுக்கு முன்பே மனைவியை இழந்தவர். இரண்டு மகன்களும் ஒரு மகளும் அவருக்கு. மகளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகி விட, மகன்களில் மூத்தவருடன்தான் இவர் இருக்கிறார். இரண்டாம் மகன் மன வளர்ச்சி குன்றியவர். மூத்த மகனுக்கு இரண்டு மகள்கள். மருமகள், மகன் இருவருக்குமே அதிகமான சர்க்கரை அளவு. 15 வருடங்களுக்கு முன் எங்கள் இல்லத்தில் கீழ்த்தளத்தில் குடியிருந்தார். விடியற்காலை மருமகள் எழுவதற்கு முன்பேயே, வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். இந்த வேலையை முடித்து விட்டு, மருமகளை எதிர்பார்க்காமல் தன் இளைய மகனுடன் தெருவோரத்திலுள்ள டீக்கடைக்கு நடந்து சென்று காப்பி குடித்து வருவார். சில சமயங்களில் சீக்கிரம் எழுந்து விட்டால், நானே காப்பி கொடுத்து விடுவேன். என்னை தான் பெறாத மகள் என்று அடிக்கடி சொல்லுவார். அதிக சர்க்கரையால் அவதியுறும் அவர் தன்னைப்பற்றி கவனிக்க முடியாமல், எப்போதும் அடுத்தவருக்காக ஏதாவது உதவி செய்து கொண்டே தான் இருப்பார். துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது. இவரோ, அந்தத் துணையும் இல்லாமல், தனது உடல் வேதனைகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டிலிருப்போரையும் கவனிக்க வேண்டிய நிலைமையிலிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வேறு ஒரு திருமணமான பெண்ணிடம் தொடர்பு கொண்ட போது துடித்துப்போய் மகனை வெறுத்தே விட்டார். அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த சாம, தான, பேத, தண்டம் என்ற பல வழிகளையும் கையாண்டு அது வெற்றி பெற்றதும்தான் அமைதியடந்தார். அதற்கப்புறம் இவரின் மகன் அதிக அளவு சர்க்கரையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அவரைச் சென்று பார்க்காமலேயே இருந்தார். அந்த அளவு வெறுப்பு மனதில் படர்ந்து விட்டது. வயதுக்கு வந்த இரு பெண்கள் வீட்டில் இருக்கையில் அவர்களின் தந்தை இப்படி தலை குப்புற விழுந்த விதம் அவரைப் பாதித்து விட்டது. அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் அந்தப் பெண்ணுக்காக தன் மகன் வட்டியுடன் வாங்கியிருந்த கடனை இவர் கஷ்டப்பட்டு அடைத்தார். தன் முதல் பேத்திக்கு நல்ல வரனாகப்பார்த்து திருமணம் செய்வித்து, பிரசவம்வரை பார்த்து விட்டார். தன் இரண்டாம் மகனுக்கு, தன் பென்ஷன் பணமும் சேர வேண்டி, அதற்கான உயிலும் எழுதி வைத்து விட்டார். ‘எப்போது அழைப்பு வருமோ, யாருக்குத் தெரியும்?’ என்று அடிக்கடி சொல்லுவார்.

சமீபத்தில், இவரின் முதல் மகன் மறுபடியும் படுக்கையில் விழுந்து விட்டார். வி.ஆர்.எஸ் வாங்க நிறைய முயற்சி செய்தும் அது முடியாமலேயே போய் விட்டது. அதற்கு தான் பட்ட சிரமங்களை என்னிடம் எடுத்துச் சொல்லி, ‘ வி.ஆர்.எஸ் கிடைக்காததும் ஒரு வகையில் நல்லது தான். வேலை பார்க்கும்போதே இறந்து போனால், என் மருமகளுக்காவது பென்ஷன் கிடைக்குமல்லவா?’ என்று வேதனையுடன் சொன்னபோது, இனம் புரியாத வலி ஒன்று மனதை ஆக்ரமித்தது.

இந்த வயதில் மகனின் அன்பும் மருமகளின் பணிவிடையும் பேரன் பேத்திகளின் கொஞ்சலும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.. அவருக்கான தேவைகளை அக்கறையுடன் கவனிக்க அன்பான உறவுகள் அருகிலிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக இவரின் வாழ்க்கை அமைந்து விட்டது.

ஊருக்கு வரும்போதெல்லாம், என்னால் முடிந்த அளவு அவருக்கு ஆறுதல் தரும் விதமாய் பேசிக்கொண்டிருப்பேன். அடிக்கடி சமைத்துக் கொடுப்பேன். தன் இரு கரங்களாலும் என்ன்னையும் என் கணவரையும் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கும்போது, கோடிச் செல்வங்களும் இதற்கு ஈடாகாது என்று மனம் மகிழ்வடையும். ஆனால் அவரது வேதனைகள் எதால் தீரும்?

உதிரக்காத்திருக்கும் பழுத்த இலைகள் அனுபவித்துக்கொண்டிருக்கும் சோதனைகள் தொடர்கின்றன..

படங்கள் உதவி: கூகிள்





Wednesday 7 December 2011

முருங்கைக்கீரை அடை

சமையல் பகுதிக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டதால் இந்த முறை ஒரு ருசிகரமான சமையல் குறிப்பை சமையல் முத்தாகப் படைக்கிறேன்.

பொதுவாக அடை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் வித விதமான அடைகள் இருக்கின்றன. கார அடையில் நிறைய வகைகள். முறுமுறுவென்ற அடை, மிருதுவான அடை, பருப்புக்கள் அதிகம் சேர்க்காத மரவள்ளி அடை, சர்க்கரை வள்ளி அடை, பரங்கி அடை இப்படி பல வகைகளில் அடைகள் செய்யும் விதங்கள் இருக்கின்றன.

அது போல‌ அடைக்குத் தொட்டுக்கொள்ள‌ ஒவ்வொருத்த‌ரின் ரசனை ஒவ்வொரு விதம். சிலருக்கு கெட்டியான தேங்காய்ச் சட்னி வேண்டும். சிலருக்கு காரமான மிளகாய்ச் சட்னி வேண்டும். சிலருக்கோ வெல்லமும் வெண்ணெயும் வேண்டும். உணவகங்களில் அடைக்கு அவியல்தான் காம்பினேஷன் என்கிறார்கள். சிலருக்கு எதுவுமே தொட்டுக்கொள்ளாமல் சும்மாவே சாப்பிடப்பிடிக்கும்.[எனக்கும் அப்படித்தான்]

நான் இங்கே கொடுக்கப் போவது முருங்கைக்கீரை அடை!




முருங்கைக்கீரை அடை

தேவையான பொருள்கள்:
துவ‌ர‌ம் ப‌ருப்பு= 1 க‌ப்
பாசிப்ப‌ருப்பு‍ = அரை க‌ப்
க‌ட‌லைப்ப‌ருப்பு=‍ 1 க‌ப்
உளுத்த‌ம்ப‌ருப்பு‍ =அரை க‌ப்
புழுங்க‌ல‌ரிசி‍ = அரை க‌ப்
ப‌ச்ச‌ரிசி= அரை க‌ப்
வ‌ற்ற‌ல் மிள‌காய்‍=8
சோம்பு=1 ஸ்பூன்
பொடியாக‌ அரிய‌ப்ப‌ட்ட‌‌  வெங்காய‌ம்=2
தேங்காய்த்துருவ‌ல்=அரை க‌ப்
க‌டுகு‍=1 ஸ்பூன்
நெய்‍= 1 ஸ்பூன்
எண்ணெய்=1 ஸ்பூன்
க‌றிவேப்பிலை=சிறிது
முருங்கைக்கீரை= 1 க‌ப்
தேவையான‌ உப்பு
செய்முறை:

ப‌ருப்பு வ‌கைகளையும் அரிசி வகைகளையும் தனித்தனியாக, போதுமான‌ நீரில் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ஊற‌ வைக்க‌வும்.

முத‌லில் அரிசி வ‌கைக‌ளை மிள‌காய், சோம்பு சேர்த்து இலேசான‌ கொர‌கொர‌ப்புட‌ன் அரைக்க‌வும்.

பிற‌கு ப‌ருப்பு வ‌கைக‌ளைச் சேர்த்து கொர‌கொர‌ப்பாக‌ உப்புட‌ன் சேர்த்து அரைக்க‌வும்.

தேங்காய்த்துருவ‌ல், முருங்கைக்கீரை, வெங்காய‌ம் சேர்க்க‌வும்.

நெய், எண்ணெய் இர‌ண்டையும் சேர்த்து சுட‌ வைத்து க‌டுகு, காய‌ம், க‌றிவேப்பிலைக‌ளைத் தாளித்து அடை மாவில் கொட்டி க‌ல‌க்க‌வும்.

தோசைக்க‌ல்லில் மெல்லிய‌ அடைக‌ளாய் வார்த்து, பொன் முறுவ‌லாய் ஆகும் வ‌ரை வேக‌விட்டு எடுக்க‌வும்.

சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்!!!