Sunday 17 September 2023

எங்கே போகின்றன மருத்துவமனைகள்?

 என் நெருங்கிய உறவினரின் 20 வயது மகனுக்கு அடிக்கடி தலை சுற்றல், மயக்கம் வந்து கொண்டிருந்தது. பலவிதமான பரிசோதனைகளுக்குப்பின் அந்தப்பையனுக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 மி.மீட்டருக்கு குறைவாக அதன் அளவு இருந்தால் மருந்தினாலேயே அந்தக்கட்டியைக்கரைத்து விடலாமென்றும் அதன் அளவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தான் அந்தக்கட்டியை நீக்க வேண்டுமென்றும் தலைமை மருத்துவர் கூறி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டதென்றாலும் அந்தப்பையனின் பாட்டி என்னிடம் பேசும்போது பயந்து கொண்டே இருந்தார். ஆறுதல் பலமுறை சொன்ன போதும் அவர் என்னிடம் சொன்னதெல்லாம்  ‘சிகிச்சையின் போது எதுவும் தப்பாக செய்து விடக்கூடாதே’ என்பது தான். அவர் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்போதெல்லாம் நோயாளிக்கான சிகிச்சையைப்பற்றி கவலைப்படுவதை விட அமைந்திருக்கும் மருத்துவர் நல்ல விதமாக இருக்க வேண்டுமே, செய்ய வேண்டுமே என்பது தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. 

சென்ற மாதம் என் உறவினர் சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு முறை பைபாஸ் சர்ஜரி இதயத்தில் செய்து கொண்டவர். 78 வயதான அவருக்கு இலேசாக நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஆஞ்சியோ தொடையில் செய்தபோது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு தொடைக்குள் CLOT உண்டாகி ரண வேதனையை அனுபவித்தார், அதனால் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய, கெட்ட இரத்தத்தை வெளியேற்றுவதற்காக பிரஷர் கொடுத்து அமுக்கி அமுக்கி அதை வெளியேற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவருக்கு. இப்படி தவறுதலாக நடந்து விட்டதற்கு ஒரு SORRY சொல்லி, ஒரு மாதத்துக்கு நடக்கக்கூடாது என்றும் சொல்லி நிறைய மருந்து வகைகளுடன் அனுப்பி விட்டார்கள். இன்னும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. 

பத்து வருடங்கள் முன்னால், என் கணவருக்கு அதே மருத்துவ மனையில் பித்தப்பையையும் பித்தக்குழாயிலிருந்த கற்களையும் நீக்கி, பித்தக்குழாயிலிருந்த அசுத்தங்கள் அனைத்தும் வடிய ஸ்டெண்ட் போட்டு, அந்த ஸ்டெண்ட்டை நீக்க 20 நாட்கள் கழித்து வரச்சொன்னார்கள், அதே போல 20 நாட்கள் கழித்து அந்த ஸ்டெண்ட் நீக்கப்பட்டு, நாங்களும் விமானமேறி துபாய் வந்ததோம். சரியாக மூன்று மாதங்கள் கழித்து என் கணவருக்கு ஒரு இரவில் உடலில் குளிர் ஜுரம் போல பலமாக நடுக்கம் ஏற்பட்டதும் உடனேயே எமெர்ஜென்ஸியில் துபாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது என் கணவருக்கு இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன், எல்லாம் குறைந்து தொற்று கல்லீரலில் பரவி மிக சீரியஸான நிலைக்கு சென்று விட்டார்கள். 2 நாட்களில் ஆக்ஸிஜன் சற்று ஏறியிருந்த சமயம் உடனடியாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அதைத்தொடர்ந்த பல மோசமான பாதிப்புகளிலிருந்தும் என் கணவர் மீண்டு எழுந்து வந்த பின்பு, நான் தலைமை மருத்துவரிடம் , “ ஏற்கனவே இரு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்த பின்பும் எதனால் இவர்களுக்கு இப்படி உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டது “ என்று காரணம் கேட்டபோது, அவர்         ‘ உங்கள் கணவருக்கு உங்கள் ஊரில் வைத்த ஸ்டென்டை மிகவும் குறுகிய காலத்துக்குள் எடுத்து விட்டார்கள். நாங்கள் இந்த காரணத்துக்காக ஸ்டென்ட் வைக்கும்போது 3 மாதம் வரை அதை நீக்க மாட்டோம். அப்போது தான் அசுத்த நீரெல்லாம் முழுமையாக வடியும்” என்றார். அவர் சொன்னது போலவே ஜுன் மாதம் என் கணவருக்கு வைத்த ஸ்டென்ட்டை செப்டம்பரில் தான் நீக்கினார்கள். எத்தனை எத்தனை தவறுகள் நம் மருத்துவமனைகளில் நடக்கின்றன!

என் தங்கையைப்பற்றி முன்னமேயே எழுதியிருந்தேன். நுரையீரலில் பயாப்ஸி எடுக்க நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையினுள் சென்றவர் தவறான சிகிச்சையால் அங்கேயே உயிரிழந்து வெளியே வந்தார். எத்தனை பெரிய கொடுமை இது! அவர் இறந்து ஏழு மாதங்களாயும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. 

ஒரு முறை கெண்டைக்காலில் ஏற்பட்டிருந்த வலிக்காக மருத்துவமனைக்கு ஸ்கான் எடுக்கச்சென்றிருந்தேன். பின்னங்கால்களில் ஸ்கான் எடுத்தார்கள். அந்த ஸ்பெஷலிஸ்ட் தன் உதவியாளரிடம் சொல்கிறார் ‘ இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சினையும் உள்ளது. இதோ, இங்கு செல்லும் நரம்பைப்பாருங்கள்’ என்று! அதற்கு அவரின் உதவியாளர் ‘ இல்லையில்லை. இது வெரிகோஸ் நரம்பு கிடையாது. இவர்களுக்கு அந்த பிரச்சினை இல்லை’ என்கிறார். இந்த விவாதம் என் கண் மூன்னாலேயே நடந்தது. இவர்களின் ஸ்கான் ரிப்போர்ட் எப்படியிருக்கும்? அதை வைத்து மருத்துவர் என்ன விதமான முடிவு எடுப்பார்? அவர் கொடுக்கும் சிகிச்சை எப்படி இருக்கும்?  

மருத்துவமனைகள் நம்மை காக்கும் என்று நம்பித்தான் நாம் மருத்துவர்களிடம் செல்கிறோம். அவர்களே தவறுகள், அதுவும் சரி செய்யவே முடியாத தவறுகள் செய்தால் நாம் எங்கே போவது? எங்கே போய் நியாயம் கேட்பது?


20 comments:

ஸ்ரீராம். said...

ஏராளமான காசு கொடுத்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து, ஏராளமான காசு செலவு செய்து பாஸாகும் காலம் இது. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பார்கள். அதற்கு அர்த்தம் உண்மையில் வேறாயினும் இங்கு அதுதான் நடக்கிறது. தொடையில் செலுலைடிஸ் என்று மருத்துவத்துக்குச் சென்ற என் அண்ணி அங்கிருந்து உயிருடன் திரும்பவில்லை. இத்தனைக்கும் அண்ணியின் அலர்ஜி விவரங்கள் தெரிந்த குடும்ப மருத்துவர் என்று பெயர்.

ஸ்ரீராம். said...

சர்க்கரை னாய் சிகிச்சை பற்றியும், இதயநோய், ஸ்டாண்ட் வைப்பது பற்றியும் இதே போல இவை எல்லாம் தேவையே இல்லை என்பது போல பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் பொதுஜனங்களுக்கு உண்மை எது பொய் எது என்று தெரியாத நிலை. யார் சொல்வதை கேட்பது என்கிற குழப்பம். உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா... முடிந்தவரை இவர்களை நாடிச் செல்லாதிருக்கும் நிலையை ஆண்டவன் அளிக்கவேண்டும்.

நெல்லைத்தமிழன் said...

கார்ப்பொரேட் மருத்துவமனைகள் profit center ஆகவும், ஒவ்வொரு மருத்துவரையும்்profit center என்ற முறையில் அணுகுவதாலும், நோயாளிக்கு நேரம் சரியில்லை என்றால் இவ்வாறு நடந்துவிடுகிறது என நினைக்கிறேன்.

சில ப்ரொஃபஷனில், தவறுகள் மிக்க் கடுமையான விளைவைத் தரும், குறிப்பாக அவசர சிகிச்சையில். யாரை நொந்துகொள்வது?

ராமலக்ஷ்மி said...

வருத்தம் அளிக்கும் பகிர்வு. இவை போன்ற சம்பவங்கள் இப்பொழுதுதெல்லாம் பரவலாகக் கேள்விப் படுகிறோம். மருத்துவமனைக்குள் சென்று விட்டால் அவர்கள் சொல்வதை மறுக்க இயலாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.

KILLERGEE Devakottai said...

வணக்கம் சகோ
இந்தியாவில் மருத்துவமனைகளின் நிலைப்பாடு மிகவும் கவலைக்குரியது யாரிடம் சொல்வது ? விதியே என்று இறைவனையே சரணடைய வேண்டும்.

துரை செல்வராஜூ said...

மக்களுக்கு உண்மை எது பொய் எது என்று தெரியாத நிலை.. யார் சொல்வது சரி என்பதில் குழப்பம். உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுப்புடன் செயல்படும் மருத்துவர்கள் மிகவும் குறைவு..

இதனால் தான் அரசியல் வியாதிகள் வெளிநாட்டு மருத்துவமனைக்கு போய் விடுகின்றன..

மனோ சாமிநாதன் said...

உண்மையான நிலைமையை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்! ஆனாலும் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மருத்துமனைக்குச் செல்வது? நீங்கள் சொல்வதைப்போல மருத்துமனைக்கு செல்லாதிருக்கும் நிலைமையை ஆண்டவன் நமக்குத்தர வேண்டும் என்று வேண்டுவதைத்தவிர வேறு வழியில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

மருத்துவமனை நிகழ்வுகள் மிகவும் வேதனையானவை. நானும் அனுபவித்திருக்கிறேன்.
இதனால்தான் நீட் தேர்வு பற்றிய சர்ச்சை எழும்போதெல்லாம் என் மனதில் ஓர் எண்ணம் எழும்.,
யார் படித்தாலும், மருத்துவத் துறையின் நிலை மாறப்போவதில்லை எனும்போது, யார் படித்து வந்தால் என்ன?

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தம் தருகிறது...

Geetha Sambasivam said...

பணம் பண்ணுவதில் உள்ள அக்கறை மருத்துவம் பார்ப்பதில் இருப்பதில்லை, பொதுவாக நாங்க கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த மருத்துவரையே தேடிச் செல்லுவோம். எங்க உறவுகளிடம் கூட இதற்காகக் கேலியும், கிண்டலும் கிடைச்சிருக்கு. ஆனாலும் அவர் சொன்னால் தான் சிறப்பு மருத்துவரிடம் போவோம். இந்தக் காரணத்துக்காகவே மாமியாரின் கடைசி வருடங்களில் எங்களிடம் அவரை விடவில்லை. அவங்க மும்பையில் பிரபலமான அம்பானி மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தார்கள். எங்களுக்கு அது எட்டாக்கனி.

Thulasidharan thilaiakathu said...

மனோ அக்கா, நம்மூரில் இன்றைய மருத்துவ நிலை ரொம்பவும் பயமுறுத்துவதாகத்தான் இருக்கிறது. கல்வியின் ஆழம் குறைந்துவிட்டது.வியாபாரத்தினால். அடுத்து மருத்துவம் படிப்பவர்களும் எப்படிப் படிக்கிறார்கள், எப்படி எல்லாம் கல்லூரி நாட்களைக் கடத்துகிறார்கள் என்பதையும் நான் பார்க்கிறேன். படிப்பில் சீரியஸ்னெஸ் இல்லை நாம் கவனமாகப் படிக்க வேண்டும் என்ற நோக்கமும் இல்லை.

அடுத்து முக்கியமான ஒன்று மருத்துவச் சட்டம் நம்மூரில் வலுவாக இல்லை என்பது மிகப் பெரிய flaw. துபாய் மருத்துவர் சொன்ன நம்மா ஊரில் நடந்த அந்தத் தவறுக்கு உங்களால் வழக்கு தொடுக்க இயலுமா?

கீதா

Thulasidharan thilaiakathu said...

கூடியவரை மருத்துவமனைக்குச் சொல்லாத நிலை நமக்கு இருந்தால் நல்லது, மனோ அக்கா.

கீதா

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் நெல்லைத்தமிழன்! நீங்கள் சொல்வது போல, கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுமே profit centerஆகத்தான் மாறி விட்டன! அதையும் வேறு வழியின்றி நாம் கொடுக்கத்தான் செய்கிறோம். ஆனால் வாங்கிய பணத்துக்கு மனசாட்சிக்கு உட்பட்டு நல்ல விதமாக சிகிச்சை செய்யலாமே!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரி தான் ராமலக்ஷ்மி! மருத்துவமனையில் மருத்துவர்கள் சொல்வதை நாம் மறுக்க முடியாமல் கேட்கத்தான் செய்கிறோம். ஏனென்றால் அவர்கள் செய்வது சரியாக இருக்குமென்று நம்புகிறோம். அந்த நம்பிக்கை பாழ்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படும்போது, அந்த நஷ்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் எப்படி சரி செய்து கொள்ள முடியும்?
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மருத்துவர்கள் பொறுப்புடன் நடந்தாலே போதும். அதிக பிரச்சினைகள் ஏற்படாது.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
நீங்கள் கூறிய கருத்துக்கள் என்னுள்ளும் சிந்தனையை உருவாக்கியது. மகனை மருத்துவராக்கி பார்த்த எங்கள் நண்பர் ' அவனுக்கு செலவழித்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டாமா' என்று ஒரு சமயம் கூறினார். மனதில் வேதனை தான் ஏற்பட்டது. அதனால் தானே மருத்துவம் வியாபாரமாக மாறிப்போயிற்று. அதனாலேயே கருணையும் பொறுப்பும் அக்கறையும் வியாபாரமாகிப்போய் விட்டது!

மனோ சாமிநாதன் said...

வருத்தத்தை பதிவு செய்ததற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன கீதா சாம்பசிவம்! அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

சில சமயம் கீதா, நாம் கோபப்பட்டாலும் மருத்துவமனையில் இருக்கும் நம் உறவினர் நலமாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலையால் நாம் கேள்வி கேட்க முடியாமல் போய் விடுகிறது. இதில் வழக்கு போட்டால் நமக்கு சப்போர்ட் யாராவது வேண்டுமே!!
உண்மை நிறைய சமயங்களில் கசக்கத்தான் செய்கிறது. இந்த உண்மையை அவர்களும் அறிந்திருப்பதால் தான் அவர்களால் சுலபமாக தப்பு செய்ய முடிகிறது!!
கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!