Sunday 22 August 2021

முத்துக்குவியல்-63!!

 அசத்திய முத்து:

சமீபத்தில் 'சிந்துடாய் சப்கல்' என்ற பெண்மணி பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்து, கனமாகியது. வாழ்க்கை முழுவதும் ஒரு பெண் பல அவலங்களையும் துன்பத்தையும் மட்டுமே சந்தித்திருந்தாலும் அவளின் கருணை அழிவதில்லை, அவள் தன்னம்பிக்கை இறப்பதில்லை. அவள் என்றுமே தன் தாய்மை உணர்வை  இழப்பதில்லை. இந்தப்பெண்மணியும் அந்த மாதிரி காருண்யம் மிக்கவளாக இருக்கிறாள். இந்தப்பெண்மணியைப்பற்றி அறிகையில் மனம் நிறைவை உணர்கிறது. அவரைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வர்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மாகே என்ற கிராமத்தில் கால்நடைகளை மேய்த்து பிழைக்கும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சிந்துடாய் சப்கல். இவர் பிறந்ததே வேண்டாத ஒன்றாய் இருந்ததால் இவர் குடும்பத்தாரால் 'சிந்தி' என்றழைக்கப்பட்டார். மராத்தியில் 'சிந்தி' என்றால் கிழிந்த துணி என்று அர்த்தமாம்! எப்படிப்பட்ட கொடுமை இது! நான்காம் வகுப்பு வரை தான் இவரால் ப‌டிக்க முடிந்தது. தன் பன்னிரண்டாவது வயதில் தன்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயானார். மீண்டும் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும்போது கணவனால் எட்டி உதைக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டார். அரை மயக்க நிலையில் மாட்டுத்தொழுவம் ஒன்றில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் வீட்டாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தெருக்களிலும் ரயில்வே பிளாட்பாரங்களிலும் பாட்டு பாடி பிச்சையெடுத்து வாழ ஆரம்பித்தார். பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் சுடுகாட்டில் தங்கிக் கொள்வார். இறுதிச் சடங்குகளில் வாரி இரைக்கப்பட்ட தானியங்களை சேகரித்து அதை மாவாக்கி ரொட்டி செய்து எரிந்து கொண்டிருக்கும் சிதைகளிருந்த நெருப்பில் அதை சுட்டுத்தின்னும் அவல வாழ்க்கைக்கு தள்ள‌ப்பட்டார். எத்தனை அவலமான வாழ்க்கை அவருக்கு!


அதன் பின் தான் அவர் வாழ்க்கையில் திருப்பம் வந்தது. தன் பெண்ணை அநாதை பராமரிப்பு நிலைத்தில் விட்டு விட்டு, அநாதைக்குழந்தைகள் பலருக்காக இன்னும் கடுமையாக பிச்சையெடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணம், நன்கொடைகளைக்கொண்டு அனாதை இல்லங்களை உருவாக்கினார். தன் வாழ்க்கையையே அநாதைகளைப் பராமரிக்க அர்ப்பணித்தார். 1050க்கும் மேற்பட்ட அநாதைக்குழந்தைக‌ளுக்கு இவர் அடைக்கலம் கொடுத்தார். விருது பணத்தில் மேலும் மேலும் நிலம் வாங்கி அநாதை விடுதி பராமரிப்பு பணிகளை விரிவு படுத்தி வருகிறார். தன்னால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்தக்கால்களில் நிற்கும் வரை அடைக்கலம் கொடுத்து வருகிறார். இவரால் வளர்க்கப்பட்ட பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக இருக்கின்றார்கள். 


இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மராத்தி மொழியில் ' Mee Sindhutai Sabkal’ என்ற திரைப்படம் 2010 ஆம் அண்டில் வெளியானது. இந்த திரைப்படம் 54வது லண்டன் திரைப்பட விழாவில் திரையிடத்தேர்வானது. ' 1050 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் 'மாயி' [அம்மா] என்ற‌ழைக்கப்படும் சப்கலுக்கு 2016ம் ஆண்டு DY Patil Institute of Technology and research foundation கெளரவ டாக்டரேட் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது. அன்னை தெரசா விருது, பத்மஸ்ரீ விருது உளபட 500க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு இவர் கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார். ஃபீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுவது போல குப்பைமேட்டிலிருந்து எழுந்து ஆயிரக்கணக்கான அனாதைக்குழந்தைகளை வாழ்க்கையில் உயர்த்தி மகத்தான சாதனை படைத்திருக்கும் இந்த உயர்ந்த பெண்மணியை வணங்குவோம்

 இசை முத்து:

ஏ.ஆர்.ரஹ்மானின் ' கண்ணாமூச்சி ஏனடா' பாடல் வயலினில் இங்கே இழைகிறது. அதுவும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் பிரபல வயலின் கலைஞர் ரூபா ரேவதி கரங்களால்! கேட்டு ரசியுங்கள்! 

13 comments:

ஸ்ரீராம். said...

சிந்துடாய் சப்கல் - எவ்வளவு உயர்ந்தவர்? இறைவன் தான் இருக்க முடிய இடங்களுக்கு தன் பிரதிநிதியாக இதுபோன்ற சிலரை அனுப்புகிறான்.... வணங்கப்பட வேண்டியவர்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கும்
வணங்குதலுக்கும் உரியவர்
போற்றுவோம் வணங்குவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பெண்மணி...

வெங்கட் நாகராஜ் said...

போற்றுதலுக்குரிய பெண்மணி. எத்தனை கடின வாழ்க்கை - ஆனாலும் அடுத்தவர்களுக்காக உழைத்த அவரது போக்கு போற்றத்தக்கது.

கோமதி அரசு said...

சிறந்த பெண்மணி அவர்களை தெரிந்து கொண்டென். அவர்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
பாடல் அடுமை.( அருமையான வாசிப்பு)

ராமலக்ஷ்மி said...

சிந்துடாய் சப்கல் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்.

இனிய பாடல்.

பகிர்வுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

// இறைவன் தான் இருக்க முடிய இடங்களுக்கு தன் பிரதிநிதியாக இதுபோன்ற சிலரை அனுப்புகிறான்//
நீங்கள் எழுதியுள்ள இந்த வரி தான் இந்தத்தாய்க்கு மிகவும் பொருத்தமாயிருக்கும் சகோதார் ஸ்ரீராம்!! கருத்துரைக்கு இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

அழகான கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வாத்திய இசையை ரசித்ததற்கும் இனிய கருத்துரை தந்ததற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

பாடலை ரசித்து, கருத்துரையும் தந்ததற்கு இனிய நன்றி ராமலக்ஷ்மி!

Ranjith Ramadasan said...

மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்.. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் www.techhelpertamil.xyz

Bhanumathy Venkateswaran said...

அப்பப்பா! என்ன ஒரு வாழ்க்கை! வாழ்க்கை என்பது ஒரு சீட்டாட்டம் போல நமக்கு என்ன சீட்டு விழும் என்பது நம் கையில் இல்லை, சிலருக்கு நல்ல சீட்டு கிடைத்தாலும் மோசமாக விளையாடி தோற்பார்கள், மோசமான சீட்டு கிடைத்தாலும் திறமையாக விளையாடி ஜெயிப்பவர்கள் உண்டு என்பார்கள். சிந்துடாய் சப்கல் வாழ்க்கை இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.