Wednesday 22 April 2020

நல்லவையும் தீயவையும்!!

ஒரு வழியாக வெளிநாட்டிலிருந்து வந்ததற்காக வீட்டின் வெளியே ஒட்டப்பட்ட ‘ இது கொரோனா வீடு. உள்ளே நுழையாதே ‘ என்ற ஸ்டிக்கர் 17ந்தேதி அகற்றப்பட்டது. ஒரு மாதிரி சிறைவாசத்திலிருந்து மீண்ட மாதிரி இருப்பதாக என் கணவர் கூறினார்கள்.

நண்பர்கள் எதையுமே பொருட்படுத்தாது உதவிகள் செய்தார்கள். இந்த சிறைவாசம் நிறைய விஷயங்களை மீட்டெடுக்க உதவியது என்று தான் கூற வேண்டும்.

தஞ்சையில் எல்லோருக்கும் ரோஸ், நீலம், பச்சை என்று அட்டைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்திருக்கிறார்கள். பச்சை அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 வரை வெளியே போய் சாமான்களை வாங்கி வரலாம். ரோஸ் கலர் அட்டை வைத்திருப்பவர்கள் சனி, புதன் கிழமைகளும் நீல அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் வெளியே சென்று வரலாம்.

காய்கறிகள் வாரம் இரு முறை வாசலில் வருகின்றன. உழவர் சந்தையிலிருந்து வருவதால் காய்கறிகள் மலிவாகவே கிடைக்கின்றன. பெருமளவில் மளிகை சாமான்கள் வேண்டுமானால் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சிறு மளிகைக்கடைகளில் மற்ற சாமான்கள் கிடைக்கின்றன. ஆவின் பால் தவறாமல் வருகின்றது.

ஒரு வகையில் வெளியில் செல்லாமல், அலையாமல் இருப்பதாலும் உணவகங்களில் சாப்பிடாமல் இருப்பதாலும் தேவையற்ற பொருள்கள் வாங்குவது குறைந்து செலவினங்கள் கட்டுக்குள் இருக்கின்றன.இப்போதெல்லாம் அடிக்கடி தொலபேசி அழைப்புகளில் மறந்து போன உறவுகள் கூட வருகின்றன. காலம் சுருங்கி எப்போதும் தொலைபேசியில் பேசுவது கூட மறந்து போய் உறவுகள் சுருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் உறவுகளுக்கு  இப்போது புத்துயிர் கிடைத்தது போல இருக்கிறது! பொருள் சம்பாதிக்க, காலத்தின் பின்னே கட்டாயமாக, இயந்திரத்தன்மையுடன் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தலைவர்கள் சட்டென்று நின்று குடும்பத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்! நிறைய வீடுகளில் தந்தையும் தாயும் பிள்ளைகளும் சேர்ந்து சிரித்து, வேலைகளில் கணவனும் மனைவிக்கு உதவுவதை பார்க்கையில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. என் வீட்டிலும் இப்படித்தானிருக்கிறது. என் மருமகளிடம் இங்கிருந்து ஃபோன் செய்து எப்படி இருக்கிறாயென்று கேட்டபோது, ‘ இவர்கள் வீட்டில் இருப்பதால் இப்போது தான் வீடு வீடு போல இருக்கிறது ‘ என்று சொன்னார். எப்போதும் என் மகன் அலுவலகம் சென்றதும் அதற்கு முன்பேயே பேரன் பள்ளிக்கும் சென்று விடுவதால் என் பேத்தி தன் தாயாரைப்பிடித்த பிடி விடாது கூடவே சுற்றிக்கொண்டிருக்கும். இப்போதோ அப்பாவை விட்டு நகருவதே இல்லை!!

வீட்டுப்பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சிலர் இப்போது வேறு வழியில்லாமல் வீட்டிலேயே இருந்து பிரச்சினைகளை சமாளித்து வருகிறார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பெண்மணி, ‘ எனக்கு வேண்டிய சாமான்களை மாஸ்க் போட்டுச்சென்றாவது எனக்கு அவசியம் வாங்கித்தந்து தான் ஆக வேண்டும் ‘ என்று மகனை விரட்டுகிறார்! இன்னொரு உறவினரோ தொலைபேசியில் பேசும்போது, அவரின் கணவரின் நண்பர் வீட்டில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் வீட்டிலேயே இருப்பதால் தகராறு ஏற்பட்டு அந்த நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார். என் மருமகளின் சினேகிதி தன் கணவருக்கு வீட்டிலேயே இருப்பதால் பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டு depression நிலைக்குப்போய் விட்டதாகவும் அவரை விரைவில் மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறினாராம். கொரோனா தாக்காமலேயே எத்தனை விதமான நோய்கள்! எத்தனை விதமான அவதாரங்கள்!!

26 comments:

Yaathoramani.blogspot.com said...

மன உளைச்சல் எனக் கேள்விப் படுகையில் படிக்கையில் ஆச்சரிய்மாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது..அதுவும் தற்கொலை செய்து கொள்கிற அளவு...

Angel said...

வெளிநாட்டில் இருந்து வந்ததால் ஐசோலேஷனில் வைத்தார்களா அக்கா உங்களை ?தேவையானவற்றை மட்டும் வாங்குகிறோம் அதுவும் இரண்டு வாரங்களுக்கொருமுறை ,ஏற்கனவே வாங்கி வைத்த  பொருட்கள்  வீட்டிலேயே இருப்பதால் குறைந்த அளவே உணவும் ஏற்கிறது உடல்.நாங்க மூவர் ப்ளஸ் எங்க நாலு கால் மகள்கள் இருவர் ஆக ஐவர் சேர்ந்து இருப்பது இயற்கையை ரசிப்பதுன்னு நேரம் செல்கிறது .ஒன்றாறாய் சேர்ந்து இருப்பதால் இந்த டிப்ரெஷன் தற்கொலைல்லாம் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் :( புரிதலில்லா வாழ்க்கை 

Avargal Unmaigal said...


//இது கொரோனா வீடு. உள்ளே நுழையாதே //

மிகவும் தவறான செயல்

ஸ்ரீராம். said...

நல்லபடியாக தனிமையிலிருந்து மீண்டதில் மகிழ்ச்சி. இந்த லாக் அவுட்தான் எத்தனை அனுபவங்களைத் தருகிறது...

priyasaki said...

இந்த ஸ்டிக்கர் ஒட்டுவது சரியானதல்ல. தனிமையிலிந்து விலக்கியது மகிழ்ச்சி அக்கா. நியூஸில் பார்க்கும்போது கோபமா வரும். இந்தியாவில் ம்ட்டும் ஏன் இப்படி? இங்கும் லாக்டவுன் இருந்து கொஞ்சம் தளர்த்தியிருக்காங்க. மே 4 ல் ஸ்கூல் ஆரம்பம். அதுவும் பகுதி பகுதியா படிப்பிக்க போறாங்க. தேவையான பொருட்கள் அப்பப்ப வாங்குவதுதான். திங்களிலிருந்து மாஸ்க் கட்டாயம். வேலையின்மை,வருமானமின்மை போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றது.நல்லதும், கெட்டது இருக்கு இந்நோய் வந்ததில்..

கரந்தை ஜெயக்குமார் said...

இந்த லாக் அவுட் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை வழங்கி வருகிறது
தனிமைப் படுத்துதலில் இருந்து மீண்டதற்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

பல நேரங்களில் வீட்டில் உங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்போம் அம்மா... இப்போது ஸ்டிக்கர் அகற்றப்பட்டது குறித்து மகிழ்ச்சி...

Geetha Sambasivam said...

நல்லபடியாகத் தனிமை வாழ்க்கையை முடித்தீர்கள், வாழ்த்துகள். மற்றபடி உங்கள் குடும்பத்தில் மகன், மருமகள் பேரக்குழந்தைகளுடன் மன நிறைவுடன் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்தக் கொரோனா வீடு என்னும் அட்டை ஒட்டப்பட்டிருந்தது அகற்றப்பட்டதே மனதுக்குப் பெரும் ஆசுவாசமாக இருக்கும். இங்கேயும் காய்கள் கிடைத்தாலும் பக்கத்து நாடார் கடையில் சரிக்குச் சரி விலை ஏற்றி விடுகிறார். மற்றபடி பிரச்னை ஏதும் இல்லை.

ஆனால் சிநேகிதர் வீட்டில் தற்கொலை அளவுக்குப் போயிருப்பது மனதை வேதனை கொள்ளச் செய்கிறது. இன்னொன்றும் மனநல மருத்துவரிடம் போகும் அளவுக்கு ஆகி இருப்பது ஆச்சரியமாய் உள்ளது. மனோபலம் இல்லாதவர்கள் போல! :(

Thulasidharan V Thillaiakathu said...

நீங்கள் க்வாரண்டைனிலிருந்து மீண்டது மகிழ்ச்சி. அதுவும் எந்தவித சிக்கலும் இல்லாமல்.

இந்த க்வாரண்டைன் ஊரடங்கு எல்லாமே நமக்கு நல்ல பாடங்கள் பல கற்றுத் தருகின்றன.

தற்கொலை என்பதெல்லாம் டூ மச் என்று தெரிகிறது. அதே போல மன உளைச்சல். நம் மனதை சுறு சுறுப்பாக வைத்துக் கொள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. வெளியே போனால்தான் வாழ்க்கை என்று இருப்பவர்கள் தான் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.

துளசிதரன், கீதா

துளசிதரன் : எங்களுக்கும் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. ரேஷன் பொருட்கள் உட்பட. அட்டை எல்லாம் எதுவும் தரப்படவில்லை. எங்கள் ஏரியா கொஞ்சம் உள்ளடங்கிதான் இருக்கிறது மலை அருகில். மக்கள் நடமாட்டமும் மிக மிகக் குறைவு.

கீதா : பங்களூரில் அட்டை எதுவும் கொடுத்ததாகச் தெரியவில்லை. நாங்கள் இருப்பது கொஞ்சம் புறநகர் இருந்தாலும் நல்ல வளர்ச்சியடைந்த பகுதி. எல்லாமே கிடைக்கிறது காய்கள் கூட விலை மலிவாகவே கிடைக்கிறது. எனக்கு ஒன்று தோன்றியது. இந்த க்வாரண்டைன் வீட்டில் இருத்தல் என்பதெல்லாம் நமக்கு ஒரு நல்ல அனுபவத்தையும் இன்னும் வயதாகும் போது நாம் வீட்டிலேயே இருக்கும் சூழல் வந்தால் அதற்கு இப்பவே மனதை தயார்ப்படுத்திக் கொள்ளவும் இது உதவுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

கோமதி அரசு said...

தனிமையிலிருந்து மீண்டது மகிழ்ச்சி.
தினம் குழந்தைகள் பேசுகிறார்கள், பேரன் விளையாடுகிறான் தினம் , நீங்கள் சொல்வது போல் உற்வினர்கள், நண்பர்கள் நலன் விசாரிக்கிறார்கள்.
நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சொன்ன சில அனுபவங்கள் மனதுக்கு கஷ்டம் கொடுக்கிறது.

Bhanumathy Venkateswaran said...

தனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சி. லாக் அவுட் பற்றி என்னென்னவோ சொல்லிக்கொண்டாலும், சாமான்கள் எல்லாம் கிடைத்தாலும் அடி மனதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் எல்லாம் சரியாக  இறைவனை  வேண்டுகிறேன். 

மனோ சாமிநாதன் said...

இது உண்மை தான் சகோதரர் ரமணி சார்! எங்கள் பொரியாளர் கூட இப்படித்தான் ' பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கிறது வீட்டிலேயே உட்கார்ந்திருப்பதற்கு! ' என்று சொன்னார்.

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஏஞ்சல், வெளி நாட்டிலிருந்து வந்திருப்பதால் மட்டுமே வீட்டின் வெளியே ஸ்டிக்கர் ஒட்டி எங்களைத் தனிமைப்படுத்தினார்கள். அது தந்த மன வேதனையை விடவும் மற்றவர்களின் புறக்கணிப்பு தான் அதிக வேதனை தந்தது. அதையும் கடந்து விட்டோம்.
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இந்த வரி தான் எங்களையும் கஷ்டப்படுத்தியது மதுரைத்தமிழன்! கொரோனா இல்லாமலேயே இத்தனை பிரச்சினை!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

விரிவான தகவல்கள் தந்திருக்கிறீர்கள் பிரியசகி! அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

உங்களின் வாழ்த்துக்கள் மனதிற்கு பன்னீர் தெளிப்பது போலிருந்தது கீதா சாம்பசிவம்! பிரார்த்தனைகளுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்களுக்கும் பரவலான தகவல்களுக்கும் அன்பு நன்றி கீதா/சகோதரர் துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு இனிய நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் லாக் அவுட்டிலிருந்து மீண்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்திருப்பதற்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கொரோனா பல பாடங்களை நமக்குக் கற்றுத்தந்துள்ளது என்பதே உண்மை. இயல்பு நிலைக்குத் திரும்பியதறிந்து மகிழ்ச்சி. உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இறையருள் துணை நிற்கும். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

வெங்கட் நாகராஜ் said...

நமக்கு பல பாடங்களைத் தந்திருக்கிறது இந்தச் சூழல்.

எனக்கும் சில நட்புகளிடமிருந்து பல வருடங்கள் கழித்து அலைபேசி அழைப்பு. நானும் சிலரை அழைத்துப் பேசினேன்.

உங்கள் வீட்டில் ஒட்டியிருந்த சுவரோட்டி நீக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனைகள்.

Kasthuri Rengan said...

இறைவனுக்கு நன்றி...

இன்னமுமே கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்

ஜூன் சூலையில் உச்சகட்டம் அடையும் என்கிறார்கள்

கடக்க பிரார்த்திப்போம்

முற்றும் அறிந்த அதிரா said...

ஒருவிதமாக கொரோனா போர்ட் நீக்கப்பட்டது மகிழ்ச்சி.

உண்மை, ஒற்றுமை இல்லாத கணவன் மனைவி மற்றும் வீட்டு நிலைமை வறுமை இப்படியான வீடுகளில் நிலைமை மோசமாகத்தான் இருக்கும்.. வீட்டில் இருப்போர் இந்நேரம் புரிஞ்சு நடக்கோணும்.

மாதேவி said...

தனிமை பட்டதிலிருந்து திரும்பியது மகிழ்ச்சி.

இங்கு ஊரடங்கு இருப்பதால் எங்களுக்கும் இதே நிலைதான் அது நல்லதற்குதான். அதில்தான் பலரும் தப்பி இருக்கிறார்கள்.