Friday, 10 January 2020

தர்பார்!!!

நேற்று இங்கே துபாயில் முதல் நாள் முதல் ஷோ என்று  தர்பார் திரைப்படம் பார்த்தோம். ஐக்கிய அரபுக்குடியரசின் துபாய் ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமா ஃபுஜைரா உம் அல் கைவான் அபு தாபி ஆகிய ஏழு எமிரேட்களிலும் ஒரே நேரத்தில் இரவு ஒன்பது மணிக்கு நகர்களின் முக்கிய திரையரங்குகளில் தர்பார் வெளியிடப்பட்டது. படத்தின் முக்கிய ஸ்பான்ஸர்களில் என் மகனின் சுற்றுலா கம்பெனியும் ஒன்று. முதல் ஷோ அதன் ஸ்பான்ஸர்களுக்கும் படத்தை வெளியிட்ட எஃ எம் ரேடியோ அழைப்பிதழ் தந்த விருந்தினர்களுக்கும் முக்கியமான சிலருக்கும் காண்பிக்கப்பட்டது. அதனால் மகனுடன் குடும்பத்தினர் யாவரும் சென்றிருந்தோம்.


சமூகத்திற்கு நல்லது செய்யும் ஹீரோ, அதனால் ஹீரோ குடும்பத்துக்குப் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது சீறியெழும் ஹீரோ வில்லனைப் பழிவாங்குவது எனப் பழைய கதைதான். ஆனால், முழுக்க முழுக்க ரஜினி படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு மரணம் தான் சரியான தண்டனை, என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் மூலம் ஸ்டைலாகவும், பொழுதுபோக்காகவும், அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இந்த 70 வயதிலும் இப்படியொரு எனர்ஜியா என்று வியக்கும் அளவுக்கு ரஜனிகாந்த் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அவ்வப்போது பாஷா திரைப்படம் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் வந்த படங்களிலேயே இதில் தான் இளமையாகத் தெரிகிறார். ஆனால் இன்னும் வலுவான திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய குறை.



 ரஜினியின் மகள் வள்ளியாக நடித்திருக்கும் ‘திரிஷ்யம்’ புகழ் நிவேதா தாமஸின் நடிப்பு ஹை கிளாஸ். ஒவ்வொரு ஃபிரேமிலும் அசத்துகிறார். அதனாலேயே அவரை மிகவும் ரசித்து  ஒன்றிப்போய் விடும் அளவு அவரின் கதாபாத்திரம் இருக்கிறது. அதனால் அவரின் எதிர்பாராத மரணம் நம்மையும் கலங்க வைக்கிறது. திருமண வயதைத் தாண்டிவிட்ட தனது அப்பாவுக்கு எப்படியாவது ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற யோகி பாபுவுடன் சேர்ந்துகொண்டு செய்யும் குறும்புகளும், அதைக் கேட்டு ரஜினி செய்யும் அலப்பறைகளும் நம்மை சிரிக்க வைக்கிறது.



ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகும் நயன்தாரா நிச்சயம் கதாநாயகி இல்லை. நிவேதா தாமஸ் தான் கதாநாயகியாக உலவுகிறார்.
வில்லனாக வரும் சுனில் ஷெட்டி மிகவும் திறமையான நடிகர் என்பதால் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஒரு சாதாரண கதாபாத்திரம் மாதிரி இருக்கிறார். பாடல்கள் எதுவும் இனிமையாக இருக்க வேண்டியதில்லை என்று தீர்மானம் போட்டு விட்டார்கள் போலிருக்கிறது. காதைக்கிழிக்கும் ரஜனியைப்புகழ்ந்து தள்ளும் பாடல்கள் தான் படம் முழுக்க!



40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் அபிமானத்தை ஒருவரால் எப்படி தக்கவைக்க முடிகிறது என்பது இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில், அவரது ஸ்டைல், காமெடி மற்றும் வசனங்கள் புரிய வைக்கும். என்று பிபிஸி விமர்சனம் சொல்வது மிக சரியானது.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

நடுநிலையான விரிவான அருமையான விமர்சனம்.சில விசயங்களைத் தவிர்க்கவே முடியாது என நான் வைத்திருக்கும் பட்டியலில் ரஜினி படமும் ஒன்று...அவசியம் இந்த வாரம் பார்க்க வேண்டும்....வாழ்த்துக்களுடன்..

ஸ்ரீராம். said...

ரசித்துப் பார்க்கக்கூடிய படம் என்பது விமர்சனங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ம்...

priyasaki said...

விமர்சனம் அருமை அக்கா. இனிமேல்தான் பார்க்கவேண்டும்.

பிலஹரி:) ) அதிரா said...

அப்போ மனோ அக்காவுக்குப் படம் பிடிச்சுப்போச்சு:)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம்.

நான் பார்க்க வாய்ப்பில்லை. :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அதனால்தான் அவர் பல ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்துள்ளார்.