Tuesday 26 November 2013

இதுவும் கடந்து போகுமா?

10 நாட்களுக்கு முன் பிரபல சர்க்கரை நோய் நிபுணரைப்பார்க்கப் போயிருந்தேன். எடை பார்க்கும் மிஷின் மேல் நிற்கச் சொன்னது வரவேற்பில் இருந்த‌ பெண். அது எழுதிய எடையைப்பார்த்ததும் திகீரென்றது. 10 நாட்களுக்கு முன் வந்ததற்கும் இப்போதைக்கும் 4 கிலோ குறைந்திருந்தது. மனசு அப்படியே கலவரமாகி விட்டது. எப்படி இது 10 நாட்களில் சாத்தியமாகும்? உடலில் ஏதாவது மோசமான பிரச்சினை இருந்தாலொழிய இப்படி திடீரென்று எடை இறங்காது. குட்டையாய் குழம்பிப்போனது மனது. வேறெதிலும் மனம் பதியவில்லை. என் முறை வந்ததும் மருத்துவரிடம் பேசிய போது என் சந்தேகத்தைக்கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே ' இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உயரத்திற்கு சரியான எடையில் தானே இருக்கிறீர்கள்? இதற்கு மேலும் குறைந்தால் தான் கவலைப்பட வேண்டும்' என்றார். அப்போது தான் அவரைக்கூர்ந்து கவனித்தேன். அவரின் வாய் ஒரு பக்கம் கோணியிருந்தது. ஸ்ட்ரோக் வந்தவர்களுக்குத்தானே அப்படி இருக்கும்? எல்லா சந்தேகங்களும் மனதைக்குடைய அவர் எழுதிய மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். 
 
 

எடை குறைந்திருப்பற்றி என் புலம்பலைக் கேட்ட‌ என் கணவர் ' வீட்டிற்கு வந்து எடை பார்க்கும் க‌ருவியில் எடையை சரி பார்த்த பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு. அதற்குள் எதற்கு குழம்பிப்போனாய்?' என்று கடிந்து கொண்டார்கள். அப்புறம் எங்கள் வீட்டு எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தால் பழைய எடை தான் இருந்தது. ஒரு மாதிரி உயிர் வந்தது. அப்புறம் விசாரித்ததில் நிறைய மருத்துவமனைகளில் நமக்கு முன் எடை பார்த்தவர்கள் சென்ற பிறகு திரும்ப அதை பழைய நிலைக்கு ஜீரோ செட்டிங்கிற்கு பணியாளர்கள் சரி செய்வதே இல்லை என்று தெரிந்தது!! இதனால் எத்தனை மனக்குழப்பம்! எத்தனை தவிப்பு!! அந்த மருத்துவரைப்பற்றியும் விசாரித்தேன். அவருக்கு சமீபத்தில் தான் ஸ்ட்ரோக் வந்து மருத்துவக்கண்காணிப்பில் இருந்ததாகச் சொன்னபோது திகைப்பாக இருந்தது. இந்த மாதிரி நிலையில் மருத்துவ பிராக்டீஸ் செய்யலாமா 

நான் பொதுவாக எந்த மருத்துவர் எந்த மருத்து எழுதிக்கொடுத்தாலும் மருந்துக்கடை வைத்திருக்கும் ஒரு சினேகிதிக்கு ஃபோன் செய்து அந்தந்த மருந்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் தராமல் இருக்குமா என்று கேட்டுக்கொள்வேன். அதே போல, அவர் எழுதிக்கொடுத்த மருந்தப்பற்றி கேட்டதும் ' இந்த மருந்தா? இது இந்திய அரசாங்கம்  தடை செய்யப்பட்ட மருந்தாயிற்றே?? இதை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று தானே தடை செய்தார்கள்? தடையை நீக்கி விட்டார்களா என்ன? என்று என்னையே திருப்பிக்கேட்டார். சொரேலென்றது எனக்கு! அதற்க‌ப்புறம் என் குடும்ப டாக்டரிடம் சென்ற போது, அவர் சிரித்தவாறே ' உங்களுக்கு மட்டுமல்ல, நான் யாருக்குமே இந்த மாத்திரையை எழுதித் தரமாட்டேன்' என்றார். 

ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்றாலும் ஓரளவு கற்ற‌, படித்த அறிவு இருப்பதாலும், கேள்விகளும் விளக்கங்கள் கேட்பதாலும் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருக்கிறேன். படிப்பறிவு இல்லாதவர்களும் பொருளாதார வசதி இல்லாதவர்களும் தான் நம் சுதந்திர இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? 

சமீபத்தில் ஸ்ரீராம் தன் வலைத்தளத்தில் வெளியிட்ட ' மருத்துவ அராஜகங்கள்' என்ற பதிவைப்படித்தேன். சிந்திக்க வைத்த‌ பதிவு அது. ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராய் இருந்த குணால் சாஹாவிற்கே தன் மனைவியைத் தவறான சிகிச்சையிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை என்றால் நம் நாட்டின் மிகச் சாதாரண பிரஜைகள் என்ன செய்ய முடியும்? அது போன்ற அராஜகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது. விடிவு காலம் எப்போது?

 

Tuesday 19 November 2013

வலிகள்!!....!!

பொதுவாய் நம் எல்லோருக்குமே தினம் தினம் விதம் விதமாய் அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. சில மகிழ்ச்சியில் துள்ள‌ வைப்பதாய், சில ஆழ்ந்து யோசிக்க வைப்பதாய், சில தனிமையில் விழி நீர் சிந்த வைப்பதாய்.. எத்தனை எத்தனை அனுபவங்கள் வாழ்க்கை நெடுக நம்மைப்புடம் போடுகின்றன! நம் வாழ்க்கையில் வந்து கடந்து செல்கின்ற சில அனுபவங்கள் தான் வலியைக்கொடுக்கின்றன என்பதில்லை, யாருக்கோ வலித்தால் கூட நமக்கும் சேர்த்தே வலிக்கின்றது. யாருக்கோ கண்கள் கலங்கினால் கூட நம் விழிகளும் ஈரமாகின்றன. வாழ்க்கை முழுமைக்கும் நம் கூடவே இந்த வலிகளும் பயணம் செய்கின்றன!

இரன்டு அனுபவங்கள் இந்த வாரம்! இரண்டுமே மனதில் வலியைக் கொடுத்தவை.

முதலாம் அனுபவம் தெரிந்த ஒரு பெண்ணைப்பற்றியது. சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு யதேச்சையாகச் சந்தித்தேன். வீட்டிற்கு வந்தவர் வழக்கமான சுறுசுறுப்பின்றி சோர்வாகக் காணப்பட்டார். பிறகு பேச முற்பட்டவரின் கண்கள் கலங்கிப்போயிருந்தன. அதுவரையிலும் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு அதிகம் தெரிய வந்ததில்லை. ஒரு முறை, தன் பாட்டி வீட்டிலிருந்து 7 கல் தொலைவிலுள்ள ஹோட்டலிலிருந்து ரவா தோசை வாங்கி வரும்படி கேட்டதற்காக இரவு 10 மணிக்குச் சென்று வாங்கி வந்ததாகக்கூறி வீட்டில் அப்படிப்பட்ட தீராத நிர்ப்பந்தங்கள், தொல்லைகள் இருப்பதாகக்கூறி நொந்து கொண்டார். சொந்தமான சிறு தொழில் நடத்தியும் இடைப்பட்ட நேரத்தில் வெளியில் சென்று வேலை பார்த்தும் இவர் தான் குடும்பத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கிறார். இதைத்தவிர வேறு எதுவும் எனக்கு அவரைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தளர்ந்து போய் அமர்ந்திருந்தவர் மெதுவாக தன்னைப்பற்றிக் கூற ஆரம்பித்தார்.
  
இவரது தாத்தாவிற்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் பிறந்திருக்கிறார்கள். வீட்டின் முத்த மகள் தான் இவரின் தாயார். தாயாரின் சிறிய தம்பியையே இவர் மணந்திருக்கிறர். முதல் குழந்தை உதடுகள் இல்லாமல் பிறந்ததாம். எப்படியிருந்திருக்கும் இவருக்கு! மூன்று முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து குறையை சரி செய்திருக்கிறார். இரண்டாவது குழந்தை கருத்தரித்த போது, அதுவும் அப்படி பிறந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து மருத்துவர்களிடமும் ஸ்கான் செய்து பார்த்து விவாதித்திருக்கிறார். கருக்கலைப்பு செய்து விடவும் முடிவு செய்திருக்கிறார்.  மருத்துவர்கள் ஸ்கானில் குழந்தை நன்றாக இருப்பதாகக் கூற, தாய்மையை மறுபடியும் எதிர்கொள்ள‌ முடிவு செய்திருக்கிறார். குழந்தை பிறந்த போது தான் ஸ்கான் செய்து பார்த்தவர்கள் சொன்னது தவறு என்பதை உணர்ந்திருக்கிறார். அந்தக்குழந்தையும் உதடுகள் இல்லாமலும் தொண்டையில் உள்ளே ஒரு துளையுடனும் பிறந்தது. திடப்பொருள்கள் எது சாப்பிட்டாலும் அது சாப்பிட்டதும் மூக்கின் வழியே உடனே வெளியில் வந்து விடும். அதைப்பார்த்துப் பார்த்து எந்த‌ அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார் இவர்!  இந்தக்குழந்தைக்கும் இரு அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதாம். மூன்றாவது பாக்கியிருக்கிறதாம்.
குழந்தை வளர்ப்பு, தன் சகோதரியையும் தாயையும் கவனித்தல் என்ற எதிலுமே பட்டுக்கொள்ளாமல் இருக்கும் கணவரை நினைத்துப் பொருமுகிறார் இவர். 'தன் சொந்த தாயாரையும் சகோதரியையும் கூடவா கவனிக்க மனம் வராமலிருக்கும் ஒருத்தருக்கு? என் அம்மாவிற்கு இரவு நேரங்களில் ஆஸ்த்மா தொந்த‌ரவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும் கூட நான் தான் அந்த‌ நேரத்திலும் மருத்துவரிடம் ஓட வேண்டும்!' என்று குமுறுகிறார் இவர். ஒன்பது குழந்தைகளைப்பெற்றும் யாருக்கும் தன் தாயை வைத்து பராமரிக்க மனமில்லையாம். 'எங்கள் வீட்டில் வைத்து திடீரென்று இறந்து போனால் என்ன செய்வது? வீட்டு உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?' என்கிறார்களாம். இத்தனைக்கும் தற்போது அந்த மூதாட்டிக்கும் இரண்டு கண்களும் தெரிவதில்லையாம். 'வாழ்க்கை போராட்டம் நிறைந்தது தான். ஆனால் போராட்டம் மட்டும் தான் வாழ்க்கை என்றால் எப்படி இந்த வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழ்வது?' என்று கண்ணீர் விட்டு அழுத அவருக்கு, மனம் முழுவதும் ரணங்களை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் அவருக்கு  என்னால் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியவில்லை!! நல்ல நேரமும் காலமும் அவருக்கு சீக்கிரமே வரும் என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது!!

                                              ***************************************

  சச்சின் டெண்டுல்கரைப்பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. எனக்கும் எழுத சில அனுபவங்கள் பாக்கியிருக்கிறது. 1989ம் வருடம் அவர் முதன் முதலாக பாகிஸ்தான் சென்று விளையாட ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் ஒரு எக்ஸிபிஷன் மாட்சில் விளையாடினார். ஆறுகள் தொடர்ந்து பவுண்டரியைத் தாண்டி பல முறை பறந்து சென்றன. அப்படியே பிரமித்து உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீகாந்த் அவரை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப்பிளந்தது. இது தான் அவரை முதன் முதலாகப்பார்த்தது. அப்புறம் பாகிஸ்தான் சென்று விளையாடியதையெல்லாம் பார்க்க முடியவில்லை. நாளிதழ்களில் படித்ததுடன் சரி. ஷார்ஜாவில் இருந்தபோது சச்சின் 17 வயதில் இங்கிலாந்து சென்று அவர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். அப்போதெல்லாம் இப்போது போல நேரடி ஒளிபரப்பு என்பது இல்லையென்பதால் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு படுத்தவாறே ரேடியோவில் லைவ் கமெண்ட்ரியைக் கேட்டது நினைவுக்கு வருகிறது. ஒரு டெஸ்ட் மாட்சில் இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப் சச்சினின் பந்து பவுண்டரியை நோக்கிப்பறந்ததை தடுக்க முடியாமல் ' வாட் எ செவ‌ன்டீன்!' என்று சொல்லி வியந்து போனது மிகவும் புகழ் பெற்ற‌ வாசகம்.ஷார்ஜாவில் தான் இந்தியா அதிக ஒரு நாள் போட்டிகளை விளையாடியுள்ள‌து. அது போன்ற கூட்டத்தையும் ரசிகர்களையும் விண்ண‌திர எழுந்த ஸ்லோகன்களையும் வேறு எங்கேயும் அதுவரை யாரும் பார்த்ததில்லை. புழுதிப்புயலில் ஆவேசத்துடன் விளையாடிய சச்சினை மறக்க முடியுமா? தோற்றாலும்கூட, 237 ரன்களை இந்தியா அடைந்தால் இறுதி விளையாட்டிற்குத் தகுதி பெறும் என்ற நிலையில் அந்த புழுதிப்புயல்கூட அவரின் ஆவேசத்திற்கு முன் பறந்தோடியது. இந்தியா 237 ரன்களை பெற்றதும் ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஆனந்தக் கூத்தாடியதைப்பார்த்து ஆஸ்திரேலிய காப்டன் ஸ்டீவ் வாஹ் சொன்னார்,' தோற்றுப்போன ஒரு டீம் இப்படி சந்தோஷப்படுவதை நான் இப்போது தான் பார்க்கிறேன்!''  என்று!! அது தான் சச்சின் டென்டுல்கர்! அடுத்த நாள் இறுதிப்போட்டியில் சச்சின் அதே போல ஆவேசத்துடன் விளையாட, இந்தியா ஜெயித்தது. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சொன்னார், ' தூங்கும்போது கூட சச்சின் பந்துகள் என் தலைக்கு மேல் ஆறுகளை நோக்கிப் பறந்தன!' என்று!!

1999 என்று நினைக்கிறேன். தஞ்சை வந்திருந்த போது, என் சகோதரி இல்லத்தில் கிரிக்கெட் மாட்ச் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த வீட்டிலிருந்த குடும்பத்தினர் வந்து அவசரமாக வெளியில் செல்வதாகவும் திரும்பி வர நாலைந்து மணி நேரமாகும் என்றும் சொல்லி அவர்கள் பிள்ளையைப்  அதுவரையில் பார்த்துக்கொள்ள‌ச் சொல்லி என் சகோதரியிடம் சொல்லிச் சென்றனர். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதிருக்கும்‍, என் அருகில் வந்து உட்கார்ந்தவன் தான்! உண‌ர்ச்சிப்பெருக்குடன் கூக்குரல்கள், விமர்சனங்கள், எனக்கு இடை இடையில் விளக்கங்கள் என்று துல்லியமாக ரசித்த அவனைப்பார்த்து அசந்து போயிருந்தேன் நான்!! ஐந்து வயதுக் குழந்தை முதல் தள்ளாடும் வயதில் முதியவர்கள் கூட சச்சினின் ரசிகர்கள் தான்!!

இந்தியாவையும் ஒவ்வொரு இந்தியனையும்  பெருமையடையச் செய்தவர் அவர். கடந்த 15ந்தேதி அவர் உணர்ச்சிப்பெருக்குடன் விடை பெற்ற போது, பிட்சைத்தொட்டு வணங்கிய போது ஆயிரமாயிரம் கண்கள் கலங்கிக்கொண்டேயிருந்தன. என் கண்களும் கலங்க, மனதில் ஒரு இனம் புரியாத வலி!!

Monday 11 November 2013

முத்துக்குவியல்-23!!

அறிவியல் முத்து:

பாக்கு சாப்பிடுவதால் நெஞ்சு வலி உன்டாகுமா?வரும். பாக்கு ஒரு irritantஆக செயல்படுகிறது. அதனால் உண‌வுக்குழலிலும் இரப்பையிலும் காணப்படும் சிலேட்டுமப்படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சு வலி உண்டாகுகிறது.

அதிர்ச்சியளித்த முத்து:

இன்றைக்கு விபத்துக்களும் மரணங்களும் நம்ப முடியாத வகையில் பல விதங்களில் ஏற்படுகின்றன. இங்கே தஞ்சையின் செல்வந்தர் ஒருவருக்கு ஏற்பட்ட மரணம் அதிர்ச்சி அளிக்கக் கூடியது. பல் செட் கட்டியிருந்த 70 வயதிற்கும் மேற்பட்டவர் அவர். சாதாரணமாக உறங்கச் செல்கையில் பல் செட்டைக் க‌ழற்றி வைத்து விட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அது போல அதை கழட்ட முயற்சித்துக்கொன்டிருக்கையில் திடீரென்று விருந்தினர் வர, அதை அப்படியே விட்டு விட்டு விருந்தினரிடம் பேசப்போய் விட்டார். விருந்தினர் சென்ற பிறகு கழட்ட முயற்சித்த பல் பற்றிய நினைவின்றி அமர்ந்தவருக்கு தூக்கக் கலக்கத்தில் தலை சாய்ந்திருக்கிறது. அந்த அதிர்வில் பல் கழன்று உள்ளே சென்று மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ள, மருத்துவரிடம் செல்வதற்குள்ளேயே மூச்சுத் திணறலால் உயிரிழந்து விட்டார் அவர். நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு தீடீர் விபத்தால் ஏற்பட்ட அவரின் மரணம் இங்கு எல்லோரையுமே பாதித்து விட்டது.

சிரிக்க வைக்க முத்து:

5 வயது பெண்:

ஏம்மா உன் முடியில் 2 முடி வெள்ளையாய் தெரியுது?

அம்மா:

அதுவா, நீ அம்மா சொல்வதைக் கேட்காமல் கத்தறப்போ ஒரு முடி வெள்ளையாயிட்டு. நீ சேட்டை பண்ணுற‌ப்போ இன்னொரு முடி வெள்ளையாயிட்டு.குழந்தை:

அப்போ நீ ரொம்பவே சேட்டை பண்ணுவே போலிருக்கு?

அம்மா திகைப்புடன்

ஏன் அப்படி சொல்லுறே?

குழந்தை:

பாட்டியோட முடி எல்லாமே வெள்ளையா இருக்கே?

குறிப்பு முத்து:


குக்கரிலுள்ள ஸ்க்ரூ லூஸானால் குக்கர் சூடாக இருக்கும்போதே முறுக்கி விடவும். அப்படி செய்தால் பிடிகள் அடிக்கடி லூஸாகாது.

ரசித்த முத்து:

வெற்றியின் போது கைத்தட்டும் பத்து விரல்களை விட, சோதனையின் போது கண்ணீரைத் துடைக்கும் ஒரு விரலே உயர்ந்தது.
பேச வேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால்
அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

மருத்துவ முத்து:துள‌சி இலைளை தேங்காய்ப்பால் விட்டு மையாக அரைத்து நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தில் ஏற்படும் அரிப்பிற்கு தொடர்ந்து தடவி வந்தால் நாளடைவில் அரிப்பு சரியாகி விடும்.

புகைப்படங்களுக்கு நன்றி: GOOGLE

 

Wednesday 6 November 2013

மாங்கல்ய பலமருளும் மங்கள நாயகி!!

சென்ற முறை மயிலாடுதுறைக்கு என் சினேகிதியுடன் சென்ற போது, வழியில் இருக்கும் திருமங்கலக்குடியிலுள்ள‌ கோவிலைப்பார்க்க ஆசையாக இருக்கிறது என்றார். அதனால் கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் வழியாக திருமங்கலக்குடி கோவிலுக்குச் சென்றோம். குடைந்தையிலிருந்து ஆடுதுறை சென்று அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சென்றாலும் இக்கோவிலை அடைந்து விடலாம்.இக்கோவிலிலுள் உறைந்திருக்கும் இறைவி மங்களாம்பிகையை வழிபட்டால் மாங்கல்ய பலம் என்றும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

 

இத்தல வரலாறு சுவாரசியமானது. மன்னன் குலோத்துங்க சோழனின் காலத்தில் அலைவாணர் என்னும் அமைச்சர் மன்னனின் வரிப்பணத்தைக்கொன்டு திருமங்கலக்குடியில் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். அதையறிந்த மன்னன் சீற்ற‌மடைந்து அமைச்சரை சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிட, அந்த அமைச்சரின் மனைவி திருமங்கலக்குடி இறைவி மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்ல்யக்காப்பு தருமாறு நெஞ்சுருகி அழுதாள். இருப்பினும் மன்னனின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, அமைச்சரின் உயிரற்ற‌ உடல் அவரின் கோரிக்கப்படி திருமங்கலக்குடியில் தகனம் செய்ய வேண்டி அங்கே எடுத்துச் செல்லப்பட்டது. அவர் உடல் திருமங்கலக்குடிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் மீண்டும் உயிர் பெற்றார். அதனால் அன்று முதல் தன்னை வழிபடுவோர்க்கு இறைவி மங்கள நாயகி மாங்கல்ய பலம் அருளுவதாக தல வரலாறு சொல்கிறது.

 

 
நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் அருகிலுள்ள சூரியனார் கோவில். தோஷத்தை நீக்கியதோ திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள  பிராணவரதேஸ்வரர். இதைப்பற்றியும் ஒரு சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. 

காலவர் என்ற தவத்தில் சிறந்த முனிவர் தனக்கு வரப்போகும் தொழு நோயை அறிந்து அதைப்போக்க‌ முன்வினைப்பயன்களுக்கேற்ப பலன்கள் தரும் நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். நவக்கிரகங்களும் அவரது தவத்தின் பயனாய் நேரில் தோன்றி அவருக்கு குஷ்ட நோய் பீடிக்காதிருக்க வரமருளினார்கள். இதனை அறிந்த பிரம்மா கடும் சினம் கொன்டார். நவக்கிரகங்களை அழைத்து, " சிவனின் ஆணைப்படியும் கால தேவனின் வழிகாட்டுதலின் பேரிலும் அவரவர் வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்கள் மட்டுமே அளிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கில்லை. எல்லையை மீறி தன்னிச்சையாக நடந்ததால் அதே தொழு நோய் உங்களை பீடிக்கட்டும்' என்று சாபமிட்டார். பிரம்மனின் சாபத்தினால் அவர்களுக்கு தொழு நோய் பற்றியது. பிறகு மன்னிப்பு கேட்டு அரற்றிய நவக்கிரகங்களுக்கு சாப விமோசனமும் தந்தார் பிரம்மன். அதன் படி நவக்கிரகங்கள் திருமங்கலக்குடி வந்து கடும் தவம் இயற்ற‌த்தொடங்கினர். 

 திருமங்கலக்குடிக்கு வந்த அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி கடும் உண்ணா நோன்பு இருந்து திங்கள் கிழமைகள் மட்டும் வெள்ளெருக்க இலையில் தயிர் சாதம் புசித்து நவக்கிரகங்கள் தவம் புரிந்து வந்தன. 79ம் நாள் இறைவனும் இறைவியும் காட்சி தந்து அவர்களின் தொழு நோயைப்போக்கி, 'அருகில் ஒரு ஆலயம் அமைத்து அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு தோஷங்களைத்தீருங்கள்' என்று உபதேசித்தார்கள். காலவ முனிவரும் தன்னால் இத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருந்தி, நவக்கிரகங்களுக்கு அருகில் ஒரு கல் தொலைவில் ஒரு ஆலயம் அமைத்துத் தந்தார். அதுவே புகழ் பெற்ற சூரியனார் கோவில் ஆயிற்று. அதனால் திருமங்கலக்குடியை வழிபட்ட பிறகே சூரியனார் கோவிலை வழிபட வேன்டும் என்பது தொன்று தொட்டு வந்த‌ மரபாக உள்ளது.
 


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோத்ச‌வத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மங்களாம்பிகை என்ற‌ மங்களநாயகி அம்மன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார் 

இறைவன் பிராணவரதேஸ்வரர் என்றும் பிராணநாதேஸ்வரர் என்றும் பிராணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை என்றும் மங்கள நாயகி என்றும்  அழைக்கப்படுகிறார். 

உடலில் நோயுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இறைவனுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நிவேதனம் செய்து அதை சாப்பிட்டு வந்தால் வியாதிகள் நீங்கப்பெறுவார் என்பது இங்கு தொடர் வரலாறு! 

இத்தலம் அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். ஊர் மங்கலக்குடி, அம்பாள் மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம், மங்கள விநாயகர் என மங்களமே உருவாக இருப்பதால் இது, பஞ்ச மங்களத்தலம் எனப்படுகிறது.