Saturday 18 December 2021

அது ஒரு பொற்காலம்!

 சென்ற வாரம் நா.பார்த்தசாரதியின் ‘ மணிபல்லவம்’ புதினத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். கல்கியில் வெளி வந்த வரலாற்றுக்கதை அது! ஓவியரின் வினுவின் சித்திரங்களை ரசித்துக்கொண்டிருந்த போது, இனி இப்படிப்பட்ட ஓவியங்களையெல்லாம் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. தொடர்கதைகளைப்படிக்க வாராவாரம் ஆவலுடன் காத்திருந்த ‘ அந்த நாள் ஞாபங்கள்’ என்னைச் சூழ்ந்தன!

வாழ்க்கையில் எல்லாமே, மிக அருமையான நல்ல விஷயங்கள் கூட மிகவும் சுருங்கிப்போய் விட்டன கால ஓட்டத்தில்! இனி ஒவ்வொன்றும் மீண்டு வருமா என்பது கூட சந்தேகமே! அன்பு சுருங்கிப்போய் விட்டது. கருணை சுருங்கிப்போய் விட்டது. பேச்சு, எழுத்து, ஆரோக்கியம், பரந்து விரிந்திருந்த மனது எல்லாமே சுருங்கிப்போய் விட்டன. சொல்லப்போனால் நிறைய வீடுகளில் மாத்திரைகள் புழக்கம் தான் சுருங்கிப்போகாமல் விரிவடைந்து கொண்டே போகின்றன!


பள்ளி சென்ற காலங்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்! கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்வோம். போகும் வழியெல்லாம் வீடுகளின் வாசல்களில் சாணக்கரைசலால் மெழுகி பளிச்சென்று போட்டிருக்கும் கோலங்களை நின்று நின்று ரசித்து பார்த்துக்கொண்டே போவோம்! என் தந்தை காவல் அதிகாரியாக இருந்ததால் அடிக்கடி மாற்றல்கள் வரும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி பள்ளிகள் இருக்கும்! 


வயல்கள் நடுவே பள்ளி செல்லும் வழியில் பால் கதிர்களை சுவைத்துக்கொண்டே நடந்து சென்ற அனுபவம்கூட இருக்கிறது!

தந்தை ஒரு வழியாக ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் நிலையாக வசிக்கத்தொடங்கிய வீடு எதிரே பெரிய குளம் இருந்தது. [ மன்னார்குடி தெப்பக்குளம்] அதில் நீச்சல் அடிப்பதும் துணிகள் துவைப்பதுமாய் உடற்பயிற்சிகள் இயல்பாகவே நடந்தன! கொஞ்ச தூரத்திலிருக்கும் ஆற்று


 நீரில் விளையாடுவதற்கென்றே வீட்டில் இருக்கும் துணிகளையெல்லாம் துவைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி எடுத்துக்கொண்டு, தோழிகளுடன் ஆற்றங்கரை சென்று அமர்ந்து அரட்டையும் நீரில் விளயாடலுமாய் அந்த வயது எப்படியெல்லாம் உற்சாகத்துடனும் சிரிப்புடனும் கழிந்தது?

இப்போதிருக்கும் பிள்ளைகளுக்கு இப்படி இயற்கையோடிணைந்த வாழ்க்கை கிடைக்கிறதா? நடப்பதும் ஓடுவதும் விளையாடுவதும் எங்கே நடக்கின்றன?

என் மாமியாருக்கு 8 பிள்ளைகள். அவர் உயிருடன் இருந்த வரையில் எல்லா பிள்ளைகளுக்கும் பல பக்கங்களுக்கு கடிதங்கள் எழுதுவார். முதல் பக்கம் முழுவதும் ஒவ்வொருத்தரின் நல விசாரிப்பு. அடுத்த பக்கம் முழுவதும் அங்கிருப்பவர்களின் நலனுரைத்தல், வீட்டிலிருக்கும் மாடு, கண்ணுக்குட்டி, அண்டை அயலார் உள்பட! அப்போதெல்லாம் இப்போது போல அடிக்கடி துபாயிலிருந்து சொந்த‌ ஊருக்குப்போக முடியாது. ப‌யணச்சீட்டு விலை மிக அதிகம் என்பதுடன் அடிக்கடி இப்போதிருப்பதை போல விமான சேவை நேரடியாகவோ, அடிக்கடியோ கிடையாது! ஆனால் போகாத குறையே தெரியாதபடி அத்தனை விபரங்களும் கடிதங்களில் கொட்டிக்கிடக்கும். எங்களின் தபால் பெட்டி இருக்குமிடம் சென்று அதைத்திறந்து கடிதங்களை எடுத்துப் படிக்க அத்தனை ஆவலாக இருக்கும். சில சமயம் அவசரம் தாங்காமல் வீட்டுக்கு வருவதற்குள் காரிலேயே படிக்க ஆரம்பித்து விடுவோம்!


 ஊரிலோ, தபால்காரருக்குத்தான் எத்தனை வேலைகள் இருக்கும்! கடிதங்கள், மணியார்டர்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் அவர் இறங்கி, மணியடித்து, அவரின் சைக்கிள் சக்கரங்கள் சுற்றிக்கொண்டே இருக்கும். பொங்கல் அன்று வரும் வாழ்த்துக்களை வாங்க வாசலிலேயே தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருப்போம் நானும் என் தங்கையும்!! முன்பு ஒரு பாட்டுக்கூட இருந்தது, ' ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலமிது!' என்று. அது போலத்தான் கடிதங்கள் வாழ்க்கையை இணைத்தன!  நட்பை வளர்த்தன! காதலை ஆரம்பித்தன! பல வருடங்கள் சேர்த்து வைத்திருந்த கடிதங்களைக் காண்பித்தே அன்றைக்கு என் தந்தை ஒரு வழக்கில் ஜெயித்தார்கள்! இப்படி கடிதங்கள் ஆயிரம் கதைகளைச் சொல்லிய காலம் அது!

அந்தக் க‌டிதத்தொடர்புகள் எங்கே போயின? வாழ்த்துக்கள் விற்கும் கடைகளில் கூட இப்போதெல்லாம் வாழ்த்துக்கள் விலை போவதில்லை என்கிறார்கள்! அதன் பிறகு ஈமெயில்கள் வந்தன! வாட்ஸ் அப் வந்ததும் அதுவும் சுருங்கிப்போய் செய்திகள் சுருக்கமாக டைப் அடிக்கப்பட்டன! அதன் பிறகு அதுவும் குறைந்து இப்போதெல்லாம் மெஸேஜ் பேசி அனுப்புவதில் வந்து நிற்கிறது! ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வது கூட சுருக்கமாக நிகழ்கிறது. மனம் விட்டு சிரிப்பதும் மணிக்கணக்காய் பேசி மகிழ்வதும் இப்போதெல்லாம் மனிதர்களுக்கிடையே நிகழ்கிறதா என்று தெரியவில்லை! அவசர யுகத்தில் எல்லாமே அவசரமாக, சுருங்கி, பறந்து போகிறது!

கிராம‌ங்களில் விருந்தோம்பல் அத்தனை சிறப்பாக இருக்கும்!


 பகிர்ந்துண்ணுதல் யாரும் சொல்லி வளர்ந்ததில்லை. அது தானாகவே இயல்பாக நிகழும். கிட்டத்தட்ட சமையலே முடிந்திருக்கும். அதன் பின்பு குளத்தில் மீன் பிடித்தோம் என்று ஆட்கள் கொண்டு வ‌ந்து தருவார்கள். மறுபடியும் மீன் சமையல் நடக்கும். வீட்டுக்குத் தலைவரான என் கொழுந்தனார் வாசலில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே வாசலில் நடந்து போகும் தூரத்து உறவுகளை சாப்பிட்டுப்போகும்படி சொல்லுவார். இப்படித்தான் திடீர் விருந்தோம்பல்கள் நடக்கும். 

இப்போதெல்லாம் யாரும் யாரையும் வீட்டுக்கு உணவுண்ண அழைப்பதில்லை. இன்னும் பார்க்கப்போனால் இளைய தலைமுறைகள் தினமும் வீட்டில் சமையலே செய்வதில்லை. விதம் விதமான உணவுப்பொருள்கள் வெளியில் கிடைக்கின்றன. உணவகங்களுக்குக்கூட போவதற்கு முடியவில்லையென்றால் இருக்கவே இருக்கின்றன ஆன்லைன் உணவுகள்! 

ரசனையுடன் ருசியாக சமைத்து, பார்த்துப் பார்த்து பரிமாறி, உண்ணுபவர்களின் வயிறு நிறைந்தது கண்டு, மனம் நிறைந்து மகிழ்ந்தது ஒரு காலம்! என் மாமியார், அம்மா காலத்தில் உப்பும் சரி, புளிப்பும் சரி, உரைப்பும் சரி அத்தனைத்திட்டமாக சமைப்பார்கள். கடும் உழைப்பிற்கு அந்தக்கால பெண்மணிகள் அஞ்சியதில்லை. மாவு அரைக்கும்போது, வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளை எதிரே உட்கார வைத்து பழக்குவார்கள். சோறு வெந்து விட்டதா என்று பதம் பார்க்கச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ!

சில வருடங்களுக்கு முன் நான் சமையல் தொடரில் எழுதிக்கொண்டிருந்த போது, ஒரு பெண் ‘ மேடம், சாதம் எப்படி வடிப்பது?’ என்று கேட்டிருந்தார். இதற்கு என்ன பதில் எழுதுவதென்றே புரியவில்லை. எங்கள் உணவகத்தில் ஒரு இளம் வயது சமையல்காரர், ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்தவர் இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு பாசிப்பயறு குறிப்பு பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். அவர் புரியாத நிலையில் இருக்கவும் ‘ என்ன ஆச்சு?’ என்று கேட்டேன். ‘ மேடம், பாசிப்பருப்பு என்றால் என்ன?’ என்று கேட்டார். அப்படியே அசந்து விட்டேன். ‘ split mung dal’ என்றதும் ‘ அப்படி சொல்லுங்கள், மேடம்! நீங்கள் பாசிப்பருப்பு என்று சொன்னதும் புரியவேயில்லை’ என்றார். அவர் சுத்தமான தமிழ்நாட்டுக்காரர்!

மாற்றங்கள் வருவது தான் வாழ்க்கை! ஆனால் காலம் செல்லச் செல்ல, மாற்றங்கள் அசுர வேகத்தில் நிகழும்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல, நிறைய நல்ல விஷயங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறதா?


நிலா வெளிச்சத்தில் கதை பேசி, பாட்டுப்பாடி களித்து, அம்மா, அப்பா அன்பில் ஊறி, ஆரோக்கியமான உணவை ருசித்து, அறிவு மேம்பட ஆங்கிலமும் தமிழுமாய் படித்து, தோழியருடன் விளையாடிக் களித்த அந்தக்காலம் நிச்சயம் பொற்காலம் தான்!! 


17 comments:

கோமதி அரசு said...

பொற்காலம் மிக அருமையான பகிர்வு.
மலரும் நினைவுகளில் ஆழ்த்தி விட்டீர்கள்.
படங்கள் எல்லாம் மிக அருமையான தேர்வு.

ஸ்ரீராம். said...

அருமையாக, உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்.  எவ்வளவு இழந்திருக்கிறோம்?  இன்றைய தலைமுறை இதெல்லாம் பெரிய விஷயமா என்று யோசிக்கும்.  அனுபவித்துப் பார்த்தவர்களுக்குதான் அருமை தெரியும்.

நெல்லைத்தமிழன் said...

மிகவும் ரசிக்கும்படியும், காலச்சுழலில் மீண்டும் பழைய காலத்தை நினைக்கும்படியும் எழுதியிருக்கிறீர்கள்.

நான் என் கல்லூரி வயது வரை யாரும் வீட்டில் பூனைகளை வளர்த்துப் பார்த்ததில்லை. அதிலும் சாப்பிடும் இடத்திலா? அந்தப் படம் நெருடுகிறது.

நெல்லைத்தமிழன் said...

எங்கள் வீட்டில் பெரிய கம்பிகளில் ஆயிரத்துக்கும் மேல், கடிதங்கள் போஸ்ட் கார்டுகள் கோர்த்து வைத்திருப்பதையும், ஏகப்பட்ட ஓலைச்சுவடிகளையும் பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் நான் எந்தப் பொருளுக்கும் தமிழில் பெயர் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பாசிப்பருப்புக்கும் ஸ்ப்ளிட் உளுந்துக்கும் வித்யாசம் தெரிவது முதல்கொண்டு

சமீபத்தில் திருவல்லிக்கேணியில் இரவு 8 மணிக்கு, இயல்பாக அந்த வீட்டின் மாமி, சாதம் சாப்பிடறீங்களா.. இலை போடவா என்பதைக் கேட்டு எத்தனையோ டிகேடுகளுக்கு முன் காலத்திற்குப் போன உணர்வு ஏற்பட்டது

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் நெல்லைத்தமிழன்! ரொம்ப நாட்களுக்குப்பிறகு என் வலைத்தளப் பக்கம் வந்திருப்பது மகிழ்வாக உள்ளது.
ஊரில், அதுவும் கிராமங்களில் சாப்பிடும் இடங்களில் பூனைக்குட்டிள், நாய்க்குட்டிகள் உலாவுவதைப்பார்த்திருக்கிறேன்.
எ40 வருடங்களுக்கு முன் என் கொழுந்தனாரின் புதிதாய் பிறந்த குழந்தையைப்பார்க்கச்சென்றிருந்த போது, அந்தக்குழந்தையைச் சுற்றிலும் நிறைய பூனைக்குட்டிகள் உட்கார்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுக்கு எப்போது சென்றாலும் பூனைக்குட்டிகள் இங்கும் அங்கும் தாவி ஓடுவதைப்பார்த்திருக்கிறேன். அந்தக்குழந்தைக்கும் அந்தக்குழந்தையைத்தூக்கிய எங்களில் சிலருக்கும் கைகளில் கொப்புளங்கள் வந்து மிகவும் க‌ஷ்டப்பட்டோம்.
நீங்கள் சொல்வது சரி தான்! எங்கள் வீட்டில்கூட கம்பிகளில் க‌டிதங்கள் குத்தப்பட்டிருக்கும். பழைய கம்பி, புதுக்கம்பி என்று அடையாளம் சொல்வார்கள்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் ஸ்ரீராம்! பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போதும் எப்போதும் நினைத்தாலும் ஏக்கம் தரும்... அது ஒரு அழகிய பொற்காலம்...

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா உங்கள் பதிவை அப்படியே வழி மொழிகிறேன். டிட்டோ நாங்களும் வயல் வழியே அல்லது ஒரு புறம் பெரிய வாய்க்கால் மறு புறம் வயல்கள் மரங்கள் என்று இருந்த ரோடுவ் வழியாக டவுனுக்கு நடந்து சென்று பள்ளி, கல்லூரி என்று அத்தனை நினைவுகளையும் கிளப்பியது.

சமீபத்துப் பயணத்தின் போதும் கூட ஊரைச் சுற்றி நடந்து சென்றேன். 2 மணி நேரம் ஒவ்வொரு வயல் ரோடு வழியாகவும்...வர மனமில்லாமல் வேறு வழியில்லாமல் வந்தேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் உணவகத்தில் ஒரு இளம் வயது சமையல்காரர், ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்தவர் இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு பாசிப்பயறு குறிப்பு பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். அவர் புரியாத நிலையில் இருக்கவும் ‘ என்ன ஆச்சு?’ என்று கேட்டேன். ‘ மேடம், பாசிப்பருப்பு என்றால் என்ன?’ என்று கேட்டார். அப்படியே அசந்து விட்டேன். ‘ split mung dal’ என்றதும் ‘ அப்படி சொல்லுங்கள், மேடம்! நீங்கள் பாசிப்பருப்பு என்று சொன்னதும் புரியவேயில்லை’ என்றார். அவர் சுத்தமான தமிழ்நாட்டுக்காரர்!//

அதற்குக் காரணம் ஹோட்டல் மானேஜ்மென்ட் பெரும்பாலும் வடநாட்டவர்கள் அதிகம் சொல்லித் தருபவர்கள் உட்பட. இப்போது இப்படித்தான் கடைகளுக்குச் சென்றால் கூட இப்படிச் சொன்னால்தான் புரிகிறது என்ன சொல்ல? அதாவது டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ். அண்ணாச்சி கடைகளில் இன்னமும் பாசிப்பருப்புதான்!! எங்கள் ஊரில் இப்போதும் பேப்பரை கூம்பு செய்து கட்டித் தருகிறார்கள்.

ஒவ்வொரு வரியையும் ரசித்து வாசித்தேன் மனம் ஊருக்குச் சென்று விட்டது.

பழைய நினைவுகளுக்கு...மனம் ஏங்குகிறது, இப்போதுகூட ஊரில் மாற்றங்கள் வந்திருந்தாலும் கிராமத்து வாசனை இருக்கிறதுதான்!!

இக்கால இளசுகள் கண்டிப்பாகப் பலதை இழந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன் ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை. இப்படிச் சொன்னால் நம்மை ஓல்டிஸ் என்பார்கள்.

அருமையான பதிவு அக்கா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நான் பிறந்து வளர்ந்த தேனி அருகில் இருந்த என் கிராமத்தை நினைக்க வைத்து ஏங்க வைத்துவிட்டது, இப்போது அக்கிராமமே அடியோடு மாறியிருக்கிறது

இப்போது நாங்கள் இருக்கும் கேரளத்துப் பகுதியும் கிராமம்தான் என்பதாலும் எங்கள் வாழ்வியலும் ரொம்ப மாறவில்லை என்பதாக இருந்தாலும் அந்த ஏக்கம் வரத்தான் செய்கிறது.

அருமையான பதிவு

துளசிதரன்

ராமலக்ஷ்மி said...

இயற்கையோடு இணைந்து வளர்ந்த நம் சிறுவயது அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குப் புரிய வைக்கவே இயலாது போனது. கடிதங்களின் பொற்காலம் காணாது போய் விட்டது. பதிவு மலரும் நினைவுகளில் திளைக்க வைத்தாலும் இழந்தவற்றை நினைத்து வருத்தமும் மேலோங்குகிறது.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி கீதா! மிக்வும் அனுபவித்து பதில் எழுதியிருக்கிறீர்கள்! நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் சிறு வயதில் வசித்த இடங்களுக்கும் ஊர்களுக்கும் செல்வதுண்டு. கொஞ்சம் பழைய நினைவலைகளைத்தொட்டுக்கொண்டு வந்த மாதிரி ஒரு நிறைவு கிடைக்கும்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி துளசிதரன்!

இன்னுமே கிராமத்தில் தான் வாழ்கிறீர்களா? நீங்கள் கொடுத்து வைத்தவர்! இன்னும் மிச்சம் இருக்கும் கிராமப்புறத்தின் இனிமையுடனும் பசுமையுடனும் பறவைகள் குரலிசையுடனும் நீரின் சலசலப்புடனும் நீங்கள் வாழலாம்!

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி!
இனிய நன்றி!

Geetha Sambasivam said...

வடநாட்டில் பாசிப்பருப்பை ஸ்ப்ளிட் முங்க்தால் என்றும் சொல்வார்கள். முங்க்தால் எனவும் சொல்வார்கள். முங்க்தால் (dh)தானா எனில் முழுப்பருப்பு. முங்க்தால் என்று மட்டும் சொன்னால் பாசிப்பருப்பு (உடைத்தது தான்.) ஆனாலும் இப்போதெல்லாம் கிழமைகளையே சன்டே, மன்டே என்றே சொல்ல வேண்டி இருக்கு. ஞாயிற்றுக்கிழமைனா முழிச்சுப் பார்ப்பார்கள். :)))))