Tuesday 30 May 2017

ஆலமரம்!!!

மனிதர்கள் எல்லோரும் மகான்களாவதில்லை. உயர்ந்த சிந்தனைகளாலும் செயல்களாலும்தான் அவர்கள் மகான்களாகிறார்கள். அதற்கு எல்லையற்ற நேசமும் கருணையும் வேண்டும்.

' மனிதனாய்ப்பிறந்தால் அவன் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேன்டும் ' என்று எல்லோரும் பல தருணங்களில் நினைப்பது தான்! ஆனால் அந்த அர்த்தம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும், அன்பையும் கருணையையும் மட்டுமே அந்த உயர்ந்த வாழ்க்கைக்கு மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு அதன்படியே வாழ்ந்து கொன்டிருக்கும் ஒருவரைப்பற்றி ஒரு மாத இதழில் படிக்க நேர்ந்தது. படித்து முடித்த பிறகு அந்த பாதிப்பிலிருந்து என்னால் நெடுநேரம் விடுபட முடியவில்லை! இது ஒரு தவ வாழ்க்கையல்லவா, இப்படி யாரால் வாழ முடியும் என்று மனம் பிரமித்துப்போனது. அவரைப்பற்றி இதோ... எழுத ஆரம்பிக்கிறேன்.

நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களின் அருகில்கூட நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் புண்களில் சீழ் பிடித்து சில சமயங்களில் புழுக்களும் வைத்து, உறவினர்களால் வெளியேற்றப்பட்டு, ஆதரவின்றி தெருக்களில் அலையும் தொழுநோயாளிகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் சமூக சேவகர் மணிமாறன்.திருவண்ணாமலை அருகேயுள்ள தலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் சிறு வயதில் படிப்பில் நாட்டமின்றி, தந்தையின் ஆதரவுடன் தன்னுடைய பதினேழு வயதில் அன்னை தெரசாவின் ஆசிரமம் தேடி பயணமானார். பணம், முகவரி அடையாளம், உடைகள் பறி போய், பிச்சையெடுக்கும் கும்பலில் சிக்கி அடிபட்டு, தமிழ் பேசிய ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் அன்னை தெரசாவின் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் இவர். பெண்கள் மட்டுமே தங்க முடியும் அங்கு என்பதால் இவரை வெளியில் தங்க வைத்து அந்த ஆசிரமத்தில் பணி செய்ய அவர்கள் அனுமதித்தனர். நான்கு மாதங்கள் தங்கி சேவை புரிந்து, சேவை பற்றி நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டு, 'பிறருக்கு உதவுவதற்காகவே இந்த உடலையும் உயிரையும் ஆண்டவன் படைத்திருக்கிறான்' என்ற உணர்வுடன் இவர் ஊருக்குத்திரும்பினார்.திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப்பார்க்கத்தொடங்கினார் இவர். கிடைத்த 1100 சம்பளத்தில் தன் தந்தையிடம் 500 ரூபாய் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணம் முழுவதையும் சாலையோரம் வசிக்கும் எழைகளுக்கு உணவாகவே வழங்கி வந்தார். இதைப்பார்த்து விட்டு இவர் கம்பெனியின் நிறுவனர் பனியன் நிறுவனத்தில் மிஞ்சும் ஆடைகள், பிஸ்கட்டுகள் இவற்றை தானும் வழங்க, இவரின் சமூக சேவை வளரத்தொடங்கியது. வீதியில் அலையும் தொழுநோயாளிகளுக்கு எப்படி உதவலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு தமிழக தொழுநோய் பிரிவு டைரக்டராக இருந்த திரு.ராமலிங்கம் உதவி செய்தார். பல விழிப்புணர்வு முகாம்களுக்கு இவரை அனுப்பி வைத்ததுடன் தொழுநோயாளிகளின் புண்களுக்கு எப்படி மருந்தளிக்க வேண்டும், நாம் எப்படி அந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளையும் வழங்கினார். அதன் பின் மணிமாறன் தனது பைக்கில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அத்தனை மருந்துகளையும் வைத்துக்கொண்டு, எங்கு தொழுநோயாளிகள் தென்பட்டாலும் அவர்களிடம் கனிவுடன் பேசி, ஆறுதலளித்து, சிகிச்சை அளித்து மருத்துவ மனைகளிலும் சேவை நிலையங்களிலும் சேர்ந்து அதன்பிறகும் அவர்களை தொடர்ந்து கவனிக்கவும் செய்கிறார் இவர்.2008ல் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைப்படி ' உலக மக்கள் சேவை மையம்' என்ற மையத்தைத்தொடங்கி, ' முகம் சுளிக்காது சேவை செய்யும் மனம் இருப்பவர்கள் என் மையத்திற்கு வாருங்கள் ' என்று அழைப்பு விடுத்தார். இன்றைக்கு இவரின் மைஉயத்தில் 450 உறுப்பினர்கள் சேவை புரிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமன்றி 17 மாநிலங்களிலும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதுவரை இவர் 40000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உதவிகள் செய்திருக்கிறார். இதில் பதினைந்தாயிரம் பேர் தொழுநோயாளிகள். நோயிலிருந்து விடுபட்டவர்கள் சுய தொழில் தொடங்கவும் வழி செய்துள்ளார் இவர். நோய்த்தாக்குதலினால் இறந்து போனால் அவர்களின் இறுதிக் காரியாங்களையும் இவரே செய்கிறார். ஆதரவற்றோர், தொழுநோயாளிகள் என 275 பேருக்கு இவர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.விபத்து பற்றிய தகவல்கள் இவருக்கு வந்தால் அங்கு சென்று முதலுதவிகள் செய்து வருகிறார். தவிர்க்க முடியாமல் இறந்து போனவர்களின் குடும்பத்தினரிடம் பேசி இதுவரை 22 ஜோடிக் கண்களை தானமாகப்பெற்று வழங்கியிருக்கிறார்.

இன்னும் அசத்தலான விஷயம், நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு ஊரின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பகுதிகளை சுத்தம் செய்கிறார். இது வரைக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சுத்தம் செய்து அங்கு குப்பைத்தொட்டிகளை அமைத்திருக்கிறார். இவர் செய்வதைப்பார்த்து அங்குள்ள மருத்துவர்களும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வது தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமென்று சொல்கிறார்.

இன்றைய தேதியில் கூட்டுக்குடும்பங்களின் அழிவை நினைத்து வருத்தப்படும் இவர், அப்படி உறவே இல்லாதவர்களுக்கு தான் உறவாக இருக்க வேண்டும், அவர்களுக்காக ஒரு ஆசிரமத்தை உருவாக்க வேண்டுமென்பதே தனது அடுத்த பயணத்தின் இலக்கு என்கிறார் இவர்.

தானும் இரத்த தானம் அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் வழங்க தூண்டுகோலாகவும் இருந்து வருகிறார்.அமெரிக்க பயாகிராஃபி இன்ஸ்ட்டியூட் தங்கப்பதக்கம், அமெரிக்க தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, மத்திய அரசின் சிறந்த சமூக சேவகர் விருது என்ற பல்வேறு விருதுகளைப்பெற்றிருக்கிறார் இவர்.

மிகச் சிறிய விதை மனதில் விழுந்ததை தன் உயர்ந்த மனதினால் பெரிய ஆலமரமாக்கியிருக்கிறார் இவர். அதுவும் எப்படிப்பட்ட ஆலமரம்! தன் விழுதுகள் அனைத்தாலும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நிழல் தருவது என்ற உயர்ந்த சிந்தனை! அவரை மனதால் வணங்குகிறேன்!!!

மேலும் இவரைப்பற்றி முழுமையாக அறிய கீழ்க்கண்ட வலைத்தளத்திற்குச் செல்லலாம்.

http://worldpeopleservicecentre.org/


12 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அமைதியாக தொண்டாற்றி வரும் அரிய மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. அவருடைய பணி தொடர்ந்து சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரு. மணிமாறன் அவர்கள் மனிதருள் மாணிக்கமாகக் காட்சியளித்து மகிழ்விக்கிறார்.

அவரின் இந்த சேவை ஆலமரமாக தழைத்து ஓங்கியுள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

பயனுள்ள தகவல்களுடன் கூடிய மனிதாபிமானப் பகிர்வுக்கு நன்றிகள்.

Angel said...

காலையில் படித்த முதல் பதிவு இதுதான் அக்கா ..அத்தனை மகிழ்ச்சி ..மணிமாறன் போன்றோர் நல்லா இருக்கணும் என இறைவனை வேண்டுகிறேன் .பகிர்வுக்கு நன்றிக்கா

ஸ்ரீராம். said...

மிக நல்ல மனிதரை, மிகச் சிறந்த மனிதரைப் பற்றி அறியத் தந்தீர்கள். நன்றி. பாஸிட்டிவ் பதிவில் உங்கள் அனுமதியுடன் பகிர்கிறேன்.

துரை செல்வராஜூ said...

>>> தன் விழுதுகள் அனைத்தாலும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நிழல் தருவது என்ற உயர்ந்த சிந்தனை!..<<<

மனிதருள் மாணிக்கம் எனத் திகழும் திருமணிமாறன் அவர்களுக்கு அன்பின் வணக்கங்கள்..

ராமலக்ஷ்மி said...

ஒப்பற்ற சேவை. மிக உயர்ந்த உள்ளம். பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

மனிதநேயம் மிக்க உன்னத மனிதரைப் ப்ற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.
இவரை வாழ்த்தி வணங்கி கொள்கிறேன்.
இவரின் தொண்டு சிறக்கட்டும்.
வாழ்க வளமுடன்.

கரந்தை ஜெயக்குமார் said...

.ஒப்பற்ற சேவையாளர்

Yaathoramani.blogspot.com said...


மனம் நெகிழ்ச்சியும் மகிழ்வும்
ஒரு சேரத் தரும் அற்புதமான பதிவு
விரிவான அருமையான பதிவிற்கும்
கூடுதலாக அறிந்து கொள்ள இணைப்பும்
கொடுத்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

சத்தமின்றி, ஆர்பாட்டமின்றி, வெளிச்சம் போட்டுக் கொள்ளாமல், மனிதநேயம் மிக்க தொண்டாற்றிவரும் அரிய இளைஞரை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. வியக்க வைக்கும் இவரை வாழ்த்திச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்...அவரது சேவை மேலும் சிறந்து வளர்ந்திட வாழ்த்துகள்..

Nagendra Bharathi said...

வணக்கம். வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

அன்பிற்குரிய சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ணன், ஜம்புலிங்கம், துரை.செல்வராஜ், ஸ்ரீராம், கரந்தை ஜெயக்குமார், துளசிதரன், நாகேந்திர பாரதி, ரமணி மற்றும் ராமலக்ஷ்மி, ஏஞ்சலின், கோமதி அரசு அனைவருக்கும் அன்பு நன்றி!!