Sunday 25 July 2021

காற்றுக்குமிழ்கள்!!!

 


இது ஒரு மீள் பதிவு.

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே இது புதிய பதிவு தான். இதை எழுதும்போது மனதில் இருந்த ரணம் பத்து வருடங்களுக்குப்பிறகாவது குறைந்துள்ளதா என்று நினைத்துப்பார்த்தால் இன்னும் உள்ளே அந்த ரணம் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. பதிவைப்படித்த பிறகு உங்களுக்கும் அது புரியும்.

25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது. 

நானும் என் சினேகிதியும் ஊட்டி வரை சென்று விட்டு தஞ்சைக்குத்திரும்பிய தினம் அது. என் சகோதரி வீட்டில் தான் என் அம்மாவும் இருந்தார்கள். அதனால் அங்கு வந்து தான் இறங்கினோம். அன்றிரவு என் அம்மாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.

சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.[ மொபைல் இல்லாத காலம்] என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.

அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.

திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.

பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.

அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.

ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.


Friday 9 July 2021

முத்துக்குவியல்-62!!!

 உயர்ந்த முத்து:

இந்தியாவில் அதிக அளவில் இரத்த தானம் செய்தவர்களில் முதன்மையாக விளங்குபவர் ஷபீர்கான். 58  வயதான இவர் காஷ்மீரைச் சேர்ந்த ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். 41 ஆண்டுகளாய் இரத்த தானம் செய்து வரும் இவர் இது வரை 82 லிட்டர் ரத்தத்தை தானமாக வழங்கியிருக்கிறார். இவரின் தொன்டினால் ' காஷ்மீரின் ரத்த மனிதர்' என்று உயர்வாக அழைக்கப்படுகிறார். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறைகள் ரத்த தானம் செய்கிறார். காஷ்மீர் மட்டுமின்றி ஒடிசா, தமிழ்நாடு, புது டெல்லி, ஆந்திரா உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ரத்த தானம் செய்திருக்கிறார். 


2004ல் சுனாமி பாதித்த இடங்களுக்குஇரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்பில் இருந்து ரத்த தான இயக்கங்களை வழி நடத்தியிருக்கிறார். இவர் இந்திய செஞ்சிலுவை இயக்கத்தின் வாழ்நாள் உறுப்பினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 2300 உறுப்பினர்களைக்கொண்ட தன்னார்வ இரத்த தான இயக்கக்குழுவினருக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்தக்குழு மூலம் ரத்த தானம் செய்வதற்கு பொதுமக்களை ஊக்கப்படுத்துவதுடன் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

நெகிழ வைத்த‌ முத்து:

இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்து ஒன்பது மாதங்கள் கடந்து போய் விட்டன. என்னை மிகவும் பாதித்த மரணம் அவருடையது. 6 மாத‌ங்கள் வரை அவருடைய பாடல் நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமலேயே இருந்தேன். நேற்று விஜய் டிவியில் முன்பு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எதேச்சையாக அதில் பரிசு பெற்ற சிறுவன் ஹ்ரித்திக் பாடியதைக் கேட்டேன். பாடகி கல்பனாவும் ஹிரித்திக்கும் ' ரோஜாவைத்தாலாட்டும்' பாடலை அசத்தலாக, அருமையாக பாடினார்கள். பாடல் முடிவில் கண்ணீர் விட்டு எஸ்.பி.பி அழுதார். உணர்ச்சி வயப்பட்ட குரலில் பேச ஆரம்பித்தார்.


 " நான் சில விஷயங்களை மனம் விட்டு சொல்லப்போகிறேன் இங்கு. மனமார ஒரு நல்ல பாட்டை பாராட்டாதவன் ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியாது. கல்பனா அப்படிப்பட்ட சிறந்த பாடகி. நல்ல் மனசு இருக்கும் ஒரு மிஷின். எத்தனை முறை அவளை பாராட்டுவது? எதுக்கு சார் கண்ணுல கண்ணீர் வரணும் ஒரு அழகான பாட்டைக் கேட்கும்போது? ஒரு சின்ன பையன் அழகாகப் பாடும்போது எதுக்காக கண்ணீர் வரணும்? யாரவது இதற்கு பதில் சொல்ல முடியுமா? யாராலுமே சொல்ல முடியாத ஒரு அழகான எக்ஸ்பிரஷன் இது. மற்ற உணர்வுகளை வாயால் சொல்ல முடியும். இப்படிப்பட்ட விஷயங்களை மட்டும் சொல்வதற்குத்தான் கடவுள் கண்ணில் நீரைக் கொடுத்திருக்கார். இந்த மாதிரி ஒரு அருமையான கம்போஷிஷனைக் கேட்கும்போது, இந்த மாதிரி ஒரு சுண்டைக்காய் பையன் அனாயசமாகப் பாடும்போது, அது அப்படியே இதயத்திற்குள் போய் ஆத்மாவிலும் கலந்து கண்ணீராக வெளிப்படுகிறது. நானும் ஜானகியம்மாவும் எத்தனை நுணுக்கமான சங்கதிகளுடன் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாட்டை பாடியிருக்கிறோம்! எத்தனை பரிசுகள், அவார்டுகள் வாங்கியிருக்கிறோம்! அபப்டிப்பட்ட பாடலை இந்த தம்மாத்துண்டு பையன் அருமையாக பாடியிருக்கிறான்! கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதை விட சாட்சி வேறென்ன வேண்டும்? " என்று முடித்தார்.

இதைக்கேட்ட என் கண்களிலும் கண்ணீர் வழிந்தது! ஒரு வளரும் பாடகனுக்கு இதை விட ஒரு சிறந்த பாராட்டுப்பத்திரம் வேறு யாராலும் கொடுக்க முடியாது. எப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதரை, இசைக்கலைஞரை நாம் இழந்து விட்டோம்!

சாதனை முத்து:

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸிகா காக்ஸ். பிறந்த போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால் இந்த பெரிய குறைபாட்டை மனதில் ஏற்றி துவண்டு போகாமல் பல சிறந்த சாதனைகள் செய்து வாழ்க்கையில் ஜெயித்தவர்.


சிறு வயதில் விமானப்பயணத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தபோது விமானம் மீதும் விமானியாக ஆவதற்கும் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரிப்படிப்பை முடித்ததும் கடும் பயிற்சியை மேற்கொண்டு கடந்த 2008ம் ஆண்டு லைட் ஏர்ட் விமானத்தை இயக்கும் லைசென்ஸ் கிடைக்கப்பெற்றார்


இதனால் கைக‌ள் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்மணி என்னும் உலக சாதனை புரிந்தார். விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல் கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் செய்தல் என்று அனைத்து துறைகளிலும் வலம் வருகிறார். உலகம் முழுவதும் தன்னம்பிக்கை பேச்சாளராக இன்றும் வலம் வருகிறார்.

ரசித்த முத்து:

கொரோனாவால் ஏற்பட்ட விபரீதங்கள், மரணங்கள், பிரச்சினைகள் இவற்றுக்கப்பால் கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு பள்ளிச் சிறுவனின் மனதில் எழ்ந்த கற்பனை இது! 


வாட்ஸ் அப்பில் வந்தது! படித்து முடித்ததும் நம்மையுமறியாமல் ஒரு சின்னப்புன்னகை எழுகிறது!!  

இசை முத்து:

இந்தப்பாடல் 1955ல் வெளி வந்த ' நல்ல தங்காள்' என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இனிய பாடல்! 70 வருடங்களுக்கு முன் வந்த பாடல் என்பதால் எப்படியிருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றும். பாடலைக் கேட்டுப்பாருங்கள். டி.எம்.செளந்திரராஜன் அந்த அளவு இனிமையாக‌ப் பாடியிருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கு 'பாச மலர்' திரைப்படம் தான் எப்போதும் உதாரணம் காண்பிக்கப்படும். இந்தப்பாடல் அதற்கு முன் வெளி வந்த, ஒரு அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடும் பாடல்.


Saturday 3 July 2021

தக்காளி தொக்கு!!!

 முன்பெல்லாம் புதுமையான குறிப்புகள் பார்த்துப் பார்த்து செய்து உடனேயே என் சமையல் தளத்திலேயோ அல்லது இங்கேயோ பதிவும் போடுவேன். கொரோனா காலம் வந்த பின் நிறைய ஆர்வங்கள் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. சமீபத்தில் நான் வழக்கம்போல் செய்த‌ தக்காளித்தொக்கு என்னை பதிவேற்றத்தூண்டியது.

எத்தனையோ வருடங்களாக நான் அடிக்கடி செய்யும் தக்காளி தொக்கு இது. தோசைக்கு மிகவும் பொருத்தமானது என்பதால் செய்த உடனேயே எப்போதும் பாதி தீர்ந்து விடும். தக்காளி மட்டும் சதைப்பற்று உள்ளதாக, சிவந்த‌ நிறத்தில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் இப்படிப்பட்ட தக்காளி கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. தயிர் சாதம், பொங்கல் எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமான பக்கத்துணை. இப்போது செய்முறைக்குப்போகலாம்!


தேவையான பொருள்கள்:

தக்காளி பெரியதாக -4

பூண்டு [சிறியது]‍- 10 இத்ழ்கள்

புளி- நெல்லிக்காய் அளவு

வற்றல் மிளகாய்- 6

தேவையான உப்பு, நல்லெண்ணெய்‍

வெந்தயம்- 1 ஸ்பூன்

காயம் -ஒரு சிறு துன்டு

மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்

கடுகு -1 ஸ்பூன்

கறிவேப்பிலை -1 ஆர்க்

செய்முறை:

பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்.

வெந்தயத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

இவை ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.

புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.

பின் ஊறிய புளியுடன் மிளகாய், தக்காளி சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

அதில் அரைத்த விழுதைக்கொட்டி வேக வைக்கவும்.

மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக்கொடுக்கவும்.

தண்ணீரெல்லாம் சுண்டி கெட்டியாகும்போது தீயைக்குறைத்து உப்பு சேர்த்துக்கிளறவும்.

வேறு ஒரு சிறு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலையை தாளிக்கவும்.

தீயை வெகுவாக குறைத்து பொடியாக நறுக்கிய பூண்டிதழ்களைப்போட்டு வதக்கவும்.

பூண்டு சிவக்காமல் வதக்கி தக்காளி தொக்கில் கொட்டி குறைந்த தீயில் சமைக்கவும்.

மேலும் நல்லெண்ணெய் அவ்வப்போது சேர்க்கவும்.

தொக்கின் நிறம் நன்கு சிவந்த கலரில் வரும்போது, மேலே எண்ணெய் மிதக்கும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான தக்காளி தொக்கு தயார்!!