Monday 14 December 2020

முத்துக்குவியல்-59!!!

 பெருமித முத்து:

அமீரகத்தில் இந்து கோவில்:

கடந்த 2015ல் அமீரகத்திற்கு முதல்முறையாக பிரதமர் மோடி வந்த போது, அமீரகத்தில் வசிக்கும் இந்து மகக்ளுக்காக அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய அமீரகக் குடியரசின் தலநகர் அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்காக அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. அபுதாபியின் பட்டத்து இளவரசரின் உத்தரவுப்படி துபாய் அபுதாபி ஷேக் ஜாயத் சாலையில் அல் ரக்பா என்னும் இடத்தில் உள்ள அல் முரைக்கா என்ற இடத்தில் 25000 சதுர அடி இடம் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. அதன் பின் இக்கோவில் அடிக்கல் நாட்டு விழா 2018ல் பிரதமர் மோடி மீண்டும் வந்த போது நடைபெற்றது. இதைப்பற்றி முன்னரேயே எழுதியிருந்தேன்.


இந்தக் கோவில் கட்டும் பொறுப்பு குஜராத் மாநிலத்தில் பாப்ஸ் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 27 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவிலின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. சாதாரண கம்பி கான்க்ரீட் என்றில்லாமல் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக்கோவிலுக்காக கல்தூண்கள், சிற்பப்பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 707 கனமீட்டட் அளவுள்ள பாறைகள் குடையப்பட்டு சிற்பங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


இந்து மததின் புராண இதிகாசங்களின் நிகழ்வுகள் சிற்பங்களாக உருவாகி வருகின்றன. இந்த சிற்பங்கள் செதுக்கும் பணியில் இதுவரை 2000 கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது முடிவடையும் தருவாயில் உள்ள சிற்பங்கள் கப்பல்கள் மூலம் அபுதாபிக்கு எடுத்து வரப்பட்டு கோவிலில் பொருத்தப்படும். 


அடுத்த ஆண்டு 2021 மார்ச் இறுதிக்கும் இந்தக்கோவில் சிற்பங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அதற்குள்ளாகவே சர்வதேச அளவிலான 2020ம் ஆண்டுக்கான ‘ வர்த்தக ரீதியிலான சிறந்த வடிவமைப்பு விருது’ இக்கோவிலைக் கட்டி வரும் பாப்ஸ் அமைப்பிற்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்து கோவிலின் கட்டுமானத்தில் சிறந்த எந்திர வடிவமைப்பிற்காக இந்த அமைப்பு விருதினைப்பெற்றுள்ளது. இப்போது 2-வதாக இந்த விருது கிடைத்துள்ளது.

சாதனை முத்து:

தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்கும் இடையேயுள்ள ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலக்ஷ்மி. அங்குள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறார். சென்ற வருடம் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய விண் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 'நாசா'வுக்குச் செல்ல நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4000 மாணவர்களில் இவரும் ஒருவர். மிகவும் ஏழ்மையில் இருக்கும் இவருக்காக, இவர் நாசா செல்வதற்காக‌ மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் அனைவரும் உதவ முன் வந்தார்கள். அது போல ' கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் இவருக்கு உதவ முன் வந்த போது, ஏற்கனவே அமெரிக்கா போவதற்கான உதவிகள் அனைத்தும் கிடைத்த நிலையில் வேறுமாதிரியான உதவி ஒன்றை இவர் கேட்டார். முந்திரிக்காடுகள் நிறைந்த இவர் கிராமத்தில் முந்திரிக்கொட்டைகளை வறுத்தெடுத்து அதிலிருந்து பருப்பை பிரித்தெடுத்து சாலையோரமாய் விற்பது தான் இந்த கிராமத்து மக்களின் தொழில். மிகவும் பின் தங்கிய இந்த கிராமத்தில் இருக்கும் ஓட்டு வீடுகளில் கழிப்பறை கிடையாது. காட்டுப்பக்கம் தான் அதற்கு ஒதுங்க வேண்டும். அதுவும் பெண்களுக்கு இது மிகப்பெரிய அவஸ்தை. ' எங்கள் வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டித்தர முடியுமா' என்று இவர் கேட்டார். அத‌ற்கு அந்த ' கிராமாலயா' நிறுவனம் ஒத்துக்கொண்டு 125 கழிப்பறைகளை கட்டிக்கொடுத்திற்கிறது!! இந்த மிகப்பெரிய சாதனையை செய்த இந்த ஏழைச்சிறுமியை பாராட்டுவதா அல்லது திறந்த மனதுடன் இந்த மாபெரும் உதவியைச் செய்த 'கிராமலாயாவைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.

இந்த வருடம் மே மாதம் நாசா செல்ல வேண்டியவர் கொரோனாவால் செல்ல முடியவில்லை. அதனால் அடுத்த வருடம் நாசா செல்லவிருக்கிறார் ஜெயலக்ஷ்மி!

தகவல் முத்து:

கண் தானம்:

தானமாகப்பெறக்கூடிய கண்களிலிருந்து கருவிழியை மட்டும் முறையாக அகற்றி, கருவிழி நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவரின் கருவிழியை மாற்றி அறுவை சிகிச்சை செய்வதே கண் தானத்தின் மூலம் நடைபெறுகிறது. கருவிழி நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவர்களுக்கு மட்டுமே கண் தானத்தின் மூலம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து பார்வை வழங்க முடியும். மற்ற பார்வையிழப்புகளுக்கு கண் தானம் மூலம் பெறக்கூடிய கண்களின் மூலம் தீர்வளிக்க முடியாது. 

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், இருதய நோயாளிகள், வயோதிகம், பக்கவாதம், நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண் தானம் செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண் தானம் செய்யலாம். 

அரவிந்த் கண் வங்கி,மதுரை: 0452-4356100

அரவிந்த் கண் வங்கி,கும்பகோணம்: 98428 20007


14 comments:

துரை செல்வராஜூ said...

அழகு அழகு முத்துக்களைக் கோர்த்து வழங்கியது அருமை...

ஸ்ரீராம். said...

கோவில் பற்றிய தகவல்கள் சிறப்பு.

சிறுமி, கிராமலயா இருவரையுமே பாராட்ட வேண்டும்.  வாழ்த்துவோம்.

கண்தானம்  பற்றிய தகவல்களும் சிறப்பு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கதம்பத் தொகுப்பு. சிறப்பு. ஜெயலட்சுமிக்கு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்து முத்துகளும் சிறப்பு!

ஜெயலக்ஷ்மி - நல்முத்து! பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவருக்கு!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

ஜெயலக்ஷ்மி அவர்கள் வெற்றி பெற வேண்டும்...

Geetha Sambasivam said...

அருமையான தகவல் முத்துகள். ரத்த அழுத்தம், சர்க்கரை, ஆஸ்த்மா உள்ளவர்களும் கண் தானம் செய்யலாம், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண் தானம் செய்யலாம் என்னும் நல்ல செய்தியைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

அத்தனை முத்துக்களும் அருமை.

அமீரகத்து இந்துக்கோயில், அனைத்துக் கோயில்களையும் தாண்டி அழகாக இருக்கிறது.. சூப்பராக இருக்கு சிற்ப வேலைகள், இது கூகிள் படங்களோ இல்லை நீங்கள் போய் எடுத்ததோ மனோ அக்கா.

சிறுமியின் வேண்டுகோள் பாராட்டத்தக்கது, தன் குடும்பம் தான் என நினைக்காமல் தன் கிராமத்தையே நினைத்த விதம் மிக அழகு.. அந்த மனத்தாலதான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரைராஜ்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!
படங்கள் கூகுளில் எடுத்தது தான் அதிரா! இப்போது கட்டுமானப்பணி ஆகிக்கொண்டிருப்பதால் நேரில் பார்க்க அனுமதி கிடைக்காது!