Saturday 8 October 2022

பொன்னியின் செல்வன் - ஒரு விமர்சனம்!!!

 திரைப்படம் நடிகர் கமலஹாசனின் குரலில் ஒரு முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. கமலின் குரலில் வயோதிகம் தெரிவது ஒரு ஆச்சரியம். உணர்ச்சி பாவங்களோ, விறுவிறுப்போ, கம்பீரமோ அந்தக்குரலில் இல்லை.


ஆதித்த கரிகாலனின் கட்டளையின்படி வந்தியத்தேவனின் பயணம் தஞ்சை செல்ல ஆரம்பமாவதிலிருந்து படம் தொடங்குகிறது. “ பொன்னியின் செல்வன்” புதினத்தில் வந்தியத்தேவன் தன் குதிரையின் மீது அமர்ந்தவாறே வீராணம் ஏரிக்கரையில் நின்று இயற்கை அழகில் லயித்து ரசிப்பதில் கதை தொடங்கும். மணிரத்னமோ அழகிகளின் நடனத்துடனும் அதற்கேற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசையுடனும் பாலைவனம் போன்ற மண்ணின் பின்னணியில் தொடங்குகிறார். இதிலிருந்தே கதையை நினைத்துக்கொண்டு படத்தைப் பார்க்கக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் திரைப்படம் ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்கிறது. வழி நெடுக வந்தியத்தேவனின் பயணத்தில் விளைந்த சாகசங்களும் சண்டைகளும் சந்திப்புகளும் உணர்ச்சி பிரவாகங்களும் தான் உயிர்துடிப்பாய் ‘ பொன்னியின் செல்வன்’ புதினத்தில் பரிமளித்துக்கொண்டிருக்கும். அந்த உயிர் துடிப்பு படம் முழுவதும் இருந்ததா என்று கேட்டால் நிறைய காட்சிகளில் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. 

வந்தியத்தேவன் தஞ்சை செல்லும் வழியில் கடம்பூர் சென்று பின் அங்கிருந்து குடந்தை சென்று தற்செயலாக குந்தவையை ஜோதிடர் இல்லத்தில் சந்தித்து பின் தஞ்சை செல்லும் வழியில் நந்தினியை சந்தித்து, அதன் பின் தஞ்சையில் சுந்தர சோழரை சந்திப்பது, பின் குந்தவையை தனியே சந்திப்பது, பின் சிறையில் அடைக்கப்படுவது, குந்தவையும் வந்தியத்தேவனும் மறுபடியும் சந்திப்பது,  ஈழம் சென்று தன் தம்பி அருள்மொழி வர்மனை கூடவே அழைத்து வரும்படி பணிப்பது என்று கதை தொடரும். 


திரைப்படக்கதையோ புதினத்தின் காட்சிகளை கொஞ்சம் குறைத்து, கற்பனைகளை கூட்டி நகருகிறது. ஆனாலும் சுவாரஸ்யத்திற்கு பங்கமில்லாமல் ஆரம்பித்ததிலிருந்து வேகமாக கதை நகர்ந்து மிக அருமையான காட்சியமைப்பில் அடுத்த பகுதிக்கான ஒரு ‘ தொடரும்  ‘ போட்டிருக்கிறார்கள்.

நடிப்பு என்று பார்த்தால் ஆழ்வாக்கடியானாக நடிக்கும் ஜெயராமின் நடிப்பு அட்டகாசம்! வந்தியத்தேவனாக கார்த்தி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் மிகவும் நளினமாக தன் காதாபாத்திரத்தை செய்திருக்கிறார். அவரின் அழகு அதற்கு உதவி செய்கிறது. திரிஷா அந்த அளவு என்னை கவரவில்லை. அருள்மொழித்தேவனாக ஜெயம் ரவி! அவரின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தாலும் இந்த ராஜ கதாபாத்திரத்திற்கான கம்பீரமான குரல் அவருக்கில்லை! இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் ‘ ராஜ ராஜ ராஜ கம்பீரக்குரலை’ நினைத்து ஏக்கமாக இருக்கிறது! கடைசியில் விக்ரம்! அவரின் நடிப்பு பிரமாதம்! “ இந்த கள்ளும் போரும் ரத்தமும் அவளால்தான், அவளுக்காகத்தான்! “ என்று குமுறும்போது மிக அழகாக நடிக்கிறார்! அப்படியே இளம் வயது நந்தினியையும் இளம் வயது ஆதித்த கரிகாலனையும் நினைத்துப்பார்க்கையில் அந்தக் காட்சிகளின் இளமையும் அழகும் சுகமான பின்னணி இசையும் கலந்து கொடுத்த இனிமையில் நாம் லயித்துக்கொண்டேயிருக்கும்போது நம் தலையில் அடிப்பது போல ரஹ்மானின் இசையில் பாடலும் விக்ரம் ஆடுவதும் பின்னாலேயே வந்து அந்த இனிமையையே கலைத்து விடுகிறது! 

அப்புறம் பூங்குழலி! அவரின் நடிப்பு மிக அருமை! அபாரம்!


புதினத்தில் வானதி மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். அது போல் சுந்தர சோழரின் மனைவி வானவன்மாதேவி சரித்திரத்தில் இடம் பெற்றவர். இவர்களது கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது.  

போர்க்கள காட்சிகள் ஒரு பிரமிப்போ அல்லது வியூகங்களோ இல்லாமல் மிகச் சாதாரணமான காட்சிகளாகத்தான் நகர்கின்றன!

அப்புறம் பாடல்கள்! எந்த ஒரு பாட்டிலும் இனிமையில்லை! அதுவும் கடம்பூர் மாளிகையில் நடக்கும் ‘  ' தேவராளனின் ஆட்டம் '  எடுக்கப்பட்டிருக்கும் நடன அமைப்பும் பாடலும் எனக்கு ‘ வீரபாண்டி கோட்டையிலே’ பாடல் தான் நினைவுக்கு வந்தது. கருமையும் ரத்தமுமாய் வேஷம் பூசி ஆடியவர்களும் பயமுறுத்தினார்கள், பாடலும் பயமுறுத்தியது, ஒலித்த சப்தங்களும் பயமுறுத்தின.

கர்ணனின் ‘ கண்கள் எங்கே’ பாடலும் உத்தம புத்திரனின் ‘ முல்லை மலர் மேலே’ பாடலும் அப்படியே நினைவில் எழுந்தன! ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு நம்மை மயங்க வைத்த அந்த இனிமையான பாடல்கள் போல அல்லவா ‘ பொன்னியின் செல்வன்’ படத்தில் அமைந்திருக்க வேண்டும்? நவீன இசையமைப்பு எப்படி சரித்திர படங்க்களுக்கு பொருத்தமாக இருக்கும்? 


புதினத்தில் மிகவும் புகழ் பெற்ற காட்சியே வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் காட்சிகள் தான்! அதுவும் இருவரும் தனியே முதன்முதலாக சந்திக்கும் காட்சியில் கல்கியின் வர்ணனையின் அழகை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அத்தனை அற்புதமாக இருக்கும். பிறகும் குந்தவை வந்தியத்தேவனை சிறையில் சந்திக்கும்போது ‘ என் மனச்சிறையிலிருந்து உங்களுக்கு என்றுமே விடுதலை கிடையாது’ என்று சொல்லுவாள். அந்த அழகான காட்சிகளை மணிரத்னம் நீக்கி விட்டார். இந்த சந்திப்பை பத்தோடு பதினொன்றாக்கி விட்டார். 

ஐந்து பாகங்களாக இருக்கும் ‘ பொன்னியின் செல்வனை’’ 3 மணி நேரம் பார்க்கும்படியான திரைப்படமாக உருவாக்குவதென்பது மிகவும் சிரமமான காரியம்! 

இதைத்தான் நிறைய பேர் சொல்லுகிறார்கள். ஆனாலும் எது மிகச் சிறந்த காட்சியோ, அதை தவிர்த்து விடும்போது கதையின் உயிர்த்துடிப்பும் அல்லவா குறைந்து போகிறது?

 

[ பாரதி பாஸ்கர் இந்த வீடியோவில் கல்கி எப்படியெல்லாம் பூங்குழலியைப்பற்றி விவரித்து அருமையாக எழுதியிருக்கிறார் என்பதை மிக அழகாய் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள்! ]

கடைசி காட்சி! கரிய நிறத்தில் சூழ்ந்திருக்கும் மேகங்களிடையே, கொந்தளிக்கும் நடுக்கடலில் வந்தியத்தேவனும் அருள்மொழியும் தங்கள் விரோதிகளுடன் சண்டையிடும் காட்சி அப்படியே நம்மை ஸ்தம்பிக்க வைக்கிறது. ரவிவர்மனின் ஒளியமைப்பு அட்டகாசம்! 

நான் முன்பேயே சொல்லியிருப்பது போல உண்மைக்கதையை நினைத்துக்கொண்டு சென்றால் படத்தை ரசிக்க முடியாது. நம் மனதிலும் கனவிலும் பல காலமாக உறவாடியவர்களை சந்திக்கப்போகிறோம் என்ற உணர்வுடன் மட்டும் தான் படத்தைப் பார்க்கச் செல்ல வேண்டும்!!! 


16 comments:

ஸ்ரீராம். said...

தனக்கொரு ரோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த ஏமாற்றம் கமல் குரலில் தெரிகிறதோ என்னவோ...! ரஜினி கேட்டே பார்த்தாராம்!

ஸ்ரீராம். said...

நானும் படம் பார்த்தவுடன் உங்களைப் போல தான் நினைத்தேன். சில மாறுதல்களுடன்! முடிந்தால் வியாழன் பதிவில் சேர்க்கிறேன்.. (கணினி ரிப்பேர்!)

Geetha Sambasivam said...

//அதன் பின் தஞ்சையில் சுந்தர சோழரை சந்திப்பது, பின் குந்தவையை தனியே சந்திப்பது, பின் சிறையில் அடைக்கப்படுவது, குந்தவையும் வந்தியத்தேவனும் மறுபடியும் சந்திப்பது, குந்தவை தன் மனதை அவனுக்கு தெரிவிப்பது, ஈழம் சென்று தன் தம்பி அருள்மொழி வர்மனை கூடவே அழைத்து வரும்படி பணிப்பது என்று கதை தொடரும். // கதையிலே கூட வந்தியத்தேவன் ஈழத்திலிருந்து அருள்மொழிவர்மனை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு விட்ட பின்னரேக் குந்தவையை இரண்டாம் முறையாகச் சந்தித்துப் பின்னர் சிறைக்குச் செல்வான். அப்போது குந்தவை ஆதித்த கரிகாலனை நந்தினியிடமிருந்து காப்பாற்றும்படிச் சொல்லியே வந்தியத்தேவனை அனுப்பி வைப்பாள். இதெல்லாம் மூன்றாம் பாகம் அல்லவோ? இந்தச் சமயத்தில் தான் குந்தவை தன் மனதைத் தெரிவிப்பது ஆதித்த கரிகாலனை நந்தினியின் பிடியில் இருந்து விடுவிக்கக் கோருவது எல்லாம் வரும். ஆகவே படத்தில் சொதப்பல் அதிகமாகவே இருக்கும்போல் தெரிகிறது. ஈழம் சென்று அருள்மொழிவர்மனை அழைத்துவரச் சொல்லுவது முதல் பாகத்திலேயே வந்து விடும்.

KILLERGEE Devakottai said...

மிகவும் அழகாக விவரிப்பு செய்து இருக்கிறீர்கள்.

நாவல் என்பது பல காலங்களாக நமது மனதில் ஊறிப்போன விடயம்.

அதை திரைப்படத்தில் எதிர்பார்ப்பது முறையல்ல படத்தை வெற்றியடைய வைத்து போட்ட கோடிகளை எடுக்க வேண்டும்.

வந்தியத்தேவனை டான்ஸ் ஆட வைத்திருப்பதே தவறுதானே... காரணம் இன்றைய ரசிகனுக்கு இது அவசியம் இல்லையெனில் படத்தை ஓட்ட முடியாது.


அடுத்த படத்தின் டைட்டிலில் அசுரன் தனுஷ் என்று போடவேண்டுமாம் இல்லையெனில் தீக்குளிப்பானாம்.

இவ்வளவுதான் நமது ரசிகனின் அறிவு வளர்ச்சி ஆகவே நாவலை மறந்து விட்டே படம் பார்க்க வேண்டும். தங்களது விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

காணொளி பகுதி பார்த்தேன் பிறகு பார்ப்பேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்களுக்குப் படம் பிடிக்காது, படிக்காதவர்களுக்குப் படம் புரியாது என்று ஒரு விமர்சனம் படித்தேன்.
அனைவரும் நாமம் போட்டிருப்பது, சுந்தரசோழர் தொடங்கி ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருண்மொழி வர்மன் என ஆண்கள் அனைவரும் தாடியோடு வருவது போன்ற படக் காட்சிகளைப் பார்த்தபோதே, இப்படத்தினைப் பார்த்து, உள்ளத்தில் தேங்கியிருக்கும் பொன்னியின் செல்வனை கலைத்துவிடக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்,
நன்றி சகோதரி

திண்டுக்கல் தனபாலன் said...

நூலை படித்தவர்களுக்கு சற்றே பிடிக்காமல் போவது உண்மை தான்...

KILLERGEE Devakottai said...

எனது நீளமான கருத்துரை எங்கே ? ஸ்பாமில் இருக்கலாம் பார்த்து வெளியிடுங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா ரொம்ப சிறப்பான விமர்சனம். அதுவும் இசையைப் பற்றிச் சொல்லியதை நான் டிட்டோ செய்கிறேன். படம் பார்க்கவில்லை. பாடல்கள் மட்டும் கேட்டேன் எனவே இசையைப் பற்றிச் சொல்கிறேன் சற்றும் பொருந்தாத இசை என்றே அதுவும் மேல்நாட்டு பாணி இசை வழக்கமாகப் போடும் இசை என்பதால் எனக்குச் சற்றும் பொருத்தமாக த் தோன்றவில்லை. அது போல் பொன்னி நதி பாடல் கேட்டதும் ரோஜா படத்தில் வரும் அந்தப் பாட்டு ருக்குமணி ருக்குமணி? அந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது.

நண்பர் துளசியும் மலையாள வெர்ஷன் படம் பார்த்திருக்கிறார். அவருக்குக் கதை தெரியும் என்பதால் நடிப்பு பற்றி மட்டும்தான் சிலாகித்துச் சொன்னார் மற்றபடி படம் கதையைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் பார்க்க வேண்டும் என்றும் மனைவி மகளுக்குக் க்தையே தெரியாது என்பதால் படம் புரியவில்லை என்றும் சொன்னார். அதுவும் நிறைய கதாபாத்திரங்கள் இல்லையா அதனால்.

கீதா

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் சகோதரர் ஸ்ரீராம்! வியாழனன்று உங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பின் வந்து கருத்துரை சொல்லியதற்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
நீங்கள் சொல்வது சரியே. குந்தவை வந்தியத்தேவனை ஈழம் செல்ல பணிக்கும்போது அங்கேயே மறைமுகமாக தன் மனதிலிருப்பதை வந்தியத்தேவனும் சொல்வான். ஈழம் சென்று விபத்தில் சிக்கி, நாகப்பட்டிணம் புத்த விகாரத்தில் அருள்மொழி வர்மனை விட்டுப் பிரிந்து தஞ்சை வந்து அனிருத்தரிடம் அகப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின் அனிருத்தரின் யோசனைப்படியே அவனிடம் குந்தவை உடனடியாக கிளம்பி ஆதித்த கரிகாலனை கடம்பூர் வராமல் தடுக்க வேண்டும் என்று சொல்லி அவனைக் கிளம்ப சொல்லும்போது தான் தன் மனதிலிருக்கும் காதலை குந்தவை வெளிப்படையாக தெரிவிக்கும் நிகழ்வு நடக்கும். இது மூன்றாம் பாகத்தில் தான் வருகிறது. தற்செயலாக தவறுதலாக எழுதிய வரியை நீக்கி விட்டேன். குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

நீங்கள் சொல்லியிருப்பது போல போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் தான்! ஆனால் கதையின் ஆழத்தையும் அழகையும் சிதைக்காமல் எடுக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறதல்லவா?

நீங்கள் எழுதிய இரண்டு பின்னூட்டமும் இங்கே இருக்கிறதே? இவற்றைத்தவிர வேறு எதுவும் அனுப்பினீர்களா? அப்படி எதும் எனக்கு வரவில்லையே?

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

நான் முன்பேயே எழுதியிருப்பது போல கதையை நினைத்துக்கொண்டு, அதையே எதிர்பார்த்துக்கொண்டு படத்திற்கு சென்றால் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். அதே சமயம் நாம் இதுவரை கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரங்கள் உயிருடன் உலாவுவதைப்பார்த்து ரசிக்கவாவது படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அவசியம் படத்தை பாருங்கள்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா! பாராட்டுக்கு அன்பு நன்றி !

ஒரே ஒரு பாட்டு இருக்கிறது! ' அலைகடல்' என்று பூங்குழலி பாடுவது சற்று பரவாயில்லை ரகம். அந்தப் பாடலில் இருக்கும் சோகத்தையும் இனிமையையும் உள்வாங்கி வந்தியத்தேவன் பிரமித்துப்போவதை கல்கி ரொம்பவும் அருமையாக எழுதியிருப்பார். இதில் இணைத்துள்ள காணொளியில்கூட பாரதி பாஸ்கர் மிக அழகாக அதைப்பற்றி சொல்லியிருப்பார். ஆனால் பாடலோ அமானுஷ்யமான அமைதியுடன் இருக்கும். வந்தியத்தேவன் எந்த வித உணர்ச்சியுமில்லாமல் பார்த்தவாறே இருப்பார். இப்படித்தான் படத்தில் காண்பிக்கிறார்கள்.

துரை செல்வராஜூ said...

இலையைத் தள்ளி வைத்து விட்டு விருந்தைச் சுவையுங்கள் என்பதும்

கல்கியின் செல்வனைத் தள்ளி வைத்து விட்டு மானா ரானாவின் சிதைப்பினை ரசியுங்கள் என்பதும் ஒன்று..

எங்கள் வீட்டில் எவருக்கும் விருப்பமில்லை - பொனா செனா வைப் பார்ப்பதற்கு!..

துரை செல்வராஜூ said...

தலைமுறைகளைக் கடந்து நிற்கும் புதினம்.. இதனுடைய ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை இது.. இது மானா ரானாவின் கதை.. இதற்குள் கல்கி அவர்களை ஏன் இழுத்து விட வேண்டும்?..

வேறு வேறு பெயர்களை வைத்து தன் விருப்பத்துக்கு எடுத்திருக்கலாம்..

ஆனால் டப்பா நிரம்பியிருக்காது!..
இசை?..

இன்னும் என்னென்ன அலங்கோலமோ..

நம்மை நாமே கடிந்து கொள்ள வேண்டியது தான்..