Sunday 31 December 2017

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! !!!

அன்பு சகோதரர்கள், சகோதரிகள்   அனைவருக்கும் அன்பிற்கினிய            புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!  




வரவிருக்கும் 2018, அனைவருக்கும் அனைத்து      வளங்களையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தரட்டும்!




புத்தாண்டில் சிரிக்கவும் சிந்திக்கவும் இரு வாட்ஸ் அப் செய்திகள்! 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Johny johny..*
                    *"Yes papa!*
  *New GST..*
           *"      More Papa..!* 
*Purchase Price..*
                 *" High Papa..!*
*Petrol Price..*
         *""       Rocket Papa!*
*Subsidies are...*
                 *" Nil Papa..!*
*Monthly income..*
                      *Low Papa..*
*Family outing..*
                     *Fear Papa..*
*Lot of tension..*
                     * Yes papa!*
*Too much work..*
                      *Yes papa!*
*Bp-sugar..*
                     *High papa!*
*Yearly bonus..*
                    *Joke papa!*
*Pension Income..*
                      *No papa!*
*Total Life*

                *Ha Ha Ha*.    

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும். சமீபத்தில்  படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம்.

 அனைவருக்கும் தேவையான ஒரு நல்ல பாடம்

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். 

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். 

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். 

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். 

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?”  என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 
கவலைப்படவில்லை. 

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி
மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து
அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். 
பட்டர்என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை பெட்டர்ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். 
எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.
 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி
அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 
ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபாஎன்றாள். 

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். 

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான்

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே! 

இதை நினைக்கிறபோது
நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!என்று உணர்ந்நதது அந்த நெய்.

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்

Thursday 28 December 2017

அசத்தும் முத்து!!!

சில மாதங்களுக்கு முன் ஒரு கனவுப்பள்ளியைப்பற்றி படிக்க நேர்ந்தது. படிக்கப்படிக்க மனம் பிரமித்துப்போனது. இது போன்ற பள்ளிகள் நம் தமிழ்நாடெங்கும் கிளைகள் பரப்பினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே சுகமாக இருக்கிறது. அந்த விவரங்களைத்தான் இங்கே பகிர்கிறேன். படித்துப்பாருங்கள்!

சரங் பள்ளி

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில் 800 மீட்டர் உயரத்தில் இயற்கை மற்றும் வாழ்வியல் கல்வியை அளிக்கிறது சரங் பள்ளி. இந்தப்பள்ளியின் நிறுவனர்களான கோபாலகிருஷ்ணனும் விஜயலக்ஷ்மியும் வருமானம் தரும் அரசு ஆசிரியர்கள் வேலையை விட்டு விட்டு ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதற்காக இந்தப்பள்ளியைத் தொடங்கினார்கள்.




கடந்த 50 ஆண்டு கால கல்வி வளர்ச்சியில் நகர்மயமாதல், எந்திர மயமாதல் ஆகியவற்றால் நாம் இயற்கையை அழித்து தூள் தூளாக்கி விட்டோம். அவற்றை மீட்டெடுத்து இயற்கையையும் அதன் ஆற்றலையும் பற்றிய நிதர்சனத்தை இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு கொண்டு செல்வதே சரங் பள்ளியின் நோக்கம்.

சிந்திக்கும் ஆற்றலில் மற்ற பள்ளிக்குழந்தைகளை விட இந்தப்பள்ளிக் குழந்தைகள் ஒரு படி மேல் உள்ளனர் என்பது தான் சுவாரசியமான விஷயம். முதலில் இந்தப்பள்ளி உருவான கதையே அசத்தும் விஷயமாக இருக்கிறது.

அட்டப்பாடியில் எவ்வளவு மழை பெய்தாலும் அத்தனையும் கடலுக்குள் சென்று வீணாகி விடும். காரணம் காடுகள் அழிக்கப்பட்டது தான். எனவே வனத்துறை, அரசால் தண்ணீர் இல்லாத, விவசாயத்துக்கு லாயக்கில்லாத இடம் என்று கை விடப்பட்ட காட்டு நிலத்தில் 12 ஏக்கர் இடத்தை இவர்கள் வாங்கினர். நிலத்தை சமனப்படுத்தி மக்கிப்போன மரங்களை குறைந்த மண் உள்ள இடத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மக்கச்செய்தார்கள். வெறும் கட்டாந்தரையாக இருந்த இடத்தில் மண் வளம் சேரத்தொடங்கியது. இதற்காக சிறுவாணியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சில வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.




இப்படியே தூர்ந்து போன நீர்நிலைகளை சரி செய்து கற்கள், மூங்கில்கள் கொண்டு தடுப்பணைகளை உருவாக்கினார்கள். 1983ஆம் ஆண்டு முதல் சரங் பள்ளியை கற்றுக்கொள்ளும் இடமாக மாற்றத் தொடங்கினர். முதலாவது மாணவனாக இவர்கள் மகனே கற்களை அகற்றுவது, மரக்கன்றுகளை நடுவது என வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். பிறகு நண்பர்கள், உறவினர்கள் என்று கைகோர்க்க சரங் வளரத்தொடங்கியது. சரங்’ பள்ளி பசுஞ்சோலையாக மாறத்தொடங்க பாடங்கள் மாணவர்களே கற்றுக்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

8 ஏக்கர் பரப்பளவில் காடுகள் உருவாகின. விவசாயம் செய்ய ஆரம்பித்து, மாணவர்களுக்கான காய்கறிகள் பயிரிடப்பட்டன. மண், புல், மூங்கில் கொண்டு வீட்டுகள் கைகளால் வடிவமைக்கப்பட்டன. இதில் அங்கே கற்க வருகிற சின்னஞ்சிறு குழந்தைகளும் அடக்கம். குழந்தைகள் பெளதிகத்தையும் இரசாயனத்தையும் உயிரியலையும் பார்ப்பதன் மூலம், உணர்வதன் மூலம், செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கற்று வருகிறார்கள்.
தொடர் விவசாயத்தால் அங்கே மண் வளம் மீண்டது. தூர்ந்து போன நீர்நிலைகளில் நீர் வளம் மிகுந்தது. பசுமை வளர்ந்ததும் வெளியேறிய முயல், மான், நரி போன்ற உயிரினங்கள் மெல்ல தங்’கள் இருப்பிடத்திற்கு திரும்பத்தொடங்கின. சரங்’ பள்ளி நிறுத்தத்தில் தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் வந்து நின்று செல்லத்தொடங்கின.



சோலார், பானல்கள் மூலம் இங்கே மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். இந்தப்பள்ளியில் தங்குவதற்கான வசதிக்கான இடங்களை காட்டில் கிடைக்கும் மூங்கில்கள் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்போது மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் அங்கு கற்று வருகின்றார்கள்.

சரங் பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுடன் எந்த வகையில் போட்டி போட்டாலும் வெற்றி பெற முடியும். இங்கு இயற்கையுடன் இணைந்து வாழும் குழந்தைகளின் மகிழ்ச்சியை நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளின் மகிழ்ச்சியுடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
ஆனால் இந்தப்பள்ளியும் பிரச்சினைகளை சந்தித்தது. 1995 ம் ஆண்டு மீள முடியாத கடன் தொல்லையாலும் வேறு சில உள்பிரச்சினைகளாலும் இந்தப்பள்ளியை மூட வேண்டியதாகி விட்டது. அத்தனையும் இவர்களுடைய மக்களால் சரியாக்கப்பட்டு, 2013ல் மறுபடியும் திறக்கப்பட்டிருக்கிறது.

இங்கே படிக்கும் மாணவர்கள் இங்கே முழு நேரமாகவும் படிக்கலாம். மற்ற பள்ளிகளில் படித்துக்கொண்டும் இங்கே படிக்கலாம். மலையும் மழைச்சாரலும் உயிரினங்களும் இயற்கையும் தான் ஆசிரியர்கள். இதன் நிறுவனர்களான கோபாலகிருணனும் விஜயலக்ஷ்மியும் வழிகாட்டுனர்கள். மட்டுமே. பெற்றோர்கள் விரும்பினால் இங்கே வந்து தங்கி கல்வி கற்பிக்கும் முறைகளைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.

Wednesday 20 December 2017

திரை விமர்சனம்!!!

தீரன் அதிகாரம் ஒன்று. 

வெகு நாட்களுக்குப்பிறகு அநேகமாக எல்லா விமர்சனங்களிலும் நன்மதிப்பைப் பெற்ற திரைப்படம் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன் இந்தப்படத்தைப்பார்க்க நேர்ந்தது. பொதுவாய் த்ரில்லர் ரகப்படங்களை நான் விரும்பிப்பார்ப்பதில்லை. இது ஒரு உண்மைக்கதையை ஒட்டி எடுத்த திரைப்படம் என்பதை அறிய நேர்ந்ததால் தான் இப்படத்தைத் தேர்ந்தெடுத்தேன்.



ஒரு உண்மையான, நேர்மையான காவல் அதிகாரியின் கதை. பதினைந்து வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் கைவரிசை காட்டியது. 2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரியபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் வெறும் காலணி, கைரேகை, ஒரு தோட்டா மட்டுமே போலிசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் 2005-ல் ‘ஆபரேஷன் பவாரியா’ என்ற தனிப்படை அமைக்கப்பட்டது.

பவாரியா கொள்ளையர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேசத்தில் வசிக்கும் நாடோடிகள் இனத்தை சேர்ந்தவர்கள். ராஜ்புத் படை வீரர்களான இவர்கள் 1527ம் ஆண்டு முகலாயர்களிடம் தோல்வியடைந்து கனுவா என்னும் காட்டில் ஓடி ஒளிந்துகொண்டு உயிர்பிழைப்பதற்காக கொள்ளையடிக்க துவங்கியவர்கள் என்கிறார் ஜாங்கிட். பவாரியா கொள்ளையர்கள் பிரத்யேக லாரிகள் மூலம் பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்குவதற்காக தமிழகத்திற்குள் வருவார்கள். அந்த பிரத்யேக லாரியில் ரகசிய அறைகள் அமைத்துக்கொண்டு அதில் மற்ற கொள்ளையர்கள் பதுங்கிக்கொண்டும், ஆயுதங்களை மறைத்து வைத்தும் தமிழகத்திற்கு வருவார்கள். பின்னர் நிறுவனங்களிடம் பொருட்களை சேர்த்த பிறகு நெடுஞ்சாலை அருகே உள்ள குடியிருப்புகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொலை, கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு தப்பிவிடுவர் என்பது தெரியவந்ததாக கூறுகிறார் டிஜிபி ஜாங்கிட்.




ஒராண்டிற்கு மேல் நடைபெற்ற 'பவாரியா ஆப்ரேஷன்' ஏப்ரல் 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 13 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், கொள்ளைக்கூட்டத்தின் முக்கிய தலைவன் ஒமன் உட்பட இருவருக்கு தூக்கு தண்டனையும் கிடைத்தது.

தீரன் அதிகாரம் படத்தை திரையரங்கில் பார்த்ததும், 10வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் கண்முன் வந்தது போன்று உணர்ந்ததாகவும் 10 ஆண்டுகள் கழித்து தமிழக போலீசாரின் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் பவாரியா ஆப்ரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்.

இதை மையமாக வைத்து அசத்தலான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் , எத்தனையோ போலீஸ் கதைகள்
வந்துள்ளன.அதில் பெரும்பாலானவை ., ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, அல்லது, தன் குடும்பத்தினரைக்கொன்றவனை பழி வாங்கத் துடிக்கும் போலீஸ் நாயகரைத் தடுக்கும் அரசியல்வாதி, இப்படி பல வில்லன்கள் ..இவர்களின் கடல் போன்ற சாம்ராஜ்யம், அவர்கள் பண்ணும் அட்டூழியங்’கள், இவர்களை ஒரு மாதிரி போராடி ஒரு வழியாக அழித்து பழி தீர்க்கும் போலீஸ் ஹீரோ எனும் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் கூடிய கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, குற்றவாளியைத்’த்’ஏடும் காவல் அதிகாரிகள் படும் அல்லல்கள், அவமானங்களிவை அனைத்தையும் இந்த 'தீரன்அதிகாரம் ஒன்று' படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.




உண்மை சம்பவத்தின் பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது. காவல் அதிகாரியின் மகனாய்ப்பிறந்து தந்தையின் வீரசாகசங்களை சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்ட காவல் அதிகாரியாய் அருமையாக நடித்திருக்கிறார் கார்த்தி. கதாநாயகியாக வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அதிக வேலையில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருக்கும் கார்த்திக்குமான காதல் காட்சிகள் ஜெட் வேகத்தில் பயணிக்கும் படத்திற்கு வேகத்தடையாகவே உள்ளன! ஓமாவாக நடிக்கும் அபிமன்யு சிங் தன் அபார நடிப்பால் பயமுறுத்துகிறார்! அவரின் கண்கள் நடிக்கின்றன! கழுத்து நரம்புகள் கூட நடிக்கின்றன! விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த போலீஸ் கதைக்கு சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு உயிரூட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையோர அடர்ந்த காடு, பரந்த பாலைவனம், ஆரவல்லி மலைகள் என பகுதியின் தன்மை மாறாமல் அசலாக படம்பிடித்திருக்கிறார். கதாநாயகன் வில்லனைத்தேடி வேறு திசையில் பயணிக்க, வில்லனோ கதாநாகனின் மனைவியை விரட்ட, அப்போது பின்னணியில் படபடக்கும் இசையும் தடதடக்கிற நம் இதயமும்!!  காவல் அதிகாரிகளின் ஒவ்வொரு தாக்குதலும் நெடிய பாலைவன மணலிலும் நீலநிற இரவுப்பின்னணியிலும் ஓடும் ரயிலிலும் ஓநாய்த்தாக்குதலிலும் என்று நம்மை அசத்துகின்றன!!
திரைக்கதையின் வேகத்துக்கு போட்டியாய் அமைந்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை.

உயிரைப்பணயம் வைத்து தீரச்செயல்கள் புரிந்த நம் தமிழக காவல் அதிகாரிகளுக்காக, அவர்களுக்கு பாராட்டுக்கள் சொல்லும் விதமாக 
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்! மறுமுறை ரசித்துப்பார்க்கலாம்!


Thursday 7 December 2017

முத்துக்குவியல்-49!!

கடந்த 15 நாட்களாக என் வலைத்தளத்தை திறக்க முடியவில்லை. டைப் அடிக்க ஆரம்பித்ததும் cursor ஓடிக்கொண்டே இருந்தது. பல சிகிச்சைகளுக்குப்பிறகு இப்போது நிலைமை பரவாயில்லை. CURSOR ஓடுவதன் வேகம் மட்டுப்ப்ட்டிருக்கிறது. அதனால் தான் அது அசந்திருந்த நேரத்தில் என்னால் வலைத்தளத்தில் நுழைய முடிந்தது! இதை சரி செய்ய யாருக்காவது தீர்வுகள் தெரிந்தால் சொல்லுங்கள்! என் மகன் வெளி நாடு சென்றிருப்பதால் அவரின் உதவி கிட்டவில்லை.

அதிர்ச்சி முத்து:

சமீபத்தில்  ஜுனியர் விகடன் மூலம் அறிந்து கொண்ட செய்தி இது.

கொலை செய்யக்கூலிப்படைகள், போதை மற்றும் போலி மருந்துகள் மார்க்கெட்டிங், சூதாட்டம், திருட்டு மற்றும் கடத்தல் பொருள்கள் விற்பனை, ஆயுத‌ பிசினஸ், சிலைகள் மற்றும் அரிய விலங்குகளின் வியாபாரம், சட்ட விரோதப் பண மாற்றம் இப்படி எத்தனை குற்றங்கள் உண்டோ அவை அத்த்னைக்கும் ஒரு இருட்டு இணையம் இயங்கி வருகிறது. இன்டர்போல் மற்றும் பல நாட்டு காவல்துறைக்கும் தலைவலி தந்து கொண்டிருக்கும் விஷயம் இது.
இந்த மாதிரி இணைய தளங்களுக்கு GOOGLE CHROME , INTERNET EXPLORER வழியாக செல்ல முடியாது. இந்த மாதிரி இணையங்களுக்கு வருபவர்கள் எல்லோருமே அட்ரஸ் இல்லாதவர்கள். விற்பவர்களையோ வாங்குபவர்களையோ அடையாளம் காண முடியாதவர்கள்.

இங்கும் ஈ காமர்ஸ் போன்ற விற்பனைத்தளங்கள் இயங்குகின்றன.
சுமார் 21 நாடுகளைச் சேர்ந்த க்ரைம் போலீஸார் இணைந்து நடத்திய ரகசிய ரெய்டில் 600’க்கும் மேற்பட்ட  திருட்டு இணையங்கள் முடக்கப்பட்டு ஏராளமான போதை மருந்துகள், தங்கம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் திருட்டு இணையங்கள் புதியதாய் வேறு வேறு பெயரில் கிளம்புவதை தடுக்க முடியவில்லை. 

கூலிப்படைகளின் சேவைகளுக்காகவே இணைய தளம் உண்டு. திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்காகவும் அதன் விபரங்களுங்களுக்காகவுமே தனியாக இருட்டு இணைய தளம் உண்டு.

இன்டர்போல், அமெரிக்காவின் FBI, ஐரோப்பாவின் EUROPOLE போன்ற அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் ஓரளவுக்கு இருட்டு இணையங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கர உலகமாக உலகெங்கும் இயங்கி வருகிறது இது.

அதிசய முத்து:

கன்னியாகுமரி மாவட்டம்திருவிதாங்கோட்டிற்கும் தக்கலைக்கும் இடையே கேரளபுரம் என்னும் சிற்றூரில் உள்ள விநாயகர் கோவில் பல அதிசயங்களும் அற்புதங்களும் நிரம்பப்பெற்றது. இந்தக் கோவிலில் குடி கொண்டிருக்கும் விநாயகர் வருடத்தில் ஆறு மாதம் ஆடி முதல் மார்கழி வரை கருப்பாகவும் மீதமுள்ள ஆறு மாதம் தை மாதத்திலிருந்து ஆனி வரை  வெள்ளையாகவும் நிறம் மாறுகிறார். 

விநாயகரின் நிறத்தைப்பொறுத்து விநாயகர் அமர்ந்துள்ள அரசமர'மும் நிறம் மாறுகிறது! இன்னுமொரு வியப்பான செய்தி. இப்போது ஒன்றரை அடி உயரமுள்ள' விநாயகர் தொடக்கத்தில் அரை அடி உயரம் மட்டுமே இருந்தவர். இவர் நிறம் மாறும் விநாயகர் என்று அழைத்தாலும் நிறம் மாறுவதால் பச்சோந்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இந்தச் சிலை உருவாக்கப்பட்ட கல் சந்திரகாந்தக்கல் என்னும் அபூர்வ வகைக்கல் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். 

விநாயகர் கருப்பாக இருக்கையில் அக்கோவிலின் கிணற்று நீர் கலங்கலாக சுவை இழந்து மாறி விடும். விநாயகர் வெள்ளையாக இருக்கும்போது கிணற்று நீர் ஸ்படிகம் போல தெளிவாகவும் சுவையாகவும் மாறி விடுகிறது. 

அசத்தும் முத்து:

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். 11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை.

அவனின் தந்தை சொல்கிறார்......

‘’’ சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக்கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.”

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

“யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன். 
இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்! “

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார்.