Monday 16 May 2022

ஜாதகமும் நானும்-2!!!

என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ஒரு நாள் அவர் பெண்ணுக்கு திடீரென ஒரு வரன் வந்துள்ளதாக அவர் கணவர் ஊரிலிருந்து ஃபோன் செய்தார். கூரியர் மூலம் வந்த மாப்பிள்ளையின் விபரங்கள் எல்லாமே நன்கிருந்தன. என் சினேகிதி பிராமண குலம் என்பதாலும் அவர் சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதவை என்பதாலும் ஒரு நல்ல ஜோதிடரிடம் போக வேண்டும் என்றார். தெரிந்த ஒருவரிடம் கேட்டு அவர் சொன்ன மிகப் பிரபலமான ஜோதிடரிடம் சென்றோம். அவர் ‘பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும் கொடுத்து விட்டு செல்லுங்கள். நாளை வாருங்கள்’ என்றார். அதன்படியே மறு நாள் சென்றோம். கூட்டம் வேறு இருந்தது. ஜோதிடர் என் சினேகிதியிடம் ‘ உங்கள் பெண்ணுக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும். இதுபோல சில ஜாதகங்களை நம்பி கல்யாணத்தில் இறங்க வேண்டாம். பொருத்தம் இருப்பது மாதிரி தோன்றும் அதை நம்பி நீங்கள் திருமணம் செய்தால் பையன் உங்கள் பெண்ணை விட்டு விட்டு ஓடிப்போய் விடுவார். “ என்று ஒரேயடியாக குண்டைப் போட்டார். என் மகனின் ஜாதகத்தையும் முதன் முதலாக காண்பித்தேன். என் மகனின் ஜாதகத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லையென்றும் ஆனால் எப்படி முயன்றாலும் மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்றார். எனக்கு இதில் எல்லாம் பழக்கமோ, நம்பிக்கையோ இல்லையென்பதால் என் மனதில் எந்த பாதிப்புமில்லை. ஆனால் வீட்டுக்குச் சென்றதிலிருந்து இரவு முழுவதும் என் சினேகிதியின் விழிகளிலிருந்து கண்ணீர் மழைதான் பொழிந்து கொண்டிருந்தது. நான் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மனம் ஆறவில்லை அவருக்கு! 

‘ கவலைப்படாதே, நாம் வேறு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடுவோம்’ என்று சமாதானம் செய்தேன்.

[ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ, என் மகனுக்கு ஆறு மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து என் சினேகிதியின் பெண்ணுக்குத் திருமணம் நடந்து அடுத்த‌ இரண்டு வருடங்களில் ஒரு அழகான ஆண் குழந்தைக்கும் தாயானார்! ]

மறுபடியும் வேறு ஒரு சினேகிதியின் பரிந்துரை பேரில் ஊருக்கு வெளியே ஒரு ஜோதிடரைப்பார்க்கச் என்றோம். சிவப்பழமாக வயதானவராக அமர்ந்திருந்தார் அவர். பக்கத்தில் நிறைய ஜோதிட புத்தகங்கள், நோட்டுக்கள், கடவுள் சிலைகள்! அவர் எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்கச் சென்றபோதுதான் கவனித்தேன், அவரின் இடப்பக்கம் வெளிநாட்டு மது வகைகள் பல தினுசில் இருந்ததை! உடனேயே சினேகிதியிடம் விபரம்கூட சொல்லாமல் எழுந்து வந்து விட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஒரு பக்கம் தாங்க முடியாத கோபம், மறு பக்கமோ சிரிப்பு வேறு!

எந்த விஷயத்திலுமே நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் மனமும் அறிவும் சார்ந்த விஷயங்கள். ஆனால் என்னவென்றே தெரியாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவது மிகவும் முட்டாள்தனமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஜாதகங்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள், இண்டர்னெட், இவைகள் எல்லாம் உதவிகள் செய்தன. எப்படி ஆத்திக வாதங்களுக்கும் நாத்திக வாதங்களுக்கும் இன்று வரை ஒரு முடிவில்லையோ, அதுபோலத்தான் இதுவும். ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதை உறுதி செய்ய நிறைய வாதங்கள் உள்ளன. அதே சமயம் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர் வாதங்களும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன. அதனால் அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ளாமல் அதைப்பற்றிய விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சிகளைச் செய்தேன்.

20 வருடங்களுக்கு முன்னால்வரை இந்த பழக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமே அதிகமாக இருந்தது. இப்போதோ ஜாதகப்பொருத்தம் பார்க்காத ஜாதிகளே இல்லை. முதலில் ஜாதகப்பொருத்தம் பார்த்து, பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே, பெண்னையோ, மாப்பிள்ளையையோ பார்ப்பதற்கும் மற்ற விஷயங்களையும் பற்றிப் பேசவும் இரு தரப்பிலும் சம்மதிக்கின்றனர். அதுவும் என் விஷயத்தில் பெண் வீட்டை அழைத்துப் பேச முற்படும்போதே, ‘ மாப்பிள்ளை வீடான நீங்கள்தான் முதலில் ஜாதகம் பார்க்க வேண்டும், அதன் பின் தான் நாங்கள் பார்ப்போம். அதனால் பார்த்ததும் திரும்பக் கூப்பிடுங்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

பொதுவாக திருக்கணித முறைப்படியும் பாம்பு பஞ்சாங்க [வாக்கியப்பஞ்சாங்க] முறைப்படியும்தான் ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. இதில் திருக்கணித முறையை ஒட்டித்தான் அனைத்து கம்யூட்டர் ஸாப்ட்வேர்களிலும் ஜாதகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறைப்படி தயாரிக்கப்படும் ஜாதகங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று சரியாகவே இருக்கும். வைதீகர்களும் பண்டிதர்களும் பின்பற்றுவது வாக்கியப்பஞ்சாங்கத்தை மட்டுமே. இதில் ஒருவரின் கணிப்புபோல மற்றவருடைய கணிப்பு இருப்பதில்லை. இவர்கள் திருக்கணித முறையை ஒத்துக்கொள்ளுவதில்லை. ஒருவரின் ஜாதகம் இந்த இரு முறைகளிலும் வேறுபடும்.

மற்ற மதங்களிலும் வெளி நாடுகளில் சிலவற்றிலும் ஜாதகம் பார்ப்பதைக் கேள்வியுற்றபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டில் வேலை செய்யும் கிறிஸ்தவப்பெண்[தெலுங்கு], அவர்கள் சமூகத்தில் ஜாதகம் பார்க்காமல் யாருமே திருமணம் செய்வதில்லை என்றார்.

இப்படி ஜோதிட முறைகளில் பல வகைகள் இருக்கும்போது, ஜோதிடர்களின் பாண்டித்யங்களில் பல வேறுபாடுகள் இருக்கும்போது, பாண்டித்யமே இல்லாத, காசை மட்டுமே பிரதானமாக எண்ணும் சாதாரண ஜோதிடர்களின் கணிப்புகள் என்ற விபரீதங்களுக்கிடையே, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையும் ஒரு ஆணுடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி முடிவெடுப்பது? இப்படி எடுக்கும் முடிவு சரியானதுதானா என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாம்பு பஞ்சாங்கத்தில் பொருத்தம் அவ்வளவாகச் சரியில்லையென்று கண்டு பிடிக்கும் ஒரு சாதாரண ஜோதிடர் தனக்கு சாதகமாக திருக்கணித முறைப்படி பொருத்தம் பார்த்து 8 அல்லது 9 பொருத்தம் இருப்பதாக சொல்வதை எதுவுமறியாத மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு தற்போது பல ஜோதிடர்கள் இப்படித்தான் வியாபாரத்திற்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் அதுபோல ஒரு அனுபவம் அதற்குப்பிறகு ஏற்பட்டது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் திருச்சி தகவல் மையத்திலிருந்து அதன் நிறுவனர் என்னை அழைத்து, தர்மபுரியில் ஒரு பெண் உள்ளது என்றும் எட்டு பொருத்தங்கள் இருப்பதாயும் பெண் வீட்டில் பெண் பார்க்க வரச்சொல்லுவதாயும் சொன்னார். போகும் வழியில் அவர் பெண்ணின் ஜாதகத்தையும் என் மகனின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்த விபரங்களையும் என்னிடம் கொடுத்துப்பார்க்கச் சொன்னார். அவரே வாக்கியப் பஞ்சாங்க முறையில் கணித்த ஜாதகம் முதல் பக்கத்தில் இருந்தது. அடுத்தது பெண்ணின் ஜாதகம். மூன்றாவது பக்கத்தில் என் மகனின் ஜாதகம் திருக்கணித முறையில் எடுக்கப்பட்டு அந்தப்பெண்ணின் ஜாதகமும் இணைக்கப்பட்டு 8 பொருத்தங்கள் உள்ளதாக விபரங்கள் எழுதப்பட்டு இருந்தன. நான் அப்போது ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் என் கைப்பையில் வைத்துக்கொண்டேன். பெண் பார்த்து விட்டுத் திரும்பும்போதும், அவரைக் காரிலிருந்து அவர் இருப்பிடத்திற்கு அருகில் இறக்கி விட்டபோது, அவரிடம் அவைகளைக் காண்பித்து, ‘ இதென்ன முதலில் என் மகனுக்கு வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி ஜாதகம் தயாரித்துக் கொடுத்தீர்கள். இப்போது என்னவென்றால் திருக்கணித முறையில் வேறு ஒரு ஜாதகம் தயாரித்துப் பொருத்தம் பார்த்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் அவர் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்.

‘ இல்லைம்மா. அது அவ்வளவா பொருந்தவில்லை. அதனால்தான் இப்படி..” என்றார்.

‘அப்படியானால் வசதிக்குத்தகுந்தப்படி ஜாதகத்தை மாற்றிக்கொள்வீர்களா? இது இருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், எப்படி உங்கள் வசதிக்குத் தகுந்தபடி மாற்றலாம்?’ என்று கேட்டதும் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி எத்தனை பேர் வெறும் பணத்திற்குச் செய்கிறார்களோ? எத்தனை பேர் விபரம் தெரியாமல் ஏமாறுவார்கள்! என் மகனுக்கு அவ்வளவாகப் பிடித்தம் இல்லாததால் இந்தத் திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் பெண்ணின் அம்மாவைக்கூப்பிட்டு விபரம் சொல்லி எதிர்காலத்தில் கவனமாக இருப்பதுடன் வேறு ஒரு நல்ல ஜோதிடரைப்பார்த்து விபரங்கள் தெரிந்து கொள்ளச் சொன்னேன்.

இத்தனை அனுபவங்களுக்குப்பிறகு, அதிர்ச்சிகளுக்குப்பிறகு, ஒரு தரமான ஜோதிடரை விசாரிக்க முயன்றதில் கிடைத்தவர் ஒரு இஸ்லாமிய ஜோதிடர். ஐந்து தலைமுறைகளாய் ஜோதிடம் பார்த்துச் சொல்லும் குடும்பமென்றும், மரியாதை, தொழிலில் அக்கறை எல்லாம் நிரம்பியவர், செல்வந்தர்கள் என்றாலும் ஏழைகள் என்றாலும் ஒரே மாதிரிதான் நடத்துவார் என்றெல்லாம் கேள்விப்பட்டதும் என் சினேகிதியுடன் அவரைப்பார்க்கச் சென்றேன். அவரிடம் பேசிய போது, ‘ நான் திருக்கணித முறையைத்தான் பின்பற்றுகிறேன்.’ என்று சொல்லி என் மகனின் ஜாதகத்தையும் வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.. ‘ இது சரியான ஜாதகம். திருக்கணித முறைப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் மகனின் திருமணம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவாகி விடும். தூரத்து சொந்தத்தில் பெண் அமையும்.’ என்றார்.

வீட்டுக்கு வந்து யோசனை செய்ததுதான் மிச்சம். சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ எந்தப்பெண்ணும் இல்லை.

ஆனால் அவர் சொன்னதுபடியே தான் நடந்தது. என் கணவரின் அண்ணிக்கு நெருங்கிய உறவு- எப்போதோ விட்டு விலகிப்போன உறவில் பெண் அமைந்தது. அதுவும் அவர் சொன்ன மாதிரி ஆறாம் மாதம் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருமணம் முடிவானது. என் சினேகிதியின் பெண்ணுக்கும் அவர் சொன்ன மாதிரியே தான் திருமணம் நடைபெற்றது.

ஜாதகத்தில் நம்பிக்கையோ, பற்றோ இப்பொழுதும் இல்லையென்றாலும் இப்படி நடந்தவைகளெல்லாம் இன்று நினைத்தாலும் ஆச்சரியமான விஷயங்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!


  

11 comments:

ஸ்ரீராம். said...

உங்கள் அனுபவங்கள் புரிகின்றன.  நாம் விரும்பா விட்டாலும் எதித்தரப்பு ஜாதகம் பார்த்துதான் பொருத்தம் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லும்போது ஒன்றும் செய்ய முடிவதில்லை.  30 வயதுக்கு மேல் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றும் சொல்வார்கள். சமீபத்தில் நான் பார்த்த எல்லா  ஜோசியர்களும் எல்லோருக்கும் 'இப்போது வேண்டாம், இன்னும் இரண்டு வருட சென்று பாருங்கள்..  நேரம் அப்போதுதான்வ் வருகிறது' என்று சொவ்லதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

மனப்பொருத்தம் இருந்தால் போதும் என்று சொல்வார்கள்.   நானும் பாஸும் ஒருவரி ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டவர்கள்.  அப்போது அதனால் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை!  பின்னர் இரண்டு மூன்று இடங்களில் சும்மா பார்த்தபோது பொருத்தமாகவே இருந்தது.

KILLERGEE Devakottai said...

இந்த பொருத்தம் பார்ப்பதில் இதுவரையில் யாராலும் சரியான தீர்வுக்கு வர முடிவதில்லை.

அதே சோசியர் தனக்கு வாழ்நாள் எவ்வளவு ? என்று அறிந்து கொள்ள முடியவில்லையே...

வல்லிசிம்ஹன் said...

மிக சுவாரஸ்யமான பதிவு.
ஜாதகம் ஜோஸ்யம் எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது இப்போது
நிம்மதி. அவரவர் மனப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.
தங்கள் அனுபவங்கள் அதிசயப் பட வைக்கின்றன. அந்த ஜோஸ்யரை நினைத்துக் கோபம் வருகிறது. இஸ்லாமிய ஜோத்டரின் நல்வாக்கு பலித்தது ஒரு
நன்மை.

வெங்கட் நாகராஜ் said...

அனுபவங்கள் நன்று. நான் எனக்காக ஜோஸ்யம் பார்க்க இதுவரை சென்றதே இல்லை. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்பது தான் என் நம்பிக்கை.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் பணத்தைப் பொறுத்து...!

Thulasidharan V Thillaiakathu said...

ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதை உறுதி செய்ய நிறைய வாதங்கள் உள்ளன. அதே சமயம் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர் வாதங்களும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன.//

அதே அதே மனோ அக்கா.

//இப்படி ஜோதிட முறைகளில் பல வகைகள் இருக்கும்போது, ஜோதிடர்களின் பாண்டித்யங்களில் பல வேறுபாடுகள் இருக்கும்போது, பாண்டித்யமே இல்லாத, காசை மட்டுமே பிரதானமாக எண்ணும் சாதாரண ஜோதிடர்களின் கணிப்புகள் என்ற விபரீதங்களுக்கிடையே, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையும் ஒரு ஆணுடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி முடிவெடுப்பது? இப்படி எடுக்கும் முடிவு சரியானதுதானா என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாம்பு பஞ்சாங்கத்தில் பொருத்தம் அவ்வளவாகச் சரியில்லையென்று கண்டு பிடிக்கும் ஒரு சாதாரண ஜோதிடர் தனக்கு சாதகமாக திருக்கணித முறைப்படி பொருத்தம் பார்த்து 8 அல்லது 9 பொருத்தம் இருப்பதாக சொல்வதை எதுவுமறியாத மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு தற்போது பல ஜோதிடர்கள் இப்படித்தான் வியாபாரத்திற்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.//

இதே கேள்வி என் மனதிலும் தோன்றியிருக்கிறது.

ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல நாம் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்திருந்தால் போதும் என்று சொன்னாலும் எதிர்த்தரப்பினர் ஜாதகம் பார்க்க வேண்டும் நீங்களும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் போது தவிர்க்கமுடியாததாகித்தான் விடுகிறாது.

உங்கள் அனுபவங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது மனோ அக்கா...அனுபவம் எனக்கும் உண்டு.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த திருச்சிக்காரரிடம் உங்கள் கேள்விகள் சபாஷ் போட வைத்தன...சூப்பர் மனோ அக்கா மிகவும் ரசித்தேன் அந்தப் பகுதியை...மேலும் சில பகுதிகளையும்..

//வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!//

கடைசியில் சொல்லிய அந்த இஸ்லாமிய ஜோதிடர் சூப்பர்!!!! நல்ல மனிதர். மனம் நன்றாக இருந்தால் நல்லது தாமதமானாலும் நல்லது நடக்கும்.

ஆமாம் ஆமாம் ஹைஃபைவ்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஜாதக விஷயத்தில் உங்களுக்கு நிறையவே நல்ல அனுபவங்கள். முதலில் ஜோதிடர்கள் பணத்தில் குறியாய் இல்லாமல் அந்தத் தொழிலின் மீது, தான் கற்ற ஜோதிடத்தின் மீது பக்தியும், நேர்மையும், மரியாதையும் கொண்டு, தான் வணங்கும் தெய்வம் மற்றும் தன் மனசாட்சிக்கு நேர்மையாக இருந்தாலே கணிப்பு சரியாகிவிடும்.

துளசிதரன்

மாதேவி said...

எனக்கு சாதகம்,சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை இல்லை.
எமக்கு நடக்கவேண்டி இருந்தால் நடந்தே தீரும்.

Geetha Sambasivam said...

நம்ம வீட்டில் நம்ம ரங்க்ஸுக்கு ஜோதிடம், ஜாதகம் நம்பிக்கை ரொம்பவே உண்டு. ஆனாலும் எங்கள் கல்யாணத்திற்குப் பார்த்த ஜோசியரைப் போலப் பின்னாட்களில் நாங்க பார்க்கவே இல்லை. உங்கள் அனுபவங்களும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் நீங்க புதியதோரு பாடமும் கற்றுக் கொண்டு விட்டீர்கள்.