முன்பெல்லாம் புதுமையான குறிப்புகள் பார்த்துப் பார்த்து செய்து உடனேயே என் சமையல் தளத்திலேயோ அல்லது இங்கேயோ பதிவும் போடுவேன். கொரோனா காலம் வந்த பின் நிறைய ஆர்வங்கள் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. சமீபத்தில் நான் வழக்கம்போல் செய்த தக்காளித்தொக்கு என்னை பதிவேற்றத்தூண்டியது.
எத்தனையோ வருடங்களாக நான் அடிக்கடி செய்யும் தக்காளி தொக்கு இது. தோசைக்கு மிகவும் பொருத்தமானது என்பதால் செய்த உடனேயே எப்போதும் பாதி தீர்ந்து விடும். தக்காளி மட்டும் சதைப்பற்று உள்ளதாக, சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் இப்படிப்பட்ட தக்காளி கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. தயிர் சாதம், பொங்கல் எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமான பக்கத்துணை. இப்போது செய்முறைக்குப்போகலாம்!
தேவையான பொருள்கள்:
தக்காளி பெரியதாக -4
பூண்டு [சிறியது]- 10 இத்ழ்கள்
புளி- நெல்லிக்காய் அளவு
வற்றல் மிளகாய்- 6
தேவையான உப்பு, நல்லெண்ணெய்
வெந்தயம்- 1 ஸ்பூன்
காயம் -ஒரு சிறு துன்டு
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 ஆர்க்
செய்முறை:
பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இவை ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.
புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.
பின் ஊறிய புளியுடன் மிளகாய், தக்காளி சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் அரைத்த விழுதைக்கொட்டி வேக வைக்கவும்.
மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக்கொடுக்கவும்.
தண்ணீரெல்லாம் சுண்டி கெட்டியாகும்போது தீயைக்குறைத்து உப்பு சேர்த்துக்கிளறவும்.
வேறு ஒரு சிறு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலையை தாளிக்கவும்.
தீயை வெகுவாக குறைத்து பொடியாக நறுக்கிய பூண்டிதழ்களைப்போட்டு வதக்கவும்.
பூண்டு சிவக்காமல் வதக்கி தக்காளி தொக்கில் கொட்டி குறைந்த தீயில் சமைக்கவும்.
மேலும் நல்லெண்ணெய் அவ்வப்போது சேர்க்கவும்.
தொக்கின் நிறம் நன்கு சிவந்த கலரில் வரும்போது, மேலே எண்ணெய் மிதக்கும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான தக்காளி தொக்கு தயார்!!
14 comments:
பூண்டு, புளி இல்லாமல் நாங்கள் தொக்கு செய்வோம். இதுமாதிரியும் ஒருமுறை செய்து பார்க்கிறோம். தக்காளியிலேயே புளிப்பு இருக்குமே, புளி வேறு சேர்த்தால் புளிப்பாகி விடாதா?
ஆம், இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் பெரும்பாலான சுவாரஸ்யங்கள் மனதிலிருந்து காணாமல் போயிருக்கின்றன. ஒரு இயந்திர கதியில் செல்கிறது வாழ்க்கை.
அன்பு மனோ ,
அருமையான செய்முறை.
தொக்கின் படமும் அருமை.
ஓரங்களில் தேங்கி நிற்கும் எண்ணெய்
தக்காளியின் ருசியைச் சொல்கிறது.
நான் தக்காளி,பூண்டு,புளி,மிளகாய்,உப்பு இவற்றை
வதக்கியே அரைப்பேன். எண்ணெயும் நிறைய சேர்ப்பேன்.
உங்களின்
இந்த முறை ருசியாக வந்திருக்கும்.
இனி செய்முறைகள் நிறைய எழுத வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிறைய
வகை சமையல் இருக்கும். தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் மா.
பூண்டு சேர்க்காமல் இப்படிச் செய்திருக்கேன். ஆனால் தக்காளியையும், மிவத்தலையும் கொஞ்சம் எண்ணெயில் வதக்கிப்பேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. இங்கேயும் ரோபோ வந்து காத்திருக்கு! :))
அருமை
சுவையான தக்காளி தொக்கு செய்து பார்க்கிறோம்... நன்றி...
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
முன்பு ஒரு காலத்தில் தக்காளி புளிப்பாக இருக்குமென்று சமையலில் புளி சிறிது குறைப்போம். இப்போதெல்லாம் தக்காளி புளிப்பாக இருப்பதேயில்லை. இன்னும் சில சமயங்களில் சற்று இனிப்பாக இருப்பதைக்கூட பார்க்கிறேன். இந்தப் புளி சேர்த்தால் தான் சுவையை எடுத்துக்காட்டும்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வல்லிசிம்ஹன்! நீங்கள் சொன்ன பாணியில் செய்து பார்க்கிறேன்.
உண்மை தான்! பலதரப்பட்ட சமையல் குறிப்புகள், அது மிகவும் பழமையாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்திய புதுமையாக இருந்தாலும் சரி, அவற்றைப் பகிரும்போது தான் அது அனைவருக்கும் பயனளிக்கிறது.
நானும் இனி அவ்வப்போது சமையல் குறிப்புகள் வெளியிடுகிறேன். உங்களின் கருத்துரை எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது!
நீங்களும் திருமதி.வல்லிசிம்ஹன் சொன்ன மாதிரி எண்ணெயில் வதக்கி தொக்கு செய்வதாக எழுதியிருக்கிறீகள் கீதா! அது மாதிரியும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்! கருத்துரைக்கு இனிய நன்றி!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
செய்து பாருங்கள் தனபாலன்! மிகவும் ருசியாக இருக்கும். வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!
சுவையான செய்முறை. தக்காளி தொக்கு சப்பாத்திக்கும் துணை! :)
அருமையான செய்முறை. செய்து பார்க்கிறேன்.
சுவையான தக்காளி தொக்கு. படமும் அருமை.
Post a Comment