Sunday 1 January 2023

புத்தாண்டு வாழ்த்துக்களும் குளோபல் வில்லேஜ் புகைப்படங்களும்!!

 அன்பு நிறைந்த நட்புள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



குளோபல் வில்லேஜ்- பகுதி ஒன்று!!

வழக்கம்போல, சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு குளோபல் வில்லேஜ் சென்று கண்டு களித்தோம். நான் முன்பேயே சொல்வது போல ஐந்தாறு நாடுகளின் அரங்குகளுக்குத்தான் செல்ல முடிந்தது. மாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் சென்று இரவு 10 மணியளவில் திரும்பினாலும் இந்த அளவிற்கே பார்க்க முடிந்தது. முழுவதும் பார்த்து ரசிக்க 3 தடவையாவது சென்று வர வேண்டும். 

குளோபல் வில்லேஜ் பற்றி சில செய்திகள்.

துபாயில் குளோபல் வில்லேஜ் கண்காட்சி 26ம் தடவையாக தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. 90 நாடுகளைச் சேர்ந்த பண்பாட்டு  அடையாளங்கள் இடம் பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய சுற்றுலா, ஷாப்பிங், மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக இது கருதப்படுகிறது.

இம்முறை குளோபல் வில்லேஜ் புத்தாண்டு பிறக்கும்போது ஏழு முறை புத்தாண்டை கொண்டாட தீர்மானித்துள்ளது. பிலிப்பன்ஸ் நாட்டு புத்தாண்டு இரவு 8 மணிக்கும்,  தாய்லாந்து நாட்டின் புத்தாண்டு இரவு 9 மணிக்கும்,  பங்களாதேஷ் புத்தாண்டு இரவு  10 மணிக்கும், இந்திய நாட்டின் புத்தாண்டு இரவு 10.30 மணிக்கும், பாகிஸ்தான் நாட்டின் புத்தாண்டு இரவு 11 மணிக்கும் ஐக்கிய அமீரகத்தின் புத்தாண்டு இரவு 12 மணிக்கும், துருக்கி நாட்டின் புத்தாண்டு இரவு 1 மணிக்கும் கொண்டாடுகிறது. 

 ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டினை விட அளவிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்கிறது.

இந்த விழா நடைபெறும் ஒரு மாதகாலம் முழுதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களுக்கு இந்த உலகக் கிராமம் ஒரு முக்கிய இலக்காகும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர், எகிப்து, சிரியா, தாய்லாந்து, லெபனான் போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோல வித்தியாசமான கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும் ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும் மக்களைப் பெருமளவில் கவர்கின்றன.

ஒவ்வோராண்டும் இந்தியா தனது காட்சியகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதேபோல் வேறும் பல நாடுகள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

இனி புகைப்படங்களைப்பார்த்து ரசிக்கலாம். 

தூரத்திலிருந்து குளோபல் வில்லேஜ்

கார் பார்க்கிலிருந்து நுழைவாயில் வரை அழைத்துச்செல்ல அங்கங்கே காத்திருக்கும் ரிக்ஷாக்கள்!! 


உள்ளே நுழைந்ததும் பல நாட்டுச் சின்னங்களுடன் பாதை தொடங்குகிறது!


குவைத்தும் ஏமனும் அடுத்தடுத்து!

துருக்கி நுழைவாயில்

எகிப்து

இடையே நிர்மாணிக்கப்பட்டுள்ள கால்வாய். இங்கே படகுகளில் சவாரி செய்யலாம்.

கரையோரமாய் floating market! பழக்கடைகள், இளநீர், தின்பண்டங்கள் விற்கும் கடைகள் ஏராளம்! தாய்லாந்து நாட்டின் இளநீர் இங்கே கிடைக்கும்!

தொடரும்!!

15 comments:

கோமதி அரசு said...

புத்தாண்டு வாழ்த்து அருமை.
குளோபல் வில்லேஜ் புகைபடங்கள் நன்றாக இருக்கிறது.
தொடர்கிறேன்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்!

ஸ்ரீராம். said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  படங்களும் விவரங்களும் பிரமாதம்.

Avargal Unmaigal said...

அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

நெல்லைத்தமிழன் said...

இவற்றைப் பலமுறை பார்த்த நினைவு வருகிறது. புதிதாகவும் உள்ளது.

ஆங்கிலப்்புத்தாண்டு வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

படங்கள் சூப்பர்.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மனோ அக்கா. ஆரோக்கியமான மகிழ்வான ஆண்டாக அமைந்திட வாழ்த்துகள்

க்ளோபல் வில்லேஜ் அழகு. அது உருவாக உழைத்த உழைப்பாளிகளின் கைத்திறன் தெரிகிறது அவர்களையும் வாழ்த்துவோம்.

கலைநயம் மிக்கதான நிகழ்வு. நல்ல பொழுது போக்கு இல்லையா மனோ அக்கா? பல விஷயங்கள் அறிய முடியும் என்று நினைக்கிறேன். ஆமாம் பல நாட்கள் சென்றால்தான் எல்லாம் பார்க்க முடியும் என்று தெரிகிறது.

இடையில் கால்வாய், படகுச் சவாரி....துபாய் மக்களுக்கு நல்ல உற்சாகப் பொழுது போக்கு அம்சம்...

படங்கள் அத்தனையும் அழகு...ரசித்துப் பார்த்தேன்

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

புத்தாண்டு வாழ்த்துகள்...

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றி மதுரைத்தமிழன்!!

மனோ சாமிநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!

ஒவ்வொரு வருடமும் குளோபல் வில்லேஜின் அரங்கங்கள் புதியதாக மாறும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் அதைப்பார்த்து ரசிக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

படங்களை ரசித்துப்பார்த்ததற்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கீதா!

உலகத்தின் பற்பல ஆச்சரியங்களும் பிரமிப்புகளும் துபாயில் இருக்கின்றன. இங்கே 47 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்னும் சிலவற்றை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் குளோபல் வில்லேஜ் செல்வதை மட்டும் நான் மறக்காமல் செய்கிறேன். அந்த அளவு இங்கே செல்வதும் நம் இந்திய அரங்கினை பெருமையுடன் பார்த்து ரசிப்பதும் மிகவும் பிடிக்கும்.

மாதேவி said...

குளோபல் விலேஜ் கண்காட்சி அருமை. புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. புத்தாண்டு.அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும். தங்களுக்கும் வாழ்த்துக்கள்!