Friday, 26 August 2016

முத்துக்குவியல்-42 !!!!

அசத்தும் முத்து:

உமைத் பவன் பாலஸ்

உலகிலேயே மிகச்சிறந்த‌ தங்கும் விடுதி நம் இந்தியாவில்தான் இருக்கிறது! ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரில் அமைந்துள்ள உமைத் பவன் அரண்மணையில் ஒரு பகுதியில் இது இயங்கி வருகிறது. இந்த அரண்மனை தற்போதைய மஹாராஜாவான கஜ் சிங்கின் பாட்டனாரான உமைத் சிங் பெயரில் தான்  இயங்கி வருகிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் மியூசியம் இயங்கி வருகிறது. இன்னொரு பகுதியில் ராஜ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மூன்றாவது பகுதி தான் உலகத்திலேயே தாஜ் பாலஸ் ஹோட்டல் என்ற பெரிய ஹோட்டலாக தாஜ் குழுமத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.சமீபத்தில் உலகிலேயே மிகச்சிறந்த ஹோட்டல் என்ற விருதையும் இந்த அரண்மனை பெற்றிருக்கிறது. ராஜஸ்தானில் பஞ்சம் வந்த காலத்தில் ராஜா உமைத் சிங் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவே இதைக்கட்டினாராம்! 1928ல் ஆரம்பிக்கப்பட்டு 1943ல் முடிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு உள்ள மிகச் சிறிய அறைக்கான கட்டணம் 60000 டாலர்கள் [ 40 லட்சம் ரூபாய்!]


ஆச்சரிய முத்து:
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செல்களும் நியூட்ரான்களும் சக்தி பெறுகின்றனவாம். குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தோப்புக்கரணம் போட ஆரம்பித்த பிறகு நிறைய மதிப்பெண்கள் வாங்குவதாக அமெரிக்க மருத்துவர் எரிக் ராபின்ஸ் கண்டு பிடித்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார்.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

குறிப்பு முத்து:

காய்கறிச்செடிகள் செழித்து வளர, விதைகள் ஊன்றும்போது அவைகளுடன் 2 ஸ்பூன் எப்ஸம் சால்ட் கலந்து தெளிக்கவும். செடிகள் பூச்சிகள் தொந்தரவின்றி செழித்து வளரும்!!

மருத்துவ முத்து:

வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாவதற்கு துளசி ஒரு கண்கண்ட மருந்தாக செயல்படுகிறது.
துளசி இலைகளை வாய்க்குள் வைத்து அதக்கியவாறே மெல்லும்போது வெளி வரும் சாறு அந்தப்புண்களின்மீது பட்டுச் செல்லும்போது எரிச்சல் ஏற்படுகிறது. ஒரு தடவை 10 துளசி இலைகளை மென்று அதன் சாறு உள்ளே போனதுமே சிறிது நேரத்தில் புண் ஆற ஆரம்பித்திருப்பது புரியும்.  மூன்று, நான்கு தடவைகள் துளசி இலைகளை மென்று வந்தால் முற்றிலுமாக வாய்ப்புண் மறைந்து விடும்.

இசை முத்து:

எல்லோருக்கும் 'பனி விழும் மலர் வனம்' என்ற திரைப்பாடல் பற்றித்தெரியும். அது ஒரு FUSION MUSIC-ஆக கார்த்திக் குரலில் பல‌ ஸ்வரங்களுடன் இங்கே இசை விருந்தே நடை பெறுகிறது! கேட்டுப்பாருங்கள்!
25 comments:

'பரிவை' சே.குமார் said...

40 லட்சமா????
இனி தோப்புக்கரணம் போட்டுட வேண்டியதுதான்...
செடிகளுக்கான குறிப்பு அருமை...
பாடல் கிளாசிக்...
முத்துக்குவியல் அருமை அம்மா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வொன்றும் அருமை. தேடிப்பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொறு செய்தியும் முத்துக்கள்தான்
நன்றி

ஸ்ரீராம். said...

இசை முத்து - மிகவும் ரசித்தேன். மற்ற முத்துக்களையும் ரசித்தேன். துளசி டிப்ஸ் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரை செல்வராஜூ said...

செய்திகள் அழகு.. அருமை..

அருள்மொழிவர்மன் said...

இந்த வார முத்துக்குவியல் அசத்தல். ஒரு நாளைக்கு 40 லட்சம் என்பதைக் கேட்கும்போதே தலை சுற்றுகிறது. நானும் தோப்புக்கரணம் போடுவதை சில நாட்களாகத் தொடர்ந்து வருகிறேன். சுவாரசியமான தகவல்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இங்கு உள்ள மிகச் சிறிய அறைக்கான கட்டணம் 60000 டாலர்கள் [ 40 லட்சம் ரூபாய்!] //

மிகவும் கொள்ளை மலிவாகவே உள்ளது.

அடுத்த பதிவர் சந்திப்பினை இங்குகூட நடத்தலாமா என நாம் யோசிக்கலாம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’ஆச்சர்ய முத்து’வில் நாம் இன்று ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை.

இதையெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து நம் ஹிந்துமத முன்னோர்கள் சொல்லிக் கொடுத்துப்போய் இருக்கிறார்கள்.

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கமே இன்றும் உள்ளது.

ooooo

‘தோர்பி: கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது.

‘தோர்பி:’ என்றால் ’கைகளினால்’ என்று அர்த்தம்.

‘கர்ணம்’ என்றால் காது.

‘தோர்பி: கர்ணம்’ என்றால் கைகளினால் காதைப் பிடித்துக் கொள்வது.

இதுபற்றி மேலும் விபரங்கள் இதோ இந்தப்பதிவினில் உள்ளன.

http://gopu1949.blogspot.in/2013/05/2.html#comment-form

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலம் காலமாக துளஸியையும், துளஸி கலந்த தீர்த்தத்தையும் பெருமாள் கோயில்களில் பிரஸாதமாகக் கொடுப்பதே, தாங்கள் இங்கு சொல்லியுள்ள மருத்துவ முத்துவின் அடிப்படை நோக்கத்தில் மட்டுமே தான்.

மற்ற முத்துக்கள் அனைத்துமே அருமையோ அருமை.

பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிவனுக்கு உகந்த வில்வம், பெருமாளுக்கு உகந்த துளஸி, மஹமாயி (மாரியம்மன்) அம்பாளுக்கு உகந்த வேப்பிலை இவை மூன்றிலும் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

அதுபோலவே ஹிந்துக்கள் தெய்வமாக வழிபட்டு வரும் பசு மாட்டிலிருந்து கிடைக்கும் (கழிவுகள் உள்பட) பால், தயிர், வெண்ணெய், நெய் என அனைத்துப்பொருட்களிலுமே நம் உடலையும் உள்ளத்தையும் சுத்தம் செய்யும் ஆற்றல்கள் அடங்கியுள்ளன. இதற்கு ’பஞ்ச கவ்யம்’ என்று பெயர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மிகப் பழமை வாய்ந்த நம் நாட்டு வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் இவைபற்றியெல்லாம் மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன.

இதையெல்லாம் ஒவ்வொன்றாக நவீன முறையில் ஆராய்ந்து வெளிநாட்டுக்காரன் நமக்குச் சொன்னால் மட்டுமே நாமும் இன்று நம்பி வருகிறோம். இதுதான் மிகவும் கொடுமையாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உதாரணமாக, நமது முன்னோர்கள் நெல்லின் கருக்காயான கரித்தூளையும், உப்பையும் கலந்து தூளாக்கி பல் துலக்கி வந்தார்கள். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்றும் அன்றே சொல்லி வந்தார்கள்.

இன்று உப்பு கலந்த ஸ்பெஷல் பேஸ்ட் என்றும், வேம்பு கலந்த பேஸ்ட் என்றும் ஏதேதோ விளம்பரங்கள் செய்து மக்கள் பணத்தை உறிஞ்சி எடுத்து வருகிறார்கள். இதுதான் இன்றைய நவநாகரீக உலகம்.

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமையான முத்துகள்.....

பகிர்வுக்கு நன்றி.

சிவகுமாரன் said...

அனைத்துமே அரிய முத்துக்கள். இசைமுத்து மிகவும் அருமை. நன்றி மேடம்

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

நானும் முதலில் நம்பவில்லை. இந்தத்துறையில் வெகுவாக சம்பந்தப்பட்டுள்ள என் மகனிடம் ஒரு முறை கேட்டு உறுதி செய்து கொண்டேன். பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி அருள்மொழிவர்மன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான விளக்கங்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சிவகுமாரன்!

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா முத்துகளும் அருமை. அந்த தாஜ் ஹோட்டல் பற்றி அறிந்திருக்கிறோம்...ஆனால் தகவல்கள் புதிது.

இசை முத்து அருமை ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கின்றோம் என்றாலும் மீண்டும் கேட்டு ரசித்தோம். பகிர்விற்கு மிக்க நன்றி