Friday 1 October 2021

எக்ஸ்போ துபாய் 2020!!!!!

 

எக்ஸ்போ துபாய் 2020

துபாயில் மிக பிரம்மாண்டமாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு 7.30 மணியளவில் தொடங்கி 1.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமீரகம் மற்றும் இந்தியா உப்பட 192 நாடுகள் பங்கேற்றது.  நாங்களும் ஆன்லைனில் பார்த்தோம். மொத்தம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற‌ தொடக்க விழா நிகழ்ச்சிகளில் இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்க பாடகி மரியா கரே, அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லையோனல் மெஸ்சி, மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான அமீரக இசைக்கலைஞர் ஹுசைன் அல் ஜாஸ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.


ஏ.ஆர் ரஹ்மான் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் ‘பிர்தோஸ் ஆர்கெஸ்ட்ரா’ இசைக்குழுவினரின் புதுமையான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.பிரமாண்டமான மேடையில் வண்ணமயமான விளக்கொளியில் நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. ஒளி
, ஒலி காட்சி அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரையின் பின்புலத்தில் வியப்பூட்டும் வகையில் காட்சியமைப்புகள் ஒளி வெள்ளத்தில் மக்களை பரவசப்படுத்தின. லேசரின் உதவியில் மிக அழகான காட்சி அமைப்புகள் நிமிடத்துக்கு நிமிடம் வண்ணங்களை மாற்றி திகைக்க வைத்தன.

இன்றிலிருந்து இந்த எக்ஸ்போ 2020 ஆரம்பமாகிறது. 

இனி எக்ஸ்போ 2020 பற்றிய முக்கிய செய்திகள்.......

மத்திய கிழக்கு, தெற்காசியா, ஆப்பிரிக்கா பகுதியில் நடைபெறும் முதல் உலக எக்ஸ்போ இது. அரபு நாடுகள் அனைத்திற்கும் முதன் முதலாக நடத்தப்படும் முதல் உலகக் கண்காட்சி இது!

நவம்பர் 27, 2013 அன்று பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போஷிஷன்ஸ் 154வது பொதுச்சபையை நடத்தியபோது, மொத்தம் 164 நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தார்கள். அதில் 116 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய அமீரகம் வென்று தன் போட்டியாளரான ரஷ்யாவைப் பின்னுக்குத்தள்ளி உலக எக்ஸ்போ வழங்கும் நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.சர்வதேசக் கண்காட்சியை நடத்தும் பிரான்ஸின் சர்வதேசக் கண்காட்சிகள் கூட்டமைப்பு (BIE) 2013ம் ஆண்டே 2020ம் ஆண்டில் கண்காட்சி நடைபெறும் இடத்தை அறிவித்திருந்தது. அதையடுத்து 2016ம் ஆண்டு தொடங்கி இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது அமீரகம். முதலில் இந்த உலகக் கண்காட்சி 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரையிலான ஆறு மாத காலத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் 1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் மார்க்கெட்டிங் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு எக்ஸ்போ 2020 என்றே பெயரிட்டுள்ளது அமீரகம்.


INDIA PAVILION 

இதில் 192 நாடுகளின் பெவிலியன்கள், நேரடி பொழுது போக்குகள், மறக்க முடியாத சந்திப்பு இடங்கள், நகைச்சுவையான ஹாங்கவுட்கள் என்று பல வகையான நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. முற்றிலும் எதிர்கால சிந்தனைகளுடன் புதிய கண்டுபிடிப்புகளை பல பொழுது போக்குகளுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இடம் தான் எக்ஸ்போ துபாய். இதன் தொடக்க நாள் 1/10/2021 நிறைவு நாள் மார்ச் 31ந்தேதி ஆகும். 3.48 சதுர அடி கிலோ மீட்டர் பரப்பளவில் துபாய் தெற்கு மாவட்டத்தில் அல் மக்தும் சர்வதேச விமான நிலையம் [ இந்த விமான நிலையம் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது] அருகே இது அமைந்துள்ளது.


INDIAN PAVILION AT NIGHT

துபாய் எக்ஸ்போ ' மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளைக்கொண்டே இயங்கவுள்ளது. இதில் மூன்று துணை கருப்பொருள்கள் உள்ளன: வாய்ப்பு, மொபிலிட்டி, மற்றும் நிலைத்தன்மை. பங்கேற்கும் நாடுகள் இந்த கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, புதிய எல்லைகளை ஆராய்ந்து, வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தங்கள் யோசனைகளை வெளிப்படுத்தலாம். பிரத்தியேக அரங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.


U.A.E PAVILION

ஒவ்வொரு நாட்டின் பெவிலியன்களிலும் சாகசத்தையும் ஆச்சரியத்தையும் இங்கு காணலாம். வெவ்வேறு 192 நாடுகளின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் பயணமாக இது திகழும். ஒவ்வொரு நாளும் அறுபதுக்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும். பாடல், ஆடல், தேசீய தினக் கொண்டாட்டங்கள், ஓபராக்கள், விளையாட்டு நிகச்சிகள் என்று எதற்குமே குறைவில்லை. 192 நாடுகளின் சிறப்பு உணவு வகைகளுடன் 200க்கும் மேற்பட்ட உணவகங்கள் பார்வையாளர்கள் ரசித்து சாப்பிட இங்கே காத்திருக்கின்றன.

இந்திய அரங்கில் இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் பங்கேற்க உள்ளது. மொத்தம் இந்தியாவின் 9 மத்திய மந்திரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.இதில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தனித்துவ மிக்க அரங்கில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு அரங்கேறியுள்ளது. மேலும் ஒளி மற்றும் ஒலி காட்சிகளுடன் பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி முன் “அல் வாசல் பிளாசா” உள்ளது. இதில் கோள வடிவிலான 360 டிகிரியில் ஒளிரும் திரையும் அமைத்துள்ளனர்.  மேலும் இந்த கண்காட்சியை அமீரகம் முழுவதும் 430 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமீரகத்தில் அந்நிய முதலீட்டை பிரதமர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நிலையில் இந்த எக்ஸ்போ அதற்கான தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட், சுற்றுச்சூழல் மண்டலங்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்து முதலீடுகளை ஊக்கப்படுத்தி வருகிறது அமீரகம்.  இந்தக் கண்காட்சியை தொடக்கமாகக் கொண்டு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க இந்த நாடு திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ஒட்டி உலகின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம் ஒன்றிலும் துபாய் முதலீடு செய்துள்ளது. இது  தவிர துபாயின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு மொத்தம் 82 புதிய திட்டங்களை இந்தக் கண்காட்சி மூலம் செயல்படுத்த உள்ளது அமீரகம்.

இந்த வளாகத்தில் ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

 


குறிப்பாக 5 டி.எஸ். என்ற கருப்பொருளில் திறன், வர்த்தகம்,  பாரம்பரியம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இடம்பெற உள்ளது. இதில் அந்த கட்டிடத்தில் மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது.


ANOTHER IMAGE OF INDIAN PAVILION

 ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட பெவிலியன்களுடன், பிரதிநிதிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்புகள் மூலம் உலகில் எவ்வாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள், இதனால் சுற்றுலா பயணிகள், சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளிகளை அழைக்கிறார்கள். உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த எக்ஸ்போஸ் ஒரு சிறந்த இடம். இத்தகைய சவால்களுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்று கூடுகிறார்கள்.

உலகிலேயே மிகப்பெரிய மின் தூக்கி [ஒரு தடவையில் 160 பேர்களை ஏற்றிச்செல்லும்] இதில் பயன்படுத்தப்படுகிறது. 203 பேருந்துகள் நாடு முழுவதும் பார்வையாளர்களை இலவசமாக எக்ஸ்போ தளத்துக்கு ஏற்றிச் செல்கின்றன. எமிரேட்ஸ், எதிகாட், ஃபிளை துபாய் போன்ற விமானங்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு எக்ஸ்போவிற்கான ஒரு நாள் நுழைவுச்சீட்டை இலவசமாகத்தருகின்றன!

11 comments:

ஸ்ரீராம். said...

அம்மாடி...  பிரம்மாண்டம்.   கொரோனா பயங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிடற போலும்.  புகைப்படங்கள் பிரமாதம்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நிகழ்வு... வியக்க வைக்கும் தகவல்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொரு படமும், ஒவ்வொரு தகவலும் வியப்பில் ஆழ்த்துகின்றன
நன்றி சகோதரி

Thulasidharan V Thillaiakathu said...

மனோக்கா என்ன பிரம்மாண்டம்! ஹப்பா பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன

துபாய் எக்ஸ்போ ' மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளைக்கொண்டே இயங்கவுள்ளது. இதில் மூன்று துணை கருப்பொருள்கள் உள்ளன: வாய்ப்பு, மொபிலிட்டி, மற்றும் நிலைத்தன்மை. பங்கேற்கும் நாடுகள் இந்த கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, புதிய எல்லைகளை ஆராய்ந்து, வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தங்கள் யோசனைகளை வெளிப்படுத்தலாம். //

நல்ல விஷயம்.

தகவல்கள் எல்லாமே ஆச்சரியமாகவும் இருக்கிறது. கொரோனா பயம் இல்லை போலும் அங்கு.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஒவ்வொரு படமும் ஆச்சரியமூட்டுகிறது. நம் நாடும் தமிழ்நாடும் பங்கு பெறுவது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

தகவல்கள் அருமை.

துளசிதரன்

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
இங்கு கொரோனா பாதிப்பு நிறைய குறைய ஆரம்பித்திருப்பதால் தான் தைரியமாக இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. தற்போது ஐ.பி.எல் நடப்பதும் அதைத்தொடர்ந்து உலகக்கோப்பை நடக்க இருப்பதும் அதுவே காரணம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

அழகாய் கருத்துரையிட்டிருக்கிறீர்கள் !! அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!!

மனோ சாமிநாதன் said...

அழகாய் கருத்திட்டிருக்கிறீர்கள் கீதா!
இங்கு கொரோனா வந்தது முதல் இந்த நாட்டின் முக்கிய வருமானம் வரக்கூடிய டூரிஸம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதால் அதை பூஸ்ட் பண்ணக்கூடிய நிகழ்வு தான் இது! அதனால் தான் இப்போது கொரோனா மிகவும் குறைந்த‌ நிலையில் ஐ.பி.எல் நடந்து கொண்டிருப்பதும் அதைத்தொடர்ந்து உலகக்கோப்பை நடக்கவிருப்பதும்! இவற்றால் சீர்கெட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரம் ம‌றுபடியும் சரியாகும் நிலைக்கு வர வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி துளசிதரன்!
இந்தியாவின் சப்போர்ட் எப்போதும் இங்கே அமீரகத்திற்கு உண்டு. இந்தியர்கள் இங்கே பெருமளவில் வியாபாரம் செய்கிறார்கள். இந்திய ஜனத்தொகையும் இங்கு அதிகம். அதனால் எப்போதும் இந்தியாவிற்கு இங்கு மதிப்பிருக்கிறது. இந்தியக்கொடியையும் இந்திய வளாகங்கள், பெவிலியன்களை எப்போது பார்த்தாலும் பெருமையாகத்தானிருக்கும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,

பிரம்மாண்டம் என்றால் அரபு நாடுகள் தான். எனக்குத்
தெரிந்து இந்தியத் திரைக் கலஞர்களைத் துபாயில் தான் நிறையப்
பார்த்திருக்கிறேன்.

எண்ட்டர்டெயின்மெண்ட் துறையில் சிறந்து விளங்குவது துபாய். கண்ணைப்
பறிக்கும் வண்ணங்கள். அருமையாகப்
படம் எடுத்திருக்கிறீர்கள்.
அதிசயத்தில் மனம் மீண்டும் மூழ்குகிறது.
நன்றி மா.