Sunday 4 September 2016

குளோபல் விபாஸனா பகோடா!

Which two persons are rare in the world? One who serves others selflessly without expecting anything in return; and one who is grateful toward anyone who does one a kindness. These two persons are rare in the world. -‍ கெளதம புத்தா

சென்ற வருடம் மும்பை சென்றிருந்தபோது அமைதியான ஒரு இடத்திற்குச்  சென்றிருந்தோம்.அது தான் குளோபல் விபாஸனா பகோடா!அமைதியான, அழகான, அசத்தலான இந்த பகோடாவை ரசித்தபோது மனதின் பிரமிப்பு ஒவ்வொரு நிமிடமும் அகலேவேயில்லை. அத்தனை அழகு! இந்த பகோடாவைச்சுற்றி பொன்னிற வண்ணத்தால் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களைப்படித்த போது மனதில் சொல்லவொண்ணாத அமைதி ஏற்பட்டது.

இந்த வாக்கியங்களும் தியானமும் உலகெங்கும் பரவினால் உலகில் எத்தனை பேர் மனத்தெளிவு அடைவார்கள், குரோதங்கள் மறைந்து எப்படியெல்லாம் அன்பினால் இந்தப் பெருவெளி நிறையும் என்று மனது ஏங்கியது. 


நுழைவாசல்
இந்த பகோடா விபாஸனா என்ற தியானம் மேற்கொள்வதற்காகவும் புத்தருடைய கொள்கைகளுக்கு நன்றி சொல்லும் வகையிலும் 2000ஆம் ஆண்டு கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. அரபிக்கடலுக்கும் கோரை என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள‌ இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மிக அருகில் அரபிக்கடலின் அலைகள் சலசலத்துக்கொண்டிருக்கின்றன. இது மும்பாயில் மேற்கு போரிவலியில் கோரை என்னும் கிராமத்தில் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பர்மீய கலைத்திறனும் இந்திய கலைத்திறனுமாய் இணைந்து கட்டப்பட்டிருக்கிறது. 2009ல் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இதைத்திறந்து வைத்தார். இந்த பகோடா கட்டப்பட்டதன் நோக்கம் இது உலக அமைதிக்கு ஒரு சின்னமாக விளங்க வேன்டும் என்பது தான்.

நுழைவாசலிலிருந்து பகோடா! முகப்புக்கட்டிடத்தின் கலைநயமான அழகைப்பாருங்கள்!
இந்திய கட்டடக்கலை நிபுணர் சந்துபாய் சோம்புரா என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது. இதன் உள்ளே அமைந்திருக்கும் சில அரிதான கற்களை பர்மீயர்கள் தானம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்காத தங்க நிற வண்ண‌ம் பூச தாய்லாந்து மக்கள் உதவினார்கள். ஒரு மாணவர் இந்தக்கட்டிடம் அமைந்துள்ள இடத்தை தானமாக வழங்க, மற்ற மாணவர்கள் இக்கட்டிடம் கட்ட 800 கோடி ரூபாயை திரட்டிக்கொடுத்துள்ளார்கள்.

பகோடா செல்லப் படிகளில் ஏறும்போதுஇது உலகிலேயே மிக நீள‌மான கல்லாலான குவிமண்டபத்தை [ DOME ]  தன்னகத்தே அடக்கியுள்ள‌து. எந்த விதமான பில்லர்கள் துணையின்றி இது கட்டப்பட்டிருக்கிறது.

பகோடாவிற்கு ஏறும் வழியில்
பகோடாவின் அழகிய பக்கவாட்டுத்தோற்ற‌ங்களும் கலை நயமிக்க வேலைப்பாடுகளும்!!
பகோடா ஏறுமுன் பக்கவாட்டில் அமைந்துள்ள‌ புத்தர் சிலை!
இதற்குள் சுமார் 8000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய வகையில் மிகப்பெரிய கூடம் அமைந்துள்ளது. சில வகை தியானங்கள் இலவசமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இந்த விபாஸ‌னா தியானம் உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

தினமும் காலை 9.30லிருந்து மாலை 7 மணி வரை மக்கள் பார்க்க அனுமதியுண்டு. மாலை 6.30 வரை நுழைய அனுமதிக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் கிடையாது. கீழ்க்கண்ட வலைத்தளத்தில் மற்ற தகவல்களை அறியலாம்.

http://www.globalpagoda.org/

இந்த பகோடா ஏகாந்தமான, நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதொரு இடத்தில் அமைந்திருப்பதால் சொந்தமான காரில் அதுவும் நண்பர்களுடன் போவது தான் நல்லது. மாலை நான்கு மணிக்குச் சென்றால் வெய்யிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் எல்லாவற்றையும் ரசித்துப்பார்க்கலாம். மாலை ஐந்தரைக்குத் திரும்பி விடலாம்.

 

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் கலை நுணுக்கங்களுடன் கூடிய படங்களும், பதிவும், விளக்கங்களும் மிகவும் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

’குளோபல் விபாஸனா பகோடா’ என்ற பெயரும் வெங்காய தூள் பகோடா போன்று எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையில் ருசியாகவே உள்ளது. :)

துரை செல்வராஜூ said...

அழகிய படங்களைப் பார்க்கும் போதே -
அங்கு அமைதியும் ஆனந்தமும் தவழ்வதை உணரமுடிகின்றது..

வாழ்க நலம்..

கோமதி அரசு said...

அழகான படங்கள். அருமையான விளக்கங்கள். கடைசியில்
தேவையான குறிப்பு.
நன்றி.

Yaathoramani.blogspot.com said...

இரண்டாண்டுகளுக்கு முன்பு
மும்பை சென்றிருந்தேன்
இப்படி ஒரு அற்புதமான ஸ்தலம் இருப்பது
தெரியாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது
படங்களுடன் பகிர்வு நேரடியாகப் பார்க்கிற
உணர்வைத் தருகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

அருள்மொழிவர்மன் said...

மும்பையில் சில வருடங்கள் வசித்ததுண்டு, ஆனால் இக்கோவிலைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. புகைப்படங்கள் அருமை.

Anuprem said...

பிரம்மாண்டமான கோவில்.... படங்களும் ...தகவல்களும்..அருமை

V Mawley said...

தங்கள் பதிவே நெஞ்சை நிறைக்கிறது ..மிக்க மிக்க நன்றி
மாலி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இன்றுதான் பகோடாவைக் கண்டேன். புத்தகயா சென்றபோது ஓர் அமைதியை உணர்ந்தேன். அதே அமைதியை இங்கே பதிவினைப் படிக்கும்போதும், புகைப்படங்களைப் பார்த்தபோதும் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான படங்கள், தகவல்கள். அமைதி தவழும் இடமாகக் காட்சியளிக்கிறது! பகிர்விற்கு மிக்க நன்றி. நிறைய அறிந்து கொண்டோம்..