Wednesday 4 May 2022

ஜாதகமும் நானும்!- முதல் பகுதி

 இன்றைக்கு ' எங்கள் பிளாகில்' ஜாதகம், ஜோஸ்யம் பற்றிய கருத்துக்களைப்படித்த போது 12 வருடங்களுக்கு முன்னால் இதைப்பற்றி நான் பதிவிட்டது நினைவுக்கு வந்தது. என் அனுபவங்களைத்தான் அதில் விரிவாக எழுதியிருந்தேன். அதற்கு எனக்கு நிறைய பின்னூட்டங்களும் சில மறுப்புகளும் வந்த‌ன.அதையே இங்கே மீள் பதிவாக வெளியிடுகிறேன்.

ஜாதகமும் நானும்!

நான் புகுந்த வீடு என் சொந்த அத்தை வீடு தான் என்றாலும் பெரியாரின் கொள்கை வழி நடப்பவர்கள், ஜாதகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற நிலையில் என் வீட்டுக்கு முற்றிலும் வேறான சூழ்நிலைகளுள்ள இல்லத்தில் குடி புகுந்தேன். பெரிய அளவில் கூட்டுக்குடும்பமாக அப்போது எங்கள் கிராமத்தில் திகழ்ந்த வீடு என்பதால் இந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய பாசத்திலும் மகிழ்விலும் அதிலேயே ஒன்றிப்போக முடிந்ததுடன் ‘அன்பே உலகம், உழைப்பே கடவுள்’ என்ற நினைப்பில் வாழவும் வளரவும் முடிந்தது. என் மகனுக்குத் திருமண வயது வருகிற வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்கப்புறம் தான் ஜாதகப்பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமாயின. ஜாதகம், ஜோதிடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத குடும்பம் என்பதால் பிறந்ததும் என் மகனுக்கு ஜாதகமெல்லாம் எழுதவில்லை.

முதல் கட்டமாக சில முக்கிய திருமண மையங்களில் என் மகனின் விபரங்களைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து வடலூர் அருகில் ஒரு பெண் வீட்டிலிருந்து பேசினார்கள். தந்தை பொறியியல் வல்லுனராக இருந்து இறந்தவர். மற்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்கவே நானும் எங்கள் இல்லத்தைப் பற்றி, எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னேன். அதற்கு பெண்ணின் தாயார், ‘ எனக்கு இந்த ஜாதகப்பொருத்தம் மற்றதெல்லாம் தேவையேயில்லைங்க. நான் கடவுளிடம் பூ போட்டு பார்த்தேன். எல்லாம் சுபமாகவே வந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் கணவருடன் சென்னைக்கு என் அப்பா வீட்டுக்கு வாருங்கள். மகனையும் வரச்சொல்லுங்கள்’ என்றார். கிட்டத்தட்ட முடிவான விஷயம் என்பதால் என் மகனையும் துபாயிலிருந்து வரச்சொல்லி மூவருமாகப் போய் பெண் பார்த்தோம். ஆனால் பெண்ணின் முகத்திலும் பெண்ணின் அம்மா முகத்திலேயும் உற்சாகமேயில்லை. நாங்கள் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்ததும் பெண்ணின் அம்மா கூப்பிட்டு “என் சொந்தங்கள் அத்தனை பேரும் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்கிறார்கள். அவர்களை மீறிக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்று அழுதார். நான் “ பின் ஏன் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சொன்னீர்கள்? இதனால் எங்களுக்கு எத்தனை செலவு, அலைச்சல், மனக்கஷ்டம்? நாங்களும் எங்கள் சொந்தக்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று வருத்தப்பட, மறுபடியும் அவர்கள் அழ, அதற்குப்பிறகும்கூட நான் ஜாதகத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.

அதற்குப்பின் என் சினேகிதி ஒருவருடன் திருச்சியிலுள்ள ஒரு திருமண மையம் சென்றேன். அங்கிருந்த விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முதியவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.

‘ அம்மா, நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய மகனின் தகுதிகள் அனைத்தும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறி, இங்கு வருபவர்கள் ஜாதகம் இல்லையென்றதும் வேண்டாமென்று போய் விடுகிறார்கள். எதனால் நீங்கள் ஜாதகம் வைக்கவில்லை?’ என்று கேட்டார். நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி சொன்னதும் அவர் ‘ அம்மா, உலகம் முழுவதும் இப்போது ஜாதகத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆடையில்லா உலகத்தில் ஆடையணிந்தவன் தான் பைத்தியக்காரன். உலகத்தோடு அதன் போக்கில் நிறைய சமயங்களில் நாமும் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வரும்போது ஜாதகம் எடுத்து வாருங்கள்” என்றார். எனக்கு திருவள்ளுவரின் ‘ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்’ குறள் தான் ஞாபகம் வந்தது.

என் சினேகிதி தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் ஜாதகம் கணித்து எடுத்து வந்து தந்தார். இடையே திருச்சியில் வேறொரு திருமண மையத்தில்[ சூர்யா மையம் என்று வைத்துக்கொள்வோம்] அதன் நிறுவனர் ‘ நான் முதலில் வரனின் ஜாதகத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அதன் பிறகுதான் பெண்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்றார். அவர் அதுபோல பெண்கள் வீட்டுக்கும் பையன்களின் வீட்டுக்கும் ஜாதகங்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் அந்த ஜாதகத்தையும் கையில் எடுத்து வந்தேன். இடையே என் உறவினர் அவருடைய நண்பரிடம் [ஜாதகம் கணிப்பதில் சூரப்புலி என்று பெயர் வாங்கியவர் ] ஜாதகம் எழுதி வாங்கி வந்தார். ஆக மூன்றாவது ஜாதகமும் வந்து சேர்ந்தது. இடையே எனக்கு பல வருடங்களாக பழக்கமான பெரியவர் ஒருவர்- அமெரிக்காவில் இருப்பவர்- என் வேண்டுகோளுக்காக அவரும் ஜாதகம் கணித்து அனுப்பியிருந்தார். 

இடையே ஒரு நாள் மயிலாடுதுறையில் இருக்கும் ஒரு தகவல் மையத்திலிருந்து ஒரு பெண்ணைப்பற்றிய தகவல்களை எடுத்து வந்திருந்தேன். அதன் நிறுவனர் தெரிந்தவர்தான் என்றாலும் நான் எடுத்து வந்தபோது அவர் இல்லை. தகவல்களை ஆராய்ந்தபோது, பெண்ணின் வீட்டில் ஏழு பேர் கூடப்பிறந்தவர்கள் என்றும் பெண் முதுகலைப்பட்டம் பெற்றவர், அழகானவர், நல்ல குடும்பம் என்றும், ஆனால் வசதியாக இருந்து நொடித்துப்போன குடும்பம் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண் வசித்த ஊரிலிருந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள், ‘ பெரிய குடும்பம், வசதியில்லை, வேண்டாம்’ என்று கூற, நான் ‘ நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் பெண்னை பார்த்து விட்டு வந்து அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். பெண்ணின் தகப்பனாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் என் மகனின் தகவல்களை அனுப்பச் சொன்னார். அதன்படியே அனுப்பி விட்டு உட்கார்ந்தால், திருமண தகவல் மைய நிறுவனர் என்னை அழைத்து ‘ அந்தப் பெண் வேண்டாம். நம் குடும்பத்திற்கு சரியாக வராது’ என்றார். அப்போதும் நான் மறுத்து, ‘ முதலில் நான் போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம்’ என்றதற்கு அவர் ஒரேயடியாக மறுத்துப்பேசினார். ஃபோனை வைத்ததும் ஒரே யோசனை மேல் யோசனை! அப்போதுதான் திடீரென்று அந்த எண்ணம் வந்தது! அருகில் அமர்ந்திருந்த என் சினேகிதியிடம் சொன்னேன், ‘ எல்லா ஜாதகங்களையும் எடுத்துப்பார்ப்போம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராயலாம்’ என்று!! நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?

தன் நண்பரிடம் ஜாதகம் என் மகனுக்கு எழுதி வாங்கி வந்த என் உறவினரிடம் சென்று அனைத்து ஜாதகங்களையும் தந்து, “ எது சரியானது, ஏன் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன என்று உங்கள் நண்பரிடம் கேட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அவர் வந்து சொன்ன பதில் எனக்கு இன்னுமே தலை சுற்ற வைத்தது!

‘என்னுடைய நண்பர் தூக்கக்கலக்கத்தில் இந்த ஜாதகத்தில் சில தவறுகள் செய்து விட்டாராம். இப்போது சரியாக எழுதிக் கொடுத்திருக்கிறார். உன் அமெரிக்க நண்பர் எழுதிக்கொடுத்ததுதான் சரியானதாம்!’

எனக்கு எப்படி இருந்திருக்கும்? அவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த பெண் வீட்டுக்கு இவர் எழுதிக்கொடுத்த ஜாதகத்தைத்தான் அனுப்பியிருந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி அந்தப் பெண் அமைய வேண்டாம் என்றிருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அந்தப் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து ஃபோன்!

‘ அம்மா, எங்கள் பக்கத்தில் என் பெண்ணின் ஜாதகத்துடன் உங்கள் பையனின் ஜாதகம் மிக நன்றாகப்பொருந்தியிருக்கிறது, எப்போது பெண் பார்க்க வருகிறீர்கள்?’

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

மறுபடியும் தொடரும்.. .. .. ..


14 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?//

ஹாஹாஹா என் கேஸ் போலவே!! மனோ அக்கா அதனால் என் தனிப்பட்டக் கருத்து இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொன்னதால் சிறிய வயதிலேயே எனக்கு இதை எல்லாம் அப்பாற்பட்டு நம்மை மீறிய சக்தி இருக்கும் போது இவை எல்லாம் எதற்கு என்று தோன்றியது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்களுக்கு தர்மசங்கடமான தருணங்கள் வந்திருக்கும் இல்லையாக்கா?

கீதா

நெல்லைத் தமிழன் said...

ஒரு complicated subjectஐத் தொட்டிருக்கீங்க. நம்பிக்கை நம்பிக்கையின்மை இரண்டும் இருந்தால் கஷ்டம்தான்.

மனப்பொருத்தம் இருந்தால் ஜாதகம்லாம் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க. ஜாதகம் பார்ப்பது என்பதே 100-150 ஆண்டுகளுக்குள்தான் பரவலாயிற்று

Thulasidharan V Thillaiakathu said...

ஜோசியமும் கணக்குதான். சரியான கணிப்பு தெரிய வேண்டும்.

ஜோசியம் பொருத்தம் எல்லாம் பார்த்தாலும் சிலருக்குச் சரியாக இருக்கிறது சிலருக்குச் சரியாக இருப்பதில்லை. எனவே இறைவன் மீது நம்பிக்கையுடன் செல்ல வேண்டியதுதான் நல்லது என்று தோன்றும்.

அன்றைய உங்களின் இக்கட்டான நிலை புரிந்து கொள்ள முடிகிறது அடுத்த பகுதிக்கு ஆவலுடன்

துளசிதரன்

கோமதி அரசு said...

ஜாதகம் பார்த்து திருமணம் செய்தவர்களை விட ஜாதக பொருத்தம் பார்க்காமல் மனபொருத்தம் பார்த்து திருமணம் முடித்தவர்கள் நன்றாக இருப்பவர்களை பார்த்து இருக்கிறேன். எங்கள் மாமியார் வீட்டில் தன் 5 மகன்களுக்கும் ஜாதகம் பார்க்கவில்லை.என் அம்மாவும் எங்கள் எல்லோருக்கும் ஜாதகம் இல்லை என்பார்கள் . கேட்பவர்களுக்கு நடசத்திரம் சொல்வார்கள் நட்சத்திர பொருத்தம் பார்த்து மணமகன் வீட்டார் திருமணம் செய்து கொண்டார்கள்.
இப்போது ஜாதகம் பார்ப்பது அதிகமாக இருக்கிறது. வீடு கட்ட, வெளிநாடு போக , வீட்டில் ஏதாவது சரியில்லை என்றால் ஜாதகம் பார்ப்பது அதிகமாகி விட்டது.


பிறந்த நேரம் சரியாக சொன்னால்தான் ஜாதகம் சரியாக கணிக்கமுடியும் என்பார்கள்.
அப்புறம் இறைவன் திருவுள்ளம் என்று ஒன்று இருக்கிறது , அதன் படித்தான் வாழ்க்கை துணை அமைவது.

இராய செல்லப்பா said...

அப்புறம் என்ன நடந்தது?

வெங்கட் நாகராஜ் said...

ஜாதக குழப்பங்கள்..... மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

ஆமாம் கீதா! என் மகனுக்கு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் முன் எனக்கு இதிலெல்லாம் ஏ,பி,சி,டி கூடத்தெரியாது. என் சூழ்நிலைகளால் தான் ஜாதகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தேட ஆரம்பித்தேன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

ஸ்ரீராம். said...

விரிவாக நிறைய பேசலாம் இந்த சப்ஜெக்டில்.   நீங்கள் சொல்வதுபோல நம் கொள்கைகள் மகன்/மகள் திருமண சமயத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துகொண்டுதான் செல்ல வேண்டி இருக்கிறது.  சில சமயங்களில் சில சங்கடமான பதில்களை எதிர்பார்த்தியிடம் சொல்லநேரும் சமயங்கள் ரொம்பவே சங்கடமானது.

ஸ்ரீராம். said...

நாம் ஜாதகம் பார்க்காவிட்டாலும் பெண் வீட்டிலோ, பையன் வீட்டிலோ பார்க்க நினைக்கிறார்கள் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.  என் மகனுக்கு இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்கு ஜாதகம் சுமார் என்று வந்தால் கூட, அல்லது பொருந்தவில்லை என்றே வந்தால் கூட பெண் வீட்டிலிருந்து பொருந்துகிறது என்று தகவல் வரும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.  ஆனாலும் நான் அவர்களோடு சம்பந்தம் பேச தொடர்கிறேன்.  ஏனோ இதுவரை அமையவில்லை.

ஸ்ரீராம். said...

நாம் நம் பையனோ, பெண்ணோ, பிறந்த நேரம் சரியாக, பிறந்த இடம், பிறந்த ஊர் ஆகியவற்றைச் சொன்னால் சூரியன் உதிக்கும் நேரம், நட்சத்திரம் பார்த்து கணிப்பார்கள். இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலேயே கணித்துக் கொள்ளலாம். நாம் சொல்லும் விவரங்கள் எந்த அளவு சரியாக, துல்லியமாக இருக்கிறதோ அதைப் பொறுத்து ஜாதகங்கள் சரியாகக் கணிப்பார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிலர் இன்னமும் நம்புகிறார்கள்... ஆனால் ஏமாற்றுபவர்கள் மீது குற்றமில்லை...

Geetha Sambasivam said...

ஜாதகம் பார்ப்பது என்பது அதிலும் திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பதே கடந்த நூறு வருஷங்களுக்குள் தான். அதற்கு முன்னர் வரை மனப்பொருத்தம்.உறவின் முறை திருமணம் என்று முடித்துவிடுவார்கள். எங்க வீட்டில் மாமனார்/மாமியாருக்குப் பொருத்தமே பார்க்கவில்லை என்பார்கள். அதே போல் எங்க மூத்த நாத்தனாருக்கும் அவர் கணவருக்கும். அத்தை மகன்/மாமா மகள் என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை. என் இரண்டாவது நாத்தனாருக்குப் பார்த்தார்கள். எங்களுக்கும் பார்த்தார்கள். ஜாதகம் சொல்வது பல சமயங்களில் சரியில்லாமல் போய்விடும். அபூர்வமாகவே சரியாக இருக்கும்.

மாதேவி said...

'நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது ' சிரிப்பதா ? அழுவதா? இது எல்லாம் ஒரு கணிப்புதான். மனப்பொருத்தம்தான் வேண்டும்.