Saturday 21 September 2019

குன்றின் மேலிட்ட விளக்கு!!!


திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பற்றி ஒரு பதிவு. நிறைய பேருக்கு இவரைப்பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக சில விபரங்கள். சிறந்த மனித நேயமுள்ளவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுகலைப்பட்டங்கள், முனைவர் பட்டங்கள் பெற்று கோவையிலிருக்கும் கல்லூரி ஒன்றில் விரிவிரையாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு என்பது அவரது வேலைக்கு, வயதையொட்டிய காரணமாக ஏற்பட்டதே தவிர அவருடைய மனதுக்கும் மேன்மையான சிந்தனைகளுக்குமல்ல. அருமையான கருத்துக்களுடனும் உயர்ந்த சிந்தனைகளுடனும் தெளிவுடனும் அழகிய தமிழில் இவர் பேசும்போது இவரின் நாவன்மை நம் உடலை மட்டுமல்ல, மனதையும் சிலிர்க்க வைக்கிறது.
குன்றின் மேலிட்ட விளக்காய் திகழ்கிறார் இவர்! இந்த தீபத்தின் சுடர்கள்  தன்னைச் சுற்றியுள்ள அத்தனையையும் அத்தனை மனங்களையும் பிரகாசிக்க வைக்கிறது!



அவரின் சொற்பொழிவுகளிலிருந்து சில முத்துக்களை இங்கே மாலையாக கோர்த்திருக்கிறேன்.
ஆண்மை அழகைச் சார்ந்தது, பெண்மை என்பது வீரத்தைச் சார்ந்தது என்று நீங்கள் சொல்வது சரியா என்று ஒருவர் கேட்க அழகான பதில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனிடமிருந்து வந்தது. பெண் முறத்தால் அடித்து புலியை விரட்டவில்லை. மன உரத்தால் விரட்டினாள். “அழகிய தோகையை விரித்தாடுவது மயில். பிடரி மிகுந்த அழகிய சிங்கம் ஆண். ஆனால் எல்லைக்காளி வீரம் மிகுந்தவள். உடல் உறுதி அப்பாவிடம் இருக்கலாம். ஆனால் மன உறுதி அம்மாவிடம் தான் இருக்கிறது. வரம் கொடுப்பது ஆண் தெய்வம், வதம் செய்வது பெண் தெய்வமாகத்தான் எப்போதும் இருக்கிறது.”     
14 வயதிலிருந்து 17 வயது வரையுள்ள குழந்தைகள் குழந்தைகளாக இருப்பது மிகவும் கடினமானது. எனக்குக் கிடைக்காததெல்லம் என் குழந்தைக்கு கிடைக்கணும் என்று சொல்லும் பெற்றோர், எனக்கு எத்தனை நல்ல விஷயங்கள் கிடைத்தது, அதெல்லாம் என் குழந்தைக்கு கிடைக்கணும் என்று சொல்லாதது ஏன்? கூட்டுக்குடும்பத்தில் இருந்த போது பகிர்ந்துண்ண கற்றுக்கொண்டோம். பொறுமை கற்றோம்.ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள‌ கற்றோம். தோல்வியைக்கற்றோம். இவற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டாமா? நாம் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது என்பது சரி. ஆனால் என் குழந்தை கஷ்டமே படக்கூடாது என்பது சரியா? '
எங்க காலத்தில் எப்ப‌டி இருந்தது தெரியுமா என்று சொல்லும் பெற்றோர் 2019ல் 14, 15, 16, 17 வயது குழந்தைகள் அவர்களுடைய‌ குழந்தைத்தனத்தை என்றைக்கோ தொலைத்து விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்தக்குழந்தைகள் கண்டிப்பாக மொபைல் ஃபோன் கண்டு பிடிக்கவில்லை. மோசமான , கூச்சப்படக்கூடிய படங்களையோ, பாடல்களையோ உருவாக்கியவர்கள் அல்ல.  இவற்றையெல்லாம் உருவாக்கியது 40, 45 வயதிற்கு மேலுள்ளவ‌ர்கள் தான். பசி என்று நம்மிடம் கையேந்தும் குழந்தைக்ளுக்கு வெறும் குப்பையைத் தருகின்றவர்கள் இவர்கள். எங்களுக்கு முன்னால் சென்ற சமுதாயம் இப்படியெல்லாம் பண்ணவில்லை. அவர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு கல்வி வேண்டுமென்று பாடுபட்டார்கள்.மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று போராடினார்கள். காமராஜர், பாரதி, பாரதிதாசன், அப்துல் கலாம் எல்லோரும் மூத்த தலைமுறை எப்ப்டி இருக்க வேன்டுமோ அப்படி வாழ்ந்து விட்டு போனார்கள்.”
குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் தெரியுமா! ஒரு பக்கம் ஆசிரியரும் இன்னொரு பக்கம் பெற்றோரும் நின்று குழந்தையை பாதுகாக்க வேன்டும். விளக்கு சாதாரணமாகவே எரியும். ஆனால் ஊழிக்காற்றில் அது எரிய வேண்டும். பெருமழையில் அது எரிய வேண்டும். எத்தனை துன்பம் வந்தாலும் அது அணைந்து விடாமல் எரிய வைக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இருக்கிறது.


சைக்கிள் ஓட்ட அன்று பழக்கப்ப‌டுத்த உற‌வுகள் அப்பா, அண்ணா, சித்தப்பா என்று இருந்தார்கள். விழுந்தால் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள‌ பொறுப்புள்ள‌வர்கள் இருந்த காலம் இருந்தது. இன்றைக்கு சைக்கிள் பழகும்போது இருபக்கமும் சப்போர்ட்டிங் வீல்ஸ் உள்ள‌து. விழாமல் உன்னை நீயே பார்த்துக்கொள் என்று சொல்லும்போது, அங்கே பொறுப்பின்மை வந்து விடுகிறது. இப்படி நம் கையை உதறி விடும்போது அதைப்பிடித்துக்கொள்ள‌ சமுதாயத்தில் அசுர சக்திகளின் கைகள் காத்துக்கொன்டிருக்கின்றன. அத‌ன் கைகளில் குழந்தைகள் அகப்பட்டுக்கொண்ட பின் அதற்கப்புறம் உட்கார்ந்து அழக்கூடாது. என் குழந்தை தடுமாறி விட்டது, தப்பு செய்து விட்டது என்று.”
போகிற போக்கில் விதைகளை தூவிப்போகிற உழவனல்ல நான். நின்று விதைகளை ஊன்றி விட்டுப்போகிற உழவன் நான். ஏனெனில் விதைகளைத் தூவினால் அது வரப்பில் விழலாம், பள்ளத்தில் விழலாம், பாதையில் விழலாம். வயலில்தான் விழும் என்று அர்த்தமில்லை.
மழை வரும்வரை நெருஞ்சி பூக்க காத்திருக்கும் . ஆனால் குறிஞ்சி பூக்க 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும்”.
எல்லா அம்மாக்களும் தன் குழந்தைகளை நொந்து தான் பெற்றிருப்பார்கள். ஆனால் எல்லா குழந்தைகளும் அடுத்தவர் நோவை போக்கக்கூடிய குழந்தைகளாகுமா என்று தெரியாது.”


Dyslexia -வால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைப்பற்றி சொல்கிறார் ஒரு மேடையில்.
"  உன்னை யாரும் புரிந்து கொள்லவில்லையென்றால் என்ன செய்வாய்? " என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு பளீரென்று  சிரித்தது அவன் முகம்! யாராலுமே அப்படி அழகாய் சிரிக்க முடியாது. மனசு சிரிச்சால் மட்டுமே அந்த சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம் விழும் !
அந்த குழந்தை சொன்னது, ' எனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. எனக்கு புரிகிறது அவர்களுக்கு என்னைப்புரியவில்லை என்று!' எவ்வளவு பெரிய தத்துவம் இது! ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாதபோது தான் இணக்கமில்லாமல் பிணக்கம் வருகிறது. ' என்னை உனக்கு புரியவில்லை என்பது எனக்குப்புரிகிறது' என்று சொல்லும்போதே சண்டைக்கான சூழ்நிலையே அங்கில்லையே? போர் தொடங்குவதற்கு முன்னமேயே அமைதிப்பிரகடனம் ஏற்படுகிறதே? எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம் இது!
பெண்களுக்கு அவர் சொல்லுகிறார்:
உங்கள் கணவரிடம் பார்க்கக்கூடிய எல்லா நல்ல குணங்களுக்கும் உங்கள் மாமன், மாமிக்கு நன்றி சொல்லி கொண்டாட உங்களால் முடிந்தால் நல்லதொரு குடும்பத்திற்கான அஸ்திவாரத்தை அங்கு தான் உங்களால் போட முடியும். குடும்பம் என்கிற வங்கியில் அன்பு என்கிற அக்கவுண்ட் பெருகினால்தான் உங்கள் வயோதிகக்காலத்தில் அதிலிருந்து உங்களுக்கு எல்லாமே கிடைக்கும்.”
பெற்றவர்கள் கிடைக்காமல் கிடைத்த வரம் போன்றவர்கள். அதை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல குழ‌ந்தைகள் வாராது வந்த மாமணியைப்போன்றவர்கள். அவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். சிறுசிறு ஏமாற்றங்களை தாங்கப்பழக்க வேண்டும்.”

17 comments:

Avargal Unmaigal said...

இவருக்கு இத்தனை வயது இருக்கும் என்று தெரியாது.. அவரின் பேச்சை கேட்டு அவர் மீது ஒரு தலை காதல் கொண்டு இருந்தேன்....இவருக்கு உறவாகவோ நண்பர்களாகவோ இருக்கும் அனைத்து பேரும் பாக்கியவான்கள்

priyasaki said...

என்னை மிகவும் கவர்ந்த அழகான பேச்சாளர். சமீபகாலமாக YouTube ல் பேச்சை கேட்டு வருகிறேன். அருமையானதொகுப்பு அக்கா.

ஸ்ரீராம். said...

கேட்டிருக்கிறேன்.    எடுத்துக் கொடுத்திருக்கும் விஷயங்களும் படித்து ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி. இவரது ஓரிரு சொற்பொழிவுகளைக் கேட்டு நானும் வியந்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

இவருடைய சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன்.
மிக அருமையான தொகுப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பேச்சாளர்...

துரை செல்வராஜூ said...

திருமதி. ஜெயந்தி ஸ்ரீபாலகிருஷ்ணன் அவர்களது உரையினை பல்முறை கேட்டிருக்கின்றேன்..

நிறைவாகப் பேசக் கூடியவர்களுள் இவரும் ஒருவர்...
அவரைப் பற்றிய பதிவு அருமை...

வாழ்க பல்லாண்டு...

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் மதுரைத்தமிழன்! பழந்தமிழில் சொன்ன மாதிரி, நல்லவர்களுடன் நட்பு கொள்வதும் ஒரு கொடுப்பினை தானே? வருகைக்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வந்து ரசித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

Thenammai Lakshmanan said...

அருமையான பேச்சாளரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மனோ மேம்

வெங்கட் நாகராஜ் said...

சிறந்த பேச்சாளர்... சில காணொளிகள் கண்டு இருக்கிறேன்.

Anuprem said...

திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்...மிக பிடித்த பேச்சாளர் ..



முக நூலில் அவரை தொடரும் பலரில் நானும் ஒருவள் என்பதில் எப்பொழுதும் மகிழ்ச்சியே ..


புன்னகைததும்பும் முகமும் ...சீரிய சிந்தனையும் என வாழும் அற்புத பெண் இவர்கள்