Monday, 28 November 2022

பாசிப்பருப்பு பணியாரம்!!!

 பணியாரங்களில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பும் காரமுமாய் நிறைய பண்ண முடியும். அரிசியில் மட்டுமல்ல,  ரவா, சிறு தானிய வகைகள், சோளம், கோதுமை, ராகி என்று நிறைய பணியார வகைகள் சமையல் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதில் ரொம்ப சுலபமானது இட்லி மாவில் செய்வது தான். இந்த பாசிப்பருப்பு பணியாரமும் அந்த முறையில் தான் செய்ய வேண்டும். ரொம்பவும் வித்தியாசமான சுவையுடன் காலை நேரத்தில் களை கட்டும் டிபன் இது. இப்போது பாசிப்பருப்பு பணியாரம் செய்முறையைப் பார்க்கலாம்.


பாசிப்பருப்பு பணியாரம்:

தேவையான பொருள்கள்:

நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி

கடுகு- 1 ஸ்பூன்

உடைத்த உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்

கறிவேப்பிலை- ஒரு கொத்து

பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை- 2 மேசைக்கரண்டி

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- ஒரு கை

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2

இலை இலையாக வேக வைத்த பாசிப்பருப்பு- அரை கப்

இட்லி மாவு- 3 கப்

தேவையான உப்பு

பணியாரம் செய்யத்தேவையான எண்ணெய்


செய்முறை:

வாணலியை சூடு பண்ணி 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். அது வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காயம் போட்டு இலேசாக சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை, மல்லி போட்டு வதக்கவும். இலேசாக சிவந்ததும் வெந்த பாசிப்பருப்பை போட்டு தேவையான உப்பு போட்டுக்கலக்கவும். தீயை விட்டு இறக்கி ஆற வைக்கவும். ஆறினதும் இட்லி மாவை விட்டு நன்கு கலக்கவும். இட்லி மாவில் உப்பு இருக்குமென்பதால் மேலும் உப்பு சேர்க்கத் தேவையில்லை. 

பணியாரச்சட்டியை சூடு பண்ணவும். மிதமான சூடு இருந்தால் போதும். 

ஒவ்வொரு குழியிலும் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு பணியாரங்களை சுட்டு எடுக்கவும். நன்றாக வெந்து இலேசான சிவந்த நிறம் வரும்போது பணியாரங்களை எடுத்தால் சரியாக இருக்கும். 

தொட்டுக்கொள்ள தக்காளி சட்னியும் தேங்காய் சட்னியும் மிகவும் பொருத்தமாக இருக்கும். 



Monday, 31 October 2022

முத்துக்குவியல்-68!!!

 சாதனை முத்து

ஷ்ரேயா சித்தனாகெளடர்

2016ல் இவர் மணிப்பாலில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போது எல்லா இளம் பெண்களைப்போல இவருக்கும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஆயிரம் இருந்தன.

ஆனால் இவர் வாழ்க்கையில் நடந்தேறிய விபரீதங்கள் இவர் கனவுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தின் மீது அவர் கொண்டிருந்த ந‌ம்பிக்கைகளையும் புரட்டிப்போட்டு தன் காலடியில் மிதித்து நசுக்கியது.

அதே 2016ம் வருடம் பூனாவிலுள்ள தன் பெற்றோரிடம் சென்று தன் விடுமுறையை சந்தோஷமாகக் கழித்து விட்டு மணிப்பாலுக்கு ஒரு பஸ்ஸில் ஏறினார் ஷ்ரேயா.


விடியற்காலையில் ஓட்டுனருடைய தவறினால் பஸ் தலை குப்புற புரண்டு விழுந்து சற்று தூரம் இழுத்துக்கொன்டே போனதால் ஷ்ரேயாவின் இடது முன்னங்கை மோசமாக நசுங்கி நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்க, வயிற்றிலும் வலது முழங்காலிலும் சதை கிழிந்து தோலுரிந்து தொங்கிகொண்டிருக்க, முகமும் தலையும் கூட காயங்களால் நிரம்பியிருந்தன. மணிப்பாலில் கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே தன் இரு முன்னங்கைகளும் வெட்டி எடுக்கப்பட்டதை இவரால் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சாப்பிட்டதை விழுங்குவதும் மூச்சு விடுவதும் நடப்பதும் தவிர கழிவறை செல்வது உள்பட மற்றெல்லா செயல்களுக்கும் அவர் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார் ஷ்ரேயா. 


' கைகள் தானே போயின, கால்கள் நன்றாக இருக்கின்றன, மன உறுதியும் இருக்கிறது ' என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னிரக்கத்திலிருந்தும் தாங்க இயலாத சோகத்திலிருந்தும் வெளியே வர ஆரம்பித்தார் ஷ்ரேயா. சில நாட்களிலேயே தன் கால் விரல்களால் தொலைபேசி, டிவி ரிமோட், லாப்டாப் முதலியவற்றை இயக்க ஆரம்பித்தார். உலோகத்திலான கைகள், மரத்திலான கைகள் உபயோகித்து பார்த்தாலும் அவற்றின் கனமும் அவற்றால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் அவரால் தாங்க முடியவில்லை. முடிவில் பெற்றோர் கொடுத்த ஊக்கத்திலும் தைரியத்திலும் கைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். சுற்றி இருந்தவர்கள், உறவினர்கள், மருத்துவர்கள், நண்பர்கள் என்று பலரும் அவரது முடிவு தவறானது என்று உறுதியாகச் சொன்னாலும் இவர் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் கடுமையான பக்க விளைவுகள் தரும் மருந்துகளை எடுக்க வேண்டுமென்பதும் புதிய கைகள் முழுவதுமாக இயங்க கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இவருக்கு தெரிந்த உண்மை! ஆனாலும் அந்த கடுமையான சோதனைகளைத்தாங்க அவர் தன் மனதை தயார்ப்படுத்திக்கொண்டு, 2017ல் கொச்சியிலுள்ள அம்மா மருத்துவ மனையில் மருத்துவர். சுப்ரமணிய ஐயரிடம் தனக்கு கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்தார். 

பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கைகளை மட்டும் தானம் செய்வதில்லை. அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று சொல்லும் இவர் பொதுவாக நிறைய சமூகப்பிரிவுகளில் கைகளை தானமாகக் கொடுப்பது மட்டும் சரியானதில்லை என்ற நம்பிக்கை உலவுவதாக குறிப்பிடுகிறார். 

கைகளுக்காக இவர் பதிவு செய்த அன்றே,  அன்றைய தினம் இறந்து போன இளைஞர் ஒருவரின் கைகள் தானமாகக்கிடைக்கவும் 2017, ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி 14 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடந்து மணிக்கட்டிலிருந்து முழங்கை வரையிலான கைகள் தானம் பெற்ற‌ ஆசியாவின் முதல் பெண்ணாகவும் ஆண்களின் கைகளை தானமாகப்பெற்ற உலகின் முதல் பெண்ணாகவும் இவர் மாறினார். தனக்கு தன் மகனின் கரங்களை தானமாகக் கொடுத்த இளைஞர் சச்சினின் பெற்றோரை இவர் அடிக்கடி சந்தித்து நன்றி கூறியிருக்கிறார். 


ஆண்களின் கரங்களைப்பெற்றிருந்தாலும் சில மாதங்களுக்குப்பிறகு  கைகள் பெண்ணின் கரம் போல மாறத்தொடங்கியது. கருமையான கரங்கள் தற்போது ஷ்ரேயாவின் கைகளுக்குத்தகுந்தாற்போல சிவப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளன. இந்த மாறுதலுக்கான காரணங்கள் புரியாமல் மருத்துவ உலகே வியக்கிறது!!

இசை முத்து:

ராகங்களில் ' மோகனம்' மனதை மயக்கும் ராகம் எனச்சொல்லப்படுகிறது. எல்லா ராகங்களும் எந்தெந்த வேளைகளில், நேரத்தில் பாடப்பட வேண்டும் என்ற நியதியும் உள்ளது. மோகனம் மட்டும் எந்த நேரத்திலும் பாடக்கூடிய புகழை பெற்றிருக்கிறது. அதனால் தானோ என்னவோ திருவாசகம் கூட ' மோகன ராகத்தில்' தான் பாடப்படுகிறது. இத்தகைய பெருமை பெற்ற மோகன ராகத்தை புகழ் பெற்ற வயலின் மேதை திரு. கார்த்திக் ஐயர் எப்படி ஆலாபனை செய்கிறார் என்பதை கேட்டு ரசியுங்கள்!

Saturday, 8 October 2022

பொன்னியின் செல்வன் - ஒரு விமர்சனம்!!!

 திரைப்படம் நடிகர் கமலஹாசனின் குரலில் ஒரு முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. கமலின் குரலில் வயோதிகம் தெரிவது ஒரு ஆச்சரியம். உணர்ச்சி பாவங்களோ, விறுவிறுப்போ, கம்பீரமோ அந்தக்குரலில் இல்லை.


ஆதித்த கரிகாலனின் கட்டளையின்படி வந்தியத்தேவனின் பயணம் தஞ்சை செல்ல ஆரம்பமாவதிலிருந்து படம் தொடங்குகிறது. “ பொன்னியின் செல்வன்” புதினத்தில் வந்தியத்தேவன் தன் குதிரையின் மீது அமர்ந்தவாறே வீராணம் ஏரிக்கரையில் நின்று இயற்கை அழகில் லயித்து ரசிப்பதில் கதை தொடங்கும். மணிரத்னமோ அழகிகளின் நடனத்துடனும் அதற்கேற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசையுடனும் பாலைவனம் போன்ற மண்ணின் பின்னணியில் தொடங்குகிறார். இதிலிருந்தே கதையை நினைத்துக்கொண்டு படத்தைப் பார்க்கக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் திரைப்படம் ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்கிறது. வழி நெடுக வந்தியத்தேவனின் பயணத்தில் விளைந்த சாகசங்களும் சண்டைகளும் சந்திப்புகளும் உணர்ச்சி பிரவாகங்களும் தான் உயிர்துடிப்பாய் ‘ பொன்னியின் செல்வன்’ புதினத்தில் பரிமளித்துக்கொண்டிருக்கும். அந்த உயிர் துடிப்பு படம் முழுவதும் இருந்ததா என்று கேட்டால் நிறைய காட்சிகளில் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. 

வந்தியத்தேவன் தஞ்சை செல்லும் வழியில் கடம்பூர் சென்று பின் அங்கிருந்து குடந்தை சென்று தற்செயலாக குந்தவையை ஜோதிடர் இல்லத்தில் சந்தித்து பின் தஞ்சை செல்லும் வழியில் நந்தினியை சந்தித்து, அதன் பின் தஞ்சையில் சுந்தர சோழரை சந்திப்பது, பின் குந்தவையை தனியே சந்திப்பது, பின் சிறையில் அடைக்கப்படுவது, குந்தவையும் வந்தியத்தேவனும் மறுபடியும் சந்திப்பது,  ஈழம் சென்று தன் தம்பி அருள்மொழி வர்மனை கூடவே அழைத்து வரும்படி பணிப்பது என்று கதை தொடரும். 


திரைப்படக்கதையோ புதினத்தின் காட்சிகளை கொஞ்சம் குறைத்து, கற்பனைகளை கூட்டி நகருகிறது. ஆனாலும் சுவாரஸ்யத்திற்கு பங்கமில்லாமல் ஆரம்பித்ததிலிருந்து வேகமாக கதை நகர்ந்து மிக அருமையான காட்சியமைப்பில் அடுத்த பகுதிக்கான ஒரு ‘ தொடரும்  ‘ போட்டிருக்கிறார்கள்.

நடிப்பு என்று பார்த்தால் ஆழ்வாக்கடியானாக நடிக்கும் ஜெயராமின் நடிப்பு அட்டகாசம்! வந்தியத்தேவனாக கார்த்தி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் மிகவும் நளினமாக தன் காதாபாத்திரத்தை செய்திருக்கிறார். அவரின் அழகு அதற்கு உதவி செய்கிறது. திரிஷா அந்த அளவு என்னை கவரவில்லை. அருள்மொழித்தேவனாக ஜெயம் ரவி! அவரின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தாலும் இந்த ராஜ கதாபாத்திரத்திற்கான கம்பீரமான குரல் அவருக்கில்லை! இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் ‘ ராஜ ராஜ ராஜ கம்பீரக்குரலை’ நினைத்து ஏக்கமாக இருக்கிறது! கடைசியில் விக்ரம்! அவரின் நடிப்பு பிரமாதம்! “ இந்த கள்ளும் போரும் ரத்தமும் அவளால்தான், அவளுக்காகத்தான்! “ என்று குமுறும்போது மிக அழகாக நடிக்கிறார்! அப்படியே இளம் வயது நந்தினியையும் இளம் வயது ஆதித்த கரிகாலனையும் நினைத்துப்பார்க்கையில் அந்தக் காட்சிகளின் இளமையும் அழகும் சுகமான பின்னணி இசையும் கலந்து கொடுத்த இனிமையில் நாம் லயித்துக்கொண்டேயிருக்கும்போது நம் தலையில் அடிப்பது போல ரஹ்மானின் இசையில் பாடலும் விக்ரம் ஆடுவதும் பின்னாலேயே வந்து அந்த இனிமையையே கலைத்து விடுகிறது! 

அப்புறம் பூங்குழலி! அவரின் நடிப்பு மிக அருமை! அபாரம்!


புதினத்தில் வானதி மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். அது போல் சுந்தர சோழரின் மனைவி வானவன்மாதேவி சரித்திரத்தில் இடம் பெற்றவர். இவர்களது கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது.  

போர்க்கள காட்சிகள் ஒரு பிரமிப்போ அல்லது வியூகங்களோ இல்லாமல் மிகச் சாதாரணமான காட்சிகளாகத்தான் நகர்கின்றன!

அப்புறம் பாடல்கள்! எந்த ஒரு பாட்டிலும் இனிமையில்லை! அதுவும் கடம்பூர் மாளிகையில் நடக்கும் ‘  ' தேவராளனின் ஆட்டம் '  எடுக்கப்பட்டிருக்கும் நடன அமைப்பும் பாடலும் எனக்கு ‘ வீரபாண்டி கோட்டையிலே’ பாடல் தான் நினைவுக்கு வந்தது. கருமையும் ரத்தமுமாய் வேஷம் பூசி ஆடியவர்களும் பயமுறுத்தினார்கள், பாடலும் பயமுறுத்தியது, ஒலித்த சப்தங்களும் பயமுறுத்தின.

கர்ணனின் ‘ கண்கள் எங்கே’ பாடலும் உத்தம புத்திரனின் ‘ முல்லை மலர் மேலே’ பாடலும் அப்படியே நினைவில் எழுந்தன! ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு நம்மை மயங்க வைத்த அந்த இனிமையான பாடல்கள் போல அல்லவா ‘ பொன்னியின் செல்வன்’ படத்தில் அமைந்திருக்க வேண்டும்? நவீன இசையமைப்பு எப்படி சரித்திர படங்க்களுக்கு பொருத்தமாக இருக்கும்? 


புதினத்தில் மிகவும் புகழ் பெற்ற காட்சியே வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் காட்சிகள் தான்! அதுவும் இருவரும் தனியே முதன்முதலாக சந்திக்கும் காட்சியில் கல்கியின் வர்ணனையின் அழகை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அத்தனை அற்புதமாக இருக்கும். பிறகும் குந்தவை வந்தியத்தேவனை சிறையில் சந்திக்கும்போது ‘ என் மனச்சிறையிலிருந்து உங்களுக்கு என்றுமே விடுதலை கிடையாது’ என்று சொல்லுவாள். அந்த அழகான காட்சிகளை மணிரத்னம் நீக்கி விட்டார். இந்த சந்திப்பை பத்தோடு பதினொன்றாக்கி விட்டார். 

ஐந்து பாகங்களாக இருக்கும் ‘ பொன்னியின் செல்வனை’’ 3 மணி நேரம் பார்க்கும்படியான திரைப்படமாக உருவாக்குவதென்பது மிகவும் சிரமமான காரியம்! 

இதைத்தான் நிறைய பேர் சொல்லுகிறார்கள். ஆனாலும் எது மிகச் சிறந்த காட்சியோ, அதை தவிர்த்து விடும்போது கதையின் உயிர்த்துடிப்பும் அல்லவா குறைந்து போகிறது?

 

[ பாரதி பாஸ்கர் இந்த வீடியோவில் கல்கி எப்படியெல்லாம் பூங்குழலியைப்பற்றி விவரித்து அருமையாக எழுதியிருக்கிறார் என்பதை மிக அழகாய் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள்! ]

கடைசி காட்சி! கரிய நிறத்தில் சூழ்ந்திருக்கும் மேகங்களிடையே, கொந்தளிக்கும் நடுக்கடலில் வந்தியத்தேவனும் அருள்மொழியும் தங்கள் விரோதிகளுடன் சண்டையிடும் காட்சி அப்படியே நம்மை ஸ்தம்பிக்க வைக்கிறது. ரவிவர்மனின் ஒளியமைப்பு அட்டகாசம்! 

நான் முன்பேயே சொல்லியிருப்பது போல உண்மைக்கதையை நினைத்துக்கொண்டு சென்றால் படத்தை ரசிக்க முடியாது. நம் மனதிலும் கனவிலும் பல காலமாக உறவாடியவர்களை சந்திக்கப்போகிறோம் என்ற உணர்வுடன் மட்டும் தான் படத்தைப் பார்க்கச் செல்ல வேண்டும்!!! 


Friday, 23 September 2022

துபாயில் ஒரு புதிய கோவில்!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான மக்கள் தொகையில்  இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர். இங்கு இந்துக்களுக்காக அபுதாபி அருகே பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் மோடி ஏற்கனவே இதற்கு அடிக்கல் நாட்டியிருப்பது பற்றி ஏற்கனவே ஒரு பதிவெழுதியிருக்கிறேன். அதேபோன்று, 2வதாக புதிய கோயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகராக கருதப்படும் துபாய் நகரத்தின் ஜெபல் அலி பகுதியில், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்  ரூ.149 கோடி செலவில் பிரம்மாண்டமான‌ இந்து கோயில் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் 4ந்தேதி திறக்கப்பட உள்ளது.


சீக்கிய குருநானக் தர்பார் அருகே அமைந்துள்ளள இந்த‌ கோயில் பாரம்பரிய இந்திய கலை நுணுக்கங்களுடனும் சற்று அரேபிய கலையழகுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




1950 களில் திறக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றான பர் துபாயின் ஸூக் பனியாஸில் உள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் இந்த கோயில்.

இது வரை துபாயில் இயங்கி வரும் பழமையான குருநானக் தர்பார்

துபாய் நகருக்குள் இருக்கும் பழைய துபாயிலுள்ள சிவன் கோவிலில்

இந்திய தொழிலதிபரும் சிந்தி குரு தர்பார் கோயிலின் அறங்காவலர்களில் ஒருவருமான ராஜு ஷிராஃப் “ “உள்ளூர் பொருளாதாரத்திற்கு நாங்கள் திருப்பித் தர விரும்புகிறோம். மத சகிப்புத்தன்மையைக் கொண்டாடியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமைக்கு நாங்கள் வைத்திருக்கும் நன்றியைத் திருப்பிச் செலுத்துவதற்கான எங்கள் வழி இது” என்று கூறியுள்ளார்.

வழிபாட்டாளர்கள் 4,000 சதுர அடி விசாலமான விருந்து மண்டபத்தை கலாச்சார நிகழ்வுகள், மதக் கூட்டங்கள் மற்றும் சமூக கூட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த கோயில் கிழக்கு நோக்கிய கட்டமைப்பாகும், இது இந்திய கோயில் கட்டிடக்கலை மற்றும் இந்து வாஸ்து சாஸ்திரத்தின் விதிமுறைகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டமைப்பில் இரண்டு அடித்தளங்கள் உள்ளன, ஒரு தரை தளம் மற்றும் முதல் தளம். கோயிலின் மொத்த உயரம் 24 மீட்டர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Sunday, 11 September 2022

முத்துக்குவியல்-67!!!

 உயர்ந்த முத்து:

ஓம்கர்நாத் ஷர்மா மிகவும் சாதாரண மனிதார். வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு மன நலம் குன்றியிருக்கும் ஒரே மகனுடனும் மனைவியுடனும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.  ஆனால் அவர் ஒரு அசாதாரண வேலையை அனுதினமும் செய்து கொண்டிருக்கிறார். 


80 வயதான ஏழ்மையான இவர் தனிப்பட்ட முறையில் சிறு வ‌யதிலேயே ஒரு விபத்தில் கால்கள் ஊனம் அடைந்திருந்தாலும் ஏழை மகக்ளுக்கு உதவி செய்வதற்காகவே தினமும் பல கிலோ மீட்டர்கள் அந்த ஊனத்துடன்  நடக்கிறார். வசதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்கள் வீட்டில் தேவையில்லாமல் வைத்திருக்கும் மருந்துகளை இவர் தினமும் சேகரித்து அவற்றை மருந்து வாங்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு கொடுக்கிறார்.எந்த வித சுநலமுமில்லாமல் ஆதாயமுமில்லாமல் ஏழை மக்களுக்காகவே தினமும் பல கிலோ மீட்டர்கள் நடந்து மருந்துகளை சேகரித்து எழைகளுக்கு கொடுத்து உதவுகிறார்.


 உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச்சேர்ந்த இவர் இளம் வயதில் ரத்த வங்கியில் வேலை பார்த்தவர். மக்கள் இவரை ' மெடிசின் பாபா' என்றழைக்கிறார்கள். 15 வருடங்களாக இந்தத்தொண்டினை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவரது சேவையைக்கண்டு நெகிழ்ந்து போன பல தரப்பு மக்களும் தினமும் அவர் இருக்கும் இடத்துக்கு வந்து தாங்களே தங்களிடம் தங்கிப்போன மருந்துகளை மனமுவந்து தருகிறார்கள். 

மருத்துவ முத்து:

சமீபத்தில் ஊரில் இருந்த போது, எங்கள் காரை ஓட்டுவதற்கு அவ்வப்போது வீட்டிற்கு வரும் ஓட்டுனரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்த போது, மிகவும் உடல் நலிந்திருந்த அவரின் மாமனாரைப்பற்றி விசாரித்தேன். அவர் இப்போது நலமுடனிருப்பதாகவும் அவரின் சர்க்கரை நோய் அவரை விட்டு நீங்கி விட்டதாயும் தெரிவித்தார். எப்படி சர்க்கரை முற்றிலும் நீங்கியதென விசாரித்த போது, அவர் தெரிவித்த விபரம்:


தேன் கனி என்ற ஒரு பிரவுன் கொட்டை, [ படத்திலிருப்ப்து போல] நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கொட்டையை கவனமாக உடைத்தால் வெள்ளரி விதை போல ஒன்று உள்ளிருக்கும். அதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு விதையை சிறிது இலேசான சூட்டுடன் கூடிய வென்னீருடன் சேர்த்து விழுங்கி விடவும். இது போல 48 நாட்கள் சாப்பிட்ட பின் டெஸ்ட் செய்து பார்த்தால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருக்கும். சிலர் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் சாப்பிடுவார்கள். இவரின் மாமனார் காலையில் மட்டும் ஒரு விதை சாப்பிட்டு வந்தாயும் தற்போது சர்க்கரை அடியோடு இல்லையென்றும் மாத்திரைகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டதாயும் சொன்னார். இதை கடித்து சாப்பிடுவது கடினம். ஏனென்றால் அத்தனை கசப்பாக இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது சர்க்கரை முற்றிலும் நீங்கி விட்டதென்றும் சொன்னார்..

அருமையான முத்து:

பொதுவாய் சர்க்கரை நோய்க்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் அதிக பக்க விளைவுகள் கொண்டவை. ஆனால் மருத்துவர்கள் யாரும் அந்த பக்க விளைவுகள் பற்றி பேசுவதில்லை. இந்த மருந்துகளை தொடங்கியதிலிருந்தே நிறைய சர்க்கரை நோயாளிகளுக்கு வயிற்று பிரச்சினைகள் ஆரம்பமாகி விடும். அஜீரணம், வயிற்றுப்போக்கு , பல வகையான வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் என்று அவதிப்படுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு காரணம் புரியாது. சிலருக்கு சிறுநீரகமும் பாதிக்கப்படும். சிறுநீரில் புரதம் வெளியேறத்தொடங்கி விடும். இது பற்றியும் மருத்துவர்கள் அடுத்தடுத்த பரிசோதனைகளில் கண்டு பிடித்தால்கூட சொல்ல மாட்டார்கள். கிரியாட்டினின் கூடியிருப்பதாக இரத்தப்பரிசோதனை முடிவில் வந்த பிறகு தான் சொல்லுவார்கள். 

இங்கேயுள்ள மருத்துவர் மட்டும் எந்தெந்த சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் என்னென்ன பாதிப்புகள் கொடுக்கும் என்று தெளிவாக, அருமையாக சொல்லியிருக்கிறார். அதற்கான வீடியோ தான் இது. 

Saturday, 23 July 2022

முகங்கள்-5!!!

 இந்த முகம் ஒரு 21 வயது இளம் பெண்ணுக்கு சொந்தமானது. தமிழ்நாட்டில், தஞ்சாவூர் பக்கம் உள்ளடங்கிய பின் தங்கிய ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவள். சுறிலும் வயல்கள் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு வீட்டில் பிறந்து வளர்ந்தவள். அம்மாவின் அரவணைப்பிலும் அப்பாவின் பாசத்திலும் அண்ணனின் தோழமையிலும் கவலை என்றால் என்னவென்றே தெரியாத சின்னஞ்சிறு இளம் பருவம். தென்னை மரத்தில் சரசரவென்று ஆண்களைப்போல ஏறி தேங்காய் பறிப்பாள். மாமரத்தில் ஏறுவதில் அத்தனை ஆசை. ஆடுகளை மேய்ப்பதும் மாடுகளை பராமரிப்பதும் அவளின் அன்றாட வேலைகள் மட்டுமல்ல, பொழுது போக்கும்கூட! ஆற்றில் தண்ணீர் விட்டதும் அது வயல்களில் நுழைந்து வடியும்போது பெரிய பெரிய மீன்களும் அப்படியே வந்து கிடக்குமாம். அவற்றை எடுத்துச்சென்று சுத்தம் செய்து சமைத்து வறுத்து கிராமத்துக்குழந்தைகளுக்குக்கொடுத்து சந்தோஷப்படுவதும் அவள் வழக்கம். வீடு தாண்டி, ஊரைத்தாண்டி எங்கும் வெளியில் சென்றதில்லை. அந்த கிராமத்தில் சிட்டுக்குருவி போல பறந்து வளர்ந்திருக்கிறாள்.

அவளின் அப்பா அந்த சிறு கிராமத்தின் நாட்டாமையாக இருந்திருக்கிறார். அவருடைய அண்ணனும் அந்த ஊரில் இருந்து வாழ்ந்திருக்கிறார். அண்ணன் திடீரென்று இறக்க, அந்தக்குடும்பத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார். அண்ணனின் மகன் வளர்ந்து வாலிபனானதும் ஒரு பெண்ணைப்பார்த்து திருமணமும் செய்வித்திருக்கிறார். சாப்பாடாக இருந்தாலும் சரி, பொருள்களாக இருந்தாலும் சரி, எப்போதும் தன் அண்ணன் வீட்டுக்கும் கொடுத்தனுப்பும் மனமும் அவரிடம் இருந்திருக்கிறார்.


இப்படியே நாட்கள் செல்லும்போது தான் அவர் கண்களில் ஒரு காட்சி தென்பட்டிருக்கிறது. அண்ணன் மகனின் மனைவியாக வாழ வந்த பெண்ணின் நடவடிக்கைகள் சரியில்லமல் இருந்திருக்கிறது. வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதையும் தெரிந்து கொண்ட பின் அண்ணன் மகனைக்கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருக்கிறார். அவனும் தான் இது பற்றி அவசியம் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறான். விஷயம் முடிந்ததாக நிம்மதியுடனிருந்த அவரை சில நாட்களிலேயே வெட்டிக்கொலை செய்து விட்டான் அவன். எல்லோரிடமும் 
' தன் ம‌னைவியைப்பற்றி தவறாகப்பேசியதால் தன் சித்தப்பாவைக் கொன்று விட்டதாக சொல்லி அந்த ஊரிலேயே பெரிய ஆள் போல உலவுவது, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப்பெண்ணின் வீட்டின் முன் வந்து ரகளை செய்வது, பயமுறுத்துவது என்று  தன் நடவடிக்கைகளையும் அத்து மீறல்களையும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருந்தான் அவன். வழக்கம்போல வழக்கு நீதிமன்றத்தில் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

தந்தை இறந்த பிறகு அந்தக்குடும்பம் வலிகளையும் கஷ்டத்தையும் அனுபவிக்க ஆரம்பித்திருந்தது.

என் அம்மாவிற்கு தற்போது அவரின் 103 வயதில் சிறிது உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் என் தங்கை அவரை கவனித்துக்கொள்வதற்காக  ஒரு HOME CARE நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு காலையிலிருந்து மாலை வரை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட பெண் தான் இவள்!

இப்போது ஊரிலிருந்த போது அம்மாவை தங்கையின் வீட்டிலிருந்து அழைத்து வந்து சில நாட்கள் என்னுடன் வைத்திருந்த போது அம்மா கூடவே வந்தவள் ஒரு நாள் என்னிடம் தன் கதையைச் சொன்னாள்.

மாலை நேரம் அவளை விடுவிக்க இன்னொரு பெண் ஆறரைக்கு வருவாள். அத‌ற்குப்பின் இந்தப்பெண் தஞ்சை பழைய பேருந்து நிலையம் சென்று காத்திருந்து இரவு ஏழரைக்கு அவள் ஊர் இருக்கும் திசைக்குச் செல்லும் பேருந்தில் சென்று ஒரு முச்சந்தியில் இறங்கி அங்கே அவளுக்காக காத்திருக்கும் அண்ணனின் சைக்கிளில் ஏறி பத்தி கிலோ மீட்டர் கடந்து அவள் கிராமத்தில் நுழையும்போது இரவு பத்தாகி விடும். அம்மா கையால் சாப்பிட்டு உறங்க ஆரம்பித்தால் மறு நாள் காலை ஏழரை மணி பேருந்தைப்பிடிக்க மறுபடியும் ஓட்டம்.

அண்ணன் மின்சார பழுதுகளை சரி பார்க்கும் வேலையில் இருக்க, அம்மா தான் வயல்களையும் மரங்களையும் ஆடுகளையும் மாடுகளையும் பார்த்துக்கொள்கிறார். வீட்டுத்தலைவனின் மரணம் அந்தக்குடும்பத்தை எப்படியெல்லாம் சிதறியடித்து விட்டது!



சமீபத்தில் என் தங்கை அவளின் அப்பாவைக்கொன்றவனுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் நாளிதழ்களில் அந்த செய்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தபோது, எனக்கே அத்தனை சந்தோஷமாக இருந்தது. மறுபடியும் தங்கை வீடு சென்ற போது அவளிடம் வாழ்த்துக்களையும் சந்தோஷத்தையும் தெரிவித்தேன்.   

என் அப்பான்னா எனக்கு உசிரும்மா

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது!

Friday, 17 June 2022

துபாய் எக்ஸ்போ-2!!!

மத்திய கிழக்கு, தெற்காசியா, ஆப்பிரிக்கா பகுதியில் நடைபெற்ற‌ முதல் உலக எக்ஸ்போ அமீரகத்தில் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. அரபு நாடுகள் அனைத்திற்கும் முதன் முதலாக நடத்தப்ப்பட்ட‌ முதல் உலக கண்காட்சியான‌ இதில் 192 நாடுகளின் பெவிலியன்கள், நேரடி பொழுது போக்குகள், மறக்க முடியாத சந்திப்பு இடங்கள், நகைச்சுவையான ஹாங்கவுட்கள் என்று பல வகையான நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முற்றிலும் எதிர்கால சிந்தனைகளுடன் புதிய கண்டுபிடிப்புகளை பல பொழுது போக்குகளுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இடமாக‌ எக்ஸ்போ துபாய் விளங்கியது. மார்ச் முதல் வாரம் தான் இந்த எக்ஸ்போ 2020 கண்காட்சிக்குச் சென்றோம். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் இங்கே!!
முகப்பு
ஆஸ்த்ரேலியா
டென்மார்க்
ஓமன்
அல்ஜீரியா
செர்பியா
டர்க்மினிஸ்தான்
ரஷியா
பாகிஸ்தான்
அங்கோலா
பிரம்மாண்டமான கூரைகள்
ஹங்கேரி
பிரமிக்க வைக்கும் அரங்கங்கள்!
சிறு சிறு கடைகள்
மலேஷியா
தாய்லாந்து
பிரான்ஸ்

Monday, 16 May 2022

ஜாதகமும் நானும்-2!!!

என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ஒரு நாள் அவர் பெண்ணுக்கு திடீரென ஒரு வரன் வந்துள்ளதாக அவர் கணவர் ஊரிலிருந்து ஃபோன் செய்தார். கூரியர் மூலம் வந்த மாப்பிள்ளையின் விபரங்கள் எல்லாமே நன்கிருந்தன. என் சினேகிதி பிராமண குலம் என்பதாலும் அவர் சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதவை என்பதாலும் ஒரு நல்ல ஜோதிடரிடம் போக வேண்டும் என்றார். தெரிந்த ஒருவரிடம் கேட்டு அவர் சொன்ன மிகப் பிரபலமான ஜோதிடரிடம் சென்றோம். அவர் ‘பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும் கொடுத்து விட்டு செல்லுங்கள். நாளை வாருங்கள்’ என்றார். அதன்படியே மறு நாள் சென்றோம். கூட்டம் வேறு இருந்தது. ஜோதிடர் என் சினேகிதியிடம் ‘ உங்கள் பெண்ணுக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும். இதுபோல சில ஜாதகங்களை நம்பி கல்யாணத்தில் இறங்க வேண்டாம். பொருத்தம் இருப்பது மாதிரி தோன்றும் அதை நம்பி நீங்கள் திருமணம் செய்தால் பையன் உங்கள் பெண்ணை விட்டு விட்டு ஓடிப்போய் விடுவார். “ என்று ஒரேயடியாக குண்டைப் போட்டார். என் மகனின் ஜாதகத்தையும் முதன் முதலாக காண்பித்தேன். என் மகனின் ஜாதகத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லையென்றும் ஆனால் எப்படி முயன்றாலும் மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்றார். எனக்கு இதில் எல்லாம் பழக்கமோ, நம்பிக்கையோ இல்லையென்பதால் என் மனதில் எந்த பாதிப்புமில்லை. ஆனால் வீட்டுக்குச் சென்றதிலிருந்து இரவு முழுவதும் என் சினேகிதியின் விழிகளிலிருந்து கண்ணீர் மழைதான் பொழிந்து கொண்டிருந்தது. நான் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மனம் ஆறவில்லை அவருக்கு! 

‘ கவலைப்படாதே, நாம் வேறு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடுவோம்’ என்று சமாதானம் செய்தேன்.

[ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ, என் மகனுக்கு ஆறு மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து என் சினேகிதியின் பெண்ணுக்குத் திருமணம் நடந்து அடுத்த‌ இரண்டு வருடங்களில் ஒரு அழகான ஆண் குழந்தைக்கும் தாயானார்! ]

மறுபடியும் வேறு ஒரு சினேகிதியின் பரிந்துரை பேரில் ஊருக்கு வெளியே ஒரு ஜோதிடரைப்பார்க்கச் என்றோம். சிவப்பழமாக வயதானவராக அமர்ந்திருந்தார் அவர். பக்கத்தில் நிறைய ஜோதிட புத்தகங்கள், நோட்டுக்கள், கடவுள் சிலைகள்! அவர் எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்கச் சென்றபோதுதான் கவனித்தேன், அவரின் இடப்பக்கம் வெளிநாட்டு மது வகைகள் பல தினுசில் இருந்ததை! உடனேயே சினேகிதியிடம் விபரம்கூட சொல்லாமல் எழுந்து வந்து விட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஒரு பக்கம் தாங்க முடியாத கோபம், மறு பக்கமோ சிரிப்பு வேறு!

எந்த விஷயத்திலுமே நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் மனமும் அறிவும் சார்ந்த விஷயங்கள். ஆனால் என்னவென்றே தெரியாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவது மிகவும் முட்டாள்தனமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஜாதகங்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள், இண்டர்னெட், இவைகள் எல்லாம் உதவிகள் செய்தன. எப்படி ஆத்திக வாதங்களுக்கும் நாத்திக வாதங்களுக்கும் இன்று வரை ஒரு முடிவில்லையோ, அதுபோலத்தான் இதுவும். ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதை உறுதி செய்ய நிறைய வாதங்கள் உள்ளன. அதே சமயம் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர் வாதங்களும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன. அதனால் அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ளாமல் அதைப்பற்றிய விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சிகளைச் செய்தேன்.

20 வருடங்களுக்கு முன்னால்வரை இந்த பழக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமே அதிகமாக இருந்தது. இப்போதோ ஜாதகப்பொருத்தம் பார்க்காத ஜாதிகளே இல்லை. முதலில் ஜாதகப்பொருத்தம் பார்த்து, பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே, பெண்னையோ, மாப்பிள்ளையையோ பார்ப்பதற்கும் மற்ற விஷயங்களையும் பற்றிப் பேசவும் இரு தரப்பிலும் சம்மதிக்கின்றனர். அதுவும் என் விஷயத்தில் பெண் வீட்டை அழைத்துப் பேச முற்படும்போதே, ‘ மாப்பிள்ளை வீடான நீங்கள்தான் முதலில் ஜாதகம் பார்க்க வேண்டும், அதன் பின் தான் நாங்கள் பார்ப்போம். அதனால் பார்த்ததும் திரும்பக் கூப்பிடுங்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

பொதுவாக திருக்கணித முறைப்படியும் பாம்பு பஞ்சாங்க [வாக்கியப்பஞ்சாங்க] முறைப்படியும்தான் ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. இதில் திருக்கணித முறையை ஒட்டித்தான் அனைத்து கம்யூட்டர் ஸாப்ட்வேர்களிலும் ஜாதகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறைப்படி தயாரிக்கப்படும் ஜாதகங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று சரியாகவே இருக்கும். வைதீகர்களும் பண்டிதர்களும் பின்பற்றுவது வாக்கியப்பஞ்சாங்கத்தை மட்டுமே. இதில் ஒருவரின் கணிப்புபோல மற்றவருடைய கணிப்பு இருப்பதில்லை. இவர்கள் திருக்கணித முறையை ஒத்துக்கொள்ளுவதில்லை. ஒருவரின் ஜாதகம் இந்த இரு முறைகளிலும் வேறுபடும்.

மற்ற மதங்களிலும் வெளி நாடுகளில் சிலவற்றிலும் ஜாதகம் பார்ப்பதைக் கேள்வியுற்றபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டில் வேலை செய்யும் கிறிஸ்தவப்பெண்[தெலுங்கு], அவர்கள் சமூகத்தில் ஜாதகம் பார்க்காமல் யாருமே திருமணம் செய்வதில்லை என்றார்.

இப்படி ஜோதிட முறைகளில் பல வகைகள் இருக்கும்போது, ஜோதிடர்களின் பாண்டித்யங்களில் பல வேறுபாடுகள் இருக்கும்போது, பாண்டித்யமே இல்லாத, காசை மட்டுமே பிரதானமாக எண்ணும் சாதாரண ஜோதிடர்களின் கணிப்புகள் என்ற விபரீதங்களுக்கிடையே, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையும் ஒரு ஆணுடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி முடிவெடுப்பது? இப்படி எடுக்கும் முடிவு சரியானதுதானா என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாம்பு பஞ்சாங்கத்தில் பொருத்தம் அவ்வளவாகச் சரியில்லையென்று கண்டு பிடிக்கும் ஒரு சாதாரண ஜோதிடர் தனக்கு சாதகமாக திருக்கணித முறைப்படி பொருத்தம் பார்த்து 8 அல்லது 9 பொருத்தம் இருப்பதாக சொல்வதை எதுவுமறியாத மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு தற்போது பல ஜோதிடர்கள் இப்படித்தான் வியாபாரத்திற்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் அதுபோல ஒரு அனுபவம் அதற்குப்பிறகு ஏற்பட்டது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் திருச்சி தகவல் மையத்திலிருந்து அதன் நிறுவனர் என்னை அழைத்து, தர்மபுரியில் ஒரு பெண் உள்ளது என்றும் எட்டு பொருத்தங்கள் இருப்பதாயும் பெண் வீட்டில் பெண் பார்க்க வரச்சொல்லுவதாயும் சொன்னார். போகும் வழியில் அவர் பெண்ணின் ஜாதகத்தையும் என் மகனின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்த விபரங்களையும் என்னிடம் கொடுத்துப்பார்க்கச் சொன்னார். அவரே வாக்கியப் பஞ்சாங்க முறையில் கணித்த ஜாதகம் முதல் பக்கத்தில் இருந்தது. அடுத்தது பெண்ணின் ஜாதகம். மூன்றாவது பக்கத்தில் என் மகனின் ஜாதகம் திருக்கணித முறையில் எடுக்கப்பட்டு அந்தப்பெண்ணின் ஜாதகமும் இணைக்கப்பட்டு 8 பொருத்தங்கள் உள்ளதாக விபரங்கள் எழுதப்பட்டு இருந்தன. நான் அப்போது ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் என் கைப்பையில் வைத்துக்கொண்டேன். பெண் பார்த்து விட்டுத் திரும்பும்போதும், அவரைக் காரிலிருந்து அவர் இருப்பிடத்திற்கு அருகில் இறக்கி விட்டபோது, அவரிடம் அவைகளைக் காண்பித்து, ‘ இதென்ன முதலில் என் மகனுக்கு வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி ஜாதகம் தயாரித்துக் கொடுத்தீர்கள். இப்போது என்னவென்றால் திருக்கணித முறையில் வேறு ஒரு ஜாதகம் தயாரித்துப் பொருத்தம் பார்த்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் அவர் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்.

‘ இல்லைம்மா. அது அவ்வளவா பொருந்தவில்லை. அதனால்தான் இப்படி..” என்றார்.

‘அப்படியானால் வசதிக்குத்தகுந்தப்படி ஜாதகத்தை மாற்றிக்கொள்வீர்களா? இது இருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், எப்படி உங்கள் வசதிக்குத் தகுந்தபடி மாற்றலாம்?’ என்று கேட்டதும் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி எத்தனை பேர் வெறும் பணத்திற்குச் செய்கிறார்களோ? எத்தனை பேர் விபரம் தெரியாமல் ஏமாறுவார்கள்! என் மகனுக்கு அவ்வளவாகப் பிடித்தம் இல்லாததால் இந்தத் திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் பெண்ணின் அம்மாவைக்கூப்பிட்டு விபரம் சொல்லி எதிர்காலத்தில் கவனமாக இருப்பதுடன் வேறு ஒரு நல்ல ஜோதிடரைப்பார்த்து விபரங்கள் தெரிந்து கொள்ளச் சொன்னேன்.

இத்தனை அனுபவங்களுக்குப்பிறகு, அதிர்ச்சிகளுக்குப்பிறகு, ஒரு தரமான ஜோதிடரை விசாரிக்க முயன்றதில் கிடைத்தவர் ஒரு இஸ்லாமிய ஜோதிடர். ஐந்து தலைமுறைகளாய் ஜோதிடம் பார்த்துச் சொல்லும் குடும்பமென்றும், மரியாதை, தொழிலில் அக்கறை எல்லாம் நிரம்பியவர், செல்வந்தர்கள் என்றாலும் ஏழைகள் என்றாலும் ஒரே மாதிரிதான் நடத்துவார் என்றெல்லாம் கேள்விப்பட்டதும் என் சினேகிதியுடன் அவரைப்பார்க்கச் சென்றேன். அவரிடம் பேசிய போது, ‘ நான் திருக்கணித முறையைத்தான் பின்பற்றுகிறேன்.’ என்று சொல்லி என் மகனின் ஜாதகத்தையும் வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.. ‘ இது சரியான ஜாதகம். திருக்கணித முறைப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் மகனின் திருமணம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவாகி விடும். தூரத்து சொந்தத்தில் பெண் அமையும்.’ என்றார்.

வீட்டுக்கு வந்து யோசனை செய்ததுதான் மிச்சம். சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ எந்தப்பெண்ணும் இல்லை.

ஆனால் அவர் சொன்னதுபடியே தான் நடந்தது. என் கணவரின் அண்ணிக்கு நெருங்கிய உறவு- எப்போதோ விட்டு விலகிப்போன உறவில் பெண் அமைந்தது. அதுவும் அவர் சொன்ன மாதிரி ஆறாம் மாதம் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருமணம் முடிவானது. என் சினேகிதியின் பெண்ணுக்கும் அவர் சொன்ன மாதிரியே தான் திருமணம் நடைபெற்றது.

ஜாதகத்தில் நம்பிக்கையோ, பற்றோ இப்பொழுதும் இல்லையென்றாலும் இப்படி நடந்தவைகளெல்லாம் இன்று நினைத்தாலும் ஆச்சரியமான விஷயங்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!


  

Wednesday, 4 May 2022

ஜாதகமும் நானும்!- முதல் பகுதி

 இன்றைக்கு ' எங்கள் பிளாகில்' ஜாதகம், ஜோஸ்யம் பற்றிய கருத்துக்களைப்படித்த போது 12 வருடங்களுக்கு முன்னால் இதைப்பற்றி நான் பதிவிட்டது நினைவுக்கு வந்தது. என் அனுபவங்களைத்தான் அதில் விரிவாக எழுதியிருந்தேன். அதற்கு எனக்கு நிறைய பின்னூட்டங்களும் சில மறுப்புகளும் வந்த‌ன.அதையே இங்கே மீள் பதிவாக வெளியிடுகிறேன்.

ஜாதகமும் நானும்!

நான் புகுந்த வீடு என் சொந்த அத்தை வீடு தான் என்றாலும் பெரியாரின் கொள்கை வழி நடப்பவர்கள், ஜாதகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற நிலையில் என் வீட்டுக்கு முற்றிலும் வேறான சூழ்நிலைகளுள்ள இல்லத்தில் குடி புகுந்தேன். பெரிய அளவில் கூட்டுக்குடும்பமாக அப்போது எங்கள் கிராமத்தில் திகழ்ந்த வீடு என்பதால் இந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய பாசத்திலும் மகிழ்விலும் அதிலேயே ஒன்றிப்போக முடிந்ததுடன் ‘அன்பே உலகம், உழைப்பே கடவுள்’ என்ற நினைப்பில் வாழவும் வளரவும் முடிந்தது. என் மகனுக்குத் திருமண வயது வருகிற வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்கப்புறம் தான் ஜாதகப்பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமாயின. ஜாதகம், ஜோதிடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத குடும்பம் என்பதால் பிறந்ததும் என் மகனுக்கு ஜாதகமெல்லாம் எழுதவில்லை.

முதல் கட்டமாக சில முக்கிய திருமண மையங்களில் என் மகனின் விபரங்களைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து வடலூர் அருகில் ஒரு பெண் வீட்டிலிருந்து பேசினார்கள். தந்தை பொறியியல் வல்லுனராக இருந்து இறந்தவர். மற்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்கவே நானும் எங்கள் இல்லத்தைப் பற்றி, எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னேன். அதற்கு பெண்ணின் தாயார், ‘ எனக்கு இந்த ஜாதகப்பொருத்தம் மற்றதெல்லாம் தேவையேயில்லைங்க. நான் கடவுளிடம் பூ போட்டு பார்த்தேன். எல்லாம் சுபமாகவே வந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் கணவருடன் சென்னைக்கு என் அப்பா வீட்டுக்கு வாருங்கள். மகனையும் வரச்சொல்லுங்கள்’ என்றார். கிட்டத்தட்ட முடிவான விஷயம் என்பதால் என் மகனையும் துபாயிலிருந்து வரச்சொல்லி மூவருமாகப் போய் பெண் பார்த்தோம். ஆனால் பெண்ணின் முகத்திலும் பெண்ணின் அம்மா முகத்திலேயும் உற்சாகமேயில்லை. நாங்கள் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்ததும் பெண்ணின் அம்மா கூப்பிட்டு “என் சொந்தங்கள் அத்தனை பேரும் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்கிறார்கள். அவர்களை மீறிக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்று அழுதார். நான் “ பின் ஏன் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சொன்னீர்கள்? இதனால் எங்களுக்கு எத்தனை செலவு, அலைச்சல், மனக்கஷ்டம்? நாங்களும் எங்கள் சொந்தக்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று வருத்தப்பட, மறுபடியும் அவர்கள் அழ, அதற்குப்பிறகும்கூட நான் ஜாதகத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.

அதற்குப்பின் என் சினேகிதி ஒருவருடன் திருச்சியிலுள்ள ஒரு திருமண மையம் சென்றேன். அங்கிருந்த விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முதியவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.

‘ அம்மா, நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய மகனின் தகுதிகள் அனைத்தும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறி, இங்கு வருபவர்கள் ஜாதகம் இல்லையென்றதும் வேண்டாமென்று போய் விடுகிறார்கள். எதனால் நீங்கள் ஜாதகம் வைக்கவில்லை?’ என்று கேட்டார். நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி சொன்னதும் அவர் ‘ அம்மா, உலகம் முழுவதும் இப்போது ஜாதகத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆடையில்லா உலகத்தில் ஆடையணிந்தவன் தான் பைத்தியக்காரன். உலகத்தோடு அதன் போக்கில் நிறைய சமயங்களில் நாமும் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வரும்போது ஜாதகம் எடுத்து வாருங்கள்” என்றார். எனக்கு திருவள்ளுவரின் ‘ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்’ குறள் தான் ஞாபகம் வந்தது.

என் சினேகிதி தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் ஜாதகம் கணித்து எடுத்து வந்து தந்தார். இடையே திருச்சியில் வேறொரு திருமண மையத்தில்[ சூர்யா மையம் என்று வைத்துக்கொள்வோம்] அதன் நிறுவனர் ‘ நான் முதலில் வரனின் ஜாதகத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அதன் பிறகுதான் பெண்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்றார். அவர் அதுபோல பெண்கள் வீட்டுக்கும் பையன்களின் வீட்டுக்கும் ஜாதகங்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் அந்த ஜாதகத்தையும் கையில் எடுத்து வந்தேன். இடையே என் உறவினர் அவருடைய நண்பரிடம் [ஜாதகம் கணிப்பதில் சூரப்புலி என்று பெயர் வாங்கியவர் ] ஜாதகம் எழுதி வாங்கி வந்தார். ஆக மூன்றாவது ஜாதகமும் வந்து சேர்ந்தது. இடையே எனக்கு பல வருடங்களாக பழக்கமான பெரியவர் ஒருவர்- அமெரிக்காவில் இருப்பவர்- என் வேண்டுகோளுக்காக அவரும் ஜாதகம் கணித்து அனுப்பியிருந்தார். 

இடையே ஒரு நாள் மயிலாடுதுறையில் இருக்கும் ஒரு தகவல் மையத்திலிருந்து ஒரு பெண்ணைப்பற்றிய தகவல்களை எடுத்து வந்திருந்தேன். அதன் நிறுவனர் தெரிந்தவர்தான் என்றாலும் நான் எடுத்து வந்தபோது அவர் இல்லை. தகவல்களை ஆராய்ந்தபோது, பெண்ணின் வீட்டில் ஏழு பேர் கூடப்பிறந்தவர்கள் என்றும் பெண் முதுகலைப்பட்டம் பெற்றவர், அழகானவர், நல்ல குடும்பம் என்றும், ஆனால் வசதியாக இருந்து நொடித்துப்போன குடும்பம் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண் வசித்த ஊரிலிருந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள், ‘ பெரிய குடும்பம், வசதியில்லை, வேண்டாம்’ என்று கூற, நான் ‘ நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் பெண்னை பார்த்து விட்டு வந்து அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். பெண்ணின் தகப்பனாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் என் மகனின் தகவல்களை அனுப்பச் சொன்னார். அதன்படியே அனுப்பி விட்டு உட்கார்ந்தால், திருமண தகவல் மைய நிறுவனர் என்னை அழைத்து ‘ அந்தப் பெண் வேண்டாம். நம் குடும்பத்திற்கு சரியாக வராது’ என்றார். அப்போதும் நான் மறுத்து, ‘ முதலில் நான் போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம்’ என்றதற்கு அவர் ஒரேயடியாக மறுத்துப்பேசினார். ஃபோனை வைத்ததும் ஒரே யோசனை மேல் யோசனை! அப்போதுதான் திடீரென்று அந்த எண்ணம் வந்தது! அருகில் அமர்ந்திருந்த என் சினேகிதியிடம் சொன்னேன், ‘ எல்லா ஜாதகங்களையும் எடுத்துப்பார்ப்போம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராயலாம்’ என்று!! நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?

தன் நண்பரிடம் ஜாதகம் என் மகனுக்கு எழுதி வாங்கி வந்த என் உறவினரிடம் சென்று அனைத்து ஜாதகங்களையும் தந்து, “ எது சரியானது, ஏன் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன என்று உங்கள் நண்பரிடம் கேட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அவர் வந்து சொன்ன பதில் எனக்கு இன்னுமே தலை சுற்ற வைத்தது!

‘என்னுடைய நண்பர் தூக்கக்கலக்கத்தில் இந்த ஜாதகத்தில் சில தவறுகள் செய்து விட்டாராம். இப்போது சரியாக எழுதிக் கொடுத்திருக்கிறார். உன் அமெரிக்க நண்பர் எழுதிக்கொடுத்ததுதான் சரியானதாம்!’

எனக்கு எப்படி இருந்திருக்கும்? அவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த பெண் வீட்டுக்கு இவர் எழுதிக்கொடுத்த ஜாதகத்தைத்தான் அனுப்பியிருந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி அந்தப் பெண் அமைய வேண்டாம் என்றிருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அந்தப் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து ஃபோன்!

‘ அம்மா, எங்கள் பக்கத்தில் என் பெண்ணின் ஜாதகத்துடன் உங்கள் பையனின் ஜாதகம் மிக நன்றாகப்பொருந்தியிருக்கிறது, எப்போது பெண் பார்க்க வருகிறீர்கள்?’

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

மறுபடியும் தொடரும்.. .. .. ..


Saturday, 2 April 2022

போரின் மறு பக்கம்!!!

இன்றைக்கு பல கோடி மக்கள் வெளியேற்றமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நிகழ்ந்த நிலையில் இன்னும் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. எனக்கு 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக் குவைத் நாட்டை ஆக்ரமிப்பு செய்ததும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் அமெரிக்கத்தலையீடும் சதாம் ஹுஸைன் மறைவும் அடுக்கடுக்காக நினைவில் எழுந்தன. 


குவைத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது ஏராளமான மக்கள் செளதி அரேபியாவிற்கு புலம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் நிறைய வெளியே வந்தன. அதுவரை நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் பற்றிய ஆடியோ, வீடியோ எல்லாம் அரேபிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தன! அதையும் மீறி அந்த வீடியோக்கள் எங்கள் கைகளில் கிடைத்தன. அவற்றைப்பார்த்த போது மூன்றாம் உலகப்போரின் கணிப்புகள், அதைத்தொடர்ந்த போர்கள் என்று பார்த்தபோது மிக பயங்கரமாக இருந்தது. 



சிறிது நாட்களில் அனைத்து அரபு நாடுகளும் தாக்கப்படலாம் என்ற வதந்தியும் அதன் பின்னாலேயே . ஆந்த்ரா பவுடர் தூவப்படலாம் என்ற ஹேஷ்யங்களும் எழுந்தன. மாஸ்க் விற்பனை அதிகரித்தது. துபாய் விமான நிலையங்கள் எல்லாமே மூடப்படப்போகின்றன என்ற தகவல்கள் வந்ததும் எங்கள் குடும்பமும் உறவுகளும் நட்பும் பெண்கள் குழந்தைகள் மட்டும் வெளியேறி இந்தியா வந்து சேர ஆண்கள் மட்டும் பின்னாலேயே வருவதாக சொன்னார்கள். அமெரிக்க போர்க்கப்பல்கள் அமீரக பாதுகாப்பிற்கு வந்து கடலில் நின்றன. கடைசியில் அரபு நாடுகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் குவைத் ஈராக் போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு தமிழரை அதற்கப்புறம் நான்கு ஆண்டுகள் கழித்து தாய்லாந்தில் சந்தித்தோம்.

நாங்கள் தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காக் நகருக்கு 1994ல் சுற்றுப்பயணம் சென்றிருதோம். அங்கிருந்த சில தமிழக உணவங்களால் நம் சாப்பாட்டிற்கு எந்தக் குறையுமில்லாமல் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.. அப்போது தெரிந்த நண்பர் ஒருவர் அவருக்குத்தெரிந்த ஒரு தமிழ் உணவகத்தில் சாப்பிட அழைத்தார். அழைப்பை ஏற்று அவருடன் அந்த உணவகம் சென்றோம். அதன் நிறுவனரும் அவரின் நண்பரும் உள்ளே அழைத்துச்சென்று உணவகத்தை சுற்றிக்காண்பித்தனர் நாங்களும் உணவகத்தொழில் செய்கிறோமென்பதால். அதற்கப்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அந்த நண்பருக்கு சில நாட்களில் திருமணம் என்பதை அறிந்தோம். வாழ்த்து சொல்லி விட்டு பெண் பற்றி விசாரித்த போது மணப்பெண் தாய்லாந்து நாட்டுப் பெண் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். காதல் திருமணமில்லை என்று மறுத்த அவர் ' இந்த நாட்டு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டால் நமக்கு வரதட்சிணை, சொத்து எல்லாம் தந்து பெண்ணும் தருவது வழக்கம். அதனால் தான் இந்த முடிவு' என்றார்.

தமிழ்ப்பெண்ணை மணக்க விரும்பவில்லையா என்று கேட்டோம்.

அவர் கசப்புடன் சிரித்தார். அப்புறம் அவர் சொன்ன கதை.....

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இரவு திடீரென்று இராக் குவைத்தை ஆக்ரமித்த போது, இந்த நண்பர் குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரமாயிரம் தமிழர்களில் ஒருவர்! நகரமே தீப்பிடித்து எரிகிறது. நிறைய பேர் பிணைக்கைதிகளாய் பிடித்து இழுத்துச்செல்லப்படுகிறார்கள். 


பல அரேபியர்கள் அவசரமாக தப்பித்துச் செல்வதில் முனைப்புடன் இருக்கிறார்கள்! இந்தியர்களும் மற்ற வெளிநாட்டினரும் தங்கள் உடைமைகளையும் குருவி போல சிறுகச் சிறுக சேர்த்த பணத்தையும் பொருள்களையும் நகைகளையும் பாஸ் புக்குகளையும் அப்படியே விட்டு விட்டு தப்பித்து ஓடுகிறார்கள். பாதி பேர் செளதி அரேபியா எல்லயைக்கடந்து அந்த நாட்டுக்குள் நுழைகிறார்கள். மீதி பேர் இராக்கின் பஸ்ரா வழியாகவோ அல்லது பாலைவனம் தாண்டி வேறு வழியாகவோ அம்மான் செல்ல



முனைகிறார்கள்.  அவரவர் கார்களை எடுத்துக்கொண்டு வீடுகளில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு பறந்து செல்கிறார்கள்! இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா விமானங்களை அம்மானின் நிறுத்தி வைத்திருக்கிறது. அதற்கு அம்மானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்று ஒவ்வொருத்தரும் தன் பாஸ்போர்ட்டையோ அல்லது ஆதாரங்களையோ காண்பித்து அதன் பின்னர் தான் விமானத்தில் ஏற வேண்டும். தூதரகம் முன்னால் துணிகளிலும் கிழிந்த பாய்களிலும் துணியாலான கொட்டகைகளிலும் ஏராளமானவர்கள் நாட்கணக்கில் தங்கள் பெயர் எப்போது அழைக்கப்படும் என்று காத்துக்கிடந்தார்கள். 



நம் நண்பரும் தன் முதலாளியை சந்திக்க ஓடுகிறார். அப்போது தான் அவரும் வீட்டை அப்படியே போட்டு விட்டு வெளியேறி விட்டது தெரிகிறது. பாஸ்போர்ட்டுக்கும் முதலாளியிடம் தான் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கும்  என்ன செய்வது? தலையில் அடித்துக்கொண்டு அழுதவாறே குவைத்திலுள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றாராம். அங்கே ‘ நீ இந்தியன் என்று எப்படி நம்புவது?’ என்று கேட்டதும் ‘ நான் இந்தியனென்று எப்படி நிரூபிப்பேன்? ‘ஜன கண மன’ பாடினால் நம்புவீர்களா’ என்று அழுதிருக்கிறார். இந்திய தூதரகம் உதவி செய்ய கடுமையாக மறுத்து விட்டது. அங்கிருந்து வெளியேறி எல்லைக்கு கார்களில் பறந்து சென்று கொண்டிருக்கும் முகமறியாத நபர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு காரில் இடம் பிடித்து இரவில் குளிரில் பாலைவனத்தில் படுத்து எப்படியோ சமாளித்து அம்மானில் அவரும் விமானம் ஏறி விட்டார். டில்லி வந்ததும் அங்கிருந்த அதிகாரிளால் தமிழ்நாட்டுக்குச் செல்லும் ரயிலில் ஏற்றி விடப்பட்டாராம். ஒவ்வொரு மாநிலத்தை புகைவண்டி கடக்கும்போது அங்கங்கே மக்கள் பழங்கள், ரொட்டிகள், சாப்பாட்டு பொட்டலங்கள் என்று வழி நெடுக கொடுத்திருக்கிறார்கள்.

“ கிளைமாக்ஸே அப்புறம் தாங்க! நம் தாய்த்திருநாடு கண்ணில் பட்டதும் அப்படியே கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ரயில் நின்றதும் பார்த்தால் ஒருத்தர் கூட கண்ணில் படலைங்க. எங்களுக்காக தமிழக அரசு எந்த ஏற்பாடும் செய்யலைங்க. அநாதை போல வெளியில் வந்தோம். காசில்லாமல் ஆட்டோ ஏறி ஒரு நண்பன் வீட்டுக்கு சென்று அவனிடம் காசு வாங்கிக்கொண்டு என் ஊருக்கு சென்றேன். திரும்பவும் பாஸ்போர்ட் எடுத்தேன். அதற்காக 1500 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். திரும்பவும் லஞ்சம் வாங்கியவரை தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு இழுத்து கொடுத்த 1500ஐ திரும்பப்பெற்றேன். மனசில் அத்தனை ரணமும் வெறியும் ஆத்திரமும் இருந்தன. தாய்லாந்து வந்தேன். வேலையில் சேர்ந்தேன். இதோ ஒரு தாய்லாந்து பெண்ணை மணக்கப்போகிறேன்! என் நாடு எனக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை. ஆதரவளிக்கவில்லை. எனக்கு பிழைப்பும் கொடுத்து சந்தோஷத்தையும் கொடுக்கும் இந்த நாடு எந்த வகையில் தாழ்ந்தது?”

அவர் பேச்சிலிருந்த வேதனையும் கனமும் எங்கள் மனதையும் கனமாக்கியது. எந்த பதில் சொன்னாலும் அவர் மனசின் ரணம் குறையாது என்பதை உணர்ந்தோம்! போரின் இன்னொரு பக்கம் இது தான்! இப்படி எத்தனை பேரின் வாழ்க்கை தடம் புரள்கிறது! வன்முறையும் ஆக்கிரமிப்புமாக போர் புரியும் நாடுகள் இதற்கு பதில் சொல்லுமா?


Tuesday, 1 March 2022

MUSEUM OF THE FUTURE!!!!



 துபாயின் உலகப்புகழ் பெற்ற ஷேக் சாயெத் சாலையில் எமிரேட்ஸ் டவர் அருகில் துபாயின் புதிய அடையாளமாக எதிர்கால அருங்காட்சியகத்தின் கோலாகல திறப்பு விழா22-02-22 அன்று நடைபெற்றது. இதனை அமீரக துணை அதிபர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.


 இந்த அருங்காட்சியகம் 235 அடி உயரம் கொண்டது. கோள வடிவில் இதன் அமைப்பு மிகவும் வித்தியாசமானது. உலகின் மிக அழகான 14 அருங்காட்சியகங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் அரபிக் வட்டெழுத்துக்களுடன் கலை நேர்த்தியுடன் இது உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஏழு தளங்கள் உள்ளன. இதில் ஐந்து தளங்களில் பார்வையாளர்களை பிரமிப்பூட்டும் வகையில் பல்வேறு காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதை முழுதும் பார்வையிட 2 முதல் 3 மணி நேரம் பிடிக்கிறது. ஒரு தளம் முழுவதும் குழந்தைகளுக்கானது.அருங்காட்சியகத்தில் 2071 ஆண்டை நோக்கிய விண்வெளி தொழ்ல் நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல், சுகாதாரம், வாழ்வியல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளன.  உள்ளே நுழைந்தால் சினிமா செட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உதாரணமாக, ' நியூ மூன்' என்ற தலைப்பில் உள்ள காட்சியமைப்பு நிலவை எப்படி முழு கிரகத்துக்கும் புதுப்பிக்கத்தக்க  ஆற்றலாக மாற்ற முடியும் என்பதை காட்டுகிறது. அதே போல பூமியிலிருந்து 600 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதனை தத்ரூபமாக அங்குள்ள ஒரு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை அரபிக் காலியோகிராபி வடிவத்தில் இதன் மீது பொறிக்க்ப்ப்பட்டுள்ளது. அதன் பொருள்:

" நாம் நூறாண்டுகள் வாழ முடியாமல் போகலாம். ஆனால் நாம்  க‌ற்பனைத்திறனுடன் உண்டாக்கியிருக்கும் ஆக்கங்கள் நாம் மறைந்த பின்னும் நமக்குப்பின்னால் உயிர்ப்புடனிருக்கும். எந்த விலைமதிப்பற்ற கண்டுபிடிப்பும் அதன் செயலாக்கமும் யார் அதை கற்பனை செய்து, வடிவமைத்து அதை செயல்படுத்துகிறார்களோ, அவர்களிடம் தான் இந்த உலகின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது."


இந்தக்கட்டிடத்தின் பரப்பளவு 30,000 சதுர மீட்டர். அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆல் ஆன பரப்பளவு 17,000. சதுர மீட்டர். 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு லெட் லைட்டிங் இந்தக் அக்ட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது. 4000 மெகா வாட்ஸ் சோலார் பவர் இந்த மியூசியத்திற்காக உபயோகிக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள தோட்டத்தில் 80 வகை செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தூண்களே எங்குமில்லாமல் உருவாக்கப்பட்ட சாதனை இது. 


இதன் முன்னால் 3 விரல்களைக் காண்பிக்கும் ஒரு கை முன்னிலைப்படுத்துள்ளது. " WIN, LOVE AND VICTORY! " என்பதைக்குறிக்கிறது!!


இதற்காக வானில் பறந்து சென்று பல்வேறு இடங்களில் இறங்கி பலருக்கும் அழைப்பிதழ்களை வழங்கினார் ஜெட் மனிதர் ஒருவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் பெயர் ரிச்சார்ட் பிரவுனிங். உடலில் ஜெட் பாக் எனப்படும் சூட் அணிந்து 2019ம் வருடம் நவம்பர் மாதம் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து ஏற்கனவே இவர் கின்னஸ் சாதனையை ஏற்படுத்துயுள்ளார்.


 எதிர்காலம் இப்படித்தானிருக்கும் என்பதற்கு அடையாளமாக இவர் வானில் பறந்து அழைப்பிதழ் வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.