Tuesday, 14 January 2020

பொங்கலோ பொங்கல்!!



சங்க காலத்தில் பொங்கல்: 

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் பாவை நோன்பு என்ற‌ விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, கதிரவன், மாடுகள் போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

அதுவே அரசர்கள் காலத்தில் இந்திர விழாவாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.



புராணகாலத்தில் பொங்கல்:

மார்கழி மாதத்துப் பனி ப்பொழிவில் ஒரு சிவாலயத்தைத்தேடி நவக்கிரக‌ங்கள் ஒன்பது பேரும் நடந்து கொண்டேயிருந்தார்கள். பிரம்மன் கொடுத்த சாபம் காரணமாக அவர்கள் ஒன்பது பேரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாப விமோசனம் பெறுவதற்காக தேடியலைந்து ஒருவாறாக சிவாலயத்தை வந்தடைந்தனர்.

முறைப்படி சிவனைத் தொழுது விரதமிருந்து கடுந்தவம் இயற்ற‌ 15-ம் நாள் இறைவனுக்குப் பொங்கல் வைத்து நிவேதனம்செய்து அதைத் தாங்களும் உண்டனர். இறைவனும் காட்சியளிக்க,தொழுநோய் மறைந்தது. அன்று தை மாதம் முதல் நாள்.  அந்தத் தலம் திருமாந்துறை. இதுவே தைப் பொங்கல் விழா உருவான புராண வரலாறாகக் கருதப்படுகிறது. இதன்காரணமாக திருமாந்துறையில் பொங்கல் திருநாள் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

இன்றைய பொங்கல்:

இன்றைய காலத்தில்  பொங்கல் திருவிழா  தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பொங்கலன்று தஞ்சை மற்றும் சென்னையில் இருக்கும் அனைத்து உறவினர்களும் எங்கள் கிராமத்திற்குச் சென்று பொங்கலைக் கொண்டாடவிருக்கிறார்கள்.. ஊரில் எங்கு பார்த்தாலும் சாணம் மெழுகிய மண் தரையும் அதன் மீது கோலங்களும் அதன் மையத்தில் பூசணிப்பூவுமாக காலையிலிருந்தே காட்சியளிக்கும். அதுவும் கிராமங்களில் கேட்கவே வேண்டாம். அத்தனை அழகாக பொங்கல் மூன்று நாட்களும் கொண்டாட்டமாக இருக்கும்.

கதிரவனுக்கு நன்றி சொல்லும் தினம் இது. நமக்கு நன்மைகள் செய்தவர்களுக்கும் நன்றி சொல்லும் தினமாக இது அமையட்டும்!!!

அனைத்து சகோதர சகோதரிகட்கு                   இனிய பொங்கல்                                           நல்வாழ்த்துக்கள்!!! 

14 comments:

KILLERGEE Devakottai said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ.

பிலஹரி:) ) அதிரா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மனோ அக்கா.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான தகவல்கள்.  ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்கேற்றவாறு காரணம் அமைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com said...

அறியாத தகவல்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகளுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

priyasaki said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் மனோக்கா.

கீதமஞ்சரி said...

சுவாரசியமான தகவல்கள். உங்களுக்கும் வாழ்த்துகள் மனோ மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

பொங்கலுக்கான சிறப்புப் பகிர்வு நன்றாக இருக்கிறது மா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்களும் கருத்துரையும் பாராட்டுக்களுமளித்த பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

Priya Anandakumar said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள், lovely write up thanks for sharing

மாதேவி said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்.