Saturday, 18 December 2021

அது ஒரு பொற்காலம்!

 சென்ற வாரம் நா.பார்த்தசாரதியின் ‘ மணிபல்லவம்’ புதினத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். கல்கியில் வெளி வந்த வரலாற்றுக்கதை அது! ஓவியரின் வினுவின் சித்திரங்களை ரசித்துக்கொண்டிருந்த போது, இனி இப்படிப்பட்ட ஓவியங்களையெல்லாம் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. தொடர்கதைகளைப்படிக்க வாராவாரம் ஆவலுடன் காத்திருந்த ‘ அந்த நாள் ஞாபங்கள்’ என்னைச் சூழ்ந்தன!

வாழ்க்கையில் எல்லாமே, மிக அருமையான நல்ல விஷயங்கள் கூட மிகவும் சுருங்கிப்போய் விட்டன கால ஓட்டத்தில்! இனி ஒவ்வொன்றும் மீண்டு வருமா என்பது கூட சந்தேகமே! அன்பு சுருங்கிப்போய் விட்டது. கருணை சுருங்கிப்போய் விட்டது. பேச்சு, எழுத்து, ஆரோக்கியம், பரந்து விரிந்திருந்த மனது எல்லாமே சுருங்கிப்போய் விட்டன. சொல்லப்போனால் நிறைய வீடுகளில் மாத்திரைகள் புழக்கம் தான் சுருங்கிப்போகாமல் விரிவடைந்து கொண்டே போகின்றன!


பள்ளி சென்ற காலங்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்! கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்வோம். போகும் வழியெல்லாம் வீடுகளின் வாசல்களில் சாணக்கரைசலால் மெழுகி பளிச்சென்று போட்டிருக்கும் கோலங்களை நின்று நின்று ரசித்து பார்த்துக்கொண்டே போவோம்! என் தந்தை காவல் அதிகாரியாக இருந்ததால் அடிக்கடி மாற்றல்கள் வரும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி பள்ளிகள் இருக்கும்! 


வயல்கள் நடுவே பள்ளி செல்லும் வழியில் பால் கதிர்களை சுவைத்துக்கொண்டே நடந்து சென்ற அனுபவம்கூட இருக்கிறது!

தந்தை ஒரு வழியாக ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் நிலையாக வசிக்கத்தொடங்கிய வீடு எதிரே பெரிய குளம் இருந்தது. [ மன்னார்குடி தெப்பக்குளம்] அதில் நீச்சல் அடிப்பதும் துணிகள் துவைப்பதுமாய் உடற்பயிற்சிகள் இயல்பாகவே நடந்தன! கொஞ்ச தூரத்திலிருக்கும் ஆற்று


 நீரில் விளையாடுவதற்கென்றே வீட்டில் இருக்கும் துணிகளையெல்லாம் துவைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி எடுத்துக்கொண்டு, தோழிகளுடன் ஆற்றங்கரை சென்று அமர்ந்து அரட்டையும் நீரில் விளயாடலுமாய் அந்த வயது எப்படியெல்லாம் உற்சாகத்துடனும் சிரிப்புடனும் கழிந்தது?

இப்போதிருக்கும் பிள்ளைகளுக்கு இப்படி இயற்கையோடிணைந்த வாழ்க்கை கிடைக்கிறதா? நடப்பதும் ஓடுவதும் விளையாடுவதும் எங்கே நடக்கின்றன?

என் மாமியாருக்கு 8 பிள்ளைகள். அவர் உயிருடன் இருந்த வரையில் எல்லா பிள்ளைகளுக்கும் பல பக்கங்களுக்கு கடிதங்கள் எழுதுவார். முதல் பக்கம் முழுவதும் ஒவ்வொருத்தரின் நல விசாரிப்பு. அடுத்த பக்கம் முழுவதும் அங்கிருப்பவர்களின் நலனுரைத்தல், வீட்டிலிருக்கும் மாடு, கண்ணுக்குட்டி, அண்டை அயலார் உள்பட! அப்போதெல்லாம் இப்போது போல அடிக்கடி துபாயிலிருந்து சொந்த‌ ஊருக்குப்போக முடியாது. ப‌யணச்சீட்டு விலை மிக அதிகம் என்பதுடன் அடிக்கடி இப்போதிருப்பதை போல விமான சேவை நேரடியாகவோ, அடிக்கடியோ கிடையாது! ஆனால் போகாத குறையே தெரியாதபடி அத்தனை விபரங்களும் கடிதங்களில் கொட்டிக்கிடக்கும். எங்களின் தபால் பெட்டி இருக்குமிடம் சென்று அதைத்திறந்து கடிதங்களை எடுத்துப் படிக்க அத்தனை ஆவலாக இருக்கும். சில சமயம் அவசரம் தாங்காமல் வீட்டுக்கு வருவதற்குள் காரிலேயே படிக்க ஆரம்பித்து விடுவோம்!


 ஊரிலோ, தபால்காரருக்குத்தான் எத்தனை வேலைகள் இருக்கும்! கடிதங்கள், மணியார்டர்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் அவர் இறங்கி, மணியடித்து, அவரின் சைக்கிள் சக்கரங்கள் சுற்றிக்கொண்டே இருக்கும். பொங்கல் அன்று வரும் வாழ்த்துக்களை வாங்க வாசலிலேயே தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருப்போம் நானும் என் தங்கையும்!! முன்பு ஒரு பாட்டுக்கூட இருந்தது, ' ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலமிது!' என்று. அது போலத்தான் கடிதங்கள் வாழ்க்கையை இணைத்தன!  நட்பை வளர்த்தன! காதலை ஆரம்பித்தன! பல வருடங்கள் சேர்த்து வைத்திருந்த கடிதங்களைக் காண்பித்தே அன்றைக்கு என் தந்தை ஒரு வழக்கில் ஜெயித்தார்கள்! இப்படி கடிதங்கள் ஆயிரம் கதைகளைச் சொல்லிய காலம் அது!

அந்தக் க‌டிதத்தொடர்புகள் எங்கே போயின? வாழ்த்துக்கள் விற்கும் கடைகளில் கூட இப்போதெல்லாம் வாழ்த்துக்கள் விலை போவதில்லை என்கிறார்கள்! அதன் பிறகு ஈமெயில்கள் வந்தன! வாட்ஸ் அப் வந்ததும் அதுவும் சுருங்கிப்போய் செய்திகள் சுருக்கமாக டைப் அடிக்கப்பட்டன! அதன் பிறகு அதுவும் குறைந்து இப்போதெல்லாம் மெஸேஜ் பேசி அனுப்புவதில் வந்து நிற்கிறது! ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வது கூட சுருக்கமாக நிகழ்கிறது. மனம் விட்டு சிரிப்பதும் மணிக்கணக்காய் பேசி மகிழ்வதும் இப்போதெல்லாம் மனிதர்களுக்கிடையே நிகழ்கிறதா என்று தெரியவில்லை! அவசர யுகத்தில் எல்லாமே அவசரமாக, சுருங்கி, பறந்து போகிறது!

கிராம‌ங்களில் விருந்தோம்பல் அத்தனை சிறப்பாக இருக்கும்!


 பகிர்ந்துண்ணுதல் யாரும் சொல்லி வளர்ந்ததில்லை. அது தானாகவே இயல்பாக நிகழும். கிட்டத்தட்ட சமையலே முடிந்திருக்கும். அதன் பின்பு குளத்தில் மீன் பிடித்தோம் என்று ஆட்கள் கொண்டு வ‌ந்து தருவார்கள். மறுபடியும் மீன் சமையல் நடக்கும். வீட்டுக்குத் தலைவரான என் கொழுந்தனார் வாசலில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே வாசலில் நடந்து போகும் தூரத்து உறவுகளை சாப்பிட்டுப்போகும்படி சொல்லுவார். இப்படித்தான் திடீர் விருந்தோம்பல்கள் நடக்கும். 

இப்போதெல்லாம் யாரும் யாரையும் வீட்டுக்கு உணவுண்ண அழைப்பதில்லை. இன்னும் பார்க்கப்போனால் இளைய தலைமுறைகள் தினமும் வீட்டில் சமையலே செய்வதில்லை. விதம் விதமான உணவுப்பொருள்கள் வெளியில் கிடைக்கின்றன. உணவகங்களுக்குக்கூட போவதற்கு முடியவில்லையென்றால் இருக்கவே இருக்கின்றன ஆன்லைன் உணவுகள்! 

ரசனையுடன் ருசியாக சமைத்து, பார்த்துப் பார்த்து பரிமாறி, உண்ணுபவர்களின் வயிறு நிறைந்தது கண்டு, மனம் நிறைந்து மகிழ்ந்தது ஒரு காலம்! என் மாமியார், அம்மா காலத்தில் உப்பும் சரி, புளிப்பும் சரி, உரைப்பும் சரி அத்தனைத்திட்டமாக சமைப்பார்கள். கடும் உழைப்பிற்கு அந்தக்கால பெண்மணிகள் அஞ்சியதில்லை. மாவு அரைக்கும்போது, வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளை எதிரே உட்கார வைத்து பழக்குவார்கள். சோறு வெந்து விட்டதா என்று பதம் பார்க்கச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ!

சில வருடங்களுக்கு முன் நான் சமையல் தொடரில் எழுதிக்கொண்டிருந்த போது, ஒரு பெண் ‘ மேடம், சாதம் எப்படி வடிப்பது?’ என்று கேட்டிருந்தார். இதற்கு என்ன பதில் எழுதுவதென்றே புரியவில்லை. எங்கள் உணவகத்தில் ஒரு இளம் வயது சமையல்காரர், ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்தவர் இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு பாசிப்பயறு குறிப்பு பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். அவர் புரியாத நிலையில் இருக்கவும் ‘ என்ன ஆச்சு?’ என்று கேட்டேன். ‘ மேடம், பாசிப்பருப்பு என்றால் என்ன?’ என்று கேட்டார். அப்படியே அசந்து விட்டேன். ‘ split mung dal’ என்றதும் ‘ அப்படி சொல்லுங்கள், மேடம்! நீங்கள் பாசிப்பருப்பு என்று சொன்னதும் புரியவேயில்லை’ என்றார். அவர் சுத்தமான தமிழ்நாட்டுக்காரர்!

மாற்றங்கள் வருவது தான் வாழ்க்கை! ஆனால் காலம் செல்லச் செல்ல, மாற்றங்கள் அசுர வேகத்தில் நிகழும்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல, நிறைய நல்ல விஷயங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறதா?


நிலா வெளிச்சத்தில் கதை பேசி, பாட்டுப்பாடி களித்து, அம்மா, அப்பா அன்பில் ஊறி, ஆரோக்கியமான உணவை ருசித்து, அறிவு மேம்பட ஆங்கிலமும் தமிழுமாய் படித்து, தோழியருடன் விளையாடிக் களித்த அந்தக்காலம் நிச்சயம் பொற்காலம் தான்!! 


Friday, 26 November 2021

ரஸமலாய்!!!

 ரொம்ப நாளாகிறது ஒரு சமையல் குறிப்பு போட்டு. அதனால் ஒரு இனிப்பான குறிப்பாக ‘ ரஸமலாய்’ பற்றி பதிவு பண்ணலாம் என்று நினைத்தேன். 

இனி ரஸமலாய் பற்றி:

ரஸமலாய் ஒரு பிரசித்தி பெற்ற பெங்காலி இனிப்பு. பொதுவாக எந்த CHEFம் பாலை திரைய வைத்து வடிகட்டி பனீராய் திரட்டி பிசைந்து உருட்டி செய்வார்கள். பாலைத்திரைய வைக்க வினீகர் அல்லது எலுமிச்சை சாற்றை உபயோகிப்பார்கள். சிலர் ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து செய்வார்கள். இது தான் பொதுவான முறை. இங்கு நான் கொடுத்திருப்பதோ முற்றிலும் வேறு முறை. இது மிகவும் சுலபமானதும் கூட. பாலைக்காய்ச்சும் வேலையுமில்லை. திரைய வைக்கவும் தேவையில்லை. ஒரு அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். 35 வருடங்களுக்கு முன் என் சகோதரியிடம் கற்றுக்கொண்டது இந்த குறிப்பு. அன்றிலிருந்து இன்று வரை ரஸமலாய் செய்ய வேறு எந்த குறிப்பையும் நான் பயன்படுத்துவதில்லை இதைத்தவிர!

இனி குறிப்பிற்கு போகலாம்.

ரஸமலாய்:


தேவையானவை:

FULL CREAM பால் பவுடர் -1 1/4 கப் [ 315 ml ]+ 12 மேசைக்கரண்டி

மைதா- 1 ஸ்பூன்

பேக்கிங் பவுடர் -1 ஸ்பூன்

சீனி- 8 மேசைக்கரண்டி

குங்குமப்பூ- கால் ஸ்பூன்

முட்டை- 1

சமையல் எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

ஏலப்பொடி- அரை ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1 1/4 கப் பால் பவுடர், மைதா, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்று சேர்த்து மூன்று தடவைகள் சலிக்கவும். பின் சலித்த பால் பவுடரை ஒரு தட்டில் கொட்டி எண்ணெய் சேர்த்து பவுடர் முழுவதும் கலக்குமாறு பிசிறவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி பிசைவும். பிசைந்த பிறகு ஒரு முறை கையை கழுவி நீரில்லாமல் துடைத்து பின் பிசைந்தால் நன்கு பிசைய வரும். பிசைந்த மாவு மெழுகு போல இருக்க வேன்டும். அது தான் பதம். ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு பலிங்கி சைஸுக்கு உருண்டைகள் உருட்டி மூடி வைக்கவும். உருண்டைகள் உருட்டும்போது அழுத்தி உருட்டக்கூடாது. இலேசாக அழுத்தி உருட்ட வேண்டும். 


ஒரு அகன்ற பாத்திரத்தில் 4 கப் வெதுவெதுப்பான நீரைக் கொட்டி பாக்கியுள்ள பால் பவுடரையும் சீனியையும் கொட்டி நன்கு கலக்கவும். கட்டியில்லாமல் ஆனதும் அதிலிருந்து கால் கப் பாலை எடுத்து வைத்துக்கொண்டு பாக்கியை அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். கால் கப் பாலில் மேலும் கால் கப் கொதிக்கும் நீர் கலந்து குங்குமப்பூவை அதில் போட்டு ஊற வைக்க‌வும். பால் கொதிக்க ஆரம்பித்தததும் ரஸ மலாய்களை ஏழெட்டு எடுத்து அதில் போடவும். ஐந்து நிமிடத்தில் அவை மேலெழும்பியதும் அடுத்த பாட்ச் போடவும். இதே போல எல்லா உருண்டைகளையும் போட்டு முடிக்கவும். எல்லா உருண்டைகளும் அளவில் பெரியதாகி மேலே மிதக்க ஆரம்பிக்கும். இலேசாக தீயைக்குறைத்து குங்குமப்பூ கலந்த பாலையும் ஏலப்பொடியையும் சேர்த்து கவனமாக கிளறவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி மேலே பிஸ்தாவைத்தூவவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பரிமாறவும்.


Saturday, 6 November 2021

முத்துக்குவியல்-65!!

 

அசத்தும் முத்து:

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் whatsapp - ஐ விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்ட செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ். 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர் பிரனேஷ் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் கூகுளினால் நடத்தப்படும் கோடிங் ஆன்லைன் கிளாஸில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மாணவர் பிரனேஷ் வாட்ஸ்அப் செயலி போல "ஜெட் லைவ் சாட்" என்ற புதிய செயலியை உருவாக்கினார். இந்த செயலியை கூகுள் நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் நிறுவனம் இந்த புதிய செயலிக்கு ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.



 தற்போது ப்ளே ஸ்டோரில் சென்று ஜெட் லைவ் சாட் என டைப் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய செயலி வாட்ஸ் அப் செயலியை விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்டுள்ளன. பாதுகாப்பு அதிகம் ஒருவர் அனுப்பும் தகவலை நமக்கு அறிமுகமில்லாத நபர் யாரும் பார்க்க முடியாது. பதிவிறக்கமும் செய்ய இயலாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இந்த புதிய செயலி மூலம் ஒரு தகவலை ஒரே நேரத்தில் பதினைந்து நபர்களுக்கு அனுப்பலாம். இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் உருவாக்கியுள்ள இந்த புதிய செயலி, வாட்ஸ் ஆப்பைவிட பல்வேறு பரிணாமம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

துயர முத்து:

என் மகனின் அலுவலகத்தில் மேலாளராக வேலை செய்பவர் கொரோனாவால் ஊருக்குச் சென்றவர் திரும்பி வர முடியாமல் பல மாதங்கள் தமிழ்நாட்டில்  குடும்பத்தோடு இருந்து வந்தார். அங்கும் சரி, இங்கும் சரி, கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் இங்கு வர முடியவில்லை. சமீப காலமாக மீண்டும் விமான சேவைகள் ஆரம்பித்ததும், இங்கும் நிலைமை சற்று சீராக ஆரம்பித்ததில் அவருக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாயும் பிறந்ததும் கிளம்பி வருவதாகவும் என் மகனிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டார். சென்ற வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகிழ வேண்டிய நேரத்தில் துன்ப இருள் மட்டுமே வீட்டில் பரவியது.

பிறந்த குழந்தைக்கு இரண்டு கண்களுக்கு பதிலாக ஒரு கண், வலது கண் மட்டுமே இருக்க, இடது கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் மூடியிருப்ப்து போல ஒரு கோடாக இருந்தது. அந்தக்கண்ணுக்கு சற்று தள்ளி ஒரு குட்டிக்கண் போன்ற துவாரமும் இருந்தது. புகைப்படத்தைப்பார்த்ததும் நாங்கள் அனைவரும் மிகவும் கலங்கிப்போய் விட்டோம். என்ன மாதிரியான கொடுமை இது! அந்தப் பெற்றோர் என்ன செய்வார்கள் இனி? கடைசி காலம் வரை எப்படி இந்தத்துயரத்தை சமாளிக்கப்போகிறார்கள்? . கதறி அழுபவரை என் மகனால் வார்த்தைகளால் தேற்ற முடியவில்லை. 

மூளையின் குறைவான செயல்பாடுகளால் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இப்படி ஒரு கண் விழி அல்லது இரண்டு கண்விழியுமே இல்லாமல் பிறக்க நேர்ந்து விடுகிறது என்பதும் இந்த நிலைக்கு Anophthalmia என்று பெயர் இருப்பதும் தெரிய வந்தது.

என் சகோதரி மகள் கண் அறுவை சிகிச்சை நிபுணர். அவரிடம் பேசியதில் இனி இந்தக்கண்ணிற்கு எதுவுமே செய்ய முடியாது. பார்வையற்ற நிலை தான் எப்போதும். ஆனால் வலது கண்ணின் பார்வை சரியாக இருக்கிறதா என்று தான் இனி கவனிக்க‌ வேண்டும். ஆனால் மருத்துவர்களுக்கு மூன்றாம் மாதத்தில் தான் பார்வை சரியாக உள்ளதா என்று கண்டு பிடிக்க முடியும் என்று சொன்னார். மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் நிறைய உபகரணங்கள் இருப்பதால் அங்கு அழைத்துச் சென்று பரிசோதிப்பது நல்லது என்றும் சொன்னார். அதன் படி அங்கே பரிசோதனைகள் செய்ததில் குழந்தையின் பார்வைக்குறைபாடு உறுதியானதும் குழந்தையின் பெற்றோர் கண்ணீர் வழிய இடிந்து போய் விட்டார்கள். சில சமயங்களில் நம் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதேயில்லை!!

இசை முத்து:

இந்தப்பாட்டு எப்போது கேட்க நேர்ந்தாலும் மனதை பிசையும். எஸ்.பி.பியின் இனிய குரல் என்னவோ செய்யும். அந்த காட்சியமைப்பிற்கு ஏற்ற தாக்கத்தை இந்தப்பாட்டும் இவரது ஆழமான குரலும் எப்போதுமே கொடுக்கும். கேட்ட பிறகு என் கருத்து பெரும்பாலும் நிறைய பேருடைய கருத்தாகவே இருக்கும்! 

Wednesday, 3 November 2021

தீபாவளி நவாழ்த்துக்கள்!

 


அனைத்து 

அன்புள்ளங்களுக்கும் 

இனிய தீபாவளி நவாழ்த்துக்கள்!



Thursday, 14 October 2021

முத்துக்குவியல்-64!!

 சாதனை முத்து:

உலக நாடுகளின் நன்மைகளில் பெரும் அக்கறையுடன் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்வேறு கிளை அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. உலகின் நன்மைக்காகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களில் வெற்றி காண்போருக்கு, இந்த அமைப்பு ஆண்டு தோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, இளம் சாதனையாளர்கள், ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுக்கான, ‛உலகின் இளம் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லியில் பள்ளிப் படிப்பையும், பெங்களூரில் பொறியியல் பட்டமும் பெற்ற வித்யுத் மோகன், எரிசக்தித் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது, 29 வயதாகும் இவர், பட்டப்படிப்பு முடித்தது முதலே இத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றியதோடு, அத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். 


பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், அறுவடைக்குப் பின், விவசாயிகள், தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் விவசாயக் கழிவுகளை, பொது வெளியில் எரிப்பதால், தலைநகர் டெல்லி உட்பட, நாட்டின் பல முக்கிய நகரங்களில், காற்று மாசு அதிகரிக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், அக்கழிவுகளை பயன்படுத்தி, எரி சக்திப் பொருட்களை தயாரிக்க வித்யுத் திட்டமிட்டார். அதற்காக, தகாசார் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கினார். பின், விவசாயிகளிடமிருந்து, விவசாயக் கழிவுகளை விலை கொடுத்து வாங்கினார். வித்யுத் மோகன் கண்டுபிடித்துள்ள ஓர் இயந்திரம், நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருள்களைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தையும், கூடுதல் எரிசக்தி தரும் நிலக்கரி போன்ற பொருள்களையும் உருவாக்குகிறது. இவரது இந்த முயற்சியால், விவசாயக்கழிவுள் எரிக்கப்படுவதால் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்பட்டதோடு, இதுவரை வீணாக்கப்பட்டுக் கொண்டிருந்த கழிவுகளுக்கு, விலையும் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதில், ஆக்கப்பூர்வமாக செயல்படும் வித்யுத் மோகனை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, அவருக்கு, 2020ஆம் ஆண்டுக்கான, ‛உலகின் இளம் சாதனையாளர் விருது’ வழங்கியுள்ளது.


பருவ நிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய சர்வதேச விருதான " குழந்தைகளுக்கான பருவ நிலை விருது" பெற்றிருக்கும் திருவண்ணாமலை வினிஷா சர்வதேசப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி. இவர் சொல்கிறார்:

" ஒரு நாள் அம்மாவுடன் நடந்து போய்க்கிட்டிருந்த போது, இஸ்திரி போடும் தாத்தா இஸ்திரிப்பெட்டியில் கரியைப்போட்டு, ஊதி ஊதி புகையால் இருமி சிரமப்பட்டுக்கிட்டுருந்தார். மேலும் பயன்படுத்துற கரியை ரோட்டோரமாக கொட்டுவார். இப்படி இஸ்திரி வண்டியை பயன்படுத்துற எல்லோருமே பயன்படுத்துற கரியை ரோட்டோரமாகவோ, சாக்கடையிலோ கொட்டுறதை பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி எத்தனை கிலோ கரி நம் நாட்டுல எரிக்கப்படுது, அதற்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுது, அது ஏற்படுத்துற சுற்றுச்சூழல் தீங்கு என்று யோசிச்சேன். மின்சாரம் இல்லாமல் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் சோலார் இஸ்திரிப்பெட்டி வண்டியை வடிவமைக்க ஆரம்பிச்சேன். இந்த இஸ்திரிப்பெட்டி உள்ல சைக்கிள் வண்டியின் மேற்புறத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 100 ஹெச் திறன் கொண்ட பாட்டரியை இணைச்சிருக்கிறேன். இந்த பாட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேர சூரிய ஒளி தேவைப்படும். அதன் பிறகு 6 மணி நேரம் இதைத்தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். "

இதற்காக, சுவீடனின் துணைப்பிரதமர் இஸபெல்லா லோவின், ஆன்லைன் விருது நிகழ்ச்சியில் இந்த விருதை வினிஷாவிற்கு வழங்கியிருக்கிறார். விருதுட்ன் பதக்கம், சான்றிதழ், 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அனைத்து வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசால் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கபப்டும் ' பால சக்தி புரஸ்கார்' விருதும் வினிஷாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் ' தானாக இயங்கும் ஸ்மார்ட் மின் விசிறி ' கண்டுபிடிப்பிற்காக ஒரு விருதும் கடந்த ஆண்டு டாக்டர் அப்துல் அக்லாம் இக்னைட் விருதும் பெற்றிருக்கிறார் இவர்!!

பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த இறுதி போட்டி லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வினிஷா உமாசங்கர் மற்றும் வித்யுத் மோகன் இருவரும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது. வித்யுத் மோகனின் படைப்பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது. 

உலக அளவில் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் உயர்ந்த கவுரவமாக கருதப்படும் இந்த விருதை வெல்வதற்காக வினிஷா மற்றும் வித்யுத் ஆகியோருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நாமும் வாழ்த்துவோம்!!!

ஆச்சரிய முத்து:

ஊரிலிருந்து சில மாத இதழ்கள் ஒரு நண்பர் மூலம் வந்திருந்தன. அதில் ' கோகுலம் கதிர் ' என்ற இதழில் என் ஓவியத்தைப் பார்த்தேன். 1984 என்று நினைக்கிறேன், ஆனந்த விகடன் இதழில் ஒரு சிறுகதைக்கு இந்த ஓவியத்தை வெளியிட்டிருந்தார்கள். முப்பத்தியேழு வருடங்கள் கழித்து அதை எங்கிருந்து எடுத்து பிரசுரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. இது தான் அந்த ஓவியம். 


பாதி மட்டும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது!!



Friday, 1 October 2021

எக்ஸ்போ துபாய் 2020!!!!!

 

எக்ஸ்போ துபாய் 2020

துபாயில் மிக பிரம்மாண்டமாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு 7.30 மணியளவில் தொடங்கி 1.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமீரகம் மற்றும் இந்தியா உப்பட 192 நாடுகள் பங்கேற்றது.  நாங்களும் ஆன்லைனில் பார்த்தோம். மொத்தம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற‌ தொடக்க விழா நிகழ்ச்சிகளில் இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்க பாடகி மரியா கரே, அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லையோனல் மெஸ்சி, மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான அமீரக இசைக்கலைஞர் ஹுசைன் அல் ஜாஸ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.


ஏ.ஆர் ரஹ்மான் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் ‘பிர்தோஸ் ஆர்கெஸ்ட்ரா’ இசைக்குழுவினரின் புதுமையான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



பிரமாண்டமான மேடையில் வண்ணமயமான விளக்கொளியில் நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. ஒளி
, ஒலி காட்சி அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரையின் பின்புலத்தில் வியப்பூட்டும் வகையில் காட்சியமைப்புகள் ஒளி வெள்ளத்தில் மக்களை பரவசப்படுத்தின. 



லேசரின் உதவியில் மிக அழகான காட்சி அமைப்புகள் நிமிடத்துக்கு நிமிடம் வண்ணங்களை மாற்றி திகைக்க வைத்தன.

இன்றிலிருந்து இந்த எக்ஸ்போ 2020 ஆரம்பமாகிறது. 

இனி எக்ஸ்போ 2020 பற்றிய முக்கிய செய்திகள்.......

மத்திய கிழக்கு, தெற்காசியா, ஆப்பிரிக்கா பகுதியில் நடைபெறும் முதல் உலக எக்ஸ்போ இது. அரபு நாடுகள் அனைத்திற்கும் முதன் முதலாக நடத்தப்படும் முதல் உலகக் கண்காட்சி இது!

நவம்பர் 27, 2013 அன்று பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போஷிஷன்ஸ் 154வது பொதுச்சபையை நடத்தியபோது, மொத்தம் 164 நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தார்கள். அதில் 116 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய அமீரகம் வென்று தன் போட்டியாளரான ரஷ்யாவைப் பின்னுக்குத்தள்ளி உலக எக்ஸ்போ வழங்கும் நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



சர்வதேசக் கண்காட்சியை நடத்தும் பிரான்ஸின் சர்வதேசக் கண்காட்சிகள் கூட்டமைப்பு (BIE) 2013ம் ஆண்டே 2020ம் ஆண்டில் கண்காட்சி நடைபெறும் இடத்தை அறிவித்திருந்தது. அதையடுத்து 2016ம் ஆண்டு தொடங்கி இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது அமீரகம். முதலில் இந்த உலகக் கண்காட்சி 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரையிலான ஆறு மாத காலத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் 1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் மார்க்கெட்டிங் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு எக்ஸ்போ 2020 என்றே பெயரிட்டுள்ளது அமீரகம்.


INDIA PAVILION 

இதில் 192 நாடுகளின் பெவிலியன்கள், நேரடி பொழுது போக்குகள், மறக்க முடியாத சந்திப்பு இடங்கள், நகைச்சுவையான ஹாங்கவுட்கள் என்று பல வகையான நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. முற்றிலும் எதிர்கால சிந்தனைகளுடன் புதிய கண்டுபிடிப்புகளை பல பொழுது போக்குகளுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இடம் தான் எக்ஸ்போ துபாய். இதன் தொடக்க நாள் 1/10/2021 நிறைவு நாள் மார்ச் 31ந்தேதி ஆகும். 3.48 சதுர அடி கிலோ மீட்டர் பரப்பளவில் துபாய் தெற்கு மாவட்டத்தில் அல் மக்தும் சர்வதேச விமான நிலையம் [ இந்த விமான நிலையம் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது] அருகே இது அமைந்துள்ளது.


INDIAN PAVILION AT NIGHT

துபாய் எக்ஸ்போ ' மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளைக்கொண்டே இயங்கவுள்ளது. இதில் மூன்று துணை கருப்பொருள்கள் உள்ளன: வாய்ப்பு, மொபிலிட்டி, மற்றும் நிலைத்தன்மை. பங்கேற்கும் நாடுகள் இந்த கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, புதிய எல்லைகளை ஆராய்ந்து, வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தங்கள் யோசனைகளை வெளிப்படுத்தலாம். பிரத்தியேக அரங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.


U.A.E PAVILION

ஒவ்வொரு நாட்டின் பெவிலியன்களிலும் சாகசத்தையும் ஆச்சரியத்தையும் இங்கு காணலாம். வெவ்வேறு 192 நாடுகளின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் பயணமாக இது திகழும். ஒவ்வொரு நாளும் அறுபதுக்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும். பாடல், ஆடல், தேசீய தினக் கொண்டாட்டங்கள், ஓபராக்கள், விளையாட்டு நிகச்சிகள் என்று எதற்குமே குறைவில்லை. 192 நாடுகளின் சிறப்பு உணவு வகைகளுடன் 200க்கும் மேற்பட்ட உணவகங்கள் பார்வையாளர்கள் ரசித்து சாப்பிட இங்கே காத்திருக்கின்றன.

இந்திய அரங்கில் இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் பங்கேற்க உள்ளது. மொத்தம் இந்தியாவின் 9 மத்திய மந்திரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.



இதில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தனித்துவ மிக்க அரங்கில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு அரங்கேறியுள்ளது. மேலும் ஒளி மற்றும் ஒலி காட்சிகளுடன் பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி முன் “அல் வாசல் பிளாசா” உள்ளது. இதில் கோள வடிவிலான 360 டிகிரியில் ஒளிரும் திரையும் அமைத்துள்ளனர்.  மேலும் இந்த கண்காட்சியை அமீரகம் முழுவதும் 430 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமீரகத்தில் அந்நிய முதலீட்டை பிரதமர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நிலையில் இந்த எக்ஸ்போ அதற்கான தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட், சுற்றுச்சூழல் மண்டலங்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்து முதலீடுகளை ஊக்கப்படுத்தி வருகிறது அமீரகம்.  இந்தக் கண்காட்சியை தொடக்கமாகக் கொண்டு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க இந்த நாடு திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ஒட்டி உலகின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம் ஒன்றிலும் துபாய் முதலீடு செய்துள்ளது. இது  தவிர துபாயின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு மொத்தம் 82 புதிய திட்டங்களை இந்தக் கண்காட்சி மூலம் செயல்படுத்த உள்ளது அமீரகம்.

இந்த வளாகத்தில் ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

 


குறிப்பாக 5 டி.எஸ். என்ற கருப்பொருளில் திறன், வர்த்தகம்,  பாரம்பரியம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இடம்பெற உள்ளது. இதில் அந்த கட்டிடத்தில் மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது.


ANOTHER IMAGE OF INDIAN PAVILION

 ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட பெவிலியன்களுடன், பிரதிநிதிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்புகள் மூலம் உலகில் எவ்வாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள், இதனால் சுற்றுலா பயணிகள், சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளிகளை அழைக்கிறார்கள். உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த எக்ஸ்போஸ் ஒரு சிறந்த இடம். இத்தகைய சவால்களுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்று கூடுகிறார்கள்.

உலகிலேயே மிகப்பெரிய மின் தூக்கி [ஒரு தடவையில் 160 பேர்களை ஏற்றிச்செல்லும்] இதில் பயன்படுத்தப்படுகிறது. 203 பேருந்துகள் நாடு முழுவதும் பார்வையாளர்களை இலவசமாக எக்ஸ்போ தளத்துக்கு ஏற்றிச் செல்கின்றன. எமிரேட்ஸ், எதிகாட், ஃபிளை துபாய் போன்ற விமானங்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு எக்ஸ்போவிற்கான ஒரு நாள் நுழைவுச்சீட்டை இலவசமாகத்தருகின்றன!

Sunday, 19 September 2021

சமையல் அனுபவங்கள்!!!!

' அடிக்கடி சமையல் குறிப்புகள் இனி பதிவேற்றுங்கள்' என்று சகோதரி வல்லி சிம்ஹன் முன்பு சொன்னார்கள். அதைப்படித்த பின்பு ஏனோ பழைய நினைவலைகள் என்றுமில்லாமல் அன்றைக்கு வந்து கொண்டிருந்தன. உடனேயே அவற்றை எழுத நினைத்தேன். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றைக்குத்தான் என்னை எழுத வைக்கின்றன. 

திருமணமான புதிது. சாதாரண சமையல் தான் தெரியும். புதுப்புது சமையல் வகைகள் பற்றி ஆராயும் மனதுடன் அவைகள் பற்றி அறியும் வாய்ப்புகளும் நிறைய வந்தன. திருமணமானதும் பூனாவுக்கும் பம்பாய்க்கும் இடையிலுள்ள பன்வேல் என்னும் சிறிய நகரத்திலுள்ள ஒரு பைப்கள் தயாரிக்கும் ஃபாக்டரியில் மேலாளராக இருந்தார் என் கணவர். பல தரப்பட்ட குடும்பங்கள் நடுவே எங்கள் வீடு. பீகார், கேரளா, மகராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா என்று பலதரப்பட்ட சமையல் வகைகள் பற்றி ஆர்வமாக அறிந்து கற்றுக் கொள்ள‌ முடிந்தது. மஹாரஷ்ட்ராவின் பேடாக்கள், அவர்களின் உப்பலான சப்பாத்தி, சிறிய சமயலறையினை மிக சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி, பீஹாரின் காய்கறி குழம்பு வகைகள், கேரளத்தின் மீன் குழம்பு என்று என் சமையலறிவு விரிய ஆரம்பித்தது. 

அடிக்கடி சனி, ஞாயிறுகளில் பம்பாய் சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு அப்ப‌டியே மாட்டுங்காவில் ஒரு தமிழ் சினிமாவும் பார்த்து வருவது வழக்கமாக இருந்தது. என் கணவரின் நண்பர், கல்லூரியில் உடன் படித்தவர் வீடு அங்கிருந்தது. அவர்கள் வீட்டிற்கு ஒரு நாள் சாப்பிடச் சென்றோம். அவரது மனைவி எனக்கு ஒரு சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தக்ம் கொடுத்தார்கள். திருமதி. செல்லம்மாள் எழுதிய புத்தகம் அது. அந்தக் குறிப்புகளை செய்து பார்ப்பது துபாய் வரை தொடர்ந்தது. துபாய் வந்த பிறகோ உலக அளவில் பார்த்துப் பார்த்து ரசித்து புதிய சமையல் வகைகளைக் கற்கும் ஆர்வம் பிறந்தது. 2004ம் வருடம். என் மகனின் யோசனைக்கும் வற்புறுத்தலுக்குமிடையே www.hubtamil.com என்ற  வலைத்தளத்தில் ' Mrs.Mano's Tamilnadu Delicacies ' என்ற பிரிவைத் துவக்கினேன். அப்போது தெரியாது அது மிக நீளமாகத் தொடருமென்று! பல சமையற்குறிப்புகளும் பல கேள்விகளும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் தீர்வுகளும் என்று அந்தப்பிரிவு வளர்ந்து கொண்டே போனதில் இதே தலைப்பில் பாகம் 2, பாகம் 3 என்று நிர்வாகத்தினர் ஆரம்பித்துக்கொடுக்க மேலும் என் சமையல் குறிப்புகள் பாராட்டுக்களுடன் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இன்று வரை அந்தத் தொடர்கள் முழுவதையும் சுமார் 18 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். 

கீழேயுள்ள இணைப்பில் நீங்கள் பார்க்கலாம்!

https://www.hubtamil.com/talk/forumdisplay.php?25-Indian-Food&s=d1bffb103b9f0a7a72d1a43d0c361735

சில வருடங்களில் மகனுக்கு பெண் தேடும் படலம் தீவிரமான பின்னணியில் தஞ்சைக்கும் துபாய்க்கும் இடையே அலைய ஆரம்பித்ததில் சமையல் கலை பின்னுக்குப்போக ஆரம்பித்தது. 

அதைத்தொடர்ந்து ' அறுசுவை ' தளத்தின் [ www.arusuvai.com ] நிறுவனர் பாபு, தான் நாகைப்பட்டிணத்திலிருந்து இயங்குவதாகவும் தன்னுடைய ' அறுசுவை' தளத்தில் சமையல் குறிப்புகள் தொடர்ந்து எழுத வேண்டும் ' என்றும் கேட்டதன் பேரில் அதில் சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். அதன் பின் ஒரு நாள் என்னுடன் தொடர்பு கொண்டு ' தான் நடத்தவிருக்கும் நாகை மாவட்டத்துக்கான சமையல் போட்டியில் சமையல் கலை வல்லுனர்கள் திருமதி.ரேவதி ஷண்முகம், திருமதி. கலைவாணி சொக்கலிங்கம் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொள்ளவிருப்பதகவும் அதில் நானும் நடுவராக பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். நானும் அந்த சமயத்தில் தஞ்சை செல்ல வேண்டியிருந்ததால் அதற்கு ஒப்புக்கொண்டேன். 

சமையல் போட்டியில் எதிர்பாராத வண்ணம் நிறைய பேர்கள் பங்கேற்க நல்லதொரு குறிப்பை தேர்வு செய்வது சற்று சிரமமாகவே இருந்தது. பச்சை திராட்சையில் ஒரு பெண் செய்திருந்த ஊறுகாயின் சுவை அதையே பரிசுக்கு எங்களைத் தேர்வு செய்ய வைத்தது.

இப்படி பலவிதமான அனுபவங்கள்!

' ஹாலிடே இன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தயாரிப்பிலிருந்து கற்றுக்கொண்ட‌ 'குலோப்ஜான் ', என் ஓர்ப்படியிடம் கற்றுக்கொண்ட ' ரஸ மலாய்', ஒரு சினேகியிடமிருந்து கற்ற ' ஷாகி துக்கடா', ஒரு 18 வயது பெண் கற்றுக்கொடுத்த முள்ள‌ங்கி சட்னி,  ஒரு கேரள சினேகிதியிடமிருந்து கற்ற ' மாம்பழ  புளிசேரி' இப்படி சுவாரஸ்யமான சமையல் அனுபவங்கள் இன்னுமே நீண்டு கொண்டே போகின்றன!

இத்தனை வருடங்களில், அனுபவங்களில் நிறைய பேர் பலவிதமாக ' சாம்பார் சாதம்' செய்வதை ரசித்து ருசித்திருக்கிறேன். நிறைய உணவகங்களில் சாம்பார் செய்து சாதத்தில் அப்படியே ஊற்றிக் கலந்து ' சாம்பார் சாதமாக' கொடுப்பதைப்பார்த்து நொந்திருக்கிறேன். என்னைப்பொறுத்த வரை, நான் குறிப்பிட்டிருக்கும் ' செல்லம்மாள்' அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து 47 வருடங்களுக்கு முன் கற்ற 'சாம்பார் சாதம் ' மிக ருசியானது. இதை விட அதி ருசியான சாம்பார் சாதத்தை வேறெங்கும் நான் சாப்பிட்டதில்லை. இதை அடிக்கடி வீட்டில் செய்வது வழக்கம்.அந்தக் குறிப்பை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


சாம்பார் சாதம்

தேவையானவை:

பச்சரிசி 2 கப்

துவரம்பருப்பு 1 கப்

புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு

தேவையான உப்பும் எண்ணெயும்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் 2

பெரிய தக்காளி 3

பச்சை மிளகாய் 2

அரிந்த கொத்தமல்லி ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை இணுக்கு 2

துருவிய காரட் 1 

துருவிய உருளைக்கிழங்கு 1

நீளமாக அரிந்த சிறிய‌ கத்தரிக்காய் 4

நெய் தேவையான அளவு

கீழ்க்கண்ட பொருள்களை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும்:

தனியா 4 ஸ்பூன், கடலைப்பருப்பு 2 ஸ்பூன், பொட்டுக்கடலை 2 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், மிளகாய் வற்றல் 4, மிளகு 8, கசகசா 1 ஸ்பூன், பெருங்காயக்கட்டி அரை நெல்லிக்காயளவு

செய்முறை: 

பச்சரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாக கழுவி 10 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ள‌வும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு போடவும். அது வெடித்ததும் அரிந்த வெங்காயம் போட்டு வதக்க‌வும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, ம‌ஞ்சள் தூள், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு குழைய வதக்க‌வும். எண்ணெய் மேலே தெளிந்து வ‌ரும்போது கத்தரிக்காய் துண்டுகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிய தீயில் சிறிது நேரம் வதகக்வும். பின் புளி கரைத்த நீரை சேர்த்து நன்கு கிளறவும்.  புளி நீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது உருளைக்கிழங்கு, காரட் துருவல் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து வேக வைகக்வும். காய் வெந்து புளி நீர் கெட்டியாகும்போது பொடித்த பவுடரை சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடங்கள் மெதுவான தீயில் கிளறிய பின் வெந்த சாதம், தேவையான உப்பு சேர்த்து மெதுவான தீயில் நன்கு கிளறவும். நெய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும். 

இதை சும்மாவே சாப்பிடலாம். நாவில் அந்த ருசி அப்ப‌டியே தங்கி விடும். ஏதேனும் நல்ல ஊறுகாய் இருந்தால் போதும். என் வீட்டில் எல்லோரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்துக்கொள்வார்கள்.

 

Friday, 10 September 2021

' தலைவி'!!!


நேற்று இங்கே துபாய் , டேரா நகரில் ஐந்து நட்சத்திர விடுதியான ஹையாத் ரீஜென்சி இணைப்பான காலரியாவிலுள்ள திரையரங்கத்தில் ' தலைவி' படம் பார்த்தேன். இந்தியாவைப்போலவே துபாயிலும் பல திரையரங்குகளில்  நேற்று  இந்தப்படம் வெளியானது. எங்கள் மகனின் பிஸினஸ் பார்ட்னர் இப்ப‌டத்தின் வெளியீட்டார் என்பதால் நாங்களும் இந்தப்படம் பார்க்க வந்தோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்வாழ்க்கை வரலாற்றை ஓரளவு மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தலைவி. ஜெயலலிதா பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரைத்துறை நோக்கி வந்ததில் தொடங்கி, அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது வரை அவர் கடந்து வந்த பாதையைப் பேசுகிறது தலைவி. வரலாற்றுத் திரைப்படங்களில் கதைகளைத் திரிப்பதும்  பல பக்கங்களை இருட்டடிப்பு செய்வதும் உண்மைக்குப் புறம்பானது. அதைத்தான் இயக்குனர் விஜய் தலைவி திரைப்படத்தில் செய்திருக்கிறார். அதையும் மீறி, நிறைய உண்மையான நிகழ்ச்சிகளை உள்ள‌டக்கிய திரைபப்டமென்பதால் கடைசி வரை ரசித்துப் பார்க்கும்படி இயக்கியிருக்கிறார் விஜய்!


எம்.ஜி.ஆர் 'எம்.ஜே.ஆர் ' என்றும் ஜெயலலிதா ஜெயா என்றும் கருணாநிதி ' கருணா' என்றும் ஆர்.எம்.வீரப்பன் 'ஆர்.என்.வி என்றும் அழைக்கப்படுகிறார்கள். தலைவி படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்வது கதாபாத்திர தேர்வு,  ஒளிப்பதிவு, மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் அவரின் குரல் சில சமயங்களில் பொருந்தவில்லை. ஒரு தமிழ் நடிகை இதை விடவும் சிறப்பாக நடித்திருக்க முடியும் என்று எனக்குத்தோன்றியது. அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்டார் அரவிந்தசாமி.  இப்படித்தான் எம்.ஜி.ஆர் நிழலில் இருந்திருப்பாரா என்று நினைக்க வைக்கிறார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு, ஒப்பனை, பாவனைகள் எல்லாமே கிளாசிக். நடிப்பில் இவர் தான் முதலிடம் பெறுகிறார். அவரது சின்ன புன்னகைகள், வருத்தமான முகம், என்று நுணுக்கமாக அவரைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஜய். 


எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு ஒரு அம்மா மகள் போல, குரு சிஷ்யை போல என்று காண்பித்து, அவர்கள் இடையே உள்ள பந்தத்துக்கு எந்தப்பெயரும் வைக்காமல் கவனமாக படத்தை நகர்த்துகிறார் அவர். சசிகலா கூட பின் பகுதியில் வருகிறார். அவர் திரையில் தோன்றும் போது தியேட்டரில் கைத்தட்டல்! சிரிப்பு!! கருணாநிதியாக‌ நாசர், எம்ஆர் ராதாவாக ராதாரவி, ஆர் எம் வீரப்பன் கேரக்டருக்கு சமுத்திரகனி என எல்லோருமே அசத்துக்கிறார்கள். ஆனால் சிவாஜி கணேசனுக்கான நடிகர் தேர்வை மட்டும் சொதப்பி வைத்தது மட்டுமல்லாமல் அவரும் ஜெயலலிதாவும் தோன்றும் காட்சியையும் சரியாகத் தேர்வு செய்யாமல் விட்டு விட்டார் விஜய். இந்தக் காட்சி நிச்சயம் சிவாஜி ரசிகர்களை கோபம் கொள்ளச் செய்யும். 

படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படும் காட்சிகளிலிருந்து ஆரம்பித்து, மீண்டும் இந்த சட்டசபைக்கு முதல்வராக தான் வருவேன் என சபதம் எடுப்பதில் தொடங்கி அந்த சபதத்தை அப்படியே கிளைமாக்ஸ் காட்சிகளில் இணைக்கும்வரை  படம் தொய்வில்லாமல் நகர்கிறது. 


ஜெயலலிதாவின் தனிமை வாழ்க்கை, நடிகையாக அவர் முதலில் மாற முடியாமல் சிரமப்படுவது, பின் எம்.ஜி.ஆரின் வழகாட்டலில் தேர்ந்த நடிகையாக மாறுவது, எம்.ஜி.ஆரிடமான உணர்ச்சி மோதல்கள், அவரை ஆரம்பத்திலிருந்து எதிர்க்கும் ஆர்.எம்.வீரப்பனிடம் காட்டும் காட்டம், எம்ஆர் ராதா துப்பாக்கி சூடு, அதைக்காட்டி கலைஞர் கருணாநிதி தேர்தலில் ஜெயிப்பது, நண்பர்களாயிருந்த கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்குமான ஏற்பட்ட மனப்போராட்டங்கள் அவர்களை அப்படியே மாறுபட்டவர்களாக மாற்றுவது, இந்திரா காந்தியின் மறைவு, ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு, எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்வராக செய்யும் முயற்சி, ஆட்சி கவிழ்ப்பு, பாராளுமன்றத்தில் ஜெயலலிதா கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை, என்று எல்லா காட்சிகளையும் மிக அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர். 

ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்குப்பின் வந்த ஊழல்க‌ள், சிறைத்தண்டனைகள், ஜெயலலிதாவின் மர்ம மரணம், சசிகலா அனுபவித்த சிறை வாசம், இதோ இப்போது தொடரும் கொடநாடு விசாரணைகள் என்று இன்னும் மக்கள் மனதில் இந்த எல்லா நிகழ்வுகளும் தங்கியிருக்கும்போது, அதைத்தொடர்ந்த பல்வேறு கருத்துக்கள், வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் மீடியாவிலும் யுட்யூப்களிலும் அனல் பறந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில்  ஜெயலலிதாவை ' தியாகத்தலைவி'யாக சித்தரிக்கும் இந்தப்படம் மக்கள் மன்றத்தில் எடுபடுமா என்று தெரியவில்லை.

Sunday, 22 August 2021

முத்துக்குவியல்-63!!

 அசத்திய முத்து:

சமீபத்தில் 'சிந்துடாய் சப்கல்' என்ற பெண்மணி பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்து, கனமாகியது. வாழ்க்கை முழுவதும் ஒரு பெண் பல அவலங்களையும் துன்பத்தையும் மட்டுமே சந்தித்திருந்தாலும் அவளின் கருணை அழிவதில்லை, அவள் தன்னம்பிக்கை இறப்பதில்லை. அவள் என்றுமே தன் தாய்மை உணர்வை  இழப்பதில்லை. இந்தப்பெண்மணியும் அந்த மாதிரி காருண்யம் மிக்கவளாக இருக்கிறாள். இந்தப்பெண்மணியைப்பற்றி அறிகையில் மனம் நிறைவை உணர்கிறது. அவரைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வர்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மாகே என்ற கிராமத்தில் கால்நடைகளை மேய்த்து பிழைக்கும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சிந்துடாய் சப்கல். இவர் பிறந்ததே வேண்டாத ஒன்றாய் இருந்ததால் இவர் குடும்பத்தாரால் 'சிந்தி' என்றழைக்கப்பட்டார். மராத்தியில் 'சிந்தி' என்றால் கிழிந்த துணி என்று அர்த்தமாம்! எப்படிப்பட்ட கொடுமை இது! நான்காம் வகுப்பு வரை தான் இவரால் ப‌டிக்க முடிந்தது. தன் பன்னிரண்டாவது வயதில் தன்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயானார். மீண்டும் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும்போது கணவனால் எட்டி உதைக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டார். அரை மயக்க நிலையில் மாட்டுத்தொழுவம் ஒன்றில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் வீட்டாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தெருக்களிலும் ரயில்வே பிளாட்பாரங்களிலும் பாட்டு பாடி பிச்சையெடுத்து வாழ ஆரம்பித்தார். பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் சுடுகாட்டில் தங்கிக் கொள்வார். இறுதிச் சடங்குகளில் வாரி இரைக்கப்பட்ட தானியங்களை சேகரித்து அதை மாவாக்கி ரொட்டி செய்து எரிந்து கொண்டிருக்கும் சிதைகளிருந்த நெருப்பில் அதை சுட்டுத்தின்னும் அவல வாழ்க்கைக்கு தள்ள‌ப்பட்டார். எத்தனை அவலமான வாழ்க்கை அவருக்கு!


அதன் பின் தான் அவர் வாழ்க்கையில் திருப்பம் வந்தது. தன் பெண்ணை அநாதை பராமரிப்பு நிலைத்தில் விட்டு விட்டு, அநாதைக்குழந்தைகள் பலருக்காக இன்னும் கடுமையாக பிச்சையெடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணம், நன்கொடைகளைக்கொண்டு அனாதை இல்லங்களை உருவாக்கினார். தன் வாழ்க்கையையே அநாதைகளைப் பராமரிக்க அர்ப்பணித்தார். 1050க்கும் மேற்பட்ட அநாதைக்குழந்தைக‌ளுக்கு இவர் அடைக்கலம் கொடுத்தார். விருது பணத்தில் மேலும் மேலும் நிலம் வாங்கி அநாதை விடுதி பராமரிப்பு பணிகளை விரிவு படுத்தி வருகிறார். தன்னால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்தக்கால்களில் நிற்கும் வரை அடைக்கலம் கொடுத்து வருகிறார். இவரால் வளர்க்கப்பட்ட பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக இருக்கின்றார்கள். 


இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மராத்தி மொழியில் ' Mee Sindhutai Sabkal’ என்ற திரைப்படம் 2010 ஆம் அண்டில் வெளியானது. இந்த திரைப்படம் 54வது லண்டன் திரைப்பட விழாவில் திரையிடத்தேர்வானது. ' 1050 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் 'மாயி' [அம்மா] என்ற‌ழைக்கப்படும் சப்கலுக்கு 2016ம் ஆண்டு DY Patil Institute of Technology and research foundation கெளரவ டாக்டரேட் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது. அன்னை தெரசா விருது, பத்மஸ்ரீ விருது உளபட 500க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு இவர் கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார். ஃபீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுவது போல குப்பைமேட்டிலிருந்து எழுந்து ஆயிரக்கணக்கான அனாதைக்குழந்தைகளை வாழ்க்கையில் உயர்த்தி மகத்தான சாதனை படைத்திருக்கும் இந்த உயர்ந்த பெண்மணியை வணங்குவோம்

 இசை முத்து:

ஏ.ஆர்.ரஹ்மானின் ' கண்ணாமூச்சி ஏனடா' பாடல் வயலினில் இங்கே இழைகிறது. அதுவும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் பிரபல வயலின் கலைஞர் ரூபா ரேவதி கரங்களால்! கேட்டு ரசியுங்கள்! 

Thursday, 5 August 2021

சில வழிமுறைகளும் தீர்வுகளும்!!

 வயதானால் வலிகளுக்குப் பஞ்சமில்லை.

எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, குதிகால் வல், இடுப்பு வலி என்று தொடர்ந்து வருவதும் சர்க்கரை ஏறுவதும் இரத்த அழுத்தம் உயர்வதும் முதியவர்களை அதிகமாகவே ஆட்டிப்படைக்கின்றன. நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பதும் அதிக வலிகள் இல்லாமல் உடலை பராமரிப்பதும் சவால்களாகவே இன்றைக்கு இருந்து வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, பல வித மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க நேருகின்றது. அதையும் தாண்டி சின்னச் சின்ன வைத்திய முறைகள் நமது நோய்களின் கடுமையைக் குறைக்க வழி செய்கின்றன. அந்த மாதிரி சில வைத்திய முறைகள், நான் என் ஃபைலில் சேகரித்து வைத்திருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். யாருக்கேனும் இவை பலன் கொடுத்து நோயின் கடுமையைக்குறைத்தால் அதுவே இந்தப்பதிவிற்கான பரிசாய் மாறும்.  

சர்க்கரை நோய் குறைய:

1. எருக்கம் இலைகள் இரண்டை எடுத்து கால்களை நன்கு கழுவிக்கொண்டு காலின் அடிபாகத்தில் இலைகளின் அடிபாகத்தை வைத்து சாக்ஸ் போட்டு பொருத்திக்கொள்ள வேண்டும். இரவில் இதை உபயோகிக்கக்கூடாது. 


பகலில் தினமும் 6 மணி நேரம் உபயோகிக்க வேண்டும். இதைப்போல ஏழு நாட்கள் செய்யும்போது எட்டாம் நாள் உங்களுக்கு 50 முதல் 60 வரை சர்க்கரை குறைந்திருக்கும்.

2. 300 கிராம் செலரி தண்டுகளை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு 6 எலுமிச்சம்பழங்களின் சாறை அதன் மீது பிழிந்து ஒரு சிறு தட்டால் மூடி, ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி, இந்த சிறிய பாத்திரத்தை அதனுள் வைத்து அந்த தண்ணீரை கொதிக்க விடவும்.


 கொதி வந்ததும் தீயைக் குறைத்து கொதி நிலையில் 2 மணி நேரம் வைத்திருக்கவும். பின் அடுப்பை அணைத்து, சூடு நன்றாக குறைந்ததும் சிறு பாத்திரத்தில் வைத்த செலரிக்கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி குடித்து வரவும். விரைவில் சர்க்கரை நார்மலுக்கு வரும்.

சைனஸ் பிரச்சினைக்கான தீர்வு இது:

சாறு நீக்கிய எலுமிச்சம்பழத்தோல்களைப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். எந்த மூக்கு துவாரத்தில் நீர் வடிகிறதோ அந்த மூக்கு துவாரத்தால் இழுத்து அடுத்த துவாரத்தால் காற்றை வெளி விட வேண்டும். பிறகு அதே துவாரத்தால் உள்ளே இழுத்து நீர் வடியும் துவாரத்தால் வெளி விட வேண்டும். 

மூட்டு வலி‍ யூரிக் அமிலம் அதிகரித்தால்:



பப்பாளிக்காய் ஒன்றை எடுத்து சிறு துண்டுகளாக்கியது 1 கப் வேண்டும். இதை 2 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். 5 சின்ன வெங்காயம் அரிந்து போட்டு தீயைக் குறைகக்வும். இடித்த பூண்டுப்பற்கள் 4, சீரகம் அரை ஸ்பூன், ஒன்று பாதியாய் இடித்த மிளகுத்தூள் 1 ஸ்பூன், 2 சிட்டிகை உப்பு போட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதித்ததும் இறக்கி சூப் போல சாப்பிடவும். 7 நாட்களுக்கு காலை 11 மணி போல சாப்பிடவும். அதிகப்படியாக தேங்கி நிற்கும் யூரிக் அமிலம் நீங்கும். வலி குறையும். அதன் பின் வாரம் இரு முறையாவது இதை செய்து குடிக்கவும். யூரிக் அமிலத்தின் அளவு சீராகி விடும்.

பித்தப்பை கற்களுக்கு:


ஒரு வெள்ளை கத்தரிக்காயும் தோலுடன் ஒரு எலுமிச்சம்பழமும் நன்கு அரைத்து சிறிது நீர் கலந்து வடிகட்டி ஏழு நாட்களுக்கு குடித்து வரவும். எட்டாவது நாள் கற்கள் நீங்கி விடும்.

களைப்பிற்கு:

முருங்கைக்காய் விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். 



அதை வாங்கி உடைத்துப்பார்த்தால் உள்ளே கருப்பு விதை இருக்கும். இது விட்டமின் பி அதிகம் உள்ளது. தினமும் ஒரு விதை சாப்பிட்டு வரவும். 

குதிகால் வலிக்கு:


கொள்ளு மாவு 2 ஸ்பூன், நல்லேண்ணெய் 1 ஸ்பூன், வினீகர் 1 ஸ்பூன், கல்லுப்பு 1 ஸ்பூன் இவற்றை ஒரு கப் தயிரில் நன்கு கலந்து குழைக்கவும். இந்த பேஸ்டை குதிகாலில் பாதி கால் வரை தடவி துணி வைத்து கட்டி இரவு தூங்க வேண்டும்.. கால் வலி காலையில் சரியாகி விடும்.


Sunday, 25 July 2021

காற்றுக்குமிழ்கள்!!!

 


இது ஒரு மீள் பதிவு.

பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே இது புதிய பதிவு தான். இதை எழுதும்போது மனதில் இருந்த ரணம் பத்து வருடங்களுக்குப்பிறகாவது குறைந்துள்ளதா என்று நினைத்துப்பார்த்தால் இன்னும் உள்ளே அந்த ரணம் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. பதிவைப்படித்த பிறகு உங்களுக்கும் அது புரியும்.

25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது. 

நானும் என் சினேகிதியும் ஊட்டி வரை சென்று விட்டு தஞ்சைக்குத்திரும்பிய தினம் அது. என் சகோதரி வீட்டில் தான் என் அம்மாவும் இருந்தார்கள். அதனால் அங்கு வந்து தான் இறங்கினோம். அன்றிரவு என் அம்மாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.

சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.[ மொபைல் இல்லாத காலம்] என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.

அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.

திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.

பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.

அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.

ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.