Saturday 4 January 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறைகள்.!!!!

சரிவிகித உணவு
சர்க்கரை நோய்க்காக இது வரை மருத்துவர்கள் காலையில் குறைந்த அளவில் நீராவியில் செய்த பலகாரங்களான இட்லி, இடியாப்பம் இவற்றைத்தான் பரிந்துரை செய்து நான் பார்த்திருக்கிறேன். இரவும் அதே தான். சாப்பிடும் அளவின் உணவு குறைவாக இருக்க வேண்டும். சப்பாத்தியானால் 2 இருக்க வேண்டும். இனிப்புகளையும் இனிப்பு அதிகமான பழங்களையும் அறவே தவிர்க்க வேண்டும். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். இது தான் வழக்கமான முறை.

ஆனால் மருத்துவர் கண்ணன் இதிலிருந்து வேறுபடுகிறார்.

“ எல்லாப்பொழுதும் நாம் மாவுச்சத்தையே உண்பதால் நம் உடலுக்குத் தேவையான மாவுச்சத்து இரு மடங்காக உள்ளே போகிறது. அதிகப்படியான மாவுச்சத்து இன்சுலின் என்னும் ஹார்மோனால் கொழுப்பாக மாறுகிறது. இந்த கொழுப்பு தான் உடலுக்கு தீங்கை விளைவிப்பது. இன்சுலின் குறைபாடு இருப்பவர்களுக்கு அந்த அதிகப்படியான மாவுச்சத்து எந்த வித மாறுதலுக்கும் ஆளாகாமல் அப்படியே இரத்த்தத்தில் தேங்கி நிற்பதால் அதுவே சர்க்கரை நோயாக மாறுகிறது.” என்று சொல்லும் அவர் “ எந்த அளவிற்கு சிறுதானியங்கள், அரிசி வகைகள், கோதுமை, கேழ்வரகு வகைகள் இவற்றைக்குறைத்து, நவதானியங்களுக்கு மாறுகிறோமோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு குறையும் “ என்பதை வலியுறுத்துகிறார்.
அவர் சொன்னது போல நவதானியங்கள், பால், பால் சார்ந்த பொருள்கள், காய்கறிகளைக்கொண்டு அதி ருசியான உணவு வகைகளை செய்ய முடியும். பழக்கத்திலிருந்து விடுபடும் மன வலிமையும் திருப்தியும் மட்டுமே வேண்டும்.

நவதானியங்கள்

அவர் பாணியில் எனக்கு ஒரு டயட் சார்ட் போட்டு அதன் படியே உணவு எடுத்து வருவதில் சர்க்கரை வெறும் வயிற்றில் 100க்கும் கீழேயும் சாப்பிட்டபின் 120லிருந்து 140 வரையும் இருக்கிறது. அதிகப்படியான உடம்பு வலி வயிற்றுக்கோளாறுகள் எல்லாமே நிறைய குறைந்து உடம்பும் சுசுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

மாவுச்சத்து  இல்லாத உணவுப் பொருள்களை நம் வீட்டில் தயார் செய்வது மிக சுலபம். அதோடு நவதானியங்களான கொள்ளு உளுந்து பாசிப்பயறு சிகப்பு கொண்டக்கடலையோடு சிகப்பு காராமணி கொய்னா போன்றவற்றிலும் உணவு வகைகள் செய்யலாம். நவதானியங்களைச் சேர்ந்தது தான் கோதுமையும் நெல்லும் [ அரிசியும் ]. இதில் அரிசியை மிக மிக குறைவாக சேர்க்கலாம். உடைத்த கோதுமையை சாதமாக சாம்பாருடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை ரவாவுடன் பருப்பு உசிலி கலந்து உப்புமாவாக சாப்பிடலாம்.

வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. அவரவர் வீட்டுப் பெண்மணிகள் அக்கறையோடு அனைத்தும் செய்து கொடுத்து விடுவார்கள். ஆனால் பெண்கள் தனக்கென்று ஒரு உணவும் வீட்டிலுள்ளவர்களுக்கு தனியாக ஒரு உணவு செய்வதும் தான் மிகவும் கடினம். தனக்கென்று ஒரு உணவு செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் அலுப்பும் அயர்ச்சியுமே அவர்களை தன் நலத்தை கவனிக்காமல் செய்து விடுகிறது. அதிலும்கூட மருத்துவர் கண்ணன் “ இந்த சரிவிகித உணவை தயார் செய்வது வீட்டிலிருக்கும் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. தன் கணவர் குறைத்து சாப்பிடுகிறாரே என்ற ஆதங்கத்தில் அவர்களே இன்னுமொரு இட்லியை அதிகமாக கணவருக்கு வைப்பதுண்டு. அவர்கள் தான் மன உறுதியுடன் இந்த சரிவிகித உணவை தயாரிக்க வேண்டும் “ என்று குறிப்பிடுகிறார்.

இப்போது காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்ற கேள்விக்கு வருவோம்.

காலை 6 மணி:

காப்பியோ டீயோ குடிப்பதை நிறுத்துங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சிலர் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏதேனும் மூலிகைக் கஷாயம் குடிக்கிறார்கள். சித்த மருத்துவ மனைகளில் அவ்வாரம்பூ, மாவிலை, கொய்யா இலை, இன்னும் பற்பல மூலிகைகள் கலந்த பொடி கிடைக்கிறது. அதை வாங்கி அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு கலந்தோ அல்லது வெறுமனே எதுவும் கலக்காமலும் குடிக்கலாம்.

நான் ஒரு தம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் 2 ஸ்பூன் தேன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகர் கலந்து குடிக்கிறேன். சிறுநீரகங்கள் கல்லீரல் பித்தப்பை வயிறு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் இது நல்லதென்பதால். ஆனால் இந்த ஆப்பிள் சிடெர் வினீகர் வாங்கும்போது APPLE CIDER VINEGAR WITH MOTHER என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

அடுத்து காலை உணவிற்கு  வரலாம். என்னென்ன வகைகள் செய்யலாம் என்பதை சொல்லுகிறேன்.

காலை 8 மணி:

1. ஒரு பெசரட் தோசை, தக்காளி சட்னி, மோர்

2. 1 இட்லி [ நிறைய நெய் தடவி] + ஒரு சிறு கப் தயிர்

3. அவல் வாழைத்தண்டு சாலட் அல்லது பூசணி அவல் சாலட்

[ இது நான் வாரம் இரு தடவைகள் உண்ணுவேன். அவல் அரிசியிலிருந்து தான் வந்தது என்றாலும் இயற்கை மருத்துவ மனைகளில் இதை இயற்கை உணவாக பாவிப்பதால் ஒரு கை அவல் உபயோகிப்பதில் தவறில்லை. அவலைக்கழுவி நீரை வடித்து வைத்திருந்தால் சில நிமிடங்களில் அது ஊறி விடும். பின் அதில் ஒரு கை மிகப்பொடியாக அரிந்த வாழைத்தண்டு அல்லது துருவிய பூசணி [ பூசணியைத்துருவியதும் நீரைப் பிழிந்து விட வேண்டும்] ஒரு கப் தயிர் அல்லது கெட்டி மோர் அரை ஸ்பூன் சீரகம் உப்பு, மிகப்பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் 5 எல்லாம் கலந்து வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மோரோ அல்லது தயிரோ கலந்து கால் மணி நேரம் கழித்து உண்ணவும். எல்லாம் ஊறி பழையமுது சாப்பிடும் திருப்தி கிடைக்கும். சுவையும் அதி அற்புதமாக இருக்கும். இது ஒரு முழு உணவு. இது ஒரு பெரிய கிண்ணம் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு இதை சாப்பிடுவதால் நன்றாகவே குறையும்.4.முளை கட்டிய பயறு சாலட்:

முளை கட்டிய பயறு முக்கால் கிண்ணம், அதில் பொடியாக அரிந்த வெங்காயம் 2 மேசைக்கரண்டி, தக்காளி 2 மேசைக்கரண்டி, பொதினா அல்லது கொத்தமல்லி இலைகள் சிறிது, பொடியாக அரிந்த வெள்ளரிக்காய் 3 மே.க, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு கலந்து உண்ணலாம். முளைக்கட்டிய பயிறை சிறிது உப்பு தெளித்து நீராவியில் வேக வைத்துக்கொள்ளலாம். இது தவிர இளம் பேபி கார்ன், முட்டைக்கோஸ் அரிந்தும் சேர்க்கலாம். இது மிகவும் சுவையான உணவு.

5. சிகப்பு கொண்டகடலை சுண்டல்
[ மருத்துவர்கள் வெள்ளைக்கொண்டக்கடலையை பரிந்துரை செய்வதில்லை.]

6. வேக வைத்த முட்டை 1 அல்லது 2 + பால் 1 கப்

7. கீரை ஆம்லட்

8. பயிறு பிஸ்ஸா2 கப் முழுப்பயிறு, 2 மே.க பச்சரிசி ஊறவைத்து அரைக்கும்போது அதில் ஒரு சிறு துண்டு இஞ்சி 2 பச்சை மிளகாய், 2 பிரெட் ஸ்லைசஸ் போட்டு அரைத்து தோசை மாவிற்கு கரைக்க வேண்டும். முட்டைக்கோஸ், வெங்காயம், குடமிளகாய், காரட் இவற்றை மெல்லிய துருவல்களாய் அரிந்து கொள்ள வேண்டும்.  Mozerella cheese துருவல் ஒரு கிண்ணம் வைத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தீயில் மாவை தோசையாக பரத்தி அரை ஸ்பூன் தக்காளி கெட்சப்பை சுற்றிலும் ஊற்ற வேண்டும். அதன் மேல் காய்கறித்துருவலகளை பரத்தி அதன் மேல் சீஸ் பரவலாக தூவி மூடி வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து சீஸ் உருகிப்பரவி தோசை அடியில் பொன்னிறம் வந்ததும் எடுத்து விடலாம். தக்காளி தொக்கு இதற்கு ஒரு நல்ல பக்கத்துணை. ஒன்று மட்டுமே சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்தே காணப்படும்.

இனி மதிய உணவுக்கு வரலாம்.

15 comments:

Geetha Sambasivam said...

அருமையான குறிப்புகள். குறிப்பாய் அவலும் பெசரட்டும் மனதைக் கவர்ந்தன.

ஸ்ரீராம். said...

உபயோகமான தகவல்கள்.   உங்களுக்கு சொல்லப்பட்டவற்றை எங்களுக்கும் உபயோகமாக பகிர்ந்ததற்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. நன்றி. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள குறிப்புகள். தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவல்கள்...

தொடர்கிறேன்...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! நான் சொல்லியிருக்கும் குறிப்புகளில் பெசரட் தோசை, நெய் இட்லி, அவித்த முட்டை மட்டுமே டாக்டர் சொன்னது. சில‌ நான் வழக்கமாக தயாரிப்பது. சில நான் டெஸ்ட் செய்து அது சர்க்கரையை வெகுவாக குறைக்கிறது என்பதை பரீட்சித்துப்பார்த்து எழுதியவை.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்க் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

mera balaji said...

அக்கா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தொடர்ந்து கட்டுரை படிக்கிரென் .பதில் தான் எழுதுவதில்லை.இது மிகவும் பயனுள்ள கட்டுரை.எழுதி வைத்து விட்டென்.நன்றி அக்கா.
மீரா

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பதிவு
நன்றி சகோதரியாரே

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மீரா பாலாஜி! உங்களுக்கு பயன்படும் பதிவு இது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து மதிய உணவு, இரவு உணவு பற்றி பொங்கல் கழிந்ததும் எழுதுகிறேன்.உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மாதேவி said...

நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவுகள்.