Thursday, 23 January 2020

முத்துக்குவியல்-55!!!!

அறிவிப்பு முத்து:




சென்ற பதிவுடன் நான் 400 பதிவுகளை முடித்து விட்டதை இப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. முக்கிய காரணங்களால் தமிழ்நாட்டுக்கும் அரபு நாட்டிற்கும் தொடர்ந்த பிரயாணங்கள் ஏற்பட்டதால் பிரயாணங்களையொட்டி மிகுந்த அலைச்சல்கள், உடல்நலக்குறைவுகள் எனத்தொடர்ந்து கொண்டேயிருந்ததில் மனம் விரும்பிய அளவு வலைத்தளத்தில் அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை. அப்படியும் நானூறா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இனி அதிக நேரம் வலைத்தளத்தில் செலவு செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். எனக்கு பக்க பலமாக நல்லதொரு பின்னூட்டங்கள் தொடர்ந்து கொடுத்து என் உற்சாகத்திற்கு காரணமாக இருக்கும் வலையுலக அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!

இசை முத்து:

 இப்போதெல்லாம் மிகத்திறமையான இளைஞர்கள் வயலின் வழியாக, புல்லாங்குழல் வழியாக, குரல்வழியாக சில சமயங்களில் ஃப்யூஷன் இசை வழியாக அருமையான ராகங்களையும் அதற்கான அற்புதமான பாடல்களையும் பதிவேற்றி அசத்தி வருகிறார்கள். இந்த ஃப்யூஷன் பாடல் அப்படித்தான் நம்மை அசத்துகிறது. இந்த பாடல் சந்திரகெளன்ஸ் ராகத்தில் வருகிறது. தர்பாரி கானடா போல வட இந்திய ராகம் இது. இதை இரவு ராகம் என்பார்கள். மனதை மயங்கச் செய்யும், சில சமயம் ஒரு விதமான வேதனை இருக்கும். கடவுளுக்கு ஆராதிக்கும் ராகம் என்றும் சொல்லப்படுகிறது.கேட்டு ரசியுங்கள்!!!



அசத்தும் முத்து:

கேரளாவில்  ஆலப்புழை  மாவட்டத்தில்  உள்ள செட்டிகுலங்கார தேவி  கோயிலில் 11 அடி  உயரத்தில்  ஒரு விளக்கு  இருக்கிறது.  இந்த விளக்கு  1000  திரிகள் ஏற்றக்கூடிய  வகையில்  13 அடுக்கு வரிசைகளுடன்   அமைந்துள்ளது.  1500 கிலோ எடையுள்ள  கன்மெட்டல்  என்ற  உலோகத்தால் ஆன இந்த விளக்குதான் இந்தியக் கோயில்  விளக்குகளில்  மிகப்பெரியது.




இரண்டு பொற்கொல்லர்கள் 17 துணை ஆட்கள் உதவியுடன் 18 மாதங்களில் இந்த விளக்கை செய்து முடித்துள்ளார்கள். இதன் அகலம் 6.8 அடி. இதன் மிகச்சிறிய அடுக்கில் 108 திரிகள் ஏற்ற முடியும்.

எச்சரிக்கை முத்து:

தரமற்ற தண்ணீர் விற்பனை செய்தால்:

தண்ணீர் கான்களில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, ஐ.எஸ்.ஐ முத்திரை, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் உள்ளிட்டவை கண்டிப்பாக அச்சடிக்கப்பட வேன்டும். அவ்வாறின்றியும் தரமின்றியும் தண்ணீர் வினியோகிக்கபடுவது தெரிய வந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அனுப்பலாம். விசாரணையில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சீல் வைப்பது மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் பாயும்.

ரசித்த முத்து:

இயக்கம் சிறப்புற தானம்,
பேராசை இல்லா சேமிப்பு,
ஆணவம் இல்லா அறிவு,
ஏமாளி ஆகாத இரக்கக்குணம்,
பூமியை வணங்கும் பக்தி,
மரங்களை நண்பனாக்கும் யுக்தி,
வாழ்வின் வளத்திற்கான அற்புத சக்தி!!!

Tuesday, 14 January 2020

பொங்கலோ பொங்கல்!!



சங்க காலத்தில் பொங்கல்: 

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் பாவை நோன்பு என்ற‌ விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, கதிரவன், மாடுகள் போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

அதுவே அரசர்கள் காலத்தில் இந்திர விழாவாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.



புராணகாலத்தில் பொங்கல்:

மார்கழி மாதத்துப் பனி ப்பொழிவில் ஒரு சிவாலயத்தைத்தேடி நவக்கிரக‌ங்கள் ஒன்பது பேரும் நடந்து கொண்டேயிருந்தார்கள். பிரம்மன் கொடுத்த சாபம் காரணமாக அவர்கள் ஒன்பது பேரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாப விமோசனம் பெறுவதற்காக தேடியலைந்து ஒருவாறாக சிவாலயத்தை வந்தடைந்தனர்.

முறைப்படி சிவனைத் தொழுது விரதமிருந்து கடுந்தவம் இயற்ற‌ 15-ம் நாள் இறைவனுக்குப் பொங்கல் வைத்து நிவேதனம்செய்து அதைத் தாங்களும் உண்டனர். இறைவனும் காட்சியளிக்க,தொழுநோய் மறைந்தது. அன்று தை மாதம் முதல் நாள்.  அந்தத் தலம் திருமாந்துறை. இதுவே தைப் பொங்கல் விழா உருவான புராண வரலாறாகக் கருதப்படுகிறது. இதன்காரணமாக திருமாந்துறையில் பொங்கல் திருநாள் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

இன்றைய பொங்கல்:

இன்றைய காலத்தில்  பொங்கல் திருவிழா  தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பொங்கலன்று தஞ்சை மற்றும் சென்னையில் இருக்கும் அனைத்து உறவினர்களும் எங்கள் கிராமத்திற்குச் சென்று பொங்கலைக் கொண்டாடவிருக்கிறார்கள்.. ஊரில் எங்கு பார்த்தாலும் சாணம் மெழுகிய மண் தரையும் அதன் மீது கோலங்களும் அதன் மையத்தில் பூசணிப்பூவுமாக காலையிலிருந்தே காட்சியளிக்கும். அதுவும் கிராமங்களில் கேட்கவே வேண்டாம். அத்தனை அழகாக பொங்கல் மூன்று நாட்களும் கொண்டாட்டமாக இருக்கும்.

கதிரவனுக்கு நன்றி சொல்லும் தினம் இது. நமக்கு நன்மைகள் செய்தவர்களுக்கும் நன்றி சொல்லும் தினமாக இது அமையட்டும்!!!

அனைத்து சகோதர சகோதரிகட்கு                   இனிய பொங்கல்                                           நல்வாழ்த்துக்கள்!!! 

Friday, 10 January 2020

தர்பார்!!!

நேற்று இங்கே துபாயில் முதல் நாள் முதல் ஷோ என்று  தர்பார் திரைப்படம் பார்த்தோம். ஐக்கிய அரபுக்குடியரசின் துபாய் ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமா ஃபுஜைரா உம் அல் கைவான் அபு தாபி ஆகிய ஏழு எமிரேட்களிலும் ஒரே நேரத்தில் இரவு ஒன்பது மணிக்கு நகர்களின் முக்கிய திரையரங்குகளில் தர்பார் வெளியிடப்பட்டது. படத்தின் முக்கிய ஸ்பான்ஸர்களில் என் மகனின் சுற்றுலா கம்பெனியும் ஒன்று. முதல் ஷோ அதன் ஸ்பான்ஸர்களுக்கும் படத்தை வெளியிட்ட எஃ எம் ரேடியோ அழைப்பிதழ் தந்த விருந்தினர்களுக்கும் முக்கியமான சிலருக்கும் காண்பிக்கப்பட்டது. அதனால் மகனுடன் குடும்பத்தினர் யாவரும் சென்றிருந்தோம்.


சமூகத்திற்கு நல்லது செய்யும் ஹீரோ, அதனால் ஹீரோ குடும்பத்துக்குப் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது சீறியெழும் ஹீரோ வில்லனைப் பழிவாங்குவது எனப் பழைய கதைதான். ஆனால், முழுக்க முழுக்க ரஜினி படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு மரணம் தான் சரியான தண்டனை, என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் மூலம் ஸ்டைலாகவும், பொழுதுபோக்காகவும், அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இந்த 70 வயதிலும் இப்படியொரு எனர்ஜியா என்று வியக்கும் அளவுக்கு ரஜனிகாந்த் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அவ்வப்போது பாஷா திரைப்படம் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் வந்த படங்களிலேயே இதில் தான் இளமையாகத் தெரிகிறார். ஆனால் இன்னும் வலுவான திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய குறை.



 ரஜினியின் மகள் வள்ளியாக நடித்திருக்கும் ‘திரிஷ்யம்’ புகழ் நிவேதா தாமஸின் நடிப்பு ஹை கிளாஸ். ஒவ்வொரு ஃபிரேமிலும் அசத்துகிறார். அதனாலேயே அவரை மிகவும் ரசித்து  ஒன்றிப்போய் விடும் அளவு அவரின் கதாபாத்திரம் இருக்கிறது. அதனால் அவரின் எதிர்பாராத மரணம் நம்மையும் கலங்க வைக்கிறது. திருமண வயதைத் தாண்டிவிட்ட தனது அப்பாவுக்கு எப்படியாவது ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற யோகி பாபுவுடன் சேர்ந்துகொண்டு செய்யும் குறும்புகளும், அதைக் கேட்டு ரஜினி செய்யும் அலப்பறைகளும் நம்மை சிரிக்க வைக்கிறது.



ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகும் நயன்தாரா நிச்சயம் கதாநாயகி இல்லை. நிவேதா தாமஸ் தான் கதாநாயகியாக உலவுகிறார்.
வில்லனாக வரும் சுனில் ஷெட்டி மிகவும் திறமையான நடிகர் என்பதால் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஒரு சாதாரண கதாபாத்திரம் மாதிரி இருக்கிறார். பாடல்கள் எதுவும் இனிமையாக இருக்க வேண்டியதில்லை என்று தீர்மானம் போட்டு விட்டார்கள் போலிருக்கிறது. காதைக்கிழிக்கும் ரஜனியைப்புகழ்ந்து தள்ளும் பாடல்கள் தான் படம் முழுக்க!



40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் அபிமானத்தை ஒருவரால் எப்படி தக்கவைக்க முடிகிறது என்பது இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில், அவரது ஸ்டைல், காமெடி மற்றும் வசனங்கள் புரிய வைக்கும். என்று பிபிஸி விமர்சனம் சொல்வது மிக சரியானது.

Saturday, 4 January 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறைகள்.!!!!

சரிவிகித உணவு




சர்க்கரை நோய்க்காக இது வரை மருத்துவர்கள் காலையில் குறைந்த அளவில் நீராவியில் செய்த பலகாரங்களான இட்லி, இடியாப்பம் இவற்றைத்தான் பரிந்துரை செய்து நான் பார்த்திருக்கிறேன். இரவும் அதே தான். சாப்பிடும் அளவின் உணவு குறைவாக இருக்க வேண்டும். சப்பாத்தியானால் 2 இருக்க வேண்டும். இனிப்புகளையும் இனிப்பு அதிகமான பழங்களையும் அறவே தவிர்க்க வேண்டும். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். இது தான் வழக்கமான முறை.

ஆனால் மருத்துவர் கண்ணன் இதிலிருந்து வேறுபடுகிறார்.

“ எல்லாப்பொழுதும் நாம் மாவுச்சத்தையே உண்பதால் நம் உடலுக்குத் தேவையான மாவுச்சத்து இரு மடங்காக உள்ளே போகிறது. அதிகப்படியான மாவுச்சத்து இன்சுலின் என்னும் ஹார்மோனால் கொழுப்பாக மாறுகிறது. இந்த கொழுப்பு தான் உடலுக்கு தீங்கை விளைவிப்பது. இன்சுலின் குறைபாடு இருப்பவர்களுக்கு அந்த அதிகப்படியான மாவுச்சத்து எந்த வித மாறுதலுக்கும் ஆளாகாமல் அப்படியே இரத்த்தத்தில் தேங்கி நிற்பதால் அதுவே சர்க்கரை நோயாக மாறுகிறது.” என்று சொல்லும் அவர் “ எந்த அளவிற்கு சிறுதானியங்கள், அரிசி வகைகள், கோதுமை, கேழ்வரகு வகைகள் இவற்றைக்குறைத்து, நவதானியங்களுக்கு மாறுகிறோமோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு குறையும் “ என்பதை வலியுறுத்துகிறார்.
அவர் சொன்னது போல நவதானியங்கள், பால், பால் சார்ந்த பொருள்கள், காய்கறிகளைக்கொண்டு அதி ருசியான உணவு வகைகளை செய்ய முடியும். பழக்கத்திலிருந்து விடுபடும் மன வலிமையும் திருப்தியும் மட்டுமே வேண்டும்.

நவதானியங்கள்

அவர் பாணியில் எனக்கு ஒரு டயட் சார்ட் போட்டு அதன் படியே உணவு எடுத்து வருவதில் சர்க்கரை வெறும் வயிற்றில் 100க்கும் கீழேயும் சாப்பிட்டபின் 120லிருந்து 140 வரையும் இருக்கிறது. அதிகப்படியான உடம்பு வலி வயிற்றுக்கோளாறுகள் எல்லாமே நிறைய குறைந்து உடம்பும் சுசுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

மாவுச்சத்து  இல்லாத உணவுப் பொருள்களை நம் வீட்டில் தயார் செய்வது மிக சுலபம். அதோடு நவதானியங்களான கொள்ளு உளுந்து பாசிப்பயறு சிகப்பு கொண்டக்கடலையோடு சிகப்பு காராமணி கொய்னா போன்றவற்றிலும் உணவு வகைகள் செய்யலாம். நவதானியங்களைச் சேர்ந்தது தான் கோதுமையும் நெல்லும் [ அரிசியும் ]. இதில் அரிசியை மிக மிக குறைவாக சேர்க்கலாம். உடைத்த கோதுமையை சாதமாக சாம்பாருடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை ரவாவுடன் பருப்பு உசிலி கலந்து உப்புமாவாக சாப்பிடலாம்.

வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. அவரவர் வீட்டுப் பெண்மணிகள் அக்கறையோடு அனைத்தும் செய்து கொடுத்து விடுவார்கள். ஆனால் பெண்கள் தனக்கென்று ஒரு உணவும் வீட்டிலுள்ளவர்களுக்கு தனியாக ஒரு உணவு செய்வதும் தான் மிகவும் கடினம். தனக்கென்று ஒரு உணவு செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் அலுப்பும் அயர்ச்சியுமே அவர்களை தன் நலத்தை கவனிக்காமல் செய்து விடுகிறது. அதிலும்கூட மருத்துவர் கண்ணன் “ இந்த சரிவிகித உணவை தயார் செய்வது வீட்டிலிருக்கும் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. தன் கணவர் குறைத்து சாப்பிடுகிறாரே என்ற ஆதங்கத்தில் அவர்களே இன்னுமொரு இட்லியை அதிகமாக கணவருக்கு வைப்பதுண்டு. அவர்கள் தான் மன உறுதியுடன் இந்த சரிவிகித உணவை தயாரிக்க வேண்டும் “ என்று குறிப்பிடுகிறார்.

இப்போது காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்ற கேள்விக்கு வருவோம்.

காலை 6 மணி:

காப்பியோ டீயோ குடிப்பதை நிறுத்துங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சிலர் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏதேனும் மூலிகைக் கஷாயம் குடிக்கிறார்கள். சித்த மருத்துவ மனைகளில் அவ்வாரம்பூ, மாவிலை, கொய்யா இலை, இன்னும் பற்பல மூலிகைகள் கலந்த பொடி கிடைக்கிறது. அதை வாங்கி அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு கலந்தோ அல்லது வெறுமனே எதுவும் கலக்காமலும் குடிக்கலாம்.

நான் ஒரு தம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் 2 ஸ்பூன் தேன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகர் கலந்து குடிக்கிறேன். சிறுநீரகங்கள் கல்லீரல் பித்தப்பை வயிறு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் இது நல்லதென்பதால். ஆனால் இந்த ஆப்பிள் சிடெர் வினீகர் வாங்கும்போது APPLE CIDER VINEGAR WITH MOTHER என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

அடுத்து காலை உணவிற்கு  வரலாம். என்னென்ன வகைகள் செய்யலாம் என்பதை சொல்லுகிறேன்.

காலை 8 மணி:

1. ஒரு பெசரட் தோசை, தக்காளி சட்னி, மோர்

2. 1 இட்லி [ நிறைய நெய் தடவி] + ஒரு சிறு கப் தயிர்

3. அவல் வாழைத்தண்டு சாலட் அல்லது பூசணி அவல் சாலட்

[ இது நான் வாரம் இரு தடவைகள் உண்ணுவேன். அவல் அரிசியிலிருந்து தான் வந்தது என்றாலும் இயற்கை மருத்துவ மனைகளில் இதை இயற்கை உணவாக பாவிப்பதால் ஒரு கை அவல் உபயோகிப்பதில் தவறில்லை. அவலைக்கழுவி நீரை வடித்து வைத்திருந்தால் சில நிமிடங்களில் அது ஊறி விடும். பின் அதில் ஒரு கை மிகப்பொடியாக அரிந்த வாழைத்தண்டு அல்லது துருவிய பூசணி [ பூசணியைத்துருவியதும் நீரைப் பிழிந்து விட வேண்டும்] ஒரு கப் தயிர் அல்லது கெட்டி மோர் அரை ஸ்பூன் சீரகம் உப்பு, மிகப்பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் 5 எல்லாம் கலந்து வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மோரோ அல்லது தயிரோ கலந்து கால் மணி நேரம் கழித்து உண்ணவும். எல்லாம் ஊறி பழையமுது சாப்பிடும் திருப்தி கிடைக்கும். சுவையும் அதி அற்புதமாக இருக்கும். இது ஒரு முழு உணவு. இது ஒரு பெரிய கிண்ணம் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு இதை சாப்பிடுவதால் நன்றாகவே குறையும்.



4.முளை கட்டிய பயறு சாலட்:

முளை கட்டிய பயறு முக்கால் கிண்ணம், அதில் பொடியாக அரிந்த வெங்காயம் 2 மேசைக்கரண்டி, தக்காளி 2 மேசைக்கரண்டி, பொதினா அல்லது கொத்தமல்லி இலைகள் சிறிது, பொடியாக அரிந்த வெள்ளரிக்காய் 3 மே.க, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு கலந்து உண்ணலாம். முளைக்கட்டிய பயிறை சிறிது உப்பு தெளித்து நீராவியில் வேக வைத்துக்கொள்ளலாம். இது தவிர இளம் பேபி கார்ன், முட்டைக்கோஸ் அரிந்தும் சேர்க்கலாம். இது மிகவும் சுவையான உணவு.

5. சிகப்பு கொண்டகடலை சுண்டல்
[ மருத்துவர்கள் வெள்ளைக்கொண்டக்கடலையை பரிந்துரை செய்வதில்லை.]

6. வேக வைத்த முட்டை 1 அல்லது 2 + பால் 1 கப்

7. கீரை ஆம்லட்

8. பயிறு பிஸ்ஸா



2 கப் முழுப்பயிறு, 2 மே.க பச்சரிசி ஊறவைத்து அரைக்கும்போது அதில் ஒரு சிறு துண்டு இஞ்சி 2 பச்சை மிளகாய், 2 பிரெட் ஸ்லைசஸ் போட்டு அரைத்து தோசை மாவிற்கு கரைக்க வேண்டும். முட்டைக்கோஸ், வெங்காயம், குடமிளகாய், காரட் இவற்றை மெல்லிய துருவல்களாய் அரிந்து கொள்ள வேண்டும்.  Mozerella cheese துருவல் ஒரு கிண்ணம் வைத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தீயில் மாவை தோசையாக பரத்தி அரை ஸ்பூன் தக்காளி கெட்சப்பை சுற்றிலும் ஊற்ற வேண்டும். அதன் மேல் காய்கறித்துருவலகளை பரத்தி அதன் மேல் சீஸ் பரவலாக தூவி மூடி வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து சீஸ் உருகிப்பரவி தோசை அடியில் பொன்னிறம் வந்ததும் எடுத்து விடலாம். தக்காளி தொக்கு இதற்கு ஒரு நல்ல பக்கத்துணை. ஒன்று மட்டுமே சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்தே காணப்படும்.

இனி மதிய உணவுக்கு வரலாம்.

Wednesday, 1 January 2020

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


               அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
                 அமைய வேண்டும் நல்வாழ்வு!
                 அன்பான இதயங்கள் புடை சூழ
      அமைதியும் மகிழ்வுமாய் வளங்களுடன் வாழ
                   அகமலர்ந்து வாழ்த்துகிறேன்!!!