Thursday, 30 August 2018

உயர்ந்தவர்கள்!!

இன்றைய மருத்துவ முத்துக்களில் மூன்று சிறந்த மருத்துவர்களையும் அவர்களின் சாதனைகளையும் குறிப்பிட்டிருக்கிறேன். நோயால் வாடும் யாருக்கேனும் இந்த மருத்துவர்களின் வைத்தியம் கிடைத்து அவர்கள் குணமானால் அதுவே இந்தப்பதிவை எழுதியதற்கான நிறைவைத்தந்து விடும்!

DR.MOHAN RAO

தெரிந்த 2 நண்பர்கள் சொன்ன விபரம் இது. அவர்களின் நண்பர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு கால்கள், கைகள், பேச்சு செயலிழந்த நிலையில் இந்த மருத்துவரிடம் சென்று அதுவும் ஒரு மாதங்கழித்து யாரோ சொன்னதன் பேரில் சென்று வைத்தியம் பார்த்ததில் நடக்கவும் பேசவும் முடிவதாக சொன்னார்கள். பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு கூடிய விரைவில் சென்றால் அவர் முழுவதும் குணப்படுத்தி விடுவதாகவும் சொன்னார்கள். என்னிடம் அந்த மருத்துவரைப்பற்றிய நோட்டீஸ் ஒன்றைக்கொடுத்தார்கள். அதில் வைத்தியரிடம் மூன்று முறை திரவ ரூபத்தில் கொடுக்கப்படும் மருந்தை சாப்பிட வேண்டும் என்றும்  நோயாளிகள் வரும்போது ஒரு கிலோ சாப்பாட்டு புழுங்கலரிசி எடுத்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சில சமயம் இரவில் தங்குவதற்கும் ஆயத்தமாக வர வேன்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நண்பர்கள் அன்று மாலையே மருந்து கொடுத்து அனுப்பி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதற்கு கடும் பத்தியம் இருக்கிறது. 15 நாட்கள் வரை அசைவம், இனிப்பு, வெற்றிலை பாக்கு உபயோகிக்கக்கூடாது.
2 மாதம் வரை தக்காளி, தேங்காய், நெய், பால், தயிர், மீன் கேழ்வரகு, உளுத்தம்பருப்பு [ இட்லி,தோசை கூடாது ] சாப்பிடக்கூடாது. ஆந்திர அரசு இந்த வைத்தியசாலைக்கு தனி பஸ் விட்டிருக்கிறதாம்.

மருத்துவர் மோகன்ராவ் குடும்பம் நூறு வருடங்களாக இந்த வைத்தியம் செய்து, பக்கவாதத்தை குணப்படுத்தி வருகிறது! மூன்று வேளைகள் மருந்து கொடுத்து கையிலும் மருந்துகள் கொடுத்து நோய்க்கு ஏற்ப 15 அல்லது 20 நாட்கள் கழித்து மருத்துவர் மோகன்ராவ் வரச்சொல்கிறாராம். மருந்துகளுக்கு மட்டும் ரூ.500 வாங்கிக்கொள்கிறாராம்!!

இந்த வைத்தியரின் விலாசம்:
DR.C.MOHAN RAO,
Marati C Ranoji Paralysis Vydyam) , Virupakshi Puram Village, Near ChappidipallePost
Palamaner, Chittoor - 517408, ,
CELL: 9440459200/PHONE: 08579 200347.

DR.JAYALAKSHMI.

டாக்டர் திருமதி ஜயலக்ஷ்மி பற்றி நிறைய பேர் அறிந்திருப்பார்கள். தொலைக்காட்சி, யு டியூப், வார பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் முதலியவற்றில் இவரது தொடுசிகிச்சை பற்றிய தகவல்களை அடிக்கடி அளித்து வருகிறார். அக்குபங்க்சர், அக்குப்பிரெஷர் சிகிச்சை மூலம் பல நோய்களை சரியாக்குகிறார் இவர்.



பல வருடங்களுக்கு முன் என் கணவருக்கு தோள்பட்டை வலி மிக அதிகமாக இருந்தது. அலோபதி வைத்தியம், நாட்டு வைத்தியம் எதனாலும் சரியாகவில்லை. முதன் முதலாக இவரைப்பற்றி கேள்விப்பட்டு சென்னைக்கு இவரிடம் காண்பிக்கச் சென்றோம். காதருகில் 2 இடங்களிலும் தோள்பட்டை அருகிலும் அக்குபங்சர் செய்தார். 10 நிமிடங்கள் கழித்து கையை உதறச் சொன்னார். சுத்தமாக வலி போய் விட்டிருந்தது. எங்களால் அதை நம்பவே முடியவில்லை! இன்று வரை அந்த வலி இல்லை. அதனால் எனக்கு எந்த உடல்நலப்பிரச்சினையென்றாலும் இவரிடம்தான் சென்று வருகிறேன். மருந்தில்லா வைத்தியம் என்பதால் என்ற பிரச்சினைகள் இல்லை.
இவர் விலாசம்: no:19, door no:C-5, woodbridge apartment, Venkatraman street, T.NAGAR, CHENNAI-17. Phone: 044 - 28151832, 9840095385

ஞாயிறன்றும் புதனன்றும் இவர் வைத்தியம் பார்ப்பதில்லை. மற்ற நாட்களில் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை மட்டுமே நோயாளியைப்பார்க்கிறார், இப்போதெல்லாம் புதன்கிழமை கூட இவரது உதவியாளர்கள் பார்ப்பதாக தற்போது டாக்டர் சொன்னார்கள்.

DR.PRATHEEP NAMBIYAR

டாக்டர் பிரதீப் நம்பியார் இந்தியாவின் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரில் ஒருவர். இதயம், நுரையீரல், நெஞ்சுப்பகுதி என்று கிட்டத்தட்ட 7000 அறுவை சிகிச்சைகள் தனது 25 வருட அனுபவத்தில் செய்துள்ளார்.



அதில் நுண்ணிய இதய அறுவை சிகிச்சைகளும் அடங்கும். ' நம்பியார் டெக்னிக் ' என்று அவர் பெயரில் தற்போது டெல்லியில் மட்டும் ஒரு நுண்ணிய பை பாஸ் அறுவை சிகிச்சை இதயத்தில் செய்யப்படுகிறது! இதைப்பற்றி டாக்டர் பிரதீப் குமார் " இதில் பின்ஹோல் சர்ஜரி மூலம் நோயாளியின் இட‌து மார்புக்குக்கீழே 2 அங்குல அளவு கிழிக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று இரத்தக்குழாய்களில் பிளாக் இருக்கும்போது பைபாஸ் செய்வதற்கு மார்புக்குள்ளிலிருந்து மார்பின் உள் தமனி உபயோகப்படுத்தப்படுகிறது. கால் நரம்புகளை வைத்து பைபாஸ் செய்யும்போது அது சாதாரணமாக 10,12 வருடங்களுக்குத்தான் செயல்படுகிறது. இந்த சர்ஜரி 25,30 வருடங்களுக்கு நிலைத்து நிற்கக்கூடியது. நோயாளி 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 10 நாட்களில் அவர் நார்மலாக தன் வேலைகளில் ஈடுபடலாம். மேலும் தொற்று ஏற்படுவதும்  தழும்பு வருவதும் மற்றும் ரத்த‌ம் ஏற்ற வேண்டிய அவசியம் இவை அனைத்துக்குமான அபாயம் இந்த சர்ஜரி முறையில் குறைவு "என்றார்.
இந்த அறுவை சிகிச்சை தற்போது டெல்லியில் மட்டுமே செய்யப்படுகிறது.

டாக்டர் பிரதீப் நம்பியார் தற்போது ஹரியானாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் இருக்கிறார்.

HOSPITAL ADDRESS
Columbia Asia Hospital, Block F, Gol Chakkar,
Palam Vihar
Gurgaon Haryana 122017
India


Tuesday, 21 August 2018

கிராமத்திற்கு ஒரு டிக்கெட்!!! [VILLAGE TICKET!!!! ]



சென்ற ஜுலை 27ந்தேதி நான் என் கணவருடன் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஆங்கில நாளிதழைப்புரட்டிய என் கண்ணில் அன்றைக்கு ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் கிராமத்து கலைஞர்களையும் சமையல் வல்லுனர்களையும் உழவர்களையும் மரியாதை செய்யும் கிராமீயத்திருவிழா நடைபெறுவதாகச்சொல்லி 'நம்ம ஊரு, நம்ம பாரம்பரியம், நம்ம உணவு எல்லாவற்றையும் இங்கு வந்து கண்டு களியுங்கள்! ' என்று நிர்வாகம் விளம்பரப்படுத்தியிருந்தது.

அன்று மாலை அங்கே சென்றோம். நடன‌ங்கள், வாத்திய இசையுடன் வரவேற்பு பலமாக இருந்தது.

வரவேற்பு!!!



அதைக்கடந்து சென்றால் பருத்திப்பால் நம்மை வரவேற்றது. நல்ல சுவை! குயவர்கள் மண்ணைக்குழைத்து மண் பாண்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்.


 அதற்கடுத்தாற்போல பெரிய மைதானம்! மறந்து போன தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, உறியடி போன்ற விளையாட்டுக்கள், மாட்டு வண்டி சவாரி, குடை ராட்டினம், உணவுக்கடைகள், குடிசை வீடுகள், வண்ணக்கோலங்கள், ஐயனார் கோயில், கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், சிலம்பாட்டம், நையான்டி மேளம் என்று அமர்க்களமாக இருந்தது. மாட்டு வண்டியில் நிறைய பேர் ஏறிச்சென்றார்கள்!


ஆடுபுலி ஆட்டம்



ஜட்கா [ குதிரை ] வண்டி!!



கரகாட்டம்!! மிகவும் அருமையாக இருந்தது! ஆடிய பெண் இறுதியில் அழகாக ஆங்கிலம் பேசினார்!

கரகாட்டத்தைத்தொடர்ந்து மயிலாட்டம், புலியாட்டம் ஆட காத்திருக்கிறார்கள்! 

மயிலாட்டமும் காவடியாட்டமும்!










உணவுக்கடைகள் சிறுதானிய உணவு, அசைவம், பலகாரங்கள், சைவ உணவு, எண்ணெய் பலகாரங்கள் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் நாவல் பழங்கள் கூட விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த உணவைத்தவிர கறி விருந்து என்ற பெயரில் நண்டு சாறு, கணவாய் குழம்பு, சென்னை மீன் குழம்பு, முட்டை கொத்துக்கறி, பிச்சிப்போட்ட கோழிக்கறி, பள்ளிப்பாளையம் சிக்கன், கொங்கு நாட்டு கறி, ஹொக்கனேக்கல் மீன் வறுவல், தூத்துக்குடி எறா மசால், நெத்திலி வறுவல், காடை வறுவல், செட்டி நாட்டு சுறா புட்டு, புதுக்கோட்டை முட்டை மாஸ், கடலூர் நண்டு மசாலா, விருதுந‌கர் பொரிச்ச பரோட்டா என்று 32 விதமான அசைவ உணவு வகைகள் உள்ள சாப்பாடு தனிக்குடிலில் பரிமாறப்பபட்டது. விலை ரூ.750. கல்யாண விருந்து என்று 32 வகைகளில் பலகாரங்கள் பறிமாறப்பட்டது. விலை 500 ரூ. நாங்கள் சாமை சாம்பார் சாதம், சுண்டல் வகைகள், வாழைப்பூ பக்கோடா, எலுமிச்சை சாதம் வாங்கி சாப்பிட்டோம்.

மொத்தத்தில் மறந்து போன நமது சமூக வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் நினைவூட்டிய விதம் அருமை! நாங்களும் சின்ன வயது சந்தோஷங்களை ஒரு முறை அனுபவித்த மாதிரி இருந்தது.






Tuesday, 14 August 2018

கண்ணனும் உத்தவரும்!!!

பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அது. நீங்களும் ரசிக்க இதோ அந்தப்பதிவிலிருந்து சில வரிகள்....

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், “உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.



தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே  கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள், புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

“பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.  முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து  தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.’ திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் – துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, “ “ “துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப் படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?’ என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.


பகவான் சிரித்தார். “உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
“துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, ’ நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ‘ஐயோ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி…ஹரி…அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?”

புன்னகைத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.



அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

Monday, 6 August 2018

விமானப்பயணங்கள்!!

மதுரைத்தமிழன் ஏர் இந்தியாவைப்பற்றி எழுதியிருந்ததைப்படித்த போது, பழைய நினைவலைகள் மீண்டும் எம்பி எழுந்தன! 42 ஆண்டுகள் தொடர்ச்சியான விமானப்பயணங்கள்! எப்படி இருந்தவையெல்லாம் எப்படி மாறி விட்டன!

1976ம் வருடம் ஜூன் மாதம் எனது முதல் விமானப்பயணம்! பயம் இருந்தது. குமட்டல் ஏற்படுமோ என்ற சந்தேகம் இருந்தது. முதன் முதலாக இன்னொரு நாட்டில் தரையிறங்கிய போது பிரமிப்பு இருந்தது. அப்போதைய காலத்தில் பயணம் செய்த எங்களுக்கும் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் மக்களுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்கள்! இப்போதுள்ள தலைமுறை பஸ் பயணத்தைப்போலவே தான் விமானப்பயணத்தையும் காஷுவலாக எடுத்துக்கொள்கிறது! எந்த ஒரு பிரமிப்பும் காணோம்!

அன்றைய‌ துபாய் விமான நிலையம்!
அப்போதெல்லாம் விமானப்பயணம் என்பது காஸ்ட்லியாக இருந்தது. பயணிகளுக்கு ஏர் இந்தியா மகாராஜா வரவேற்பு தான் தரும்! அதுவும் ஏர் இந்தியாவின் சின்னமான தலை குனிந்து வணக்கம் செய்யும் மகாராஜாவைப்போலத்தான் விமானப் பணிப்பெண்களின் சேவையும் இருக்கும்.

இன்றைய துபாய் ஏர்ப்போர்ட் உள்ளே!
1976 வாக்கில் மும்பை வழியே தான் துபாய்க்கு முதன்முதலாக பயணிக்க வேண்டியிருந்தது . அப்போதெல்லாம் நேரடி விமான சேவை சென்னை துபாய்க்கு கிடையாது. மும்பை வந்தாலும் சென்னைக்கோ அல்லது துபாய்க்கோ செல்ல உடனடி விமான சேவைகள் இருக்காது. அதனால் அடுத்த நாள் செல்லும்வரை பயணிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள். அடுத்த வருடமே ஏர் இந்தியா விமானங்கள் முதன் முதலாக சென்னைக்கு நேரடி சேவையைத் துவக்கின. எங்களுக்கெல்லாம் அப்படியொரு சந்தோஷம். அதுவும் தொடர்ச்சியாகக்கிடையாது.

சென்னை வந்து அடுத்த நாள் நாங்கள் தஞ்சை செல்ல ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் தான் பயணிப்போம். ஒரு முறை சென்னை வந்து இறங்கி, மாமனார் இல்லத்திற்கு வருவதாகத் தந்தி கொடுத்து விட்டு சினேகிதி வீட்டில் தங்கி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றால் என்னைப்பார்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி! நான் கொடுத்த தந்தி போய் சேரவேயில்லை! அடுத்த நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த போது தான் அந்தத் தந்தியே வந்தது! அதை நான் தான் கையெழுத்து போட்டு வாங்கினேன்!!

பிறகு திருச்சியிலிருந்து விமான சேவை  1990 களில் தொடங்கியது.இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கியிருந்தது. [ சரியான வருடம் நினைவில் இல்லை ] ஆரம்ப நாட்களில் பயணிகளின் பெட்டிகள் காட்டுச்செடிகளின் இடையேயுள்ள கன்வேயர் பெல்ட்டில் தான் பயணித்து உள்ளே வரும். ஒரே தமாஷாக இருக்கும்! பயணிகள் உபயோகிக்க ஒரே ஒரு டாய்லட் மட்டுமே இருந்தது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது!

மெல்ல மெல்ல காட்சிகள் மாறின. இன்றைக்கு அதி நவீன வசதிகளுடன் திருச்சி விமான நிலையம் மாறியிருக்கிறது. தஞ்சை சேலம், திருச்சி மாவட்ட மக்களுக்கு இன்றைக்கு துபாயிலிருந்தும் ஷார்ஜாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்து செல்ல தினசரி விமான சேவைகள் இயங்குகின்றன.

இன்றைய திருச்சி ஏர்ப்போர்ட்!
அடுத்தாற்போல பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்து விட்டன. அதைப்பார்த்து விட்டு நடைமுறையில் இருக்கிற மிகப்பெரிய ஏர்லைன்கள் பலவும் இந்த பட்ஜெட் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்து விட்டன. இன்றைக்கு விமான பயணக்கட்டணம் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் முன்பிருந்த வசதிகளோ, மென்மையான அணுகுமுறையோ, அக்கறையோ இன்றில்லை. பெரும்பாலும் அனைத்து ஏர்லைன்களும் சாப்பாடு தருவதை நிறுத்தி விட்டன. எமிரேட்ஸ் உள்ளிட்ட மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே உணவு கொடுக்கின்றன. அவர்களது சாப்பாடும் அளவு, தரம் இரண்டையும் குறைந்து விட்டன. சில ஏர்லைன்கள் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் விமானத்திலேயே விற்பனை செய்கின்றன. அமரும் இருக்கைகள்கூட இன்று மாறி விட்டன.

இன்றைக்கு காட்சிகள் முழுமையாக மாறி விட்டன. ஒரு சாதாரண, பொருளாதாரத்தில் மிகக்கீழுள்ள ஒருவர் கூட இன்று விமானத்தில் போகுமளவு சமூக நிலை மாறி விட்டது. ஆனால் தரம், அக்கறையான அணுகுமுறை எல்லாமே மறைந்து விட்டது.

நவீனமயமாக்கலில் நல்ல விஷயங்கள் அழிந்து விடுவது இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் விஷயம் தானே?