Monday, 25 November 2019

பீட்ரூட் பயிறு பொரியல்!!!


பீட்ரூட்டில் அதிக மருத்துவ பயன்கள் இருந்தாலும் மற்ற காய்கறிகள் போல இது அதிகம் சமையலில் பங்கேற்பதில்லை. அதன் அதிக இனிப்பு சுவை தான் காரணமென்று நினைக்கிறேன்.   

பொதுவாய் பீட்ரூட்டில் அல்வா ஜுஸ் முதலியவை மிகவும் பிரபலம்.,  பொரியல் எல்லோரும் செய்வதுண்டு. அது இனிப்பு சுவையானது என்பதால் காரம் கூடுதலாக சேர்த்தால் தான் சுவை அதிகமாகத் தெரியும். இந்த பொரியல் பீட்ரூட்டுடன் வேக வைத்த முழுப்பயறு சேர்த்து செய்வது. செய்முறை கேரள சமையல் முறையைச் சேர்ந்தது. மிகவும் ருசியாக இருக்கும் இந்த பொரியல், ரசம், சாம்பார் இவற்றுக்கு பொருத்தமான பக்கத்துணை!
பீட்ரூட் பயிறு பொரியல்

தேவையானவை:
பெரியதாக பீட்ரூட்-2
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
முழுப்பயிறு- கால் கப்
அரைக்க:
சின்ன வெங்காயம்- 5, பச்சை மிளகாய்- 3, பூண்டு பற்கள் சிறியது- 4, சீரகம்- அரை ஸ்பூன், தேங்காய்த்துருவல்- ஒரு கை

செய்முறை:
முழுப்பயறை முதல் நாளே ஊறவைத்து மறு நாள் தண்ணீரை வ‌டித்து விட்டு வேறு தண்ணீரால் அது முழுகும் வரை நிரப்பி, போதுமான உப்பு, சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதென்றால் கவனம் தேவை. இரண்டு விசில் போதும். அதிக விசில் என்றால் பயிறு குழைந்து விடும். அல்லது சாதாரணமாகவே வேக வைக்கலாம்.
 அரைக்கக்கொடுத்திருப்பவற்றை மையாக அரைக்காமல் சிதைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அது பொரிந்ததும் உ.பருப்பு, காயம் சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். சில தடவைகள் கிளறிய பிறகு சிதைத்து வைத்திருப்பவற்றை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் குறைந்த தீயில் கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் பயிறு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

11 comments:

ஸ்ரீராம். said...

சுவையான குறிப்பு.

பிலஹரி:) ) அதிரா said...

நாங்கள் பொன்னாங்காணிக்கு பயறு சேர்ப்போம், இது வித்தியாசமாக இருக்கு குறிப்பு, செய்து பார்த்திடலாம்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

priyasaki said...

படத்தில் பார்க்கவே நன்றாகவும், வித்தியாசமாகவும் இருக்கு. அருமையான குறிப்பு.

கோமதி அரசு said...

நன்றாக இருக்கிறது பீட்ரூட் பயிறு பொரியல்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

kowsy said...

இதுவரை இம்முறையில் பீட்ரூட் சமைத்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்