Wednesday, 25 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்-2 !!!

 அனுபவ ரீதியாக மிகச் சிறிய கை வைத்தியம் நம்மை அசத்தும் அளவிற்கு நமக்கு பலன் தருவதுண்டு. பல வருடங்களாக நாம் அவதியுற்று துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் சில வியாதிகளை, நோய்க்குறைபாடுகளை நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு சிறிய பொருள் சரியாகுவதுண்டு.  அப்படிப்பட்ட சில நிவாரணங்கள, நான் நேரிடையாக பலனடைந்த சில கை வைத்திய முறைகளை அனைவரும் நலம் பெற வேண்டி இங்கே தெரிவிக்கிறேன். 

ப‌ல் வலிக்கு நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்


பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இப்படித்தான் நார்த்தங்காயின் பலன் பற்றி எனக்கு முன்பு தெரியும். 

ஒரு சமயம் ஒரு பழைய புத்தக்த்தொகுப்பை [ 30 வருடங்களுக்கு முன் வெளி வந்தது  ]படித்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு சிறிய செய்தி ஈர்த்தது. பல்வலியால் அவதியுற்ற ஒருவர் அப்போது தான் ஒரு கிராமத்தில் தங்கியிருந்ததாகவும் பக்கத்து வீடில் சொன்ன வைத்தியத்தை தான் கடைபிடித்ததில் அப்போது போன பல்வலி அப்புறம் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். பல்வலி வந்தால் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் ஒரு உப்பு நார்த்தங்காய் துண்டை வைத்து சற்று அழுத்தி மேல் பல்லால் அமிழ்த்தி வாயை மூடிக்கொண்டு ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தால் பல்வலி அப்ப‌டியே குறைந்து விடும் என்றும் இரவு படுக்கப்போகும்போது இது போல செய்து கொண்டு தான் உறங்கியதாகவும் காலை அதை துப்பி விட்டு வெதுவெதுப்பான நீரில் வாய்கொப்பளித்ததும் வலி சுத்தமாக போய் விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை நான் அப்போது இந்த வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். ஒரு நாள் என் உறவினர் எனக்கு ஃபோன் செய்தார். திடீரென்று கடுமையான பல்வலி வந்ததாகவும் இந்த வைத்தியத்தை கடைபிடித்ததில் வலி பறந்து போய் விட்டது என்றும் கூறி எனக்கு நன்றி தெரிவித்தார். அப்புறம் என் நெருங்கிய உறவுகள், சினேகிதர்கள் அனைவருமே இந்த வைத்திய முறையை உபயோகிக்கிறார்கள். மருத்துவ ரீதியாக நார்த்தங்காய் ஊறுகாயிலுள்ள கசப்பும் உப்பும் பல் வலியை குணமாக்குகிறது.

முழங்கால் வலிக்கு சியா விதைகள்



சினேகிதி சொன்னாரென்று சியா விதைகள் சாப்பிட ஆரம்பித்தேன் சென்ற வருடம். பொதுவாய் சியா விதைகள் பாஸ்பரஸ், கால்ஷியம் போன்ற பல வகை சத்துக்கள் உடையது என்றும் ‌இரத்த அழுத்தத்திற்கு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு மற்றும் பல நோய்களுக்கு மிக நல்ல பலன் தருமென்றும்  தெரிய வந்ததால் தினமும் அரை ஸ்பூன் எடுத்து கால் கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் காய்ச்சிய பாலில் ஊற்றி மறுபடியும் கொதிக்க வைத்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு மாதங்கழித்து திடீரென்று முழங்காலில் வலி குறைய ஆரம்பித்தது. கால் குடைச்சல், நரம்பு இழுத்தல் போன்ற கால் பிரச்சினைகள் எல்லாமே சரியாகி, 15 வருடங்களாக இரவில் அடிக்கடி ஏற்படும் நரம்பு சுருட்டலும் நின்று போய் விட்டது.எந்த பிரச்சினைகளுமில்லாமல் நடக்க முடிவது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அப்புறம் முழங்கால் வலி இருப்பவர்களுக்கு இந்த வைத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். எங்கள் வீட்டைக் கட்டிய என்ஜினீயருக்கு சொல்லி அவரின் கால் வலி மிக மிகக் குறைந்து விட்டது என்று அவர் நன்றி சொன்னதும் மகிழ்வாக இருந்தது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் இதை எடுக்கக்கூடாது. மிகத்தரமான புரதம் இதில் இருப்பதால் அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டாக்கலாம்.

வயிற்றுப்போக்கிற்கு:



வயிற்றுப்போக்கு அதிகமாகும்போது, ஒரு ஸ்பூன் சீனி, ஒரு ஸ்பூன் உப்பு இரண்டையும் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு மெதுவாக நிற்க ஆரம்பிக்கும். சிறு குழந்தைகளுக்கு இரண்டையும் சிட்டிகை அளவில்  போட்டுத்தர வேண்டும்.

ஏலக்காய் வைத்தியம்:


எப்படி நெஞ்சு வலிக்கு நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அமுக்குவது போன்ற உணர்வு, நெஞ்செரிச்சல், தொண்டையை இறுக்குதல், அடி நெஞ்சில் வலிப்பது போன்ற உணர்வு என்றெல்லாம் ஏற்படுகிறதோ, அதே பிரச்சினைகள் அஜீரணம், வாயுக்கோளாறு, இவற்றிற்கும் ஏற்படும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலிக்கும்.  என் மகனுக்கு திருமணம் ஆன சமயம். நள்ளிரவில் என் மகன் எங்கள் அறைக்கதவைத்தட்டி மருமகள் நெஞ்சு வலியால் துடிப்பதாயும் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புமாறும் மிகுந்த பதற்றத்துடன் சொன்னார். நான் மருமகளுக்கு தைரியம் சொல்லி விட்டு, 3 ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றை விழுங்கிக்கொண்டே தயாராகும்படியும் நாங்களும் உடனேயே கிளம்புகிறோம் என்று சொல்லி உடை மாற்றிக்கொண்டு கிளம்பும்போதே என் மருமகளுக்கு நெஞ்சு வலி சட்டென்று நின்றது. நெஞ்செரிச்சல், திணறல் எல்லாமே சரியாகி விட்டது. ஆரோக்கியமான, இளம் பெண்ணுக்கு இதய பிரச்சினை இப்படி திடீரென்று வர வாய்ப்பில்லை என்று நினைத்தது சரியாகி விட்டது. இப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும் என் மருமகள் சென்ற வாரம் கூட இதை நினைவு கூர்ந்து பேசினார்.  இந்த வைத்தியத்தை சொல்லி பலனடைந்தவர்கள் ஏராள்ம். அப்போது கிடைக்கும் மன திருப்திக்கு நிகராக எதுவுமேயில்லை என்று கூட சொல்லலாம். இப்போதும்கூட, வயிறு ஒரு மாதிரியாக சங்கடம் பண்ணினால் 3 ஏலக்காய்களை எடுத்துப்போட்டுக்கொள்வேன். அந்த மாதிரியான அருமையான மருந்து இந்த ஏலக்காய். 


Wednesday, 4 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்!!

 மூட்டு வலிக்கு முடவாட்டுக்கால் சூப்

ஊரில் இருந்தபோது நான் நாட்டு மருந்து கடைக்குச் சென்ற போது தற்செயலாக நான் இந்த மூலிகைக்கிழங்கை பார்த்தேன். சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, விற்பனையாளர் ஒரு கப் சூப் கொடுத்து குடிக்கச் சொன்னார். சுவை அருமையாக இருந்தது. இதையே வீட்டில் நாம் தாராளமாக சாமான்கள் சேர்த்துப் போடும்போது இன்னும் அருமையாக இருக்குமென்று நினைத்துக்கொண்டேன். விசாரித்த போது,  அது ‘ முடவாட்டுக்கால் கிழங்கு சூப்’ என்றும் மூட்டு வலிகள் அனைத்தையும் போக்க வல்லது என்றும் சொன்னார்கள். கிழங்கையும் கையில் எடுத்துப்பார்த்து விட்டு சூப் தயாரிக்கும் முறையையும் கேட்டறிந்து கொண்டேன். இந்தக் கிழங்கை கொல்லிமலையிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.



இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இது கொல்லிமலை, ஏற்காடு, , கஞ்ச மலையிலும் மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :



முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள். 

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 

மிளகு                                    - 20 - No

சீரகம்                                    - 1/4- டீஸ்பூன் 

பூண்டு                                   - 3  பல் 

தக்காளி                                 - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும். 

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும். ஒரு வீடியோவில் பார்த்தபோது, இரவில் இந்தக் கஷாயம் வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று சொன்னார்கள். இதோடு சில புதினா இலைகளோ, கறிவேப்பிலைகளோ சேர்க்கலாம் என்றும் அதிக வலியால் கஷ்டப்படுபவர்கள் ஒரு மண்டலம் [ 48 நாட்கள் ] சாப்பிட்டு வர வேண்டுமென்றும் சொன்னார்கள்.

2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர்  முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தார்களாம். .

கைகளில் ஆணி:

பொதுவாய் நான் கால்களில் தான் ஆணி வந்து பார்த்திருக்கிறேன். வெறும் கால்களில் நடக்கும்போது, ஏதாவது குத்தி காயம் ஆழமாகப்போய் அதற்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அந்த இடத்தில் ஆணி வளர்வதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் உறவினருக்கு கைகளில், கை விரல்களில் ஆணிகள் வளர்ந்தன. வலியினால் மிகவும் துடித்துக்கொண்டிருப்பார். இதைப்பற்றி இன்னொரு சினேகிதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மல்லிகை இலைகளை நசுக்கி சாறெடுத்து தடவி வரச்சொன்னார். இதை என் உறவினரிடம் நான் சொல்லி, அது போலவே தடவிய ஓரிரு நாட்களிலேயே அத்தனை ஆணிகளும் மறைந்து விட்டதாகவும் ஆணிகள் இருந்த சுவடே தெரியவில்லை என்றும் என் உறவினர் மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னார். வலி நீங்கிய அவரது குரலின் மகிழ்ச்சி என்னை நெகிழ வைத்தது.



சமீபத்தில் RELISPRAY என்னும் மருந்து கால் ஆணிகளுக்கு நல்ல பலன் தருவதாகப்படித்தேன். இது பொதுவாய் மூட்டு வலி, முதுகு வலி போன்ற எந்த வலிக்கும் உடனடி நிவாரணம் தருமாம். 

நீர்க்கடுப்பு:

வெய்யில் காலங்களில் வியர்வை அதிகமாக கொட்டித்தீர்க்குமளவு நாம் வெளியில் அலைய நேரிடும்போது அதிக வியர்வையினால் உடல் நீர் சுருங்கி சிறுநீர் கழிப்பதில் பெரும் வலி உண்டாகும். சில சமயங்களில் சொட்டு சொட்டாய்  சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தீப்பற்றி எரிவது போல இருக்கும். நீர்க்கடுப்பு என்பது சிறுநீரக பாதையில் உண்டாகும் அழற்சி. 



இதற்கு புளி நீரும் கருப்பட்டி அல்லது வெல்லமும் கலந்து குடித்தால் உடனேயே சரியாகும் என்று சொல்வார்கள். கால் விரல்களில் சுண்ணாம்பு வைத்தால் நீர்க்கடுப்பு சரியாகுமென்பார்கள். வெந்தய நீர், பார்லி வேக வைத்த நீர் நல்லதென்பார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக நல்லதான ஒரு வைத்தியம் இருக்கிறது. கறுப்பு உளுந்து ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவி ஒரு சொம்பு நீரில் ஊற வைத்து குடித்து வர வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊற வைத்த நீர் கூட உடனடியாக பலனளிக்கும். அதைக்குடித்த பிறகு சிறுநீர் பிரியும்போது வலி வெகுவாக குறைந்திருக்கும். குடிக்கக் குடிக்க சுத்தமாக வலியென்பதே இருக்காது. இதை பல வருடங்களாக நாங்கள் கடைப்பிடிக்கிறோம். நாடு விட்டு நாடு மாறும்போது எங்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுவது இந்தப்பிரச்சினையால் தான். என் சினேகிதிகள், உறவுகள் அனைவருக்குமே இந்த வைத்தியம் தெரியும்.  கறுப்பு உளுந்து இல்லாவிட்டால் வெள்ளை உளுந்து கூட உபயோகிக்கலாம்.  காலை ஊறவைத்த நீர் குடிக்ககுடிக்க மீண்டும் அதை நிரப்பிக்கொள்ளலாம். இரவில் சற்று வாடை அதிகமாயிருந்தால் மீண்டும் அதையே கழுவி உபயோகிக்கலாம். அல்லது மீண்டும் ஒரு கைப்பிடி உளுந்தை ஊற வைக்கலாம். ஒரு நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வந்தால் பல நாட்களுக்கு பாதிப்பு மீண்டும் வராது.

தொடரும்....