Thursday 21 December 2023

முத்துக்குவியல்-70!!

 வாழ்நாள் முழுவதும் பேசவே முடியாதவள்  என்று மருத்துவர்களால் தீர்மானம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தை இன்று உலகிலேயே ஐக்யூ அதிகமான பெண்ணாக உருவாகி பல்வேறு விஞ்ஞானிகள், உலகின் புகழ்பெற்ற மகத்தானவர்கள் முன் 15 வயதிலேயே உரையாற்றி, 23 வயதில் இன்று மகத்தான சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி இதோ:

சாதனை முத்து:

இளம் வயதிலேயே தன் அறிவுக்கூர்மையால் பல சாதனை நிகழ்த்தி வருபவர் விலாசினி. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமாரசாமி, சேது ராகமாலிகா ஆகியோரைப்பெற்றோராக கொண்ட விலாசினி பிறந்த போது குறை மாதக் குழந்தை. பேசவே என்றும் முடியாது, 30 நாட்கள் கூட வாழ இயலாவர் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.

பிறந்த 41வது நாளிலிருந்து தினமும் 20 மணி நேரம் தனது தாயிடம் பேசுவதற்காக பயிற்சி பெற்று, ஒன்பதாவது மாதத்திலேயே பேசத்தொடங்கியவர். இரண்டரை வயதிலேயே மேடையேறி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்.

சராசரி மனிதர்களுக்கான நுண்ணறிவுத்திறன். ஐக்யூ லெவல் 90 முதல் 110 வரை இருக்கும். விசாலினிக்கோ ஐக்யூ லெவல் 225. இது உலகிலேயே அதிகம்.தொடக்கப்பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை ஒரே கல்வியாண்டில் முடித்து அடுத்த வருடம் மூன்றாம், நான்காம் வகுப்புகளை அதே ஆண்டிலேயே முடித்தார். எட்டாவது வகுப்பு முடித்த நிலையில் சிறப்பு அனுமதியோடு விருதுநகர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கணினி அறிவியலில் சேர்ந்து நான்காண்டு படிப்பை மூன்று ஆண்டுகளிலேயே முடித்து 96 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றார். அமெரிக்க முன்னணி நிறுவனமான சிட்கோவின் சி.சி.என்.ஏ தேர்வில் 12 வயது பாகிஸ்தான் மாணவி இர்டிஸா ஹைதரை தன் 10வது வயதிலேயே முறியடித்தார். பி.டெக் முடித்த பின் பல நாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் வந்த போதிலும் உலகின் முன்னணி பல்கலைக்கழங்களிடமிருந்து மிக அதிக கல்வித்தொகையுடன் மேற்படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் வந்தும் இவர் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே இரண்டாண்டு எம்.டெக் படிப்பை 98 சதவிகிதம் பெற்று ஒன்றரை ஆண்டுகளிலேயே மீண்டும் முதல் மாணவியாக தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். 

தற்போது செயற்கை நுண்ணறிவுத்துறையில் பி.எச்.டி படிப்பிற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

15 வயதிலேயே இவரின் திறமையை வியந்து இந்திய வெண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவில் உரையாற்ற அழைப்பு விடுத்தது. இஸ்ரோ இயக்குனர் தலைமையில் 700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் இவர் ' புதிய தகவல் தொழில் நுட்பங்கள்' குறித்து விரிவாக உரையாற்றினார்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 15 வயது மாணவியான விசாலினிக்கு இஸ்ரோ ஒரு ஆராய்ச்சிப்பணியை அவ்ழங்கியது. 2 ஆண்டுக்ளில் முடிக்க வேண்டிய அந்தப்பணியை 35 நாட்களில் முடித்து நாட்டிற்கு சமர்ப்பித்தார்.

இவருக்கு 11 வயதானபோதே 15 சர்வதேச கணினி மாநாடுகளுக்கு தலைமை விருந்தினராஆ அழைக்கப்பட்டு கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங் குறித்து சிறப்புரையாற்றினார்.

தமிழக அரசு நான்காண்டுகளுக்கு முன்பே, 11ம் வகுப்பு ஆங்கிலப்படநூலில் விசாலினியைப்பற்றிய பாடத்தை சேர்த்தது.

பார்வைக்குறைபாடு உள்ள‌ மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியின்றி தாங்களே புத்தகங்களை வாசிக்கும் விதமாக ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். அது விரைவில் உபயோகத்துக்கு வரவுள்ளது.

தற்போது தகவல் தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்னறிவை அடிப்படையாக வைத்து பாதுகாப்பு சார்ந்து சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் இவர். இவரது எதிர்கால இலட்சியம் அறிவியல் துறையில், இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத்தர வேண்டும் என்பதாகும்.

சாதனை முத்து-2

இந்த இதய மருத்துவர் ஆசியாவிலேயே அறுவை சிகிச்சையின்றி வால்வுகளை மாற்றி வைக்கும் திறன் படைத்தவர். இவரின் பேச்சுத்திறனையும் இந்த வீடியோவில் ரசித்த‌போது பிரமித்துப்போனேன். உடலின் பல பாகங்களை இப்படியெல்லாம் இந்த அளவிற்கு ரசனையோடு பேச முடியுமா? மனதில் இவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கினேன்!! கேட்டு ரசித்து அனுபவியுங்கள்!!

இவரைப்பற்றி மேலும் அறிய: https://www.saisatish.com/


Monday 16 October 2023

சமயங்களும் அன்பும்-பகுதி-2 !!!!!!

 திருவரங்கத்தில் சமய ஒற்றுமை!!

திருவரங்கத்தில் தர்மவர்மனால் ஏற்கெனவே எழுப்பப்பட்ட திருவரங்கனின் முதல் கோயில், காவிரி வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், பின்னர் கிள்ளிவளவனால் புதுப்பிக்கப்பட்டதுதான் இப்போது இருக்கும் திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

ஜடவர்ம சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின், தமிழர் ஆட்சி பல கைகளுக்கு மாறிட,     இறுதியாக முகலாயர்களின் படையெடுப்பு 1310-ம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. டெல்லி சுல்தானின் தலைமைத் தளபதியான மாலிக் காஃபூரின் முரட்டுத்தனமான தாக்குதலில் பாண்டியர்கள் வீழ்ந்து விட, திருவரங்க கோயிலின் கருவூலத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களைக் கைப்பற்றிய மாலிக் காஃபூர்,  தனது வெற்றியின் நினைவாக ஆலய உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலையையும் டெல்லிக்குக் கொண்டு செல்கிறான்.


டெல்லி அரசவையில் அனைவருக்கும் முன்னால், பாண்டிய நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற செல்வத்தை சுல்தானுக்குப் பரிசளிக்கிறான் மாலிக் காஃபூர். அப்போது மாலிக் காஃபூர் கொண்டுவந்த அரங்கன் சிலையும், அதன் முகத்தில் இருந்த வசீகரமான பொலிவும் சுல்தானின் செல்லமகள் சுரதானியை ஈர்க்க, அவள் "வாப்பா... இந்த அழகிய சிலையை நான் வைத்துக் கொள்கிறேன்!" என்று தந்தையிடம் கேட்கிறாள்.

தந்தையும் அதற்கு சம்மதிக்க, அரங்கனின் சிலையை எடுத்துக்கொண்ட சுரதானி, அதைத் தன்னுடனேயே தனது அறையில் வைத்துக் கொள்கிறாள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அரங்கனை சிலையாக இல்லாமல் உயிருள்ளதாகவே கருதுகிறாள் சுரதானி. அத்துடன் அரங்கனின் சிலையை நாளும் குளிப்பாட்டி, ஆடையுடுத்தி, மலர்களால் அலங்கரித்து, உணவு சமர்ப்பித்து என ஒவ்வொரு நாளும் விழித்தது முதல் உறங்கும்வரை கிடைக்கும்போது எல்லாம் அரங்கனுடன் நேரம் செலவிட ஆரம்பிக்கிறாள். மெல்ல, தன்னையறியாமல் அரங்கன் மீது காதலும் கொள்கிறாள்.


அதேசமயம், அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த, திருக்கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. 

இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.

தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற அந்த நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேரும் டில்லி சென்று அரசரை இசையினாலும் நாட்டியத்தினாலும் மகிழ்விக்கிறார்கள். அரசனும் மகிழ்ந்து அவர்களுக்கு அளவற்ற செல்வங்களை வழங்க முடிவெடுக்கும்போது, தங்களுக்கு பொன்னும் பொருளும் வேண்டாம் என்று மறுத்த அவர்கள், அன்று ஏகாதசி என்பதால் தங்களுக்குப் பிடித்தமான அரங்கனின் சிலையைத் தந்தால் மகிழ்வோம் என்று சொல்ல, சுல்தானும் தனது வாக்குத் தவறாமல் இருக்க அதற்கு ஒப்புக்கொள்கிறார். சிலையைக் கொடுக்க சுரதானி ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதால், இளவரசி உறங்கியபின், அவளுக்குத் தெரியாமல் அவர் அரங்கனை எடுத்துக்கொடுக்க, திருவரங்கத்திற்குத் திரும்புகிறது தலைமை பட்டருடன் பயணித்த இசைக்குழு.

காலையில் கண்விழித்த இளவரசி சுரதானி அரங்கன் சிலையைக் காணவில்லை என பதறியழுகிறாள். சிலையை மீட்டுத்தருமாறு தந்தை சுல்தானைக் கேட்கிறாள். ஆனால் சுல்தான் அதை மறுத்துவிட மனமொடிந்த சுரதானி, உண்ணாமல், உறங்காமல், நோய்வாய்ப்பட.. வேறு வழியின்றி அவளையே தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி, திருவரங்கத்திலிருந்து அரங்கனைத் திரும்பவும் எடுத்துவரப் பணிக்கிறார் சுல்தான்!


அதேநேரம், இவர்கள் வரும் தகவலை முன்கூட்டியே அறிந்த திருவரங்கத்தின் தலைமை பட்டர், ஆலயத்திலேயே ஒரு வில்வமரத்தடியில் பத்மாவதித் தாயார் சிலையைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகிறார்.

குதிரையில் பயணித்து திருவரங்கம் வந்துசேர்ந்த சுரதானி, அரங்கன் கோயிலில் உற்சவர் சிலை இல்லாமல் கோயில் மூடியிருப்பதைக் கண்டு, அங்கேயே மயக்கமடைந்து விழுகிறாள். அவள் உடலிலிருந்து ஓர் ஒளி எழுந்து, அரங்கனுடன் சேர்ந்ததைக் கண்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

தங்களது பிரிய இளவரசி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் கொண்ட மாலிக் காஃபூர், கோயிலைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கேயே கொன்றுவிடும்படி உத்தரவிட யுத்தம் அங்கு நடக்கிறது.

ஆனால், உண்மையை உணர்ந்த சுல்தானோ, தனது படையை டெல்லிக்குத் திரும்புமாறு உத்தரவிடுகிறார். மேலும் தனது மகளின் அரங்கன் மீதான அன்பை உணர்ந்த அந்த சுல்தான், அவள் இறந்த அந்த திருவரங்கக் கோயிலுக்கு ஏராளமான செல்வத்தை எழுதியும் வைக்கிறார்.

ஒருநாள், தலைமை பட்டரின் கனவில் தோன்றிய அரங்கன், சுரதானியை தனது மனைவியருள் ஒருவராக ஏற்றுக் கொண்டதை அறிவிக்க, அன்றிலிருந்து அரங்கனின் நாச்சியார்களில் ஒருவராக, 'துலுக்க நாச்சியாராக' பக்தர்களால் சுரதானி ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது.


அரங்கமாநகரின் இதயமாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள்.


மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள்.

இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். 

மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.


திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். 

மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். 

இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். 

சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.

முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். 

அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். 

அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது.

‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு.

எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது.

‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.

மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.

இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.

காதலுக்கும் அன்புக்கும் மதம் என்ற ஒன்று இல்லை என்பதை அரங்கநாதரே அகிலத்துக்கு உறுதி செய்கிறார்.


Sunday 1 October 2023

சமயங்களும் அன்பும் !!!- பகுதி-1

 தமிழர்கள் வாழ்வியலில் சமயத்துக்கான முக்கியத்துவம் முன்பு இருந்ததில்லை. மனிதமும் மனிதாபிமானமும் நல்லிணக்கமுமே பெரிதாய் இருந்தது. அரசியலும் புல்லுருவிகளுமே இந்த அன்பைத்தகர்த்து சமயங்களை பிரித்தன. ஆனால் இதற்கெல்லாம் இன்னும் மசியாமல் ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் இணைந்து சமயங்களும் அன்பும் ஒன்றாய் இணைந்து வாழ்வது இன்னும் நம் தமிழகத்தில் அங்கங்கே இருப்பதறிந்தபோது வியப்பாக இருக்கிறது! கீழ்க்கண்டவை அவற்றின் சாட்சியங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டணம் என்னும் ஊரில் உள்ள தர்க்கா, ராவுத்தர் அப்பா தர்க்கா என அழைக்கப்படுகிறது. அதன் அருகே முனியய்யா கோவில் உள்ளது. இந்த முனியய்யாவும் ராவுத்தர் அய்யாவும் நண்பர்கள். அதனால் இந்து இஸ்லாமிய பண்டிகைகளின் போது இந்த இரு கோவில்களுமே அலங்கரிக்கப்படுகின்றன. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் தர்க்காவிற்கு சென்று விட்டுத்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்த தர்க்காவின் கந்தூரி விழா காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல் நாள் மண்டகப்படியை அங்குள்ள பத்தர் குடும்பத்தார்தான் செய்து வருகிறார்கள். 


ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நடுவில் ஒரே வளாகத்தில் மாரியம்மன் கோவிலும் தர்க்காவும் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவிலின் குண்டம் தர்க்காவின் வாசல் பகுதியில் அமைந்துள்ளது. தர்க்காவின் வலப்பக்கம் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. ரம்ஜான் தொழுகையின் போது இந்து மக்களும் தொழுகைக்கு செல்வதும் மாரியம்மன் கோவில் விழாவில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடுவதும் இங்கு ஆண்டு தோறும் நடக்கும் அற்புதம்!!


ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிப்பாளையத்தில் உள்ள சிவசுப்ரமண்யர் கோவிலில் விழா தொடங்குமுன்பாக ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடி தேங்காய்ப்பழத்தட்டுடன் பள்ளிவாசலுக்குச் சென்று அழைப்பு விடுப்பார்கள். பங்குனி உத்தரத்தின் போது இஸ்லாமியர்கள் வெள்ளக்கொடி ஏந்தி கோவிலிலிருந்து வாத்தியங்கள் முழங்க புறப்பட்டுச் சென்று கடைகளின் வாசலில் சந்தனம் பூசி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் மாலை மரியாதை செய்து கொள்கிறார்கள்!


சிவகங்கை மாவட்டத்திலுள்ள வஞ்சினிப்பட்டியில் 10 நாள் பூக்குழி திருவிழாவாக அல்லாசாமி பூக்குழி திருவிழா கடந்த 350 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விருந்து வைத்துக்கொள்வார்கள். பூக்குழி தினத்தன்று அனைத்து மக்களும் மல்லிகைப்பூ, சர்க்கரை வைத்து அல்லாவிடம் பாந்தியா ஓதி பின் சுவாமிக்கு பூக்குழி வளர்க்கப்படுகிறது. பூக்குழிக்குப்பிறகு சாம்பலை அள்ளி இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் பூசி விடுவதும் வழக்கமாக இருக்கிறது.


ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக் கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் போது முதல் பிரசாதம் கன்னிராசபுரம் நாட்டாமைக்கே வழங்கப்பட்டது. போர் ஒன்றில் அப்துல் கனி என்ற அந்த நாட்டாண்மை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு உதவீயாக செய்த அருஞ்செயலுக்காக இந்த தனிச்சிறப்பு செய்யப்பட்டது. 

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நிறைய இந்துக்கள் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை அணிந்து கலந்து கொள்வது வழக்கம். அந்த ஆடைகளை இன்றளவும் மதுரையில் இருக்கும் புது மண்டபத்தில் பல தலைமுறைகளாக இஸ்லாமியர்கள் தான் தைத்து வருகிறார்கள். அந்தப்பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாமா, மாப்பிள்ளை என்று ஒருத்தருக்கொருத்தர் அழைத்துக்கொள்வது தான் வழக்கம்!

தொடரும்-


Sunday 17 September 2023

எங்கே போகின்றன மருத்துவமனைகள்?

 என் நெருங்கிய உறவினரின் 20 வயது மகனுக்கு அடிக்கடி தலை சுற்றல், மயக்கம் வந்து கொண்டிருந்தது. பலவிதமான பரிசோதனைகளுக்குப்பின் அந்தப்பையனுக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 மி.மீட்டருக்கு குறைவாக அதன் அளவு இருந்தால் மருந்தினாலேயே அந்தக்கட்டியைக்கரைத்து விடலாமென்றும் அதன் அளவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தான் அந்தக்கட்டியை நீக்க வேண்டுமென்றும் தலைமை மருத்துவர் கூறி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டதென்றாலும் அந்தப்பையனின் பாட்டி என்னிடம் பேசும்போது பயந்து கொண்டே இருந்தார். ஆறுதல் பலமுறை சொன்ன போதும் அவர் என்னிடம் சொன்னதெல்லாம்  ‘சிகிச்சையின் போது எதுவும் தப்பாக செய்து விடக்கூடாதே’ என்பது தான். அவர் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்போதெல்லாம் நோயாளிக்கான சிகிச்சையைப்பற்றி கவலைப்படுவதை விட அமைந்திருக்கும் மருத்துவர் நல்ல விதமாக இருக்க வேண்டுமே, செய்ய வேண்டுமே என்பது தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. 

சென்ற மாதம் என் உறவினர் சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு முறை பைபாஸ் சர்ஜரி இதயத்தில் செய்து கொண்டவர். 78 வயதான அவருக்கு இலேசாக நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஆஞ்சியோ தொடையில் செய்தபோது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு தொடைக்குள் CLOT உண்டாகி ரண வேதனையை அனுபவித்தார், அதனால் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய, கெட்ட இரத்தத்தை வெளியேற்றுவதற்காக பிரஷர் கொடுத்து அமுக்கி அமுக்கி அதை வெளியேற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவருக்கு. இப்படி தவறுதலாக நடந்து விட்டதற்கு ஒரு SORRY சொல்லி, ஒரு மாதத்துக்கு நடக்கக்கூடாது என்றும் சொல்லி நிறைய மருந்து வகைகளுடன் அனுப்பி விட்டார்கள். இன்னும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. 

பத்து வருடங்கள் முன்னால், என் கணவருக்கு அதே மருத்துவ மனையில் பித்தப்பையையும் பித்தக்குழாயிலிருந்த கற்களையும் நீக்கி, பித்தக்குழாயிலிருந்த அசுத்தங்கள் அனைத்தும் வடிய ஸ்டெண்ட் போட்டு, அந்த ஸ்டெண்ட்டை நீக்க 20 நாட்கள் கழித்து வரச்சொன்னார்கள், அதே போல 20 நாட்கள் கழித்து அந்த ஸ்டெண்ட் நீக்கப்பட்டு, நாங்களும் விமானமேறி துபாய் வந்ததோம். சரியாக மூன்று மாதங்கள் கழித்து என் கணவருக்கு ஒரு இரவில் உடலில் குளிர் ஜுரம் போல பலமாக நடுக்கம் ஏற்பட்டதும் உடனேயே எமெர்ஜென்ஸியில் துபாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது என் கணவருக்கு இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன், எல்லாம் குறைந்து தொற்று கல்லீரலில் பரவி மிக சீரியஸான நிலைக்கு சென்று விட்டார்கள். 2 நாட்களில் ஆக்ஸிஜன் சற்று ஏறியிருந்த சமயம் உடனடியாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அதைத்தொடர்ந்த பல மோசமான பாதிப்புகளிலிருந்தும் என் கணவர் மீண்டு எழுந்து வந்த பின்பு, நான் தலைமை மருத்துவரிடம் , “ ஏற்கனவே இரு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்த பின்பும் எதனால் இவர்களுக்கு இப்படி உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டது “ என்று காரணம் கேட்டபோது, அவர்         ‘ உங்கள் கணவருக்கு உங்கள் ஊரில் வைத்த ஸ்டென்டை மிகவும் குறுகிய காலத்துக்குள் எடுத்து விட்டார்கள். நாங்கள் இந்த காரணத்துக்காக ஸ்டென்ட் வைக்கும்போது 3 மாதம் வரை அதை நீக்க மாட்டோம். அப்போது தான் அசுத்த நீரெல்லாம் முழுமையாக வடியும்” என்றார். அவர் சொன்னது போலவே ஜுன் மாதம் என் கணவருக்கு வைத்த ஸ்டென்ட்டை செப்டம்பரில் தான் நீக்கினார்கள். எத்தனை எத்தனை தவறுகள் நம் மருத்துவமனைகளில் நடக்கின்றன!

என் தங்கையைப்பற்றி முன்னமேயே எழுதியிருந்தேன். நுரையீரலில் பயாப்ஸி எடுக்க நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையினுள் சென்றவர் தவறான சிகிச்சையால் அங்கேயே உயிரிழந்து வெளியே வந்தார். எத்தனை பெரிய கொடுமை இது! அவர் இறந்து ஏழு மாதங்களாயும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. 

ஒரு முறை கெண்டைக்காலில் ஏற்பட்டிருந்த வலிக்காக மருத்துவமனைக்கு ஸ்கான் எடுக்கச்சென்றிருந்தேன். பின்னங்கால்களில் ஸ்கான் எடுத்தார்கள். அந்த ஸ்பெஷலிஸ்ட் தன் உதவியாளரிடம் சொல்கிறார் ‘ இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சினையும் உள்ளது. இதோ, இங்கு செல்லும் நரம்பைப்பாருங்கள்’ என்று! அதற்கு அவரின் உதவியாளர் ‘ இல்லையில்லை. இது வெரிகோஸ் நரம்பு கிடையாது. இவர்களுக்கு அந்த பிரச்சினை இல்லை’ என்கிறார். இந்த விவாதம் என் கண் மூன்னாலேயே நடந்தது. இவர்களின் ஸ்கான் ரிப்போர்ட் எப்படியிருக்கும்? அதை வைத்து மருத்துவர் என்ன விதமான முடிவு எடுப்பார்? அவர் கொடுக்கும் சிகிச்சை எப்படி இருக்கும்?  

மருத்துவமனைகள் நம்மை காக்கும் என்று நம்பித்தான் நாம் மருத்துவர்களிடம் செல்கிறோம். அவர்களே தவறுகள், அதுவும் சரி செய்யவே முடியாத தவறுகள் செய்தால் நாம் எங்கே போவது? எங்கே போய் நியாயம் கேட்பது?


Monday 19 June 2023

முத்துக்குவியல்-69!!!

ரசித்த முத்து:

ஒரு நாட்டின் அரசன், எதிர்காலத்தில் நடக்கவிருக்கிருக்கும் அத்தனை விஷயங்களையும் துல்லியமாக கணித்து சொல்லக்கூடிய ஜோசியர் ஒருவர் இருக்கிறார் என்பதைக்கேள்விப்பட்டு, அந்த ஜோசியரை வரவழைத்து மரியாதைகள் செய்து, “ ஜோசியரே, எனக்கும் எதிர்காலத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள ஆசை வந்திருக்கிறது. நான் என் மனைவிக்கு முன் இறப்பேனா? அல்லது என் மனைவி எனக்கு முன் இறப்பாரா என்பதைக்கணித்து சொல்லும்” என்று கேட்டாராம். 

ஜோசியரும் தயங்கி விட்டு பின் “ உங்கள் மனைவி 3 மாதங்கள் கழித்து இறந்து விடுவார்” என்று சொன்னாராம். அவர் சொன்னது போலவே மூன்று மாதங்கள் கழித்து யானை மிதித்து அரசி இறந்து விட்டார். சோகத்தில் ஆழ்ந்த மன்னன் ஒருவாறு தன்னிலைக்கு திரும்பியதும் அவனுக்கு ஜோதிடர் மீது கட்டுக்கடங்கா கோபம் ஏற்பட்டது. ‘யானையால் தான் அரசி இறப்பார் என்று சொல்லியிருந்தால் நாமும் முன் ஜாக்கிரதையாக இருந்து அந்த யானை தாக்காதவாறு அரசியைக்காப்பாறியிருக்கலாமே’ என்ற ஆதங்கமும் தலைகால் புரியாத சினமும் அரசனைத்தாக்க வீரர்களிடம் ‘ அந்த ஜோசியன் எங்கேயிருந்தாலும் இழுத்து வாருங்கள். அவனைக்கொன்றால் தான் எனக்கு நிம்மதி’ என்று உத்தரவிட, வீரர்களும்  அந்த ஜோசியனைக்கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வந்தார்கள். ஜோசியரும் தன்னைக்கொல்லாமல் விட மாட்டார்கள் என்பதைப்புரிந்து உள்ளூர நடுங்கிக்கொண்டேக்கொண்டே அரசவைக்கு வந்தார். மன்னன் அவரைப்பார்த்ததும் ‘ ஜோசியரே, நீர் எப்போது இறப்பீர் என்பதைக்கணித்து வைத்திருக்கிறீரா?’ என்று கேட்கிறார். ஜோசியர் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு,’ மன்னா! நம்மைப்பற்றி கணிக்கும் திறமையை என் குருநாதர் எனக்குக் கற்றுத்தரவில்லை. ஆனால் ஒன்று சொல்லியிருக்கிறார். நான் இறந்து போன பின்பு, இந்த நாடு சின்னாபின்னமாகி, சுக்கு நூறாக உடைந்து போகுமாம்,..’!!

அவ்வளவு தான், அரசர் பயபக்தியுடன் சகல மரியாதைகளையும் ஜோசியருக்கு செய்து அவரை வழியனுப்பி வைத்தாராம்!!

மருத்துவ முத்து:

நாட்டு மருந்துக்கடைக்கு தாளிசாதி சூரணம் வாங்கப்போயிருந்தேன். [ தொடர்ந்து தொண்டையில் சளி இருந்து கொண்டே இருந்தால் இந்த சூரணம் அரை ஸ்பூன் எடுத்து மிதமான வென்னீர் அரை தம்ளரில் கலந்து காலை, இரவு சாப்பாட்டிற்குப்பிறகு குடித்தால் நிச்சயம் சளித்தொல்லை மட்டுப்படும் ] கடையில் சாமான் எடுத்துக் கொடுக்கும் பையன் இந்த மருந்து யாருக்காக வாங்குகிறீர்கள்? என்று கேட்டான்.  ‘எனக்குத்தான்” என்றேன். 

நீங்கள் இரவில் இட்லி அல்லது தோசை சாப்பிடுவீர்களா’ என்று கேட்டான். நான் ஆமாம் என்றதும் ‘ இரவில் எப்போதுமே இட்லி, தோசை சாப்பிடவே கூடாது. புளித்துப்போன உணவு இவையெல்லாம். புளிப்பு எப்போதுமே உடலில் கபத்தை அதிகரிக்கும். கபம் அதிகமாக, அதிகமாக சளித்தொல்லை குறையவே குறையாது. புளித்த மாவிற்கு பதிலாக இரவில் இடியாப்பம், கஞ்சி என்று சாப்பிட்டால் உடல்ல் கபம் குறையும். நீங்கள் சாப்பிடுகிற மருந்தும் பலனளிக்கும்’ என்று சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியமாகிப்போனது. அவன் சொல்வது உண்மை தான். புளித்த உணவுகள் எப்போதும் உடலில் கபத்தை ஏற்றும். இனியாவது இரவில் இந்த உணவுகளைக்குறைத்துகொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.

இசை முத்து:

இது சன் டிவியில் வரும் ‘ பொன்னி ‘ என்ற சீரியலுக்கான தலைப்புப்பாடல். ஆரம்பித்த அன்று மட்டுமே காண்பித்தார்கள். திருமுருகாற்றுப்படை முருகனைப்பற்றிய பாடல். மிகவும் அருமையான பாடல். சாய் விக்னேஷும் சுர்முகியும் அருமையாகப்பாடியிருக்கிறார்கள். நீங்களும் கேட்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

Wednesday 17 May 2023

சர்க்கரை நோயும் சிறுநீரகமும்!!!!

 சர்க்கரை நோயின் தாக்கம் உடலின் பல உறுப்புகளை நாளடைவில் பாதிக்க ஆரம்பித்தாலும் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் சிறுநீரகத்தை பல விதங்களிலும் கடுமையாக தாக்க ஆரம்பிகிறது. சிறுநீரகங்கள் சுருங்க ஆரம்பிக்கின்றன. சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரைக்களில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுகின்றன. நமது சிறுநீரகங்களில் மில்லியன் கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. இந்த நெஃப்ரான்கள் தான் நம் உடம்பில் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையை செய்கிறது. எனவே சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நெப்ரான்கள் கழிவுகளை வடிகட்டும் செயல்திறனை இழக்கின்றன. நாளடைவில் சிறுநீரில் புரதம் வெளியேற ஆரம்பிக்கும். 


இந்த புரதம் கழிதல் சிறுநீரக பாதிப்பால் தான் வந்ததா அல்லது சர்க்கரை நோயை தவிர்த்து பிற நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளுதல், தொண்டை வலி போன்றவற்றாலும் புரதம் கழிதல் வரும். கண்டு கொள்ளாமலோ, கண்டு பிடிக்காமலோ இருந்தால் 4-வது நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும், 5-வது நிலையை அடையும்போது யூரியா கிரியேட்டின் மிகவும் அதிகரித்து விடும். உடலில் தங்கி இருக்கும் அசுத்தங்கள் வெளியேற முடியாமல் தங்கி விட நேரும் போதுதான் கிரியேட்டின் உடலில் அதிக அளவில் இருக்கும். இது கடுமையான சிக்கல்களை உருவாக்கி விடும். சிலருக்கு சர்க்கரை நோய் உடலில் இருக்கிறது என்று கண்டு பிடிக்கும்போதே இந்த புரதமும் சிறுநீரில் வெளியேறிக்கொண்டிருக்கும். நிறைய மருத்துவ மனைகளில் இந்த குறைப்பாட்டை கண்டு கொள்வதில்லை. சர்க்கரை நோய்க்கு மட்டுமே மருந்துகள் தருகிறார்கள். அதனால் நோயாளிக்கு தன் மிகப்பெரிய பிரச்சினை தெரிவதில்லை. வருடக்கணக்கில் இது தெரியாமலேயே இருந்து தாமதமாக யாராவது ஒரு மருத்துவரால் தெரிய வரும்போது புரதம் அதிகமாக வெளியேறும் நிலை வந்திருக்கும். 

நானும் ஒரு சிறுநீரக மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், “ மருத்துவ பரிசோதனைகளில் புரதம் அதிகமாக வெளியேறுகிறது என்று இருக்கும்போது அதை ஏன் நீங்கள் நோயாளிகளிடம் சொல்லுவதில்லை? “என்று! அதற்கு அந்த மருத்துவர் சொன்னார் “ நீங்கள் படித்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் அதைப்பற்றி சொல்கிறோம். ஆனால் பொதுவாக நோயாளிகளிடம் இதையெல்லாம் நாங்கள் சொல்லுவதில்லை. “ என்றார். எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு மருத்துவர் கிரியாட்டினினும் யூரியாவும் சரியான நிலையில் இருக்கும் வரை நாங்கள் புரதம் வெளியேறுவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எப்போது கிரியாட்டினின் இரண்டு பாயிண்டுக்கு மேல் போகிறதோ அப்போது தான் நாங்கள் மருத்துவம் செய்ய ஆரம்பிப்போம் “ என்றார். அதையே துபாயின் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவரும் ஆமோதித்தார். துபாயிலுள்ள என் குடும்ப மருத்துவரும் “ இந்தப்பிரச்சினைக்கு மருத்துவ உலகில் ஆரம்ப நிலையிலேயே இதை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ சிகிச்சை கிடையாது என்பது தான் உண்மை! “ என்றார்.

ஒரு சர்க்கரை நோயாளிக்கு மருத்துவ பரிசோதனையில் புரதம் வெளியேறுவது தெரிய வரும்போது, மருத்துவர் நோயாளிக்கு புரதம் வெளியேறும் அளவைப்பொறுத்து எந்த அளவு அவர் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும், எவற்றையெல்லாம் அவர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுதல் மிகவும் அவசியம். அதிர்ஷ்ட வசமாக, எல்லா சர்க்கரை நோயாளிகளுக்கும் புரதம் வெளியேறுவதில்லை. சிலருக்கு மட்டுமே புரதம் வெளியேறுகிறது. ஜீன்ஸ் காரணம் என்கிறார்கள். வலிக்கான மாத்திரைகளில் பாரசிட்டமால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அலோபதியில் புரதம் கழிதல் நோயுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட அளவு புரதம் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். அசைவ உணவுகளில் அதிக சதவிகிதம் புரதம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு அவற்றையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். ஆனால் சித்த வைத்தியத்தில் அசைவ உணவுகளை அறவே அனுமதிப்பதில்லை. காளான் உணவுகளைக்கூட அவர்கள் மறுக்கிறார்கள். புரதம் வெளியேறும் அளவினை கணிக்க 24 hours urine test செய்வதுண்டு. 24 மணி நேரங்களில் வெளியேறும் சிறுநீரை சேமித்து கொடுக்கச் சொல்வார்கள். பரிசோதனை சாலையில் அந்த சிறுநீரில் எவ்வளவு புரதம் வெளியேறி இருக்கிறது, குறித்த அளவிற்குட்பட்டு இருக்கிறதா, அல்லது எந்த அளவு அதிகமாயிருக்கிறது என்று கணக்கிடுவார்கள். ஆனாலும் அளவுக்கு அதிகமாக வெளியேறும் புரதத்தை குறைக்க எந்த மருத்துவமும் கிடையாது. அதனால் 

சர்க்கரை நோயாளிகள் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும். வருடம் ஒரு முறையாவது மேற்சொன்ன பரிசோதனையும் கூடவே சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட பொட்டாஷியம், சோடியம், கிரியாட்டினின், யூரியா இவற்றுக்கான அளவுகளை பரிசோதனை செய்து சரி பார்த்துக்கொள்வதும் நல்லது. 


Tuesday 18 April 2023

பல் வலி!!!!!

 தங்கையின் திடீர் மறைவினால் தஞ்சை வந்ததிலிருந்து இன்னும் அது தொடர்பான சில பிரச்சினைகளும் வலியும் அலைச்சலும் சரியாகவில்லை. ஒரு முறை எல்லோரும் கூடிப்பேசிக்கொண்டிருந்த போது வலிகள் பற்றிய பேச்சு வந்தது. மன வலிகளும் சரி, உடல் சார்ந்த வலிகளும் சரி, எல்லாமே கொடிய அனுபவங்கள் தான். சில அனுபவங்கள் நம்மை பதப்படுத்துகின்றன. சில வலிகள் நம்மை பயமுறுத்தி பலவீனமாக்குகின்றன. 

‘ஒரு மனிதனுக்கு அன்பான உறவுகளும் சுகமான நட்புகளும் ஆயிரம் இருக்கலாம். ஆனால் வலி என்று வரும்போது அதை அவன் மட்டுமே அனுபவித்தாக வேண்டும்’ என்று சமீபத்தில் பாரதி பாஸ்கர் சொன்னது நினைவுக்கு வந்தது.. எத்தனை யதார்த்தமான உண்மை இது? 

40 வருடங்களுக்கு முன் துபாயில் இருந்த ஒரு நண்பர் ஒருவர் ஒருமுறை பல்வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது நானுமே பல்வலியால் மருத்துவரிடம் சென்று கொண்டிருந்தேன். நாங்கள் எல்லோரும் ஒரு விழாவில் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார், “ எல்லா வலிகளையும்விட பல்வலி தான் கொடுமையானது, மனோவும் அதை ஒத்துக்கொள்வார்கள் “ என்றார். சமீபத்தில் ஸ்ரீராம் அவர்கள் பல்வலியைப்பற்றி எழுதியிருந்ததைப்படித்த போது இதெல்லாம் ஞாபகம் வந்தது. 

பல்வலியைப்பற்றிப்பேசும்போது பல் மருத்துவர்களைப்பற்றியும் பேசியாக வேண்டும்.


துபாய் வந்த ஆரம்ப வருடங்களில் [ 48 வருடங்கள் முன்பு ] பல்வலிக்காக ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். கூடவே குடும்ப நண்பர் ஒருவரும் வந்திருந்தார். மருத்துவர் அதற்கான உயரமான ஸீட்டில் உட்கார வைத்து பரிசோதனை செய்யும்போது அவருக்கு திடீரென்று வெளியே செல்ல வேண்டி வந்தது. ‘இதோ வந்து விடுகிறேன்’ என்று வெளியே சென்றார். அப்போது எங்கள் குடும்ப நண்பர் ‘ இப்படித்தாம்மா ஒரு டாக்டர் வெளியே சென்று திரும்ப உள்ளே வந்ததும் இடது பக்கம் எடுக்க வேண்டிய பல்லுக்கு பதிலாக வலது பக்கம் எடுத்து விட்டார்’ என்று சொன்னதும் நான் உடனேயே ஸீட்டிலிருந்து குதித்து வெளியே சென்று விட்டேன். அப்புறம் எல்லோரும் மறுபடியும் உள்ளே செல்ல அழைத்தும் நான் திரும்பப் போகவேயில்லை!

இன்னொரு மருத்துவர். முன் பற்கள் இரண்டிலும் வலி என்று சினேகிதியின் சிபாரிசில் அவரிடம் சென்றேன். பரிசோதனை செய்து விட்டு பற்கள் மிகவும் வீணாகி விட்டன என்றும் அறுவை சிகிச்சை தான் செய்ய வேணும் ‘ என்று சொல்ல பயந்து போனேன். பின் மிகவும் திறமையானவர் என்று பரிந்துரைக்கப்பட்ட இன்னொரு வட இந்திய மருத்துவரிடம் சென்றேன். அவர் பரிசோதனை செய்து விட்டு ‘ ஒன்றுமில்லை, இது சாதாரண இன்ஃபெக்ஷன்’ என்று சொல்லி முன் பற்களுக்கு சிகிச்சை செய்தார். 25 வருடங்களுக்குப்பிறகும் முன் பற்களில் எந்தப்பிரச்சினையும் இல்லை. பற்களில் எந்த பிரச்சினை என்றாலும் அவரிடம் தான் சென்று கொண்டிருக்கிறேன். நல்ல மருத்துவர் கிடைத்ததால் நான் பிழைத்தேன். தவறான சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

ஒரு முறை ஊரிலிருந்து வந்திருந்த முறுக்கைக் கடித்த போது கடவாய்ப்பல் குறுக்கே இரண்டாக உடைந்து விட்டது. வலி பொறுக்க முடியவில்லை. நல்ல பல் உடைந்து விட்டது. ஆனால் அதை அப்புறப்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் நிறைய மருந்துகளும் ஊசிகளும் எடுத்துக்கொண்ட பின்பு தான் அதை பலவந்தமாக பிடுங்குவது போல நீக்கினார்கள்! இப்படியும் ஒரு பல் வலி பிரச்சினை!

என் சினேகிதி ஒருத்தரின் கணவர் சற்று முரட்டுத்தனமானவர். மனைவியை தாங்குவார். மனைவியின் உடல் நலத்தை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். ஆனால் அவரது உடல் நலத்தை சிறிதும் கவனிக்க மாட்டார். நாம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு ஒரு நாளிரவு கடுமையான பல் வலி ஏற்பட்டது. தாங்க முடியாமல் நண்பருடன் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பரிசோதித்து விட்டு அதிர்ச்சியுடன் எழுந்து விட்டார். ‘ கடுமையான இதயத்தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காப்பாற்றுவது கஷ்டம் என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் சினேகிதியின் கணவர் கீழே சரிந்து இறந்து போனார். மரணம் பல் வலியிலும் வரும் என்ற உண்மை மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

இன்னொருத்தர்-தெரிந்தவர் செயற்கை பற்களை பொருத்திக்கொண்டிருந்தார். வேண்டிய போது பற்களை நீக்கி அருகில் வைத்துக்கொள்வார். வேண்டும்போது அவற்றை மீண்டும் பொருத்திக்கொள்வார். ஒரு நாளிரவில் தூக்கக்கலக்கத்துடனிருந்த போது, பற்களை எடுத்து பொருத்திக்கொள்ள முனைந்த போது, ஒரு பல் தூக்கக்கலக்கத்தில் நழுவி உள்ளே போய் மூச்சை அடைத்து உடனேயே மரணம் எய்தி விட்டார். 

ஒரு மருத்துவர் பரிசோதித்து விட்டு பல்லை எடுக்க வேண்டும் என்று சொன்னால்கூட இன்னொரு பல் மருத்துவரிடம் சென்று second opinion கேட்பது இன்றைய காலத்தில் அவசியமாகி விட்டது. 

பல்வலிக்கு ஒரு கை வைத்தியம். பல் வலி இருக்குமிடத்தில் ஒரு துண்டு


 நார்த்தங்காய் உப்பு ஊறுகாயை வைத்து பற்களால் அமிழ்த்தி அப்படியே தூங்கி விட வேண்டும். காலை வலி சுத்தமாக நீங்கியிருக்கும். இலேசான சூடுள்ள வென்னீரால் வாயை கொப்புளிக்க வெண்டும்.

வலிகள் இல்லாத வாழ்க்கைக்கு பிரார்த்தனை செய்வோம்!!Thursday 16 February 2023

மருத்துவ சிகிச்சையின் இரண்டு பக்கங்கள்!

 ஒரு மருத்துவ சிகிச்சை அதுவும் ஒரு அறுவை சிகிச்சை கருணையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் மனிதாபிமானத்துடனும் செய்யப்படும்போது அது வெற்றிகரமாக மாறி நோயாளியும் காப்பாற்றப்பட்டு மருத்துவர் கடவுளாக போற்றப்படுகிறார். அதேசமயம் மிகவும் சாதாரண சிகிச்சை ஒருவரை திடீர் மரணத்துக்குள் தள்ளி விடுகிறது. அந்த இரண்டு பக்கங்களையும் இங்கே எழுதியிருக்கிறேன். 

மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டு உயிரைத்திருப்பிக்கொடுத்த சிகிச்சை:

மணப்பாறையை சேர்ந்த கூலி தொழிலாளி திரு.அழகேசனின் மகன் 13 வயதான மணிகண்டன்  கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் உள்ள எக்மோர்-குழந்தைகள் நல  சிறப்பு மருத்துவமனையில் ஹெமாட்டாலஜி துறையில் பரம்பரை இரத்தக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 (ஹீமோகுளோபினோபதி) அவரது இரத்தத்தில்  பரம்பரையாய் வருகிற ஜீன் மரபணு கோளாறு காரணமாக ஹீமோகுளோபின் உற்பத்தியில்  குறைபாடு காரணமாக அசாதாரண ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகமாகி இருதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார்.

 திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இந்த அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு இல்லாததினால் ஒவ்வொரு மாதமும்  சிறுவனை சென்னை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு  ஒவ்வொரு முறையும் பரிந்துரை செய்யப்படும் போது  ஏழை பெற்றோரால்  சிறுவனை சென்னைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

மனப்பாறை சட்டமன்ற உறுப்பினர்  திரு. ப அப்துல் சமது சிறுவனை பற்றி  துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனையை சமீப காலமாக சிறப்பாக வழிநடத்தி வரும் மருத்துவர். ஜான் விஸ்வநாத்திடம் சிறுவனுக்கு உதவும் படி பரிந்துரைத்தார்.  

மருத்துவர் ஜான் விஸ்வநாத் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில்  பணியில் இணைந்த கடந்த 8 மாதங்களில் பல அற்புதமான மருத்துத்துவ சேவைகளை  செய்து  பல்வேறு  சிறப்பு மருத்துவ  சிகிச்சைகளையும் அப்பகுதி ஏழை மக்களுக்கு வழங்கி  மருத்துவ மனை சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.

பாதிக்கபட்ட சிறுவனை வரவழைத்து  பரிசோதித்து, அவனுக்கு HbFc என்கிற அரிய வகை பரம்பரை இரத்த குறைபாடு நோய் இருப்பதை கண்டறிந்தார். தொடர்ந்து சி.எம்.சி வேலூரின் ஹெமாட்டாலஜி துறையில் உள்ள தனது நண்பர்களுடன் ஆன்லைன் வீடியோ மருத்துத்  ஆலோசனைக்கு  ஏற்பாடு செய்து அவர்களின் ஆலோசனையைப் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்.

அதற்கப்புறம் மருத்துவர் சொன்னது:

" சிறுவனை என்னிடம் கொண்டுவரப்பட்டபோது அவன்  உடல்நிலை மிகவும் மோசமாக  இருந்தது .மிகவும் கடுமையான இரத்த சோகை மற்றும் இதய செயலிழப்புடன் (கார்டியாக் ஃபெயிலியர்) இருந்தார். இந்த அரிய பரம்பரை  இரத்த  கோளாறின் விளைவாக சிறுவனின்  மண்ணீரல் 10 மடங்கு பெரிதாக வீங்கியிருந்தது. கொண்டுவரப்பட்டபோது சிறுவனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் குறைந்த  இருதய துடிப்பு இருந்தது.

 சிறுவனை  108 ஆம்புலன்சில் ஐ.சி.எச் சென்னைக்கு அனுப்பப்பட்டாலும் அவன் உடல் நிலை  நீண்ட பிரயாணத்தை தாக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். 

சிறுவனின் அரிய வகை இரத்த குறைபாடு நோய் மற்றும் அவனின் தற்போதைய மோசமான உடல் நிலைமை கண்டு சிகிச்சையளிக்க வேறு எந்த மருத்துவமனையும் ஏற்றுக்கொள்ளாது என்பது எங்களுக்குத் தெரியும்.

 எனவே கடவுளிடம் மிகுந்த  பிரார்த்தனையுடன் நாங்கள் அதை சவாலாக எடுத்து சிகிச்சை அளிக்க தொடங்கினோம்., சி.எம்.சி வேலூரில் உள்ள ஹீமாட்டாலஜி துறையில் உள்ள எனது நண்பர்கள் சிலரிடமிருந்து அவசர வீடியோ ஆலோசனைக்கு ஏற்பாடு செய்து அவர்களின் ஆலோசனையின் படி  சிறுவனின் இதய செயலிழப்பைக் கட்டுப்படுத்தினோம். அவர்களின் ஆலோசனையுடன்_ மற்றும் கடவுளின் தூய கிருபையால் கடுமையான இருதய செயலிழப்பிலிருந்து நாங்கள் சிறுவனை வெற்றிகரமாக  மீட்டெடுக்க முடிந்தது. பின்பு அவனது அரிய இரத்த  கோளாறுக்கான சிறப்பு சிகிச்சையைத் தொடங்கியுள்ளோம்..அந்த சிறுவனைக் காப்பாற்ற ஏற்ற வேளையில் உதவியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறோம் " என்று கூறி  டாக்டர் விஸ்வநாத் மனம் நெகிழ்ந்தார்.

மகன் நடந்து செல்வதையும் வழக்கமான செயல்களைச் செய்வதையும் பார்த்து பெற்றோர் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள்..

நோயாளியை சினிமா பார்க்கச் சொல்லி விட்டு அறுவை சிகிச்சையையும் செய்திருக்கிறார் இவர். 

அந்த நோயாளிக்கு ஒரு விபத்தில் வலது கை மோதிர விரல் நசுங்கிப்போய் விட்டது. அருகிலுள்ள மருத்துவ மனையில் சிதந்து போன தசைகளையெல்லாம் வெட்டி விட்டு தையல் போட்டிருக்கிறார்கள். அப்போது தசை நாண் வெட்டுப்பட்டது தெரியாமல் தோலை மட்டும் தைத்து விட்டிருக்கிறார்கள். அதனால் வீடு திரும்பியதும் வலியால் துடித்த அவர் தனியார் மருத்துவ மனைகளை நாடியிருக்கிறார். அங்கே 5 லட்சம் வரை செலவாகும் என்பதாலும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்யும் அரசு மருத்துவமனைகளான சென்னை ஸ்டான்லி, மதுரை ராஜீவ் காந்தி, வேலூர் சி.எம்.சி செல்லுவதும் சிரமமான நிலையில் பத்திரிகைகளில் துவரங்குறிச்சி அரசு மருத்துமனையில் வெற்றிகரமாக சிக்கலான அறுவை சிகிச்ச்சைகள் கூட செய்து வருவதாக கேள்விப்பட்டு இந்த மருத்துவ மனைக்கு அவர் வந்து சேர்ந்தார். 

இவருடைய மோதிர விரல் நுனியிலிருந்து மணிக்கட்டு வரை 16 செ.மீ நீளத்திற்கு தசை நாண் நரம்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்புறமுள்ள நரம்பில் அதே அளவு நீளத்துக்கு வெட்டியெடுத்து சிதைந்து போன மோதிர விரலில் பொருத்தி, அதே நேரம் முன்பக்கமுள்ள நரம்புக்கு பாதிப்பு வராத வகையில் செயற்கை நரம்புகளால் பலப்படுத்தியும் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்திருகிறார் மருத்துவர் ஜான் விஸ்வநாத். நோயாளிக்கு தோள் பட்டையிலிருந்து சம்பந்தப்பட்ட கைகள் வரை மட்டும் மரத்துப்போகிற மாதிரி மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் நோயாளி இயல்பாக பேசிக்கொண்டிருக்க முடியும். பிடித்த சினிமாவைப் பார்க்க முடியும். ப்ளூடூத் மூலம் உறவினர்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியும். அதனால் மருத்துவர் ஜான் விஸ்வனாத் நோயாளிடம் விருப்பத்தைக்கேட்டு, அவர் விருப்பப்படி விஜய் ப்டத்தைப்போட்டு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். முதல் அமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. 

ஒரு மிகச் சாதாரண, சிறிய மருத்துமனையில் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை ஒரு சாமான்யனுக்கு ஒரு திறமையான மருத்துவரால் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது! எவ்வளவு பெரிய விஷயம் இது!

ஒரு சாதாரண சிகிச்சை எப்படி ஒருவரை மரணத்துக்குள் தள்ளியது என்பதற்கு உதாரணம் இது:

என் இளைய சகோதரி [ வயது 69 ] பத்து நாட்களாக விட்டு விட்டு வந்த ஜுரத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். ஓரளவிற்கு இருமலும் ஜலதோஷமும் இருந்தது. ஜுரம் 103 வரை போவதும் பின் இறங்குவதுமாய் இருந்தது. வரிசையாக எல்லா பரிசோதனைகளும் செய்ததில் exrayல் மட்டும் வலது நுரையீரலில் சிறிதளவு மாஸ் போல [ கட்டி போல ] தென்பட்டதால் அது எதுவும் அபாயகரமான கட்டியா என்று பரிசோதிக்க, வலது நுரையீரலில் பயாப்ஸி எடுக்க மருத்துமனையில் வரச்சொல்ல கடந்த 9ந்தேதி என் சகோதரி தன் கணவருடனும் தன் மாப்பிள்ளையுடனும் [ மாப்பிள்ளை அங்கேயே எலும்பு மருத்துவ சிக்கிச்சையில் உயர்தர அறுவை சிகிச்ச்சை நிபுணர்] சென்றார். அனஸ்திஷியா கொடுத்த பின் அவரது வலது நுரையீரலிலிருந்து ஒரு முறை டிஷ்யூ எடுக்கப்பட்டது. மாப்பிள்ளையின் நேரடி கண்காப்பிலேயே இரண்டாவது முறை டிஷ்யூ எடுக்க அந்த ஊசியை [ தலைமுடியையும் விட மெல்லியதாம் ] மறுபடியும் அழுத்தியபோது உடனேயே இருமி மாப்பிள்ளை மேலேயே இரத்த வாந்தி எடுத்து அடுத்த வினாடியில் என் சகோதரியின் உயிர் பிரிந்து விட்டது ‘ கார்டியாக் அர்ரெஸ்ட்’ என்ற பெயரில்! ஏன் இப்படி நடந்தது, இது யாருடைய தவறு என்று எதுவுமே புரியாமல் இங்கே நாங்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறோம். எதையுமே கேட்க முடியாமல் என் சகோதரியின் கணவர், பெண், மாப்பிள்ளை எல்லோரும் துக்கத்தில் வீழ்ந்திருக்கிறார்கள். நன்றாக நடந்து சென்று சென்றவர், ‘ நான் திரும்பி வரும்போது எனக்கு அசதியாக இருக்கும். பிஸ்கட்டும் தண்ணீரும் வாங்கி வையுங்கள் ‘ என்று கணவரிடம் சொல்லி உள்ளே சென்றவர் ஒரு மணி நேரத்திற்குள் வெறும் சடலமாக திரும்பி வந்தார். இந்த அதிர்ச்சியை இன்னுமே முழுங்க முடியாமல் தவிக்கும்போது, 104 வயதான் என் தாயார் அழுவதற்கு ஆறுதலும் சொல்ல முடியவில்லை.  


Wednesday 18 January 2023

குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!

குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதியில் மீண்டும் புகைப்படங்கள்!இவர் இபின் பத்தூத்தா.மொரோக்கோ நாட்டின் புகழ் பெற்ற கல்வியாளரும் பயணியுமாவார். இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். முகமது பின் துக்ளக்கின் ஆட்சியில் ஏழு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.செளதி அரேபியா


ஈரான்இந்திய அரங்கம். பக்கவாட்டில் குட்டி குட்டி இந்திய உணவகங்கள்...இந்திய உணவகங்கள்

இந்திய அரங்கத்திற்குள் சர்தார் வல்லபாய் படேல்

இந்திய உணவகங்கள் அருகே இன்னொரு நுழைவாயில்லெபனான்


பாலஸ்தீனம், லெபனான், கத்தார்

இந்தீய அரங்கத்திற்குள் ஒரு ஓவியம்இந்திய அரங்கம்


இந்திய அரங்கத்தின் இன்னொரு பக்கம்


சைனாவின் ஒரு பக்கம்-இடது பக்கம் பாலஸ்தீனம்சைனா


ஓமன் நாட்டின் ஒரு பகுதி

சீன அரங்கத்துக்குள் நடனம்

ஆப்கானிஸ்தான்


ஓமன்

தாய்லாந்து

கொரியா

ஜப்பான்

இரவில் குளோபல் வில்லேஜ்

Sunday 1 January 2023

புத்தாண்டு வாழ்த்துக்களும் குளோபல் வில்லேஜ் புகைப்படங்களும்!!

 அன்பு நிறைந்த நட்புள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!குளோபல் வில்லேஜ்- பகுதி ஒன்று!!

வழக்கம்போல, சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு குளோபல் வில்லேஜ் சென்று கண்டு களித்தோம். நான் முன்பேயே சொல்வது போல ஐந்தாறு நாடுகளின் அரங்குகளுக்குத்தான் செல்ல முடிந்தது. மாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் சென்று இரவு 10 மணியளவில் திரும்பினாலும் இந்த அளவிற்கே பார்க்க முடிந்தது. முழுவதும் பார்த்து ரசிக்க 3 தடவையாவது சென்று வர வேண்டும். 

குளோபல் வில்லேஜ் பற்றி சில செய்திகள்.

துபாயில் குளோபல் வில்லேஜ் கண்காட்சி 26ம் தடவையாக தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. 90 நாடுகளைச் சேர்ந்த பண்பாட்டு  அடையாளங்கள் இடம் பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய சுற்றுலா, ஷாப்பிங், மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக இது கருதப்படுகிறது.

இம்முறை குளோபல் வில்லேஜ் புத்தாண்டு பிறக்கும்போது ஏழு முறை புத்தாண்டை கொண்டாட தீர்மானித்துள்ளது. பிலிப்பன்ஸ் நாட்டு புத்தாண்டு இரவு 8 மணிக்கும்,  தாய்லாந்து நாட்டின் புத்தாண்டு இரவு 9 மணிக்கும்,  பங்களாதேஷ் புத்தாண்டு இரவு  10 மணிக்கும், இந்திய நாட்டின் புத்தாண்டு இரவு 10.30 மணிக்கும், பாகிஸ்தான் நாட்டின் புத்தாண்டு இரவு 11 மணிக்கும் ஐக்கிய அமீரகத்தின் புத்தாண்டு இரவு 12 மணிக்கும், துருக்கி நாட்டின் புத்தாண்டு இரவு 1 மணிக்கும் கொண்டாடுகிறது. 

 ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டினை விட அளவிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்கிறது.

இந்த விழா நடைபெறும் ஒரு மாதகாலம் முழுதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களுக்கு இந்த உலகக் கிராமம் ஒரு முக்கிய இலக்காகும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர், எகிப்து, சிரியா, தாய்லாந்து, லெபனான் போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோல வித்தியாசமான கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும் ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும் மக்களைப் பெருமளவில் கவர்கின்றன.

ஒவ்வோராண்டும் இந்தியா தனது காட்சியகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதேபோல் வேறும் பல நாடுகள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

இனி புகைப்படங்களைப்பார்த்து ரசிக்கலாம். 

தூரத்திலிருந்து குளோபல் வில்லேஜ்

கார் பார்க்கிலிருந்து நுழைவாயில் வரை அழைத்துச்செல்ல அங்கங்கே காத்திருக்கும் ரிக்ஷாக்கள்!! 


உள்ளே நுழைந்ததும் பல நாட்டுச் சின்னங்களுடன் பாதை தொடங்குகிறது!


குவைத்தும் ஏமனும் அடுத்தடுத்து!

துருக்கி நுழைவாயில்

எகிப்து

இடையே நிர்மாணிக்கப்பட்டுள்ள கால்வாய். இங்கே படகுகளில் சவாரி செய்யலாம்.

கரையோரமாய் floating market! பழக்கடைகள், இளநீர், தின்பண்டங்கள் விற்கும் கடைகள் ஏராளம்! தாய்லாந்து நாட்டின் இளநீர் இங்கே கிடைக்கும்!

தொடரும்!!