Monday 6 August 2018

விமானப்பயணங்கள்!!

மதுரைத்தமிழன் ஏர் இந்தியாவைப்பற்றி எழுதியிருந்ததைப்படித்த போது, பழைய நினைவலைகள் மீண்டும் எம்பி எழுந்தன! 42 ஆண்டுகள் தொடர்ச்சியான விமானப்பயணங்கள்! எப்படி இருந்தவையெல்லாம் எப்படி மாறி விட்டன!

1976ம் வருடம் ஜூன் மாதம் எனது முதல் விமானப்பயணம்! பயம் இருந்தது. குமட்டல் ஏற்படுமோ என்ற சந்தேகம் இருந்தது. முதன் முதலாக இன்னொரு நாட்டில் தரையிறங்கிய போது பிரமிப்பு இருந்தது. அப்போதைய காலத்தில் பயணம் செய்த எங்களுக்கும் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் மக்களுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்கள்! இப்போதுள்ள தலைமுறை பஸ் பயணத்தைப்போலவே தான் விமானப்பயணத்தையும் காஷுவலாக எடுத்துக்கொள்கிறது! எந்த ஒரு பிரமிப்பும் காணோம்!

அன்றைய‌ துபாய் விமான நிலையம்!
அப்போதெல்லாம் விமானப்பயணம் என்பது காஸ்ட்லியாக இருந்தது. பயணிகளுக்கு ஏர் இந்தியா மகாராஜா வரவேற்பு தான் தரும்! அதுவும் ஏர் இந்தியாவின் சின்னமான தலை குனிந்து வணக்கம் செய்யும் மகாராஜாவைப்போலத்தான் விமானப் பணிப்பெண்களின் சேவையும் இருக்கும்.

இன்றைய துபாய் ஏர்ப்போர்ட் உள்ளே!
1976 வாக்கில் மும்பை வழியே தான் துபாய்க்கு முதன்முதலாக பயணிக்க வேண்டியிருந்தது . அப்போதெல்லாம் நேரடி விமான சேவை சென்னை துபாய்க்கு கிடையாது. மும்பை வந்தாலும் சென்னைக்கோ அல்லது துபாய்க்கோ செல்ல உடனடி விமான சேவைகள் இருக்காது. அதனால் அடுத்த நாள் செல்லும்வரை பயணிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள். அடுத்த வருடமே ஏர் இந்தியா விமானங்கள் முதன் முதலாக சென்னைக்கு நேரடி சேவையைத் துவக்கின. எங்களுக்கெல்லாம் அப்படியொரு சந்தோஷம். அதுவும் தொடர்ச்சியாகக்கிடையாது.

சென்னை வந்து அடுத்த நாள் நாங்கள் தஞ்சை செல்ல ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் தான் பயணிப்போம். ஒரு முறை சென்னை வந்து இறங்கி, மாமனார் இல்லத்திற்கு வருவதாகத் தந்தி கொடுத்து விட்டு சினேகிதி வீட்டில் தங்கி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றால் என்னைப்பார்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி! நான் கொடுத்த தந்தி போய் சேரவேயில்லை! அடுத்த நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த போது தான் அந்தத் தந்தியே வந்தது! அதை நான் தான் கையெழுத்து போட்டு வாங்கினேன்!!

பிறகு திருச்சியிலிருந்து விமான சேவை  1990 களில் தொடங்கியது.இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கியிருந்தது. [ சரியான வருடம் நினைவில் இல்லை ] ஆரம்ப நாட்களில் பயணிகளின் பெட்டிகள் காட்டுச்செடிகளின் இடையேயுள்ள கன்வேயர் பெல்ட்டில் தான் பயணித்து உள்ளே வரும். ஒரே தமாஷாக இருக்கும்! பயணிகள் உபயோகிக்க ஒரே ஒரு டாய்லட் மட்டுமே இருந்தது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது!

மெல்ல மெல்ல காட்சிகள் மாறின. இன்றைக்கு அதி நவீன வசதிகளுடன் திருச்சி விமான நிலையம் மாறியிருக்கிறது. தஞ்சை சேலம், திருச்சி மாவட்ட மக்களுக்கு இன்றைக்கு துபாயிலிருந்தும் ஷார்ஜாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்து செல்ல தினசரி விமான சேவைகள் இயங்குகின்றன.

இன்றைய திருச்சி ஏர்ப்போர்ட்!
அடுத்தாற்போல பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்து விட்டன. அதைப்பார்த்து விட்டு நடைமுறையில் இருக்கிற மிகப்பெரிய ஏர்லைன்கள் பலவும் இந்த பட்ஜெட் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்து விட்டன. இன்றைக்கு விமான பயணக்கட்டணம் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் முன்பிருந்த வசதிகளோ, மென்மையான அணுகுமுறையோ, அக்கறையோ இன்றில்லை. பெரும்பாலும் அனைத்து ஏர்லைன்களும் சாப்பாடு தருவதை நிறுத்தி விட்டன. எமிரேட்ஸ் உள்ளிட்ட மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே உணவு கொடுக்கின்றன. அவர்களது சாப்பாடும் அளவு, தரம் இரண்டையும் குறைந்து விட்டன. சில ஏர்லைன்கள் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் விமானத்திலேயே விற்பனை செய்கின்றன. அமரும் இருக்கைகள்கூட இன்று மாறி விட்டன.

இன்றைக்கு காட்சிகள் முழுமையாக மாறி விட்டன. ஒரு சாதாரண, பொருளாதாரத்தில் மிகக்கீழுள்ள ஒருவர் கூட இன்று விமானத்தில் போகுமளவு சமூக நிலை மாறி விட்டது. ஆனால் தரம், அக்கறையான அணுகுமுறை எல்லாமே மறைந்து விட்டது.

நவீனமயமாக்கலில் நல்ல விஷயங்கள் அழிந்து விடுவது இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் விஷயம் தானே?


19 comments:

Yaathoramani.blogspot.com said...

இதில் பயணிகள் கொண்டு செல்லும் சாமான்களின் எடையின் அளவை குறைத்துக்கொண்டே போவதையும் சேர்த்துக் கொள்ளலாம்

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லி இருக்கும் தந்தி சம்பவம் நடந்த நேரத்தில் நானும் தஞ்சையில்தான் வசித்தேன்! மருத்துவக்கல்லூரி குடியிருப்பிலும், பின்னர் ஹவுசிங் யூனிட்டிலும்...


அதே போன்ற தந்தி சம்பவங்கள் எங்கள் வீட்டிலும் நடந்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

கரந்தை ஜெயக்குமார் said...

செலவு குறைந்ததோடு தரமும் அல்லவா குறைந்துவிட்டது
வேதனை

திண்டுக்கல் தனபாலன் said...

ஒன்று இருந்தால் ஒன்று இருப்பதில்லை... இதை முன்னேற்றம் என்று சொல்வது தான் வேடிக்கை...

மனோ சாமிநாதன் said...

கருத்து சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி! நீங்கள் சொல்வது போலவும் அடிக்கடி நடக்கிறது. சீசனுக்கு தகுந்த மாதிரி ஒருத்தருக்கு 40 கிலோ என்பதை 30 கிலோவாகக் குறைத்து விடுகிறார்கள் பல ஏர்லைகள்!

மனோ சாமிநாதன் said...

எங்கள் பக்கத்தில் தான் நீங்கள் வசித்திருக்கிறீர்கள் சகோதரர் ஸ்ரீராம்! என்னையும்விட மருத்துவக் கல்லூரிக்கு மிக அருகே இருப்பது சகோதரர் கரந்தை ஜெயக்குமார் தான்!

மனோ சாமிநாதன் said...

இன்றைய விமான சேவைகளின் தரம் மிக மிகக்குறைந்து விட்டன சகோதரர் ஜெயக்குமார்! தொடர்ச்சியாக கடந்த 42 வருடங்களாக விமானப்பயணம் செய்து வரும் நான் வேதனைப்படுவதும் இதற்காகத்தான்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்! இதை நல்ல முன்னேற்றம் என்று நிச்சயம் சொல்ல முடியாது. வியாபார யுத்திக்கள் மட்டுமே.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நவீன மயமாக்கல் நம்மை பல நிலைகளில் பின்னுக்கு இழுத்துச்சென்றுவிட்டது. இதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.

வெங்கட் நாகராஜ் said...

தரம் இப்போது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.

விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பெருமளவு கூடிவிட்டது. தில்லி விமான நிலையத்தில் பார்த்தால் அப்படி ஒரு கூட்டம் - ஏதோ ஓசியில் பயணம் செய்ய அனுமதி கிடைத்தாற் போல ஒரு உணர்வு!

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தது சிறப்பு.

Bhanumathy Venkateswaran said...

என்னுடைய முதல் விமானப் பயணம் 1984ம் வருடம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு. அப்போது சென்னை விமான நிலையமே சிறியதுதான். 1987ம் வருடம் திருச்சி- சென்னை-மும்பை-மஸ்கட் என்று பயணப்பட்டேன். அப்போது திருச்சி விமான நிலையம் மிகவும் சிறியது. அரைவல் லௌஞ் என்று ஒன்று கிடையாது. பயணிகளை வரவேற்க விரும்புகிறவர்கள் வெட்ட வெளியில்தான் நிற்க வேண்டும். நீங்கள் வெளியிட்டிருக்கும் தற்போதய திருச்சி விமான நிலையத்தை பார்க்கும் பொழுது ஒரு முறை திருச்சிக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

Thenammai Lakshmanan said...

உண்மைதான். தரம், அக்கறையான அணுகுமுறை மறைந்துவிட்டது. டவுன்பஸ் போல் அது ஏர்பஸ் அவ்வளவே.

இமா க்றிஸ் said...

சுவார்சியமாக இருக்கிறது அக்கா. கடந்த இருபது வருடங்களாகத் தான் விமானங்களில் பயணிக்கிறேன். வித்தியாசங்கள் நிறையவே தெரிகிறது.

ஒரு தோழி சொன்னார், அவர் இங்கு வந்த காலத்தில் விமானத்தளத்தில் பெரிதாகக் கூட்டம் இராதாம். விருப்பம் போல உள்ளே போய் வரலாமாம். இவர்கள் வார இறுதியில் சின்னவர்களை அழைத்துப் போய் அந்த பஸ்களில் ஏறிப் பயணிப்பார்களாம். இப்போது தொலைந்து போவோம் என்கிற அளவு கூட்டம்.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்! நீங்கள் சொல்வது உண்மை தான்! நவீனமயமாக்கலில் வியாபாரச்சந்தைகள் சிறப்படையலாம், ஆனால் தரம் என்னவோ கீழே இறங்கத்தான் செய்கிறது!

மனோ சாமிநாதன் said...

சிறப்பான கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

1984ல் செய்த விமானப்பயணம் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் பானுமதி! உண்மையில் அப்படித்தான் திருச்சி விமான நிலையம் இருந்தது. இப்போது எல்லாமே தலைகீழாக மாறி விட்டது! கழிவறைகள் நீங்கலாக எல்லாமே சிறப்பாகவே உள்ளன

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்கள் கழித்து வருகையும் கூடவே இனிய சுவாரஸ்யமான கருத்துக்களையும் சொன்னதற்கு அன்பு நன்றி இமா!

ராமலக்ஷ்மி said...

விமான சேவைகளின் அன்றைய இன்றைய நிலைமைகளைக் குறித்து நல்லதொரு அலசல்.

உறவினர்கள் வந்த பிறகு, அவர்கள் வருவதாகக் கொடுத்த தந்தி கிடைத்த அனுபவம் 90_களின் தொடக்கத்தில் எனக்கும் உண்டு:).