Sunday 21 April 2019

இஸ்லாமிய நாட்டில் இந்து கோவில்!!

இரு மதங்கள் இணைந்து ஆரம்பித்த ஒரு அருமையான கோவில் கட்டுமான அடிக்க‌ல் நாட்டு விழா உலகில் வேறெங்கும் நடந்திருக்காது என்று நினைக்கிறேன். நேற்று நட‌ந்த நிகழ்வுகள் இந்திய நாட்டில் இந்து மதத்தை கெளரவித்து ஆட்சி செய்த அக்பரை நினைவூட்டியது!

ஒரு இந்தியப்பெண்மணியாக பெருமையடையும் அதே நேரத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிற‌ந்த வழிகாட்டியாக திகழும் அமீரகத்திற்கு கடந்த 43 ஆண்டுகளாய் நிறைவாகவும் அமைதியாகவும் இங்கு வசிப்பதற்கும் மனதால் நன்றியும் சொல்லுகிறேன்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்கி துபாய்‍ அபுதாபியை இணைக்கும் சாலையான ஷேக் ஜாயீத் சாலையில் அல் முரைக்கா பகுதியில் உள்ள 10.9 ஹெக்டேர் பரப்பள‌வு இடத்தை இந்து கோவில் கட்டுவ்தற்கு அமீரக அரசு அனுமதி தந்துள்ளது.இந்தக்கோவில் கட்டுவதற்கும் அதனை நிர்வகிக்கவும் குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் நகரிலுள்ள பாப்ஸ் [போச்சன்வாசி ஸ்ரீ அக்சார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா] என்ற அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமீரகத்தலைநகரமான அபுதாபியில் கடந்த வருடம் பிப்ரவரியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற்து. அப்போது அமீரகம் வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டு விழா மற்றும் கோவில் வடிவத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நேற்று காலையில் 2 மணி நேர பிரம்மாண்ட பூஜையுட‌ன் இந்து கோவில் கட்டுமான பணிகள் தொடங்கின.இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இளஞ்சிவப்பு கல்லைக்கொண்டு முதற்கட்ட அடித்தள‌ம் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த‌ பூஜை 'சிலன்யாஸ் விதி' என்று அழைக்கப்ப‌டுகிறது. பாப்ஸ் அமைப்பின் மதத்தலைவர் மகந்த் சுவாமி மக‌ராஜ் த‌லைமையேற்று நடத்தினார். அரேபிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சிற‌ப்பு செய்தார்கள்.பூஜை நிறைவடைந்ததும் காலை 10.50க்கு அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த‌க்கோவில் கட்டுவதற்கான அனைத்து கற்கள், இளஞ்சிவப்பு கற்கள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் கட்டப்பட இருக்கும் முதலாவது இந்து கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெறுகிறது. இது கட்டி முடிக்க திர்ஹம்ஸ் 450 மில்லியன் ஆகும் என்று நிர்ண்யிக்கப்பட்டுள்ளது.[ இந்திய ரூபாய்க்கு 18.88ஆல் பெருக்கிக்கொள்ளவும்]அடுத்த ஆண்டிற்குள் இந்தக்கோவில் முழுமையடையும். கோவில் வளாகத்திலேயே இந்து திருமணங்கள், பண்டிகை கொண்டாட்ட‌ங்கள்  நடைபெறவும்  வசதி செய்து தரப்பட உள்ளது.

பின்னர் மகந்த் சுவாமி மக‌ராஜ் பேசிய போது இந்தக் கோவில் சகிப்புத்தன்மைக்கும் உலக அமைதிக்கும் இந்தியாவிற்கும் அமீரகத்திற்குமான நல்லுறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்றார். 

Thursday 18 April 2019

கம்போடியா மூன்றாம் நாள் தொடர்ச்சி!!!

Banteay Samré Temple

ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் மத்தில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டாம் சூர்யவர்மன் கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாலயத்தின் கட்டிடப்பணி இரண்டாம் யசோவர்மனாலேயே நிறைவுற்றது. Samré என்பது இந்தோசீனாவின் பூர்வீகக் குடிகளின் பெயராகும். முழுமையாக விஷ்ணு ஆலயமாகவே எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடமுறையை Angkor Wat என்னும் வகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்தியிருக்கின்றார்கள்.


மாலையில் படகில் சுற்றிப்பார்ப்பதும் கடைகளுக்குப்போவதுமாய் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு விபத்தால் நான் செல்ல முடியாமல் என் கணவரை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தேன். அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இவை!

எங்களின் கம்போடியா பயணம் முடிந்து மறுநாள் வியட்நாம் புறப்பட்டோம்!!!

Wednesday 10 April 2019

கம்போடியா-மூன்றாம் நாள் காலை!!

Banteay Srei


இந்தக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சியாம் ரீப் நகரத்தில் இருந்து Banteay Srei 38 கி.மி தொலைவில் இருக்கின்றது.அரசன் ராஜேந்திரவர்மனின் அரச சபை அதிகாரிகளான யஜ்னவராஹா என்பவரும் விஷ்ணுகுமாரா என்பவரும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் இது.யஜ்னவராஹா இதற்கு முன் ஆட்சி செய்த அரசன் ஹர்ஷவர்மனின் பேரனாக இருந்தாலும் புத்த தர்ம நியதிகளை பின்பற்றும் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தார். இந்தக்கோவிலைச்சுற்றி ஈஸ்வரபுரா என்ற நகரமும் இருந்தது.இந்தக்கோவில் சிவப்புக்கற்களால் கட்டப்பெற்ற மிக அழகிய கோவில். இந்தக்கல் மரத்தைப்போலவே செதுக்கல்களுக்கு வளிந்து கொடுக்கும் தன்மையுடையது. இறைவன் பெயர் திருபுவன மஹேஸ்வ்ரர். இருப்பினும் மஹாவிஷ்ணுவிற்கும் இங்கு தனிக்கோவில் இதனுள்ளேயே இருந்தது. 1303ம் வருடத்திற்குப்பிறகு இக்கோவில் புதையுண்டு போனது மற்ற‌ கோவில்கள் போல்வே. மீண்டும் 1914ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. மிகவும் சுவார‌ஸ்யமான ஒரு விஷயம், 1923ம் வருடம்  ANDRE MALRAUX என்பவரால் சில சிலைகள் திருடப்பட்டன. இவர் பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய எழுத்தாளர் என்பதோடு, கலை நிபுணரும்கூட. அதோடு அரசு அமைச்சராகவும் இருந்தவர். விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டு, சிலைகளும் மீட்கப்பட்டன.


Banteay Srei என்ற இந்த சிவனாலயத்தைக் கண்டபோது உண்மையிலேயே அதன் அழகுபிரமிக்க வைத்தது.  யசோதபுரா/ அங்கோர் (Yashodapura/Angkor) என்ற இடத்தை மன்னன் ராஜேந்திரவர்மன் தன் ஆட்சியில் தலைநகராக அமைத்து கி.பி 944 - 968 ஆண்டு வரை தன் ஆட்சியை நடாத்தியவன். இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான்.ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதனா (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான். இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.இந்த ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கைமர் பேரரசு எழுச்சியோடும் செழிப்போடும் இருந்த காலப்பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத் திருப்பணி இராஜேந்திரவர்மனின் பிரதம ஆலோசகராக இருந்த வேதியரால் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் நிறைவுற்றதாகச் சொல்லப்படுகின்றது.நுட்பமான சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கட்டிட உபயோகத்துக்கான கற்கள் கூட மற்றைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு pink sandstone எனுமோர் வகையான சலவைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்டிட உபயோகத்துக்குப் பயன்பட்ட சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண காலை 10.30 மணிக்கு முன்னரோ அல்லது மதியம் 2 மணிக்குப் பின்னரோ செல்வதோ உகந்தது என வழிகாட்டப்படுகின்றன. இந்த ஆலயத்தின் ஓவ்வொரு சுவர் இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல்  சிற்பச் செதுக்கு வேலைகளில் இதிகாச புராணக் கதைகள் பேசப்படுகின்றன.

Wednesday 3 April 2019

இரண்டாம் நாள் மாலை- தொடர்ச்சி!!!!!

இத்த‌னை நாள் அதிகமான சிதிலங்கள் உள்ள கோவில்களைத்தான் பார்த்தோம். ஆனால் கம்போடியா வரலாற்றில் இவை மிகவும் சரித்திரப்புகழ் பெற்றவை என்பதால் சுற்றிப்பார்க்க வேண்டிய கோவில்களில் இவையே முதலிடம் பெற்றதாய் எங்களுக்காக அட்டவணை போட்டிருந்தார்கள். இனி பார்க்கப்போவது சிதிலங்கள் குறைவான ஆனால் அழகிய கோவில்களை!

Ta Prohm Temple, Angkor, Cambodia.  

ஏழாம் ஜயவர்மன்  அண்டை நாடான வியட்நாமின் தாக்குதல்களில் பல வருடங்கள் ஆக்ரமிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுக்கிடந்த கைமெர் பேரரசை அழிவினின்றும் 1181 ஆண்டு வாக்கில் கம்போடியாவை மீட்டெடுத்தான். அதன்பின் இந்த கோவிலை ஏழாம் ஜயவர்மன் கட்டினான் என்று சொல்லப்படுகிறது.தன் தாயாரின் நினைவாக , கடவுள் சிலையை தன் அன்னையின் முகச்சாயலில் கட்டியுள்ளான். இக்கோவில் ' ராஜவிஹாரம்' என்றழைக்கப்பட்டது. தந்தைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இன்னொரு கோவிலும் கம்போடியாவில் உள்ளது.
கம்போடிய நாட்டில் மண்ணிலும், காடுகளிலும் புதைந்து போன ஆலயங்களில் இவ்வாலயம் மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது என்பதை இப்போது எஞ்சியிருக்கும் சிதைவுகளும் சிதிலங்களும் சாட்சியங்களாக கண்முன் காட்டி நிற்கின்றன.


எங்கள் கம்போடிய வழிகாட்டி!
கம்போடிய நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக புதையுண்டு போய் மரஞ் செடி கொடிகளால் சூழப்பட்டிருந்த இந்த‌ ஆலயம் மீட்கப்பட்டு இப்போது ஒரு பகுதி மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக ஓரளவு திருத்தம் செய்யப்பட்டு காட்சி தருகின்றது. 

இங்கே பதிந்திருக்கும் கல்பலகை இங்கே 18 மத குருக்கள், 615 நடனமாதர்கள் உள்பட 12500 பேர்கள் வசித்ததாகவும் தங்கமும் முத்துக்களும் பட்டுமாக இறைந்திருந்த செல்வத்தை அவர்கள் பாதுகாத்து வந்ததாகவும் சுற்றியிலும் இருந்த கிராமங்களில் வசித்த 80000 பேர்கள் இவர்க‌ளுக்கான உணவு மற்றும் தேவைப்பட்ட பொருள்களை வினியோகிக்கவும் அனைத்து சேவைகளையும் செய்ததாகவும் கூறுகிறது.


வடக்கு, தெற்குப்பகுதி கோவில்கள் அரச குரு ஜயமங்களார்த்தனுக்கும் அரசனின் மூத்த சகோதரனுக்காகவும் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாடு முழுமையும் இருந்த மருத்துவ மனைகளுக்கு இந்தக்கோவிலிலிருந்து தான் உணவும் தேவைப்பட்ட பொருள்களும் வினியோகம் செய்யப்பட்டதாம்!!! ஒரு காலத்தில் பாசமும் செல்வமும் கலைத்திறனும் அபிரிதமாக பொங்கி வழிந்த நாடு என்பது புரிகிற்து.வலிமையான வைரம் பாய்ந்த‌ மரங்கள், சிதைந்து விழப்போன கட்டிடத்தை தாங்கி இறுகத் தம் கிளைகளால் பற்றி முறுக்கியிருப்பது எங்குமே காண முடியாத ஒரு அதிசயம்.   இவை என்ன மரங்கள் என்பது சரியாக தெரியவில்லை. சிலர் பருத்தி மரங்கள் என்கிறார்கள். சில ஆல மரங்கள் என்கிறார்கள்! ஆனால் இத்தனை பிரம்மாண்டமான மரங்களை வேறெங்கும் பார்த்ததாக நினைவில்லை!