Friday 9 July 2021

முத்துக்குவியல்-62!!!

 உயர்ந்த முத்து:

இந்தியாவில் அதிக அளவில் இரத்த தானம் செய்தவர்களில் முதன்மையாக விளங்குபவர் ஷபீர்கான். 58  வயதான இவர் காஷ்மீரைச் சேர்ந்த ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். 41 ஆண்டுகளாய் இரத்த தானம் செய்து வரும் இவர் இது வரை 82 லிட்டர் ரத்தத்தை தானமாக வழங்கியிருக்கிறார். இவரின் தொன்டினால் ' காஷ்மீரின் ரத்த மனிதர்' என்று உயர்வாக அழைக்கப்படுகிறார். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறைகள் ரத்த தானம் செய்கிறார். காஷ்மீர் மட்டுமின்றி ஒடிசா, தமிழ்நாடு, புது டெல்லி, ஆந்திரா உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ரத்த தானம் செய்திருக்கிறார். 


2004ல் சுனாமி பாதித்த இடங்களுக்குஇரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்பில் இருந்து ரத்த தான இயக்கங்களை வழி நடத்தியிருக்கிறார். இவர் இந்திய செஞ்சிலுவை இயக்கத்தின் வாழ்நாள் உறுப்பினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 2300 உறுப்பினர்களைக்கொண்ட தன்னார்வ இரத்த தான இயக்கக்குழுவினருக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்தக்குழு மூலம் ரத்த தானம் செய்வதற்கு பொதுமக்களை ஊக்கப்படுத்துவதுடன் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

நெகிழ வைத்த‌ முத்து:

இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்து ஒன்பது மாதங்கள் கடந்து போய் விட்டன. என்னை மிகவும் பாதித்த மரணம் அவருடையது. 6 மாத‌ங்கள் வரை அவருடைய பாடல் நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமலேயே இருந்தேன். நேற்று விஜய் டிவியில் முன்பு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எதேச்சையாக அதில் பரிசு பெற்ற சிறுவன் ஹ்ரித்திக் பாடியதைக் கேட்டேன். பாடகி கல்பனாவும் ஹிரித்திக்கும் ' ரோஜாவைத்தாலாட்டும்' பாடலை அசத்தலாக, அருமையாக பாடினார்கள். பாடல் முடிவில் கண்ணீர் விட்டு எஸ்.பி.பி அழுதார். உணர்ச்சி வயப்பட்ட குரலில் பேச ஆரம்பித்தார்.


 " நான் சில விஷயங்களை மனம் விட்டு சொல்லப்போகிறேன் இங்கு. மனமார ஒரு நல்ல பாட்டை பாராட்டாதவன் ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியாது. கல்பனா அப்படிப்பட்ட சிறந்த பாடகி. நல்ல் மனசு இருக்கும் ஒரு மிஷின். எத்தனை முறை அவளை பாராட்டுவது? எதுக்கு சார் கண்ணுல கண்ணீர் வரணும் ஒரு அழகான பாட்டைக் கேட்கும்போது? ஒரு சின்ன பையன் அழகாகப் பாடும்போது எதுக்காக கண்ணீர் வரணும்? யாரவது இதற்கு பதில் சொல்ல முடியுமா? யாராலுமே சொல்ல முடியாத ஒரு அழகான எக்ஸ்பிரஷன் இது. மற்ற உணர்வுகளை வாயால் சொல்ல முடியும். இப்படிப்பட்ட விஷயங்களை மட்டும் சொல்வதற்குத்தான் கடவுள் கண்ணில் நீரைக் கொடுத்திருக்கார். இந்த மாதிரி ஒரு அருமையான கம்போஷிஷனைக் கேட்கும்போது, இந்த மாதிரி ஒரு சுண்டைக்காய் பையன் அனாயசமாகப் பாடும்போது, அது அப்படியே இதயத்திற்குள் போய் ஆத்மாவிலும் கலந்து கண்ணீராக வெளிப்படுகிறது. நானும் ஜானகியம்மாவும் எத்தனை நுணுக்கமான சங்கதிகளுடன் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாட்டை பாடியிருக்கிறோம்! எத்தனை பரிசுகள், அவார்டுகள் வாங்கியிருக்கிறோம்! அபப்டிப்பட்ட பாடலை இந்த தம்மாத்துண்டு பையன் அருமையாக பாடியிருக்கிறான்! கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதை விட சாட்சி வேறென்ன வேண்டும்? " என்று முடித்தார்.

இதைக்கேட்ட என் கண்களிலும் கண்ணீர் வழிந்தது! ஒரு வளரும் பாடகனுக்கு இதை விட ஒரு சிறந்த பாராட்டுப்பத்திரம் வேறு யாராலும் கொடுக்க முடியாது. எப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதரை, இசைக்கலைஞரை நாம் இழந்து விட்டோம்!

சாதனை முத்து:

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸிகா காக்ஸ். பிறந்த போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால் இந்த பெரிய குறைபாட்டை மனதில் ஏற்றி துவண்டு போகாமல் பல சிறந்த சாதனைகள் செய்து வாழ்க்கையில் ஜெயித்தவர்.


சிறு வயதில் விமானப்பயணத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தபோது விமானம் மீதும் விமானியாக ஆவதற்கும் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரிப்படிப்பை முடித்ததும் கடும் பயிற்சியை மேற்கொண்டு கடந்த 2008ம் ஆண்டு லைட் ஏர்ட் விமானத்தை இயக்கும் லைசென்ஸ் கிடைக்கப்பெற்றார்


இதனால் கைக‌ள் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்மணி என்னும் உலக சாதனை புரிந்தார். விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல் கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் செய்தல் என்று அனைத்து துறைகளிலும் வலம் வருகிறார். உலகம் முழுவதும் தன்னம்பிக்கை பேச்சாளராக இன்றும் வலம் வருகிறார்.

ரசித்த முத்து:

கொரோனாவால் ஏற்பட்ட விபரீதங்கள், மரணங்கள், பிரச்சினைகள் இவற்றுக்கப்பால் கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு பள்ளிச் சிறுவனின் மனதில் எழ்ந்த கற்பனை இது! 


வாட்ஸ் அப்பில் வந்தது! படித்து முடித்ததும் நம்மையுமறியாமல் ஒரு சின்னப்புன்னகை எழுகிறது!!  

இசை முத்து:

இந்தப்பாடல் 1955ல் வெளி வந்த ' நல்ல தங்காள்' என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இனிய பாடல்! 70 வருடங்களுக்கு முன் வந்த பாடல் என்பதால் எப்படியிருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றும். பாடலைக் கேட்டுப்பாருங்கள். டி.எம்.செளந்திரராஜன் அந்த அளவு இனிமையாக‌ப் பாடியிருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கு 'பாச மலர்' திரைப்படம் தான் எப்போதும் உதாரணம் காண்பிக்கப்படும். இந்தப்பாடல் அதற்கு முன் வெளி வந்த, ஒரு அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடும் பாடல்.


13 comments:

கோமதி அரசு said...

முத்துக்கள் எல்லாம் அருமை.நெகிழவைத்த முத்து கண்ணில் நீர் தன் குறையை நினையாது சாதனை படித்த பெண் வாழ்க!.
இசை முத்து அருமை. அந்த பாடல் பிடித்த பாடல். நல்ல பகிர்வு
ஏ.பி. நாகராஜன் அண்ணனாக நடித்து இருக்கிறார், அவர் பேசும் வசனமும் நன்றாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

மிக அருமையான தொகுப்பு. எஸ்பிபி என்றென்றும் அனைவர் மனதிலும் நிற்பார். அரிய பல நல்ல குணங்கள் கொண்டவர். மனம் விட்டுப் பாராட்டுக்களைத் தருபவர். கொரோனா பற்றிய சிறுவனின் கட்டுரை எனக்கும் வாட்சப்பில் வந்தது. மற்றவையும் சிறப்பு. நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

வாழ்க ஷபீர்கான்.  எத்தனை பேர்களை ரத்த உருவாக்கிக்கொண்டு விட்டார்...   மகத்தான சேவை..

எஸ் பி பி யை நினைக்கும்தோறும் சோகம்தான் மிஞ்சும்.  இதோ..  இப்போது கூட அவர் பாடல்கள்தான் கணினியில் ஓடிக்கொண்டிருக்கிறது.  வா பொன்மயிலே முடிந்து நானொரு பொன்னோவியம் ஓடிக்கொண்டிருக்கிறது.  சமயங்களில் எழுதுவதை விட்டு விட்டு பாடலில் ஆழ்ந்து விடவைக்கும் இசை.

ஜெஸிகா காக்ஸ் அசத்துகிறார்.  நல்ல  முன் உதாரணம்.

புன்னகைக்க வைத்தது கொரோனா திருவிழா.  

அருமையான பாடல் காணொளி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து முத்துகளும் சிறப்பு...

காணொளி பாடல் அருமை...

SPB - சிறப்பான மனிதர்...

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி கோமதி அரசு!
அந்தப்பாடலில் பேசியிருப்பது ஏ.பி.நாகராஜன் என்பதை சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

விரிவான இனிய கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் ரசித்துப் பாராட்டியதற்கும் அன்பு நன்றி தனபாலன்!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்து முத்துக்களும் நன்று. ஷபீர்கான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஜெஸிகா தன்னம்பிக்கையும்
தளர்வற்ற முயற்சியும் போற்றுதலுக்கு உரியது
நன்றி சகோதரி

ராமலக்ஷ்மி said...

போற்றுதலுக்குரியவர் ஹபீர்கான். பாராட்டுக்குரியவர் ஜெஸிகா காக்ஸ். எஸ்.பி.பி பற்றிய பகிர்வு நெகிழ்வு. நல்ல தொகுப்பு.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!