Wednesday 4 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்!!

 மூட்டு வலிக்கு முடவாட்டுக்கால் சூப்

ஊரில் இருந்தபோது நான் நாட்டு மருந்து கடைக்குச் சென்ற போது தற்செயலாக நான் இந்த மூலிகைக்கிழங்கை பார்த்தேன். சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, விற்பனையாளர் ஒரு கப் சூப் கொடுத்து குடிக்கச் சொன்னார். சுவை அருமையாக இருந்தது. இதையே வீட்டில் நாம் தாராளமாக சாமான்கள் சேர்த்துப் போடும்போது இன்னும் அருமையாக இருக்குமென்று நினைத்துக்கொண்டேன். விசாரித்த போது,  அது ‘ முடவாட்டுக்கால் கிழங்கு சூப்’ என்றும் மூட்டு வலிகள் அனைத்தையும் போக்க வல்லது என்றும் சொன்னார்கள். கிழங்கையும் கையில் எடுத்துப்பார்த்து விட்டு சூப் தயாரிக்கும் முறையையும் கேட்டறிந்து கொண்டேன். இந்தக் கிழங்கை கொல்லிமலையிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இது கொல்லிமலை, ஏற்காடு, , கஞ்ச மலையிலும் மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள். 

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 

மிளகு                                    - 20 - No

சீரகம்                                    - 1/4- டீஸ்பூன் 

பூண்டு                                   - 3  பல் 

தக்காளி                                 - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும். 

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும். ஒரு வீடியோவில் பார்த்தபோது, இரவில் இந்தக் கஷாயம் வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று சொன்னார்கள். இதோடு சில புதினா இலைகளோ, கறிவேப்பிலைகளோ சேர்க்கலாம் என்றும் அதிக வலியால் கஷ்டப்படுபவர்கள் ஒரு மண்டலம் [ 48 நாட்கள் ] சாப்பிட்டு வர வேண்டுமென்றும் சொன்னார்கள்.

2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர்  முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தார்களாம். .

கைகளில் ஆணி:

பொதுவாய் நான் கால்களில் தான் ஆணி வந்து பார்த்திருக்கிறேன். வெறும் கால்களில் நடக்கும்போது, ஏதாவது குத்தி காயம் ஆழமாகப்போய் அதற்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அந்த இடத்தில் ஆணி வளர்வதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் உறவினருக்கு கைகளில், கை விரல்களில் ஆணிகள் வளர்ந்தன. வலியினால் மிகவும் துடித்துக்கொண்டிருப்பார். இதைப்பற்றி இன்னொரு சினேகிதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மல்லிகை இலைகளை நசுக்கி சாறெடுத்து தடவி வரச்சொன்னார். இதை என் உறவினரிடம் நான் சொல்லி, அது போலவே தடவிய ஓரிரு நாட்களிலேயே அத்தனை ஆணிகளும் மறைந்து விட்டதாகவும் ஆணிகள் இருந்த சுவடே தெரியவில்லை என்றும் என் உறவினர் மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னார். வலி நீங்கிய அவரது குரலின் மகிழ்ச்சி என்னை நெகிழ வைத்தது.சமீபத்தில் RELISPRAY என்னும் மருந்து கால் ஆணிகளுக்கு நல்ல பலன் தருவதாகப்படித்தேன். இது பொதுவாய் மூட்டு வலி, முதுகு வலி போன்ற எந்த வலிக்கும் உடனடி நிவாரணம் தருமாம். 

நீர்க்கடுப்பு:

வெய்யில் காலங்களில் வியர்வை அதிகமாக கொட்டித்தீர்க்குமளவு நாம் வெளியில் அலைய நேரிடும்போது அதிக வியர்வையினால் உடல் நீர் சுருங்கி சிறுநீர் கழிப்பதில் பெரும் வலி உண்டாகும். சில சமயங்களில் சொட்டு சொட்டாய்  சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தீப்பற்றி எரிவது போல இருக்கும். நீர்க்கடுப்பு என்பது சிறுநீரக பாதையில் உண்டாகும் அழற்சி. இதற்கு புளி நீரும் கருப்பட்டி அல்லது வெல்லமும் கலந்து குடித்தால் உடனேயே சரியாகும் என்று சொல்வார்கள். கால் விரல்களில் சுண்ணாம்பு வைத்தால் நீர்க்கடுப்பு சரியாகுமென்பார்கள். வெந்தய நீர், பார்லி வேக வைத்த நீர் நல்லதென்பார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக நல்லதான ஒரு வைத்தியம் இருக்கிறது. கறுப்பு உளுந்து ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவி ஒரு சொம்பு நீரில் ஊற வைத்து குடித்து வர வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊற வைத்த நீர் கூட உடனடியாக பலனளிக்கும். அதைக்குடித்த பிறகு சிறுநீர் பிரியும்போது வலி வெகுவாக குறைந்திருக்கும். குடிக்கக் குடிக்க சுத்தமாக வலியென்பதே இருக்காது. இதை பல வருடங்களாக நாங்கள் கடைப்பிடிக்கிறோம். நாடு விட்டு நாடு மாறும்போது எங்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுவது இந்தப்பிரச்சினையால் தான். என் சினேகிதிகள், உறவுகள் அனைவருக்குமே இந்த வைத்தியம் தெரியும்.  கறுப்பு உளுந்து இல்லாவிட்டால் வெள்ளை உளுந்து கூட உபயோகிக்கலாம்.  காலை ஊறவைத்த நீர் குடிக்ககுடிக்க மீண்டும் அதை நிரப்பிக்கொள்ளலாம். இரவில் சற்று வாடை அதிகமாயிருந்தால் மீண்டும் அதையே கழுவி உபயோகிக்கலாம். அல்லது மீண்டும் ஒரு கைப்பிடி உளுந்தை ஊற வைக்கலாம். ஒரு நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வந்தால் பல நாட்களுக்கு பாதிப்பு மீண்டும் வராது.

தொடரும்....20 comments:

Thenammai Lakshmanan said...

அருமையான & தேவையான மருந்துக் குறிப்புகள் மனோ மேம்.. நன்றி

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான பயனளிக்கும் தகவல் பதிவும்மா. நன்றி

ஸ்ரீராம். said...

மிக அருமையான குறிப்புகள்.

Geetha Sambasivam said...

அரிய தெரியாத தகவல்கள். முடவாட்டுக்கால்க்கிழங்கு இங்கே கிடைக்குமா தெரியலை. பார்ப்போம்.உளுந்து வைத்தியமும் புதுசாக இருக்கு. அனைத்துத் தகவல்களுக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... இங்கு இந்தியாவிற்கு வந்தவுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்... சிலவற்றை பேச வேண்டும் அம்மா...

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பகிர்வு...வாழ்த்துகள்..

Thulasidharan V Thillaiakathu said...

முடவாட்டுக்கால்கிழங்கு கொல்லி மலையில், ஏற்காட்டில் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வாங்கிப் பயன்படுத்தியதில்லை.

புளித்தண்ணீர் வெல்லம்/கருப்பட்டி வைத்தியம் கேட்டதுண்டு.

மற்றவை எல்லாம் புதிது மனோக்கா..நல்ல மருத்துவக் குறிப்புகள்.

கீதா

துரை செல்வராஜூ said...

மிகவும் பயனுள்ள செய்திகள்...
புளி நீர் + வெல்லம் என்பதே பானகம்...

நலம் வாழ்க!..

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா!
முடவாட்டுக்கால் கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது என்று சொல்லுகிறார்கள். சேலம் பக்கம் தாராளமாகக் கிடைக்கிறதாம்.
உளுந்து வைத்தியம் பல வருடங்களாக நாங்கள் பின் பற்றுவது. எந்த பக்க விளைவுகளும் இல்லாதது என்பதுடன் எளிமையானதும்கூட.
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

தஞ்சைக்கு வரும்போது தொடர்பு கொள்கிறேன் தனபாலன். அவசியமென்றால் என் ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். கரந்தை ஜெயக்குமார் அவர்களிடம் என் ஈமெயில் முகவரி உள்ளது.

Bhanumathy Venkateswaran said...

உபயோகமான நல்ல தகவல்கள். நன்றி. 

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

Avargal Unmaigal said...

அன்புள்ள மனோசாமிநாதன் அவர்களேஉங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மிகவும் பயனுள்ள, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதைப் பற்றிப் பதிந்துள்ள விதம் அருமை. தொடர்ந்து பிறவற்றையும் அறிய ஆவலாக உள்ளேன்.