Saturday, 6 November 2021

முத்துக்குவியல்-65!!

 

அசத்தும் முத்து:

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் whatsapp - ஐ விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்ட செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ். 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர் பிரனேஷ் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் கூகுளினால் நடத்தப்படும் கோடிங் ஆன்லைன் கிளாஸில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மாணவர் பிரனேஷ் வாட்ஸ்அப் செயலி போல "ஜெட் லைவ் சாட்" என்ற புதிய செயலியை உருவாக்கினார். இந்த செயலியை கூகுள் நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் நிறுவனம் இந்த புதிய செயலிக்கு ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. தற்போது ப்ளே ஸ்டோரில் சென்று ஜெட் லைவ் சாட் என டைப் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய செயலி வாட்ஸ் அப் செயலியை விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்டுள்ளன. பாதுகாப்பு அதிகம் ஒருவர் அனுப்பும் தகவலை நமக்கு அறிமுகமில்லாத நபர் யாரும் பார்க்க முடியாது. பதிவிறக்கமும் செய்ய இயலாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இந்த புதிய செயலி மூலம் ஒரு தகவலை ஒரே நேரத்தில் பதினைந்து நபர்களுக்கு அனுப்பலாம். இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் உருவாக்கியுள்ள இந்த புதிய செயலி, வாட்ஸ் ஆப்பைவிட பல்வேறு பரிணாமம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

துயர முத்து:

என் மகனின் அலுவலகத்தில் மேலாளராக வேலை செய்பவர் கொரோனாவால் ஊருக்குச் சென்றவர் திரும்பி வர முடியாமல் பல மாதங்கள் தமிழ்நாட்டில்  குடும்பத்தோடு இருந்து வந்தார். அங்கும் சரி, இங்கும் சரி, கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் இங்கு வர முடியவில்லை. சமீப காலமாக மீண்டும் விமான சேவைகள் ஆரம்பித்ததும், இங்கும் நிலைமை சற்று சீராக ஆரம்பித்ததில் அவருக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாயும் பிறந்ததும் கிளம்பி வருவதாகவும் என் மகனிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டார். சென்ற வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகிழ வேண்டிய நேரத்தில் துன்ப இருள் மட்டுமே வீட்டில் பரவியது.

பிறந்த குழந்தைக்கு இரண்டு கண்களுக்கு பதிலாக ஒரு கண், வலது கண் மட்டுமே இருக்க, இடது கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் மூடியிருப்ப்து போல ஒரு கோடாக இருந்தது. அந்தக்கண்ணுக்கு சற்று தள்ளி ஒரு குட்டிக்கண் போன்ற துவாரமும் இருந்தது. புகைப்படத்தைப்பார்த்ததும் நாங்கள் அனைவரும் மிகவும் கலங்கிப்போய் விட்டோம். என்ன மாதிரியான கொடுமை இது! அந்தப் பெற்றோர் என்ன செய்வார்கள் இனி? கடைசி காலம் வரை எப்படி இந்தத்துயரத்தை சமாளிக்கப்போகிறார்கள்? . கதறி அழுபவரை என் மகனால் வார்த்தைகளால் தேற்ற முடியவில்லை. 

மூளையின் குறைவான செயல்பாடுகளால் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இப்படி ஒரு கண் விழி அல்லது இரண்டு கண்விழியுமே இல்லாமல் பிறக்க நேர்ந்து விடுகிறது என்பதும் இந்த நிலைக்கு Anophthalmia என்று பெயர் இருப்பதும் தெரிய வந்தது.

என் சகோதரி மகள் கண் அறுவை சிகிச்சை நிபுணர். அவரிடம் பேசியதில் இனி இந்தக்கண்ணிற்கு எதுவுமே செய்ய முடியாது. பார்வையற்ற நிலை தான் எப்போதும். ஆனால் வலது கண்ணின் பார்வை சரியாக இருக்கிறதா என்று தான் இனி கவனிக்க‌ வேண்டும். ஆனால் மருத்துவர்களுக்கு மூன்றாம் மாதத்தில் தான் பார்வை சரியாக உள்ளதா என்று கண்டு பிடிக்க முடியும் என்று சொன்னார். மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் நிறைய உபகரணங்கள் இருப்பதால் அங்கு அழைத்துச் சென்று பரிசோதிப்பது நல்லது என்றும் சொன்னார். அதன் படி அங்கே பரிசோதனைகள் செய்ததில் குழந்தையின் பார்வைக்குறைபாடு உறுதியானதும் குழந்தையின் பெற்றோர் கண்ணீர் வழிய இடிந்து போய் விட்டார்கள். சில சமயங்களில் நம் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதேயில்லை!!

இசை முத்து:

இந்தப்பாட்டு எப்போது கேட்க நேர்ந்தாலும் மனதை பிசையும். எஸ்.பி.பியின் இனிய குரல் என்னவோ செய்யும். அந்த காட்சியமைப்பிற்கு ஏற்ற தாக்கத்தை இந்தப்பாட்டும் இவரது ஆழமான குரலும் எப்போதுமே கொடுக்கும். கேட்ட பிறகு என் கருத்து பெரும்பாலும் நிறைய பேருடைய கருத்தாகவே இருக்கும்! 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியும் ஒரு துயரமா...? வருத்தமாக உள்ளது...

Thulasidharan V Thillaiakathu said...

சில சமயங்களில் நம் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதேயில்லை!!//

மனோ அக்கா சில அல்ல பல கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதேயில்லை. பதில் இல்லா கேள்விகள் நிறைய உள்ளன. ஆனால் அதற்கு ஒரு ஒற்றை சொல்லில் பதில் கொடுக்கப்படும் 'விதி'. பூர்வ ஜென்ம பாவ புண்ணியக் கணக்கு என்றும் சொல்லப்படும்.

இதே பிரச்சனை எனக்குத் தெரிந்த ஒருவருக்கும் நடந்திருக்கிறது இரு கண்களுமே இப்படியாக....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எஸ்பி பியின் பாடல் மிகவும் அருமையான பாடல் உணர்வுபூர்வமான பாடல். அவரின் குரலில் அது இன்னும் தெரியும்,...

கீதா

கோமதி அரசு said...

ஜெட் லைவ் சாட் செய்தி அருமை. அந்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த செய்தி மனதை கனக்க வைத்து விட்டது. குழந்தைக்கு இப்படி இருந்தால் பெற்றோர் மனநிலை மிகவும் துயரம் அடையும். குழந்தையின் இன்னொரு கண் பார்வை நன்றாக இருக்க வேண்டும்.இறைவன் ஒரு கண் பார்வையை கொடுக்க வேண்டும்.
பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

பாட்டு மிகவும் நெகிழ்வு.

ஸ்ரீராம். said...

அசத்தும் முத்து உண்மையிலேயே அசத்துகிறது.  பாராட்டுகள்.  எவ்வளவு ஜீனியஸ்கள் நம் நாட்டில் இன்னும் அறியப்படாமல் உள்ளனரோ?

துயர முத்து மனத்தைக் கலங்க வைக்கிறது.  பாவம்.  அந்தப் பெற்றோரும் பாவம், குழந்தையும் பாவம்.

எஸ் பி பி பாடல்  நன்றாயிருப்பதற்குக் கேட்கவும் வேண்டுமா என்ன!

கரந்தை ஜெயக்குமார் said...

குழந்தையின் துயர நிலை மனதை கனக்கச் செய்கிறது

Yaathoramani.blogspot.com said...

நடுவில் சொன்ன விசயம் அதிகம் மனதைப் பாதிக்கிறது...எப்படி ஆறுதல் சொல்வது..

ராமலக்ஷ்மி said...

குழந்தையின் நிலைமை மிகத் துயரமானது. பிரார்த்திப்போம்.

மாணவரின் சாதனை பாராட்டுக்குரியது.

பாடல் இனிமை.

Bhanumathy Venkateswaran said...

சந்தோஷமும், துயரமும் கலந்த செய்திகள்.