Friday 26 March 2021

காய்கறி வைத்தியம்- தொடர்ச்சி!!!

மருத்துவர் அருண் பிரகாஷ் காய்கறிகளை வேக வைக்காமல் பச்சையாகவே உண்ணும்போதுதான் அதன் முழுமையான சக்தி நமக்கு கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். எப்படியெல்லாம் சுவையாக காய்கறிகளை, முக்கியமாக அவர் குறிப்பிடும் இந்த பன்னிரெண்டு நாட்டு காய்கறிகளை சத்துள்ள உணவாக, சமைக்காமல் சாப்பிட முடியும் என்று சில செய்முறைகளை சொல்லியுள்ளார். அனைவருக்கும் பயன்படும் என்று கருதி இங்கே அவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 

நல்ல கெட்டியான தேங்காய்ப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அப்படியே மூடி வைத்தால் சில மணி நேரங்களில் அது தயிராக மாறும். அது சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்றும் மிகவும் ஆரோக்கியமானது என்றும் கூறுகிறார் மருத்துவர். 

வாழைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடலாம்?



வாழைக்காயை தோல் சீவி மிகவும் பொடிப்பொடியாக நறுக்கி அதே மடங்கு வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நாட்டு சர்க்கரை கலந்து உண்ணலாம். ஒரு மணி நேரம் ஊற வைத்து சாப்பிடும்போது இது மிகவும் சுவையாக இருக்கும்..

அதன் தோலை பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு உண்ணலாம்.

வெண் பூசணியை பச்சையாக எப்படி சாப்பிடலாம்? 



பூசணிக்காயை அதன் சதைப்பகுதியையும் அதன் தோலையும் பொடியாக நறுக்கவும். அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சித்துருவல் சேர்த்து உப்பு, வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி  சேர்த்துக் கலந்து ஊற வைக்கவும். பின் தேங்காய்ப்பாலில் செய்த மோரில் போட்டு சாப்பிடவும்.

கொத்தவரங்காயை எப்படி சாப்பிடுவது?


10 கொத்தவரங்காயை மிகவும் பொடியாக அரியவும். அதில் வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி, உப்பு கலந்து பின் கொத்தவரங்காயில் கால் பகுதி இஞ்சி துருவலும் கலந்து வைக்கவும். இவற்றை வைப்பரில் தனியாக ஒரு நிமிடம் அடிக்கவும். பின் தனியாக அரிந்த கொத்தமல்லி இலையை      [ கொத்தவரங்காயின் அளவு] வைப்பரில் போட்டெடுத்து கொத்தவரங்காயுடன் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சம அளவு தேங்காய்த்துருவல் கலந்து கொள்ளவும்.  இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது ஏதேனும் சுண்டல் வேக வைத்து அதில் கலந்தும் சாப்பிடலாம்.

புடலங்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?



மேற்கண்ட முறையில் புடலங்காயையும் செய்யலாம். கொத்தமல்லிக்கு பதிலாக புதினா சேர்க்கவும்.

பீர்க்கங்காயை எப்படி உபயோகிப்பது?




இதே போல பீர்க்கங்கங்காயின் தோலிலும் செய்யலாம். அதில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பீர்க்கங்காயை சும்மாவே சாப்பிடலாம்.

பரங்கிக்காயை எப்படி சாப்பிடுவது?



இதேபோல பரங்கிக்காயை பொடியாக நறுக்கி அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சி துருவல் சேர்த்து வைப்பரில் அடிக்கவும். பரங்கி அளவு பேரீச்சை நறுக்கி நட்டு சர்க்கரை  சிறிது சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமை மாவு 4 ஸ்பூன், நாட்டு சர்க்கரை 8 ஸ்பூன் சேர்த்து கரைத்து அது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து ஊற வைத்திருப்பவற்றை போட்டு கலக்கவும். இது பாயசம். கோதுமை கொதிக்கும்போது தேங்காயையும் சேர்க்கலாம்.

கோவைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?


கோவைக்காயையும் வெள்ளரியையும் பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுப்பொடி, மாங்காய்ப்பொடி போட்டு ஊறவைக்கவும் [ 1 மணி நேரம்] 3 நாட்டுத்தக்காளி 3ஐ வெந்நீரில் போட்டு பிறகு தோலெடுத்து அரைத்துக்கொள்ளவும்.. அதை கொதிக்க விட்டு அது ஒரு ரசப்பதத்தில் இருக்கும் போது இறக்கி ஊறியவற்றை அதில் போட்டு குடிக்கவும். இரவு நேரத்தில் குடிப்பது நல்லது..

தேங்காய்த்துருவலை எப்படி உபயோகிப்பது?  



தேங்காய்த்துருவல் ஒரு பங்கு என்றால் அதில் அரைப்பங்கு கோதுமை மாவு. ஒரு பங்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கைகளால் பிசைந்தால் எல்லம் சேர்ந்து ஒரு இனிப்பு வரும். அது உடம்புக்கு நல்லது.

எலுமிச்சையை எப்படி ஆரோக்கியமாக சாப்பிடலாம்?

 

2 தக்காளி+ ஒரு எலுமிச்சை தோலுடன் அரைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம்.

வெண்டைக்காயை எப்படி உபயோகிக்கலாம்?



வெண்டைக்காய் 10 எடுத்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து காயை தனியாக எடுத்து விட்டு  தண்ணீருடன் நட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். வறுத்த தனியா தூள் 2 ஸ்பூன், வறுத்த எள் 2 ஸ்பூன், உப்பு, மாங்காய்ப்பொடி, வெண் மிளகுப்பொடி, நாட்டு சர்க்கரை , சிறிது தேங்காய் அனைத்தையும் அரைத்து வெண்டைக்காய் கலந்து சாப்பிடவும்.

கத்தரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

2 கத்தரிக்காய், 2 தக்காளி எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்திருந்தால் அவை மிருதுவாக மாறும். பின் அவற்றை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதில் உப்பு, சிறிது சாம்பார்ப்பொடி அல்லது ரசப்பொடி கலந்து குடிக்கலாம்.

 

15 comments:

Geetha Sambasivam said...

செய்முறைகள் அனைத்தும் அருமை, எளிமை. ஆனால் இப்படிச் செய்து தொடர்ந்து சாப்பிட நம் மனதில் வலிமை வேண்டும். கட்டுப்பாட்டுடன் இருக்கணும். அது முடியுமா என்பது சந்தேகமே! எனினும் முயற்சி செய்து பார்க்கலாம். பார்ப்போம்.பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

புதிய, சுவையான, உபயோகமான தகவல்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் கொடுத்த இணைப்பின் மூலம், காணொளியில் விளக்கத்தை கேட்டேன்... இங்கு எழுத்து வடிவில் எளிதாக...

அருமை அம்மா... நன்றி...

நெல்லைத் தமிழன் said...

எனக்கென்னவோ இதில் எதையுமே சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை. சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கும் போலிருக்கு.

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள குறிப்புகள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள். இந்த முறையில் சாப்பிட முடியுமா எனப் பார்க்க வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் கீதா சாம்பசிவம்! இப்படியெல்லாம் செய்து சாப்பிட மனப்பக்குவமும் நாக்கு கட்டுப்பாடும் அவசியம் தேவை!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி நெல்லத்தமிழன்!
இந்த செய்முறை குறிப்புகள் எல்லாமே மிகவும் ருசியாக இருக்கும் என்று தான் மருத்துவர் சொல்கிறார். அத்தனையும் சுகாதாரமான குறிப்புகள் தான். கீதா சொன்ன மாதிரி செய்வதற்கு மனப்பக்குவமும் நாக்கட்டுப்பாடும் வேண்டும்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி சகோதரி

துரை செல்வராஜூ said...

10/12 ஆண்டுகளுக்கு முன்பு அடுப்பில்லாத சமையல்.. அனலில்லாத ஆரோக்கியம் - தஞ்சையில் வகுப்பு ஒன்றை நடத்தி முன் பதிவு செய்து விட்டு பயிற்சிக்கு வந்தவர்களுக்கு அடுப்பின்றித் தயாரித்த உணவுகளை வழங்கினார்கள்...

நானும் அதில் பங்கு பெற்றிருக்கிறேன்..

துரை செல்வராஜூ said...

அனைத்தும் பயனுள்ள செய்திகள்..
ஆனாலும் இதற்கு மனோ தைரியம் அதிகம் வேண்டும்..

நலம் வாழ்க...