நேற்று இங்கே துபாய் , டேரா நகரில் ஐந்து நட்சத்திர விடுதியான ஹையாத் ரீஜென்சி இணைப்பான காலரியாவிலுள்ள திரையரங்கத்தில் ' தலைவி' படம் பார்த்தேன். இந்தியாவைப்போலவே துபாயிலும் பல திரையரங்குகளில் நேற்று இந்தப்படம் வெளியானது. எங்கள் மகனின் பிஸினஸ் பார்ட்னர் இப்படத்தின் வெளியீட்டார் என்பதால் நாங்களும் இந்தப்படம் பார்க்க வந்தோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்வாழ்க்கை வரலாற்றை ஓரளவு மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தலைவி. ஜெயலலிதா பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரைத்துறை நோக்கி வந்ததில் தொடங்கி, அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது வரை அவர் கடந்து வந்த பாதையைப் பேசுகிறது தலைவி. வரலாற்றுத் திரைப்படங்களில் கதைகளைத் திரிப்பதும் பல பக்கங்களை இருட்டடிப்பு செய்வதும் உண்மைக்குப் புறம்பானது. அதைத்தான் இயக்குனர் விஜய் தலைவி திரைப்படத்தில் செய்திருக்கிறார். அதையும் மீறி, நிறைய உண்மையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய திரைபப்டமென்பதால் கடைசி வரை ரசித்துப் பார்க்கும்படி இயக்கியிருக்கிறார் விஜய்!
எம்.ஜி.ஆர் 'எம்.ஜே.ஆர் ' என்றும் ஜெயலலிதா ஜெயா என்றும் கருணாநிதி ' கருணா' என்றும் ஆர்.எம்.வீரப்பன் 'ஆர்.என்.வி என்றும் அழைக்கப்படுகிறார்கள். தலைவி படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்வது கதாபாத்திர தேர்வு, ஒளிப்பதிவு, மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் அவரின் குரல் சில சமயங்களில் பொருந்தவில்லை. ஒரு தமிழ் நடிகை இதை விடவும் சிறப்பாக நடித்திருக்க முடியும் என்று எனக்குத்தோன்றியது. அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்டார் அரவிந்தசாமி. இப்படித்தான் எம்.ஜி.ஆர் நிழலில் இருந்திருப்பாரா என்று நினைக்க வைக்கிறார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு, ஒப்பனை, பாவனைகள் எல்லாமே கிளாசிக். நடிப்பில் இவர் தான் முதலிடம் பெறுகிறார். அவரது சின்ன புன்னகைகள், வருத்தமான முகம், என்று நுணுக்கமாக அவரைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஜய்.
எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு ஒரு அம்மா மகள் போல, குரு சிஷ்யை போல என்று காண்பித்து, அவர்கள் இடையே உள்ள பந்தத்துக்கு எந்தப்பெயரும் வைக்காமல் கவனமாக படத்தை நகர்த்துகிறார் அவர். சசிகலா கூட பின் பகுதியில் வருகிறார். அவர் திரையில் தோன்றும் போது தியேட்டரில் கைத்தட்டல்! சிரிப்பு!! கருணாநிதியாக நாசர், எம்ஆர் ராதாவாக ராதாரவி, ஆர் எம் வீரப்பன் கேரக்டருக்கு சமுத்திரகனி என எல்லோருமே அசத்துக்கிறார்கள். ஆனால் சிவாஜி கணேசனுக்கான நடிகர் தேர்வை மட்டும் சொதப்பி வைத்தது மட்டுமல்லாமல் அவரும் ஜெயலலிதாவும் தோன்றும் காட்சியையும் சரியாகத் தேர்வு செய்யாமல் விட்டு விட்டார் விஜய். இந்தக் காட்சி நிச்சயம் சிவாஜி ரசிகர்களை கோபம் கொள்ளச் செய்யும்.
படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படும் காட்சிகளிலிருந்து ஆரம்பித்து, மீண்டும் இந்த சட்டசபைக்கு முதல்வராக தான் வருவேன் என சபதம் எடுப்பதில் தொடங்கி அந்த சபதத்தை அப்படியே கிளைமாக்ஸ் காட்சிகளில் இணைக்கும்வரை படம் தொய்வில்லாமல் நகர்கிறது.
ஜெயலலிதாவின் தனிமை வாழ்க்கை, நடிகையாக அவர் முதலில் மாற முடியாமல் சிரமப்படுவது, பின் எம்.ஜி.ஆரின் வழகாட்டலில் தேர்ந்த நடிகையாக மாறுவது, எம்.ஜி.ஆரிடமான உணர்ச்சி மோதல்கள், அவரை ஆரம்பத்திலிருந்து எதிர்க்கும் ஆர்.எம்.வீரப்பனிடம் காட்டும் காட்டம், எம்ஆர் ராதா துப்பாக்கி சூடு, அதைக்காட்டி கலைஞர் கருணாநிதி தேர்தலில் ஜெயிப்பது, நண்பர்களாயிருந்த கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்குமான ஏற்பட்ட மனப்போராட்டங்கள் அவர்களை அப்படியே மாறுபட்டவர்களாக மாற்றுவது, இந்திரா காந்தியின் மறைவு, ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு, எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்வராக செய்யும் முயற்சி, ஆட்சி கவிழ்ப்பு, பாராளுமன்றத்தில் ஜெயலலிதா கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை, என்று எல்லா காட்சிகளையும் மிக அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்குப்பின் வந்த ஊழல்கள், சிறைத்தண்டனைகள், ஜெயலலிதாவின் மர்ம மரணம், சசிகலா அனுபவித்த சிறை வாசம், இதோ இப்போது தொடரும் கொடநாடு விசாரணைகள் என்று இன்னும் மக்கள் மனதில் இந்த எல்லா நிகழ்வுகளும் தங்கியிருக்கும்போது, அதைத்தொடர்ந்த பல்வேறு கருத்துக்கள், வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் மீடியாவிலும் யுட்யூப்களிலும் அனல் பறந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஜெயலலிதாவை ' தியாகத்தலைவி'யாக சித்தரிக்கும் இந்தப்படம் மக்கள் மன்றத்தில் எடுபடுமா என்று தெரியவில்லை.
14 comments:
நல்ல விமர்சனம்...படம் கிட்டானால் இரண்டாம் பகுதியை எடுக்கவும் சாத்தியமிருக்கிறது..
நானும் இதையே நினைத்தேன்.
அன்பு மனோ,
ஜெயலலிதாவின் அழகையும், கோபத்தையும்
காட்ட இனி ஒருவர் பிறந்து வரவேண்டும்:)
தமிழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் பொருந்தி இருப்பார்,
அவர் முக ஜாடையும் ஒத்துப் போயிருக்கும்!!
இதே போல இன்னோரு பயோபிக் சாவித்ரி படத்திலும் சிவாஜி சரியாகக்
காட்டப்படவில்லை. எனக்குக்
கூட வருத்தம் தான்:)
மிக நன்றி மனோ. அற்புதமான விமரிசனம்.
நல்லதொரு விமர்சனம். இந்தப் படம் பார்க்கவ வேண்டும் என்றே தோன்றவில்லை. உங்கள் விமர்சனம் பார்த்தல் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது.
உண்மை வேறு...
A1
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி. படம் இப்போதே ' தோல்விப்படம்' என்ற விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஹிட் ஆகுமென்று நம்பிக்கையில்லை.
பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் இனிய நன்றி வல்லிசிம்ஹன்!
நீங்கள் சொல்வது போல ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருந்திருப்பார்.கங்கணா அவ்வளவாக பொருத்தமில்லாதவராக இருக்கிறார்.
சுவாரஸ்யத்துக்கு ஒரு முறை நிச்சயம் இந்தப்படத்தைப் பார்க்கலாம் சகோதரர் ஸ்ரீராம்! மேலும் சில பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுக்காகவே பார்க்கலாம்!
உண்மை வேறு தான் தனபாலன்! அதனால்தான் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது!
மனோ அக்கா உங்கள் விமர்சனம் படத்தை அதன் ஆக்கத்திற்க்காக அரவிந்த் சாமியின் நடிப்பிற்காகப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது!
ஜெ கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் ரம்யா கிருஷ்ணன் தான்.
இதோ போன்று கௌதம் வாசுதேவ் மேனன் கூட சீரீஸாக எடுத்திருந்தார் இல்லையா? நான் பார்க்க வில்லை..கேள்விப்பட்டேன் நன்றாக இருந்தது என்று.
கீதா
நல்லதொரு விமர்சனம். நன்றிம்மா.
சிறப்பான விமர்சனம். அமேசான் பிரைமில் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
கெளதம் வாசுதேவ மேனன் எடுத்த சீரீஸ் பற்றி எனக்குத் தெரியவில்லை கீதா! ஆனால் இந்த்ப்படம் அரவிந்த் சாமியின் நடிப்பிற்காக பார்க்கலாம்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!
பாராட்டுக்கு அன்பு நன்றி வெங்கட்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!
Post a Comment