Sunday 19 September 2021

சமையல் அனுபவங்கள்!!!!

' அடிக்கடி சமையல் குறிப்புகள் இனி பதிவேற்றுங்கள்' என்று சகோதரி வல்லி சிம்ஹன் முன்பு சொன்னார்கள். அதைப்படித்த பின்பு ஏனோ பழைய நினைவலைகள் என்றுமில்லாமல் அன்றைக்கு வந்து கொண்டிருந்தன. உடனேயே அவற்றை எழுத நினைத்தேன். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றைக்குத்தான் என்னை எழுத வைக்கின்றன. 

திருமணமான புதிது. சாதாரண சமையல் தான் தெரியும். புதுப்புது சமையல் வகைகள் பற்றி ஆராயும் மனதுடன் அவைகள் பற்றி அறியும் வாய்ப்புகளும் நிறைய வந்தன. திருமணமானதும் பூனாவுக்கும் பம்பாய்க்கும் இடையிலுள்ள பன்வேல் என்னும் சிறிய நகரத்திலுள்ள ஒரு பைப்கள் தயாரிக்கும் ஃபாக்டரியில் மேலாளராக இருந்தார் என் கணவர். பல தரப்பட்ட குடும்பங்கள் நடுவே எங்கள் வீடு. பீகார், கேரளா, மகராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா என்று பலதரப்பட்ட சமையல் வகைகள் பற்றி ஆர்வமாக அறிந்து கற்றுக் கொள்ள‌ முடிந்தது. மஹாரஷ்ட்ராவின் பேடாக்கள், அவர்களின் உப்பலான சப்பாத்தி, சிறிய சமயலறையினை மிக சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி, பீஹாரின் காய்கறி குழம்பு வகைகள், கேரளத்தின் மீன் குழம்பு என்று என் சமையலறிவு விரிய ஆரம்பித்தது. 

அடிக்கடி சனி, ஞாயிறுகளில் பம்பாய் சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு அப்ப‌டியே மாட்டுங்காவில் ஒரு தமிழ் சினிமாவும் பார்த்து வருவது வழக்கமாக இருந்தது. என் கணவரின் நண்பர், கல்லூரியில் உடன் படித்தவர் வீடு அங்கிருந்தது. அவர்கள் வீட்டிற்கு ஒரு நாள் சாப்பிடச் சென்றோம். அவரது மனைவி எனக்கு ஒரு சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தக்ம் கொடுத்தார்கள். திருமதி. செல்லம்மாள் எழுதிய புத்தகம் அது. அந்தக் குறிப்புகளை செய்து பார்ப்பது துபாய் வரை தொடர்ந்தது. துபாய் வந்த பிறகோ உலக அளவில் பார்த்துப் பார்த்து ரசித்து புதிய சமையல் வகைகளைக் கற்கும் ஆர்வம் பிறந்தது. 2004ம் வருடம். என் மகனின் யோசனைக்கும் வற்புறுத்தலுக்குமிடையே www.hubtamil.com என்ற  வலைத்தளத்தில் ' Mrs.Mano's Tamilnadu Delicacies ' என்ற பிரிவைத் துவக்கினேன். அப்போது தெரியாது அது மிக நீளமாகத் தொடருமென்று! பல சமையற்குறிப்புகளும் பல கேள்விகளும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் தீர்வுகளும் என்று அந்தப்பிரிவு வளர்ந்து கொண்டே போனதில் இதே தலைப்பில் பாகம் 2, பாகம் 3 என்று நிர்வாகத்தினர் ஆரம்பித்துக்கொடுக்க மேலும் என் சமையல் குறிப்புகள் பாராட்டுக்களுடன் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இன்று வரை அந்தத் தொடர்கள் முழுவதையும் சுமார் 18 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். 

கீழேயுள்ள இணைப்பில் நீங்கள் பார்க்கலாம்!

https://www.hubtamil.com/talk/forumdisplay.php?25-Indian-Food&s=d1bffb103b9f0a7a72d1a43d0c361735

சில வருடங்களில் மகனுக்கு பெண் தேடும் படலம் தீவிரமான பின்னணியில் தஞ்சைக்கும் துபாய்க்கும் இடையே அலைய ஆரம்பித்ததில் சமையல் கலை பின்னுக்குப்போக ஆரம்பித்தது. 

அதைத்தொடர்ந்து ' அறுசுவை ' தளத்தின் [ www.arusuvai.com ] நிறுவனர் பாபு, தான் நாகைப்பட்டிணத்திலிருந்து இயங்குவதாகவும் தன்னுடைய ' அறுசுவை' தளத்தில் சமையல் குறிப்புகள் தொடர்ந்து எழுத வேண்டும் ' என்றும் கேட்டதன் பேரில் அதில் சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். அதன் பின் ஒரு நாள் என்னுடன் தொடர்பு கொண்டு ' தான் நடத்தவிருக்கும் நாகை மாவட்டத்துக்கான சமையல் போட்டியில் சமையல் கலை வல்லுனர்கள் திருமதி.ரேவதி ஷண்முகம், திருமதி. கலைவாணி சொக்கலிங்கம் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொள்ளவிருப்பதகவும் அதில் நானும் நடுவராக பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். நானும் அந்த சமயத்தில் தஞ்சை செல்ல வேண்டியிருந்ததால் அதற்கு ஒப்புக்கொண்டேன். 

சமையல் போட்டியில் எதிர்பாராத வண்ணம் நிறைய பேர்கள் பங்கேற்க நல்லதொரு குறிப்பை தேர்வு செய்வது சற்று சிரமமாகவே இருந்தது. பச்சை திராட்சையில் ஒரு பெண் செய்திருந்த ஊறுகாயின் சுவை அதையே பரிசுக்கு எங்களைத் தேர்வு செய்ய வைத்தது.

இப்படி பலவிதமான அனுபவங்கள்!

' ஹாலிடே இன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தயாரிப்பிலிருந்து கற்றுக்கொண்ட‌ 'குலோப்ஜான் ', என் ஓர்ப்படியிடம் கற்றுக்கொண்ட ' ரஸ மலாய்', ஒரு சினேகியிடமிருந்து கற்ற ' ஷாகி துக்கடா', ஒரு 18 வயது பெண் கற்றுக்கொடுத்த முள்ள‌ங்கி சட்னி,  ஒரு கேரள சினேகிதியிடமிருந்து கற்ற ' மாம்பழ  புளிசேரி' இப்படி சுவாரஸ்யமான சமையல் அனுபவங்கள் இன்னுமே நீண்டு கொண்டே போகின்றன!

இத்தனை வருடங்களில், அனுபவங்களில் நிறைய பேர் பலவிதமாக ' சாம்பார் சாதம்' செய்வதை ரசித்து ருசித்திருக்கிறேன். நிறைய உணவகங்களில் சாம்பார் செய்து சாதத்தில் அப்படியே ஊற்றிக் கலந்து ' சாம்பார் சாதமாக' கொடுப்பதைப்பார்த்து நொந்திருக்கிறேன். என்னைப்பொறுத்த வரை, நான் குறிப்பிட்டிருக்கும் ' செல்லம்மாள்' அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து 47 வருடங்களுக்கு முன் கற்ற 'சாம்பார் சாதம் ' மிக ருசியானது. இதை விட அதி ருசியான சாம்பார் சாதத்தை வேறெங்கும் நான் சாப்பிட்டதில்லை. இதை அடிக்கடி வீட்டில் செய்வது வழக்கம்.அந்தக் குறிப்பை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


சாம்பார் சாதம்

தேவையானவை:

பச்சரிசி 2 கப்

துவரம்பருப்பு 1 கப்

புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு

தேவையான உப்பும் எண்ணெயும்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் 2

பெரிய தக்காளி 3

பச்சை மிளகாய் 2

அரிந்த கொத்தமல்லி ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை இணுக்கு 2

துருவிய காரட் 1 

துருவிய உருளைக்கிழங்கு 1

நீளமாக அரிந்த சிறிய‌ கத்தரிக்காய் 4

நெய் தேவையான அளவு

கீழ்க்கண்ட பொருள்களை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும்:

தனியா 4 ஸ்பூன், கடலைப்பருப்பு 2 ஸ்பூன், பொட்டுக்கடலை 2 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், மிளகாய் வற்றல் 4, மிளகு 8, கசகசா 1 ஸ்பூன், பெருங்காயக்கட்டி அரை நெல்லிக்காயளவு

செய்முறை: 

பச்சரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாக கழுவி 10 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ள‌வும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு போடவும். அது வெடித்ததும் அரிந்த வெங்காயம் போட்டு வதக்க‌வும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, ம‌ஞ்சள் தூள், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு குழைய வதக்க‌வும். எண்ணெய் மேலே தெளிந்து வ‌ரும்போது கத்தரிக்காய் துண்டுகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிய தீயில் சிறிது நேரம் வதகக்வும். பின் புளி கரைத்த நீரை சேர்த்து நன்கு கிளறவும்.  புளி நீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது உருளைக்கிழங்கு, காரட் துருவல் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து வேக வைகக்வும். காய் வெந்து புளி நீர் கெட்டியாகும்போது பொடித்த பவுடரை சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடங்கள் மெதுவான தீயில் கிளறிய பின் வெந்த சாதம், தேவையான உப்பு சேர்த்து மெதுவான தீயில் நன்கு கிளறவும். நெய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும். 

இதை சும்மாவே சாப்பிடலாம். நாவில் அந்த ருசி அப்ப‌டியே தங்கி விடும். ஏதேனும் நல்ல ஊறுகாய் இருந்தால் போதும். என் வீட்டில் எல்லோரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்துக்கொள்வார்கள்.

 

19 comments:

ஸ்ரீராம். said...

இப்படி செய்து சுவைத்ததில்லை.  ஒருமுறையாவது இபப்டி செய்து சுவைத்து விடவேண்டும் என்று தோன்றுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா உங்களை நான் அறிந்தது (அப்போது உங்கள் முகம் தெரியாது) இண்டஸ் லேடிஸ் மூலமாகத்தான். 2008 என்று நினைவு. என் மகனுக்காக ஏதோ தேடிய போது இந்த இண்டஸ் லேடிஸில் அந்தத் தகவல் இருக்க, ஆனால் அதில் மெம்பர் ஆனால் தான் விவரம் கிடைக்கும் என்றதால் பதிந்துகொண்டேன். அப்போது கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்ததால் இன்னும் நினைவிருக்கிறது மனோ அக்கா, உங்கள் ஐடி படம் ஒற்றை சிவப்பு ரோஜா விரிவது போல் அனிமேஷனோடு இருக்கும். அப்போதும் நீங்கள் நிறைய சமையல் குறிப்புகள் அங்கு கொடுத்ததுண்டு. இரண்டு மாதங்கள்தான் அதன் பின் இண்டஸ் லேடீஸில் நான் இல்லை.

அப்போது உங்களோடு உரையாடியிருக்கிறேன் இது போல். அங்கு ஆங்கிலத்தில்.

அப்போது நீங்கள் உங்கள் மகன் பங்களூரில் இருந்ததாகச் சொல்லிய நினைவு. நீங்கள் துபாய் இந்தியா என்று இருந்ததும் சொல்லியிருந்தீர்கள்,. உங்கள் உணவகம் பற்றியும். உங்கள் மகனும் நன்றாகச் சமைப்பார் என்றும் அப்போதே தெரியும்.

அதன் பின் 2013ல் வலைத்தளம் தொடங்கியதும் உங்களை வலையில் பார்த்து அறிந்த போது அட மனோ அக்கா அதே மனோ அக்காதான் என்று தெரிந்ததும் உங்களிடமும் சொன்ன நினைவு. உங்கள் சமையல் அனுபவங்கள் என்ற தலைப்பு பார்த்ததும் உடனே மேலே சொன்னது எல்லாம் நினைவுக்கு வந்தது அக்கா.

இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியும் சென்று பார்க்கிறேன். மிக்க நன்றி மனோ அக்கா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கிட்டத்தட்ட உங்களைப் போன்றுதான் நானும் புதிது புதிதாகச் செய்யும் ஆர்வத்தில் கற்றது நிறைய. மகனும் வளர்ந்து வந்த நேரத்தில் ஆர்வத்துடன் புதியதாய்ச் சமைப்பதைச் சாப்பிடுவான் உற்சாகமாகக் கேட்பான் அதனால் நிறைய கற்றுக் கொண்டேன். இப்போதும் புதிதாய்க் கற்பதில் ஆர்வம். பன்னாட்டு வகைகள் உட்பட.

நீங்கள் மிக மிக நன்றாகச் செய்வீர்கள்.

மிக்க நன்றி மனோ அக்கா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா அந்தச் சுட்டிக்குள் உங்கள் ரெசிப் லிங்கிற்குள் பார்ட் 1, 2 சென்றால் லிஸ்ட் வருகிறது ஆனால் லிஸ்டில் உள்ள செய்முறை சென்றால் சுட்டி வரவில்லை. This site can’t be reached ஒரு வேளை என் கணினி இணையம் பிரச்சனையாக இருக்கலாம்..பின்னர் மீண்டும் முயற்சி செய்கிறேன்.

கீதா

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் ஸ்ரீராம்! ஒரு முறை இந்த சாம்பார் சாதத்தை செய்து ருசித்து விட்டால் அதன் ருசிக்கு அடிமையாகி விடுவீர்கள்! அவசியம் செய்து பாருங்கள்!

மனோ சாமிநாதன் said...

அன்பு கீதா!
' இண்டஸ்லேடீஸ் ' பற்றியே மறந்து விட்டேன். நீங்கள் குறிப்பிட்டு சொன்னதும் தான் எனக்கும் அத்தனையும் நினைவுக்கு வந்தது. எத்தனை விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள்! எனக்கு நிறைய மறந்து விட்டது. ' FORUMHUBல் எனக்கு நிறைய FAN FOLLOWERS இருந்தார்கள். நிறைய சுவாரஸ்யமான கேள்விகள், விளக்கங்கள் என்று என் நேரம் பறந்து கொண்டிருந்தது அந்த சமயத்தில். இண்டஸ் லேடீஸ் ல் எழுதிய சமயத்தில் எனக்கு நிறைய மன அழுத்தங்கள், அலைச்சல்கள் இருந்தன. அதனால் மகிழ்ச்சியான அனுபவங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் மனதில் பதியவில்லையோ என்னவோ! இத்தனை வருடங்கள் ஆகியும் நீங்கள் என்னைப்பற்றி இந்த விஷயங்களையெல்லாம் நினைவில் வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கீதா!

என் மகன் பெங்களூரில் இருந்ததில்லை. சின்ன வயதிலிருந்து இங்கே ஐக்கிய அமீரகம் தான். இடையில் கல்லூரிப்பருவத்தின்போது இரு வருடங்கள் ஊட்டியில் படித்த பின் அடுத்தடுத்த வருடங்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு. அப்புறமும் இதே துபாய் தான்!

நீங்கள் எழுதியதும் அந்த லிஸ்ட்ல் போய் பார்த்தேன். சுட்டி வரவில்லை. ஸ்க்ரோல் பண்ணினால் தான் குறிப்புகளைப்பார்க்க முடிகிறது. அந்த வலைத்தள நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும்!

நீண்ட கருத்துரைகளுக்கு என் மனமார்ந்த மக்ழ்ச்சியும் நன்றியும் கூட‌!

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா அப்ப நான் தான் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன்போல உங்கள் மகன் அப்போ பங்களூரில் என்று..வேறு யாருடைய கருத்தையோ அப்படிப் புரிந்து கொண்டுவிட்டேன் போல..

//இண்டஸ் லேடீஸ் ல் எழுதிய சமயத்தில் எனக்கு நிறைய மன அழுத்தங்கள், அலைச்சல்கள் இருந்தன. அதனால் மகிழ்ச்சியான அனுபவங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் மனதில் பதியவில்லையோ என்னவோ!//

ஓ! இருக்கலாம் அக்கா.

அந்த வலைத்தள அட்மின் என்று சித்ரா விஷ்வேஸ்வரன் என்பவர் இருந்தார். நான் இரு மாதங்கள் மட்டுமே தான் அதில் இருந்தேன் அப்புறம் நானும் அப்பக்கம் போனதே இல்லை...அதனால் அப்டேட் எதுவும்தெரியவில்லை. ஆனால் அந்த இரு மாதங்களில் உங்கள் பெயர் எல்லாம் நினைவில் பதிந்தது. அது போன்று சித் விஷ் - சித்ரா விஷ்வேஸ்வரன் இப்போதும் அவர்தான் என்று தோன்றுகிறது.

உங்கள் பெயர் போட்டுத் தேடினால் 2005 ல் நீங்கள் கொடுத்த நான்வெஜ் ரெசிப்பிஸ் வருகிறது நீங்கள் பகிர்ந்திருப்பது பேஜ் வருகிறது...அப்போதெல்லாம் நான் அதில் இல்லை.

https://indusladies.com/community/threads/non-vegetarian-recipes-by-mrs-mano-saminathan.3915/

2005 அப்போது நீங்கள் புதிய மெம்பர் போல...உங்கள் ஐடி படமும் இல்லை. ஆனால் நான் வந்த சமயம் 2008 ஜஸ்ட் இரு மாதங்கள். ஏப்ரல்-மே-ஜூன். நீங்கள் அங்கு ரெசிப்பிஸ் கொடுப்பது எல்லாம் நினைவிருக்கு...

மிக்க நன்றி மனோ அக்கா

கீதா

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ ,
எத்தனை வருட அனுபவங்கள்!!!
சாம்பார் சாதம் செய்முறை மிக சிறப்பு.
எனக்கெல்லாம் 2005க்கு மேல்தான் ப்ளாக் அனுபவம் எல்லாம்.

அதுவரை மரத்தடி, கதைகள் என்று சென்று கொண்டிருந்தது.
கீதாரங்கன் சொல்வதைப் பார்த்தால்
மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது!!!

வல்லிசிம்ஹன் said...

செல்லம்மாள் என்று ஒரு சமையல் குறிப்பு
புத்தகம் இருந்ததா!!
நான் மீனாட்சியம்மாள் காலம்.
கரியடுப்பு, விறகடுப்பு என்று ஆரம்பிக்கும் புத்தகம்.:)
கிணற்றுத்தவளையாக இருக்கிறேன்:)))

உங்கள் சாதனைகள் அதிசயிக்க வைக்கின்றன.
என்னையும் குறிப்பிட்டு
எழுதி இருப்பது மிக மிக மகிழ்ச்சி.
இன்று யூடியூப் காணொளிகள் ஆயிரக்கணக்கில் வந்தாலும்

எழுத்தில் சொல்லும் அருமை வேறெதிலும் வராது.
தமிழுக்கும் நம் சிந்தனைக்கும் அத்தனை மகிமை.

மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
பற்பல சமையல் முறைகளை அறியலாம்.
உங்களை நான் நட்பாக அடைந்திருப்பது பெருமை.


Geetha Sambasivam said...

இம்முறையில் தான் நானும் சாம்பார் சாதம் செய்வேன். ஆனால் உருளைக்கிழங்குத் துருவல், காரட் துருவல் எனச் சேர்த்ததில்லை. பல சமயங்களில் அரிசி+பருப்புக் குழைந்ததும் அதிலேயே புளி ஜலத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்புச் சேர்த்து வறுத்த பொடியைப் போட்டுக்கலந்து பின்னர் நெய்யில் தாளிப்பேன். சமயத்திற்கு ஏற்றாற்போல் மாறும். பொதுவாகக்குக்கர் பயன்பாடு இல்லை என்பதால் நேரடியாகச் சமைப்பதே அதிகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதே போல செய்து பார்க்க வேண்டும்... நன்றி அம்மா...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

கீதா! நீங்கள் எழுதிய லிங்க் சென்று பார்த்தேன்! ஏதோ பூர்வ ஜன்ம அடையாளங்களைப் பார்ப்பது போல இருந்தது! சித்ரா விஸ்வேஸ்வரன் பற்றியும் ஞாபகம் வந்தது. முதலில் அதன் உரிமையாளர் வேறு என்று நினைவு. சித்ரா நிறைய வெஜிடேரியன் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எல்லாம் மாறி விட்டது போல! இருந்தாலும் உங்கள் மூலம் என் பழைய நினைவலைகளை கொஞ்சம் தூசி தட்ட முடிந்தது. அதற்காக அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள வல்லி சிம்ஹன்!
நானும் 2003 போலத்தான் இதெல்லாம் ஆரம்பித்தேன். ஆனால் நானே எதிர்பார்க்காத வகையில் இதெல்லாம் விரிவாகப்போய் விட்டது! அப்போதெல்லாம் திருமதி.செல்லம்மாள் எழுதிய சமையல் புத்தகம் மிகவும் பிரபலம். நானும் என் ஓர்ப்படிகளும் கூட்டுக்குடும்பமாய் இங்கே துபாயில் வாழ்ந்த இளமைக்காலத்தில் இந்தப்புத்தகம் எங்கள் சமையலில் ஒரு முக்கிய அங்கம் வகித்தது! இப்போது கூட இந்த 'செல்லம்மாள்' எழுதிய சமையல் குறிப்புகள் ' குமுதத்தில்' வருகிறது! ஒவ்வொரு குறிப்பும் மிகவும் சரியான அளவுகளுடன் இருக்கும்! அதை அப்படியே பின்பற்றினால் போதும்!
உண்மையில் இந்தப்பதிவிற்கு நீங்கள் தான் காரணம்! எளிமையாகவும் உண்மையாகவும் நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு நான் என்றென்றும் ரசிகை!
இத்தனை அழகாக கருத்துரை எழுதியதற்கு அன்பு நன்றி!!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் செய்முறை இன்னும் ஈசியாக இருக்கிறது கீதா! இந்த மாதிரி பல வகை சாம்பார் சாதங்களை செய்து பார்த்திருந்தாலும் நான் எழுதியுள்ள 'செல்லம்மாள்' அவர்களின் குறிப்பைத்தான் இதுவரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!!