Tuesday 3 December 2019

முத்துக்குவியல்-54!!!!


தகவல் முத்து:
கண் நீர் அழுத்த நோய்
கிளாக்கோமா என்னும் கண் நீர் அழுத்த நோய் பார்வை நரம்பை பாதிக்கக்கூடியது. பார்வை நரம்பு என்பது கண்களிலிருந்து மூளைக்கு தகவல்களை எடுத்துச் செல்வது. கண்ணில் ஏற்படும் அதிக நீர் அழுத்தம் பார்வை நரம்பை அழுத்தி, பாதித்து முதலில் பக்க பார்வையை குறைத்து விடும். அதன் பிறகும் ஏற்படும் அதிக அழுத்தம் படிப்படியாக பார்வையை குறைத்து விடும்.
பிறந்த குழந்தையிலிருந்து அனைத்து வயதினரையும் தாக்கும் நோய் இது. ஆனால் பலருக்கு இந்த நோயின் அறிகுறிகள் எதுவும் தெரியாது.அதனால் 40 வயதுக்கு மேலுள்ள அனைவருமே கண் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

கண் நீர் அழுத்த நோயால் பார்வை பாதிக்கப்பட்டால் இழந்த பார்வையை மீட்க இயலாது. எனினும் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் பார்வை இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதற்கு தொடர்ந்த மருத்துவரின் கண்காணிப்பும் சிகிச்சையும் மிக மிக அவசியம்.
இது பரம்பரையாக தாக்கக்கூடியது. நெருங்கிய உறவில் கிளாக்கோமா பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால் மற்றவர்களும் வருடத்திற்கொரு முறை கிளாக்கோமா பரிசோதனை நல்லதொரு கண் மருத்துவ மனையில் செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உயர் கண் அழுத்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் உயர் இரத்த அழுத்தத்தால் உயர் கண் அழுத்தம் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆச்சரிய முத்து:
என் மூத்த சகோதரிக்கு 75 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு வயிற்று வலி  தொடர்ந்து வந்ததன் காரணமாக பல வித பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு அம்ப்ளிக்கல் ஹெர்னியா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமென்று ஆலோசனை செய்ததில் இதய பரிசோதனைகளில் அவரின் இதயத்தின் வால்வு பகுதியில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. அதனால் அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து வ‌ரலாமென்று மருத்துவர்கள் சொன்னதில் அவரும் காரமேயில்லாத செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே சாப்பிட்டு வந்தார். ஆனால் உடலினுள்ளே குடல் இருப்பதே தெரியாமல் சுற்றிக்கொண்டு, வலி, வாந்தி என்று சென்ற வாரம் திடீரென்று மிகவும் அவதிப்பட, அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். குடல் வெடித்தும் விடும் அபாயம் இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்து குடலை ஏற்றி வைத்து தைக்க முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை நடைபெறும் மேடையிலேயே எது வேண்டுமானாலும் நடக்குமென்று சொல்லியே செய்தார்கள். இதய மருத்துவர், மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் மூவர் அருகிலிருக்க அறுவை சிகிச்சை நடந்தது. இங்கே துபாயில் நாங்களெல்லாம் கதி கலங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் அறுவை சிகிச்சை எந்த வித பிரச்சினையுமின்றி நடந்தேறியது!!! என் சகோதரி உயிர் பிழைத்தார் என்பதையே நம்ப முடியவில்லை! மூன்று வருடங்களாக பயந்து கொண்டிருந்த விஷயம் இது!
புன்னகை முத்து:

என் பேரன் வாங்கிய மெடல்களை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு என் பேத்தி கொடுத்த போஸ்!



மருத்துவ முத்து:
பூனையால் கண்களில் ஏற்படும் பாதிப்பு:

பூனையின் கழிவில் உள்ள நுண் தொற்றுக் கிருமி TOXOPLASMOSIS GONDII  கண்களை பாதிக்கும். இதன் காரணமாக பார்வைக்குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தக்கிருமி மனிதனின் இரத்தத்தில் கலந்து பின் கண்களை பாதிக்கிறது. எந்த இடத்தில் அழற்சி ஏற்படுகிறதோ அந்த இடத்தைப்பொறுத்து பார்வை இழப்பை குணப்படுத்த முடியும். பாதிப்பு பார்வை நரம்புகளில் இருந்தால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது. பார்வை நரம்பை சுற்றியுள்ள இடங்களில் பார்வை இழப்பை குறைக்கலாம்.
இசைக்கும் முத்து:
துன்பங்களிலும் பிரச்சினைகளிலுமிருந்து சிறிது நேரம் நம்மை மறந்து இளைப்பாற நல்ல புத்தகங்களும் இசையும் வேண்டும் என்று சொல்பவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் வாசிப்பதைக்காட்டிலும் சற்று உயர்ந்த நிலையிலுள்ளது இசை. வாசிக்கும்போது கூட சில சம‌யங்களில் அதிலிருந்து கவனம் சிதறும். ஆனால் நல்ல இசை பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கும்போது கூட நம்மை அதிலிருந்து தன்பால் வசப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது.
சத்யநாராயணன் ஒரு பிறவி இசைக்கலைஞர். மேற்கத்திய வாத்தியத்தில் ஆறு வயது பாலகனாக இருந்தபோதே மாபெரும் கச்சேரி செய்தவர். 



லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் எலெக்ட்ரானிக் கீபோர்டில் எட்டாவது கிரேடை தேர்ச்சி செய்த இளைஞர்களில் ஒருவர். 1900ற்கும் மேற்பட்ட கச்சேரிகளை உலகமுழுதும் நடத்தியுள்ளார். கலைமாமணி உள்பட பல பட்டங்களைப்பெற்றுள்ள‌ இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கன்யாகுமரி முதலியவர்களிடம் பாடம் பெற்று இணைந்து வாசித்துள்ளார். பல வாத்தியங்கள் இவரின் கை விரல்களில் உயிர் பெற்று நர்த்தனமாடுகின்றன.


இங்கே ஹம்ஸத்வனி ராகத்தை கலைஞர் சத்யநாராயணன் தன் எலெக்ட்ரானிக் கீபோர்டில் ட்ரம், கிடார், மிருதங்கம், வயலின், கடம் புடை சூழ வாசிப்பதை ரசித்து அனுபவிக்கலாம்! 

20 comments:

priyasaki said...

ஆச்சரிழ முத்தில் தங்கள் அக்கா நலமாக இருப்பதை அறிந்து மிக்க மகிய்ச்சி. அவர் பூரணநலம் பெற என் பிரார்த்தனை.
புன்னகைமுத்து ல பேத்தி ஸோ க்யூட். மருத்துவ,கவல் முத்தில் மிக அருமையான விழிப்புணர்வு தகவல். மிக அருமையான இசைமுத்து.

ஸ்ரீராம். said...

அனைத்து முத்துக்களையும் ரசித்தேன்.   முதல் முத்து பூனை வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியது.  ஆனால் நாம் வளர்க்கும் பூனைகள் வீட்டை விட்டு வெளியேறி கண்காணாத இடத்தில்தான் கழிவை மேற்கொள்கின்றன.   உங்கள் சகோதரி பற்றி சொல்லியிருப்பது மகிழ்ச்சி.   வாதாபி கணபதி அப்புறம் கேட்கவேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்கள் பெயரனுக்கு வாழ்த்துகள்

Anuprem said...

சுவையான முத்துக்கள் ...


கண் நீர் அழுத்த நோய்..நல்ல தகவல்

அறுவை சிகிச்சை எந்த வித பிரச்சினையுமின்றி நடந்தேறியது!!! என் சகோதரி உயிர் பிழைத்தார் ...மிக மகிழ்ச்சி

புன்னகை முத்து:...ஆஹா அழகு

இசைக்கும் முத்து:...சுவாரஸ்யம் ..

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் தகவலுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பெயரனுக்கான இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

கோமதி அரசு said...

ஆச்சிரிய முத்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
புன்னகை முத்து பேத்தி பேரனின் பதக்கங்களை அணிந்து காட்சி அளிப்பது மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து முத்துகளும் அருமை...

பேத்தியின் சேட்டையையும் ரசித்தேன்...

kowsy said...

அரிய தகவல்கள் பெற்றேன். எனது மகள் பூனை இருக்கும் இடத்திற்குச் சென்றால் தும்முவாள். இது சிலவேளை கண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பேத்தியை ரசித்ததற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!!

என் சகோதரிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் மேசையிலேயே எது வேண்டுமானாலும் நடக்கும் என்று மருத்துவர்கள் சொன்னதால் மிகவும் நடுங்கிப்போயிருந்ததுடன் உயிரிழக்கும் சதவிகிதம் மிகவும் அதிகமாக இருந்ததாலும் மிகவும் கலங்கிப்போயிருந்தோம். வலி பொறுக்க முடியாமல் தான் என் சகோதரியே இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். அதனால் நம்பிக்கையற்றுப்போயிருந்ததற்கு நேர்மாறாக அவர்கள் சின்ன சேதாரம்கூட இல்லாமல் உயிர் தப்பியது எங்களால் நம்பவே முடியாத ஆச்சரியமாகப்போய் விட்டது.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி கெளசி!

பூனையால் வரும் தொற்று பற்றிய தகவல் மதுரையில் தலைமையகத்தை வைத்திருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் மருத்துவர் அளித்தது.

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி தனபாலன்!!

முற்றும் அறிந்த அதிரா said...

வழமைபோல அனைத்து முத்துக்களும் அருமை, இம்முறை கண்பற்றிய தகவல் கூடுதலாக இருக்கு.

உங்கள் அக்கா நலமடைந்தது மிக்க மகிழ்ச்சி...

Bhanumathy Venkateswaran said...

அரிய செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் பேரன் இன்னும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். 

ராமலக்ஷ்மி said...

தங்கள் சகோதரி பற்றிய பகிர்வு மகிழ்ச்சி தருகிறது. விரைவில் பூரண நலம் பெறப் பிரார்த்தனைகள்.

கண் நீர் அழுத்த நோய் மற்றும் பூனைகளால் கண்களுக்கு வரும் பாதிப்பு பற்றிய செய்திகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

பேரனுக்கு வாழ்த்துகள். பேத்தியும் இதே போல பல மெடல்களைப் பெற்றிடவும் வாழ்த்துகள்:)!

நல்ல தொகுப்பு.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் என் சகோதரிக்கான பிரார்த்தனைகளுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!