Monday, 15 February 2021

எண்ணங்கள்!!!

ஆறுதலும் தைரியமும் கொடுத்து அன்புடன் எழுதிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய நன்றி!!


 கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 25 நாட்களுக்குப்பிறகு மீண்டும் வலைத்தளம் வருகிறேன்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கே ஐக்கிய அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பத்திரிக்கைகளில் செய்தி வருகின்றன. ஆரம்பத்தில், கடந்த மார்ச்சில் இருந்த அதிக தாக்கம் இப்போது இருக்கிறது. ஆனாலும் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் திறமையாக சமாளித்து வருகிறது அரசு. மார்ச்சுக்குள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று சொல்லுகிறது அரசு. 

அனைத்து வியாபாரங்களும் படுத்து விட்டன. பெரிய பெரிய கம்பெனிகள் தங்கள் தொழிலாளர்களை வெளியே மொத்தமாக அனுப்புகின்றன. உணவகங்கள் அத்தியாவசியமான தொழிலாய் போய் விட்டதனால் ஓரளவு உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. அதனாலேயே மளிகை. காய்கறி வியாபாரம் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. எங்கள் உணவகங்களும் பல சட்ட திட்டங்களுடன் இயங்கி வருகின்றன. சென்ற வருடம் போல இந்த சமயத்திலும் மீண்டும் பாதி இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்று சுகாதார அலுவலகம் சொல்லி விட்டது. 

ஒரே ஒரு நல்ல விஷயம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வாடகையை ஓரளவிற்கு குறைத்து விட்டன. வீடுகள் நிறைய காலியாகி விட்டன. இருக்கிற கம்பெனிகளும் பாதி சம்பளம் தான் கொடுக்க முடிகிறது ஊழியர்களுக்கு. துபாயைப்பொறுத்த வரை, சுற்றுலா தான் நாட்டின் வருமானத்திற்கு பெருமளவில் ஆதாரமாக இருக்கிறது. அதில் விழுந்த அடியால் நிறைய சுற்றுலா கம்பெனிகள் பல இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. நிறைய சுற்றுலா கம்பெனிகளின் உரிமையாளர்கள் வேறு தொழில்களில் இறங்கி விட்டார்கள். என் மகனும் சுற்றுலா கம்பெனி வைத்திருப்பவர். இன்னும் சில மாதங்களுக்கு விமானங்கள் முழுமையாக இயங்க முடியாத நிலையில் எல்லா நாடுகளுமே இருப்பதால் என் மகனும் எங்கள் உணவக தொழிலில் முழுமையாக இறங்கி விட்டார். ஆச்சரியம் என்னவென்றால்  இளம் தம்பதிகள் கொரோனாவைப்பற்றி கவலைப்படாமல் துபாய்க்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். மாஸ்க் போட்டுக்கொண்டு, முதல் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து ரசிக்கிறார்கள். கொரோனோவைப்பார்த்து அலுத்துப்போய் விட்டது போலிருக்கிறது அவர்களுக்கு!

சமீபத்தில் தான் அதுவும் கொரோனா பாதித்த பிறகு தான் படித்தேன் கொரோனா பாதித்தால் நாவின் சுவை நரம்புகள் வேலை செய்யாது என்பதை. அது தான் கொரோனா பாதிப்பின் முதல் அடையாளமாம். எங்கள் அனைவருக்குமே நாக்கு மரத்துப்போய் எந்த சுவையுமே 10 நாட்களுக்கு தெரியாமல் இருந்தது. அடுத்தது முகரும் சக்தியும் போய் விடுகிறது. அப்புறம் தான் வரட்டு இருமல், காய்ச்சல், இருமல், உடம்பு வலி என்று தொடர்கிறது. மூச்சுத்திணறல் பற்றி கேட்ட போது, எங்கள் டாக்டர் " கொரோனா பாதித்ததே தெரியாமல் மிகவும் தாமதமாக கண்டு பிடித்து அதற்குள் அதன் பரவல் உடலில் அதிகமாகிப்போனால் எப்படியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும். ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் அந்த மாதிரி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. முதல் பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் வரவில்லையென்றால் அதற்கப்புறம் வராது. " என்று சொன்னார். 

வெளியே செல்ல வழியில்லாமல் தனிமைப்படுத்திக்கொண்டு விட்ட‌தால் எங்கள் உணவகங்களை மேலாளர்கள் தான் பார்த்துக்கொண்டார்கள். தொலைபேசி வழியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தோம். 

திடீரென்று ஒரு உணவக மேலாளரின் மனைவி ஊரில் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அவரை உடனேயே அனுப்பி வைத்தோம். அவர் முப்பதாம் நாள் காரியங்களை முடித்து விட்டு திரும்பி வந்தார். அவர் வந்து ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் முக்கியமான சமையல்காரருக்கு மயக்கம் ஏற்பட, பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு ஆஞ்சியோ செய்து தான் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அப்போது கூட, அவர் ஊருக்குப்போக விரும்பவில்லை. நாங்கள் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் செய்திருப்பதால் இங்கே சிகிச்சையோ அறுவை சிகிச்சையோ மேற்கொண்டால் மிகவும் குறைந்த செலவிலேயே சிகிச்சை முடிந்து விடும். அவருக்கு ஆஞ்சியோ செய்ததில் மூன்று அடைப்புகள் இருந்ததால் இன்றைக்கு அவருக்கு மூன்று ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மொத்த செலவும் நம் இந்திய ரூபாயில் பத்தாயிரம் தான்!! 

பல வருடங்களுக்கு முன்பு. என் கொழுந்தனாருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது எங்கள் உயிரே எங்களிடம் இல்லை. அந்த அளவு பதட்டமும் க‌வலையும் இருந்தன. இப்போதோ எல்லாமே சர்வ சாதாரணமாக போய் விட்டது. 


18 comments:

ஸ்ரீராம். said...

கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருப்பது சந்தோஷம்.  அதற்கப்புறமும் அது சிலரை பாடாய்ப்பப்டுத்தும்.  செப்டம்பரில் நாங்கள் அதிலிருந்து மீண்டிருந்தாலும் அதன் பின்விளைவுகள் வெவ்வேறு விதமாய் என்னை, மனைவியை இன்னமும் ப்படுத்திக் கொண்டிருக்கிறது.   கவனமாக இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் பூரண குணம் அடைய எங்களது பிரார்த்தனைகளும். தீநுண்மி காலத்தில் மக்கள் அடைந்த இழப்புகள் அதிகமே. விரைவில் சூழல் சரியாக வேண்டும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனைகளும்.

ராமலக்ஷ்மி said...

பூரண குணமாக எனது பிரார்த்தனைகளும்!

இங்கும் முடங்கிய தொழில்கள் இப்போதுதான் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

KILLERGEE Devakottai said...

நலம் பெற வேண்டுகிறேன்.
வாழ்க நலம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் நலமாக அமையட்டும் அம்மா...

Geetha Sambasivam said...

விரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறோம். கவனமாக இருங்கள். உணவுக்கட்டுப்பாடும் கடைப்பிடிக்கணுமோ? மெல்ல மெல்லவே எல்லாவற்றையும் கவனியுங்கள். அவசரம் வேண்டாம்.

துரை செல்வராஜூ said...

எல்லாச் செய்திகளும் மனதை அழுத்துகின்றன... எல்லாம் வல்ல இறைவன் அருளால் பிரச்னைகள் தீர்ந்து அனைத்தும் நலமாகட்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஸ்டன்ட் வைக்க மொத்த செலவே பத்தாயிரம் என்பது வியக்க வைக்கிறது
தாங்களும் தங்களின் குடும்பத்தினரும் கவனமாக இருக்கவும்

அரண்மனை அன்னக்கிளி அதிரா:) said...

ஓ மனோ அக்கா, இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, நீங்களும் கோவிட் டால் பாதிச்சு நலமாகி விட்டீங்களோ.. ஓ தாங் கோட்... எல்லோரும் நலமாக இருக்கோணும்.. எப்போ எங்கே யாருக்கு வருகிறது என்றே தெரியாமல் இருக்குதே இப்போ..

மனோ சாமிநாதன் said...

அக்கறைக்கும் அறிவுரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
நீங்கள் சொல்லியிருப்பது போல, பாதிப்புகள் இன்னும் எங்களைத் தொடர்கின்றன. கவனமாக இருந்து வருகிறேன்.

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

அன்பான அக்கறைக்கு இனிய நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் நல்வார்த்தைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான அக்கறைக்கு மனமார்ந்த நன்றி கீதா!
உணவுகள் எவற்றிற்கும் கட்டுப்பாடுகள் சொல்லவில்லை. பார்க்கப்போனால் இப்போது அவசியம் என்பதாலும் சத்து அதிகம் தேவைப்படுவதாலும் மருத்துவர், முட்டை நிறைய சேர்க்கச் சொன்னார். immunityக்கு நிறைய மருந்துகள் எடுக்கச் சொன்னார்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் நல்வார்த்தைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

அன்பான அக்கறைக்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் அக்கறையான நல்வார்த்தைக்கும் அன்பு நன்றி அதிரா!