பீட்ரூட்டில் அதிக மருத்துவ பயன்கள் இருந்தாலும் மற்ற காய்கறிகள் போல
இது அதிகம் சமையலில் பங்கேற்பதில்லை. அதன் அதிக இனிப்பு சுவை தான் காரணமென்று நினைக்கிறேன்.
பொதுவாய் பீட்ரூட்டில்
அல்வா ஜுஸ் முதலியவை மிகவும் பிரபலம்., பொரியல் எல்லோரும் செய்வதுண்டு. அது
இனிப்பு சுவையானது என்பதால் காரம் கூடுதலாக சேர்த்தால் தான் சுவை அதிகமாகத் தெரியும்.
இந்த பொரியல் பீட்ரூட்டுடன் வேக வைத்த முழுப்பயறு சேர்த்து செய்வது. செய்முறை கேரள
சமையல் முறையைச் சேர்ந்தது. மிகவும் ருசியாக இருக்கும் இந்த பொரியல், ரசம், சாம்பார் இவற்றுக்கு பொருத்தமான பக்கத்துணை!
பீட்ரூட் பயிறு பொரியல்
தேவையானவை:
பெரியதாக பீட்ரூட்-2
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-அரை
ஸ்பூன்
கறிவேப்பிலை சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
முழுப்பயிறு- கால் கப்
அரைக்க:
சின்ன வெங்காயம்- 5, பச்சை மிளகாய்- 3, பூண்டு பற்கள் சிறியது- 4, சீரகம்- அரை ஸ்பூன், தேங்காய்த்துருவல்- ஒரு கை
செய்முறை:
முழுப்பயறை முதல் நாளே
ஊறவைத்து மறு நாள் தண்ணீரை வடித்து விட்டு வேறு தண்ணீரால் அது முழுகும் வரை நிரப்பி, போதுமான உப்பு, சிறிது மஞ்சள் தூளையும்
சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதென்றால் கவனம் தேவை. இரண்டு விசில் போதும்.
அதிக விசில் என்றால் பயிறு குழைந்து விடும். அல்லது சாதாரணமாகவே வேக வைக்கலாம்.
அரைக்கக்கொடுத்திருப்பவற்றை
மையாக அரைக்காமல் சிதைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் ஊற்றி கடுகு
தாளித்து அது பொரிந்ததும் உ.பருப்பு, காயம் சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை
மஞ்சள் தூளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
சில தடவைகள் கிளறிய பிறகு சிதைத்து வைத்திருப்பவற்றை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் குறைந்த தீயில்
கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் பயிறு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.